காலையில் வேகமாக கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் நிஷா. அவள் அக்கா பிள்ளை பெற்றுக் கொள்வதற்காக பிறந்தகத்திற்கு வந்திருந்தாள்.
“நிஷா, தெரு முனைக் கடையில பழம் வாங்கி குடுத்துட்டுப் போயேண்டியம்மா”-சமையலறையிலிருந்து அம்மாவின் வேண்டுகோள்.
தன் இரு சக்கர வாகனத்தை கிளப்பும் ஓசை கேட்டதும் வழக்கம் போல் முன்னால் வந்து அமர்ந்துகொண்டது பைரவி. இன்று நேரம் சரியில்லை என்பது அதற்கு தெரியாது.
“நாயை யார் அவிழ்த்துவிட்டது”-என்று கேட்டுக் கொண்டே அம்மா வாசல் வரும் முன், நிஷா தெரு முனை கடைக்கு வந்துவிட்டாள். கடை மூடி இருந்தது. பிரதான சாலை வந்து தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்யும் தாத்தாவின் கடை முன் வந்து நின்றாள். பைரவி கெட்ட காலம் ஆரம்பமாகிவிட்டது. அது சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு முனையை கையில் பற்றிக் கொண்டு, நல்ல பழங்களை எடுத்து தாத்தாவிடம் எடை போட தந்து கொண்டிருந்தாள்.
“நாயை வீட்லே விட்டுட்டு வர கூடாதா?”-தாத்தா.
நாயை திரும்பி பாராமலே “அதுவாதான் கூட வருது தாத்தா”-என்றாள். அதற்கு மேல் தாத்தா எதுவும் பேசவில்லை. வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டார். பற்றிக் கொண்டிருந்த சங்கிலியை விட்டுவிடாமல் பழத்திற்கு பணம் தந்துவிட்டு வேகமாக திரும்பி தன் வண்டியின் மீது அமர்ந்தபோதுதான் நிஷா கவனித்தாள். பைரவியை சுற்றி நான்கு தெரு நாய்கள் நெருக்கமாக இருந்தது. ‘பூத்தல்’, காலமற்ற காலத்தில் பைரவியைவிட இரண்டு மடங்கு பெரியதும் ஆஜானுபாகுவான நாய் ஒன்று பைரவியை புணர்ந்துவிட்டிருந்தது. பைரவியின் முன்னங்கால்கள் தரையிலும் பின்னங்கால்கள் அந்தரத்திலும் தொங்கிக் கொண்டிருந்தது.
எல்லாம் சில நிமிடங்கள்தான்…!
புணரும் போது நாய்கள் சண்டையிட்டுக் கொள்ளும். ஒரு போதும் கொலை செய்யாது. அதன் முடிச்சு அவிழ நேரமாகும் என்பதால் பைரவியை தெருவிலேயே கழட்டிவிட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டாள் நிஷா. பழங்களை பெற்றுக் கொண்ட அம்மா அவளிடம் கேட்ட முதல் கேள்வி நாயை எங்கே என்றுதான். அம்மாவை சமையலறைக்குள் தள்ளிச் சென்று மெதுவாக நடந்ததை சொன்னாள்.
“அக்கிரமம்! அத்துமீறல்!”-என்றாள் அம்மா.
முதன் முறையாக அம்மாவின் முகம் கோபாக்கினியாக இருந்ததை முன்னெப்போதும் அவள் கண்டதில்லை.
“இந்த லோகத்திலே பெண்ணாக யார் பிறந்தாலும் இதே நிலமதான் போல..”-வாழ்க்கையின் அனுபவங்களை சேகரித்தவள். ஆதங்கத்தோடு சொன்னாள் பாட்டி. ஒன்றும் புரியாதது போல் அக்கா நின்று கொண்டிருந்தாள்.
மொழி இல்லாத விலங்குகளுக்கு மருத்துவமனை இருப்பது போல் ஒரு நீதிமன்றமும் இருக்க வேண்டும்தானே? பெட் கோர்டில் பிராணிகளுக்கு நீதி கிடைத்துவிடும்.
சில மாதங்களுக்கு பின்…
சுகப்பிரசவம் கண்டு புகுந்தவீடு சென்றுவிட்டாள் அக்கா. ஆளுக்கொரு நிறமாக நான்கு குட்டிகளை ஈன்றெடுத்தும் அபலையாக அலைந்து கொண்டிருந்தது பைரவி!
– ‘தமிழ் நெஞ்சம்’, நவம்பர் 2024 இதழில் பிரசுரமானது.