(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“கடவுளே! அவளுக்கு அந்த இடம் ஒத்துக்கணும்!” மும்தாஜ் அவ்வப்போது தன் கையிலிருந்த கையடக்கத் தொலைபேசியின் எலுமிச்சைநிற ஒளிமுகத்தையும் ‘பேஜர்’ எனப்படும் அகவியையும் பார்த்தபடி மந்திரம் ஓதுவதுபோல் வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். சத்தமிட்டுப் பேசவோ கவலையை வெளியே எடுத்துக்கூறவோ முடியாதபடி சக அலுவலர்கள் மூவருடன் அவள் உந்துவண்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறாள். ஏன் இப்படியொரு, சுதந்திரமில்லா முணுமுணுப்பு?
அவளது அதி துறுதுறுப்பு வாய்ந்த இரண்டு வயதாகும் மூத்தமகள் நசிராவை அன்றுதான் ஒரு தனியார் குழந்தைப் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துள்ளாள். பணிப்பெண்ணோ அடுத்த குழந்தையைப் பார்த்துக் கொள்ள வீட்டில் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் நசிரா இருக்கப்போவது தினமும் அரைநாள்தான் என்றாலும் முதல் நாளென்பதால் இவளது மனம் குழப்பிவிட்ட குட்டையாகக் குழம்பிப் போய் இருந்தது; இது இது பகல் பன்னிரண்டு மணிவரை இப்படித்தான் இருக்கும்.
மனம் ஏன் இப்படி அலைபாய வேண்டும்? விடுப்பு எடுத்திருக்கலாமே என்று நினைக்கலாம்! என்ன செய்ய? அண்மையில் காலமான தாய்ப்பாட்டிக்காக மிச்சமிருந்த ஐந்துநாள் விடுப்பை எடுத்தாயிற்று. குழந்தைக்காக உதவும் என வைத்திருந்த அவ்வைந்து நாள்களும் இப்படி இந்த நவம்பரில் முடிந்துவிடும் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை. இப்போது டிசம்பர்தான் நடக்கிறது. இதுதான் வாழ்க்கை! அதற்காக நோயில்லாமல் மருத்துவ விடுப்பு எடுக்கவும் மனசாட்சி இடங்கொடுக்கவில்லை.சக அலுவலர்களுடன் தன் அலுவலகத்தின் அலெக்சாண்டிரா ரோடு கிளைக்குத்தான், தான் பணிபுரியும் இயோ சூ காங் அலுவலகத்திலிருந்து அப்பர் தாம்சன் ரோட்டில் சென்று கொண்டிருக்கிறாள்!
உந்துவண்டியின் உரிமையாளர் பெர்னர்டையும் அதை வழுக்கு நிலத்தில் ஓடும் உருளை போல ஓட்டும் அவரது லாவகத்தையும் பொறுமையையும் பார்த்தபடி பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பிரியா, “அடேயப்பா! உங்க கார்ல போறது அப்படியே சொர்க்கத்துல போறதுமாதிரி இருக்கு” என்றாள்.
“ஓ…..தாங்க்ஸ” என்றான் பெர்னர்ட்.
“உம்….நான் என்ன செய்ய? எத்தனை முறை போனாலும் டிரைவிங் லைசென்ஸ் மட்டும் என் கைக்கு வரமாட்டேங்குதே! என் மேலேயே எனக்கு நம்பிக்கை போச்சு” என்றான் அவருக்கருகில் இருந்த கெல்வின். அவன் அவ்வலுவலகத்தில் சேர்ந்து, ஏன் தன் முதல் வேலையில் சேர்ந்தே மாதங்கள் மூன்றுதாம் ஆகின்றன! ஆனால் அதற்குள் தாத்தா போலப் பேசுவான்.
“இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் மனசு உடஞ்சு நம்பிக்கை எழக்காதேப்பா! வாழ்க்கைன்னா அப்படித்தான். இளமையிருக்கும்போது ஏன் இந்தப் புலம்பல்?’ என்று அழகிய ஆங்கிலத்தில் அறிவுரை கூறினான் பெர்னர்ட். ஓரளவுக்கு ஒத்த வயதினர் என்பதால் ஒன்றாகப் பணிபுரிபவர்கள் என்பதால் உணர்ச்சிகளை, அறிவுரைகளை அன்பில் தோய்த்துத்தர அவர்கள் ஒருபோதும் மறந்ததில்லை.
தம்
வண்டி, இப்போது மவுண்ட் அல்வினியாவுக்கு முன்பிருந்த போக்குவரவு விளக்கின் பச்சைச் சமிக்ஞைக்காகக் காத்திருந்தது. ஆண்களே பேசிக்கொண்டிருப்பது கண்டு மனம் பொறுக்காமல்,
“என்ன மும்தாஜ் இன்னிக்கு என்ன ஏதாவது ஸ்பெஷல்டேயா? விடாமல் உங்க ஃபோனையும் பேஜரையும் பாத்துட்டேயிருக்கீங்க?” என்றாள் பிரியா.
மும்தாஜ் சற்று நிமிர்ந்து கண்களால் அவளை என்ன என்று கேட்பதுபோல் பார்த்தாள்.
“அட…நாங்க ஒன்னும் உங்க சந்தோஷத்தைப் பங்கு போட வரமாட்டோம்” என்றாள். சாலையில் சமிக்ஞை கிடைத்திட, வண்டி முன்னேறியது.
“சே….சே…அப்படில்லாம் இல்லை” என்ற மறுப்புடன் தன் நிலையை ரத்தினச்சுருக்கமாய்ச் சொல்லி முடித்தாள் மும்தாஜ்.
“அட…நம்ம பிள்ளைங்க பத்தி நமக்கே தெரியாதுங்க. அதுங்களுக்கு அம்மா அப்பா படுற பாடு தெரியும். உங்க நசிரா ரொம்ப புத்திசாலி. அவ நல்லபடி சமாளிப்பா. சந்தோஷமா இருங்க. அத்தோட அங்க இருக்கற டீச்சர்ஸும் நம்பர் ஒன்! நீங்க கட்டுற 560 வெள்ளிக்கு அவளுக்கு விஐபி டிரீட்மெண்டே தருவாங்க” என்று பிரியா கூறியதும், சொல்லி அழுதால் சோகம் குறையும் என்பதற்கேற்ப மன அமைதி பெற்றாள் மகளைப் மகளைப் பற்றி எண்ணியிருந்த தாய்!
“உங்க ரைட்ல பாருங்க. என்ன அழகான மரஞ்செடிகொடிங்க! கண்ணாடி மாதிரி அமைதியாக இருக்கற பொண்ணோட மூளை மட்டும் ரொம்ப வேகமாக வேலை செய்யுறது மாதிரி ‘மெக்ரிட்சி’க்கு நடுவில் சின்ன ஃபவுண்டேஷன்! இதையெல்லாம் ரசிங்கப்பா!” என்று மேலும் மகிழ்ச்சியையும் மனதிடத்தையும் தரமுயன்றாள் பிரியா. உந்துவண்டி மெக்ரிட்சியை மெல்லக் கடந்து ஜப்பானிய அமைப்பு ஒன்றை நோக்கி ஓடியது.
“ஹேய் மும்தாஜ் ஐ வாண்ட் டு ஆஸ்க் யூ ஸம்திங்”, என்றபடி அவளைப் பார்த்த கெல்வின், “ஐ ஹேர்ட் தட் லாஸ்ட் வீக் யூ டுக் ஃபைவ் டேய்ஸ் லீவ். வாட் ஹேப்பண்ட்?” என்றவனிடம் “ஹெர் மெட்டர்னல் கிராண்ட் மதர் பாஸ்டவே!” என்றாள் பிரியா.
“ஓ டியர்! ஸாரி மும்தாஜ்!” என்ற கெல்வின், “ஓ உங்கள்ளயும் அஞ்சு நாள் துக்கம் அனுஷ்டிப்பிங்களா?” என்றான்
“இல்ல கெல்வின். ஆனா இவங்க சீனவங்க”, என்றாள் மும்தாஜ்.
“ஹவ் காம்? நீங்க இந்தியன் முஸ்லிம்தானே?” என்றவனிடம் “ஆமா நான் இந்தியன் முஸ்லிம்தான். ஆனா என் அம்மாவோட அம்மா பிறப்பால் சீனவங்க; பஞ்ச காலத்துல பெரிய குடும்பத்துல என் அம்மா பொறந்ததால, அவங்கள தங்க கம்போங்ல பக்கத்துத் தெருவில இருந்த பிள்ளையில்லாத இந்தியன்முஸ்லிம் தம்பதிகளுக்குத் தத்து கொடுத்திட்டாங்க வளர்ந்த வீட்டின் மரபுப்படி என் அம்மா முஸ்லிமா வளர, நானும் அவரைப் பின்பற்றினேன்”, என்றாள்.
“ம்..ம்…வெரி இண்ட்ரஸ்டிங்!’ என்றவன் தன் இருக்கையில் சற்று முதுகை உயர்த்தி நிமிர்ந்து உட்கார்ந்தான். அப்போது, “என்னதான் இருந்தாலும் சில நேரம் இந்த வண்டியோட்டுறவங்களப் பாருங்க; ஆடி அசைஞ்சு போற ஆமை போல போறாங்க!”பிரியா பெர்னடிடம் கூற,
“ஆமாம்! சாதாரண சாலையிலே ஹைவே ஸ்பீட்ல போவாங்க! ஆனால் இந்த மாதிரி ஹைவேயில நாப்பது அம்பதுன்னு மெது ஸ்பீட்ல போவாங்க! அதுவும் எக்ஸ்ட்ரீம் ரைட் லேன்ல”, என்றபடி முன்னால் சென்ற உந்துவண்டியைப் பார்த்த பிரியா,
“பெர்னர்ட் ஒரு ஹார்ன் அடிச்சுப்பாருங்க!” என்றிட அதே போல் அவரும் செய்ய முன்வண்டிக்காரர் சற்று விழித்து கொண்டது வெட்டவெளிச்சமாய்த் தெரிந்தது.
“சரி, இப்பக் கதையைத் தொடரலாமா?” என்றபடி மும்தாஜ் பக்கம் கழுத்தை ஒட்டகச்சிவிங்கி போல் திருப்பிய கெல்வின், “மும்தாஜ் உங்கம்மாவுக்குச் சின்னதுல எப்படி இருந்திருக்கும்?”
“கொஞ்சம் கஷ்டம்தான். அவங்களுக்குத் தான் தத்துப்பிள்ளைன்னு தெரியாத வரைக்கும் கூடப்பிறந்த தம்பி, தங்கைகள் காட்டிய பாச வேறுபாடுதான் பிரச்சினை. ஆனா அவங்க வேறு ஒருத்தங்களோட மகள்ன்னு தன்னோட பத்து வயசுல தெரியும்போது ரொம்ப உருகிட்டாங்க. என்ன செய்ய முடியும்? அதுவரைக்கும் பக்கத்துல இருந்தவங்க எல்லாம் மறைச்சிட்டாங்க. தத்தெடுத்த தாயும் இதைப்பத்திப் பெரிசா ஏதும் காட்டிக்கலை. அவங்க நிலைமையில இருந்தா நானும் அதைத்தான் செய்வேன்!” என்றாள்.
“ஹூம்…..இந்த ஃபேரர் ரோடு ஃபேரர் ரோடு ஜங்ஷனில் போட்ட ஓவர் ஹெட் பிரிட்ஜ் எவ்வளவு பிரயோஜனமா இருக்கு பாத்தீங்களா!” என்று பின் இருக்கையில் அவளுக்குப் பக்கத்திலிருந்த பிரியா கூற, அந்தப் புதிய மேம்பாலத்தின் மேல் நான்கே வயதான தன் வாகன மகளைச் செலுத்தியபடி,
“யெஸ், வெரி வெரி கன்வீனியண்ட்! நாட் ஒன்லி தட்! த அதர் ஸப்வே நியர் த ஹாலண்ட் ரோட் ஜங்ஷன் ஆல்ஸோ!”, என்று அவளைத் தன் கட்டுப்பாட்டில் இயக்கிய பெர்னர்ட் கூறினான்.
“மும்தாஜ் உங்கம்மாவுக்குத் தெரிஞ்சதும் என்ன செய்தாங்க?”, தேங்காய் துருவுவதைப்போல் துருவினான் கெல்வின்.
“அவங்களுக்கு இந்த ‘கல்சுரல் ஷாக்’குன்னு சொல்வாங்களே அதுதான் முதலில் வந்தது. ஏன்னா இரண்டு இடத்திலும் நிலவிய வாழ்க்கைப்பழக்கவழக்கங்கள் வித்தியாசமா இருந்துச்சு. அத்தோட தன் தாயையும் திருட்டுதனமாப் போய்ப் பாத்துட்டு வந்ததும் கொஞ்ச ஏக்கமா இருந்தாங்க. சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம் ஒரு ஊமையைப் போல இருந்தாங்கன்னு சொல்லலாம்”.
“யாரைப் பின்பற்றுறது? பெத்துட்டு வளக்க முடியாமத் தத்துக் குடுத்துட்ட தாயை ஏசுவதா பிள்ளையில்லாத வீட்டில் கவலை குறையத் தத்து எடுத்து, தன் பிள்ளையா இதுவரை வளத்த இதுவரை வளத்த வளப்பு அம்மாவப் பாராட்டுறதா? நிறைய பிள்ளைகளோட நான் கஷ்டப்படுறதவிட சந்தோஷமா இருக்க வழிசெஞ்ச அம்மாவப் பாராட்டித்தான் ஆகணும். எனக்கு வயசு சின்னதா இருந்தாலும் நான் நன்றியோட இருக்கணும். அத்தோட இப்ப ஒரே ஒரு சந்தேகம்! நான் எந்த சம்பிரதாயப்படி நடக்குறது?” என்று சிறுவயதில் தான் குழம்பி முடிவில் வளர்ந்திட உதவி தந்தவர்களையே பெற்றோராக மனத்தில் வரித்ததை, அம்மா தன்னிடம் கூறியதை மும்தாஜ் நினைத்துப்பார்த்தாள்.
“நீங்க பாத்ருக்கீங்களா?” என்ற பிரியாவிடம், நனவுலகுக்கு வந்தவள், “ஆங்.. நான் பாத்துருக்கேன். இப்ப என் தாயின் சொந்த அம்மாவுக்கு ரொம்ப நல்ல மனசு. அத்தோட அவங்களோட ஒரு பிள்ளை அதாவது என் மாமா டாக்டரா இருக்கார்!”
“உம்….அப்புறம் என்ன? ஜாலிதான்னு சொல்லுங்க நீங்க அங்க போனப்ப உங்க அம்மாவை வளத்த பாட்டிக்கு மனசு எப்படியிருந்தது?”
“வெள்ளம் கழுத்துக்கு மேல போனப்புறம் என்ன செய்யுறது? அத்தோட எல்லாமே பக்கம்பக்கம் இருக்குறதால என்னைக்காவது ஒரு நாள் தெரிஞ்சுதானே ஆகணும். அதனால் அவங்க ஒண்ணும் சொல்லலை; இன்ஃபாக்ட் ரொம்ப ஆதரவா இருந்தாங்க. அதனால் என்ன பலன்னு கேக்கிறீங்களா? எனக்குத் தாய் வழியிலே மட்டும் ரெண்டு பாட்டிகள்; நிறைய மாமா சித்திகள்; பத்தாக்குறைக்கு ரெண்டு விதமான கொண்டாட்டங்கள்!”
“அப்ப ரொம்ப அதிஷ்டக்காரங்கன்னு சொல்லுங்க!” என்ற பெர்னர்டும், ‘ஆமா நாங்க ரொம்ப அதிஷ்டக்காரங்கதான்; அத்தோட ரெண்டு முதலாளிகளுக்குக் கீழே நாம நல்லா வேலை செய்யமுடியாதுங்கறதால மத, பழக்கவழக்கங்கள்ல மட்டும் நாங்க எங்க அம்மா வளந்த சூழ்நிலையைப் பின்பற்றி இந்தியன் முஸ்லிமா இருந்து வர்றோம். இதனால் பிரச்னை ஏதுமில்லை; பதிலுக்கு ரொம்ப சந்தோஷம்! எனக்கு என் கணவர் சலீமை அறிமுகப்படுத்திய தும் என் சீன மாமாதான்!” என்று பெருமையுடன் சொல்லி முறுவலித்து லேசாகக் கன்னம் சிவந்தாள், மும்தாஜ்.
“உங்களோட வாழ்க்கையைப் பாக்கும்போது நீங்க எடுத்த முடிவு நல்ல முடிவுதான் அதே நேரம் உங்க குடும்பமே ஒரு குட்டி சிங்கப்பூருக்குச் சமம்னு சொல்லுங்க. உங்களுக்கு எல்லா இனத்தோட பழக்கவழக்கங்கள், பண்டிகைகள் பத்தித் தெரியும்ங்றதோட உங்க பிள்ளைங்களயும் ரொம்ப நல்லா பேலன்ஸோட வளக்க முடியும். ஆம் ஐ ரைட்?” என்று ஒருவித ஸ்டைலாகக் கேட்ட கெல்வினைப் பார்த்து “ஆம்! அது அன்பின் விலை! நாங்கள் எப்போதோ செய்த புண்ணியம்!” என்று மகிழ்ந்தவளுக்கு, அகவியில் செய்தி வந்தது இப்படி: “மும்தாஜ், நசிரா அங்க நல்லா சிரிச்சு ஆடிப்பாடிட்டு இருக்காளாம். டீச்சர் சொன்னாங்க” – சலீம்.
மகள் மீதான கவலை நிம்மதிப் பெருமூச்சாக மாறிட, தன் மகளுக்கும் தன் தாய் போல நல்ல மனமுதிர்ச்சி இருப்பதை உணர்ந்து மகிழ்ந்தாள்.
“இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் லீவ் எடுத்ததுகூட அந்தச் சீனப்பாட்டி தவறிட்டதுக்காகத்தான். இப்ப தெரியுதா நான் ஏன் அஞ்சு நாள் லீவ் எடுத்தேன்னு?”- ஆங்கிலத்தில் புன்னகையுடன் கேட்ட மும்தாஜிடம்,
“உம்..புரியுது புரியுது… நல்லாவே புரியுது!” என்ற கெல்வினிடம்
“என்ன நல்லாப் புரியுது?” என்று பிரியா இடைமறித்து அவனைக் கேலி செய்திடும் நேரத்தில் சிறுவயதில் ஒரு நாள் ‘சொங்சாமு’ம் மறுநாள் ‘பாஜுகுரோங்’கும் அடுத்தநாள் பாவாடை சட்டையும் இன்னொரு நாள் ஆங்கில நாகரிக உடையும் அணிந்து மகிழ்ந்ததும் பலவித உணவுப் பண்டங்களும் உண்டுமகிழ்ந்து, ஆடிப்பாடித்திரிந்த வசந்த காலமும் மும்தாஜின் கண்களில் வந்து கண்ணாமூச்சி விளையாடின. அப்போது பெர்னர்டின் காரின் முன்பக்கக் கண்ணாடியில் குவீன்ஸ்வே ஷாப்பிங் செண்டர், அலெக்சாண்ட்ரா மருத்துவமனை ஆகியன தோன்றி மறைந்து பிஎஸ்ஏ கட்டடம் என ஒருவிதமான கட்டிடக்கண்ணாமூச்சி நடைபெற்றது..
– 1998, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.
Good keep rocking💐