நேற்று இரவு முதலே கொஞ்சம் படபடப்புதான். சரியான தூக்கம் கூட இல்லை. காலையில் எழுந்ததில் இருந்து இருப்புக்கொள்ளவில்லை. டிபன் சாப்பிடும் போது குமட்டிக்கொண்டு வந்தது. அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்சம் சாப்பிட்டேன். ஆட்டோவில்தான் கிளம்பினோம். அம்மா நிமிஷத்திற்கொரு முறை ஆட்டோக்காரரிடம் மெதுவாகப் போகும்படி கேட்டுக்கொண்டார். வேகத்தடை வரும் இடங்களில் எல்லாம் நான் என் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டேன். ஆம். 15 நாட்களுக்கு முன்தான் அதை உறுதிப்படுத்தினார்கள். அன்று அம்மா எல்லாருக்கும் இனிப்பு வாங்கிக் கொடுத்தாள். இந்த சந்தோஷத்திற்காக ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
அவர் வற்புறுத்தவில்லை எனினும் ‘என் ஆபீஸ் டிரைவருக்குக் குழந்தை பிறந்திருக்கு’ என்று சொல்லும் போது அவர் முகத்தில் ஈயாடவில்லை. ஓராண்டிற்கு முன்புதான் அந்த டிரைவருக்குத் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். குழந்தை இல்லாத ஏக்கம் அவர் முகத்தில் பிரதிபலித்தது. இது மாதிரியான சில சமயங்கள் அவரின் குழந்தை மீதான ஆர்வத்தை எனக்கு வெளிப்படுத்திக் கொண்டுதான் இருந்தது. என்ன செய்ய? அம்மா போனிலும் சரி, வீட்டிற்குப் போகும்போதும் சரி ‘இந்த கோயில் போ’, ‘அங்க தூளி கட்டு’, ‘சஷ்டி விரதம் இரு’ என்று தொணதொணவென்று எதாவது சொல்லிக் கொண்டிருப்பாள். மாமியார் அப்படியல்ல.
ஆனால், நாங்கள் ஊருக்குப் போகும்போது ஒவ்வொரு முறையும் ஆசையாகக் கேட்பார். யாரையும் குற்றம் சொல்லமுடியாது. தன் இரு பிள்ளைகளில் மூத்தவனுக்குத் திருமணமாகிப் பத்தாண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. எங்களுக்கும் ஐந்தாண்டு ஆகியிருந்தது. வருத்தம் இருக்காதா? இறைவா, என் கையில் என்ன இருக்கிறது? இந்த நிலையில்தான் போன மாதம் காய்ச்சல் என்று வந்த போது நாள் தள்ளி இருந்ததால் டெஸ்ட் எடுத்தார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஏனெனில் தள்ளிப்போகிறது என்று தெரிந்தவுடன் நானும் அவரும் வீட்டிலே பலமுறை சோதனை செய்து ஏமாந்து போயிருக்கிறோம். இதுபோல் பல முறை நடந்திருந்தது.
இருந்தாலும் அம்மாவின் ஆறுதலுக்காகப் போனேன். ஆனால், உறுதி ஆகிவிட்டது. இருந்த போதும் அந்த டாக்டர் எனக்கொரு செக் வைத்தார். ‘உன் உடம்பு கொஞ்சம் பலகீனமாக இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இதனை ஸ்கேன் செய்து உறுதி செய்யும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம். ஒரு பதினைந்து நாள் கழித்துப் பார்த்தால்தான் ஸ்கேனில் உறுதியாகத் தெரியும். அதுவரை ஜாக்கிரதையாக இரு’ என்று சொல்லிவிட்டார். ஸ்கேனில் நல்ல ரிசல்ட் வரணுமே என்று அம்மா ஊரில் உள்ள எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருக்கிறாள். என் பயத்தின் ஊற்று அதிகரித்தது. அவரின் போன் ஆறுதல் எனக்குப் போதுமானதாக இல்லை.
நேரில் வர அவருக்குச் சந்தர்ப்பம் இல்லை. உள்ளே போய் டெஸ்ட்டுக்கான பேப்பரை நீட்டிய உடனே ‘அங்க போய் உட்காருங்க. குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடித்த பின் வயிறு முட்டிய பிறகு வந்து சொல்லுங்க. உள்ளே அனுப்பறேன்’ என்றாள் அந்த நர்ஸ். அங்கே இருந்த பலரும் இருப்புக்கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தனர். பலர் பாத்ரூம் வாசலில். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னால் அரை லிட்டருக்கு மேல் குடிக்க முடியவில்லை. ஆனால், நர்ஸம்மா வந்து மிரட்டிச் சென்றாள். மேலும் மேலும் குடிக்க முயற்சித்தேன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அடி வயிறு முட்டிக்கொண்டு வந்தது. நர்ஸிடம் சொல்லலாம் என்று எழுந்து போகும்போது ஒரு பெண் திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள்.
பேசாமல் வந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன். திடீரென்று மறுபடி ஒரு பெண்ணைப் பார்த்து நர்ஸ் கத்த ஆரம்பித்தாள். அந்தப் பெண் அவசரம் தாங்காமல் பாத்ரூம் போய்விட்டு வந்திருந்தாள். மறுபடி முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கணும். நர்ஸ் எல்லாருக்கும் பொதுவாய் எச்சரித்தாள். “இத பாருங்க உங்களுக்கு சரியான ரிசல்ட் வரணும்னா ஒழுங்கா நிறைய தண்ணியக் குடிச்சிட்டு உட்காருங்க. நிஜமாவே அடிவயிறு முட்டும் போது ரொம்ப ரொம்ப அர்ஜண்டா வரும்போது சொல்லுங்க. அப்பதான் ஸ்கேன்ல கிளியரா தெரியும்…’’ என்றார். ஒருவழியாக என் தரப்பு வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
எவ்வளவு சுலபமாகத் தூக்கி எறிந்து விடுகிறார்கள் பெற்றோரை. பிள்ளை பெற எத்தனை துயரங்களைத் தாங்க வேண்டி இருக்கிறது என்று தோன்றியது. முடிந்தவுடன், “போம்மா, பாத்ரூம் போயிட்டு வெயிட் பண்ணு. ரிசல்ட் வரும் போது கூப்பிடுவோம்…’’ என்றார்கள். வெளியில் வந்தவுடன் பாத்ரூம் நோக்கி ஓடாத குறையாக வேகமாக நடந்தேன். அம்மா பின்னாலே ஓடி வந்தாள். அவளுக்கு எங்கே நான் விழுந்து விடுவேனோ என்று பயம். இரண்டு பாத்ரூம்கள்தான் இருந்தன. க்யூ… அய்யோ… ஏற்கனவே முடியவில்லை. இதில் க்யூ வேறா? பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தேன். இல்லை இல்லை, நின்றிருந்தோம். அங்கிருந்த எல்லாப்பெண்களின் நிலையும் அதுதான்.
பக்கத்து பாத்ரூம் மட்டும் அடிக்கடி காலியாகி பிறகு தன்னை நிரப்பிக்கொண்டது. எல்லோரும் நாங்கள் நின்றிருந்த வரிசையில் உள்ளே இருப்பவளைத் திட்ட ஆரம்பித்தார்கள். கதவைத் தட்ட ஆரம்பித்தார்கள். அவள் அம்மாவும் அழுது கொண்டே கதவைத் தட்டினாள். சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் கண்களைத் துடைத்துக்கொண்டே மெல்ல வெளியே வந்தாள். அவள் முகம் சிவந்திருந்தது. அழுது அழுது கண்கள் வீங்கி இருந்தன. திடீரென வேகம் எடுத்து அவள் இருக்கை நோக்கி வேகமாக நடந்தாள். அவள் பின்னால் ஓடிய அவளது அம்மாவை எல்லாரும் சூழ்ந்து கொண்டார்கள். என்னவென்று விசாரிக்க, அவள் கரு தங்காது என்று டாக்டர்கள் ஸ்கேன் ரிப்போர்ட்டைத் தெரிவித்திருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல், இனி கரு உண்டாக வாய்ப்பே இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். அந்த அம்மாவும் சொல்லிவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டு அவளை நோக்கி நடந்தாள். திடீரென்று ஏற்பட்ட துக்கத்தைத் தணிக்க பாத்ரூமில் அழுதிருக்கிறாள். அவள் யாரையும் தலை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டாள். கத்தி அழவில்லையே தவிர கண்களில் நீர் வடிந்தபடிதான் இருந்தது. சில நொடிகளில் இருவரும் தங்கள் காரில் ஏறிக் கிளம்பினார்கள். பல வருட கனவு கலைந்து போன துக்கத்தின் சாயல் அவள் முகத்தில் படிந்திருந்தது. அந்தப் பெண்ணைக் குறித்து எல்லாரும் ‘அச்சோ பாவம்’ என்றார்கள். அப்பாடா என்ற நிம்மதிக்குப் பின் என் இருக்கையில் அமர்ந்திருந்தோம்.
அம்மா கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். என்னிடம் எந்தவித சலனமுமில்லை. ஏதேதோ பேச்சுக்கொடுத்தாள். ‘ம்’ கொட்டியதோடு சரி. என் தரப்புக்கான அழைப்பு வந்து உள்ளே போனோம். டாக்டர் சந்தோஷத்தோடு வரவேற்றார். வாழ்த்துகள் தெரிவித்தார். கரு நன்றாக வளர்ந்திருப்பதாகவும், எத்தனை நாள் கரு, எப்போது குழந்தை பிறக்கும் என்றெல்லாம் சொல்லி அனுப்பினார். அம்மா சந்தோஷத்தில் குதித்தாள். உடனே அப்பாவுக்கு போன் செய்தாள். என் கணவருக்கு போன் செய்யச் சொல்லி என்னை வற்புறுத்தினாள். நான் அமைதியாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ‘என்னடி’ என்றாள். “அந்தப் பொண்ணுக்குக் குழந்தை பிறக்காது இல்லம்மா…” என்றேன். அம்மா என் முகத்தைப் பார்த்தாள். அந்தப் பெண்ணின் வலி என் இதயத்தில் குடியேறியிருந்ததை உணர்ந்து கொண்டாள்.
– Apr 2018