வரும்….ஆனா வராது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,275 
 

“என்னங்க…என்ன பேசாம நின்னுட்டிருக்கீங்க…போங்க…போங்க…போய்க் கூப்பிடுங்க…” – என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக என்னை வாசலை நோக்கி விரைவு படுத்தினாள் சாந்தி.

இவள் எதற்காக இப்படிப் பரத்துகிறாள் என்பது எனக்குத் தெரியும். அறையிலிருந்தே மேனிக்கே ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ராஜப்பாதான் போய்க் கொண்டிருந்தார்.

‘பாவம், அவரே இந்த வீட்டைக் கடக்கும்போது தன்னைக் கூப்பிட்டு விடக் கூடாதே என்று பயந்தவராய்ச் சற்று வேகமாகக் கடப்பது போல் இருந்தது.

“போகட்டும் விடு…” என்றேன்.

சாந்தியின் முகத்தில் சாந்தம் இல்லை. கோபம்தான் கொப்பளித்தது. என்றுதான் சாந்தி இருந்தது? எப்பொழுதும் கலவரம்தான் அந்த முகத்தில். மனிதர்களை இந்தப் பணம்தான் என்ன பாடு படுத்துகிறது?
“விடு, மெதுவாக் கொடுக்கட்டும்…” மீண்டும் வலியச் சொன்னேன்.

“மெதுவான்னா எப்போ?” – கண்கள் விரிய கை விரல்களை மடக்கி கேள்வி கேட்பது போல் என்னை நோக்கித் திரும்பினாள்.

“மெதுவான்னா….அவர்கிட்ட காசு வர்றபோதுன்னு அர்த்தம்…”

“அப்போ சரி….நிச்சயம் அந்தக் கடன் வராது…எழுதி வச்சிக்கிங்க….”

“வராட்டாப் போகட்டும்…” – வாய் முனகியது. கண்டிப்பாக அவளுக்குக் கேட்டிருக்காது.

“கொடுத்த கடனைக் கேளுங்கன்னா, அதுக்கு இவ்வளவு சங்கடப் படுறீங்களே? நீங்களா அவர் வீட்டுக்குப் போகவும் மாட்டீங்க…இந்தப் பக்கமா அவர் வர்றபோது கேளுங்கன்னா,ஆளை விட்டுடறீங்க…அவராவது கடன் கொடுத்த வீடாச்சேன்னு ஒரு மரியாதைக்காகவாவது திரும்பியாவது பார்க்கிறாரா? கிடையாது. நீங்க கேட்கலேன்னா அப்புறம் யாரு கேட்டு அந்தப் பணத்தைத் திரும்ப வாங்குறது? நானா போக முடியும்?”

“ஏன் போக முடியாது? போயிட்டு வாயேன்…போய்க் கேட்டுட்டு வா…யார் பிடிச்சு வச்சா உன்னை?”

“வீட்டு ஆம்பளை நீங்க…நாலு எடத்துக்குப் போறவர் வர்றவர்…நீங்க போய்க் கேட்குறது சரியா, நா போறது சரியா? யோசிச்சுப் பேசுங்க…”

“நா போக மாட்டேன்…அவராக் கொண்டு வந்து கொடுப்பார்…அன்னைக்கு வாங்கிக்கோ…வலியப் போய் என்னால கேட்க முடியாது…”

சாந்தியின் வாய் அடைத்துப் போனது. இப்படி மனுஷனை வைத்துக் கொண்டு எப்படி வாழ்ந்து கட்டுவது என்று நினைத்திருப்பாள். மனதில் அவளுக்குப் பெரும் துயரம் அடைபட்டிருக்கும். கொடுத்த கடன் வருமோ வராதோ என்று.

எனக்கு ராஜப்பாவின் முகம் கண் முன்னே வந்தது. அவரைப் பார்த்து நாக்கு மேல் பல்லுப் போட்டு ஒரு வார்த்தை சொல்ல முடியாது. அத்தனை சுத்தமான மனுஷன். தங்கைமார்களுக்கெல்லாம் கல்யாணம் செய்துவிட்டு, தான் லேட்டாகத் திருமணம் செய்து கொண்டார். தாமதமாகத் திருமணம் செய்து கொண்டவர் குழந்தைச் செல்வத்தில் ஒன்று இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் அவர் செய்த தப்பு எனலாம். நான்கு பெற்றெடுத்து விட்டு ஓய்வு பெற்ற பின்னாலும் இன்னும் இரண்டு காத்துக் கொண்டிருக்கிறது திருமணத்திற்கு. பையன் வேண்டும் பையன் வேண்டும் என்று சோதனை செய்தால் அதற்காக நாலு வரையிலுமா விடுவது? இரண்டாவதே பெண்ணாய்ப் போன பிறகு அதோடு நிறுத்திக் கொண்டிருக்க வேண்டாமோ? அவர் மனைவிக்குத்தான் புத்தி எங்கே போயிற்று? இதெல்லாம் நாம் செய்யும் சிந்தனை. அது அவரவர் சுதந்திரமல்லவா? அவரவர் சிந்தனையின்பாற்பட்டதல்லவா? நாமா சொல்ல முடியும்? போய்யா ஒன் ஜோலியப் பார்த்துக்கிட்டு? என்று விட்டால் முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வது?

ஆனாலும் மனிதர் நேர்மையானவர். கள்ளம் கபடமில்லாதவர். அவர் நினைத்திருந்தால் அவர் வேலை பார்த்த ஆபீஸில் கொள்ளை கொள்ளையாய் அடித்திருக்கலாம். எல்லா வாய்ப்புகளும் உள்ள இடம் அது. ஆனால் தர்ம வழி பிசகாதவர். தான் உண்டு தன் வேலை மட்டும் உண்டு என்று இருந்தவர். பொதுவாக இப்படியான மனிதர்கள் எல்லாம் கஷ்டம் கொள்வதுதானே இயற்கை! அதுதானே உலக நடைமுறை!. உலகத்தோடு ஒட்டி ஒழுகிடாமல், தனித்து நின்று தரித்திரக் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தார். பொருளாதாரக் கெடுபிடி மனிதனை சிதிலப்படுத்தியிருந்தது.

வயதான தாயார் வேறு. நல்ல வேளை தகப்பனார் ஒரு குறிப்பிட்ட வயதோடு மேலே டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணப்பட்டு விட்டார். இல்லையென்றால் பாடு பெரும்பாடுதான் இவருக்கு. மனைவியின் பேச்சுத் தாளாமல் தாயாரையும் வைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிச் செலவு, அது இது என்று அவர் படும் பாடு சொல்லி மாளாது. எப்பொழுதும்; அவரை நினைத்தாலே மனதில் ஈரம்தான் சுரக்கும்.
தினமும் காலையில் தெரு வழியே போவார். திண்ணையில் கிடக்கும் தினசரியை உரிமையோடு எடுத்துப்; படித்துக் கொண்டிருப்பார். ஒரு வாய் காபி சாப்பிடுங்கள் என்று உபசரித்தேன். அவர் வருவது செய்தித்தாள் படிக்கத்தான். சொல்லாவிட்டாலும் அவர் வாய் விட்டுக் கேட்கப் போவதில்லைதான். ஆனால் காபி கொடுப்பதென்பது வழக்கமாகிப் போனது. அதையெல்லாம் மகிழ்ச்சியாகத்தான் செய்து கொண்டிருந்தாள் சாந்தி. இந்தக் கடன் வாங்கிய பின்னால்தான் நிலைமை மாறிப் போனது. கடனையும் வாங்கிக் கொண்டு தினமும் தவறாமல் காப்பியும் சாப்பிடலாமா? என்று அவருக்கே தோன்றி விட்டதோ என்னவோ வீட்டுக்கு வருவதையே நிறுத்திக் கொண்டு விட்டார். காலையில் கதவைத் திறந்து நான் எடுக்கும் வரை தினசரி அப்படியே கிடந்தது.

ராஜப்பா பஸ் ஸ்டான்டில் இருக்கும் டீக்கடையில் போய்ப் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அங்கே டீ சாப்பிட்டால்தான் பேப்பர் படிக்க வேண்டும் என்று கட்டாயமில்லையே? ஓரமாய்க் கிடக்கும் ஒரு குத்துக் கல்லில் அமர்ந்து மேய்ந்து கொண்டிருப்பார் செய்திகளை. சொல்லப்போனால் என் வீட்டில் மரத்தடியில் நின்று படிப்பதை விட அந்த இடம் அவருக்கு நிச்சயம் சுகமாகவும், சுதந்திரமாகவும்தான் இருந்திருக்க வேண்டும்.

திரும்பிப் பார்க்கவில்லை, வந்து தினசரி படிப்பதில்லை என்பதற்காகக் கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டார் என்று அர்த்தமா? அதற்காகத் தெருவோடு போகும் மனுஷனைக் கூவி அழைப்பது, கழுத்தில் துண்டைப் போட்டு இழுப்பதைப் போல் அவமானமாக உணர்ந்தேன் நான். ஓரளவுக்கு ஒரு நல்ல பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு என்று ஒரு கௌரவம் உண்டு.. இதையெல்லாம் நினையாமல் மானாங்கணியாய் சத்தம் கொடுத்தால் அது எப்படிப் பொருந்தி வரும்? மனைவி சொல்கிறாளே என்று எல்லாவற்றையும் கண்ணை மூடிக் கொண்டு செய்துவிட முடியுமா?
ராஜப்பா போய்க் கொண்டிருந்தார். வீட்டிற்குத் திரும்பும் அவசரம். இப்பொழுதும் அவர் தலை திரும்பவில்லைதான். இதையெல்லாம் குத்தமாக நினைத்துக் கொள்ள முடியுமா? கடன் கொடுத்தோம் என்பதற்காக நம்மை வலியப் பார்த்து மரியாதை செலுத்த வேண்டுமா என்ன? சாந்தியின் எதிர்பார்ப்பு அந்த வகையானதாய்த்தான் எனக்குத் தோன்றியது.

“பார்த்தீங்களா? இப்பவும் மனுஷன் பேசாமப் போறார் பாருங்க…இஇதுக்குத்தான் அடிச்சிக்கிறது…ஆளைக் கூப்பிட்டுக் கேளுங்கன்னு…”

“என்னைக்குத் தர்றேன்னு சொன்னார்…அதுவே எனக்கு மறந்து போச்சு…”

“அதனாலதானே நான் ஞாபகப்படுத்தறேன்…நீங்க என்னைத் திட்டுறீங்க…அவர் தர்றேன்னு சொன்ன நாளெல்லாம் கடந்து போய் பத்து நாளாச்சு…”

“சரி இருக்கட்டுமே…நமக்கென்ன இப்ப பண முடையா? இல்லையே? மெதுவாத் தரட்டுமே…குடியா முழுகிடப் போறது? ஏதோ ஒருத்தருக்கு உதவினோம்னாவது இருக்கட்டும்….”

“நீங்க சொல்றதப் பார்த்தா வராட்டாலும் கவலைப் படமாட்டீங்க போலிருக்கே…அப்டி இருக்க முடியுமா? நமக்கும் அப்பப்போ செலவு இருக்கில்லியா? கரெக்டா கொடுத்தார்னா பிறகு இன்னொரு சமயம் கேட்டா கொடுத்துதவலாம்…அது அவருக்குத்தானே நல்லது…”

வாசலில் கேட் திறக்கும் சத்தம். விடுவிடுவென்று போய் எட்டிப் பார்த்தேன். ராஜப்பாதான் வந்து கொண்டிருந்தார்.

‘இப்பொழுதுதானே வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அதற்குள்ளாகவா போய்த் திரும்பி விட்டார்?’
“வாங்கோ…” – நான் சத்தமாய் அழைத்ததும் அவர் முகம் மலர்ந்தது போலிருந்தது.

விருட்டென்று உள்ளே போய்விட்டாள் சாந்தி.

“உட்காருங்கோ…” அருகிலிருந்த இருக்கையைக் காட்டினேன். தயங்கியவாறே அமர்ந்தார். அவர் பார்வை உள்ளே போனது. எதற்கோ தயங்குவது போலிருந்தது.

“சொல்லுங்க…என்ன விஷயம்?” அவரின் தயக்கத்தைப் பார்த்து நானே கேட்டேன்.

“இல்ல, ஒண்ணுமில்ல…வந்து….”

“தயங்காமச் சொல்லுங்க…எங்கிட்டச் சொல்றதுக்கென்ன?”

“ஒண்ணுமில்ல, கடைசிக்காரிக்கு எக்ஸாம் ஃப்பீ கட்டணும். இன்னைக்கு சாய்ந்தரத்துக்குள்ள…அதான்…”

“ஓ! அப்டியா? காலைல நேரா எங்கோ போனாமாதிரி இருந்தது?” ஏதோ பேச்சுக் கொடுத்து சூழலை இலகுவாக்க வேண்டும் போலிருந்தது எனக்கு. எனவே கேட்டேன்.

“அத ஏன் கேட்கறீங்க….? அந்த டீக்கடைக்கு தெனமும் ஒரு கந்து வட்டிக்காரன் வர்றான்…அவன்ட்டத்தான் கேட்டுப் பார்ப்பமேன்னுதான் போனேன்….”

“என்னாச்சு, கிடைக்கலியா?”

“கிடைக்கலேங்கிறதெல்லாம் இல்லை…அதெல்லாம் அவன்ட்ட இல்லாம இருக்குமா…அதான் கொள்ள கொள்ளயா அடிச்சு வச்சிருக்கானே…நூறு ரூபாய்க்கு பதினைஞ்சு ரூபா கேட்குறான். ஆயிரத்துக்கு நூத்தம்பது எடுத்துண்டு எண்ணூத்தம்பதுதான் தருவானாம்…நாம ஆயிரமாத் திருப்பிக் கொடுக்கணும்…”

“வாங்கிட வேண்டிதானே…ஆயிரமாக் கொடுத்துட்டுப் போறது…”

நிமிர்ந்து பார்த்தார் ராஜப்பா. என்னின் பேச்சில் அவருக்கு நம்பிக்கை இல்லைபோல் தெரிந்தது.

“வாங்கியிருப்பேன்தான்…தேவைக்குக் கிடைக்கிறதேன்னு, அம்புட்டு வட்டியானாலும், தொலையறதுன்னு பதிலுக்கு வீசியெறிஞ்சிடலாம்தான்…டயத்துக்குக் கொடுக்க முடியலேன்னா என்ன பண்றதுன்னு திடீர்னு ஒரு பயம் வந்துடுத்து மனசுக்கு…வாங்கிட்டுப் போங்க ஸார்னு கத்தினான். அந்த சத்தமே என்னமோ மாதிரித் தோணித்து. அதான் அப்புறம் வர்றேன்னு கிளம்பி வந்துட்டேன்…”

நான் அவரையே பார்த்தேன். உண்மையிலேயே அவனின் சுயரூபம் தெரிந்துதான் இவர் பேசுகிறாரா என்று இருந்தது எனக்கு.அவனின் ஆட்டமெல்லாம் இவரால் தாங்க முடியுமா? போன வாரம் இதே பஸ்ஸ்டான்டில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று ஒருவனைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்த காட்சியைக் கண்ணால் கண்டால் இவர் அவனிடம் போய் நின்றிருப்பாரா? அத்தனை ஜனமும் பார்த்துக் கொண்டிருந்ததே. நான் உட்படத்தான். எவன் வாயைத் திறந்தான். அந்தப் பகுதிக்கான பாதுகாப்பிற்கிருந்த காவல் துறையும் கூட காணாமல்தானே கிடந்தது. அவனிடம் போயெல்லாம் இவர் நிற்கலாமா? விகல்பமில்லாத மனிதர் என்றால் அதற்காக இப்படியா? நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா என்று ஒரு யோசனை வேண்டாம்? ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்த இவர் எத்தனை அனுபவங்களை உள் வாங்கியிருப்பார்? இருந்தும் இது ஏன் இவருக்குத் தெரியாமல் போனது? நல்லவேளை, மனுஷன் தப்பித்தார்.

குழந்தையின் கல்விக்கு என்று கேட்கிறார். எப்படி மறுப்பது? என் மனம் இளக ஆரம்பித்தது. பள்ளி இறுதித் தேர்வுக்குப் பதினோரு ரூபாய் கட்ட முடியாமல் பாட்டியுடன் சென்று ஒரு நிலச்சுவான்தார் காலில் விழுந்து நமஸ்கரித்து வாங்கி வந்து பரீட்சைப் பணம் கட்டிய என் சுய அனுபவம் என்னை நெகிழ்த்தியது.

“உங்ககிட்டதான் திரும்ப வந்து நிற்க வேண்டிர்க்கு…ஒரு ஆயிரத்தைந்நூறு கொடுத்துதவினேள்னா பழைய ரெண்டாயிரமும் சேர்த்து மூவாயிரத்தைந்நூறாத் திருப்பித் தந்திடுவேன்…வேறே எங்கேயும் போக யோசனை தோணலை. யாரும் இருக்கிறமாதிரியும் தெரியலை…எந் தம்பி இருக்கான்…இந்தமாதிரியெல்லாம் நான் வந்துடக் கூடாதுன்னுதான் வீட்டையே சொல்லாமக் கொள்ளாம எங்கேயோ மாத்திண்டு போயிட்டான்னு கேள்விப்பட்டேன். எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலை இன்னைவரைக்கும்…எங்கே குடி போனான்னே தெரிலை…இப்போ நீங்கதான் என் தம்பி மாதிரி…”

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எடுத்து நீட்டினேன். கண் கலங்கப் பெற்றுக் கொண்டவர் என் இரு கைகளையும் எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். “நீங்க நன்னா இருக்கணும்…என்னோட ஆசீர்வாதம்….” – வார்த்தைகள் குழற சட்டைப் பையில் பணத்தைத் திணித்துக் கொண்டு புறப்பட்டார்.

“என்னண்ணா…கொண்டு வந்து கொடுத்துட்டாரா….ஆச்சரியமாயிருக்கே….? இவ்வளவு சீக்கிரம் வருவார்னு நா எதிர்பார்க்கவேயில்லையாக்கும்…” அரிசி களைந்த தண்ணீரை கொல்லைப் புறத்தில் வீசிவிட்டுப் பரபரவென்று வந்த சாந்தியை ஒரு தீவிர யோசனையோடுதான் பார்த்தேன் நான்.

பணம் கொடுக்கவில்லை என்பதை எப்படி அவளிடம் பக்குவமாய்ச் சொல்லலாம் என்கிற முதல் நிதானம் அது. நேற்று அலுவலகத்திலிருந்து வாங்கி வந்திருந்த பயணப்படிப் பணத்தைக் கடனாகக் கொடுத்ததை அவளிடம் அப்போதைக்குக் கண்டிப்பாக மறைத்து விடுவது என்பது என்னின் இரண்டாவது யோசனை. இப்போதைக்கு இதுதான் தீர்வு…! என்ன, உங்களுக்கும் சம்மதம்தானே?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *