வறுமையின் எல்லை வரை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 9,555 
 
 

வீட்டில் வறுமை தலைவிரித்தாடியது. வாங்கிய கடனைத்திருப்பி அடைக்க முடியவில்லை. ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என ராவணன் தன் தவறான செயலால் ராமனிடம் போரில் தோற்று குடும்பத்தையே இழந்து நின்றபோது கலங்கியதை கடன் வாங்கிக்கட்ட இயலாதவர்களுக்கு ஒப்பிட்ட, இராமயணத்தில் தான் படித்த கம்பனின் வரிகள் இலக்கியவாதியான ராமசாமி ஐயாவுக்கு ஞாபகம் வந்தது. ‘கம்பனும் கடன் வாங்கி துன்பப்படாமல் இவ்வாறு உவமையாகக்கூறியிருக்க முடியாது’ எனவும் நினைத்தார்.

“நீங்கெல்லாம் ஒரு மனுசனா…? உங்களுக்கு என்னத்துக்கு கண்ணாலம், பொண்டு, புள்ளைங்க…? ஒரு வேளை சோறு ஒழுங்காப்போட வக்கில்ல. ராமாயணத்த முழுசாக்கரைச்சுக்குடிச்சாப்போதுமா…? வீட்ல பசிக்கு கரைச்சுக்குடிக்க ஒன்னும் இல்லையே….” ஆதங்கத்தால் ஏற்பட்ட கோபத்தில் பேசி விட்டு தேம்பித்தேம்பி அழுதிடவும் செய்தாள் ராமசாமி ஐயாவின் மனைவி ரங்கம்மாள்.

கோயமுத்தூர் சுற்று வட்டாரத்தில் ராமசாமி ஐயாவைத்தெரியாதவர்கள் குறைந்த அளவில் தான் இருப்பார்கள். இராமாயண சொற்பொழிவுக்காக கூப்பிட்ட ஊருக்கெல்லாம்‌  செல்பவர், பேசிய பேச்சுக்கு கறாராக காசு கேட்க மாட்டார். சுதந்திரப்போராட்ட கூட்டத்திலும் பேசி பல முறை சிறை சென்ற தியாகியும் கூட.

 இராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேச அழைத்துச்செல்ல வண்டி வராவிட்டாலும் நடந்து செல்லும் போது வழிச்செலவுக்கும், தங்குவதற்கு இடமும், வேளாவேளைக்கு உணவும் கொடுத்தாலே போதுமென சென்று விடுவார். சொற்பொழிவு இல்லாத நாட்களில் 

உள்ளூர் ராமர் கோவிலில் பூஜை செய்வார். அதில் வரும் தட்டுக்காணிக்கை ஐந்தோ, பத்தோ வீட்டில் அடுப்பெரிய பயன் படும். 

கடந்த ஒரு மாதமாத காலமாக காலரா நோய் மக்களைப்பாடாய் படுத்தியல் மக்கள் ஊரை விட்டு காடுகளுக்குச்சென்று குடிசை போட்டு வாழ ஆரம்பித்து விட்டார்கள். எங்குமே கூட்டம் உள்ள இடங்களுக்கு மக்கள் செல்வதில்லை. அதனால் இராமயண சொற்பொழிவுக்கு யாரும் கூப்பிடாதது போக, கோவிலுக்கும் யாரும் வராததால் வீட்டில் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் நிலை.

“சாப்பாட்டுக்கஷ்டம் அவனவனுக்குன்னு மட்டும்னு ஊட்டுக்குள்ள வாழறவங்க நெனைக்கறாங்க. எங்கள மாதர வேவாரிகளுக்குத்தாந்தெரியும் நாடே பசி, பஞ்சம், பட்டினில இருக்குதுன்னு. அன்னூருக்கு வடக்கெல்லாம் சத்தியமங்கலம் வெரைக்கும்மே மழையும் இல்லாம போட்ட வெள்ளாமையெல்லாங்கருகிப்போயி, மாடு கன்னுகளுக்கு தீனுந்தண்ணியுங்கெடைக்காம நடக்க, நடக்க செத்துச்செத்து உழுகுதுகளாமா… காலரா நோயில சாகரதுக்குள்ள பழனி முருகன ஒரு தடவ பாத்துப்போட்டு வந்தரோணும்னு வண்டி கட்டிட்டு கோயிலுக்கு போற போதே கடப்பார, மம்முட்டியெல்லாம் எடுத்துப்போட்டுட்டு ஏழு பேரக்கூப்புட்டுட்டு போன மேக்காலத்தோட்டத்து சுப்பியன் ஒரு வாரங்கழிச்சு போயிட்டு வார போதே ஒவ்வொருத்தராச்செத்துப்போயி, அங்கங்க மண்ணத்தோண்டி மூடிப்போட்டு கடைசில வண்டில பூட்டீட்டு போன ஒரு எருதும் செத்துப்போக, செத்துப்போன எருத்துக்கு பதிலா

இவுரு ஒரு பக்கம் நொகத்துல கழுத்த வெச்சு எருது மாதர வண்டிய இழுத்துட்டு வந்திருக்கறாரு. என்னாகும்னே தெரியல. இந்தக்காலரா நோயால ஒலகமே அழிஞ்சு போகும் போல இருக்குது….” கவலைப்பட்டுப்பேசிய தானிய வியாபாரி  வேலப்பனின் பேச்சைக்கேட்டு கண் கலங்கினார் ராமசாமி ஐயா.

‘நோயினால்‌ மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்றால் இதில் கடவுளின் பங்கு என்ன?’என பலவாறு யோசித்தார்.

“ஒரு செடி விதையிலிருந்து மொளைச்சு வளருது. அதுக்கு செழிப்பா வளர மழைத்தண்ணி தேவைப்படுது. அந்த மழை தான் கடவுள். ஆனா அதே செடி வெளைஞ்சு காய்களக்கொடுத்த பின்னால காஞ்சு போனதுக்கப்புறம் மழையால மறுபடியும் தளையாது. பதிலா அந்த செடில இருந்து வெளைஞ்ச வெதை மொளைச்சு செடியா வளர மழை தேவைப்படுது. இது காலச் சுழற்சி. கடவுளும் காலச்சுழற்ச்சிக்கு தகுந்த மாதிரிதான் நமக்கு உதவுவாறு. உயிரோட வாழற வெரைக்கும் சாப்பாடு முக்கியம். அந்த சாப்பாடு மாதிரின்னும் கடவுளைச்சொல்லலாம். பிறப்பு எடுத்தவங்களுக்கு இறப்பு நிச்சயம் உண்டு. ஒரு மரத்துல பூக்கற எல்லாப்பூக்களுமே காய்க்கறதில்ல. சிலது பூவாவே காத்துக்கு உழுகும், சிலது பிஞ்சுல, சிலது காய்ல…. இப்படித்தா மனுசங்களும்….” என கூறிய ராமசாமி ஐயாவின் விளக்கமான பேச்சு அங்கிருந்த பலரையும் கவர்ந்தது.

வெளியில் விளக்கம் சொல்லிப்பேர் வாங்கினாலும் வீட்டில் இருக்கும் மனைவி குழந்தைகளின் தேவைகளைப்பூர்த்தி செய்ய வருமானம் இல்லாததால் வீட்டையே விற்று விட முடிவு செய்தார். 

வீட்டை கடன் கொடுத்தவரே விலை பேசி வாங்கினாலும் கடன் முழுமையாக அடையாததால், வீட்டை வாங்கியவர் வாங்கிய வீட்டை இடித்துக்கட்டப்போவதாகவும், கட்டும் வேலைக்கு குடும்பத்தினர் வேலை செய்து பாக்கி கடனை அடைக்க வேண்டும், அது வரை தனது வீட்டில் ஒரு அறையில் தங்கியிருக்க வேண்டும் எனும் ஒப்பந்தப்படி ராமசாமி ஐயா உள்பட அனைவரும் வேலை செய்தனர்.

வீட்டை இடிக்குமிடத்தில் “புதையல், புதையல்” என வேலையாட்கள் சத்தமிட, அங்கே மறுபக்கம் வேலை செய்து கொண்டிருந்த ராமசாமி ஐயாவும் அந்த இடத்தைப்பார்க்க நகையும், பணமும் ஒரு மரப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டிருந்தது. புதையலைக்கண்டு மகிழ்ச்சிப்பட முடியவில்லை அங்கே வேலை செய்த ராமசாமி ஐயாவால்.

‘வீட்டின் அடியில் புதையலை வைத்துக்கொண்டே பல நாட்கள் உணவின்றி வாழ்ந்துள்ளோமே…. எல்லாம் விதி…. பணக்காரனுக்கே பணம் சேருகிறதே…. வறுமையில் உள்ள நமக்கு முன்னோர்களுடைய புதையல் கிடைக்கவில்லையே… வீடு வாங்கியவர் மனம் இளகி சிறிய தொகையாவது தந்தால் வறுமை போய் விடும்’என யோசித்தபடி கவலை கொண்டார்.

“நீங்க ராமாயண சொற்பொழிவை காசு வாங்காம மக்களுக்கு சொன்னதும், ராமனுக்கு பூஜை பண்ணினதும் வீணாப்போகலை. இந்தப்புதையலை வேறொருத்தரா இருந்தா தனக்கே சொந்தம்னு நெனைப்பார். நானும் மனசாட்சியுள்ள மனுசந்தான். உங்க முன்னோர்கள் கஷ்டப்பட்டு, பாடுபட்டு சேமிச்சு திருடங்களுக்கு பயந்து புதைச்சு வெச்ச பணம். அது முறைப்படி உங்களுக்குத்தாஞ்சேரோணும். இதுல உங்க கடன் போக புதுசா வீடுகட்டற அளவுக்கு பணம், தங்கம் இருக்கறதுனால நான் உங்களுக்கு குடுத்த கடன எடுத்துட்டு பாக்கித்தொகைல நானே புதையல் பணத்த வெச்சு புதுசா வீடு கட்டிக்கொடுத்திடறேன். அது வரைக்கும் உங்க குடும்பத்தைச்சேந்தவங்க என்னோட வீட்ல தங்கிக்கங்க” என வீடு வாங்கிய வட்டிக்காரர் பரந்தாமன் கூறியதைக்கேட்டு அவரையே கண் கண்ட ராமனாக எண்ணி வணங்கினார் ராமசாமி ஐயா!

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *