வழி பிறந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 1,575 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தியாகு நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான். அண்ணன் குமார் இன்று வெளிநாட்டிலிருந்து வருகிறார். அம்மா, அப்பா, அண்ணி, அண்ணன் மகன் வினித் எல்லோரும் விமான நிலையம் போயிருக்கிறார்கள். அவன் கல்லூரி முடித்ததிலிருந்து வேலைக்கு போகவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவனை யாரும் மதிப்பதில்லை. அவனை விமான நிலையத்திற்குகூட அழைத்துச் செல்ல யாரும் விரும்பவில்லை.

கல்லூரி முடித்த நாளிலிருந்து அவன் சொந்த முயற்சியில் ஒரு சிறிய தொழிற்சாலை தொடங்க வேண்டுமென்ற நோக்கத்தோடு எடுத்த முயற்சிகள் அனைத்துமே விழலுக்கு இறைத்த நீராய் போயின. இருந்தும் அவன் முயன்று கொண்டே இருந்ததால் வீட்டில் எல்லோரும் வேலைக்குப் போகப் பயந்து கொண்டு வெட்டி கதை பேசிக் கொண்டிருக்கிறான் என்று கிண்டல் பண்ண ஆரம்பித்தனர்.

போன வாரம் தொலைபேசியில் பேசும் போது அண்ணன் குமார் “நான் வந்ததும் உனக்கு தொழிற்சாலை அமைக்க உதவி செய்கிறேன்” என்று சொன்னதிலிருந்து தான் தியாகு மனதிற்கு புதுத் தெம்பே வந்தது.

அண்ணன் குமார் வந்து வெளிநாட்டு பொருள் விநியோகம் செய்து அங்குள்ள நிலவரங்களைப் பேசித் தீர்த்து மனைவி மக்களோடு மாமியார் வீடு போய் வந்து நாட்கள் ஓடிக் கொண்டே இருந்தன. அண்ணன் எப்படியாவது தான் தொழிற்சாலை அமைக்க வேண்டிய தேவைகளை கேட்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன், அவர் தன்னுடைய வேலைகளிலேயே மூழ்கி விட அவனுக்குள் அண்ணாவிடம் கேட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தான்.


அன்று குமார் மட்டும் காலையில் சாப்பாட்டு மேசையில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்க, அருகில் வந்த தியாகு, “அண்ணா! என்னுடைய தொழிற்சாலை அமைப்பதற்கு மூலதனம் தருவதாக சொன்னீர்கள்… இன்னும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் பேசக் காணோம்” என்றான்.

“ம்… தியாகு… ஏற்கனவே நான் துபாய் வேலையை விட்டு விட்டு வந்து விட்டேன்”

“தெரியும் அண்ணா”

“இங்கே ஏற்கனவே கொஞ்சம் தென்னந்தோப்பு வாங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். என் கைகளில் இப்போது நீ எதிர்பார்க்கிற பணம் வருமா என்பது சந்தேகம்”

“அண்ணா! என்ன சொல்கிறீர்கள்?”

“தியாகு… நான் துபாய்க்கு திரும்பிப் போவதாகத்தான் முடிவு செய்து கொண்டு வந்திருந்தேன். அதனால் நீ அமைக்கப் போகிற சிறிய தொழிற்சாலைக்கு மூலதனம் என்னால் எளிதில் தர முடியும் நினைத்திருந்தேன். ஆனால், இப்போது உன் அண்ணி இனி வெளிநாடு போக வேண்டாமென்று…”

“உங்களைத் தான் நான் மலை போல நம்பியிருந்தேன் அண்ணா! நீங்கள் எனக்கு மொத்த பணமும் தர வேண்டாம். முதலில் அந்த தொழிற்சாலை அமைப்பதற்கு வங்கியில். லோன் போடுவதற்கு, ஒரு சிறிய அளவு பணம் டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு பிறகு வங்கியிலேயே லோன் கொடுப்பார்கள். அதனாலே அந்த அளவு பணம் கொடுத்தால் கூடப் போதுமானது” என்று அண்ணாவின் கண்களைத் தேடினான் தியாகு.

கண்களைத் தாழ்த்திக் கொண்ட குமார் “ஸாரிப்பா தியாகு… நான் இப்போது பணத்தை இப்படி வீணாக முடக்க விரும்பவில்லை. இன்னும் கொஞ்சம் நிலம் வாங்கி தென்னங்கன்றுகள் ஊன்றி போடலாம் என்று நினைத்திருக்கிறேன்” என்றார்.

“அண்ணா நீங்கள் தென்னந்தோப்பு உருவாக்குவதற்கு நீங்கள் போடுகிற பணத்திற்கு நான்கு மடங்கு அதிகமான பணத்தை நான் அமைக்கப்போகின்ற தொழிற்சாலையில் நான் சம்பாதித்து தருகிறன் அண்ணா!”

“என்னப்பா நிச்சயம்…உன் பார்வையில் நீ நினைக்கின்ற அந்த உரத் தொழிற்சாலை ஒருவேளை பெரிய மலையாக மாறி விடலாம். ஆனால், அதற்கு பாங்கில் பணம் கட்டினாலும் யாரை நம்பி லோன் கொடுப்பார்கள். ஒன்று பண்ணேன்… வீணாக இப்படி தொழிற்சாலை அல்லது சுய தொழில் – என்று அலைவதற்கு பதிலாக ஒரு நல்ல வேலையைப் பாரேன், உன்னுடைய படிப்பிற்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்” என்று குமார் சொல்லி விட்டு பாத்திரத்தில் கை கழுவி விட, தியாகு தனக்குள் அப்படியே நொறுங்கிப் போனான்.


எத்தனை கனவுகள், விதவிதமான கற்பனைகள். எந்த மாதிரி கட்டிடம் அமைய வேண்டும். எந்த மாதிரி கருவிகள் வாங்கி அமைக்க வேண்டும் என்று போட்டிருந்த திட்டங்கள்… எல்லாம் பொடிப் பொடியாக அழுகை பொங்கி வந்தது. நான் அழக்கூடாது. என் மனதின் வலிமை குறைந்து விடக் கூடாது. நான் இன்னும் போராட வேண்டும். என கண்களைத் துடைத்துக் கொண்டபோது சாப்பாட்டு மேசையில் கிடந்த பேப்பரின் விளம்பரம் கையசைத்தது.

“கார் வாங்க வேண்டுமா? விற்க வேண்டுமா என்னிடம் வாங்க” என்று கட்டியம் கூறியது.

தியாகுவின் மனம் துள்ளிக் குதித்தது. “இந்த உலகில் முதல் போடாமலே சுய தொழில் செய்யப் பல வழிகள் இருக்கின்றன. இந்தச் சிறிய உரத் தொழிசாலை என் இதய மூலையில் உறங்கட்டும். எத்தனையோ கமிஷன் ஏஜண்டுகள், புரோக்கர்கள், வியாபாரிகள் முதலில்லாமலே சம்பாதித்ததை நாம் கண் கூடாகக் கண்ட பிறகு கூட ஏன் … நான் அதில் இறங்க மறந்து போனேன்.

முதலில், முதல் போடாத வியாபாரத்தில் சம்பாதித்து என் கற்பனை உரத் தொழிற்சாலையை நான் ஒரு நாள் அமைத்தே தீருவேன். என்று மனதில் முடிவெடுத்துக் கொண்ட போது தியாகுவின் மனம் லேசாகிப் போயிருந்தது.

– 15-09-1996, மராத்திய முரசு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *