வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 10,389 
 
 

வயிராத்தா வந்து விட்டாள் என்பதை சமையலறையிலிருந்து கசிந்த மீன் குழம்பின் வாசனையே உணர்த்தி விட்டது. உலகத்தில் உள்ள அத்தனை சமையல்காரர்களையும் நிறுத்தி மீன் குழம்பு வைக்கச் சொன்னாலும், வயிராத்தா குழம்புக்கு ஈடாக, ஒரு ஓரம்கூட வர மாட்டார்கள்.

மீன் குழம்பு என்றில்லை… அவள் ஒரு குப்பைக் கீரையை வதக்கி வைத்தாலும் வாசனையும் ருசியும் ஆளைத்தூக்கும் என்று எங்கள் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் அத்தனை பேரும் சத்தியம் செய்வோம். வயிராத்தா கைப்பக்குவத்துக்காகவே லீவுக்கு வீடு செல்லாமல் விடுதியில் தங்கிவிடும் பெண்களும் உண்டு.

விடுதியில் யாருக்காவது ஜுரம் கண்டுவிட்டால், வயிராத்தாவின் மிளகு ரசமும் இஞ்சித் துவையலும் மணப்பதிலேயே…ஜுரம் பாதி சரியாகிவிடும் எங்களுக்கு. அவருடைய சமையல், வயிற்றுக்கு விருந்து மட்டுமல்ல… மனதுக்கு மருந்தும்கூட!

இந்தப் பெரிய நகரத்தில் எனக்கு வேலை கிடைத்த புதிதில் தங்குவதற்கு ஏதுவாக இடம் தேடியபோது, இந்த தனியார் விடுதியைச் சொன்னவர்கள், வயிராத்தாவையும் சேர்த்தேதான் சொன்னார்கள்…

“சாப்பாட்டுக் கவலை வேண்டாம். அங்க வயிராத்தானு ஒரு பொம்பள… அத்தினி ருசியா சமைக்கும். பத்துப் பதினைஞ்சு வருஷமா விடுதியிலேயேதான் தங்கிக்கிடக்கு.”

இயல்பிலேயே ருசி தேடும் என் நாக்கு, வந்த சில நாட்களிலேயே வயிராத்தா சமையலில் மயங்கிப் போனது. சமையல் பிடித்துவிட்டால் சமைப்பவர்-களையும் பிடித்து விடும் என்பது மரபுதானே?! வயிராத்தா மேல் எனக்கு தனி ப்ரியம் விழுந்தது. மாநிறமாக வெடவெடவென்று இருப்-பார். வயது ஐம்பதுக்கு மேல் இருக்-கும். மெலிந்த அந்தக் கைகளில்தான் எத்தனை சுவை நரம்புகளோ… அப்படி ஒரு பக்குவம்!

ஒரு வாரமாக ஊருக்குப் போயிருந்த வயிராத்தா-வின் வரவைச் சொன்ன மீன் குழம்பு வாசனையை மோப்-பம் பிடித்தவாறே சமையலறைக்-குச் சென்றேன். “என்னம்மா மாதவி… ஏதாச்சும் காபி வேணுமா?” – பரிவோடு கேட்ட வயிராத்தா ஒரு வாரத்-தில் இளைத்திருந்தார்.

“இல்லை… உங்கள ஒரு வாரமா காணோமேனு-தான் பார்க்க வந்தேன். ஏன் டல்லாயிருக்கீங்க..? உடம்பு முடியலனா சொல்லுங்க டாக்டர்-கிட்ட கூட்டிப் போறேன்!” என்றேன். வயிராத்தா நெகிழ்ந்ததை அவரின் ஈரக் கண்கள் உணர்த்தின. சூழலை இளக்கும் விதமாக, “சரி வயிராத்தா… அடுத்த வாரம் என் பர்த்டே வருது. எனக்காக என்ன ஸ்பெஷல் சமையல் செய்யப் போறீங்க?!” என்றேன். உண்மையான சந்தோஷம் அவர் கண்களில் மின்ன, “பச்சை மசால் குழம்பு வைக்கட்டுமா..?” என்றார்.

“ஹய்யோ… இப்பவே எச்சில் ஊறுது. எங்களுக்கே இப்பிடி விதவிதமா சமைக்கறீங்களே… அப்போ உங்க புருஷன், பிள்ளைங்கயெல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க…” – நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். சட்டென்று வயிராத்தா முகம் வாடியது. இத்தனை நாளாக அவருடைய குடும்பம் பற்றி நாங்கள் எதுவும் அறியாததால், சற்று அதிகம் பேசி விட்டோமோ என்றுகூட வருந்தினேன்.

“எனக்கு குடும்பம்னு ஒண்ணு இருந்தாத்தானே..?! நாந்தான் தனிமரமாப் போயிட்டேனே…” – கண்கள் கலங்கின அவருக்கு.

“புருஷன் இருக்கு. என் வயித்துல புழு, பூச்சி இல்லைனாலும் எம்மேல பிரியமாத்தான் இருந்திச்சு. அப்புறம் எங்கூட சண்ட போட்டுட்டு, விரட்டிடுச்சு. இந்த பத்து வருஷமா இந்த ஆஸ்டலயேதான் கிடக்கறேன்…”

“ஏன் சண்டை வயிராத்தா…?”

விரக்தியோடு சிரித்தவர், “என் சமையல் பிடிக்கல, கொழம்பு, பொரியல் சகிக்கலனுதான் நிதம் சண்டை!”

அதிர்ந்து, “உங்க சமையலையா..?” என்றேன் நம்ப-முடியாமல்.

“ஆமாம்மா! நல்ல நாக்குக்கு ருசி தெரியும். குடிச்சுக் குடிச்சு வெந்து போன நாக்குக்கு உப்பு, புளி உறைக்குமா? பெருங்குடிகாரனாப் போயிடுச்சு. குடிச்சுட்டு வந்து எனக்கு அடி உதைதான் நிதமும். கூடவே கெட்ட பொம்பளக சகவாசமும் அதுக்கு சேர்ந்துக்க, என்னை துரத்திடுச்சு…”

நான் வயிராத்தாவை பாவமாகப் பார்த்துக் கொண்டிருக்க, தொடர்ந்தார்.

“போன வாரம் ஊருலேருந்து தந்தி வந்துச்சு. போயிப் பார்த்தேன். அது எலும்பும் தோலுமா உருக்குலைஞ்சு கிடந்துச்சு. கஞ்சி ஊத்த நாதியில்ல. காசு உள்ளவரைக்-கும்- கூட இருந்தவளுக, வெத்து ஆளுனு தெரிஞ்சு ஓடிட்டாளுக. குடிச்சுக் குடிச்சு குடல் அழுகிப் போயி-ருக்கு. படுக்கையிலயே ஒண்ணுக்கு, ரெண்டுக்குப் போயிகிட்டு… பார்க்கவே கண்றாவியா இருந்துச்சு. நான் சேர்த்து வெச்சுருந்த காசையெல்லாம் கொடுத்துட்டு வந்துட்டேன். கூட ஒரு பெரியம்மாக் கிழவி தண்ணி சுட வெச்சுக்குடுக்குது. என்னமோ பண்ணுனு வந்துட்டேன்…”

வயிராத்தாவின் வலி புரிந்தது.

“என்னைய, அது பண்ணுன கொடுமைக்கு, அது செத்துடுச்சுனு சேதி வந்தாக்கூட இனி போகக் கூடாதும்மா. என் கடமைக்கு காசு கொடுத்துட்டேன். அது போதும்!” என்றவரை நான் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்க, “ஏஞ்சோகத்த சொல்லி உன்னையும் சங்கடப்படுத்திட்டேன் இல்லியாம்மா..?!” என்றவாறே எழுந்து மோர் கலக்கச் சென்றார். நான் அவருக்காக வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்..?!

மறுநாள் ஊருக்குச் சென்றிருந்த நான், இரண்டு நாள் கழித்து வந்து, டைனிங் ஹாலில் சட்னியை தொட்டு வாயில் வைத்தபோதே தெரிந்து விட்டது.

“ஏன் இன்னிக்கு வயிராத்தா சட்னி செய்யலியா?” – என்றேன் பரிமாற வந்த சமையல்காரம்மாவிடம்.

“அது வேலையை விட்டு நின்னுருச்சும்மா…”

“எப்போ… ஏன்?” – படபடத்தேன்.

“நேத்துதான். வயிராத்தா புருஷனுக்கு கொஞ்சம் உடம்பு தேவலையாம். இனிமே நல்ல சாப்பாடு இருந்தா சரியாகிடுமாம். அதான் வயிராத்தா வேலையை விட்டுட்டு புருஷன் கூடவே இருந்து சமைச்சுப் போட கிளம்பிடுச்சு. எதோ பச்சை மசால் குழம்பாம்… அதோட செய்முறையை இதுல எழுதியிருக்காம்… உங்ககிட்டே கொடுக்க சொன்னிச்சு…” – சமையல்காரம்மா ஒரு பேப்பரைக் கொடுத்தார்.

மஞ்சளும் எண்ணெயும் பூசிய பேப்பரில் குழந்தைக் கையெழுத்தில் ‘பச்சை மசால் குழம்பு’ எழுத்துக்களாகப் பரவியிருந்தன.

‘இல்லை. இந்த செய்முறை எனக்கு வேண்டாம். அது வயிராத்தாவோடு போகட்டும்.’

பேப்பரைக் கிழித்துப் போட்டேன்!

– ஏப்ரல் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *