வளையல் பெண்ணின் வளையல் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 10,753 
 

மிரளாவுக்கு ‘வளையல் பெண்’ என்ற பெயர் முகநூலில்தான் சூட்டப்பட்டது.வளையல்களின் மீது அதீத மோகம் கொண்டிருந்த அவளுக்கு அந்தப் பெயர் பிடித்துப்போகவே தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டாள்.வளையல்களின் மீதான கிறக்கம் எப்போது அவளை ஆட்கொண்டது என்பதை மிகத்துல்லியமாக கணிக்கமுடியாவிடினும் அநேகமாக தன் அம்மாவின் வளையல்களைத்தான் அவள் முதன் முதலில் பார்த்து இரசித்திருக்கக்கூடும்.

அவளுடைய அம்மாவுக்கு வளையல் மீது கொள்ளை ஆசை அதிலும் குறிப்பாக கண்ணாடி வளையல்கள் என்றால் அதீத ஆசை.அவளுடைய வீட்டில் ஊனமுற்றிருந்த மர அலமாரி ஒன்று இருந்தது. ஒரு கால் உடைந்து சாய்வாக நின்றிருந்த அந்த மர அலமாரிக்குள் விதவிதமாய் பல வண்ணங்களில் வளையல்களை வைத்திருந்தார் அம்மா.அவளுக்கு அது நன்றாக நினைவிலிருக்கிறது.அவள் அம்மா அடர் நீல நிற கண்ணாடி வளையல்களையும் ,கரும்பச்சை நிற கண்ணாடி வளையல்களையும்தான் அதிகளவில் வைத்திருந்தார்.அவற்றிற்குத் தோதாக நிறைய அடர்நீல நிற புடவைகளும் கரும்பச்சை நிறத்தில் இலேசாக மஞ்சள் நிற பூக்கள் நிறைந்திருந்த புடவையும் வைத்திருந்தார்.குளித்து மஞ்சள் பூசி,அந்தப் புடவைகளுக்கு ஏற்ப கைகளில் நிறைய வளையல்களை அணிந்துகொண்டு தலையில் மல்லிகைச் சரம் சூடிக்கொண்டு கோயில்களுக்கும் திருமண வைபவங்களுக்கும் அம்மா சென்று வரும்போது ஊராரின் கண் அவளை விட்டு நீங்காது.வீட்டில் இருக்கும்போது கைலி இரவிக்கை அணிந்தாலும் கூட கைகளில் ஒன்றிரண்டு கண்ணாடி வளையல்கள் அணிந்திருப்பார்.அதனால் அவள் வீட்டில் எப்போதும் வளையல் ஓசை ஒலித்துக்கொண்டே இருக்கும்.

நிச்சயமாக அம்மாதான் அவளுக்குள் வளையல் ஆசையையும் விதைத்திருக்கக்கூடும்.கைக்குழந்தையாக இருந்தபோதே அவள் கைகளில் நிறைய வளையல்கள் இருந்தனவாம்.அவளுடைய சிறுவயது புகைப்படங்களைப் பார்க்கும்போது அவளுக்கும் அது உண்மை என தெரியவந்தது.அவள் குழந்தையாக இருந்தபோது வெள்ளை வெளேர் என்று இருந்ததால் அவள் கைகளில் அணிவிக்கப்பட்ட சிவப்பு நிற வளையல்கள் அதிக எடுப்பாக இருக்குமாம்.அவள் அம்மாதான் சொல்வாள்.

1001 அரேபியக் கதைகள் மாதிரி ஒவ்வோர் இரவும் அவள் அம்மா ஒவ்வொரு வளையல் கதையைச் சொல்லிதான் அவளைத் தூங்கவைப்பார்.அந்தக் கதைகளோடு அவளைத் தட்டித் தூங்கவைக்கும் அம்மாவின் வளை ஓசையும் அவள் காதில் சுகமாய்த் தாலாட்டும்.கஷ்டப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட ’ஃபூமாகிலா’ கொசுவர்த்தி சுருள் அணைந்து போவதற்குள் வளையல் பெண் உறங்கிப் போய்விடுவாள்.வளையல் கனவுகள் அவளைப் பின்தொடரும்.காலையில் அவள் அப்பாவின் தோட்டத்து மணி ஓசையில் பெருமிதமாய்க் கண்விழிக்கும்போது அம்மா முன்னிரவில் சொல்லிய வளையல் கதைகள் நினைவுக்கு வரும்.சிறு முறுவலோடு அக்கதையை அசைபோட்டுக்கொண்டே எழுவாள்.

அவள் அம்மா தோட்டப்புறத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்பவள்.அவளைப் பொருத்தமட்டிலும் சாதாரண கண்ணாடி வளையல்களை வாங்குவது கூட இலகுவானது அல்லவே.இருபது காசு, ஐம்பது காசு என கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து பிறகு ஒருநாள் முகம் நிறைய சந்தோஷத்தோடு அவள் பேருந்து ஏறி அருகிலுள்ள பட்டணத்துக் கடைக்குப் போய் கண்ணாடி வளையல்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் வாங்கி சேமித்த கதையைச் சலிக்காமல் மீண்டும் மீண்டும் சொல்வாள்.அம்மா நிச்சயம் மேரி அக்காளின் கடையில்தான் வளையல்களை வாங்கியிருப்பாள்.

பட்டணத்தில் ஒரு சிறிய ஒட்டுக்கடைதான் மேரி அக்காவினுடையது.இரண்டு பேர் மட்டுமே உட்காரக்கூடிய அளவில் கச்சிதமாக இருக்கும் அக்கடையில்தான் நிறைய வளையல்களும் விதவிதமான வடிவங்களில் தலையில் அணிந்துகொள்வதற்கு ஏதுவான அலங்காரப் பொருள்களும் இருந்ததைப் பார்த்திருக்கிறாள்.சில வேளைகளில் இருவரும் பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில் அம்மா அவளை அழைத்துக்கொண்டு அந்தக் கடையில்தான் நிழலுக்கு ஒதுங்கியிருப்பாள்.அம்மாவின் கண்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தம் புதிய கண்ணாடி வளையல்களின் மீது ஏக்கமாய்ப் படர்ந்திருக்கும்.யாராவது படித்த, வசதியான பெண்கள் கடைக்கு வந்து அந்த வளையல்களை வாங்கி போகும்போது அம்மாவின் கண்களில் தெரியும் ஏக்கமும், இயலாமையும் எட்டு வயதில் தலைநிறைய எண்ணெயோடு நீண்ட சடையில் அம்மாவோடு நின்றிருக்கும் வளையல் பெண்ணையும் சலனப்படுத்தும்.அவளுக்கு அம்மாவை நினைத்துப் பரிதாபம் ஏற்படும்.பாவம் அம்மா.அப்பாவுடன் ஜோடியாக நிற்கும் புகைப்படத்தைப் பெரிய அளவில் கழுவி வரவேற்பறையில் மாட்டவேண்டும் என்ற அவளது நீண்ட நாள் ஆசை கூட இன்னமும் நிறைவேறியதேயில்லை.கடைக்காரன் முப்பது ரிங்கிட் செலவாகும் என கூறிவிட்டதால் ஒவ்வொரு முறை பட்டணம் செல்லும்போதும் அந்தப் புகைப்பட கடையை ஒருகணம் ஏக்கத்தோடு பார்த்துவிட்டுதான் நடப்பாள் அம்மா.

அரும்பாடுபட்டு வளையல்கள் வாங்கி சேர்த்த கதையையும் ,புகைப்படத்தைப் பெரியதாக கழுவமுடியாமல் தவிக்கும் ஏக்கத்தையும் அம்மா சொல்லும்போது தொன்னூறுகளின் இறுதியில் இருந்த அந்தக் காலத்திலும் பாமர தோட்டப்பாட்டாளிக்கு முப்பது ரிங்கிட் கூட பெரிய தொகைதான் என அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.ஆனால் இப்படி வளையல் வாங்குவதற்குக் கூட அம்மா பணம் சேமித்துதான் வாங்க வேண்டியிருக்கிறது என அறிந்தபோது மனம் கொஞ்சம் உறுத்தவே செய்தது. பள்ளியில் தினம் ஒரு ரிங்கிட் கொடுத்து வாங்கி சாப்பிடும் நாசி லெமாக் அவளுக்கு நினைவுக்கு வந்தது.அந்தக் காசில் அம்மா எத்தனை வளையல்களை வாங்கி கொள்ள இயலும் என எண்ணியபோது இனிமேல் நாசி லெமாக் சாப்பிட வேண்டாம் என முடிவெடுத்தாள்.அத்தோடு சீக்கிரமே பெரிய பெண்ணாகி ,அப்பாவின் ஆசைப்படி ஆசிரியையாகி, அம்மாவுக்கு நிறைய கண்ணாடி வளையல்களை வாங்கி கொடுக்கவேண்டும் எனவும் நினைத்துக்கொண்டாள்.ஊடே தனக்கும் நிறைய வளையல்களை எல்லா வண்ணத்திலும் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலும் பிறந்தது.

அந்தளவிற்கு அம்மாவிடமிருந்து கேட்டறிந்த வளையல் கதைகள் அவளுக்கும் வளையல்களின் மீதான ஆசையை அதிகரித்து வைத்திருந்தன.

வளையல் பெண்ணிடமும் வருங்காலத்தில் தன் பெண் பிள்ளைகளுக்குச் சொல்வதற்கென நிறைய வளையல் கதைகள் இருந்தன.அவளுடைய சிறுவயதில் பழைய மிதிவண்டியில் சம்பள தேதிகளில் பெட்டி நிறைய வளையல்களை எடுத்துக்கொண்டு மிடுக்காய் வந்து இளம்பெண்களின் கரம் பற்றி வளையல்களை அணிவித்துவிட்டுப் போடும் ‘இளமையான’ வெள்ளை மீசை தாத்தா ,அவளுடைய பிறந்தநாளின்போது முதன்முறையாக அப்பா வாங்கி தந்த நீல நிற நெகிழி வளையல்களை அணிந்து கொண்டு ஒரு ராஜகுமாரியாய்ப் பெருமிதத்தோடு அப்பாவின் கையைப் பற்றிக்கொண்டு நடந்து போனது ,இடைநிலைப் பள்ளியில் பயின்றபோது அதிகமாய் விரும்பி அணிந்த கருப்பு நெகிழி வளையல்கள், சேரன் மாமாவின் பிறந்தநாளின்போது குழந்தைகள் காப்பகத்தில் மனநலம் குன்றிய சிறுமி ஒருத்தி இவளுடைய கைவளைகளை வருடிப் பார்த்துக்கொண்டே இருந்தது என நிறைய வளையல் கதைகள் அவள் வசமும் இருந்தன.

தாப்பாவிலிருந்து கம்பார் செல்லும் ‘கம்தா’ பேருந்து நகர ஆரம்பித்தது.இவ்வளவு நேரம் வளையல் கதைகளோடு கடந்த காலத்தில் மூழ்கியிருந்த வளையல் பெண்ணுக்கு இப்போது இருபது வயது.இந்த வயதில் அவளிடம் நிறைய வளையல்கள் இருந்தன.எல்லாமே அவள் அம்மா கஷ்டப்பட்டு ‘அந்திவேலை’ செய்து வாங்கி கொடுத்த நெகிழியாலும், உலோகத்தாலும் ,கண்ணாடியாலும் ஆன வளையல்கள்.

தற்காலிக ஆசிரியையாக குழந்தைகளோடு இன்புற்றிருந்த வளையல் பெண் சுடிதாருக்கு ஏற்ற நிறத்தில் பூவேலை செய்யப்பட்டிருந்த வளையல்கள் அணிந்து பள்ளிக்குப் போய்வந்தாள்.பள்ளியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளின்போது நிசப்தமான பொழுதில் இவளுடைய கை வளை சிணுங்கிவிட எல்லாரும் திரும்பி பார்க்க இவள் அவஸ்தையாய் நெளிவாள்.ஆனாலும் கைநிறைய வளையல்கள் அணிவதை அவள் நிறுத்திக்கொண்டதே இல்லை.தன்னை மகிழ்ச்சிப்படுத்தும் தன் இரசனையை மற்றவர்களுக்காக தான் ஏன் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற அவளது வாதம் நியாயமான ஒன்றுதானே?இதோ இன்று காலையில்தான் அவளுடைய முதல் சம்பளம் வங்கியில் சேர்க்கப்பட்டுவிட்ட செய்தியறிந்தாள்.மூன்று மாத சம்பளம் ஒன்றாகக் கிடைத்ததில் கணிசமான தொகை சேர்ந்து இருக்கவே தன் அம்மாவுக்கு வளையல்கள் வாங்கி கொடுப்பதற்காக ‘கம்பார்’ பட்டணத்திற்குப் பேருந்தில் சென்று கொண்டிருக்கிறாள்.

அவள் அம்மாவின் முகத்தில் புன்னகை ததும்பியிருந்தது.அதை இரசித்தபடியே சன்னலோரம் தலைசாய்த்து அமர்ந்தாள் வளையல் பெண்.அவள் எண்ணங்கள் யாவும் வளையல்களைச் சுற்றியே இருந்தன.ஒன்றாம் ஆண்டு சிறுமிகள் ஆசையாய்த் தொட்டுப்பார்த்து மகிழும் தன் வளைக்கரத்தைப் பார்த்தாள்.சரணின் நினைவு வந்தது.

வளையல் பெண் அழகாக வரைவாள், சுவையாக சமைப்பாள், இனிமையாக வீணை வாசிப்பாள்.கதைகள், கட்டுரைகள் வரைவாள்.அதனாலேயே சரணுக்கு அவளிடத்தில் அவள் கரங்களை அதிகம் பிடிக்கும்.குறிப்பாக வளைக்கரங்களை.அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான்.

சரணுக்குத் தமிழ்க்கலாச்சாரத்தோடு இருக்கும் பெண்களைத்தான் அதிகம் பிடிக்கும்.ஆங்கில மோகத்தில் அலையும் பெண்களை கவிதை வாயிலாக நன்றாக சாடிவிடுவான்.வளையல் அணிவது தொடங்கி எல்லா விதத்திலும் இரசனை நிறைந்திருக்கும் இவளோடு வாழப்போகும் அற்புதமான வாழ்க்கையை மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதாக சொல்வான்.அவள் பெருமையில் உழன்று கொண்டிருந்தபோதே பேருந்து, நிலையத்தை அடைந்துவிட்டிருந்தது.வளையல் பெண் அம்மாவை மேரி அக்காவின் கடையைவிட பல மடங்கு பெரியதாக இருந்த ஒரு கடைக்கு அழைத்துப் போனாள்.

கடையைப் பார்த்த அம்மாவின் கண்கள் வியப்பால் விரிந்தன.இதுவரையில் இப்படி பகட்டான ஒரு பெரிய கடையில் அவள் நுழைந்ததேயில்லை.ஜவுளி கடைகளை எல்லாம் தூர நின்று பார்த்ததோடு சரி.அதனால் அவளுக்குக் கடையின் பிரமாண்டம் ஆச்சரியத்தைத் தந்தது.

வளையல் பெண் அவள் அம்மா ஆசைப்பட்ட வண்ணத்தில் நிறைய வளையல்கள் வாங்கி தந்தாள்.அம்மாவின் இளமைக் காலத்தில் வெறும் வண்ணத்தில் இலேசாக தங்க சரிகை போடப்பட்டிருந்த கண்ணாடி வளையல்களின் தற்போதைய நவீன வடிவம் கண்டு அம்மா பிரமித்துதான் போனாள்.மீண்டும் மீண்டும் கைகளில் அணிந்து பார்த்துக்கொண்டே இருந்தாள்.வீடு வந்து சேர்ந்த பின்பும் அந்த வளையல்களைக் கையில் எடுத்துப் பார்த்து பிரமித்துக்கொண்டே இருந்தாள்.வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டு பெண்ணிடமும் காட்டி பெருமைப்பட்டுக்கொண்டாள்.மீண்டும் மீண்டும் பிரமிப்பு கொண்டாள்.ஆனாலும் அந்தப் பிரமிப்பில் மூழ்கி திளைக்க அம்மாவுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

அம்மாவின் கைவளையோடு இருபத்திரண்டு ஆண்டுகள் குடித்தனம் நடத்திய வளையல் பெண்ணின் அப்பா அன்றிரவே யாரும் எதிர்பாராத தருணத்தில் திடீர் மாரடைப்பில் காலமானார்.ஆசை ஆசையாய் வாங்கி வந்த கண்ணாடி வளையல்களைப் போன்றே அவள் அம்மாவும் ஓசையின்றி ஒரு மூலையில் முடங்கி கிடந்தாள் சில வாரம்.

அப்பா இறந்த அன்றே தாலியைக் கழற்ற மனமில்லாமல் இருந்த அம்மா சில தினங்களுக்குப் பின் தாலியைக் கழற்றி ஆற்றில் விட்டாள்.நெற்றியில் சிறிய சிவப்புப் பொட்டு இட்டுக்கொண்டாள்.ஆனாலும் வளையல்கள் இல்லாமல் அம்மாவின் கைகள் வெறிச்சோடி கிடந்தன.வளையல் பெண்ணின் வற்புறுத்தலாலும் ,கணவனால் கிடைக்கப்பெற்ற தாலியைத் தவிர பிறந்தது முதல் அணிந்து வந்த வளையல்களைத் தொடர்ந்து அணிவது தப்பல்ல என்ற பாட்டியின் வாதத்தாலும், நாற்பத்தைந்து வருடங்களாக வளையல்களின் மீது கொண்டிருந்த மோகத்தினாலும் அப்பாவின் பதினாறாம் நாள் காரியங்களுக்குப் பின் அம்மா மீண்டும் வளையல்களை அணியத் தொடங்கினாள்.வளையல் அணியத் தொடங்கியதும் அம்மாவின் முகத்தில் பழையபடி களை வந்து ஒட்டிக்கொண்டதைப் பார்க்க முடிந்தது.

வளையல்கள் அம்மாவிற்குத் தன்னம்பிக்கையை மீட்டுத் தந்ததை எண்ணி அதன் வலிமையைக் கண்டு வியந்தாள் வளையல் பெண்.நாற்பத்தைந்து வருட பழக்கமாயிற்றே?அப்பாவுக்கு முன்பே அவள் கையில் உரிமையோடு விளையாடிய வளையல்களை விட்டுக்கொடுப்பதென்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை அம்மாவைப் பார்த்த மாத்திரத்தில் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.தொடர்ந்து இரு தினங்கள் அணிந்தபின் மூன்றாம் நாள் முதன்முறையாக கனவில் வந்த அப்பா இனி வளையல்கள் அணியவேண்டாமென்று சொன்னதாக அம்மா சொன்னபோது அது வெறும் நினைவு என்று நினைத்தாள் அவள். அதனால் இரண்டு முறை அதே மாதிரி கனவு வந்தபோதும் அம்மாவைத் தொடர்ந்து வளையல்களை அணியச் சொன்னாள்.அம்மாவும் அணிந்தாள்.ஆனால் ஏனோ அந்த வளையல்கள் ஜீவனற்றே கிடந்தன அவள் சுருங்கிய கைகளில்.

மூன்றாம் முறை கனவில் வந்த அப்பா அம்மாவின் கைகளை இறுகப்பற்றி வளையல்களை உடைத்துப்போட்டதாய் அம்மா கனவு கண்டு சொன்னபோது அப்பாவுக்கு அம்மா தொடர்ந்து வளையல் அணிவது பிடிக்கவில்லை என உணர முடிந்தது.அதன்பிறகு அம்மா எல்லா வளையல்களையும் கழற்றிப்போட்டுவிட்டார்.அவளும் அதைத் தடுக்கவில்லை.ஆனால் ஒருநாள் நள்ளிரவில் எல்லாரும் உறங்கிவிட்ட பின் அவளுடைய அம்மா அலமாரியைத் திறந்து வளையல்களை எடுத்து, யாருக்கும் தெரியாமல் கைகளில் அணிந்து பார்த்துவிட்டு, உடனே கழற்றி வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அவள் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீரைக் காண நேர்ந்தது.அம்மாவுக்கு வளையல்களின் மீது இருக்கும் ஆத்மார்த்தமான ஆசையை அவளால் உணர முடிந்தது.அப்பாவுக்காக அம்மா தன் ஆசையை மறைத்து வைத்து வாழ்கிறாள் என உணர்ந்தபோது பரிதாபத்தைத் தாண்டி அம்மாவின்மேல் பெருமதிப்பு உண்டானது அவளுக்கு.

ஆனாலும் அப்பாவின் செய்கை வளையல் பெண்ணுக்கு எந்தக் கோபத்தையும் உண்டாக்கவில்லை.அவள் அந்த விஷயத்தை வேறு கோணத்தில் பார்த்தாள்.அப்பா, அம்மா மீது எத்தகைய அன்பும்,உரிமையும் கொண்டிருந்திருக்கவேண்டும் என்றே நினைக்கத் தோன்றியது.நிச்சயம் அம்மாவின் வளையல் கரங்களை எல்லாரையும் விடவும் அதிகமாய் நேசித்திருப்பார்தானே?தான் வருடிப்பார்த்து இரசிக்க முடியாமல் போகும் வளைக்கரத்தை மற்றவர்கள் இரசிக்கக்கூடாது என நினைக்கும் அப்பாவின் செய்கை முழுக்க முழுக்க அம்மாவின் மீதான நேசத்தைதானே வெளிப்படுத்துகின்றது?

அவளுக்குச் சட்டென்று சரணின் நினைவு வந்தது.கதை எழுதும் அவளுடைய வளையல் கரங்களைப் பெரிதும் இரசித்து நேசிக்கிறான் அவன்.பிற்காலத்தில் அம்மாவுக்கு நடந்தது அவளுக்கும் நடக்குமோ?சரணுக்கு ஏதாவது ஆகிப்போனால் இவளும் அம்மாவைப் போன்று வளையல்களை எல்லாம் கழற்றி எறியவேண்டி இருக்குமோ?இல்லையென்றால் அம்மாவை மாதிரி எல்லாரும் உறங்கிய பின் திருட்டுத் தனமாக வளையல்களை அணிந்து பார்க்கும் நிலை வருமோ? அப்படியே பிடிவாதம் பிடித்து துணிந்து அணிந்து கொண்டாலும் அவனே இல்லாது போனால் அவள் வளையல்கள் மட்டும் இசைக்குமா என்ன?

ஓசையில்லா கவலை ஒன்று அவள் இளநெஞ்சை உறுத்தியது. அவள் மனம் விசும்ப ஆரம்பித்தது.பக்கத்தில் வந்து படுத்த அம்மாவுக்குத் தெரிந்துவிடக்கூடாதென்று கண்கள் மூடி உறங்குபவள் போன்று படுத்திருந்தாள்.அலமாரிக்குள் அடைபட்டுக் கிடந்த அவளுடைய வளையல்களும் அவளுக்குத் துணையாக உறங்காமல் விழித்திருந்தன.

– மக்கள் ஓசை 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *