‘வட்டிக்கு கடன் வாங்கியாவது தமது குடும்பத்தினரின் தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்’ என்று பலரும் நினைக்கும் இக்காலத்தில், ‘சொத்துக்களை விற்றும் கூட ஆடம்பரமாக வாழ்ந்து விட வேண்டும்’ என நினைத்து பணத்தை தண்ணீராகச்செலவழித்தான் ராகவன்.
அவனது சுகபோக வாழ்க்கையைக்கண்டு கைமாற்றலும், கடனும் கேட்டு நட்புகளும், உறவுகளும் வந்த போது ‘இல்லையென்று சொன்னால் இழுக்கு’ என நினைத்து மறுக்காமல் இருக்கும் பணத்தை எடுத்துக்கொடுத்தான்.
வாடகைக்கு விட்டிருந்த ஒரு வீட்டை விற்ற பணம் இரண்டு கோடியும் கரைந்து விட, கைமாற்றாக தான் பணம் கொடுத்திருந்த உறவினருக்கு போன் செய்தான்.
“என்ன மாப்ளே….. அதுக்குள்ள என்ன அவசரம்…? எனக்கு கொடுத்த பணத்த வாங்கித்தான் செலவு பண்ணனுமா…? எனக்கு கொடுத்த அஞ்சு லட்சமெல்லாம் உனக்கு பெரிய தொகையா…? நீ, கேட்க மாட்டீன்னு நெனைச்சு அந்தப்பணத்த வெச்சு கொஞ்சம் பேங்ல கடன் போட்டு ஒரு மாருதி கார் வாங்கிட்டேன். என்னோட மாத சம்பளம் டியூ போக வீட்டு செலவுக்கு சரியா இருக்கு. டிரைவிங்ல இருக்கேன் வெச்சிரவா..?” என கேட்ட உறவினர் சங்கி, ராகவன் பதில் சொல்ல வாய்ப்பளிக்காமல் அலைபேசியை கட் பண்ணி விட்டார்.
தன்னுடைய பென்ஸ் காருக்கு டியூ கட்டுவதற்க்காககத்தான் கைமாற்று கொடுத்த தன் பணத்தைக்கேட்டான். அந்தப்பணத்திலேயே புது கார் வாங்கி ஓட்டுவதாக கைமாற்று வாங்கிய உறவினர் சொன்ன போது தான் தனது செயல் பாட்டின் தவறு புரிந்தது.
‘தாராளமாக செலவு செய்வது தவறில்லை, அதற்கேற்ப சம்பாதித்து செலவழிக்க வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்து, விற்று செலவழிக்கக்கூடாது. மூன்று வேளைக்கு பதிலாக ஒரு வேளை சாப்பிட்டும் கூட இருப்பிடத்தைக்காப்பாற்ற வேண்டும்’ என தந்தை உயிரோடு இருக்கும் போது சொன்ன மந்திரச்சொல்லை தான் மறந்து விட்டதை ஞாபகப்படுத்தி வருந்தினான்.
தற்போதைய சூழ்நிலையை வெல்ல குடியிருக்கும் வீட்டை வங்கியில் அடமானம் வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் தாய் பெயரிலிருந்த குடியிருக்கும் வீட்டை அடமானம் வைக்க வங்கிக்கு தாயை அழைத்துச்சென்று ‘பர்சனல் லோன் வாங்கி தனது கார் கடனை அடைக்க வேண்டும் ‘ என பொய் சொல்லி வீட்டை அடமானம் வைத்தான் ராகவன்.
வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்ற தொகையில் கார் கடனை முழுமையாக அடைத்தவன் வெளிநாடு சுற்றுலா திட்டத்தை குடும்பத்துடன் நிறைவேற்றி மகிழ்ந்தான். வீட்டில் நல்ல நிலையிலிருந்த பொருட்களை பழையதாகி விட்டதாக மனைவி கூற அனைத்தையும் மாற்றினான்.
மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போக சென்னையிலுள்ள பெரிய மருத்துவமனையில் தான் சிகிச்சியளிக்க வேண்டும் என மனைவியின் பெற்றோர் விருப்பப்படி அழைத்துச்சென்றவன் வீட்டை அடமானம் வைத்து வாங்கிய ஒரு கோடியையும் செலவழித்திருந்தான். வாங்கிய பங்குகளும் விலை குறைய நஷ்டத்துக்கு விற்றான்.
பெண்கள் இரண்டு பேரும் விரும்பிய கல்லூரியில் சேர மதிப்பெண் இல்லாததால் டொனேஷன் கொடுத்து சேர்க்க தனது பென்ஸ் காரை விற்றான். வசதியானவர்கள் படிக்கும் கல்லூரியில் சேர்ந்தால் அங்கு படிக்கும் மற்ற மாணவர்களுக்கு இணையாக ஆடையணிந்து செல்வது, காரில் செல்வது, வெளி நாடு டூர் செல்வது என வாழும் தகுதியை உயர்த்த நினைத்திருந்த பெண்களுக்கு படிப்பிற்கான பணத்தைக்கட்டவும், வீட்டுக்கடன் தவணை கட்டவும் முடியாத நிலை வந்த போது வீட்டையே விற்று விட்டான்.
குடியிருந்த ஒரு வீட்டையும் விற்ற பின்பும் ஆடம்பர பழக்கம் குடும்பத்தினரை விட்டுப்போகவில்லை.
“சம்பாதிக்க கையாலாகாத உங்களை கூட படிச்ச பாவத்துக்கு லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி கஷ்டப்படறேன். என்னோட அம்மா பேச்சை கேட்டிருக்கனம். என்னோட அழகைப்பார்த்து பெரிய தொழிலதிபரே பொண்ணு கேட்டாரு. என்ன வயசுதான் இருபத்தஞ்சு வருசம் அதிகம். அப்பா வயசம்மான்னு சொன்னேன். அதனாலென்ன? பணம் கொட்டிக்கெடக்குது. சொத்தும் பத்துத்தலைமுறைக்கு வித்து திண்ணாலும் தீராதுன்னு சொன்னாங்க. அப்ப புரியல. இப்ப புரியுது. அழகெல்லாம் அழிஞ்சு போனதுக்கப்புறம், வயசும் போனதுக்கப்புறம் இப்ப புரிஞ்சு என்ன பண்ணறது” சொல்லிக்கண்ணீர் வடித்தான் ராகவன் மனைவி சுமி.
தாயின் உடல் நிலை மிகவும் மோசமானது. ‘ஆஸ்பத்திக்கு கொண்டு போய் வைத்தியம் பார்த்தாலும் போகத்தானே போறாங்க. இங்கயே வந்து ஒடம்பு வலிக்கு ஊசி போடறவங்க இருக்காங்க. நூறோ, எறநூறோ கொடுத்தாப்போதும்’ என கூறிய மனைவியை கோபத்தில் முதலாக கன்னத்தில் அறைந்தான்.
“இருபது வருசமா நாம ஆடம்பரமா வாழ வித்த சொத்துக்களை அவங்கதான் சேமிச்சு கஷ்டப்பட்டு வாங்கி வெச்சிருந்தாங்க. உனக்கு வைத்தியம்னா அப்பல்லோவுல. அவங்களுக்கு வைத்தியம்னா அனாதைகளுக்கு வைத்தியம் பார்க்கிற இடமா?” அறை வாங்கிய மனைவி கோபமாக அவனைப்பார்க்க, அறைந்த ராகவன் கண்ணீர் வடித்தான்.
“இந்த வீட்ல இனி ஒரு நிமிசமும் இருக்க மாட்டேன். நானும், என்னோட பொண்ணுங்களும் என்னோட அம்மா வீட்ல போய் தங்கிக்கப்போறோம்” என பெண்களையும் அழைத்துக்கொண்டு, துணிமணிகளை எடுத்துக்கொண்டு வெளியேறிய மனைவியை ராகவன் தடுக்கவில்லை.
சுக போகமாக வாழும் போது மட்டும் கணவன், சிரமப்படும் போது தேவையில்லை என நினைக்கும் மனைவி தற்போது ராட்சசியாகத்தெரிந்தாள். நாம் குழந்தையாக இருந்த போது அசுத்தத்தை சுத்தம் செய்த தாயாருக்கு, அவர்களால் சுத்தம் செய்ய முடியாத அசுத்தத்தை சுத்தம் செய்வதே நம் கடமை என கருதினான். இது வரை மனைவியின் பேச்சைக்கேட்டு ஆடம்பரமாக இருப்பதை விற்று செலவழித்ததை மீண்டும் பெற எண்ணியவன் தாயின் உடல் நலம் தேறிய பின் வேலைக்கு சென்றான்.
சேமித்த பணத்தை வைத்து தொழில் ஆரம்பித்து கடுமையாக உழைத்து பெற்ற வருமானத்தில் வீடும், காரும் வாங்கினான். பலருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தான். தனது சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்து உரிய தகுதி இல்லாததால் வேலை கிடைக்காமல் போன தனது பெண்களை நினைத்து வருந்தினான். அவர்களுக்கு வேலை கொடுக்காத கம்பெனி தன் அப்பாவிற்கு சொந்தமானது என தெரிந்து விடாமல் பார்த்துக்கொண்டான். தான் வறுமையிலிருப்பதாகவே நினைத்து இது வரை தன் மனைவி தன்னுடன் போனில் கூட பேசாதது மிகுந்த வருத்தத்தைக்கொடுத்திருந்தது.
தனது வருமானத்தில் ஒரு சில கோடிகளை டெபாசிட் செய்திருந்தான். தனக்குப்பின் வாரிசு என போட வேண்டிய இடத்தில் தனது பெண்கள் இருவரது பெயரை குறிப்பிட்டிருந்தான்.
மிகுந்த சிரமத்துக்கு ஆளான சுமி வங்கியில் சுய தொழில் செய்ய கடன் வாங்க தனது பெயரில் விண்ணப்பித்திருந்தாள். இதற்கு முன் வாங்கிய கடனை சரிவர செலுத்தாததால் சிபில் சாதகமில்லை என மேளாளர் கடன் கொடுக்க மறுக்கவே கண்ணீருடன் வெளியேறினான். எங்கு சென்றாலும் காரில் சென்றவள் பேருந்து கட்டணத்துக்கே வழியின்றி நடந்து சென்றாள். பெற்றோருக்கு அரசு மருத்துவமனையிலேயே வைத்தியம் பார்த்தாள். சாதாரண வாழ்வின் நிலையை அறிந்த போது தான் முன்பு வாழ்ந்தது ராஜ வாழ்க்கை என புரிந்தது. வாழ்வில் செலவுக்கான வழி எப்போதும் திறந்திருக்கிறது. வரவுக்கான வழி சில காலம் தான். பின் அடைக்கப்பட்டு விடுகிறது. வரவு வரும் போது சிக்கனமாக இருந்து சேமித்தால் செலவு காலத்தை எளிதாகக்கடக்கலாம் என புரிந்தது.
பெண்கள் பெயரில் கடனுக்கு விண்ணப்பித்தாள். வங்கியிலிருந்து அழைப்பு வந்தது. ராஜ உபசாரமாக பார்த்து ஆச்சர்யப்பட்டாள். ‘மேடம் எவ்வளவு வேணும்னாலும் லோன் வாங்கிக்கங்க. லோன்னு சொன்னாலும் உங்க பணம் மாதிரி. கோடில டெபாசிட் இருக்குது. நீங்க லட்சங்கள்ல கடன் கேட்கறது ஆச்சர்யமா இருக்குது’ என வங்கி மேலாளர் ஆச்சர்யப்பட்டது புரியாமல் குழம்பிப்போனாள்.
“தொழிலதிபர் ராகவன் சாரோட பொண்ணுங்களுக்கு இந்த பேங்க் எவ்வளவு கடன் கேட்டாலும் கொடுக்க கடமை பட்டிருக்கு” எனும் வார்த்தையைக்கேட்டு அதிர்ந்தாள். ‘தன் கணவன் ராகவன் தொழிலதிபரா? அவருக்கு டெபாசிட் இருக்கா?’ என யோசித்தவள் தாங்கள் பிரிந்திருப்பதை காட்டிக்கொள்ளாமல் சமாளித்தாள்.
தற்போது பெண்களின் வங்கிக்கணக்கிற்கு கடன் தொகை மாறி விட்டதை அறிந்ததும் தூங்கிக்கொண்டிருந்த சுமியின் ஆடம்பர மோகம் விழித்துக்கொண்டது. வீட்டிற்கு பேருந்தில் செல்லாமல் டாக்ஸியில் தான் செல்ல வேண்டும் என டாக்ஸிக்கு கால் பண்ணி விட்டு பெண்களுடன் காத்திருந்தவளுக்கு அருகில் பென்ஸ் கார் வந்து நின்றது. நவீன காரின் ஓட்டுநர் கதவைத்தவிர மூன்று கதவுகள் தானாகத்திறந்தன. ஓட்டுனர் இருக்கையில் ராகவன் அமர்ந்திருந்தான்.