(1946ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16
அத்தியாயம்-10
கல்பகம் இன்னும் பெங்களூரில்தான் இருந்தாள்.நாள் செல்லச் செல்ல, அவளுக்குத் தன் கணவனை எப்படி யாவது, ஒரு முறை காண வேண்டுமென்ற ஆவல் வலுத் தது. வீட்டில் மோட்டார் இருந்தபடியால், கடைக்குப் போவதாகக் கூறிவிட்டு வெளியே கிளம்பினாள் அவள்.
தன் கணவன் பெங்களூரில் இருப்பானேன் என்று அவளுக்கு விளங்கவில்லை. இங்கு வேலை ஏதேனும் ஆகி விட்டதா. இன்னும் தன்னைப்பற்றி அவனது அபிப்பிராயம் எப்படி யிருக்கிறது, என்றெல்லாம் விசாரிக்கும் ஆவலில் கிளம்பினாள் அவள். முன்னே பின்னே தெரியாத இடத்தில் என்னவென்று விசாரிப்பது? ‘ஆமாம், அன்று நின்று பேசியிருந்தாரே, தான் நின்ற புடவைக் கடைக்கெதிர்க் கடையில். கடைக்காரருடன் நகை முகத்துடன் பேசி னார். ஒருகால் கடைக்காரர் தெரிந்தவரோ என்னவோ? எதற்கும் விசாரிப்பதில் என்ன தப்பு?’ என்று எண்ணிக் கொண்டு அந்தக் கடைக்கு மோட்டாரை விடச் சொன் னாள் கல்பகம்.
கடையில் ஏதோ சாமான் வாங்கிவிட்டு, “ராம கிருஷ்ணன் என்பவர் இந்தக் கடையில்தானே வாடிக்கையாகச் சாமான் வாங்குவது வழக்கம்?” எனக் கேட் டாள். கடைக்காரர் மரியாதையாக “எந்த ராமகிருஷ்ணன்?” என்று சிறிது யோசித்துவிட்டு “ஓ, அவரா! ஆம், அம்மா, இதுதான் அவர் வாடிக்கைக் கடை. ஏன் தங்கள் உறவினரா அவர்?” என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்குக் கல்பகம் என்ன பதில் சொல்லுவாள்? அவமானம்! தன் கணவனைப் பற்றிப் பிறரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்வதாவது? இதைவிட வெட்கக்கேடான விஷயம் உண்டா? உம். வழியில்லாத போது சிந்திப்பதில் என்ன பயன்? “ஆமாம்! அவர் விலாசம் மறந்துவிட்டது. தங்களால் அறிவிக்க முடியுமா?” என்றாள்.
“இதோ எழுதித் தருகிறேன்” என்று ஒரு சிறிய துண்டில் ராமகிருஷ்ணன் வீட்டு விலாசததை எழுதினார் அவர். “ஆபீஸ் அட்ரஸ்?” என அவள் வினவவும், அதையும் எழுதிக் கொடுத்தார். ‘அப்பாடா! காரியம் லகுவில் தீர்ந்தது’ என்று எண்ணியவளாய் “மிகவும் வந்தனம்” என்று கூறிவிட்டு புறப்பட்டாள்.
கல்பகம் சுவபாவத்தில் பயந்த குணமுள்ளவ ளாயிற்றே, அவளுக்கு ஏது இவ்வளவு தைரியம் என நேயர்கள் சிந்திக்கலாம். மனிதர்கள் தைரியமாய் இருப்பதற்கும், பயந்து போவதற்கும், மூலகாரணம் அவர்கள் வசிக்கும் இடத்தை பொறுத்ததே. சிவன் தலையில் உட்கார்ந்து “சௌக்கியமா?” எனக் கருடாழ்வாரைக் கேட்ட நாகத்தை நோக்கி “எல்லாம், இருக்கும் இடத்தில் இருந்தால் சௌக்கியம்தான்!” என இருவித அர்த்தத்தில் பதிலளித்தாராம் கருடன்! கருடனைக் கண்டு நடுங்கும் நாகம்கூட சிவன் தலைமீதில் அமர்ந்திருந்த தைரியத்தில் தானே தன் பகைவனையே குசலம் விசாரித்தது? ஏழை அலமேலுவிடம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கையில், கல்பகத்திற்குத் தொட்டதற் கெல்லாம் பயம் உண்டாயிற்று. இன்று நல்ல ஸ்திதியில இருக்கையில், தன்னைப் பாடுபடுத்தி வைத்தவர்கள் எந்த ஸ்திதியில் இருக்கிறார்கள் என பார்க்க அவள் ஆசைப்படுவது சகஜம்தானே?
கற்பகம் நேரே அந்த விலாசத்திலுள்ள வீட்டிற்குத் தான் போனாள். வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீட்டில் ஓர் பெண் நின்றிருந்தாள். தைரியமாகப் போனவளுக்கு என்னவோ அந்தத் தெரு வந்ததும் மனம் திக் திக் கென்று அடித்துக்கொண்டது. அதற்கேற்றாற்போல் டிரைவர் “அம்மா! அந்த வீடு பூட்டியிருக்கிறது” என்றான். “கமலு அம்மாள் இப்படி யெல்லாம் சுற்ற மாட்டார்களே! என்னவோ தெரியவில்லை. பாவம், வனஜாக்ஷியம்மாள் கூறுவதுபோல் கமலு அம்மாளுக்குப் புத்தி பிசகித்தான் இருக்கிறது!” என்பது, வனஜாக்ஷியிடம் வெகு நாளாய் இருந்துவருகிற அந்த டிரைவரின் எண்ணம்.
“யாரைத் தேடுகிறீர்கள்?” எனக் கேட்டாள் அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணி. “பூட்டியிருக்கும் வீட்டுக் காரர்யார்?” என்றாள் கல்பகம். ”அதுவா? ராமகிருஷ்ணனின் வீடு. அவர்கள் இரண்டுபேரும் ஊரில் இல்லை. அவர்கள் மைத்துனர் கல்யாணத்திற்குப் போயிருக்கிறார்கள். வாருங்களேன், உள்ளே!” என்று அழைத்தாள் அப் பெண். “நல்லதுதான், இந்தப் பெண் மூலம் ஏதாவது விஷயம் அறியலாம். முதல் பெண்டாட்டியைத் தள்ளி வைத்த மனுஷன் இப்பொழுது வேட்டகம் கொண்டாடுகிறாரா? உம் ஒரே மனிதனுக்கு இருவித புத்தி” என்றெண்ணியவளாய்க் கீழே இறங்கினாள் கல்பகம். பக்கத்து வீட்டுக்காரி கல்பகத்தை உள்ளே யழைத்துப்போய் உட்காரவைத்து, “நீங்கள் யார், சொல்லிவிட்டுப் போனால் சரோஜா வந்ததும் சொல்லுகிறேன்” என்றாள்.
“கட்டாயம் சொல்லிவிட்டுப் போகிறேன். ஆமாம், சரோஜாவின் மாமியார் எங்கே?”
“உங்களுக்குத் தெரியாதா? எனக்கு அவர்கள் வீட்டு விஷயமெல்லாம் தெரியும். இந்த ராமகிருஷ்ணனுக்கு முதல் பெண்டாட்டி பாவம், யாரோ கல்பகமாம், அவளை அநியாயமாய்த் தாயார் பேச்சை கேட்டுக்கொண்டு அவர் தள்ளிவைத்து விட்டாராம்… இதெல்லாம் சரோஜாவிற்கு முதலிலேயே தெரியாது. இப்போது அந்தப் பெண் எப்படியாவது கல்பகத்தைக் கண்டுபிடிக்கணும் என்று குதியாய்க் குதிக்கிறாள்.” என்று விவரமாகச் சொன்னாள் அந்தப் பெண்.
”அப்படியா? இதெல்லாம் கொஞ்சம் கேள்விப் பட்டேன், அவ்வளவுதான். அப்படியானால், அவள் மாமியார் இங்கே வரவேயில்லையா?”
“பார்த்தீர்களா! சொல்ல வந்ததை முடிக்கவில்லையே, நான்” எனக் கூறி, மாமியார் வந்ததையும், இருவருக்கும் நடந்த சண்டையையும் ஒன்றுவிடாமல் சொன்னாள் அப் பெண்.
”உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்று கேட்டாள் கல்பகம்.
”சரோஜா என் சிநேகிதியாயிற்றே! அவர்கள் வீட் டில் நடப்பது எனக்கும், என் வீட்டில் நடப்பது அவளுக்கும் நன்றாகத் தெரியும்” என்று பெருமிதத்துடன் கூறினாள் அப்பெண்.
”சரி! நான் இன்னொருதரம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய கல்பகம் வண்டியிலிருந்து ஓர் விலையுயர்ந்த சால்வையை எடுத்து அப் பெண்ணுக்கு அளித்தாள். அந்தப் பெண் கல்பகத்தை யாரோ லக்ஷாதி பதியின் சம்சாரம் என்று எண்ணிக்கொண்டாள்! கல்பகம் போனபிறகே, “ஐயோ பெயர் என்னவென்று கூடத் தெரிஞ்சுக்காமல் போனோமே!” என்பது புலப்பட்டது. அவளுக்கு.
கண்ணனும், ராமுவும் போவதற்கு முன்பே, விசுவும் சரோஜாவும் போய்ச் சேர்ந்தார்கள், தங்கம்மாவின் வீட்டிற்கு. கல்பகம் என்ற பெயர் கொண்ட நாலு பெண்களையும் அன்று தன் வீட்டில் அழைத்திருந்தாள் தலைவி. கமலு “நானும் வருகிறேன்!” என்றபொழுது தலைவிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “இன்று ஸேவா ஸதனத்தில் உனக்கு வேலையிருக்கிறதே, கமலு! என்னுடன் நீயும் வந்துவிட்டால் எப்படி?” என்றாள் “இல்லையம்மா! உடம்பு நலமில்லை யென்று என் வகுப்பிற்கு லீவு கொடுத்துவிட்டேன்” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டாள் கமலு.
தங்கம்மாள் மற்ற மாணவிகளுடனும்,கமலுவுடனும், தன் வீட்டிற்குள் நுழைகையில், வாசலில் தயாராகக் காத்திருந்த சரோஜாவையும், விசுவையும் கண்டாள். ”வாருங்கள்! வாருங்கள்!” என்று அவர்களை உள்ளே யழைத்தாள். அன்று கடையில் கண்டபோது முகம் கொடுத்துப் பேசாத கமலு இன்று மலர்ந்த முகத்தோடு தன்னிடம் பேசுவதைக் காண உண்மையில் சரோஜாவிற்கு வியப்பாகவே இருந்தது. தலைவியின் உத்திரவின்மீது ஒவ்வொருவருக்கும், காபி கொண்டு வந்தாள் கமலு. அதே சமயம் ஹாலுக்குள் நுழைந்தனர் கண்ணனும் ராமுவும். கண்ணனைக் கண்டதும், அன்று கமலுவோடு டாக்ஸியில் சென்ற யுவன் இவனே என்பதைத் தெரிந்து கொண்டான் விசு. அவன் முகம் சுணங்கிற்று.
ராமுவும் வைத்த கண் வாங்காமல் கமலுவைப் பார்த்தான். தலை நிமிர்ந்த கமலு, கண்ணனைக் கண்டு புன்னகை புரிந்தாள். ராமுவை நிமிர்ந்துகூட நோக்கவில்லை. பிறகு உள்ளே போனவள் வெளியே வரவுமில்லை. தலைவி கண்ணனை நோக்கி “கல்பகம் என்ற நாலு பெண்களுக்கும், ராமு என்பவரையாவது, கண்ணன் என்பவரை யாவது தெரியாதாம். எதற்கும் உங்கள் சந்தேகத்தைத் தீர்க்க அவர்களை இங்கே வரவழைத்திருக்கிறேன்” என்றாள்.
“இப்பொழுது இங்கிருந்து சென்ற பெண் யார்” என்று கேட்டான் கண்ணன். “அவள் பெயர் கமலு தாங்கள் ஏதோ பிசகு செய்கிறீர்கள்” என்றாள் தலைவி.”‘ஆமாம் அவள்தான் கமலு என் சிநேகிதி” எனக்கூடவே கூறினாள் சரோஜா. “என்ன மிஸ்டர் ராமு?” என்று கேட்டான் கண்ணன். “அவள் தன்னைக் கமலு என்று கூறிக்கொள்ளும் காரணம் புலப்படவில்லை. ஆனால் நிச்சயமாய் அவள் கல்பகம்தான்” என்றான் ராமு.
இதுவரையிலும் பேசாமலிருந்த விசு “அப்படியானால் கமலுவை உங்கள் முதல் மனைவி கல்பகமென்றா எண்ணுகிறீர்கள், மாப்பிள்ளை?” எனக் கேட்டான்.
“ஆம்! சந்தேகமிருப்பவர்களுக்குக் கல்பகத்தின் போட்டோவைக் காட்டு கண்ணா!” என்றான் ராமு சிறிது கோபத்துடன்.
கண்ணன் சட்டைப் பையிலிருந்து எடுத்த புகைப் படத்தை யாவரும் ஆவலுடன் பிடுங்கிப் பார்த்தார்கள். விசுவுக்கோ கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. அவன் காதல் கொண்ட நங்கை கல்யாணமான பெண். அதுவும் தன் தங்கையின் சக்களத்தி! அவளை மணந்துகொள்ள வேண்டுமென்று மனசால் எண்ணியதுகூடப் பரவமென்று நினைத்தானவன். சரோஜா கூட இப்போது தன்னைப் பற்றி என்ன எண்னுகிறாளோ என்று நினைக்கையில் அவனால் தலைநிமிர முடியவில்லை. “சிறிது நேரம் வெளியே போய்வருகிறேன்” என்று கூறிப்போய்விட்டான்.
தங்கம்மாள் எதையும் பொறுப்பாள். ஆனால் பொய், பித்தலாட்டத்தை அவளால் பொறுக்கமுடியாது. கல்பகம் என்ற பெண்ணைத் தேடிக் கண்ணனும், ராமுவும் அலைவது அவளுக்குத் தெரிந்தும், தானே அந்தக் கல்பகம் என்று ஏன் அவள் தலைவியிடம் கூறவில்லை? அங்கு போகத் தனக்கு இஷ்டமில்லை யென்பதை ஏன் அவள் தலைவிக்கு ரகசியமாய் அறிவிக்கவில்லை? வீணாகக் கல்பகம் என்ற பெயருள்ள பெண்களை யெல்லாம் தான் இழுத்துக் கொண்டு வந்து இந்த நாடகம் நடத்தும்படி விடுவானேன்? கோபத்தை யடக்கிக்கொண்டு “கமலூ…” என்றழைத் தாள் தலைவி. கமலு வந்துநின்றாள். “கமலூ! இது யார் படம், பார்!” என அவள் கையில் படத்தைக் கொடுத்தாள் தங்கம்மாள்.
“என்னைப் போலவேதான் இருக்கிறது. ஆனால், சத்தியமாய் இந்தப் படம் என்னுடையது அல்ல.” என்று கம்பீரமாய் மொழிந்தாள் கமலு. ராமுவோ, “கல்பகம்! நான் உனக்கு இழைத்த தீமைக்கு நீ இந்தவிதம் வஞ்சம் தீர்த்துக்கொள்கிறாய் என்றே நான் எண்ணுகிறேன். கைப் புண்ணிற்குக் கண்ணாடி ஏன்? என்னுடன் வர இஷ்டமில்லாவிட்டால் கூறிவிடு. ஆனால், நான் உன் கணவன் என்பதை, எப்படி நீ என் மனைவி என்று நான் அறிவேனோ அப்படி நீயும் அறிவாய். அதை இல்லை யென்று மறுதலிக்க உன்னால் முடியாது.”
கமலுவால் பொறுக்கமுடியவில்லை. “ஐயா! நீர் யாராய் இருந்தாலும் எனக்கு அதைப்பற்றி அக்கரையில்லை. நான் உமது மனைவி கல்பகம் அல்ல” வென்று கூறும் போது, “மறுபடியும்,மறுபடியும், நீங்கள் அதையே வற்புறுத்துவது உண்மையில் வேடிக்கையாய்த்தான் இருக்கிறது! இதுவரையில் நான் உங்களைக் கண்டதே யில்லை. இதுவே முதல்தடவை, நான் உங்களைப் பார்ப்பது. நான் கமலு என்பதற்கு அத்தாட்சி என் தோழி சரோஜா தான்.” இதுவரையிலும் பேசாதிருந்த சரோஜா “ஆம்! எனக்குத் தெரிந்தமட்டில் அவள் பெயர் கமலுதான்” எனக் கூறி அவள் ரயிலிலிருந்து குதிக்க முயன்றதையும் தான் அவளைக் காப்பாற்றியதையும் சுருக்கமாய் கூறினாள். “இந்தச் சமாசாரங்களால், அவள் கல்பகம்தானென்பது இன்னும் உறுதிப்படுகிறது. அதுவும் அவள் சரோஜாவின் தோழியாய் விட்டபடியால், இனிச்சிறிதும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இதுவரையிலும், நானே சரோஜாவின் கணவன் என்பதை அவள் அறியாள்” என்று முகத்தில் வெற்றிக்குறி தோன்றக் கூறினான் ராமகிருஷ்ணன். இதைக் கேட்ட கமலுவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது. “நீங்கள் சரோஜாவின் கணவ ரென்பதை இப்போதே அறிந்தேனாதலால், நான் சிறிது மரியாதைக் குறைவாய் பேசினதற்கு மன்னிப்புக் கேட்கிறேன். ஆனால், அதற்காக நான் கல்பகமாய் மாறிவிட முடியாது. இன்னொரு விஷயம் எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை……” இந்தச் சமயம் எல்லோரது கண்களும் அவள் கழுத்தை நோக்கின. ராமுவுக்கோ இதில் ஏதோ சூதிருப்பதாகவே பட்டது. ‘”சரோ! நீ வேணுமானால், அவளைத் தனியே அழைத்துக் கேள்! சிநேகிதி முறையின்றிச் சக்களத்தி முறையில் இருக்க இஷ்டமில்லாமல் கூறுகிறாளோ, என்னவோ?” என்றான் ராமு. கமலுவைத் தனியே கூப்பிட்டு எவ்வளவோ கூறிப் பார்த்தாள் சரோஜா. ஊஹும்! முன் சொன்னதையே தான் சொன்னாள் அவள். சிறிது நேரம் எல்லோரும் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்திருந்தனர்.
பிறகு ஏதோ நினைத்துக்கொண்டவள் போல் “ஆமாம்! சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரில், உன்னை ஒரு கடையில் கண்டேனே கமலு! ஏன் என்னிடம் சரிவரப் பேசவே யில்லை நீ?” என்று கேட்டாள் சரோஜா.
“பெங்களூரிலா?….என்னம்மா இது?” எனத் தலைவியைப் பார்த்துக் கூறினாள் கமலு. “ஒன்றைவிட ஒன்று வேடிக்கையாய் இருக்கிறது, சரோஜா! கமலு ஒரு நிமிஷங்கூட இந்த ஊரையும் என்னையும் விட்டு அகன்றவளல்ல. ஆம்! ஒருநாள் சினிமாவில் நான் மயங்கி விழுந்துவிட்டேன். அப்போது ஒரேநாள் கமலு நான் இன்றி ஸேவாஸ்தனத்தில் தனித்திருந்தாள்” என்றாள் தலைவி.
“ஆமாம்! அதே சமயம்தான் நான் இப்போது தன்னைக் கமலு வென்று கூறிக்கொள்ளும் இந்தப் பெண்மணியைக் கண்டேன். படத்திலுள்ள ஜாடை தென்படவே “தங்கள் பெயர் கல்பகமா?” என்று கேட்டேன். ‘அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று இவர்கள் கூறவே நான் ராமுவிற்குத் தகவல் தெரிவித்தேன்” என்றுரைத்தான் கண்ணன். மறுபடியும் எல்லோருக்கும் கமலுவின் மீது சந்தேகம் தட்டிவிட்டது. “அப்போதே நீ சொல்லியிருக்கலாமே, நான் இல்லை அந்த ஆசாமியென்று ” எனக் கேட்டாள் தலைவி.
“ஆம்! அந்த ஒரு பிசகு செய்ததை நான் ஒப்புக் கொள்கிறேன். அதனால் வந்த விளைவுகள்தான் இவை.”
”ஊம்! நீ அப்படிச் சொல்லவேண்டிய காரணம்?” எனக் கேட்டாள் தலைவி. கமலுவின்மீது அவள் கொண்டிருந்த நம்பிக்கை குறையலாயிற்று. “அம்மா! அதுவேறு விஷயம். சில காரணங்களை முன்னிட்டு வெளியிலிருந்து வருபவர்களிடம் கமலுதான் நான் என்று அறிவிக்க எனக்கிஷ்டமில்லை. யாரையோ தேடுகிறார்கள், ஆமாம். என்று சொல்வதில் தப்பு என்ன என்று நான் நினைத்தது முட்டாள் தனம். அதற்காக மன்னிப்புக் கேட்க நான் தயார்.”
“விந்தையிலும் விந்தை! சரி,வா, சரோஜ்! இனி உன் கல்பகத்தைத் தேடும் யோசனையை விட்டு விடு!” எனக் கசப்புடன் கூறினான் ராமு. கடைசியில் இத்தனை அமர்க்களத்திலும், விசுவிற்குக் கல்யாணம் நிச்சயமாகியிருப்பதை, தலைவியிடம் கூறிவிட்டே சென்றாள் சரோஜா.
கமலு அருகே நின்றிருந்தும் ஏனோ சரோஜா அவளை அழைக்கவில்லை, கல்யாணத்திற்கு !… எல்லோரும் பேசிக்கொண் டிருக்கையில், நடுவே எழுந்து சென்ற விசுவம் நேரே வீட்டிற்குச் சென்றான். மன நிம்மதியை இழந்திருந்தானவன். கமலுவை அவன் விரும்புகிறா னென்பது சரோஜாவிற்குத் தெரியும். கமலுதான் கல்ப கம் என்று அறிந்தபின் அவனுக்கு உயிரையே விட்டு விடலாமா என்றுகூட இருந்தது. ராமகிருஷ்ணனின் முகத்தில் எப்படி விழிப்பான் அவன்? முன்பே ஒருகால் சரோஜா அவரிடம் கூறியிருக்கிறாளோ என்னவோ? சிறிது நாள் எங்கேயாவது போய் இருந்துவிட்டு வருவதே நல்லது என்று பட்டது அவன் மனதிற்கு. தன்னறைக்குச் சென்று, ஒரு கடிதம் எழுதினான். சரோஜாவின் மேல் விலாச மிட்டு அதை அவள் மேஜைமீது வைத்தான். பாட்டி, நல்லவேளையாகக் கோவிலுக்குப் போயிருந்தாள். தாத்தா, பாராயணம் பண்ணிக்கொண் டிருந்தார். கையில் செலவுக்குச் சிறிது பணம் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினான் விசு………
அத்தியாயம்-11
கல்பகம் மறுபடியும், ராமகிருஷ்ணனைப் போய்ப் பார்க்கவே எண்ணியிருந்தாள். ஆனால், அந்த குளிர் ஒத் துக் கொள்ளாமற் போகவே வனஜாக்ஷிக்கு ஜூரம் வந்து, அவள் திரும்பும்படி யாயிற்று. “சொந்த வீடு வாசலை விட்டு விட்டு, இங்கு ஏன் இருக்கவேண்டும்? கிளம்புவதே நல்லது” என்றாள் வனஜாக்ஷி. வேறு வழியின்றிக் கல்பகம் ஊருக்கு கிளம்பும்படி யாயிற்று. ஊருக்குச் சென்றபின்கூட நாளுக்கு நாள் வனஜாக்ஷியின் உடல் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் வந்தது. ஒருநாள் அவள் கல்பகத்தைத் தனியே யழைத்து “கமலு! இனி நான் பிழைக்கமாட்டேன். உனக்கு நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதில் முக்கியமானவற்றை நீ அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு வேண்டிய தஸ்தாவேஜிகளை இதோ இப்பெட்டியில் வைத்திருக்கிறேன். என் சொத்துக் கெல்லாம் நீயே அதிகாரி, ரொக்கமாக உள்ளதற்கும் சரி. மற்றவைகளுக்கும் சரி நான் ஏதாவது உன் மனம் புண்படப் பேசியிருந்தால் என்னை மன்னித்துவிடு…” கல்பகத்தின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. இந்தச் சொற்ப காலத்தில் வனஜாக்ஷியை சிநேகிக்கத் தொடங்கிவிட்டாள் அவள். ”அம்மா! இந்தமாதிரி எல்லாம் பேசாதீர்கள் தங்கள் உடம்பு சொஸ்தமாகிவிடும். உங்களுக்குப் பாட்டென்றால் பிடிக்குமே? ரேடியோவைத் திருப்பட்டுமா?” எனப் பேச்சை மாற்றினாள் கல்பகம்.
“உம்! உன் வீணாகானத்தை விடவா ஒரு பாட்டு!” என முனகினாள் வனஜாக்ஷி. தன்னைக் கமலு என்றெண்ணி வனஜாக்ஷி சொல்லும் வார்த்தைகளைக் கண்டு கல்பகம் மனம் புழுங்கினாள். உடல் நலம் இல்லாதிருக்கும் அவளிடம் மறுபடியும் தன் வரலாற்றைக் கூறி இம்சிக்க வேண்டாமென்று, பேசாமல் திரும்பிப்போய் ரேடியோவைத் திருப்பினாள். நல்ல வேளை, யாரோ வீணைதான் வாசித்தார்கள். அத்துடன் இழைந்து கேட்கும் அந்தக் குரலில்தான் என்ன இனிமை! கல்பகம் பாட்டில் மயங்கி இருக்கும் சமயம், கமலு”, கமலு! என் கண்ணே ! நீ இந்தப் பாட்டைப் பாடிக் கேட்டு எவ்வளவு நாளாகிறது! இப்பொழுதாவது இதைப் பாடிக் காட்ட வேண்டு மென்று தோன்றிற்றே உனக்கு!” எனப் படுக்கையில் இருந்தபடி கத்தினாள் வனஜாக்ஷி “அம்மா, அம்மா!” எனக் கூவிய வண்ணம் கல்பகம் அவளருகே ஓடினாள். ஜூரத்தில் அடிபட்டுக் கிடந்த வனஜாக்ஷிக்கு இப்படிப் பெரிய குரலில் எப்படிக் கத்தமுடிந்தது என்பதே கல்பகத்திற்குப் புரியவில்லை. வனஜாக்ஷி மூச்சைப் பிடித்துக்கொண்டு இரைந்து பேசினாள் போலும். கல்பகம் கூப்பிட்டதற்குப் பதிலே இல்லை! “ஐயோ ! விமலா! அம்மாவை வந்து பாரேன்!'” என அழுதாள் கல்பகம். யார் வந்து என்ன? வனஜாக்ஷி கமலுவின் கானத்தை கேட்டவாறே இப்பூவுலகை விட்டு விட்டாள்.
வனஜாக்ஷி இறந்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. வீடே வெறிச்சென்று கிடந்தது. அவள் இருந்தது வீட் டிற்கே பலமாக இருந்தது. கல்பகம் தன் அறையை விட்டு வெளிவராமல், வருத்தத்தில் மூழ்கிக்கிடந்தாள். வனஜாக்ஷியை மட்டுமல்ல, அவளது வாழ்க்கைச் சம்பவம் ஒவ்வொன்றையும் நினைத்துத் தான் இன்று, ஒரு சீமாட்டிக்குரிய சொத்து அவளுக்கு இருக்கிறது. கேவலம் ஓர் ஆயிரம் ரூபாய்க்காசு இல்லாததினால், அவள் வாழாவெட்டி யாகும்படியாகப் போயிற்று ஒரு சமயம். அன் றைய நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் எவ்வளவு வித்தியாசம்! அருமந்தத் தாயார் அலமேலு அம்மாளுக்கு, நல்ல மருந்து வாங்கிக் கொடுக்கவும் யோக்யதை யற்று அன்று தான் இருந்ததையும், சிறுமி ராஜம் தனக்குச் செய்த உதவிகளையும் எண்ணி எண்ணி உருகினாள் கல் பகம். மறுபடி ராஜத்தை நாம் எங்கு காணப்போகி றோம்? பணம், காசு இல்லாததினால் தானே நாம் இந்த நிலைமையில் இருக்கிறோம் என்று நான் எண்ணியதுபோக, வைத்திருக்கும் பணத்திற்குச் செலவில்லாமல், மனத்திற் கும் சந்துஷ்டியில்லாமல், இப்படி ஒரு காலம் வந்து விட்டதே? நியாயமாய் இத்தனை பணமும் கமலுவைச் சேர்ந்தது. அதைத் தொடவும் எனக்குப் பாத்தியதை கிடையாது. ஆனால் அந்தக் கமலு எங்கே இருக்கிறாளோ? உயிருடன் இருக்கிறாளோ, இல்லையோ? வனஜாக்ஷியின் மொழிகளிலிருந்து கமலு இந்த ஆடம்பர வாழ்க்கையில் வெறுப்படைந்து ஓடிவிட்டதாகத் தெரிகிறது. அப்படிப் பட்டவளை நாம் பேப்பரில் விளம்பரம் செய்து கண்டு பிடிக்கமுடியாது. மேலும் வனஜாக்ஷியின் பெட்டிக்குள் இருந்த கடிதக்கட்டின் மூலம் பல சங்கதிகள் வெளியா கின்றன. ஆகவே, இனிக் கமலுவைக் கண்டு பிடித்தால் மட்டும் போதாது. பழைய வைரியான ரங்கய்யனையும் பழிதீர்க்க வேண்டும். ஹும்! யாரைப் பழி தீர்த்து என்ன லாபம்? என்மட்டில் நான் வெறும் வாழாவெட்டி கல்பகம் தானே? ஆமாம், வனஜாக்ஷி இறக்கும் அன்று ரேடியோவில் வீணையைக் கேட்டு, கமலுதான் வாசிக் கிறாள் என்றாளே? அது வெறும் பிதற்றலா? இல்லை, உண்மையிலேயே அன்று வாசித்தது கமலுதானோ? அன்று ஸேவாஸ்தன் உபாத்தியாயினி, தன் மாணவி களுடன் வீணை, வாயப்பாட்டு’ என்று ரேடியோ நிகழ்ச்சிக் குறிப்பில் போட்டிருந்தது. அப்படியானால் கமலு ஸேவாஸதனத்தில் சேர்ந்து விட்டாளா?” இப்படியாகப் பலவிதச் சிந்தனையில் ஆழ்ந்து மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தாள் கல்பகம்.
ஸேவாஸ்தனத்திலிருந்து நேரே வீட்டிற்குப்போன சரோஜா “பாட்டி! விசு இன்னும் வரவில்லையா?” எனக் கேட்டாள் அம்மணியம்மாளை “நான் கோயிலுக்குப் போயிருந்தேன். ஜானகி வீட்டைவிட்டுப் போனாலும் போனாள், சமையலுக்குச் சரியானபடி ஆள் கிடைக்க வில்லையே. பழய லக்ஷ்மிப் பாட்டி இருக்கிறாளா என்று விசாரிக்கவே கோவில் பக்கம் போனேன். வந்து விடுவான், எங்கே போகப்போகிறான்? தாம், தூம் என்று இவன் ஜானகியிடம் இரைந்தான். அதனால் அவள் வீட்டைவிட்டே போய்விட்டாள். ஜானகிமாதிரி இருப் பவர்கள் வம்பு அளப்பது சகஜம்தான். கமலுவை இவன் அழைத்துக்கொண்டு வந்ததைப்பற்றி ஜானகி யார் யாரிடமோ என்னென்னமோ சொன்னதாக என் காதி லும் பட்டது. நான் அதை வெளியே ய காண்பித்துக் கொள்ளாமல் இருந்தேன். இவன் என்னடா என்றால் ஜானகியைக் கன்னாபின்னாவென்று பேசினான். அவள் நீ ஊரிலிருந்து வருவதற்கு முதல் நாள் கிளம்பிவிட்டாள். இப்போது திடீரென்று அவளுக்கு எங்கே போவது? என்னால் வேலை செய்ய முடிகிறதா? இதையெல்லாம் அவன் ஏன் யோசிக்கிறான் ? நம் பிள்ளை வயிற்றுப் பேரனா பெண்வயிற்றுப் பேரனா பாழ்போகிறது.?” என்று பெரிதாக ஆரம்பித்தாள் பாட்டி.
சரோஜா இந்தச் சமாசாரம் கேட்டது முதல் தடவை யாதலால் “என்ன பாட்டி, அப்படி என்றால் விசு என் சொந்த அண்ணா இல்லையா? அவன் செய்கையைப் பார்த் தால், யாரும் அப்படிச் சொல்லமாட்டார்களே?” என்றார்.
“உன்மீது உயிராகத்தான் இருக்கிறான். யார் இல்லை என்றார்?”
“ஏன், பாட்டி! உனக்காகவும், தாத்தாவிற்காகவும் என்ன வேண்டுமானாலும் பண்ணக்கூடியவனாயிற்றே அவன்? அவன் என் கூடப் பிறந்தவன் இல்லையென்று ஒரு கால் நான் அறிந்த போதிலும் எனக்கு அவன் மீதுள்ள அன்பு குறையாது. நீயே பார், பாட்டி! இப் போது, நீங்கள் அவன் கல்யாணத்திற்கு நிச்சயித்திருக்கிறீர்களே, விசுவத்துக்கு அந்தக் கல்யாணத்தில் இஷ்டமே இல்லை இது என்ன கூத்து?” என்று ஆச்சரியம் தரங்காமல் கேட்டாள் பாட்டி.
“கூத்துமில்லை, நாடகமும் இல்லை. உண்மை. நல்ல வரதக்ஷிணையுடன் நீங்கள் ஓர் இடத்தில் பெண் பார்த் திருக்கையில் அவன் எப்படி அதை மறுதளிப்பான்? நான் மட்டும் அவனைக் கேட்டேன். இஷ்டமில்லாவிட்டால் சொல்லிவிடு. ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழ் படுத்திவிடாதே, அண்ணா!” என்று. “ஊஹும், பாட்டி, தாத்தாவிற்கு நான் கடமைப் பட்டவன்” என்றான்! இப் பொழுது நீ சொன்னதிலிருந்துதான் எனக்குக் கொஞ் சம் புரிகிறது. அவன் உன் பேரனில்லை, நீ அவனை வளர்த்ததற்கு அவன் தன் கடமை யுணர்ச்சியைக் காட்டுகிறானென்று. ஆனால், பாட்டி, அவனுக்கு இந்த விஷயம் முன்பே தெரிந்திருக்க, எனக்கு மட்டும் நீ ஏன் தெரிவிக்க வில்லை ”
” அடேயப்பா! பெரிய கேள்வியாகப் போடுகிறாயே, சரோஜா! அவனுக்கும், சில வருஷங்களுக்கு முன்புதான் தெரியும். உங்கள் தாத்தா வடக்கே வேலையாய் இருந் தாரோ இல்லையோ? அப்போது, இந்த விசுவின் தகப்பனார், தாத்தாவிற்கு ரொம்பச் சிநேகிதம், ஓர் உயிர் ஈருடல் என்பார்களே, அதேமாதிரி. திடீரென்று அங்கே சுற்றுவட்டாரங்களில் ‘பிளேக்’ பரவிற்று. பிளேக் வந்தவர்களை அப்புறப் படுத்தியதோடு, எங்களை யெல்லாம் ‘காம்புக்கு’ அனுப்பி விட்டார்கள் சர்க்கார். அந்தப் ‘பிளேக்’கில், உன் பெற்றோர், சகோதரன் எல்லாரும் இறந்து போனார்கள். விசுவின் பெற்றோர் சகோதரர் எல்லோரையும் ஆஸ்பத்திரிக்கு அப்புறப்படுத்தும்போது, விசுவின் தகப்பனார், விசுவை எங்களிடம் ஒப்புவித்தார் வெறுமனே கொடுக்கவில்லை. தாங்கள் இறந்து போய் விட்டால், அவன் சம்ரக்ஷணைக்காக வேண்டிய ரொக்கமும் கொடுத்தார். ஆஸ்பத்திரிக்குப் போனவர்கள் திரும்பவேயில்லை. மூன்றே வயதான நீ விசுவத்தை “அண்ணா.
அண்ணா!’ என்று அழைக்க ஆரம்பித்தாய். ஏழு வயதான அவனும், தன் சகோதரி யென்றே உன்னை எண்ணி வந்தான்” எனக்கூறி ஒரு பெருமூச்சு விட்டாள் பாட்டி.
பாட்டி சொல்வதெல்லாம் கதையாகவும், விசுவம் தன்னுடைய அண்ணா என்பதே உண்மையாகவும் பட் டது சரோஜாவின் மனத்திற்கு. வேறு புடவை கட்டிக் கொள்ள தன் அறைக்குச் சென்றவள், அங்கு மேஜை மீதிருந்த கடிதத்தைப் பார்த்தாள். அதில் பின் வருமாறு கண்டிருந்தது.
“சரோஜாவுக்கு,
ஆசீர்வாதம். எனக்கு மனது ஏனோ நிம்மதியில்லாம லிருக்கிறது. கொஞ்ச நாளைக்கு எங்காவது போய் வருகிறேன். எப்படியும் திரும்புவேன். கவலைவேண்டாம். தாத்தா,பாட்டிக்கு என் நமஸ்காரத்தைத் தெரிவி.
உன் அன்புள்ள அண்ணா.”
கடிதத்தைப் படித்து விட்டு தேம்பி தேம்பி அழுதாள் சரோஜா. விசு மறுபடியும் வருவா னென்பது என்ன நிச்சயம்! ‘ஒருகால் வராவிட்டால்’? என்று நினைக்கும் போது, துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது அவளுக்கு.
அம்மணியம்மாள் வீட்டை விட்டுப் போகும்போது ஜானகி வெறுமனே போகவில்லை. இந்த விசுவத்திற்குக் கல்யாணமாவதைப் பார்த்து விடுகிறேன்!” என்று உள்ளூர உறுமிக்கொண்டேதான் போனாள். விசுவத்திற்கு எந்த ஊரில் பெண் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரம் அவ ளுக்கு நன்றாகத் தெரியுமாதலால் ஜானகி நேரே பெண் வீட்டாரின் ஜாகைக்குச் சென்றாள். கல்யாண வீட்டில், அதிகப்படி வேலைகளுக்கு வைத்துக்கொள்ளும் ஆட்களில் ஒருவளாக அமர்ந்து கொண்டாள். சமயம் நேர்ந்தபோது கல்யாணப்பெண் ராஜலக்ஷ்மியிடம் பேச்சுக்கொடுத்தாள். அவளுக்குத் தலைவாரி விடுதல், பூ கட்டிக் கொடுத்தல் முதலிய சில்லரைக் காரியங்களைச் செய்து, அவள் நட்பைப் பெற்றாள் தந்திரம் மிகுந்த ஜானகி.
ஒருநாள் தனியே உட்கார்ந்து ஜானகி, கல்யாணப் பெண்ணின் புடவைகளை மடித்துக் கொண்டிருக்கையில் ராஜலக்ஷ்மி அங்கே வந்து ஜானகி மாமீ! நீங்கள் பட்டணத்திலிருந்தா வருகிறீர்கள்? நாராயணிப் பாட்டி சொல்லுகிறாளே? அதுவும் நீங்கள் அவர்கள் வீட்டிலே இருந்ததாகச் சொல்லுகிறாளே? ஏன் மாமீ, வந்து விட் டீர்கள்?” எனக் கேட்டவண்ணம் அவளருகே உட்கார்ந் தாள். “ராஜம்! அதெல்லாம் பெரிய கதை. விட்டுத் தள்ளு.வா, தலையைப் பின்னுகிறேன்” எனவும், ராஜம் ஊஹும்! நல்லதோ கெடுதலோ எதையும் எனக்குச் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்று கண்டிப்பாய்க் கூறினாள்.
“ராஜம்! நானோ கேவலம் வேலை செய்ய வந்தவள். அவர்களோ பெரிய மனுஷர்கள். உங்களுக்கும் அவர் களுக்கும் சம்பந்தம் வேறே நடக்கப் போகிறது. இப்படியிருக்க, நான் ஏதாவது சொல்லி வைத்தால், வீணாய் என் பெயர் அடிபடும்…”
இந்தச் சமயத்தில், “என்ன விஷயம் ஜானகி?” என்று கேட்டவண்ணம் வந்து விட்டாள் ராஜத்தின் அத்தை. ராஜத்திற்குத் தாயார் இல்லை. தகப்பனார் வேறு கல் யாணம் செய்து கொண்டு விடவே, அத்தைதான் அவளை எடுத்து வளர்த்தாள். ஒன்றுமில்லை யம்மா!…” எனத் தயங்கினாள் ஜானகி. “கேட்டுக் கொண்டேதான் வந் தேன். என்னவோ சம்பந்தி வீட்டுப் பேச்சாகப் பட் டது. என்ன சங்கதி, சொல்லேன்…” என்று அத்தை விடாமல் கேட்டாள். “என்னவோ, அம்மா! ராஜம் தாயில்லாப்பெண். எனக்கும் இந்த நாலைந்து நாள் பழக் கத்திலே அவளிடம் ஆசை பிறந்து விட்டது…” என்று மெதுவாக ஆரம்பித்தாள் ஜானகி.
”ஊம்! சொல்லவந்ததைச் சொல்லி விடு” என்று உத்தரவிடுவதுபோல் கூறினாள் அத்தை.
“நீங்கள்கூடக் கேள்வி பட்டிருப்பீர்கள். உங்கள் மாப்பிள்ளையாகப் போகும் விசுவம்…அவர்…நடத்தை கொஞ்சம் ஒருமாதிரி..”
“அப்படி என்றால்…?”
“அம்மா! நான் இதைச் சொல்வதே தப்பு! அவர்கள் வீட்டு உப்பைக் கொஞ்ச நாள் தின்றிருக்கிறேன், பாருங் கள். இருந்தாலும், ராஜத்தின் சமத்தையும், குணத்தை யும், பார்க்கும்போது…”
“விஷயத்தைச் சொல்லித்தொலைக்காமல், என்ன இது?’ என்று கத்தினாள் கோபக்காரியான அத்தை.
“நீங்கள் நாலு இடத்தில் விசாரித்துப் பாருங்கள்.விசுவம்,கமலு என்ற ஒரு பெண்னை அழைத்து வீட்டில் வைத்திருக்கிறாரா இல்லையா என்று… ஆமாம் அந்த கண்ணராவியை யெல் லாம் காணச் சகியாமல்தான் நான் வந்துவிட்டேன். நமக்கேன் பாடு என்றுதான் இருந்தேன். அப்புறம் வரவர அங்கு நடக்கும் அட்டகாசம், வீட்டு எஜமானியே கமலு என்கிறமாதிரி ஆகிவிட்டது. தலையெழுத்து, வேலை செய்து தான் சாப்பிட வேண்டும் என்று இருக்கும்போது நமக்கு இங்கே என்ன என்று கிளம்பிவிட்டேன். ஊரெல்லாம் இந்த விஷயம் தெரிந்திருக்க, உன்னால் தான் வெளியே தெரிந்தது, உன்னைத் தவிர மற்றவர்கள் இதை எப்படி அறிந்தார்கள்? என்றெல்லாம் என்னைக் கேட்டு, கையைக் கூட ஓங்கிவிட்டார் விசுவம். இந்தப் பாழும் நாக்கால் இன்றைக்குத்தான் இந்த விஷயத்தை வெளியில் சொன் னேன்…” எனக் கூறிக் கண்ணைத் துடைத்துக் கொண்டாள் ஜானகி. ‘ஊம்’, என்று முனகிவிட்டுச் சிந்தனையி லாழ்ந்தாள் அத்தை. அன்றே சென்னையிலுள்ள தன் உறவினர்களுக்கு இந்த விஷயத்தைத் தீர விசாரிக்கும் படி ஓர் கடிதமும் எழுதிவிட்டாள்.
அத்தியாயம்-12
விசு மறுபடியும் வருகிறானோ இல்லையோ என்று சரோஜா பயந்தது உண்மையாயிற்று.நாட்கள் வாரங்க ளாயின. கல்யாணத் தேதிக்கு இன்னும் பதினைந்து தினங் களே பாக்கி. அச்சமயம் பெண் வீட்டாரிடமிருந்து வந்த கடிதம், அம்மணியம்மாளையும், பரமசிவ அய்யரையும் தூக்கிவாரிப் போட்டது.
“பலவிதக் காரணங்களை முன்னிட்டு, தங் கள் பேரனுக்கு ராஜலக்ஷிமியைக் கொடுப்ப தென்பதை நிறுத்தும்படியாக இருக்கிறது. இதற்கு மேல் நான் காரணங்கள் எழுதினால் நன்றாய் இருக்காது.
இப்படிக்கு ரகுராமன் ”
என்று ராஜலக்ஷிமியின் மாமா எழுதியிருந்தார். கல்யாணம் நிச்சயமாகி யிருக்கையில், விசு காணாமற் போனது ஒரு பக்கம் இருக்க, நல்ல இடத்துச் சம்பந்தம் கை நழுவிப் போகிறது. நாளை மறுநாள் இருக்கிற முகூர்த்தத்தைத் தள்ளி வைக்கவும் வகையின்றி நின்றது. பிள்ளை வீட்டுக் காரர்கள் கல்யாணத்தை நிறுத்துவதுதான் வழக்கம். பெண் வீட்டார் பார்த்து வேண்டா மென்றால்! “ராஸ்கல்! நேற்றுப் பயல் ரகுராமன்! கல்யாணப் பேச்சுப் பேசுகையில் அறிவில்லையா அவனுக்கு! என்னடா காரணம் என்று எழுதுகிறேன் பாரு” என்று உறுமினார் பரமசிவம். ஆமாம்! அந்தச் சமயம் அவர் ருத்ர மூர்த்தியாகத்தான் விளங்கினார்.
“இதோ பாருங்கள்! முதலாவது, நம் வீட்டுக் குழந் தையையே காணோம். ஒரு நாள் வெளிச் சாப்பாடு, சாப்பிட்டு வழக்க மில்லாதவன். கல்யாணம் நிச்சயமா னால் மட்டும், பிள்ளையைக் காணோ மென்றால் அவமான மில்லையா? அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள இவனுக்கு இஷ்டமே யில்லையாம், சரோஜா சொல்லுகிறாள். ரகுராமன் சொல்லியா நம் பெயர் கெட்டு விடப் போகிறது? மேலும், அந்த ராஜலக்ஷிமியின் பெயரை எடுக்கும்போதே, நமக்குச் சகுனம் சரியாக இல்லை. தள்ளுங்கள் சனியனை!” என்று அவரைச் சமாதானம் செய்தாள் அம்மணியம்மாள். ராமுவுக்கு விடுமுறை நாட் கள் கழிந்துவிட்டன. ஏற்கெனவே கல்பகத்தைப் போய்ப் பார்த்து அவள் தன்னை உதாசீனமாகப் பேசி விட்டாளே என்று அவமான மடைந்து கிடந்தான் அவன். கல்யா ணம் நடக்கும், சிறிது குஷியாகப் பொழுதைக் கழிக்கலா மென்று எதிர் பார்த்ததும் வீணாயிற்று. வேறு வழி யின்றி, சரோஜாவும் கணவனுடன் பெங்களூருக்குக் கிளம்பினாள். அம்மணியம்மாளின் உடைந்த மனத்திற்குச் சரோஜா எவ்வளவோ தேறுதல்கள் சொன்னாள். சரோஜா ஊருக்குக் கிளம்புகிற அன்று ஒரு சமையற்காரப் பாட்டியும் வந்து சேர்ந்தாள்…..
விசுவுக்குக் கல்யாணம் என்று கேள்விப் பட்டது. முதற் கொண்டு கமலுவிற்குமன நிம்மதியே இல்லை. வனஜாக்ஷியின் வீட்டிற்கு, சினிமா விஷயமாகப் பேசுவ தற்கு எவ்வளவோ ஆடவர்கள் வருவார்களே ; திரை மறைவிலிருந்து அவர்களைக்கமலு பார்த்துத்தான் இருக் கிறாள். அவர்கள் ஒருவரிடமும் அவள் மனம் சென்ற தில்லை. முதல் முதல் விசுவைக் கண்டபோதே, அவள் மனம் அவன்பால் சென்றது. எவ்வளவோ மனத்தை யடக்கிப் பார்த்தும், இப்பொழுதும், அவனுக்கு வேறொரு வாழ்க்கைத் துணைவி வரச் சித்தமாய் இருக்கிறா ளென்று தெரிந்தும், கட்டுக்கடங்காது போகும் மனோ வேகத்தை யடக்க அவளால் முடியவில்லை. தன்னை யறியாமல் ‘விசு வம்’ ‘விசுவம்’ என்ற நாமஸ்மரணையைச் செய்துகொண் டிருந்தாள் அவள். தன்னுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றி ஒன்றும் அவளுக்குத் தெரியாது. தான் வனஜாக்ஷி யின் வளர்ப்புப் பெண்ணென்றும், பிராமணகுல மென் றும் மட்டும் அறிவாள் அவள். வனஜாக்ஷியின் வீட்டில், விமலா வென்ற பிராமணப் பெண்ணைச் சமையலுக்கு அமர்த்தினது கமலுவிற்காகத்தான். தற்சமயம் சரோஜா தன் மீது மிகக் கோபமாய் இருக்கிறா ளென்பது அன்று சரோஜா விசுவத்தின் கல்யாணத்திற்குத் தன்னை யழைக் காம லிருந்ததி லிருந்து கண்டுகொண்டாள் கமலு. ”சரோஜாவின் கணவனை ஒரு பைத்தியக்காரனுக்குத் தான் ஒப்பிட வேண்டும்! எவளோ ஒருவளைப் பார்த்து நீதான் என் மனைவி என்பதாம், அவள் ஒப்புக்கொள்ளா விட்டால் கோபித்துக் கொள்ளுவதாம்! வெகு அழகு நான் செய்த பாபம்தான், அவன் மனைவிக்கும் எனக் கும் முகஜாடை ஒன்றா யிருக்கிறது. இது இவ்வளவு தூரம் வருமென் றறிந்தால், ஒருகாலும் அன்று என் பெயரை மாற்றிக் கூறி யிருக்கமாட்டேன். வனஜாக்ஷி யிடம் அகப்பட்டுக் கொள்ளாம லிருக்க வேண்டி, நான் ஒரு பொய் சொல்லப்போக, அதைவிடப் பெரிய இக்கட்டில் அல்லவா இது என்னை இப்போது மாட்டிவிட் டது? உண்மையான கல்பகம் அகப்படும் வரையில், சரோஜா — ஏன் விசுவம்கூட – என்னைப் பற்றித் தப்பாகத் தானே எண்ண ஹேதுவாகும் என்று ஏதேதோ எண்ணினாள் அவள். அவர்கள் வீட்டில் இருக்கையில், விசுவம் பேசிய சில வார்த்தைகளை எண்ணி எண்ணிப் பார்த்தாள் கமலு. ஸேவாஸதனத்தில் கமலுவைக் கொண்டு விடுவதற்கு முதல்நாள் “கமலு! உன்னை அங்கே விடுவதற்கு எனக்கிஷ்டமே இல்லை. கை ஒடிந் தாற்போல் இருக்கிறது இப்போது என் நிலைமை. கமலு ஒரு நிமிஷமும் உன்னை மறக்க மாட்டேன் நான் ” என்று விசு சொன்னதை எண்ணி சதா அதுவே தியானமாய் இருந்தாள் கமலு.
பாழாய்ப் போன கல்பகம் என்னு மொருவளால், சரோஜா, விசு, இவர்களின் அரிய நட்பை அவள் இழந்து விட்டாள். ”ஆம்! கட்டாயம் சரோஜாவும், அவள் கணவனும், விசுவிடம் கமலுதான் கல்பகம் என்று கூறி யிருப்பார்கள். விசுவிற்குக் கல்யாண மாகிவிட்டபோதி லும், இதன் மூலம் அவனுக்கு நம்மிட மிருந்த மதிப்பு அவ னுக்குப் போய்விடும். கல்யாணம் கட்டாயம் ஆகத்தான் போகிறது. அப்படி யிருக்க அவனுடைய மதிப்பு நமக் கெதற்கு என்று எண்ண இந்தப் பாழும் மனம் இடங் கொடுக்கல்லையே? எந்த வேளையில் வனஜாக்ஷியைப் பிரிந் தேனோ தெரியவில்லை. ஏதோ சினிமா முதலிய தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், நம்மிடம் மிக வாஞ்சையாக இருந்தாள். பாவம், விசுவிடம் அன்பு வைத்து அந்த அன்பிற்குப் பங்கம் ஏற்படுகையில்தானே தெரிகிறது, நம் மிடம் பிரியம் வைத்த வனஜாக்ஷியின் மனம் எப்பாடு படு மென்று? என்னுடைய நன்றிகெட்ட தனத்திற்கு இது வேண்டும். அன்று நான் உயிர்தப்பச் செய்த அதே விசுவத்தின் பொருட்டு இனி நான் இறக்கவும் தயார். ஆனால், அவருக்கு நான் உண்மையில் கல்யாண மாகாதவ ளென்பதையும், கல்பகம் என்பவளைப் பற்றித் தனக்கு ஒன்றுமே தெரியா தென்பதையும், எப்படியாவது ருசுப் பித்து விடவேண்டும்'” என்று பலவிதச் சிந்தனையில் இரவை நித்திரையின்றிக் கழித்தாள் கமலு. தன்னைக் கல்பக மென்று சரோஜாவின் கணவன் கூறியதால், சரோஜா, விசு, இவர்களின் நட்பை இழந்தது மட்டு மில்லாமல், கமலு தன் தலைவியின் அன்பையும் சிறிது இழக்க வேண்டி வந்தது. இதை எண்ணி எண்ணி வருந்தி னாள் அவள். சே! ஸேவாஸ்தனத்திற்கு அவள் வந்த புதிதில் அவளுக்கு ஏற்பட்ட மதிப்பென்ன? தற்சமயம் அங்குள்ள மாணவிகளும், ஏன் உபாத்தியாயினிகளும் கூட, அவளை ஒரு விதமாகப் பார்க்கும்படி அல்லவா ஆகி விட்டது? அன்று கல்பக மென்ற பெயருடன் வந்த நான்கு மாணவிகளும் விஷயத்தைப் பலரிடம் சொல்ல. அங்கு மூலைக்கு மூலை இவளைப்பற்றி குசுகுசு வென்று பேச…,’சரி, சரி, இனித் தலைவியிடம் உள்ளதைக் கூறி விடவேண்டும். என்ன ஆனாலும் ஆகட்டும்!’ எனத் தீர்மானித்தவளாய்க் கமலு தலைவியின் அறைக்குச் சென் றாள். தலைவி தனியே இருந்ததால், ஒரு விஷயம் பாக்கி யின்றித் தான் வனஜாக்ஷியுடன் வசித்தது முதற்கொண்டு எல்லாவற்றையும் விவரமாகக் கூறினாள். திருச்சியில் தன் வீட்டு விலாசத்தையும் கூறினாள்.
தலைவி நல்ல புத்திசாலி. “கமலு வருத்தப்படாதே யம்மா/சில சமயங்களில், நாம் எவ்வளவோ சரியான பாதையில் நடந்தும், நம்மைப் பிறர் பழி கூறும்படி ஆகி விடுகிறது. எதற்கும் இனி நாம் சும்மா இருக்கக் கூடாது. ஒருகால் வனஜாக்ஷி உன்னைத் தேடி வந்தாலும், அதற்குத் தகுந்த பதில் நான் சொல்லுகிறேன். நாளைக்கு நம் ஸேவாஸதனப் பெண்கள் ரேடியோவில் பாடப் போகி றார்கள். அதில் நீயும் கலந்துகொள். ஆமாம். தயக்கம் வேண்டாம். வனஜாக்ஷியிடம் ரேடியோ இருக்கிற தல்லவா? உன் பாட்டைக் கேட்கட்டும் அவள்” என் றாள் அவள். சிறிது யோசித்து விட்டு’, ஆகட்டும் அம்மா!’ என்றாள் கமலு. அப்படியே, அவள் பாடிய தைத்தான் வனஜாக்ஷி இறப்பதற்கு முன்பு கேட்டாள்.
ஸேவாஸ்தனத் தலைவி தங்கம்மாள் இதற்குப் பிறகு சும்மா யிருக்கவில்லை. சரோஜாவிற்கு ஒரு கடிதம் எழுதி னாள். அதில் கமலு கல்பகம் அல்ல என்பது நிச்சயமென் றும், அவள் யார் என்பதை இப்பொழுது அறிவிப்பது உசிதமல்ல வென்றும் எழுதியிருந்தாள். அதற்குச் சரோஜா எழுதிய பதிலில், “விசுவின் கல்யாணம் நின்று போனது, விசு ஊரைவிட்டுப் போனது எல்லாவற்றையும் எழுதிவிட்டு, கமலுவைத் தான் சந்தேகித்ததற்குத் தன் வருத்தத்தையும் தெரிவித்திருந்தாள். சரோஜா ஊருக்கு கிளம்பிப் போகுமுன் தான் அவசரமாக ஊருக்குக் கிளம் புவதாகச் சொல்லியனுப்பி யிருக்கவேதான் தங்கம்மா ளுக்கு அவள் ஊரில் இல்லாதது தெரியும்’ கல்யாணத் தேதியை ஒத்தி வைத்திருப்பார்க ளென்று அப்பொழுது அவள் எண்ணினாள்.விசு எங்கோ போய்விட்டா னென்று அறிந்ததும் கமலுவின் மனது பின்னும் குழம்பிற்று. விசுவிற்கு இந்த விஷயங்கள் முழுவதும் தெரியாதென்பது அவளுக்கு எப்படித் தெரியும்?
– தொடரும்…
– வனிதாலயம் (நாவல்), முதல் பதிப்பு: டிசம்பர் 1946, பவானி பிரசுரம், ராயவரம், புதுக்கோட்டை.