வராமற்போனதும் வராமற்போனவர்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 7,581 
 

அம்மா படுத்த படுக்கையாகக் கிடந்தாள். அவள் இப்படிக் கிடந்து ஏழெட்டு நாட்களாகிறது. முன்னர் கொஞ்சம் அங்குமிங்கும் நடந்து திரியக்கூடியதாயிருந்தது. விழுந்துவிடுவேனோ என்ற பயத்துடன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடப்பாள். இப்போது அதுவும் முடியவில்லை. ஊன்றுகோல் கட்டிலின் ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. தற்செயலாக நடக்க முடிந்தால் அது உதவக்கூடும் என அம்மா நினைத்திருப்பாளோ என்னவோ!

முற்றத்து மரத்திலிருந்து காகமொன்று கத்துகிற சத்தம் அம்மாவுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. அதைக் கலைத்துவிடவேண்டும். அது எந்தத் திசையிலிருந்து கத்துகிறதென்று தெரியவில்லை. காகம் இருந்து கத்துகிற திசையைப்பொறுத்து, நன்மையோ.. தீமையோ என்று அம்மா அனுமானித்துக்கொள்வாள். எப்படியிருந்தாலும் அதைக் கத்திக்கொண்டிருக்க விடாது கலைத்துவிடுவதிற்தான் குறியாக இருப்பாள்.

சில வேளைகளில் அது போகாது. எவ்வளவு முயன்று கலைத்தாலும் ஒவ்வொரு கொப்பாக மாறி மாறி இருந்து கத்திக்கொண்டிருக்கும். இப்போது அம்மாவுக்கு எழுந்து போக முடியவில்லை. ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு எழுவதற்கு முயற்சித்தாள். முடியவில்லை. காகம் கரைந்துகொண்டேயிருந்தது.

அம்மாவுக்கு அந்த ஊன்றுகோலை சரியான அளவாக வெட்டிக்கொடுத்தவன் அவளது மகன்தான். பகலில் அவன் வேலைக்குப் போய்விடுவான். தான் வேலை விட்டு வரும்வரை அது அம்மாவுக்குத் துணையாக இருக்கட்டுமே என அவன் நினைத்திருப்பான்போலும். அம்மா எட்டுப் பிள்ளைகளைப் பெற்றெடுத்தவள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேசங்களாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். கொழும்பில் ஒருவன் இருக்கிறான்.

இந்த ஒரு மகன் மட்டும் ஊரோடு தங்கிவிட்டான், அம்மாவுக்கு இவனை நினைத்து நன்றி பெருகியது. தன்னை நினைத்துக்கொண்டுதான் இவன் எங்கும் போகாது இருக்கிறான் என அம்மா அடிக்கடி நினைத்துக்கொள்வாள். கண்களும் கலங்கியது.

மகன் வீட்டில் இல்லாதபோது அம்மா ஒருமுறை விழுந்துபோனாள். யாருடைய துணையுமில்லாமல் நடந்து திரிந்தவளுக்கு அன்றைக்கு என்ன நேர்ந்ததோ? கால்களைப் பதிக்க முடியாமல் தளர்ச்சி ஏற்பட்டது. உடல் நிலையற்றுத் தடுமாறியது. கால்களைச் சரியாக ஊன்றுவதற்குக் குனிந்து நிலத்தைப் பார்த்தால் தலை சுற்றியது. விழுந்துபோனாள்.

மருமகளால் அம்மாவைத் தூக்கி எடுக்க முடியவில்லை. பாவம் சரியாகக் கஷ்டப்பட்டாள். பேரப்பிள்ளைகள் குளறினார்கள்.

“நீ விடு பிள்ளை! விடு!… நான் எழும்பியிடுவன்!” என அம்மா கூறிக்கொண்டிருந்தாள். ஆனால், அம்மாவுக்குத் தனது பலத்தைப் பிரயோகித்து எழமுடியவில்லை.

ஊன்றுகோல் இன்னொரு காலைப்போல அம்மாவுக்குச் சற்றுப் பலத்தைக் கொடுத்தது உண்மைதான். ஆனால், அதுகூட சில நாட்களுக்குத்தான் நின்று பிடித்தது. விழுந்ததில் பட்ட அடி தினமும் வருத்தியது. இடுப்பு அசையக்கிசைய இடம் கொடாது வலித்தது. படுத்த படுக்கையாகிவிட்டாள்.
அம்மா தினமும் போடவேண்டிய குளிசைகள் அவளது கைவசம் இல்லை. குளிசைகள் ஒழுங்காகப் போட்டு நீண்ட நாட்களாகிவிட்டன. மகனும், தேடாத இடமில்லை. எல்லா பாமசிகளிலும் ஏறி இறங்கி சலித்து வருவான். சிலவேளைகளில் ஏதாவது கைக்குக் கிடைத்த குளிசைகளை வாங்கி வருவான்.

யாழ்பாணத்துக்கு மீண்டும் பாதைகள் அடைக்கப்பட்டு பொருள் பண்டங்களுக்கும் தட்டுபாடு ஏற்பட்ட நேரத்தில் அம்மாவின் உடல் நிலையும் மோசமடைந்துகொண்டு வந்தது. டொக்டர் எழுதிக்கொடுத்த குளிசைகளை ஒழுங்காக எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என அம்மா நினைத்தாள். ஆறோ ஏழு வருடங்கள் இந்தக் குளிசைகளுடன்தான் அம்மா வாழ்ந்துவந்தாள். சாப்பிட மறந்தாலும் அம்மா குளிசைகள் போட மறக்கமாட்டாள். யாழ்ப்பாணத்தில் எல்லா இடங்களிலும் அலைந்து குளிசைகள் கிடைக்கவில்லை என்று மகன் வரும் நேரங்களிலெல்லாம் அம்மாவுக்குக் கவலையாயிருக்கும். பயமாயுமிருக்கும். தான் செத்துப்போய் விடுவேனோ என நெஞ்சு அடித்துக்கொள்ளும்.
அம்மாவுக்குச் செத்துப்போக விருப்பமில்லை!

உலகத்தின் ஒவ்வொரு பக்கமாகப் புலம்பெயர்ந்து போயிருக்கும் தனது பிள்ளைகளை நினைத்து, அம்மாவுக்கு நிம்மதியில்லை. இந்த நாட்டில் எப்போது பிரச்சினைகள் தீரும்.. எப்போது சமாதானம் வரும்.. எப்போது இந்தப் பிள்ளைகள் ஊரோடு வந்துசேர்வார்கள் என்று ஏக்கத்துடனேயே ஒவ்வொரு நாட்களும் கழிகிறது. கொழும்பில் இருப்பவனை நினைத்தாலும் பயமாயிருக்கிறது. கொழும்பில் தமிழர்களைப் பிடிக்கிறார்கள், அடைக்கிறார்கள் என்று செய்திகளில் அறியும்போதெல்லாம் நெஞ்சு பதைபதைக்கிறது.

“தேவையில்லாத யோசனையை விட்டிட்டு, சும்மா இரம்மா!” என மகன் கத்துவான். எப்படி யோசிக்காமல் இருப்பது? எது தேவையில்லாத யோசனை? கொழும்பிலுள்ள மகனின் பிள்ளைகள் வளர்ந்தவர்கள். அவர்ளுக்கு என்ன ஆகுமோ.. என்ற பயம்.

பிள்ளைகள் எல்லோரையும் நினைத்து நினைத்து அம்மா கடவுளை வேண்டாத நேரமில்லை. கடவுளும் கண் திறக்கிறாரில்லையே என அம்மாவுக்கு ஆதங்கமாயிருந்தது.

அம்மாவுக்கு மறுபக்கமாக சற்று அசைந்து படுக்கவேண்டும் போலிருந்தது. உடலை அசைக்கமுடியாது இடுப்பு வலித்தது. விழுந்த நாளிலிருந்து இடுப்பு உடைந்தமாதிரி வலியாயிருக்கிறது. வைத்தியர்களின் வித்தைகளும் பலித்ததுபோலத் தெரியவில்லை. நெஞ்சுவலியும் இடைவிடாது நெருக்கிக்கொண்டிருக்கிறது. ஒருநேரம் நடு நெஞ்சில் வலிப்பதுபோலிருக்கும். பிறகு இடப்பக்கமாக வலிக்கும். அந்தப்பக்கம் திரும்பிப் படுத்தால் கை விறைத்துப்போகும். மெல்லிய வலிதான்.. தாங்கிக்கொள்ளலாம். ஆனால், இது என்ன செய்யுமோ? உயிரையே கொண்டுபோய்விடுமோ? என்றெல்லாம் அம்மாவுக்குப் பயமாயிருக்கிறது.

காகத்துக்கு அலுத்துப் போயிருக்கவேண்டும். நெடு நேரமாகக் கரைந்துகொண்டிருந்தது. பின்னர் பறந்து போய்விட்டது. அம்மாவுக்குக் கவலையாயிருந்தது. எப்படிக் கலைத்தும் போகாவிட்டால், அம்மா ஏதாவது சாப்பாட்டை எடுத்துக் காகத்துக்கு வீசுவாள். முற்றத்தில் வந்திருந்து hப்பிட்டுவிட்டுப் போகும். பாவம்.. அது! பசியிலேதான் கத்தியிருக்கிறது என அம்மா நினைத்துக்கொள்வாள். இப்போது அது பசியோடுதான் போயிருக்குமோ? அம்மாவைக் காணவில்லையென்று தேடியிருக்குமோ? சில காகங்களின் ஒற்றைக் குரல்கள்தான் இடையிடையே கேட்டது. அம்மாவுக்கு அறையை விட்டு எழுந்து வெளியே போகவேண்டும் போலிருந்தது.

சமாதானப் பேச்சுக்கள் திரும்பத் திரும்ப நடந்த காலங்களில் அம்மா கொழும்பிலிருக்கும் தனது மகனிடம் போயிருந்தாள். பல காலங்கள் குண்டு வீச்சுகளுக்குள்ளும், ஷெல் அடிகளுக்குள்ளும் உயிரைப் பிடித்துக்கொண்டு சீவித்த பிறகு கொழும்பில் இருப்பது அம்மாவுக்கு ஒரு வகையில் ஆறுதலாகத்தான் இருந்தது. தினசரிகளையெல்லாம் புரட்டிப் புரட்டிப் பார்ப்பாள்., ரேடியோ செய்திகளையும் ரெலிவிசன்களையும் கூர்ந்து கவனிப்பாள். சமாதானப் பேச்சு அங்கு நடைபெறுகிறது.. இங்கு நடை பெறுகிறது… என்றெல்லாம் வரும்போது மனது தெம்படையும். அவர்கள் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்துச் சிரித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தால், இனி சமாதானம்தான்.. சண்டை இல்லை என்று தோன்றும். அம்மாவுக்கு அப்போது பெரிய நிம்மதியாயிருக்கும். “அப்பனே… இனியாவது இந்த நாடு உருப்படட்டும்…” எனக் கடவுளை வேண்டிக்கொள்வாள்.
அப்போது அவுஸ்திரேலியாவிலிருந்த மகன் தனது குழந்தைகளுடன் அம்மாவைப் பார்க்க வந்திருந்தான். பேரப்பிள்ளைகளைப் பார்த்து அம்மா குதூகலித்துப்போனாள். யாழ்பாணமென்றும்.. கண்டி நுவரெலியா என்றும் அம்மா, பிள்ளைகளுடன் சுதந்திரமாகப் பறந்துதிரிந்தாள். அப்போதும் அம்மாவின் மனதில் ஒருவித நெருடல் இருந்தது. பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் ஒரு நல்லநாள் பெருநாளில் வந்து ஒன்றாகச் சேர்ந்து நிற்கும் காலம் வருமா?

ஆனால்…..
ஒரு பறவையின் சிறகடிப்பைத் தாங்கமுடியாது மெல்ல மெல்ல வேகம் கொண்டு புயலாக மாறிய காற்றுப்போல, நாட்டு நிலமைகள் மீண்டும் முறிகின்ற முருங்கைக் கொப்புகளில் ஏறத் தொடங்கிவிட்டன.

அம்மாவுக்கு நெஞ்சில் வலித்தது. இருமல் தொடர்ச்சியாக வந்தது. மகன் பக்கத்தில் அமர்ந்து நெஞ்சைத் தடவிக்கொடுத்தான்.

கொழும்பிலிருந்து ஏற்கனவே தம்பி வாங்கி அனுப்பிய மருந்து மாத்திரைகள் இரண்டு மூன்று மாதங்களாகியும் இன்னும் வந்து சேரவில்லையாம்! அவை எங்கோ தபாற்கந்தோர்களில் முடங்கிபோயிருக்கும் என மகன் அம்மாவிடம் கூறினான். அம்மாவுக்கு இதையெல்லாம் கேட்கக்கூடிய சக்தி இல்லை. மகன் கூறுவது அரைகுறையாகதான் கேட்டது. காய்ச்சலும் காயத் தொடங்கியிருந்தது. தேகமெல்லாம் உழைவெடுத்தது. மூட்டுக்கள் வலித்தன.

இரண்டு மூன்று நாட்களாக அம்மாவுக்குச் சாப்பிட முடியவில்லை. உடல் நெருப்பாகக் காய்ந்தது. ஒரு சிறு சத்தம் கேட்டாலே திடுக்குறும் பயம். தலை மரத்துப்போய்விட்டதா அல்லது வலியா என்று புரியமுடியாத மயக்க நிலைக்குட்பட்டுக் கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் பரவிய ‘சிக்கின் குனியா’ காய்ச்சல் அம்மாவையும் பிடித்திருக்கிறது என வைத்தியர் கூறினார். “அதற்கு மருந்து இல்லை. பனடோல் போடுங்கள்” எனக் கூறிவிட்டு அவர் போய்விட்டார்.

மருமகள் தெண்டித்து உணவு ஊட்ட முயற்சித்தாள். சாப்பாடு இறங்க மறுத்தது. “வேண்டாம்!” என்பது போல அம்மா சைகை செய்தாள்.

“சாப்பிடாமல் கிடந்து… என்ன செய்யப் போறீங்கள்… சாப்பிடுங்கோ!” மருமகள் வற்புறுத்தினாள். அம்மா சாப்பிட மறுத்தாள்.

சில வேளைகளில் அம்மாவுக்குப் பசி எடுப்பதுபோலவும் இருந்தது. எனினும் அம்மாவுக்குச் சாப்பிட மனதில்லாதிருந்தது. ரொய்லெட்டுக்குப் போகவேண்டிய அவசரம் வந்தால் அம்மாவுக்கு எழுந்து போகமுடியாது. மகன் வரும்வரை காத்திருக்கவேண்டும். வீட்டில் மற்றவர்கள் உறங்கிய பின்தான் அம்மா மகனைக் கூப்பிடுவாள்.

“தம்பீ!” அம்மாவின் முனகலைக் கேட்டவுடன் மகன் ஓடி வருவான். அம்மாவை அணைத்துத் தூக்கிப்போவான். ரொய்லெட் அலுவல் முடித்து, அம்மாவைக் கழுவித் துடைத்துக்கொண்டு வந்து படுக்கவிடுவான். அம்மாவுக்கு மகனை நினைத்துக் கவலையாயிருந்தது

பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேசமாகத் தங்களது பாடுகளைப் பார்த்துக்கொண்டு போய்விட்டார்கள். இவன் மட்டும் தன்னோடு கிடந்து கஷ்டப்படுகிறான். நிரந்தர உழைப்பு ஊதியம் இல்லாதவன். யாழ்பாணத்தில் சாமான் சக்கட்டுக்கள் தட்டுப்பாடு. கிடைத்தபாடில்லை. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பால்மா வகைகளும் கிடைக்காது கஷ்டப்படுகிறான். விடிந்தால் பொழுதறுதியும் பிள்ளைகளின் அழுகுரல்கள் அம்மாவுக்குக் கேட்பது போலிருக்கிறது. பிள்ளைகளுக்குப் பசி, மருமகள் பிள்ளைகளுக்கு அடித்து அடக்கப் பார்க்கிறாள். இந்த நினைவுகள் அம்மாவுக்குத் திரும்பத் திரும்ப கனவுபோலவும் வந்துகொண்டிருந்தது..

பிள்ளைகள் சாப்பாடு தேடி அலைவதுபோலிருந்தது. அவர்களுக்கு அடிக்க வேண்டாம் என்று மருமகளுக்குச் சொல்லவேண்டும். அம்மாவுக்குக் குரல் கொடுத்துப் பேசமுடியவில்லை. பாதை திறக்கிறது.. எல்லோரும் வந்து போகிறார்கள். வருபவர்களைப் பாதைகளில் மறித்து, காக்கி உடை அணிந்தவர்கள் உதைக்கிறார்கள். அம்மா திடுக்குற்று விழித்தாள்.

“அடிக்க வேண்டாம்!” என்று சத்தம் போட முயன்றாள். மருமகள் ஓடி வந்தாள்.

“என்ன மாமி!… என்ன செய்யுது? பசியா? தண்ணி கொண்டு வரட்டா?”
அம்மாவின் நெற்றியில் மருமகள் கை வைத்துப் பார்த்தாள்.

அம்மாவுக்குக் கண்கள் பனித்தன. கண்ணீர் சட்டென சொட்டிட்டு வழிந்தோடியது. மெல்லத் தலையை மறுப்பக்கமாகத் திருப்பினாள். அறையின் அந்தப் பக்கமாக வைக்கப்பட்டிருந்த மேசையில் அம்மா வணங்கும் தெய்வங்களின் படங்கள் காட்சி தந்தன. அந்த மேசையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மா படுத்திருக்கும் கட்டிலும் அந்த மேசையும் கல்யாணம் முடித்த புதிதில் அவர் வாங்கிவந்து சேர்த்தது. பர்மாவிலிருந்து இறக்குமதியாக்கப்பட்டவை என்று புளுகிப் புளுகிக் கொண்டுவந்தார். அவர் அம்மாவை விட்டுப் போன பின்னரும் அவற்றைப் பேணிப் பாதுகாத்து வந்தாள். வீட்டில் என்ன கஷ்ட நஷ்டங்கள் வந்து சில பொருட்களை விற்க நேர்ந்தாலும் அவை இரண்டையும் மட்டும் அம்மா வீட்டைவிட்டு வெளியேற விடவில்லை

ஒருமுறை மகன் தனது கடைக்கு ஒரு மேசை தேவைப்படுகிறது, அதைத் தருமாறு கேட்டான். அம்மா கொடுக்கவில்லை. “அதைத் தொடக்கூடாது! தரமாட்டன்!” என ஒரே பதிலாகக் கூறிவிட்டாள். அம்மா அப்போதெல்லாம் தனது கணவரைதான் நினைத்துக்கொள்வாள். அவரது நினைவுகள் அம்மாவின் அன்றாட வாழ்க்கையில் அவ்வப்போது முகிழ்ந்தெழுவதுண்டு. பழைய வாழ்க்கையின் நினைவுகளில் அம்மா கண் கலங்கினாள்.

அம்மாவை உறக்கம் பற்றிக்கொண்டது. உறக்கமா விழிப்பா என்ற உணர்வற்ற மயக்க நிலையில் உடல் கொதித்துக்கொண்டிருந்தது. கனவில் அவர் வந்தார். பிள்ளைகள் எல்லோரும் சிறுவர்களாயிருந்தார்கள். அவர்கள் பாடசாலையால் வீட்டுக்கு வரும் நேரமாயிருந்தது. அம்மா ஓடி ஓடிச் சமையல் செய்கிறாள். பிள்ளைகள் இந்தச் சாப்பாடு சரியில்லை… அந்தக் கறி சரியில்லை, எனக்கு இதுதான் வேண்டும்.. அதுதான் வேண்டும் என்று ஒவ்வொருவராகக் குழப்படி செய்கிறார்கள். அம்மா கெஞ்சிக் கூத்தாடி அவர்களைச் சாப்பிட வைக்கிறாள்.

“சாப்பிடுங்கோடி… சாப்பிடுங்கோ… நான் ராவைக்கு பிள்ளையளுக்குப் பிடிச்ச சாப்பாடு செய்து தருவன். அப்பா பாவம்…என்ன செய்யிறது? கஷ்டப்படுகிறார்..’’

இயலுமானவரை உழைத்துப் போட்ட அப்பா ஒரு கட்டத்தில் போய்ச்சேர்ந்துவிட்டார். அம்மா தனித்துப்போன சோகங்களையெல்லாம் நெஞ்சுக்குள்ளே புதைத்துக்கொண்டு பிள்ளைகளை வளர்த்தெடுத்தாள்.

“அம்மா!……….அம்மா!” என பிள்ளைகள் அழைக்கும் குரல் கேட்டது.
அம்மா விழிப்பதற்கு முயற்சித்தாள். மிக முயன்று முயன்று கண்களைத் திறந்தாள். அம்மாவின் கட்டிலில் பக்கத்தில் உறவினர்கள் சிலர் நிற்பது போலிருந்தது. இன்னும் கண்களை விழித்துப் பார்த்தாள்.

அவளது கண்கள் மகனைத் தேடின. அம்மாவுக்குத் தனது பிள்ளைகள் எல்லோரையும் பார்க்கவேண்டும் போலிருந்தது. தனக்குச் சுகயீனம் என அறிந்தால் அவர்கள் வரக்கூடும். வருவார்களா?

‘இதில இரு..! இதில இரு..!’ என மகனிடம் சைகை செய்தாள். மகன் கட்டிலில், அம்மாவின் தலைமாட்டில் அமர்ந்தான்.

அம்மாவுக்கு மகனின் மடியில் படுக்கவேண்டும்போலிருந்தது. மகனின் மடியைத் தொட்டுத்தொட்டுக் காட்டினாள். மகன் அம்மாவை அணைத்துக் தூக்கி மடியில் கிடத்தினான். அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் கட்டுப்படாது ஓடி மகனின் மடியை நனைத்தது. நினைவுகள் மங்கி மங்கித் தொடர்ந்தன. அம்மாவை மகன் கட்டலில் கிடத்தினான்.

அம்மா பிள்ளைகளை ஒவ்வொருவராகத் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். பேரப்பிள்ளைகள் அம்மாவைச் சுற்றிவர நின்றார்கள். இவர்கள் எப்போது வெளிநாடுகளிலிருந்து வந்தார்கள்? எப்போது பாதை திறக்கப்பட்டது? இனி யுத்தம் இல்லையா? அம்மா திடுக்கிற்று விழித்தாள்.

அம்மாவுக்குச் செத்துப்போக விருப்பமில்லை. அதனால், கண்களை நன்றாக விழித்து எல்லோரையும் பார்த்தாள்.

“பிள்ளைகள் எங்க..?”

மகன் தனது பிள்ளைகளைக் கூட்டி வந்து அம்மாவின் பக்கத்தில் விட்டான். எல்லோரையும் அம்மா ஒவ்வொருவராகப் பார்த்தாள். ஒருவித ஏக்கம் வந்து நெஞ்சை அடைத்தது. மறுபக்கமாகத் திரும்பி மேசையைப் பார்த்தாள்.

அம்மாவின் கண்கள் மூடிக்கொண்டன.

– மல்லிகை சஞ்சிகையிற் பிரசுரமானது – 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *