வழித் துணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 15,548 
 

கொழும்பு நகரத்து ஆடம்பரக் கல்யாண விழா ஒன்றில்,சேர்ந்து
குழுமியிருக்கிற மனித வெள்ளத்தினிடையே, ஒரு புறம்போக்குத் தனி மனிதனாக விசாகன் கரை ஒதுங்கியிருந்தான் , மணப் பெண்ணுக்குத் தோய, வார்ப்பதைப் படம் பிடிப்பதற்காகப் போயிருந்த வீடியோ படப் பிடிப்பாளர்கள், இன்னும் மண்டபத்திற்கு வந்து சேராததால் ,முகூர்த்தம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.மணவறை முன்னால் ஐயர் வேறு காத்துக் கொண்டிருந்தார்.

சாஸ்திரம் மீறிய இந்தச் சடங்குகள் , ஒன்று திரண்ட கலியின்ஒரு காலக் கோளாறாய், , கண்ணை எரித்தது விசாகனுக்கு மட்டும் தான். இதிலிருந்து மீண்டு போக வழி தெரியாமல் , இடறி நசித்து விட்டுப் போகிற , இத்தகைய நடைமுறை அனுபவங்களிடையே , எங்கோ முகம் தெரியாத காட்டில், இருட்டில் புதையுண்டு அல்லலுறும் மக்களைப் பற்றிய கவலை அவனுக்கு இயல்பானது. எந்நேரமும் எப்பொழுதும் அவர்களை அவனால் மறக்க முடிவதில்லை அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமே என்று தோன்றும் எவ்வளவு பணம் கொடுத்தாலும், ஆறாத துயரம் அவர்களுடையது. அவர்களின் ஒவ்வொருவரினதும் மிகப் பெரிய இழப்புகளுக்கு முன்னால் , அவர்களின் கண்ணீர்க் கடல் கண்ட பின்னும் இப்படியான களியாட்டங்களில் மனம் ஈடுபடுவதை நினைத்தால், அது ஒரு தார்மீகக் குற்றமாய் அவனுக்கு மனம் வருந்தும். அந்தக் குற்றவாளிகளே, தன் கண்ணைச் சுற்றி எங்கும் நிறைந்திருப்பதாக அவன் உணர்வதுண்டு. என்ன செய்வது? அவர்கள் நிலை அப்படி வருந்திச் சிலுவை சுமப்பவர்களுக்க்காக வாழ்க்கையின் உன்னதங்களை, மேலோட்டமான சிறப்புக்களைத் தாங்கள் ஏன் துறக்க வேண்டுமென்ற மிதமிஞ்சிய அல்லது கட்டறுந்து போகிற சுயநலப் போக்கு அவர்களுடையது.

மணமகளின் தோய வார்ப்புச் சடங்கு முடிந்து, அதை நீண்ட நேரமாகப் படம் பிடித்து விட்ட களைப்பு மாறாமல் வழிந்தோடுகின்ற வியர்வை மழையைக் கூடத் துடைத்தெறிய நேரமின்றி, அவசரம் அவசரமாக வீடியோப் படப் பிடிப்பாளர்கள் பந்தலுக்குள் நுழைகிற போது மணி பத்தரைக்கு மேலாகி விட்டிருந்தது. சரியாகப் பதினொரு மணிக்குத்தானாம் முகூர்த்தம் .அதற்குள் மணப்பெண்ணின் ஜோடனை அலங்காரங்கள் முடிய வேண்டுமே அதற்கே ஒரு யுகம் பிடிக்கும் சாஸ்திர சம்பிரதாயமென்பதெல்லாம் வெறும் பேருக்குத் தான். .வீடியோ நாடகம் தான் எல்லாவற்றையும் விட முக்கியம். இப்படி எல்லாமே பணத்தை மையமாக வைத்து வாழ்க்கை நிஜம் ஒழிந்து போன, வெறும் நிழல் அனுபவமே போலான பின் வரட்டுச் சங்கதிகளற்ற உயிர்ப் பிரக்ஞையென்பது, கை நழுவிப் போன ஒன்றுதான்

விசாகனுக்கு அதை நினைக்கும் போது பெரும் ஆயாசமாக இருந்தது.. உயிர் மரத்துப் போய்க் கதியற்று ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் பொருளிழந்த வாழ்க்கை நடுவே, அவனது எண்ணங்களும் கனவும் வேறு விதமாக இருந்தன. இந்த நிழல் வாழ்க்கையோடு பொருந்திப் போகாத வகையில் தனது வாழ்க்கை உயிரின் சத்தியத்தையே, பிரதிபலிப்பதால், தானொரு துருவமாக நின்று பிரகாசிக்க வேண்டுமென்ற தனது தீராத சத்திய வேட்கை பற்றி, இதுவரை காலமும் அவம் எவரோடும் மனம் திறந்து பேசியதில்லை அதற்கான ஆளும் அகப்படவில்லை இன்று அப்படியொரு சம்பவம் அவனையறியாமலே அவன் காலடிக்கு வந்து சேர்ந்தது. எதிர்பாராத விதமாக நீண்ட யுகத்திற்குப் பிறகு அவன் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நல்ல நண்பனை அவன் காண நேர்ந்தது.

மாதவன் என்று சின்ன வயதில் அவனோடு ஒன்றாகப் படித்த நண்பன்.. .ஊரை விட்டு வந்த பிறகு அவனைக் கன காலம் காணவில்லை. வெளிநாட்டில் இருந்து வந்திருக்க வேண்டும்.

ஆளே அடையாளம் தெரியாமல் ,மாறிப் போயிருந்தான்.. பணக்களை முற்றிலும் அவனை ஒரு புது மனிதனாக மாற்றியிருந்தது இருந்தாலுமென்ன. முகம் மறந்து போகாத விசுவாசமான நட்பைச் சட்டென, நினைவு கூர்ந்தவனாய்,, விசாகனை அறிமுகம் புரிந்து கொண்டு , ஓடி வந்து கை குலுக்கின போது விசாகன் உணர்ச்சி வசப்பட்டு நட்பின் தடம் பிடிபட்டவனாய், அவனைக் கரம் பற்றி அணைத்தவாறே , தன்னருகே அமர வைத்துக் கொண்டு கேட்டான்.

“எப்படியிருக்கிறாய் மாதவா?

“எனக்கு ஒரு குறையுமில்லை நான் இப்ப கன காலம் தொடக்கம் கனடாவிலை இருக்கிறன் இதிலிருந்து பார்க்கும் போது உன்ரை தேக்கம் எனக்கு நன்றாகவே புரியுது.”
அதற்கு விசாகன் சட்டெனக் குரலை உயர்த்திச் சற்றுச் சூடாகவே கேட்டான்.

“ஏன் அப்படியொரு பார்வை உனக்கு? நான் எதிலை குறைஞ்சிட்டனென்று உன்ரை நினைப்பு?. சொல்லு மாதவா”

“நீ எல்லோரையும் போலச் சகஜமாக இல்லையே .ஒரு நிழல் மாதிரி உன்னிலை ஒரு வெறுமை தெரியுது உனக்கு அப்படியென்ன பெரிய சோகம்? எல்லொரையும் போலப் பணமில்லையென்றுதானே”

“நான் அப்படி நினக்கேலை. இப்ப நானொரு பாங்க் மனேஜராக இருக்கிறன். கை நிறையச் சம்பளம் வருகுது.. உன்ரை பார்வையாலே பார்த்தால் , நான் கூட ஒரு முழு மனிசன் தான்… இப்ப என்ரை கவலை அதில்லை. வெறும் பணம் மட்டுமே வந்தால் போதுமே?””

“பின்னை என்ன உனக்குக் குறை?”

“எல்லாம் எங்கடை இனத்தைப் பற்றித் தான். ஒரு நல்ல ஆரோக்கியமான , சமூகம் என்று சொல்ல முடியாமல், ஊனம் விழுந்து இருளில் அந்தரித்துக் கொண்டிருக்கிற, வேர் விட்டுக் கழன்று போன எங்கடை தீனமுற்ற மனிதர்களைப் பற்றித் தான் என்ரை கவலையெல்லாம். இதுக்குப் பரிகாரமாகப் பெரிதாக நான் ஏதாவது செய்ய வேணும் போலிருக்கு. அதுக்கு என்னைப் பொறுத்த வரை ஒரே ஒரு வழி தான் இருக்கு”

“என்ன செய்யப் போறாய்?”

“நான் இரண்டு மூன்று தடவை வன்னிக்குப் போய் வந்தனான். அங்கு போய் வந்த பிறகு நான் கண்ட காட்சிகளை என்னால்மறக்க முடியேலை. கால் கைகளை இழந்து எத்தனைபேர் கஷப்படுகினம்… இதையெல்லாம் மறந்திட்டு நீ சொல்லுற மாதிரி ஒரு சுகமான வாழ்க்கையைத் தேடிக் கொண்டு அதனோடு ஒன்றிப் போக என்னால் முடியேலை. அது எனக்கு வேண்டாம். நான் கல்யாணம் செய்வதாக இருந்தால், கால் இழந்த ஒரு வன்னிப் பெண்ணைத் தான் செய்து கொள்ளப் போறன்.”

“நான் கேட்கிறன். அது உன்ரை வாழ்க்கையையே முடமாக்கி விடாதா? இந்த வயதிலை இப்படி ஒரு வீழ்ச்சி உனக்குத் தேவைதானா?”

“நான் அப்படி நம்பேலை . கால் போன ஒரு பெண்ணுக்கு நான் வாழ்க்கை கொடுக்கப் போறனென்பதே, எல்லா நிறைவையும் அடைஞ்ச மாதிரி எனக்கு இருக்கு.”

“ஓர் இலட்சிய வெறியிலை நீ இதைச் சொல்லலாம். செய்யலாம். பிறகு வாழ்ந்து பார்க்கேக்கை தான் உனக்கு அதின்ரை வலி புரியும். கால் நடக்கேலாத அல்லது பொய்க்கால் போட்ட பெண்ணைக் கட்டிக் கொண்டு நீ என்ன சுகத்தைக் காணப் போறாய்? காலமெல்லாம் கஷ்டப்படப் போறியே?”

“எனக்கு அது விளங்காமலில்லை. நல்ல பெண்ணைக் கட்டின ஒருவனே, அவளோடு மனம் ஒன்றுபட்டு இருக்க முடியாமல் அறுத்தெறிந்து விட்டுப் போற கதையெல்லாம் நடந்து கொண்டிருக்கு. நீ இந்தக் கோணத்திலே நின்று தானே என்னைப் பார்க்கிறாய். நான் அப்படியான ஆளில்லை. வெறும் வரட்டுச் சங்கதியாய், என்ரை கல்யாணம் முடிந்து போகாது.. நான் ஓர் ஊனம் விழுந்த பெண்ணோடு வாழ்ந்து காட்டுகிறேனா, இல்லையா, பார், காலம் உனக்குப் பதில் சொல்லும்” என்றான்.

விசாகன் மனோபலம் கொண்டவனாய். மாதவனுக்கு அவனை அந்த நிலையில் பார்க்கப் பெரும் வியப்பாக இருந்தது. வாழ்வின் சாதாரண நடைமுறைகளையே புரட்டிப் போடும் எதிர்த் துருவமான , அவனின் இந்தப் புரட்சிகரமான எண்னங்கள் குறித்து, மனம் சிலிர்த்துப் போகிற பெருமையுடன் அவன் நினைவு கூர்ந்தான் “ இப்படி விசாகன் போல் நினைக்க நமது சமூகத்து இளைஞர்களில், எத்தனை பேருக்கு மனம் வரும்.? இப்படி ஓரிரண்டு பேர் நினைத்தாலும் வாழ்விழந்த பேதைகளுக்கு அது ஒரு வரப்பிரசாதம்தான்.. நடக்க வேண்டுமே என்று தோன்றியது.

அவர்களின் நினைவுக்கு எட்டாத,, புறப்பிரக்ஞையாக வருகிற நடைமுறை உலகம் இன்னுமொரு துருவத்திலிருந்து அவர்களை வா என்று அழைப்பது போல் பட்டது. வீடியோ நாடகம் போல வேடம் கட்டி நடந்தேறுகின்ற, கல்யாணக் காட்சி வெறுமை அவர்களின் கண் முன்னால் களை கட்டி நின்றது. அந்தக் காட்சி நிழலுக்கு முகம் காட்டிப் போகுமாறு , மணப் பெண்ணின் அப்பா வந்து அழைத்துப் போன போது, விசாகன் உயிர் மரத்துப் போன வெறும் நிழலாகவே அவரைப் பின் தொடர்ந்தான். இப்படி வருவோர் போவோர், நின்றவர் இருந்தவர் எல்லோரையுமே படமெடுத்துக் காசைக் கரியாக்குகிற, இப்பெரிய மனிதர்கள் குறித்து, அவனுக்குப் பெரும் கவலை வந்தது.. இப்போதிருக்கிற இழப்பு வாழ்க்கையில் , மிகவும் மட்டமான ஒரு நாகரீகக் கூத்தாய் அதை அவனால் உணர முடிந்தது.. இதை வெளிப்படையாக மனம் திறந்து பேசுகிற நிலைமை இன்னும் வரவில்லை.. அகக் கண்ணால் நிஜ வாழ்க்கையின் ஊனங்களைப் பார்க்க முடியாமல் போன மன இருட்டு இவர்களுடையது. கண்ணிருந்தும் குருடர் போலான நிலைமை தான். இவர்களின் கண் திறக்கவே என்ரை விழி மூடாத இந்த லட்சியப் பயணம். பொறுத்திருந்து பார்ப்போம்..

மாதவனின் குரல் மீண்டும் அவன் மெளனத்தை கலைத்தது. வீடியோ நிழலுக்கு முகம் காட்டி விட்டு மேடையை விட்டுக் கீழிறங்கிய போது மாதவன் உணர்ச்சிவசப்பட்டுக் கேட்டான்.

“என்ன விசாகா! ஏன் வந்தோம் என்று தானே உனக்கு இருக்கு. இதில் உனக்கு உடன்பாடு இல்லைத்தானே?”

“உணர்ச்சிபூர்வமாக நினைக்க எவ்வளவோ சங்கதிகள் இருக்கு. இது உணர்ச்சியில் கரைந்து போகிற ஒரு விடயமில்லை. சும்மா வேடம் கட்டி ஆட, ஒரு போக்குக்கெட்ட செயல்தான் . இது. இதை வழிக்குக் கொண்டு வருவது, எப்படி என்று தான், எனக்கு ஒரே யோசனையாக இருக்கு. தமிழுக்குத் தோலுரிந்து போன காயத்தை நான் சுமக்கிறன். அது தான் ,முழு ஈடுபாட்டோடு, இதில் கலந்து கொள்ள என்னால் முடியேலை எப்ப வன்னிப் பெண்ணை மணப்பேனோ அப்ப கூட ஒரு வேளை இதற்கு விடிவு கிடைக்கலாம்.”

“முதலில் நீ வாழ்ந்து காட்டு”

என்றான் மாதவன் குரலில் உணர்ச்சி ஏறி… விசாகன் மெளனமாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்/.இப்படி வேடம் கட்டி ஆடுகின்ற கல்யாணக் கூத்துகள், போலன்றி, ஊனப் பளு சுமக்கின்ற, ஒரு சமூகத்தின் பொருட்டு தான் நிலை கொண்டு நிறுவ இருக்கும் ஒரு பேதையுடனான அந்தக் கல்யாண வேள்வி வாழ்வின் கறைகள் படியாத ஒரு புனிதச் சடங்காகவே இவ்வுலகின் கண் முன்னால் நிழல் காணாத நிஜத்தின் தரிசன ஒளியுடன் தெய்வீகக் களை கட்டி அரங்கேற இருப்பதாய் அவன் முழு மனதோடு, நம்பினான். அந்த நம்பிக்கை வீண் போகாதென்று படவே, மாதவன் உரிமையோடு அவனின் தோள் மீது கை போட்டு, அணைத்தவாறே மனம் கரைந்து கூறினான்.

“உனக்கு என் வாழ்த்துக்கள்”

ஜீவநதி புரட்டாதி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *