தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 11,503 
 

“”என்னங்க.. சீக்கிரம் இங்க வாங்க.. அவன் வந்துட்டான்”.

அரக்க பரக்க என்னை அழைத்தது, என் தர்ம பத்தினி காமாட்சி.

இரண்டு மூன்று நாட்களாகவே என் வீட்டில், இந்த அவன் கண்ணாமூச்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.

“”அதோ.. அவன் தான்.. அங்கே போறான் பாருங்க..”

வயசு 16இப்படி என்னன்னவோ தலைப்புகளில் அவன் கதைதான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான்தான் இன்னமும் அவனை சரியாகப் பார்க்கவில்லை.

நாங்கள் இந்த வீட்டுக்குக் குடி வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது இவ்வளவு நாள் இல்லாமல், திடீரென, இப்பொழுது என் மனைவி காமாட்சிக்கு, காலையாகி விட்டால் இதுதான் வேலையாகவே இருக்கிறது.

மின்சாரம், தண்ணீர் லாரி வந்து போவது கூடத் தெரியாது. ஆனால் அவன் வந்து போவது மட்டும் சரியாக தெரியும்.

“”காலையில, சரியா நம்ம பொண்ணு கிளம்புறப்ப சைக்கிள்ல வர்றான்.. ரோட்டோரமா சைக்கிளை மெல்ல ஓட்டிக்கிட்டே மேலே மாடியை பார்த்துக்கிட்டே போறான். பெரிய மரமெல்லாம் அடர்த்தியா இருக்கே. அதுக்குள்ள அப்படி என்ன தான் தெரியுமோ?”

கண்கள் விரிய, ஒரு புது அனுபவத்தை விவரிப்பது போல சொல்லுவாள்.

“”அப்படியெல்லாம் இருக்காது காமாட்சி வீணா கற்பனை செஞ்சுக்காத, நான் ஏதாவது ஒப்புக்கு சொல்லி வைப்பேன்”

அவ்வளவு தான்.. என்னை பிடி பிடி என பிடித்துக்கொள்வாள்.

“”உங்களுக்கு தான் ஒரு மண்ணும் தெரியலை நீங்களும் எப்படித்தான் அந்த வயசை கடந்து வந்தீங்களோ, உங்களுக்குன்னு ஒரு பொண்ணைக் கூடவா பார்க்காம இருந்திருப்பீங்க..”

நான் அந்தப் பையன் விஷயத்துக்கு சரியான முக்கியத்துவம் தராததால் சமயம் கிடைக்கும் போது இப்படியும் எனக்கு அர்ச்சனை விழும் அதுவும் எப்படி.. எனது உணர்வுகளைத் தூண்டி எந்த அளவுக்கு என்னை வெறுப்பேத்த முடியுமோ அந்த அளவுக்கு… கல்யாணமாகி, இத்தனை வருசங்களாக, நானும் அவளின் வார்த்தைகளுக்கு உட்பட்டு உணர்ச்சிவசப்பட்டவன்தான் ஆனால், எனக்கு காலம் கற்றுத் தந்த பாடங்களில் மிகவும் முக்கியமானது இந்த நிதானம்.

நானும் ஒரு நாள் அந்தப் பையனை பார்த்து விட்டேன்.

அவனைப் பார்த்ததில் இருந்து, எனக்குள் அப்படி எதுவும் தோன்றவில்லை. ஆனால், காமாட்சி வார்த்தைகளால் என்னை நகட்ட, நகட்ட எனக்கும் ஒரு சமயத்தில் சந்தேகம் வரத்தான் செய்தது. ஆனாலும் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.

“”காமு நம்ம பொண்ணோ சின்ன பொண்ணு. அந்தப் பையனும் ஸ்கூலுக்கு போற பையன் மாதிரிதான் இருக்கிறான் இந்த வயசுல அப்படி எல்லாம் நடக்காது”

“”அடக்கடவுளே.. இந்த கருமத்தை எங்கே போய் சொல்ல.. இப்படி ஒரு அசமந்தமா இருக்கீங்களே இதுதாங்க வயசு.. அந்தப் பையனுக்கு அரும்பு மீசை கூட இருக்கு பார்த்தீங்களா?” காதில் கிசுகிசுத்தாள்.

“”அடிப்பாவி.. உன் மகளை விட நீ தான் அவனை அதிகம் பார்த்திருப்ப போல” மனதுக்குள் நொந்து கொண்டேன்.

“”இதோ பார். நாம இந்த வீட்டுக்கு வந்தே மூணு மாசம் தான் ஆகுது. நம்ம வீட்டுல யார் யார் இருக்காங்கன்னு இந்த தெருவுக்கே கூட இன்னும் முழுசா தெரியாது. அந்த பையனுக்கு எப்படி தெரியும்?”

“”இதெல்லாம் வீடு பார்த்தா வருவாங்க. எங்கேயாவது பார்க்க வேண்டியது. அப்படியே பாலோ பண்ணிக்கிட்டு வந்து, சைட் அடிக்க வேண்டியது”

மூச்சு வாங்கியது அவளுக்கு.

“”சினிமாவுக்கு கதை எழுத போகலாம் நீ” வாய்க்குள் முணங்கியபடி ஆபீஸýக்குக் கிளம்பினேன்.

“”சரிங்க.. இன்னைக்கு ஒரு நாள் இங்க நின்னு பாருங்க. அப்புறம் நீங்களே முடிவெடுங்க”

சேலையைத் தூக்கிச் சொருகி, கொண்டையை இழுத்து முடிச்சு போடாத குறைதான் இரண்டில் ஒன்று பார்த்து விடுவது போல குறுக்கே நின்றாள்.

“” அப்ப.. ஆபீஸýக்கு..” அப்பாவியாகக் கேட்டேன்.

“”அது ஒரு நாள் லேட்டா போனா தலை போயிறாது. ஆனா, இது அப்படி இல்லை மானமே போயிரும்” வார்த்தைகளிலேயே குதித்தாள்.

“”சரி சரி சும்மா தொணதொணக்காத நின்னு பார்க்கிறேன்”. பணிந்தேன்.

ஆனாலும் காதுக்குள் மேனேஜரின் குரல், “”வாட் மேன்.. ஒய் ஆர் யூ லேட்? ஏன் லேட்டாச்சு” என்று மேஜர் சுந்தராஜன் குரல் போல ஒலித்துச் சென்றது.

அடுப்படியின் வாட்டமான மூலை தெற்குப் பார்த்த வாசல் என்பதால், தெருவைப் பார்த்த படியே இருந்தது அடுப்படி ஜன்னல் அது தான் இவ்வளவு ஒற்றாடலுக்கும் காரணம்.

“”என்னங்க.. என்னங்க.. அங்கே பாருங்க”

ஏதோ கழுகைக் கண்ட தாய்க்கோழி போல தவித்தாள். மெல்ல ஜன்னல் பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன் சைக்கிளில் வந்தான் அந்தப் பையன்.

பையன் என்பதில் சந்தேகமே இல்லை அதிகம் போனால், ப்ளஸ்-1 அல்லது ப்ளஸ்-2 படிக்கலாம். முகத்தில் காதலுக்கான எந்த அறிகுறியையும் காணவில்லை.

“”பாருங்க பாருங்க சைக்கிளை மெதுவா ஓட்டிக்கிட்டே.. அப்படியே மாடியைப் பார்ப்பான்”

ரன்னிங் கமாண்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தாள் என் ஏகபத்தினி பல நாள் நோட்டம் போல.. எங்கே வேகத்தை குறைப்பான், எங்கே திரும்புவான் என்பது முதல் அனைத்தும் தெரிந்து வைத்திருந்தாள்.

அவனும், என் மனைவியின் வார்த்தைக்குக் கொஞ்சமும் மாறாமல், ஸ்லோ சைக்கிள் ரேஸில் ஓட்டுபவன் போல, சைக்கிளை டக் அடித்த படி, மெல்ல திரும்பி மேலே பார்த்தான்.

அவன் முகத்தில் இப்போது ஒரு மலர்ச்சி. இதுவரை என் மனைவியே பார்த்திராத ஒரு புன்னகை. தெளிவு. எதையோ சாதித்து விட்டது போல ஒரு வெற்றிப்புன்னகை.

நீண்ட நேரம் அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தான் பின் வலது கை முஷ்டியை மடக்கி “எஸ்..’ என உற்சாகமாக சொல்லிக் கொண்டான்.

“”ஐயோ.. மானம் போகுது யாராவது பார்க்குறதுக்கு முன்னால, நீங்க போங்க.. போய் அவன் சட்டையை பிடிச்சு என்னன்னு கேளுங்க”

வார்த்தையில் நெருப்பை வைத்து, பார்வையால் என்னை கருக்கிக் கொண்டிருந்தாள் காமாட்சி. ஆனால் என் மனதில் வேறு ஒன்று ஓடியது..

அவன் ஏன் அவ்வாறு செய்தான்?

எனக்கு ஒண்ணும் புரியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. ஒருவேளை அப்படியும் இருக்குமோ, ஒருவேளை அப்படி இருந்து விட்டால்.. நினைக்கவே நெஞ்சு “பக்’கென்றது.

காமாட்சி பக்கம் திரும்பி குரல் தாழ்த்தி சொன்னேன்.

“”சும்மா இரு காமு அவன் நின்னு சிரிக்கிறான்னா.. நம்ம பொண்ணும் பார்க்கிறாளோ என்னவோ.. நம்ம பாட்டுக்கு போய் வம்பிழுத்தா, நாளைக்கு நமக்கு தான் அசிங்கம்”

நான் யோசிக்காமலேயே, தானாகவே, எனக்குள் இருந்து வந்தன வார்த்தைகள் நெஞ்சை பிடித்துக் கொண்டாள் காமாட்சி.

“”என்..னங்க சொல்றீங்க.. நம்ம பொண்ணு சின்ன பொண்ணுன்னு. நீங்க தானே சொன்னீங்க? பத்து தாங்க படிக்குறா… அவ போய் எப்படி?”

இப்படி ஓர் எதிர் தாக்குதலுக்கு அவள் தயாராக இல்லாததால் திணறித்தான் போனாள்.

“” நீ தானே.. சொன்ன இது தாங்க வயசுன்னு.. நம்ம பொண்ணுக்கும் பதினாறு வயசாகுது”

“”என்னங்க சொல்றீங்க? எதை வைச்சுங்க நம்ம பொண்ணும் பார்க்கும்னு சொல்றீங்க?”

“”இதோ பார் 15 வயசு பொண்ணு அழகால மயங்குவாள். 25 வயசு பொண்ணு அறிவுக்கு மயங்குவாள். 35 வயசு பெண் பணத்துக்கு மயங்குவாள். 45 வயசு பெண் அன்புக்கு மயங்குவாள். 55 வயசு பெண் பக்திக்கு மயங்குவாள்”. நிறுத்தினேன்

“”அப்ப.. 65 வயசு பெண்..?” சும்மா இருக்காமல், எடுத்துக் கொடுத்தாள்.

“”65 வயசு பெண் மயங்குனா என்ன? மயங்காட்டி என்ன?”

சிரித்தேன். முறைத்தாள். இப்போது, அவளுக்கு என் மேல் சந்தேகம் வந்துவிட்டது என, அவள் பார்வையிலேயே தெரிந்தது.

“”என்னங்க. பெண்களைப் பற்றி இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க? பார்த்தா சாதுவாட்டம் இருந்துட்டு, உள்ளுக்குள்ளாற இப்படி வேற எண்ணமா?” கண் கலங்க ஆரம்பித்தது.

“”சே.. சே.. எங்கோ புத்தகத்துல படிச்சது. அது கிடக்கட்டும். விடு, இப்ப நம்ம பொண்ணு பிரச்சனைக்கு வா”

மெல்ல அவளை, தொடங்கிய பிரச்சனைக்குள் அழைத்து வந்தேன்.

“”அந்தப் பையன் போயிட்டான். நாளைக்கு வந்தா கேக்கலாம் நீ போய் அவளை ஸ்கூலுக்கு அனுப்புற வேலையைப் பார்”

“”எப்படியும் சாயந்தரம் வருவான்ல நிறுத்தி கேக்கலாம்”

“”நான் வர லேட்டாகும். நீயா எதுவும் செய்யாதே. பிரச்னை ஆயிடும். காலையில பார்த்துக்கலாம். அவளுக்கு எதுவும் தெரிய வேணாம்”

வேக வேகமாக கிளம்பி ஆபீஸýக்குப் போவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அந்தந்த நேரத்தை விட்டு விட்டால், அவ்வளவுதான். அதற்கு பிறகு கடிகார முள்ளோடு போட்டி போட முடியாது.

மேஜர் சுந்தர்ராஜன்.. ஸôரி.. மேனேஜர் எதுவும் கேட்கவில்லை நல்ல வேளை, அவர் வீட்டில் எதுவும் பிரச்னை இல்லை போல.

ஆபீஸில் வேலையே ஓடவில்லை. மனமெல்லாம் என் மகளை சுற்றியே இருந்தது.

அவள் ஜன்னலோரம் வந்து நிற்பது போலவும்.. சிரிப்பது போலவும்.. “சே சே’ என்ன நினைப்பு? சினிமாக்களில் தான் அப்படி வரும். பாவம், இவளே பத்தாம் வகுப்புக்கு முட்டி மோதி படித்துக் கொண்டிருக்கிறாள்.

“”என்ன சங்கர் சார்? உங்களுக்குள்ளயே பேசற மாதிரி இருக்கே? நீங்க ஒருத்தர் தான் சுய புலம்பல்ல இருந்து தப்பிச்சீங்கன்னு நினைச்சேன். உங்களுக்குமா குழப்பம்?”

பக்கத்து டேபிள் கண்ணன் கிண்டலடித்துச் சிரித்தான். இன்னமும் கல்யாணமாகாதவன். சிரிப்பதற்கு முழுத் தகுதி உடையவன் அதது, ஆனாத் தானே தெரியும்.

பொண்ணுங்களைப் பற்றி இவன் கிண்டல் அடிக்கும் போதெல்லாம் நானும் என்னமாசிரித்திருக்கிறேன். ஒரு பொண்ணுக்கு அப்பனாக இருந்து பார்க்கும்போதுதான் தெரிகிறது, அது சிரிப்பல்ல.. அது எவ்வளவு வேதனையான விஷயம் என்பது.

“”ஏம்பா கண்ணா.. பசங்களுக்கு சைட் அடிக்கிற வயசு என்னப்பா?”

“”கண்டிப்பா உங்க வயசு கிடையாது சார்”

சூழ்நிலை தெரியாமல் அட்டகாசமாக சிரித்தான். நானும் ஒப்புக்கு சிரித்து வைத்தேன். அத்தோடு பேச்சையும் நிறுத்திக் கொண்டேன் ஏன் வீணாக சங்கை ஊதுவானேன்?

மாலையில் வீட்டுக்கு வந்ததில் இருந்து எனக்கும் நிலை கொள்ளவில்லை. அந்தப் பையன் ஏன் மேலே பார்த்துச் சிரித்தான். அந்த மரங்களுக்கு இடையே நிலவு போல என் பெண்ணும் நின்றாளோ?

அன்று மாலை வீட்டிற்கு வந்ததில் இருந்தே, வீட்டில் நாங்கள் மூன்று பேரும் ஒட்டவே இல்லை. யாரோ போல இருந்தோம்.

மறுநாள், விடிந்தது என்பதை விட, இரவு முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால், தூங்கவே இல்லை. வந்தால் தானே?

அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிடுவது போலவும், அவன் எனக்கு மருமகனாக வருவது போலவும், கடைசி காலத்தில் நாங்கள் இருவரும் அவனை அண்டி பிழைப்பது போலவும்…

சே.. என்ன ஒரு கனவு. அது கனவா.. அல்லது அரைத் தூக்கத்தின் நினைவா.. புரியவில்லை.

காலையில் அவன் வருகைக்காக காத்திருந்தோம்..

காத்திருப்பது, இருவரா.. மூவரா.. என்பது தான் பிரச்னையே.

“”என்னங்க.. அதோ..”

டார்க்கெட்டை குறி வைக்கும் ராணுவ அதிகாரி போல பார்வையிலேயே கட்டளையிட்டாள் காமாட்சி. நான் குப்பைத் தொட்டியை தூக்கிக் கொண்டு போய், வெளியே கொட்டிவிட்டு வருவது போலத் திரும்பினேன்.

அந்தப் பையன், நான் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்ததையோ, என்னை பற்றியோ, சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அவன் பார்வை அனிச்சையாக, ஆர்வத்துடன் மேலே போனது. நானும் ஒரக்கண்ணால் பார்த்தேன். ஜன்னல் சாத்தி இருந்தது. ஆனாலும் அவன் முகத்தில் புன்னகை.

அவ்வளவு மரங்களுக்கு இடையிலும், சாத்தப்பட்டிருக்கும் ஜன்னலிலும், அவனுக்கு அப்படி என்ன தான் தெரிகிறது அங்கே?

அவனும் என் அருகில் வந்து விட்டான். எந்தவிதமான தயக்கமோ, பயமோ அவனிடம் காணப்படவில்லை. எனக்குத் தான் ஏனோ உடல் கூசியது. காரணமே தெரியாமல் கைகளில் சின்ன நடுக்கம்.

“”தம்..பி..” குரல் கம்மியது.

“”ம்..ஹும்..” தொண்டையை கனைத்துக் கொண்டேன்.

“”தம்பீ.. கொஞ்சம் நில்லுப்பா”

அவன் முகத்தில் ஏற்பட போகும் அதிர்ச்சியை எதிர்பார்த்த, எனக்குத் தான் அதிர்ச்சி காரணம்.. என்னைப் பார்த்த அவன் முகத்திலோ முன்னை விட இன்னமும் மலர்ச்சி.

“”அங்கிள்..” சைக்கிளைப் பெடல் தட்டித் தட்டி என்னிடம் வந்தான்.

“”சொல்லுங்க அங்கிள்..”

“”அங்கிளா..?”

“பகீர்’ என்றது மனது. ஆனாலும், அவன் குரலில் இழைந்த நட்பின் மென்மை என்னை ஏதோ செய்தது திரும்பி பார்த்தேன்.

நிற்க மாட்டாமல், கேட்டை தாண்டி வந்து விட்டாள் காமாட்சி. அவள் முகத்திலும் இனம் புரியாத தயக்கம்.

“”ஒண்ணுமில்லைப்பா நானும் தினமும் கவனிக்கிறேன் நீ அங்கே மேலேயே பார்த்துட்டு போறியே, என்ன விசேஷம்?”

“”நான் பார்த்ததை, நீங்களும் கவனிச்சுட்டீங்களா? நல்லதா போச்சு”

உற்சாகமானான். எனக்குச் சகலமும் சுற்றியது..

போச்சுடா.. சும்மா கிடந்த சங்கை நானே ஊதிட்டனா.. நீங்கதான் மாமா இனிமே எனக்கு எல்லாமே உங்களைத்தான் மலை போல நம்பி இருக்கிறேன். எங்களை நீங்க தான் சேர்த்து வைக்கணும்.. என்று, வசனம் பேசுவானோ என திகிலடித்து நின்றேன். என் முகத்தை பார்த்தோ என்னவோ, காமாட்சியே கேட்டாள்,

“”என்னப்பா.. சொல்ற?”

சற்றே மிரட்டுவது போல முயற்சி செய்தாள். ஆனாலும் அவனிடம் அது எடுபடவில்லை

“”ஆண்ட்டி.. என் பேர் அஸ்வின். நாங்க இந்த வீட்டுல ஆறு வருசத்துக்கு முன்னால குடி இருந்தோம். அப்போ.. நான் அஞ்சு படிச்சுக்கிட்டு இருந்தேன். என் தம்பி கிருத்திக் மூணு படிச்சான். எங்களோட பிறந்த நாள்ல நாங்க மரம் நட்டோம். அதோ பெருசா வளர்ந்து நிக்குதே பலா மரம், அது நான் நட்டது. அதுக்குப் பக்கத்துல இருக்குற மா மரம் என் தம்பி நட்டது காலைல, அதுக்கு தினமும் தண்ணி விட்டுட்டுத் தான், நாங்க பாலே சாப்பிடுவோம் அந்த மரமெல்லாம் எங்களை விட உயரமா வளர்ந்தப்ப, நாங்க இந்த வீட்டை விட்டு போயிட்டோம்.

ரொம்ப வருத்தமா இருந்தது பெரிய மரமா இருந்ததால அதை பிடுங்கி கொண்டு போக முடியலை தம்பிதான் ரொம்ப அழுதான் அப்பப்ப.. இந்த மரத்தை வந்து வந்து பார்ப்பேன் இப்போ ப்ளஸ்-1 படிக்கிறேன். டவுன் ஸ்கூலுக்கு சைக்கிள்ல போறேன்.. அதுக்கு இந்த வழியா தான் போகணும். தினமும் பார்த்துட்டே போவேன்.

இந்த வருசம் பலா பிஞ்சு விட்டுருக்கு. என் தம்பிக்கும் அப்பாவுக்கும் ரொம்ப சந்தோசம். வந்து பார்க்கணும்னு சொன்னாங்க. நேத்து தான் பார்த்தேன்.. என் தம்பி நட்ட மா மரமும் பிஞ்சு விட்டிருக்கு.

ரொம்ப சந்தோசமா இருந்தது. நானே உங்க கிட்ட வந்து அதுல பழம் பழுத்தா ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன். என்னோட நல்ல நேரம், நீங்களே என்னை பார்த்துருக்கீங்க.. உண்மையிலேயே அது என்னோட அதிர்ஷ்டம் தான் அங்கிள். பழுத்த பிறகு அந்த மரங்கல்ல இருந்து ஒரு பழம் தர்றீங்களா..”

ஏதோ ஒரு குழந்தை மடியில் படுத்து கொஞ்சுவது போல இருந்தது, அவன் பேசியது. பலா மரத்தின் பால் அவன் முகத்தில் வழிவது போல இருந்தது. அவன் குரலில் பிரிவின் ஏக்கம் தெரிந்தது.

திரும்பி காமாட்சியை பார்த்தேன். பேய் அறைந்தது போல இருந்தாள்.

அவளது பெரிய விழிகளில் நீர் கோர்த்து இருந்தது. அவளால் அவ்வளவு சீக்கிரம் உணர்வுகளை மறைக்கத் தெரியாது என்பது எனக்குத் தெரியும்.

எனக்கும் உடலெல்லாம் நாணியது. ஒரு சின்னப் பையனை இந்த அளவுக்கு நான் சந்தேகப்பட்டு இருக்கக் கூடாதோ.. இந்த மூன்று மாதத்தில் நாங்கள் கூட அந்த மரங்களை அவ்வளவு பார்த்தது இல்லை.

காமாட்சி, அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் போல,

“”கண்டிப்பா தர்றேன்டா கண்ணு. உன் அம்மா, அப்பாவை ஒரு நாள் கூட்டிட்டு வாப்பா” தொண்டை அடைக்கச் சொன்னாள்.

“”கண்டிப்பா ஆண்ட்டி இந்த சன் டேயே வர்றோம்”

அவன் முகத்தில், ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. அவன் முகமே இப்போது ஒரு பழம் போல பழுத்திருந்தது

“”ஸ்கூலுக்கு நேரமாச்சு.. வர்றேன் ஆண்ட்டி, வர்றேன் அங்கிள்”

ஒரு துள்ளல் போட்டு சைக்கிளை மிதித்து பறந்தான்.

அவன் கிளம்பிப் போன திசையை பார்த்த நான், மெல்ல திரும்பி காமாட்சியைப் பார்த்தேன் அவள் முகத்தில் ஒரு இனம் புரியாத நிம்மதியும், கண்களில் மௌனமும் நிலவியது.

“”என்ன காமு இப்போது சந்தோசம் தானா?” அவளைக் கலைத்தேன்.

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்..

நான் அவளைப் பெண் பார்க்க வந்த போது, ஜன்னல் வழி பார்த்தாளே.. ஒரு பார்வை.. அப்படி ஒரு பார்வை பார்த்தாள் அசடு வழிந்த படி.

“”அந்தப் பையன் உன்னை ஆண்ட்டின்னு சொன்ன மாதிரி இருந்ததே..”

என் கிண்டலை புரிந்து கொண்டவள், வெட்கச் சிரிப்பு சிரிக்க, அந்த சிரிப்பையும் மீறி, மாடியில் இருந்து ஒரு குரல் கேட்டது..

“”அம்மா இங்கே பாரேன் இந்த ரெண்டு மரமும் பிஞ்சு விட்டிருக்கு”

ஆச்சர்யம் கலந்த சந்தோசத்தோடு என் மகள் மாடியிலிருந்து கத்த, கண்களில் நீர் முட்டும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரித்தாள் காமாட்சி.

– கி.ரவிக்குமார் (அக்டோபர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *