வறுமைச் சக்கரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 13,777 
 
 

கரிச்சான் கத்திவிட்டது.

மூக்கம்மா படக்கென்று எழுந்து உட்கார்ந்தாள். முந்தானை விரிப்பில் பிறவிக் கோலத்தில் தூங்கிக்கொண்டுஇருந்த இரண்டு வயது லட்சுமியைத் தூக்கம் கலைந்துவிடாமல் மெதுவாய் மண் தரையில் உருட்டிவிட்டுச் சேலையை உருவிக்கொண்டாள்.

”ஐயோ, விடிஞ்சிருச்சோ? நேரந் தெரியலையே?” என்று அவளின் முதல் பேச்சே அங்க லாய்ப்பாக ஆரம்பித்தது.

அவள் விறகெடுத்துப் போக வேண்டும். மேற்கே பத்துப் பன்னிரண்டு கல் போய், காட் டில் மலைபடு பொருளாகக் கிடைக்கும் விறகுகளைக் கட் டிச் சேர்த்துக் கழுத்தொடியத் தலையில் சுமந்து கால்கடுக்க உச்சி வேளையில் திரும்புவாள். பின்பு அதை ஊருக்குக் கிழக்கே, மூன்று கல் தொலை வில் உள்ள சீலுத்தூருக்கு பிரத்யேக நடையாகத் தலைச்சுமையுடன் போய் பாப்பாக்குடியில் ‘நல்ல’ விலைக்கு அதைப் போட்டு விட்டு வீட்டுக்குப் பாதிச் சீவனுடன் திரும்புவாள்.

மூலையில் கிடந்த குழாய்ப் பிடி அரிவாள், கட்டுக்கொடி, தலைக்குச் சுருள் மேடு வைக்க படுகந்தலான துணி ஆகிய சாதனங்களை ஓசைப்படாமல் எடுத்துக்கொண்டு வெளியேறினாள் அவள். குச்சில் கதவு என்ற பெயர் தாங்கிப் பெருமை அடைந்திருந்த தென்னங்கிடுகுத் தட்டியை மூடினாள். எவ்வளவு எச்சரிக்கையுடன் மெதுவாக அவள் மூடியும், அந்தச் சனியன் ‘சரக்’ என்று சத்தமிட்டு விட்டது. அதைத் தொடர்ந்து, ”ஆத்தே” என்று உள்ளிருந்து ஓர் அலறலும், கூடவே அழு குரலும் எழுந்தது.

”இந்தக் கத்தா கத்தறது? கத்திக்கிட்டே கெட!” என்று முனங்கிக்கொண்டே ‘பொடு பொடு’வென்று மேற்கே நடக் கத் தொடங்கிவிட்டாள்.

சந்து திரும்பினாள். லட்சுமி யின் கூப்பாடு அடங்கவில்லை. கொஞ்சம் நின்றாள். மனசு பதைபதைத்தது. மேற்கே பார்த்தாள். பேய்மலை, மொட்டை என்னும் சிகரத்துடன் பயங்கரமாக ஆகாயத்தில் கால்பகுதி ஆக்கிரமித்து தலை நிமிர்த்தி நின்றது அந்த இருட்டிலும் தெரிந்தது.

இன்னும் அவ்வளவு தூரம் போய் அவள் திரும்பி வரும் வரை குழந்தை அழுது கொண்டிருப்பாள்.

நின்றிருந்தவள், தொடர்ந்து நடக்க முனைந்தாள். பதை பதைப்பு கஞ்சி ஊற்றுமா?

அப்போது லட்சுமியின் கூக்குரலையும் மீறிக் கொண்டு ஒரு பேரிரைச்சல் கேட்டது. அதை உண்டாக்கிய புண்ணியவான் மூக்கம்மாவின் பக்கத்து வீட்டுக்காரர்தான்.

”நாசமாகப் போக… ஆரம்பிச் சுட்டியா? இன்னும் விடிய விடிய இந்த எழவுதான்” என்று காட்டுக் கத்தலாக அவர் கத்திக்கொண்டிருந்தது, மூக் கம்மா காதில் விழுந்தது.

ஆனாலும், அவள் மேற்கே தான் நடையை விரட்டினாள். அது அன்றாட நிகழ்ச்சி. அதற்கெல்லாம் அவள் நிற்க முடி யுமா? பலநாள் அனுபவம், அவள் பதைப்பு உணர்ச்சியைச் சுற்றி ஒரு மந்த உறையைச் சிருஷ்டித்திருந்தது.

ஆள் நடமாட்டமே தெருக்க ளில் இல்லை. பேய் போலப் போய்க் கொண்டிருந்தாள், ஒற்றையாய்! ஊரைக் கடந்து வேலவர் கோவிலைத் தாண்டி யதும் சுடுகாடு. ஒற்றையாகச் சென்ற மூக்கம்மாவுக்குப் பேய் பயம் பற்றிக் கொண்டது.

கால்களை எட்டிப் போட்டு விரைவாக நடந்தாள், முன் னால் முந்திப் போய்விட்டவர் களைப் பிடித்துவிடும் நோக்கத் துடன்.

”அது எப்பிடிக் கத்துதோ?” – லட்சுமி ஓடையில் இறங்கி ஏறிக் கடக்கும்போது, ஒரு கனத்த பெருமூச்சு விட்டாள் மூக்கம்மா. ”சரி, அழுது தானா ஓஞ்ச பெறவு கஞ்சிப் பானை யில் கை விட்டு ஏதாச்சும் தின் னுக்கிடும்” என்று பானையில் ‘மொற மொற’வென்று புளித்து நுரைத்துக் கிடந்த மூன்றாம் நாள் பழையதை எண்ணினாள் மூக்கம்மா.

அத்தித்துண்டு பெருமணல் பகுதியை, புதையும் கால்களை இழுத்து ஓட்டமும் நடையுமா கக் கடந்தாள். தாகம் எடுத்தது.ஆற்றில் சொட்டு நீரில்லை. இருந்தால், ஒரு வாய் அள்ளிக் குடித்துவிட்டு நடையைத் தொடரலாம்.

மூக்கம்மா சக்கரத்தாழ்வார் கோவில் பக்கத்திலேயே ராக் காயி முதலியோரைப் பிடித்துவிட்டாள்.

”தூங்கிட்டியா மூக்கம்மா?” என்றாள் ராக்காயி.

”ஆமாடீ, கொஞ்சம் அசந்துட்டேன்” என்று வருத்தத்து டன் மூக்கம்மா சொன்னாள். பிறகு, ”பாராக்காரங்க இன்னும் பாக்கலியே?” என்றாள்.

”அந்தாங்கன மடத்துல இருக்காமயா போப்போறாங்க? காடராவது அங்க இருப்பாரு. துட்ட எறிஞ்சிட்டுப் போயிற வேண்டியதுதான்! அது சரி மூக்கம்மா, இண்ணக்கிச் சீட் டுக்கு அதிகமா பத்துக் காசு குடுக்கணும், நெனவிருக்கா?”

”ஆத்தாடி, ஆமாடீ..! நல்ல வேளை, நேத்தே முடிஞ்சு வச் சுட்டேன்” என்று செருகியி ருந்த சேலை முடிச்சு ஒன்றை இடுப்பிலிருந்து வெளியே இழுத்துக் காட்டினாள்.

விறகு பொறுக்க அனுமதிச் சீட்டுக்கு அவர்கள் நியாயமாகவோ, அநியாயமாகவோ அவர்களின் ஒவ்வொரு நாள் சம்பாத்தியத்திலிருந்தும் ஒரு பகுதியை இழக்கவேண்டியிருந் தது. ஆனால், காட்டிலாவுக்குத் தெரிந்தோ தெரியாமலோ வைரம் பாய்ந்த வானளாவிய மரங்கள் திடீர் திடீரென்று காணாமல்போகும் அதிசயத்தை நிகழ்த்துபவர்கள் நிச்சயம் அந்த அப்பாவி விறகுக்காரிகள் அல்ல.

மலைச் சரிவில் ஏறி, தரகுக்காட்டைக் கடந்து, மலையின் மார்பு போன்ற ஏந்தலான ஒரு பகுதியில் இருந்த கானாமற்றுப் படுகையில் சுள்ளி பொறுக்கி னார்கள் விறகுக்காரிகள்.

”காளியம்மா, மலையாளத் துக் காட்டுல் இருந்து ஆனைஹ இங்க எறங்கியிருக்காம்!” என்று ராக்காயி, கொடிகளுக்கு மறை வில் கிடந்த ஒரு முரட்டுச் சுள்ளியை வெளியே இழுத்து எறிந்தவாறே சொன்னாள்.

”வந்துட்டுப் போவுது” என்று அந்த ஆபத்தை அசுவாரஸ்யமாக அசட்டை செய்து, தன் வேலையில் ஈடுபடலானாள் காளியம்மா.

”போன வருசம் மாடத்தி பட்ட பாடு தெரியாதா? ஒத்தயான கிட்ட வெரட்டப்பட்டு உயிர் தப்பிச்சது, அந்தக் காட் டுப் பேச்சி புண்ணியம்!” என்றாள் ராக்காயி.

”ஆமாடீ ராக்காயி, அதுக்கென்ன? நாம பாம்பு கடிக்க, காட்டு உசுப்பி ராணி அடிக்கத்தானே பொறந்திருக்கோம்! அதப் பேசி என்ன ஆவப்போவுது?” என்று சற்று எட்டியிருந்த மூக்காயி பதிலளித்தாள்.

உச்சிப் பொழுது கடந்துவிட்டது. எள்ளுக்காக உழுது போட்ட வாடி வாசல் புழுதிக்காட்டை இரண்டு மூன்று கல் கடக்க வேண்டும். இடையிலே விறகுக்கட்டை நிறுத்திச் சாய்க்க ஒரு மரம் மட்டை இல்லை. ஒரே மூச்சில் அதைக் கடந்தாக வேண்டும்.

வேர்வை பட்டு கண் தீயாய் எரிந்தது. சுமை கழுத்தை ஒடித்து விடுவது போலிருந்தது. கழுத்தில் மரண வலி. எங்கும் அனல் பறந்தது. செருப்பற்ற கால் வெந்து, பிய்ந்து போகும் நிலைக்கு வந்துவிட்டது. அப்ப டியே அத்தித்துண்டு நிழலுக்கு விரைவில் போய்விடத்தான் அவள் நினைத்தாள். ஆனால், நிலைமை தாக்குப் பிடிக்க முடியாதது.

வாணலியில் வறுத்த புழுதி போல அவள் காலுக்கடியில் புழுதி ஒட்டி உறைந்து, அவள் உயிரை எடுத்தது. ”அடி ஆத்தே, என்னை ஏம் பெத்தே!” என்று அலறி அழுதாள் மூக்கம்மா.

ஊன்றமுடியாத கால் பாதத் தில் அனல் கொப்புளங்கள் கிளம்பியிருந்தன. ஆனால், சுமையோடு ஊன்றி இன்னும் பல கல் போய், சுமையைக் காசாக்கித்தானே ஆகவேண்டும்!

அந்நேரம் ‘வாட்சர்’ வழி மறித்தான். அவனுக்குத் தெரி யும், இந்த அப்பாவிகள் அவ னுக்கும் சேர்த்தே மாமூலை கார்டரிடம் கொடுத்திருப்பார் கள்’ என்று. இருந்தாலும் மிரட் டினான் – கிடைத்தது ஆதாயம் என்று.

மூக்கம்மா இல்லை என்று சொன்னாள். அவன் அவள் இடுப்பைச் சோதிக்கத் தொட் டான். ‘பொசுக்’கென்று விறகுக் கட்டைக் கீழே எறிந்துவிட்டு, ”அட, நல்ல ஆம்பிளைய்யா? இல்லங்கேன், பொம்பளையக் கொஞ்சமும் இதில்லாமே வந்து தொடுறியே?” என்று கோபத்தில் பொரிந்தாள் மூக் கம்மா.

”அட, என்னளா கோவம்? கொமரி ஒரு புள்ளக்கி, கோடி ஒரு வெள்ளக்கி. என்னமோ ஒன்னப் பெரிய இதுன்னு நெனச்சிக்கிட்டியோ? சரி போ, போ!” என்றபடி மேற்கே நடந்தான் அந்த வாட்சர்.

கொஞ்சம் போனதும் ராக் காயி, ”நீ ஏன் அப்பிடிக் கோவப் பட்டே? அவன் நாளக்கி வெறகெடுக்க விடுவானா?” என்று மூக்கம்மாவிடம் அனு தாபமாகத்தான் கேட்டாள்.

”அட போடீ, உண்ண ஒண்ணுமில்லேண்ணு உடல்லே சொரணகூட இல்லாம போணுங்கயா? கட்டினவம் மாதிரி இடுப்பத் தொடுறான்; நாம் பேசாம இருக்கணுமாம்” என்று அழுகை பீறிடக் கூறிக் கேவிக் கேவி அழுதுகொண்டே வந்தாள் மூக்கம்மா.

அந்தப் பேய் மலை மொட்டை ராக்காச்சி, அந்த வாட்சரை அடித்து உப்புக் கண்டம் போட்டுக் காய வைத்துவிட மாட்டாளா என்றிருந்தது அவளுக்கு.

‘ஏன்தான் இந்த உடலைச் சுமக்கிறோமோ’ என்று இச் சமயங்களிலெல்லாம் மூக்கம்மாவுக்குத் தோன்றும். ஆனால், குழந்தை லட்சுமியை யார் காப்பாற்றுவார்கள்?

‘சீல்தூரு’ போய் விறகுக் கட்டைப் பணமாக்கி மூக்கம்மா ஊர் திரும்பும்போது, ஊர்அடங்கிவிட்டிருந்தது. அழுது வீங்கியிருந்த லட்சுமியின் கண்ணைத் தேய்த்துத் தடவி, அவளை அணைத்துக்கொண்டு படுத்தாள் மூக்கம்மா.

கரிச்சான் கத்தியது.

மூக்கம்மாவுக்கு விழிப்புத் தட்டிவிட்டது. மெதுவாக வெளியேறி, சந்து திரும்பப் போனாள். லட்சுமி அலறினாள்.

பக்கத்து வீட்டுக்காரர் ”ஏ நாயே, ஆரம்பிச்சிட்டியா? விடிய விடிய இந்த எழவா? இந்தச் சனியன்களுக்கு நடுச் சாமந்தான் விடியுது… நடுச் சாமந்தான் பொழுதடையுது. ஏ, நீ நாசமாப் போவ! கத்தாதே கொரங்கே” என்று அவரும் கத்தினார்.

மூக்கம்மா அதைக் கேட்டுக் கொண்டே போனாள். மனம் கஷ்டம்தான் பட்டது. ஆனால், அவள் தொடர்ந்து போகத்தான் வேண்டும்.
வாழ்க்கைச் சக்கரத்தில்தான் கோட்டம்; வறுமைச் சக்கரத்தி லாவது கோட்டமில்லாது இருக்கட்டும்!

– 1966

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *