வளர்மதியும் ஒரு வாஷிங் மெஷினும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 9,961 
 

வளர்மதிக்கு இப்போது இரண்டரை வயதாகிறது.அம்மா அப்பா என்ற வார்த்தைகளை அழகாகச் சொல்கிறாள். அவள் எழுந்து நின்று தத்தித் தத்தி நடக்கத் தொடங்கியது நேற்று நடந்ததுபோலிருக்கிறது.இப்போது தள்ளுவண்டியில் இருக்கமாட்டாளாம்.எப்பவும் அவள் ஓட்டமும் நடையுமாக,ஒரு இடத்திலிருக்காமல் ஓடிவிளையாடிக்கொண்டிருக்கிறாள்.

குழந்தையின் இரண்டு வயதுக்கான வளர்ச்சியின் பரிமாணத்தைப் பரிசோதித்த வைத்தியர், அறிவு ரீதியாக வளர்மதி ஒரு சூடிகையான குழந்தையென்றும்,எதிர்காலத்தில் அவள் ஒரு நல்ல கெட்டிக்காரியாவதற்கான எல்லாவிதமான அறிகுறிகளுமிருப்பதாகச் சொன்னார். ஆனாலும் அவளது எடை இரண்டு வயதுக்குழந்தைகளுக்கு இருக்கவேண்டியதைவிடக் குறைவாக இருப்பதாகவும் அவளின் சாப்பாட்டு விடயத்தில் கொஞசம் அக்கறை எடுக்கும்படியும் வளர்மதியின் தாய் மாலதிக்கு அறிவுரை சொன்னார்.

வளர்மதி துடிப்பான, கெட்டிக்காரப்பெண் என்பதில் மாலதிக்குச் சந்தோசம்தான் ஆனால் வளர்மதி,கொஞ்சம் கறுப்பான நிறமாகவிருப்பது மாலதிக்குக் கவலை தந்தது. அவள் தங்கள் குழந்தையின் நிறத்தைப் பற்றி மாலதி ஏதும் பேசினால்,’என்னவென்று எங்களுக்குப் பிறந்த குழந்தை சிவப்பு நிறத்திலிருக்கும்,நானும் நீயும் என்ன நிறத்திலிருக்கிறோம் என்று உனக்குத் தெரியாதா?’ என்று மாலதியில் எரிந்து விழுவான்.

அவனுக்கு, அவர்களின் கல்யாணம் நடந்து இருவருடத்தில் பிள்ளை பெற்றுக் கொண்டது அவ்வளவு பிடிக்கவில்லை. அவர்களுக்கு வீட்டுப் பொறுப்புக்கள் ஏராளம். லண்டனுக்கு வருவதற்கு வாங்கிய கடன் கொடுத்து முடியவில்லை. எல்லாத் தொல்லைகளும் முடியக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதுதான் நல்லது என்ற கல்யாணமான புதிதில் இருவரும் பேசிக் கொண்டார்கள்.

ஆனால் குழந்தைகள் வராமலிருக்கப் பெண்கள் எடுக்கும் கர்ப்பத்தடை மாத்திரைகள் மாலதிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மாத்திரை எடுக்கத் தொடங்கிய நாட்களில்,முதலிரண்டு கிழமைகளும் அவளுக்கு வாந்தியும் வயிற்றுக் குமட்டலும் வந்து மிகவும் துன்பப்பட்டாள்.’கர்ப்பத்தடை மாத்திரைகள் எல்லாப் பெண்களுக்கும் ஒத்து வராது, சிலருக்குச் சில பிரச்சினைகளும் வரும்’ என்று டாக்டர் விளங்கப் படுத்தியிருந்தார்.

கல்யாணமான கையோடு பிள்ளையைப் பெற்றுக்கொண்டு, பொருளாதார ரீதியாகத் திண்டாட விரும்பாத சிதப்பரம்-மாலதி தம்பதிகளுக்குக் கர்ப்பத்தடை விதி முறைகளை வைத்தியர் விளங்கப் படுத்திச் சொன்னார். கர்ப்பத்தடை மாத்திரை எடுக்க முடியாவிட்டால், கர்ப்பப்பைக்குள் புகுத்தும் ‘கொயிலைப்’ பாவிக்கலாம் என்றும் அல்லது சிதப்பரம் ‘கொண்டோம்’ எனப்படும் ஆணுறையைப் பாவிக்கலாம் என்றும் அவர்களுக்கு ஆலோசனை வளங்கப் பட்டது.

மாலதிக்கு கர்ப்பத்தடை மாத்திரை சரிவரவில்லை.இரண்டு கிழமைக்குப் பின் மாத்திரை எடுப்பதை நிறுத்திவிட்டாள்.கர்ப்பப்பைக்குள் ‘கொயில்’ மாட்டிக்கொள்வதைப் பற்றித் தெரிந்து கொள்ள பமிலி பிளானிங் கிளிக்குக்குப் போனபோது,அங்கு வந்திருந்த பெண்கள் ‘கொயில்’ பற்றிப் பல விளக்கத்தையும் அவளுக்குச் சொன்னார்கள்.

பிளாஸ்டிக்காலான ஒரு சுருண்ட வளையத்தைக் கர்ப்பப்பைக்குள்த் திணிப்பார்களாம்.அது கர்ப்பம் தரிப்பதைத் தடுக்குமாம். ஆனால்ச் சில பெண்களுக்கு,இந்தக் கொயில்,அவர்களின் கர்ப்பப்பைச் சுவற்றில் உரசி, சிலவேளை குருதிக்; கசிவையோ சிலவேளைகளில் தாங்கமுடியாத வலியையும் உண்டாக்குமாம். அப்படியான காரணங்களால்ச்; சிலவேளைகளில் இன்வெக்ஷன் வந்தால் அதன் விளைவு பாரதூரமாகவிருக்குமாம்.அதாவது, சிலவேளை பெண்களின் உயிருக்கே ஆபத்துவரும் நிலையும் வரலாமாம்.

மாலதிக்கு அவற்றைக் கேட்கப் பயம் வந்து விட்டது. அவளுக்குப் பிள்ளைகள் என்றால் கொள்ளையாசை. தற்போதைய நிலையில் அவள் குழந்தை பெற்றுக் கொள்வதைக் கொஞசம் தாமதிக்கவேண்டும். அதைவிட என்ன செய்யலாம்? அவள் டாகட்ரிடம் உதவி தேடினாள். ‘பெண்களுக்கான,’டையாபுரத்தை’ மாட்டிக்கொள்ளலாம் அவர் ஆலோசனை கொடுத்தார்.

பெண்ணுறப்பைத் தாண்டி ஆணின் விந்து கர்ப்பப்பைக்குள் போய்க் கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கும் கவசமது! அதைத்தன் பெண்ணுப்பில் மாட்டிக்கொள்ள மாலதி எடுத்துகொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகின.

‘பெண்கள்தான் குடும்பக் கட்டுப்பாடுபற்றிய எல்லா விடயங்களையும் பெண்கள்தான் பொறுப்பெடுக்க வேண்டுமா’?, கிளிக்கில் சொன்னமாதிரி, குடும்பக் கட்டுப்பாட்டுக்கு இலகுவான வழி ஆண்கள் உறைகளைப் பாவிக்கலாம் என்பதைக் கணவர் சிதம்பரத்திடம் சொல்லலாமா?

கிளிக்குக்கு வந்திருந்த பல பெண்கள் இலவசமாகக்கொடுபடும் ‘கொண்டோம்’ உறைகளைத் தாராளமான விதத்தில் தங்களுடையாக்கிக்கொண்டு விரைந்தார்கள். மாலதிக்கும், ஒரு ‘கொண்டோம்’பைக்கட்டைக் குறும்புச் சிரிப்புடன் கொடுத்த நேர்ஸ்,’என்யோய்’ என்றாள்.மாலதிக்கு ஒன்றுமே புரியவில்லை. பழைய காலத்தில் பிள்ளை வராமலிருக்கப் பெண்கள் என்ன செய்திருப்பார்கள்? என்று யோசித்தாள்

அடிக்கடி விரதம்; என்ற பெயரில் கணவரை விட்டுத் தூரவிலகியிருந்திருப்பார்களா, அவளின் சிந்தனையை அந்தக் கிளினிக்கில் உள்ள நேர்ஸ் இடைமறித்து, ‘ஆணுறைபாவிப்பது’ கர்ப்பம் வராமலிருக்கப் பாவிக்கும் மிகவும் இலகுவானதும், சந்தோசமானதும், பிரச்சினையற்றதுமானதுமாகும’ என்று விளக்கிக் கொண்டிருந்தாள்.அவள் ஆபிரிக்கப் பெண்ணாகவிருக்கலாம் ஆங்கிலத்தை நறுக் நறுக்கென்று பேசித்தள்ளினாள்.

மாலதி லண்டனுக்கு வந்து இப்போதுதான் ஒருவருடம் முடிகிறது. உடனடியாகப் பிள்ளை ஒன்றைப் பெற்றுக் கொண்டால் அவர்களுக்குத் தற்போதிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.லண்டன் வருவதற்கு, ஏஜென்சிக்காரனுக்குக் கொடுக்க வாங்கிய கடன் இன்னும் கொடுத்து முடியவில்லை. அத்துடன்,இந்த வருடம் எப்பாடுபட்டும் தனது தம்பியை லண்டனுக்கு எடுக்கவேண்டும் என்று சிதம்பரம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

இந்த லடசணத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பதைத் தவிரவேறுவழி அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவள் கிளினிக்கிலிருந்து கொண்டு வந்த ஆணறைகளைஅவள் கணவன் சிதப்பரம் பேயைப் பார்ப்பதுபோற் பார்த்தான்.,

‘லண்டனில் வாழ என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது? அந்நியமான ஆங்கிலமொழி,ஆத்மாவை நடுங்கப் பண்ணும் பயங்கரக் குளிர்,என்பவற்றைத் தாங்குவதுவேறு.இப்போது மனைவியுடன் சந்தோசமாக இருக்கக் கவசம் போட்டுக்கொண்டு கலவி செய்வதென்றால்’?

சிதம்பரம் மௌனமாகச் சென்று விட்டான். மாலதியின் புத்திமதிகளை அவன் கேட்கமாட்டான் என்று அவளுக்குத் தெரியும்.

எப்படியும்,கர்ப்பம் வராமல் ‘கவனமாகக்’ கொஞ்சக்காலத்தைத் தள்ளினால் போதும் என்று அவள் நினைத்தாள்.

லண்டன் குளிருக்கு முன்னால், என்ன ‘கவனத்தைப்’ பார்ப்பது?மனைவியின் அணைப்பிற் கிடைக்கம் சூடு எந்த ஹீட்டராலும் தரமுடியாதே!

அழகான குழந்தையை அந்த நேர்ஸ் கம்பளிப் போர்வையாற் சுத்தியபடி மாலதியிடம் கொடுத்தாள்.

அழகான குழந்தைதான்.ஆனால் ஒரு பெண்குழந்தை. கறுப்பான பெண்குழந்தை. குழந்தையை வைத்த கண்வாங்காமற் பார்த்த மனைவியிடம்,’லண்டனில் என்ன நிற வித்தியாசம் பார்ப்பதாம், நாங்கள் எல்லோருமே கறுப்பர்கள்தான்’. சிதம்பரம் மனைவியிடம் முணுமுணுத்தான்.

மாலதி, மூன்றாவது பெண்ணாக அவள் குடும்பத்திற் பிறந்தவள். பெரிய குடும்பம். பணவருவாயிலில்லை. குழந்தைகளின் எண்ணிக்கையில் பெரிய குடும்பம். அந்தக் காலத்தில், எந்தத் தகப்பன்மார் தனது ‘ஆண்மைக்குக் கவசம்’போட்டுக் கலவி செய்தார்கள்? பிள்ளைகள்’ கடவுளின்(?)’கிருபையால் தாராளமாகப் பிறந்துகொண்டிருந்தன.

கல கலவென்று எட்டுக் குழந்தைகள் மாலதி மூன்றாவது பெண்.மூத்த தமக்கைகளுக்குக் கல்யாணம் முடியும்போது மாலதிக்கு முப்பது வயது தாண்டி விட்டது.குடும்பத்திலுள்ளவற்றைச் சீதனமாகக்கொடுத்துச் சிதப்பரத்தை அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.லண்டனுக்கு வந்து தனது முப்பத்தி மூன்றாவது வயதில் வளர்மதி என்ன குழந்தைக்குத் தாயாகி விட்டாள்.

‘பிள்ளை பெற்றுக் கொள்வதானால், கெதியாகப் பெற்றுக்கொள்,வயது ஏறிக்கொண்டு போனால் இடும்பெலும்பு வளைந்து கொடுக்காது.பிள்ளை பெறக் கஷ்டமாகவிருக்கும்’ சொந்தக்காரக் கிழவி ஒருத்தி மாலதியின் வீட்டுக்கு வந்திருந்தபோது வடையை முழுங்கிக்கொண்டுப் புத்திசொன்னாள். மாலதியின் மனதிலுள்ள கர்ப்பத்தடை விடயங்கள்,கிழவியின் புத்திமதியைக் கேட்டதும் காற்றில் கலந்தன.

குழந்தை பிறந்தது. வ.வா,என்ற எழுத்துக்களில் தொடங்கும் பெயரை வைக்கச் சொல்லி ஊரிலிருந்து கடிதம் வந்திருந்தது.குழந்தைக்கு வளர்மதி என்று பெயர்வைக்க மாலதிக்கு விருப்பம்..

‘வாசுகி என்று பெயர் வைப்போமா?’ சிதம்பரம் கேட்டான்.

‘அந்தப் பெயரை ஆங்கிலேயர் சரியாக உச்சரிப்பார்களா?’என்று மாலதி கேட்டதும் அவனுக்குக் கோபம் வந்தது. ஆங்கிலேயர்களுக்குப் பிடித்தபெயர் வைப்பதானால் மார்க்கிரட் தச்சர் என்று பெயர் வை’என்று மனைவியிடம் சொன்னான். கடைசியாக எப்படியோ தங்கள் குழந்தைக்கு வளர்மதி என்று பெயர் வைத்தார்கள்.

‘மதி’ என்று மாலதி தனது மகளை ஆசையுடன் அழைப்பாள். மாலதி வேலைக்குப் போனதும் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஐரிஷ் பெண் ‘மதி’ என்ற உச்சரிப்பைச் சரியாகச் சொல்லத் தெரியாமல், குழந்தையை’மட்டி’ என்று செல்லமாகக் கூப்பிடுவாள்.அவளின் குழந்தைகள்’ மாட்தி’ என்று ஆசையாகக் கூப்பிடுவார்கள்.

குழந்தையை ஐரிஷ்காரி பராமரிக்க, மாலதி இந்தியக் கடை ஒன்றில் வேலைக்குச் சென்றாள். குழந்தை பிறந்து கொஞ்சநாளில் குடும்பத்தின் பொருளாதார நிலையால் மாலதி வேலைக்குப் போகவேண்டிவந்தது.அவளுக்குக் குடும்பப் பொறுப்புக்கள் ஏராளம். சிதம்பரம் அவனின் தம்பியை லண்டனுக்கு எடுத்தவுடன் தனது தம்பியையும் எப்படியும் லண்டனுக்கு எடுக்கவேண்டுமென்ற அவள் ஓயாது உழைத்தாள். அத்துடன் குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கவேண்டும் என்று திட்டம் போட்டிருந்தாள்.

தெரிந்த மனிதர்களுடன் சேர்ந்து சீட்டுக்கட்டி எடுத்தகாசை சிதம்பரம் தனது தம்பியை எடுக்கும் முயற்சிக்குப் பாவிக்கப்போகிறான். சீpட்டுக்கட்ட ஒவ்வொருமாதமும் காசு சேர்க்கவேண்டும். மாலதி வேலை செய்யமிடத்தில் அவள் ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலங்கள் வேலை செய்கிறாள் அதனால் வரும் சம்பளம் போதாது. அந்தக் கடையில் வேலை செய்யும் பெண்கள் யாரும் லீவ எடுத்தால், மாலதி தன்னால் முடிந்த நேரத்தில் அப்படியான வேலைகளையும் செய்து உழைக்கிறாள்.அப்படி ஓவர் டைம் செய்து உழைக்கும் பணத்தில் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்குகிறாள்.வீட்டுக்கு வந்தால் குழந்தையுடன் விளையாடவே அவளுக்கு நேரமிருப்பதில்லை. வேலைக் களைப்பால் வந்ததும் வீட்டு வேலைகளைத் தொடங்கவேண்டும்.சமயல் வேலை, துணிகள் துவைப்பது, வீட்டைத் துப்பரவாக்குவது என்று எத்தனையோ வேலைகள் நிறைந்து கிடக்கும்.இரவுச் சாப்பாடு முடிந்த எல்லாம் துப்பரவாக்கி முடிய இரவு பத்துமணிக்கு மேலாகி விடும்

சிதம்பரம் ஒரு பெட்ரோல் ஸ்ரேசனில் பத்து மணித்தியாலங்கள் வேலை செய்கிறான்.அவன் வீடு வந்து சேர இரவு ஒன்பது மணியாகி விடும்.வீட்டுக்கு வந்ததும் வேலை செய்த களைப்பால் சோபாவில் தொம் என்ற விழுவான்.

உடம்பு உழைப்புடன், குடும்பத்தைப் பற்றிய மனத் துயர்களும் அவனை முன்கோபக்காரனாக்கியிருக்கிறது. வீpட்டுத் தேவைகள் பற்றி மாலதி ஏதும் சொன்னால் அதைக் கேட்கப் பொறுமையில்லாமல் அவன் எரிந்து விழுவான்.

அந்தக் கடையில் வேலை செய்யும் ஒருபெண் லீவிற் போய்விட்டாள். அந்த இடத்திற்கு இன்னொரு பெண்ணைத் தற்காலிக் வேலைக்கு நியமித்து, முழுச் சம்பளமும் கொடுக்க விரும்பாத கருமியான முதலாளி,மாலதிக்கு இன்னும் இரண்டொருமணித்தியாலங்களைக ;கூட்டி வேலை செய்ய நிர்ப்பந்தித்தபோது அவளால் அதைத் தட்டிக் கழிக்க விரும்பவில்லை. கூடுதலாக வேலை செய்யும் நேரத்துக்குரிய முழுச் சம்பளம் கிடைக்காவிட்டாலும், கொஞ்சக் காசு கூடவரும் என்பதால் அந்த வேலைக்கு ஒப்புக் கொண்டாள்.

அவளுக்குக் கிடைப்பதோ வாரத்தில் ஒருநாள் லீவு.அத்துடன் அவள் இப்போது ஒருநாளில் எட்டுமணித்தியால வேலையைப் பத்து மணிகளாக்கியதற்கு அவளின் பொருளாதார தேவை காரணமாகவிருந்தது. மாலதிக்குகு; கொஞ்சம் பணம் மிச்சம் பிடித்து,வீட்டுக்கு அத்தியாவசியமான ஒரு வாஷிங் மெஷின் வாங்க ஆசை.

வேலை முடிந்து வீட்டுக்குப் போனதும்,அல்லது வேலைக்குப் போகமுதலும்,துணிகளைத் துவைக்க அவள் லாண்டரிக்குப் போவது பெரிய சிரமமான வேலையாயிருந்தது. சின்னக் குழந்தை இருக்கும் வீட்டில் அடிக்கடி துணிகளைத் துவைப்பது தவிர்க்க முடியாத விடயம். வாஷிங் மெஷின் வாங்குவது அத்தியாவசியமானது.

இரண்டுமாதம் கொஞ்சம் கூடுதலாக வேலை செய்து உழைத்தால் அதில் வரும் பணம் ஒரு வாஷிங் மெஷின் வாங்க உதவியாக இருக்கும்.தவணை முறையில் வாஷிங் மெஷின் வாங்க அவள் ஆர்டர் கொடுத்துவிட்டாள். அடுத்த கிழமை வாஷிங் மெஷின் வீட்டுக்கு வரும்.இனி அவள் லாண்டரிக்குப் போகத் தேவையில்லை.

மாலதி இப்படி ஓயாமல் வேலை செய்வது சிதம்பரத்துக்குப் பிடிக்காவிட்டாலும், வீட்டின் பொருளாதார நிர்ப்பந்தத்தால் மாலதி அதிகநேரம் வேலை செய்வதைப் பொறுத்துக் கொண்டான்.

கடந்த சில நாட்களாகக் குழந்தை வளர்மதிக்குச் சுகமில்லை. ஐரிஸ் ஆயாவிடமிருந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு வரும்போது வளர்மதி மிகவும் சோர்ந்து போயிருந்தாள்.

‘வளர்மதி சரியாகச் சாப்பிடவில்லை, மிகவும் துவண்டுபோயிருக்கிறாள்..சாடையான காய்ச்சலும் இருக்கிறது’ ஐரிஷ் ஆயா சொன்னாள்.

மாலதி,குழந்தைக்குக் காய்ச்சலை மட்டுப் படுத்தும்’ கல்போல்’ மருந்தைக் கொஞ்சம் கொடுத்தாள். குழந்தை இரவெல்லாம் முனங்கி, சிணுங்கி அழுதுகொண்டிருந்தது. குழந்தை வழக்கம்போல் இரவில் குடிக்கும்,ஒரு புட்டிப் பாலையும் குடித்து முடிக்கவில்லை. ஓருசிறு துளிகளை மட்டும் குடித்தாள்.

காலையில் மாலதி குழந்தைக்குக் கொஞ்சம்’ வீடாபிக்ஸ்’ சாப்பாட்டைப் பாலில் கரைத்துக் கொடுத்தாள். குழந்தை மிகவும் சிரமப்பட்டு ஒன்றிரண்டு ஸ்பூன்கள் மட்டும் எடுத்தது.

‘ குழந்தைகள் ஓடியாடுற வயதில இப்படி வரும்தானே’ மாலதி குழந்தையின் நிலை கண்டு தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, வழக்கம்போல் மாலதி வேலைக்குப் போகமுதல்,காலையில் ஐரிஷ் ஆயாவிடம் குழந்தையைக் கொண்டுபொனாள்.

‘குழந்தையை டாக்டரிடம் கொண்டுபொகவில்லையா?’ ஐரிஷ் ஆயா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

‘இல்லை, இரவில் ‘கல்போல்’ கொடுத்தேன். காய்ச்சல் இருக்கவில்லை. காலையில் வீடாபிக்ஸ் கொடுத்தேன் கொஞ்சம் சாப்பிட்டாள்.இன்றைக்குப் பழையபடி ஓடியாடி விளையாடுவாள்’

மாலதி வேலைக்குப் போகும் அவசரத்தில் தனது கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னாள்.ஒரு கையில் குழந்தை அடுத்த கையில் லாண்டரியிலிருந்து எடுத்து வந்த உடுப்புகள் கனத்தன.

‘நாளைக்கு வாஷிங் மெஷினைக் கொண்டுவந்து வருவதாகக் கொம்பனி அறிவித்திருக்கிறது. இப்படித் துணிகளைத் தூக்கிக்கொண்டு அலையும் கரைச்சல் இன்றோடு முடியப் போகிறது.’

குழந்தையை ஆயாவிடம் கொடுத்துவிட்டு வேலைக்குப் போகமுதல் மாலதி தனக்கள் சொல்லிக் கொண்டாள். அன்று அவள் வேலைக்குகு; கொஞ்சம் தாமதமாக வந்ததால் முதலாளி முறைத்துப் பார்த்தான்

‘பாசமுள்ள தாய்கள் வீட்டோடு இருக்கவேணும்’ முதலாளியின் குரலில் கிண்டலா அல்லது உருக்கமா என்பதை மாலதியால் கண்டு பிடிக்கமுடியவில்லை. அவள் வேலையில் கவனத்தைத் திருப்பினாள். முதலாளியின் குரலில் எப்போதும் அதிகாரம் தாண்டவமாடும். அவன் கண்கள் கொள்ளிவாய்ப்பேய்போல தனது வேலையாளர்களை எப்போதும் வலம் வரும். அந்தப் பார்வையை,வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் தவிர்ப்பதுண்டு.

மாலதியின் அடிமனதில் துவண்டுபோய்க் கிடக்கும் அவளின் மகள் வளர்மதியின் முகம் அடிக்கடி வந்துபோனது. இப்படிக் கஷ்டப் பட்டு உழைக்கும் தனது வாழ்க்கையை நினைத்து அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்போது,அவளின் குழந்தையைப் பார்க்கும் ஐரிஷ் ஆயாவிடமிருந்து டெலிபோன் கால் வந்தது.

வளர்மதியின் காய்ச்சல் கூடி,குழந்தையின் நிலை சரியில்லை என்றும் மாலதியை உடனடியாக வரச்சொல்லி ஐரிஷ் பெண் படபடவென்று சொல்லி முடித்தாள்.

வந்த கொஞ்ச நேரத்தில் வேலையை விட்டோடும் மாலதியை முதலாளி முறைத்தப் பார்த்தான். அவனுக்குக் குழந்தையின் நிலையை விளக்கிச் சொல்ல அவளுக்கு நேரமிருக்கவில்லை.

‘ இப்படிக் கண்டபாட்டுக்கு லீவ எடுத்தால், நான் வேலைக்கு வேறு யாரையும் பார்க்க வேண்டிவரும்’

முதலாளி திட்டுவதைப் பற்றி அவளுக்கு அக்கறையில்லை. அவள் விரைந்தாள்.

குழந்தையின் முகத்தில் ஒரு களையுமில்லை.மிகவம் வாடிப்போய் வெழுத்திரந்தாள். மாலதி உடனடியாகக் கணவனுக்கப் போன் பண்ணி டாக்டரின் இடத்திற்கு வரச் சொன்னாள். குழந்தையைப் பரிசோதித்த டாக்டர், குழந்தையை உடனடியாக வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தார். குழந்தையின் நிலை அபாயமாக இருக்கிறதென்றம் குழந்தைக்கு உடனடியாக விசேட சிகிச்சை தேவை யென்றம் அவர் விளங்கப் படுத்தினார்.

டாக்டர் குழந்தையின் நிலை பற்றி மாலதிக்குச் சொன்ன விளக்கம் அவளுக்குப் புரியவில்லை.

‘வைரஸ் மெனிஞ்;சைட்டிஸ் பற்றி உனக்குத் தெரியுமா?’ என்று மாலதியை டாக்டர் கேட்டார்.

பாவம் மாலதி, பெரிய படிப்புப் படிக்காதவள் இந்தியக் கடையில் வெண்காயத்துடனும் வெண்டிக்காய்களுடனும் வேலை செய்பவள்.

‘ பக்டீரியல் மெனின்சைட்டிஸ், வைரஸ் மெனின்சைட்டிஸ் என்ற இரண்டுவித நோய் கள் இருக்கின்றன…’ என்று அவர் விளங்கப் படுத்திக்கொண்டிருக்கும்போது குழந்தை வாயைக் கோணிக்கொண்டது.

அடுத்த இரு கிழமைகளைத் தன் குழந்தையுடன் வைத்தியசாலையில் செலவழித்தாள் மாலதி.

குழந்தையின் உயிர் தப்பியது. ஆனால் குழந்தைக்கு வந்த வருத்தம் அவளின் மூளையைத் தாக்கியதால், குழந்தையின் மூளை பாதிக்கப்பட்டு விட்டது என்றும் குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால வளர்ச்சி கேள்விக்குரியதென்றும் டாக்டர் சொன்னார்.

வளர்மதி ஓடியாடவில்லை. பிரமையுடன் வெற்றுப் பார்வையுடன் உலகத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் வாயிலிருந்து அம்மா அப்பா என்ற அழகிய வார்த்தைகள் வரவில்லை.

மாலதி தன் மகளைக் கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாடிய தண்டாய்த் துவண்டு கிடந்தாள் வளர்மதி.

வீட்டில் ஒரு புதிய வாஷிங் மெஷின் கொண்டு வந்து பூட்டப்பட்டிருக்கிறது.

‘இந்த மெஷினுக்க ஆசைப்பட்டு ஓயாமல் வேலை செய்யாதிருந்தால்,வளர்மதியின் வருத்தத்தைக் காலாகாலத்தில் கண்டுபிடித்து வைத்தியம் செய்திருந்திருக்கலாம்..வளர்மதி இந்த நிலைக்கு வரவேண்டிய நிலையையும் தவிர்த்திருக்கலாம்’ பாவம் மாலதி, அவள் ஒரு சாதாரண தாய். தனது குடும்பத்தின் நன்மைக்குத் தன்னை வருத்தியுழைப்பவள். சாதாண ஆசைகளால் ஆட்டிப் படைக்கப் படுபவள்.

வாஷிங்மெஷின் மாலதிக்கு இப்போது கட்டாயம் தேவை. ஏனென்றால் வளர்மதி அடிக்கடி உடுப்புக்களை நனைக்கிறாள். ‘எனது உடுப்பு நனைகிறது’ என்று சொல்லும் அறிவு வளரமுடியாத வளர்ச்சியின் பரிமாணத்தை அவள் இழந்து விட்டாள்.

(யாவும் கற்பனையே)

அ.ஆ.இ.பத்திரிகை பிரசுரம்-நெதர்லாந்து-1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *