வளர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 8,085 
 
 

கர்நாடகாவின் நஞ்சன்கூடு அரசு உயர்நிலைப்பள்ளி தனது நூறு வருடங்களுக்கான கல்விப்பணி சாதனையை ஒரு பெரியவிழா எடுத்து கொண்டாடியது. அதில் கர்நாடகாவின் கல்வி மந்திரி மாண்புமிகு மஞ்சுநாத் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வந்திருந்தார்.

பள்ளியின் முதல்வர் தனது முன்னுரையில், “நம் கல்வி மந்திரி மாண்புமிகு மஞ்சுநாத் இந்தப் பள்ளியில்தான் படித்தார் என்பது எந்தனை பேருக்குத் தெரியும்? நம் பள்ளியில் படித்த ஒரு மாணாக்கர் இன்று நமது மாநிலத்திற்கே கல்வி மந்திரி என்பது நமக்கு எவ்வளவு பெரிய பெருமை?…..” என்று பேச்சை ஆரம்பித்தார். மற்றவர்களும் அதே ரீதியில் மஞ்சுநாத்தை புகழ்ந்தனர்.

ஆனால் கல்வி மந்திரி மஞ்சுநாத் அந்தப் பொய்யான புகழுரைகளில் நெளிந்தார். ஏனென்றால் அவர் அந்தப் பள்ளியில் படிக்கவேயில்லை என்பதுதான் நிஜம். பள்ளியின் எந்த ஒரு ஏட்டிலும், அவரது பெயர் இருக்காது. அதற்கான காரணத்தை நினைத்துப் பார்த்தார்…..

நஞ்சன்கூடு மைசூரிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். காவிரி ஆறும், வில்வ மரத்துடன் அமைந்துள்ள பெரிய சிவன் கோவிலும், அங்கு தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பற்பொடியும்தான் பிரபலம். அதைத்தவிர அந்த ஊர் கடும் வெயிலுக்கும், புழுதிக்கும்தான் பெயர் பெற்றது.

மஞ்சுநாத் நஞ்சன்கூட்டில் அறுபது வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்தார். அவரது தாத்தா – அப்பாவின் அப்பா – அந்தக் காலத்தில் ஒரு வெள்ளைக்காரப் பிரியர். அந்த வெயிலிலும் சூட் போட்டுக் கொண்டு பந்தா காண்பிப்பார். ஊரிலேயே முதல் பென்ஸ் கார் வாங்கியது தாத்தாதான். லண்டனில் பிறக்காமல் போனோமே என்கிற ஆதங்கம் தாத்தாவுக்கு நெஞ்சுமுட்ட இருந்தது. ஆனால் நஞ்சன்கூடு என்ற புழுதிக் காட்டில் பிறந்து விட்டார்.

அவரின் இங்லீஷ் தாகத்தை மூத்த பேரன் மஞ்சுநாத் மூலம் தணித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்தார். ஆறு வயதே ஆன பேரனை அந்தக் காலத்தில் பென்ஸ்காரில் அழைத்துச் சென்று ஊட்டி லவ்டேல் கான்வென்டில் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார். தாத்தாவின் எந்த ஒரு முடிவுக்கும் அப்பீலே கிடையாது.

சுருக்கமாகச் சொன்னால் ஆறுவயதில் லவ்டேல் கான்வென்டைப் பார்த்து மஞ்சுநாத் சொக்கிப்போனான்.

வெறும் பொட்டல்காடான நஞ்சன்கூடில் பிறந்து வளர்ந்த அவனுக்கு, பசுமையைத் தவிர வேறு எதுவுமே அற்ற ஊட்டியின் மலைத் தொடர்களையும், ஆழ்ந்த அமைதியைக் கொண்டிருந்த பசுமையான பள்ளத்தாக்குகளையும் பார்க்க பார்க்க அலுக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் பள்ளத்தாக்குகளில் படுத்துப் படுத்து புரண்டான். சுத்தமான காற்றை அடிக்கடி உள்ளிழுத்து அதன் ஈரப் பதத்தை உணர்ந்தான்.

ஊட்டிதான் அழகு என்றால், அந்த கான்வென்ட் அதைவிட நூறு மடங்கு அழகு. எல்லாமே வரைந்து வைக்கப்பட்ட துல்லியமான சித்திரமாகக் காட்சியளித்தன. மனப்பூர்வமாக அவன் ஊட்டியிலேயே குடியேறிவிட்டான்.

கான்வென்டில் பணிபுரிந்த ஆசிரியைகள் அனைவரும் அப்போது கிறிஸ்தவ தேவாலய கன்யாஸ்த்ரீகள். சாம்பல், வெள்ளை நிறங்கள் கலந்த சுத்தமான சீருடைகளில் அமைதியான புன்னகையில் அவர்கள் வேறொரு விதமான மானிட தேவதைகளாக அவனுக்கு காட்சி தந்தார்கள்.

கனிவாகவும், மென்மையாகவும் அதே நேரம் எளிமையாகவும் நடந்து கொள்வது எப்படி என்பதை அந்த ஆசிரியைகளிடம்தான் அவன் கற்றுக் கொண்டான். அது மட்டுமல்ல, கல்வியையே வெள்ளி ஸ்பூனால் குழந்தைகளுக்கு வாயில் ஊட்டிவிடுவது போலத்தான் அவர்கள் ஊட்டி விட்டார்கள்.

என்ன தப்பு செய்தாலும் அந்த ஆசிரியைகளுக்கு கோபமே வராது. ஏற்றத் தாழ்வு என்பதே இல்லாமல் எல்லா குழந்தைகளையும் அன்பினால் இதமாக அரவணைத்தபடியே வகுப்புகளை நடத்தி வந்தார்கள். எல்லா வகுப்புகளுமே ஓசையோ, கூச்சலோ இல்லாமல் அமைதியாக நடந்தன.

அந்தச் சின்ன வயதிலேயே மஞ்சுநாத் மென்மையாகப் பேச, பிறரிடம் மரியாதை காட்ட, நேரத்துக்கு அனைத்தையும் செய்து முடிக்க என பலவிதமான நற்பண்புகளை ஹாஸ்டலில் கற்றுக்கொண்டான். அதற்கு காரணம் ஹாஸ்டல் வார்டன் ரெஜினா ஸிஸ்டர்.

கை, கால் நகங்களை அதிகம் வளர விடாமல் வெட்டிக்கொள்வது, வாயைத் திறக்காமல் உணவை மெல்வது, நான்கு பேர் பார்க்கும்போது எவ்விதம் கொட்டாவி, ஏப்பம் விடுவது, பல்லை எப்படி டூத் பிக்கை எடுத்து இடதுகை விரல்களால் வாயை மறைத்துக்கொண்டு வலது கையால் குத்துவது என ரெஜினா ஸிஸ்டர் ஒவ்வொரு ஹாஸ்டல் குழந்தைகளிடமும் சொல்லிக்கொடுத்து கவனத்துடன், தியாக மனப்பான்மையுடன் வளர்ந்தாள்.

ஹாஸ்டல் கலை நிகழ்ச்சிகளில் பிரத்தியேக பயிற்சிபெற, மஞ்சுநாத் ரெஜினா ஸிஸ்டரைப் பார்க்க தேவாலயத்தை ஒட்டியுள்ள ஸிஸ்டர்களின் வசிப்பிடத்திற்கு சனி, ஞாயிறுகளில் செல்வான். அங்கு அவர்கள் அனைவரும் வேறு வேறுவிதமாக கலர்க் கலரான உடைகளில் இன்னும் இளமையாக காட்சி தருவார்கள். பயிற்சியின்போது சிறப்பாக மஞ்சுநாத் ஏதேனும் செய்துவிட்டால் ரெஜினா ஸிஸ்டர் அவனை அடிக்கடி இழுத்து அணைத்துக்கொள்வாள். அவ்வித அணைத்தல்களின்போது, மெழுகுவர்த்தி போன்ற ஒரு வித்தியாசமான வாசனை ஸிஸ்டரின் உடைகளில் வரும்.

அந்த வாசனையை இப்போதும் மஞ்சுநாத்தால் ஒரு தனித்துவத்துடன் உணரமுடியும்.

ஊட்டி கான்வென்டில் கிறிஸ்துமஸ் ஒட்டி நிறைய விடுமுறை வரும். அப்போதும், தவிர மற்ற தொடர்ச்சியான விடுமுறைகளிலும் ஹாஸ்டலை மூடிவிடுவார்கள். அதுபோன்ற சமயங்களில் நஞ்சன்கூடு வருவதற்கு மஞ்சுநாத்துக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் வேறு வழியில்லை. தாத்தா டிரைவருடன் தன் பென்ஸ் காரில் ஊட்டிக்கு வந்து ஹாஸ்டலுக்கு வெளியே காத்திருந்து, ஊருக்கு கூட்டிச் சென்றுவிடுவார்.

அந்த தண்டனையாவது அவனுக்கு பரவாயில்லை. மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் அவனை தவறாது நஞ்சன்கூடு பள்ளியில் கொண்டு சேர்த்து விடுவார். ஒவ்வொரு விடுமுறையிலும் அவர் இப்படிச் செய்வது மஞ்சுநாத்துக்கு எரிச்சலாக இருக்கும். தாத்தா அந்தப் பள்ளியின் நிறுவனர் வேறு. எல்லா ஆசிரியர்களும் தாத்தாவிடம்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதுதான் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு தற்போது அரசாங்கப் பள்ளியாக மாறிவிட்டது.

அந்தப் பள்ளியில் உட்காரவே மஞ்சுநாத்துக்கு பிடிக்காது. மாணவர்கள் இஷ்டப்பட்ட கலர்களில் கன்னாபின்னாவென்று சட்டைகளையும், டிரவுசர்களையும் மாட்டிக்கொண்டு வருவார்கள். பலர் அழுக்குச் சட்டைகளில், கிழிந்த டிரவுசர்களில் வருவார்கள். சட்டைகளில் பித்தான் போடாமல் திறந்து போட்டுக்கொண்டு வருவார்கள்.

அதைவிட கொடுமை நஞ்சன்கூடில் ஆண்கள்தான் வாத்தியார்களாக இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் வயதானவர்கள். பலர் ஷேவ் பண்ணிக் கொள்ளவே மாட்டார்கள். சிலர் பொடி போடுவார்கள். வகுப்பில் தொண்டை கிழிய கத்திதான் பாடம் எடுப்பார்கள். மாணவர்களைப் போட்டு அந்த அடி அடிப்பார்கள்.

அந்த சமயங்களில் ஊட்டி கான்வென்ட் ஆசிரியர்கள் தேவதைகளைப் போலவும், அதில் பயிலும் மாணவர்கள் யூனிபார்மில் வண்ணத்துப் பூச்சிகள் மாதிரியும் மஞ்சுநாத்துக்கு தோன்றும்.

அவன் அம்மாவேறு ஊட்டியில் பிள்ளை என்னவோ கொலைப்பட்டினி கிடப்பதாக எண்ணிக்கொண்டு வாய்க்கு ருசியாக சமைத்துப்போட மிகவும் மெனக்கிடுவாள். ஆனால் அம்மாவின் சமையலைவிட ஊட்டி கான்வென்ட் சாப்பாடுதான் அவனுக்கு மிகவும் விருப்பம்.

தாத்தா ஒவ்வொரு விடுமுறையின்போதும் ரொம்ப பெருமையாக “வாட் இஸ் யுவர் நேம்; வாட் இஸ் யுவர் மதர்ஸ் நேம்?; வாட் இஸ் யுவர் ஏஜ்?” என்று அவருக்குத் தெரிந்த நாலைந்து இங்லீஷ் கேள்விகளையே திருப்பித் திருப்பி கேட்டு உயிரை எடுப்பார்.

கான்வென்டில் சேர்ந்த உடனே அவன் இங்லீஷில் பொளந்து கட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அவரிடம். நடக்கிற காரியமா அது? இரண்டு மூன்று மதங்களுக்கு ஏ,பி,ஸி,டி சொல்லவே மஞ்சுநாத் தாளம் போட்ட கதை அவருக்குத் தெரியாது. அப்புறம்தான் ஏ பார் ஆப்பிள்; பி பார் பிஸ்கெட் என்கிற அடுத்த நிலைக்கு வர முடிந்தது. அடுத்த ஒரு வருடத்தில் மம்மி, டேடி என்று கூப்பிட்டு சரளமாக பேசும் நிலைக்கு வந்ததும் பேரனின் இங்லீஷ் கேட்டு தாத்தாவிற்கு உச்சி குளிர்ந்தது. இங்லீஷ் தவிர கன்னடமும், தமிழும் அவனுக்கு அத்துப்படி. .

மஞ்சுநாத் சிறிய வயதிலேயே ஒழுக்கமாக வளர்ந்து குறையப் பேசி அமெரிக்காவின் பெர்டியூ யுனிவர்சிடியில் நிறையப் படித்தார். பிறகு அரசியலுக்கு வந்து தற்போது கர்நாடகாவின் கல்வி மந்திரி.

அவருடைய வெற்றிக்கு காரணம் அவரது நல்ல வளர்ப்பு. அந்த நல்ல வளர்ப்புக்கு முக்கிய காரணம் ரெஜினா ஸிஸ்டர்தான் என்று திடமாக நம்பினார். தற்போது அவருக்கு நஞ்சன்கூடு பள்ளிக்கு வந்ததிலிருந்து ஒருமுறை பக்கத்தில் இருக்கும் ஊட்டிக்குச் சென்று ரெஜினா ஸிஸ்டரைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது. நேரில் பார்த்து அவரை வணங்க வேண்டும் என்கிற ஏக்கம் அதிகரித்தது.

பள்ளி நூற்றாண்டு விழா இனிதே முடிந்தது. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. அதனால் ஊட்டிக்குச் சென்று ரெஜினா ஸிஸ்டரை நேரில் பார்க்க காலையிலேயே கிளம்பினார். .

யூனிபார்ம் போட்ட டிரைவர் இன்னோவா காரை ஓட்ட, பதினோரு மணிக்கு லவ்டேல் பள்ளியை அடைந்தார். ரெஜினா ஸிஸ்டரைப் பற்றி விசாரித்தார்.

அவருக்கு தற்போது வயது எண்பத்தி எட்டு என்றும், ஸிஸ்டர்களுக்கான அதே வசிப்பிடத்தில் அவர் தனி அறையில் இருப்பதாகவும், வயோதிகத்தினால் அதிகம் கஷ்டப்படுவதாகவும் சொன்னார்கள்.

மஞ்சுநாத் வேகமாக அவரது அறையைத் தேடிக்கொண்டு சென்றார். ஒரு பெண்உதவியாளர் கதவைத் திறக்க, உள்ளே ரெஜினா ஸிஸ்டர் ஒரு தூய்மையான வெள்ளை உடையில் கட்டிலில் படுத்திருந்தார். மஞ்சுநாத் மெதுவாக அவரிடம் சென்று பள்ளி நாட்களைச் சொல்லி, தன்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார்.

ரெஜினா ஸிஸ்டர் படுக்கையிலிருந்து சிரமப்பட்டு எழுந்து கட்டிலின் மீது உட்கார்ந்துகொண்டு, வலது கையை நெத்தியின் மீது வைத்து தன் குறுகிய விழிகளால் மஞ்சுநாத்தை உற்றுப் பார்த்தார்.

பிறகு கனிவான புன்னகையுடன், “ஓ ஞாபகம் இருக்கே…. விடுமுறை நாட்களில் உன் தாத்தா ஒரு வெள்ளைநிற பென்ஸ் காரில் உன்னைக் கூட்டிக்கொண்டு போவாரே, அதே மஞ்சுதானே நீ?” என்றார்.

அவருக்கு உடம்பு புல்லரித்தது. கண்களில் நீர் திரையிட்டது.

“இப்ப நீ என்ன பண்ற? எங்க வேலை பார்க்கிற?”

“இப்ப நான் கர்நாடகாவின் கல்வி மந்திரியா இருக்கேன் ஸிஸ்டர்.”

ரெஜினா ஸிஸ்டர் அவரை அருகில் அழைத்து நெற்றியில் தனது வலது கை கட்டை விரலால் அன்புடன் சிலுவைக் குறியிட்டு, “ஒரு மாநிலத்தின் கல்வி மந்திரியாக பெரிய பொறுப்பில் இருக்க…..உன் கடமையை நேர்மையாகச் செய்.” அவரைக் கட்டிப்பிடித்து தன் முகத்தின் சுருக்கங்கள் அவரது கன்னத்தில் தேய வாஞ்சையுடன் முத்தமிட்டார்.

அதே மெழுகுவர்த்தி வாசனை அடித்தது. மஞ்சுநாத் சிலிர்த்துப்போனார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *