அவன் வீட்டிற்குள் நுழைந்த போது கூடத்து நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த உருவம் இவனைக் கண்டு ஒருக்கழித்து அமர்ந்ததைக் கவனித்தான்.அவன் குளித்து ஆடை உடுத்தித் திரும்பிய போது அந்த உருவம் மெதுவாக எழுந்துக்கொண்டது.
தொலைக்காட்சி அலைவரிசை மாற்றப்பட்டிருந்தது.இது தினசரி நடக்கும் நிகழ்ச்சி தான்.வழக்கம் போல் அந்த உருவத்தைக் கண்டதும் தனது உதட்டில் எழும் இகழ்ச்சிப் புன்னகையும் வெறுப்பு கலந்தப் பார்வையும் தோன்றாதது அவனுக்கு சிறு ஆச்சரியத்தைத் தந்தது.
செண்பகம் தேனீர் கொண்டு வந்து வைத்தாள்.
“உங்கப்பாவிற்கு குடிக்க ஏதும் கொடுத்தியா?”
அவனது கேள்வி செண்பகத்தை வியப்பில் ஆழ்திருக்க வேண்டும்.விழிகள் விரிய கணவனையேப் பார்த்தாள்.
“என்ன பதிலை காணும்?”
“ஆங்..கொடுத்திட்டேன்” செண்பகத்திற்கு கனவிலிருந்து மீளாத நிலை.அவன் தேனீர் குடித்து விட்டு வெளியே கிளம்பினான்.வாகனம் உயிர்ப்பெற்ற போது செண்பகம் வாயலில் வந்து நின்றாள்.அவளதுப் பார்வை அவன் போகும் இடத்தை கேட்காமல் கேட்டு நின்றது.
“எங்க கம்பெனி ‘கார்ட்டு’ ஒருத்தர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்.போய் பார்த்துட்டு வந்திடுறேன்”
அவள் சரியெனத் தலையசைக்க அவனது வாகனம் நகர்ந்தது.அவனுக்குத் தெரியும் செண்பகம் வீட்டு வாயலிலேயே நின்றுக்கொண்டு வியப்போடு தன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பள்.தொழிற்சாலையில் நிர்வாகத் துறையில் பெரிய பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் தன் கணவன் எதற்கு அதே தொழிற்சாலையில் அடி மட்டத்தில் பணிப்புரியும் ஒரு பாதுகாவலரின் நலம் அறியும் பொருட்டு இவ்வாறு வந்ததும் வராதுமாக கிளம்புகிறான் என வியந்திருப்பாள்.
அவன் குடியிருப்பைக் கடந்து நெடுஞ்சாலையை அடைந்ததும் வேகமெடுத்தான்.அவன் காணச்சென்றுக் கொண்டிருக்கும் சுப்பிரமணியுடன் அவனுக்கு அப்படி ஒன்றும் நெருங்கிய பழக்கம் ஏதுமில்லை.ஓரிரு முறை அவருடன் பேசும் சூழல் எதார்த்தமாக அமைந்திருந்தது.சாதாரணமான தொழிற்சாலை பாதுகாவலரான சுப்பிரமணி சென்ற வாரம் தொழிற்சாலை முழுவதும் பேசப்படும் அளவிற்கு கதாநாயகன் நிலைக்கு உயர்த்தப்பட்டது எதிர்பாராத ஒன்று தான்.
தொழிற்சாலையின் இரவு நேர பாதுகாவலாரான சுப்பிரமணி பணியில் இருந்தப்போது இரு திருடர்கள் திருட வந்திருந்திருக்கிறார்கள். தொழிற்சாலையின் இரும்பு பொருட்களைத் திருடுகையில் சுப்பிரமணியின் கண்ணில் பட்டுவிட்டார்கள்.
இருவரும் சுப்பிரமணித்திடம் செம்மையாக அடிவாங்கிக்கொண்டு ஓட்டம் பிடித்ததை இரவு பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிற்சாலை ஊழியர்கள் கண்டிருக்கிறார்கள்.மறுநாள் தொழிற்சாலையே பரபரப்பானது.சுப்பிரமணி உடனடியாக அனைவரது கவனத்தைக் கவர்ந்தவரானார்.நம்மினத்தை சேர்ந்தவர் என்பதால் அவனுக்கு பெருமையாக தான் இருந்தது.
சுப்பிரமணிக்கு வயது அறுபத்தியிரண்டு.சிவந்த நிறம்.நெடு நெடுவென்று உயரமான உருவம்.நரைத்த முடியை படிய சீவியிருப்பார்.
முகத்தில்அடர்ந்த புருவமும் இமைகளும் கூட நரைத்திருருந்தன. உதட்டிற்கு மேல் மீசை வைக்காமல் சுத்தமாக மழித்திருப்பார். இருந்தபோதிலும் அவரின் முகம் தனியொரு களையானத் தோற்றத்தையேக் கொண்டிருந்தது.
யாருடன் அதிகமாகப் பேசாதவர்.தான் உண்டு தனது வேலையுண்டு என்று தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்.அப்படிப்பட்டவரான சுப்பிரமணிக்கு சம்பவம் நடந்த மறுவாரத்திலேயே இவ்வாறு நேர்ந்திருப்பது தொழிற்சாலையே கலங்கடித்திருந்தது.
அவனது வாகனம் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தது.தனது வாகனத்தை வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவை நோக்கி விரைந்தான். நெருங்கியதும் அதன் வாயிலில் நின்றிருந்த பாதுகாவலரிடம் அவரது பெயரைச் சொல்லி விசாரித்தான்.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாக பாதுகாவலர் சொன்னான்.நன்றி சொல்லி நடந்தவன் ஒரு கணம் திரும்பி அந்த பாதுகாவலரைப் பார்த்தான்.அவன் நடுத்திர வயதுடையவாகத் தெரிந்தான்.அவனது சீருடை ஏறக்குறைய சுப்பிரமணியின் சீருடையைப் போன்றே இருந்தது.இதுப்போன்ற சீருடையணிந்தவர்களை அவன் நிறையக் கண்டிருக்கின்றான்.வங்கியில்..,பள்ளிக்கூடத்தில்,அரசாங்க அலுவலங்களில்…என அவனது தினசரி வாழ்க்கையில்…!.அப்போதெல்லாம் அவனுக்கு அவர்கள் மீது எந்த பிரஞ்ஞையும் ஏற்பட்டதில்லை.
ஆனால்…..சுப்பிரமணிக்கு நேர்ந்த நிலை பாதுகாவலர் பணியை கூர்ந்துப் பார்க்க வைத்தது.இதுவரையில் தன்னருகிலேயே உழன்றுக்கொண்டிருந்த ஓர் உலகத்தைப் பற்றி தனக்கு எவ்விதமான சிந்தனையும் இல்லாதிருந்திருக்கின்றதே என்பதில் அவனுக்கு நாணம் ஏற்பட்டிருந்தது.
மலேசியாவில் இதுப்போன்ற தொழிலைச் செய்கின்றவர்கள் பெரும்பாலோர் வாழ்க்கையில் அடிப்பட்டவர்களும் வேலைப் வாய்ப்பில்லாமல் திணறுகின்ற மத்தியவதினரும் முதுமைக் காலத்தில் பிறர் தயவை நாடாமல் தமது உழைப்பை மாத்திரம் நம்பி வாழ்க்கூடிவர்களாகவும் இருந்து வருகின்றனர்.இதில் சுப்பிரமணி முன்றாவது வகையைச் சேர்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என எண்ணினான்
தீவிரச் சிகிச்சைப் பிரிவை அடைந்தப்போது அங்கு எற்கனவே அவனது தொழிச்சாலை பணியாளர்கள் பலர் இருந்தனர்.இவனைக் கண்டதும் மரியாதையாக ஒதுங்கி நின்று தலையசைத்தனர்.
“உள்ளேப் போய் பார்த்துட்டு வந்துடுங்க,ஏழரை மணியோட யாரையும் உள்ளே விட மாட்டாங்க” நின்றிருந்தவர்களில் ஒருவர் சொன்னார்.
“இப்போ சுப்பிரமணி எப்படியிருக்கிறார்..?”
“பிழைக்கிறதுக்கு வாய்ப்பு குறைவுதானு சொல்லறாங்கு.கத்தி ரொம்ப ஆழமா வயிற்றில் இறங்கியிருக்காம்”
அவனுக்கு மனம் திக்கென்றது.அருகில் நின்றிருந்த மலாய்க்கார பணியாளர் அவனை அழைத்து,.
“வாங்க போய்ப் பார்த்துவிட்டு வந்துடுவோம்” என்றார் மலாய் மொழியில்.அவன் அவருடன் சேர்ந்து உள்ளேப்போனான்
“.அப்படியே இவருக்கு ஏதும் ஆகிவிட்டால் நம்ம நிர்வாகம் அவரோட மனைவிக்கு ஏதும் உதவி செய்யும் தானே?”
“இம்ம்”
சுப்பிரமணியின் நிலை அவனது குரலை கம்ம வைத்தது.அந்த ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு எதுவும் பேச இயலாதுப்போனது.தீவிரச் சிகிச்சைக்குரிய மருத்துவ சாதனங்களுடன் சுப்பரமணியைப் பார்த்தப்போது மனம் கலங்கியது.ஒரிரு நிமிடங்களுக்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவன் வெளியே வந்தான்.
வெளியில் கூடியிருந்த சிறு கூட்டம் இன்னும் கலையாதிருந்தது.அவன் அவர்களைக் கூர்ந்துப் பார்த்தான்.இனம் மதம் வேறுபாடில்லாமல் ஒரே தொழிற்சாலையில் வேலை பார்க்கினறவர் என்ற மனிதநேயத்துடன் வந்திருந்தவர்கள்.
“சுப்பிரமணி ஐயாவுக்கு ரெண்டுப் பசங்க.ரெண்டுமே கல்யாணம் ஆகி எங்கோ தூரத்துல இருகிறாங்களாம்.அக்கரையா என்ன ஏதுனு கூட வந்துப் பார்க்காமாட்டார்களாம்.”
“என்ன பண்ணறது, இப்போ உள்ள பிள்ளைங்க பெரும்பாலும் இப்படிதானே இருக்குதுங்க”
“ஆமாம் இல்லனா இந்த வயசான காலத்துல ஐயா எதுக்கு ராத்திரி சிரம்மப்பட்டு கண்ணு முழுச்சி வேலைப்பார்த்து இப்படி திருட வந்தவனுக்கிட்ட கத்திக் குத்து வாங்கி சாவக்கிடக்கணும்”
அவர்கள் பேசிக்கொண்டுப் போனார்கள்.இரவு பணியில் இருந்த சுப்பிரமணி அசந்திருந்த நேரத்தில் வந்த யாரோ சிலர் அவரின் பின்னாலிருந்து துணியால் முகத்தை இறுக்கி கத்தியால் வயிற்றில் குத்தியதை குறித்து ஆவேசப்பட்டார்கள்.அவர்கள் திருடுவதற்காக வரவில்லை என்றும் அப்படி எந்தப் பொருளும் அங்கு கலவுப்போகவில்லை என்றும் வாதிட்டார்கள்.போன வாரத்தில் கலவாட வந்து சுப்பிரமணியிடம் அடிப்பட்டுப் போனவர்களின் பலி வாங்கிய செயல் அது என குமுறினார்கள்.
நேரமாகியது அனைவரும் புறப்பட தயாரானப்போது அவனும் வீட்டிற்கு கிளம்பினான்.
அவன் வீட்டிற்குள் நுழைந்த போது மீண்டும் அந்த உருவம் அதே இடத்தில்…!இவனைக் கண்டதும் அதே எழுந்தலும் அதன் பின் நகர்ந்தலும் நடந்தன.அவன் சோர்வுடன் கூடத்தில் அமர்ந்தான்.அவனது மூத்த மகனும் மகளும் அறைக்குள் படித்துக் கொண்டிருந்தனர்.கடைக்குட்டி எதையே வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
“என்ன செய்துக்கொண்டிருக்க?” மகனிடம் கேட்டான்.
“விளையாடுறேன்,தொந்தரவு செய்யாதீங்கப்பா” தனது தந்தையை நிமிர்ந்தே பார்க்காமல் விளையாட்டில் மும்முரமாகயிருந்தான் செல்வம்.அதைக்கண்டு செண்பகம் சிரித்தாள்.
“டேய் செல்வம்,பிறகு விளையாடலாம்.வா அப்பா கூட சேர்ந்து சாப்பிடலாம்”
“எனக்கு இப்ப வேண்டாம்.நான் அப்புறம் தாத்தா கூட சாப்பிடுறேன்”
“சரி நீங்க வாங்க சாப்பிட”செண்பகம் அவனை இரவு உணவிற்கு அழைத்தாள்.அவன் உணவு உண்ண எழுந்துச் சென்றான்.உண்ணும் போது அவனது கவனம் உணவில் இல்லை.கூடத்தில் அமர்ந்திருந்த மகன் மீதே இருந்தது.
“தாத்தா இங்க வாங்க, இதை கொஞ்சம் பூட்டிக் கொடுங்க”
“தாத்தா அப்புறமா நா சாப்பிடும் போது எனக்கு கதை சொல்லணும்”
“இது நல்லாயிருக்கா தாத்தா?”
செல்வம் வாய் ஓயாது எதையோ பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தான்.செல்வத்திற்கு ஐந்து வயது என்றாலும் மிகச்சுட்டியாக இருந்தான்.அவனது கேள்விகளுக்கும் ஏவல்களுக்கும் அந்த உருவம் பதில் சொல்லிக்கொண்டும் செல்வம் சொல்வதை செய்துக்கொண்டும் இருந்தது.
அவனுக்கு வியப்பாக இருந்தது.தனக்கு அந்த உருவம் சுமையாக முகம் சுளிக்க வைத்தாலும் தனது மகனுக்கு அதே உருவம் மிகத் தேவையாக இருந்ததை அவனால் உணர முடிந்தது.இப்படி தானே மூத்த மகனும் இளைய மகளும் ஆரம்பத்தில் ‘தாத்தா தாத்தா’ என்று இருந்தார்கள்?வளர்ந்து விட்ட நிலையிலும் தாத்தாவின் தள்ளாமை காரணமாக அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.
அவனது ஆரம்ப வாழ்க்கையில் பொருளாதாரம் வளமாக அமையாத்தால் செண்பகம் வேலைக்குச் செல்லும் நிலை.செண்பகம் வீட்டிற்கு ஒரே பெண்.சிறுவயதில் தாயை இழந்திலிலிருந்து அவளது உறவு அவளது தந்தை மட்டும் என்பதால் திருமணத்திற்கு பின் அவரை தன்னுடனே வைத்துக் கொண்டாள்.
வேலைக்கு சென்ற செண்பகத்திற்கு வீட்டைப் பார்த்துக்கொள்ளவும் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரவும் அவளது தந்தை மிக உறுதுணையாக இருந்ததை மறுக்க முடியாது.அதுவெல்லாம் ஒரு காலம்.கால வேகத்தில் அவனுக்கு பதவி உயர்வு அமைந்து கை நிறைய பணமும் வந்தது.செண்பகத்தையும் வேலை விட்டு நிறுத்தி விட்டான்.
வீட்டில் அவன் வைத்தது சட்டமாகிப்போனது.அவனுக்கு செண்பகத்தின் தந்தை என்ற பெயரில் வீட்டில் நடமாடிக்கொண்டிருந்த அந்த ‘உருவத்தின்’ மீது ஏனோ வெறுப்புத் தோன்றியது.அந்த உருவத்தின் தள்ளாமையும் தள்ளாமைக் காரணமாக கேட்கும் சக்தி குறைந்து “என்னது?” எனத் திரும்பத் திரும்ப கேட்கும் கேள்விகளும் சதா இரும்புகின்ற சத்தமும் சலிப்பைத் தந்தன.உள்ளுக்குள் குரோதத்தை வளர்த்தது.
“ நான் டீவி பார்க்கும் போது அங்க எதற்கு உங்கப்பா வந்து உட்காரணும்?சும்மா உட்கார்ந்தால் பரவாயில்லை,செனலை மாத்து செய்திக் கேட்கணும் என்கிறாரே இந்த வயசில செய்திக் கேட்டு என்ன செய்யப் போகிறாராம்?”
“சதா இரும்மல் சத்தம் சகிக்கலை.முடிஞ்ச வரைக்கும் என் முன்னால அவரை வரவேண்டாம்னு சொல்லு?”
அவன் கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.அதிலிருந்து அந்த உருவம் அவனைத் தவிர்த்தே அவ்வீட்டில் வளைய வந்துக்கொண்டிருக்கிறது.திடிரென்று இதுவரையில் தான் நடந்துகொண்ட விதம் தவறு என்று அவனுக்குத் தோன்றியது.முதுமை முகம் சுளிக்க கூடிய ஒன்றா?தள்ளாமை வெறுக்க தக்கக் கூடியதா?
நீண்ட ஆயுளில் கிடைக்கும் வரம் முதுமை என்பதை உணர்ந்தான்.இந்த முதுமையிலும் ஆதரவு அற்ற நிலையில் இரவெல்லாம் கண்விழித்து உருக்குழைந்துக் கிடக்கும் சுப்பிரமணியை நினைத்து கசிந்துருகினான். ‘ இறைவா சுப்பிரமணியை காப்பாற்று ’மனம் பிராத்தனை செய்தது.
“என்னங்க அதுக்குள்ள எழுந்திரிச்சிட்டீங்க?சாப்பிட்டது போதுமா?” செண்பகம் பதற்றமாகக் கேட்டாள்.
“போதும்,உங்கப்பாவை சாப்பிடச் சொல்லு” என்றவாரே எழுந்தபோது அவனது பார்வை கூடத்தில் விழுந்தது.கூடத்தில் தனது மகனுடன் தரையில் அமர்ந்துக்கொண்டு பேரன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டிருக்கும் அவரை கூர்ந்துக் கவனித்தான்.இப்போது அவர் அவனுக்கு உருவமாக தெரியவில்லை.முதுமையை வரமாக ஏந்தியிருக்கும் உன்னத உறவாகவும் தெரிந்தார்..
– 16 ஏப்ரல், 2012