கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 2,207 
 
 

(1946ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7 

ஒருவிதத்தில் வனஜாக்ஷியுடன் இருப்பதே நலமென்று கல்பகம் எண்ணினாள். பழகப் பழக, வனஜாக்ஷி ஒரு சமயத்தில் பிரபல சினிமா நக்ஷத்திரமாக இருந்தவள் என்பதைக் கல்பகம் தெரிந்து கொண்டாள். அவளால், கமலு என்ற பெண் வளர்க்கப்பட்டு வந்ததாகவும், அந்தப் பெண் சினிமாவில் நடிப்பதையும் பிறருடன் தாராளமாகப் பேசுவதையும் விரும்பாமல் ஓடிவிட்டதாகவும், அவர்கள் பேச்சு மூலம் அறிந்துகொண்டாள். கமலுவைப் பேலவேதான் இருக்கிறோ மென்பதையும் கமலு அறையிலிருந்த போட்டோவி லிருந்து கண்டுகொண்டாள். ‘அம்மா இறப்பதற்கு முந்தி சொன்ன ஒரு விஷயத்திற் கும் இதற்கும் சம்பந்த மிருக்குமோ? அப்படிச் சம்பந்த மிருக்கும் பக்ஷத்தில் நாம் பல இடங்களுக்கு வனஜாக்ஷியுடன் போனால், கமலுவைக் கண்டு பிடிக்கலாமல்லவா?” என்ற சிந்தனை ஓடிற்று அவள் மனதில். முன்பெல்லாம் வனஜாக்ஷியுடன் வெளியே போக மறுத்தவள் இப்பொழுது, அடிக்கடி அவளுடன் வெளியே சென்றாள். “நான் ஆண்களுடன் சிரித்துப் பேசமாட்டேன்!” எனக் கண்டிப்பாய்க் கூறி விட்டாள் வனஜாக்ஷியிடம். வனஜாக்ஷிக்கோ, அவள் எப்படியாவது தன்னைவிட்டுப் போகாமல் இருந்தால் சரி யென்று எண்ணம். இது விஷயங்களில் சிறிது சொன்னதைக் கேட்கும் கமலு ஏன் வீணை மட்டும் வாசிக்க மாட்டேன் என்கிறாள்? வீணை என்றால் உயிராயிற்றே அவளுக்கு? உம்! புத்தி முழு ஸ்வாதீனமடைந்தால்தானே? அவள் புத்தி மாறாட்ட மடைந்ததற்கு நான்தானே காரணம். புகழுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு அவளை நான் சினிமாவில் நடிக்கச் சொல்லி வற் புறுத்தியதினால் அல்லவா அவள் ஓடவும், கீழே விழவும் புத்தி கெடவு மாயிற்று, என மறுபடி தன்னையே நொந்து கொண்டாள் வனஜாக்ஷி. 


வனஜாக்ஷி அடிக்கடி வெளியூர் போவாள்.அப்படிப் போகையில் கூடவே கல்பகமும் போகலானாள். கல்பகம் எங்கு போனாலும், தன்னை யறியாது அவள் கண்கள் எதையோ தேடலாயின. ஒரு சமயம் வனஜாக்ஷி ஒரு கடைக்குள் நுழைய, கல்பகம் இன்னொரு கடைக்குள் நுழைந்தாள். வாசலில் வனஜாக்ஷியின் கார் நின்றது. ஏதோ சாமான்களைப் பார்வை யிட்டுக்கொண்டிருந்த கல்பகத்தை யாரோ தோளை உலுக்கி “கமலூ! இந்த ஊருக்கா வந்தாய்? எப்பொழுது வந்தாய்?” என் விசாரிக்கவும், கல்பகம் திடுக்கிட்டு “யார் நீங்கள்?”எனக் கேட்டாள். 

“அடாடா! எப்படி என்னை மறந்தாய் நீ, கமலூ? உன் சரோஜாவையே மறந்து விட்டாயே? கூட யாரும் வரவில்லையா? ஆமாம், கட்டாயம் அகத்திற்குவா! விசு போன லெட்டரில்கூட உன்னைப் பற்றியே எழுதி இருக்கிறான்…அதோ பார் எங்கள் வீட்டுக் காரர். அதோ எதிர்க் கடையில்…’. கல்பகத்தின் திருஷ்டி அந்த ஆட வனின் மீது விழுந்தது. 

நல்ல வேளையாக, ராமுவைப் பார்த்த கல்பகம், ‘ஆ வென்று கத்தாமல் பிழைத்தாள். ராமுவும் இவளைப் பார்க்கவில்லை.”நேரமாயிற்று! நான் போகட்டுமா?” என்று சரோஜா கேட்டதைக் கல்பகம் பொருட்படுத்தவேயில்லை. “தன் சக்களத்தி இந்தப் பெண், தன் கணவனைத் தன்னிடமிருந்து அபகரித்தவள் ” என்ற ஒரு எண்ணமே, மேலோங்கி நிற்க, தான் கமலுவைத் தேட எண்ணினது, வனஜாக்ஷியுடன் கடைக்கு வந்திருப்பது எல்லாவற்றையும் மறந்தாள். “சே…அவருடன் நமக்கு என்ன பந்தம்? அழைத்தால் கூட இனி அவருடன் போவதில்லையென்று செய்த சபதம் எங்கே?” என்று மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள முயன்றது வீணாயிற்று.நன்றாக ஒரு முறை அவரைப் பார்க்காமல் போனோமே!’ என்று உள்ளம் குறை கூறிற்று. பின்பு வனஜாக்ஷி வந்து ஏதோ கூறியதற்குப் பொம்மை போல் தலையாட்டினாள் அவள். 

இரவு நித்திரையிலும், ராமுவே வந்தான். “எங்கே? அவர் எங்கே?” என்று அலறி எழுந்து உட்கார்ந்தாள் படுக்கையில். “அம்மா, அம்மா! கமலு ஏதோ பிதற்று கிறாள் வாருங்கள்!” எனக் கத்தினாள் பக்கத்தில் படுத் திருந்த விமலா. கல்பகம் வெட்கப்பட்டு, “ஏதோ பயங்கர ஸ்வப்பனம் கண்டேன். வேறு ஒன்றுமில்லை” எனக் கூறிப் படுத்து விட்டாள். ஆனால் நித்திரை ஏது? 


‘கமலு என்று ஒருவள் இருப்பதும், அவள் தன் ஜாடயாகவே இருப்பதும் நிச்சயமாகத் தெரிகிறது. ஆனால், அவள் வனஜாக்ஷிக்கு மட்டும் வேண்டியனல்ல; நம் சக்காளத்திக்கும் வேண்டியவள். ஒருகால், அம்மா சொன்னபடி இல்லாது, அவள் வேறு யாராகிலுமா யிருந்தால், நாம் அவளைத் தேடுவது வியர்த்தம் தானே?” என்று பலவாறு எண்னினாள் கல்பகம். தன் வாழ்க்கைப் பாதை எப்படி எப்படியோ ஆரம்பித்து, எப்படி எப்படியோ போவதைக் காண அது எந்தவிதம் முடியுமோ என அவளுக்கே புரியவில்லை. வனஜாக்ஷியுடன் ஆயுள் முழுவதும் இருப்பது என்னவோ முடியாத காரியம். கமலு என்ற பெண்மீது அவள் உண்மை அன்பு வைத்திருந்தா ளென்பது கல்பகத்தைக் கமலுவாக எண்ணி அவள் பேசுகையில் தெரிகிறது. இருந்தாலும், இந்த வனஜாக்ஷியும்,அவள் நடவடிக்கைகளும் ஒன்றும் பிடிக்கவில்லை கல்பகத்திற்கு. உண்மையில், பஞ்சனை மெத்தை போட்டுப் படுத்தாலும், அது பாறாங்கல்லாகத் தோன்றியது அவளுக்கு. தான் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் நீதான் கமலு என்று வற்புறுத்துவதோடு, ‘புத்தி சரியில்லை’ என்ற பெயரையும் வைத்து விட்டாளே! இவளை விட்டு எங்கா வது தொலைந்து போய்விடலா மென்றாலோ, இந்தப் பாழும் திருச்சியில், ரங்கய்யனைபோல் இன்னும் எவ்வளவு குண்டர்கள் இருப்பார்களோ! எனக்கொன்றும் புரியவில் லையே? என் ஸ்தானத்தில் வேறொரு பெண் ஆனத்தமாய் இருக்க, நான் இப்படிச் சீர்கெட வைத்தாயே கடவுளே!! எனப் பலவிதச் சிந்தனையில் இரவைக் கழித்தாள் கல்பகம். 


கல்பகத்தைத் தேடுவதைக் கண்ணன் நிறுத்தவில்லை. கல்பகத்தின் கிழிந்த புகைப்படம் அவன் கையில் பத்திரமாக இருந்தது. யாராவது அந்த ஜாடையா யிருந்தால், உடனே புகைப்படத்தை எடுத்துப் பார்ப்பான். 

ஒரு நாள் அவன் சென்னையில் ஒரு சினிமாக் கொட் டகையில், கல்பகத்தைப் போன்ற ஒரு பெண்மணியைப் பார்த்தான். ஸேவாஸ்தனத் தலைவியை அவன் அறிவான். இடை வேளையின்போது, அவளிடம் பேசி பெண்ணின் வரலாற்றை அறியும் பொருட்டு அவர்களுக்குப் பின் இருந்த ஆசனத்தில் போய் உட்கார்ந்தான். தலைவி எழுந்து போனவள் வரவேயில்லை. வெளிச்சத்தில் அப் பெண்தான் கல்பகம் எனப் பட்டது கண்ணன் மனதில். இச் சமயத்தை நழுவ விடக்கூடா தென்று, அவன் காலியாகியிருந்த அவள் பக்கத்து ஸீட்டில் அமர, அந்தப் பெண், இது எங்கள் தலைவியினுடையது. அவர்களுக்குத் தலை சுற்றியதால், வெளியே போயிருக்கிறார்கள். இப்போது வந்து விடுவார்கள்” என்றாள். 

கண்ணன் மரியாதையாக, “அம்மா! உங்கள் தலைவியை நானறிவேன். ஒரு மிக முக்கியமான விஷயமாக நான் இங்கு வந்தேன். தாங்கள் யார்? தங்கள் பெயரென்ன?” என்றான். 

கமலுவிற்குச் சந்தேகம் தட்டியது. கடைசியில் அவள் பயந்தது சரியாகி விட்டது. வனஜாக்ஷி’ எப்படியோ அறிந்து விட்டாள் தன்னிருப்பிடத்தை. அவளுடைய வேவுகாரன்தான் இவன் என்ற எண்ணத்தில் பயத்தைக் காட்டாது கோபக் குறியுடன் “ஐயா! நீங்கள் கேட்க வேண்டியதைத் தலைவியிடமே கேட்டல் நலம். என்னை ஏன் தொல்லைப் படுத்துகிறீர்கள்? ஒரு ஸ்திரீரின் பக்கத்து ஸீட்டில் அமர்வது மரியாதை உள்ளவர்களுக்கு அழகல்லவே!” என்றாள். 

“அம்மா! எனக்குக் கெடுதலான சிந்தனையே கிடையாது. உண்மையில் உங்களுக்கு இதம் செய்பவன் நான் என்று சத்தியம் வேண்டுமானால் செய்கிறேன். தங்கள் பெயர் கல்பகம்தானே?” 

ஏற இறங்க ஒரு முறை கண்ணனின் முகத்தைப் பார்த்தாள் கமலு. ஆள் கெட்டவனாகத் தெரியவில்லை. ஆயினும், வெளியாரிடம் தான் கல்பகம் அல்ல, கமலு என்று தெரிவிப்பது அவளுக்குப் புத்திசாலித்தனமாகப் பட வில்லை. அதற்குள் கண்ணன் மறுபடியும், தயவு செய்து தங்கள் பெயர் கல்பகம் தானா என்பதைச் சொல்லி விட்டால், மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன் நான்!” என்றான். 

“ஆமாம் என்றே வைத்துக் கொள்ளுங்கள்!” என்றாள் கமலு, பட்டுக் கொள்ளாமல். 

மறுபடி விளக்குகள் அணைக்கப்பட்டு, ஆட்டம் தொடங்கவே இருவரும் பேச்சை நிறுத்திவிட்டனர். தலைவி வராதது, கமலுவின் கவலையை அதிகரிக்கச் செய்தது ஆட்டம் முடிந்ததும், அவள் தன்னந் தனியாகத் தவிப் பதைக் கண்ட கண்ணன் ”அம்மா! நான் உங்களை ஸேவாஸதனத்தில் கொண்டு போய் விடட்டுமா? என்னை நம்பி என்னுடன் வருவீர்களா?” எனவும், இருட்டில் தனியே போகப் பயந்த கமலு, ஆகட்டும்” என்றாள். கண்ணன் ஒரு டாக்ஸியைக் கூப்பிட, அதில் இருவரும் ஏறிக்கொண்டனர். 

அவர்கள் ஏறிக் கொண்ட அதே சமயத்தில், அவர் களை யறியாமல் ஒரு விசேஷம் நடந்தது. அதைக் கமலுவோ, கண்ணனோ அறியவில்லை. 

துரதிருஷ்ட வசமாய் அச்சமயம் அந்தப் பக்கம் வந்த விசு இவ்வளவையும் பார்த்துவிட்டான்.’ கமலு வுக்கு இந்த ஊரில் ஆண் பிள்ளை சிநேகம் எப்படி உண்டாயிற்று? அதுவும் ஸேவாஸதனத்தில் இருக்கும்போது? தனியே யாரையும் அங்கிருந்து வெளியே அனுப்புவதில்லையே? அப்படியானால், கமலு நம்பிக்கைக்குப் பாத்திர மில்லாதவளா?’ என்று பலவாறு யோசனை செய்யலானான் அவன். 

அத்தியாயம்-8

‘நமது கவனம், இப்பொழுது மறுபடியும் குப்பிப் பாட்டி, ரங்கய்யன் ஆகியோரிடம் செல்லவேண்டி இருக்கிறது. ஊர் முழுவதும், கல்பகம் ஓடிவிட்டாள்’ என்ற பேச்சு சிறிது காலம் பலமாய் முழங்கி வந்தது.”அடீ! அந்த குட்டி ஓடினாற் போலே ஏதாவது இவளும் செய்துவிடப் போகிறாள்…” என்று, பேச்சுக்கிடையே அவ் விஷயத்தைக் கூறி அவரவர்கள் வீட்டுப் பெரியவர்கள், தங்கள் தங்கள் பெண்களை ‘காப்பாற்றலானார்கள்! ஆனால், நாள் செல்லச் செல்லப் பழைய சமாசாரங்களுக்கு மதிப்புக் குறைவதுபோல், ஊரில் எல்லோரும் கல்பகத்தை மறந்தே விட்டார்கள். 

குப்பிப் பாட்டி வெறும் வம்புப் பேச்சில் சிறந்தவள் என்பது மட்டுமல்ல தேள் கடிக்கு மந்திரித்தல், சுளுக்கு எடுத்தல், வீபூதி போடுதல், குழந்தைகளுக்கு வரும் ‘சங்கா தோஷ’த்திற்கு வைத்தியம் இவையெல்லாம் செய் வதனால் வேறு தனிப் பிரசித்தி பெற்றிருந்தாள். அவள் செய்து வந்த இன்னொரு ரகஸியக் காரியம் ‘வசிய மருந்து தயாரித்தல். ஆகவே, பாட்டி சிலவிற்குக் கஷ்டப்பட வில்லை. தாத்தா செத்துப் பல நாள் ஆகியும், பாட்டி தந்திரத்தினாலேயே ஜீவனம் நடத்தி வந்தாள். இவைக ளெல்லாம் அவளுக்குப் பயன்பட்டன. ஆனால், இதனால் எவ்வளவு குடும்பங்கள் நிர்மூலமாயின என்பது கடவுளுக் குத்தான் வெளிச்சம்! இத்தனை குடும்பங்களின் சாபமும் வீண் போகவில்லை.பாட்டிக்கு அதை அனுபவிக்கும் காலம் கிட்டினாற் போலவே தென்பட்டது. அதுவும் அவளுக்கு எவ்வளவோ விஷயங்களில் கூட்டாளியாயிருந்த ரங்கய்யன் மூலமே. ரங்கய்யனுக்குக் கூடப் பாட்டி வசிய மருந்து தயாரிப்பது தெரியாது. அவன் பிரம்மச்சாரி. உலகத்தில் உண்மையாக யார் மேலாவது அவன் அன்பு வைத்திருந்தான் என்றால் அந்தப் பேர்வழி அவன் தம்பிதான். அவன் வடக்கே வேலையாக, குடும்பத்துடன் வசித்தவன், ஒருமாதம் வீவில் மாயவரம் வந்தான். அவன் மனைவிக்குத் தன் கணவன் தன்னிடம் சரியாக இல்லை யென்ற நினைப்பு. வடக்கே இருக்கிறவர்கள் எவ்வளவோ ஜோராய் நடந்து கொள்ள, இவன் மட்டும் வைதீகமாயிருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. இங்கு சிலர் மூலம் கேள்விப்பட்டாள், குப்பிப் பாட்டி வசிய மருந்து செய்வதில் கெட்டிக்காரி என்று. மறுபடி வடக்கே போவதற்குள், எப்படியாவது தன் கணவ னுக்கு அம் மருந்தைச் செலுத்திவிட வேண்டு மென்ற ஆவல் உண்டாகிவிட்டது அவளுக்கு. பாட்டியை அடிக்கடி தனியே சந்தித்துப் பேசினாள். குப்பிப் பாட்டி, தன்னிடம் ‘வசிய மருந்தும் கிடையாது, ஒன்றும் கிடை யாது’ என்று சாதித்தாள். அவளோ விடுபவளாகத் தெரியவில்லை. அவளிடமிருந்து பாட்டி கைக்குத் தாராள மாய்ப் பணம் கிடைத்து வந்தது. கடைசியில் பாட்டி “இதோ பார் கோமதி! ரங்கய்யன் எனக்கு ரொம்ப வேண்டியவன். அவன் தம்பிக்கு நான் மருந்து கொடுப்ப தென்பது சரியில்லை. நான் உனக்காக அங்கலாய்ப்புப் பட்டாலும், அவனைப் பற்றித்தான் யோசனையாய் இருக்கு” என்று மழுப்பினாள். 

“பாட்டி! இந்த ஒரு உபகாரம் பண்ணினால் உங்க ளுக்கு எவ்வளவோ புண்ணியமுண்டு. கனகத்தின் அக முடையான் முன்பு ரொம்ப முரடனாய் இருந்தானாம். இப்போது உங்களால்தான் திருந்தியிருக்கானாம். நேற்று அவள் சொன்னாள்…” 

பாட்டி சிறிது நேரம் மௌனமா யிருந்து பின் குடு குடு வென்று உள்ளே போய் ஒரு சிறிய சிமிழை எடுத்து வந்தாள்.”இதோ பார்! இதை மூன்று தரம் பாலில் கலந்து கொடு! பிறகு என்னிடம் வா! ஆனால்,ஒன்று. இந்த விஷயம் ரங்கய்யனுக்குத் தெரிந்ததோ, போச்சு! ஆமாம்” என்று எச்சரித்தாள்.”பாட்டி! எனக்கென்ன புத்தியில்லையா? அதெல்லாம் ஜாக்கிரதையாய் இருப்பேன், கொடுங்கள்!” என்று வாங்கிப் போனாள் கோமதி. 

கோமதிக்குக் கொடுத்த மருந்து விபரீத பலனை உண்டாக்குமென்று பாட்டி நினைக்கவே யில்லை. கோமதியின் கணவனுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது! இந்த விஷ யம் கோமதியின் நான்கு வயதுக் குழந்தை மூலம் வெளி யாகிவிட்டது. அது பெரியப்பாவிடம் வந்து “பேப்பா… அம்மா… இந்த மருந்து கொடுத்தா, அப்பாக்கு, அப்பா குடிச்சுட்டா. இதோ பாரு!” என்று ஒரு சிமிழைக் கொண்டு வந்து ரங்கய்யனிடம் கொடுத்தது. ரங்கய்ய னுக்கு ஏதோ சந்தேகம் தோன்றவே கனகத்தைக் கூப்பிட்டு விசாரித்தான். நல்லதனமாய்ப் பதில் வராமற் போகவே மிரட்டினான். கனகம் விஷயத்தை கக்கினதோடு, பாட்டியின் போதனையால் தான், இந்த மாதிரிக் காரியம் தான் செய்ததாகவும் கூறிவிட்டாள். ரங்கய்யனுடைய கோபத்திற்குக் கேட்க வேண்டுமா!ஊர் முழுவதும் தம்பட்டமடித்தாற்போல் ஆகிவிட்டது. பாட்டிக்குத் தலையை வெளியே கிளப்ப முடியவில்லை. “சும்மா விடறேனா பாரு இவளை! என்னிடமேயா தன் கைவரிசையைக் காட்டுகிறாள்?” என்று உறுமினான் ரங்கய்யன். 

ஏற்கெனவே சிறிது நாளாய்ப் பாட்டியின் நடவடிக் கைகள் ஒன்றும் ரங்கய்யனுக்குப் பிடிக்கவில்லை. எடுத்ததற் கெல்லாம் ‘கமிஷன்’ கேட்கும் இந்தப் பாட்டியை எப்படியாவது, தொலைத்துவிட வேண்டுமென்று அவன் எண்ணியிருந்தான். இப்பொழுது சமயம் வாய்த்தது. ஒரு போக்கிரி ஆண் பிள்ளையின் பிரசாரத்திற்கு முன் ஓர் கிழப் பாட்டி எம்மாத்திரம்?பாட்டி அவமானம் தாங்காது ஊரை விட்டுக் கிளம்பி விட்டாள். மனச்சாட்சி என்று எதுவும் இல்லாதிருந்த அவளுக்குக்கூட ‘கல்பகத்திற் கிழைத்த கொடுமைக்கு இது பலன்! இது பலன்!’  என்று ஏதோ ஒன்று உள்ளுக்குள் சொல்லத்தான் செய்தது. கிழப் பிராணன் எங்கு போய்ச் செத்தாலும் பாதகமில்லை. ஊரை விட்டுத் தன்னைத் துரத்தி விட்டார்கள் என்னும்போது தனக்கே எப்படி இருக்கிறது? அப்படியிருக்க சின்னஞ் சிறு பெண். அந்தக் கல்பகம்! “அடியம்மா! உன் மனசு என்னபாடு பட்டதோ!” என்று ஒரு நிமிஷம் நினைக்கத்தான் செய்தாள் அவள். தனக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும்? 


யாரோ ஒரு புதுப் பேர்வழியுடன் கமலு பேசிக் கொண்டு போவதைக் கண்ட விசுவிற்கு மனம் இன்னும் சமாதானமடையவில்லை. ஒவ்வொரு தடவை விடுமுறை நாட்களுக்குச் செல்லும்போதும் “பாட்டி! கமலுவை அழைத்து வரவில்லையா?” என்று கேட்கும் வழக்கமுடையவன் இந்தத் தடவை விடுமுறையில் அந்தப் பிரஸ்தாபமே எடுக்கவில்லை. தாத்தாவும், பாட்டியுமோ, விசுவத்தின் கல்யாணத்தை முடிக்கும் அவசரத்தில், எங்கெங்கிருந்தோ வரும் ஜாதகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தனர். அவர் கள் காரியத்தில் கமலுவை மறந்திருந்தார்கள் என்றே கூற வேண்டும். விசுவத்தைப் பார்க்க யாராவது வந்தால். இந்தப் பெண்ணையா விசு அழைத்து வந்தான்’ என்று நினைக்க ஏதுவில்லாமல், ஒரு விதத்தில் அவள் இங்கு வராமலிருப்பதே நலம் என்ற எண்ணமும் அம்மணியம்மாளுக்கு இல்லாமல் போகவில்லை. 

கல்யாண விஷயத்தில் இதுவரையிலும் அசிரத்தை யாய் இருந்த விசுவமோ, ‘பாட்டி, சொற்படிக்கேட்பதே உசிதம். யார் என்ன வென்று அறியாமல், கமலுவின் மீது நட்புக் கொள்ளத் துணிந்தோமே?’ என்று ஒரு சமயமும், ஒருகால் அவள் குற்றமற்றவளானால், வீண் சந்தேகம் கொண்டதாகவல்லவா முடியும்?’ என்று மற்றொரு சமயமும் நினைக்கலானான். இந்தச் சமயம் சரோஜா இல்லாதது அவனுக்குப் பெரும் குறையாகத் தோன்றிற்று.அவள் இருந்தால் ஏதாவது யோசனை சொல்வாள். ‘முன்பே அண்ணா! கமலுவைப் பிரிந்திருப்பது உனக்குத்தான் கஷ்டம்!’ என்று கண்ணைச் சிமிட்டியவாறு கூறினாளே! அதில்தான் எவ்வளவு அர்த்தபுஷ்டி?” என்றெல்லாம் ஏங்குவான். 

அன்று தபாலில் பங்களூரி லிருந்து சரோஜா அவனுக்கு ஒரு கடிதம் எழுதி யிருந்தாள்.

“அன்புள்ள அண்ணாவுக்கு, 

நமஸ்காரம். இங்கு நடப்பது ஒன்றொன்றும் ஆச்சரியமாயிருக்கிறது. முதலாவது வெடிகுண்டு, என் கணவர் ஏற்கெனவே கல்யாணமானவராம், முதல் மனைவி இருக்கிறாளாம்! இதை என் மாமியாரே வந்து சொல்லிவிட்டுப் போனார்! ஆமாம், தாயாருக்கும் பிள்ளைக்கும் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் இந்த விஷயம் வெளியாயிற்று! இரண்டாவது, இங்கு ஒரு கடையில் நான் கமலுவைப் பார்த்தேன். என்னிடம் முகம் கொடுத்துப் பேசாததோடு ‘யார் நீங்கள்?’ என்று வேற்று மனுஷி மாதிரி பேசினாள். எதிர்க் கடையில் அவர் காத்திருந்தபடியால், நின்று பேசாமல் போய் விட்டேன். இருந்தாலும், நம்மிடம் அப்படிப் பழகினவள் இப்படி மாறிய காரணம் எனக்குப் புலப்படவே யில்லை. நமது வீட்டார் ஏதாவது அவளிடம் மனஸ்தாபப்பட்டு விட்டார்களா? எல்லாம் விவரமாய் எழுது. ஆவலாய் உன்பதிலை எதிர் பார்க்கும், 

உன் தங்கை,
சரோஜா 

இந்தக் கடிதத்தை வாசித்த விசு “எல்லாம் ஆச்சரியமாகவும், மர்மமாகவும்தான் இருக்கிறது !” என்று வாய் விட்டுக் கூறினான். என்ன கடிதம் என்று தெரிந்து கொள்ள அச்சமயம் உள்ளே வந்த அம்மணியம்மாள் ”என்னடா,ஆச்சரியம்?” என்று வினவினாள். “இல்லை, பாட்டி! சரோஜாவின் அகத்துக்காரருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி யிருக்கிறதாம். இவள் இளையாளாம். இந்த அழகில் மூத்தாள் உயிரோடு இருக்கிறாளாம்” என்றான் விசு. 

“அட, பாவி கெடுத்தானே காரியத்தை!” என்று இரைந்தாள் அம்மணி. 

“மெள்ளப் பேசு, பாட்டி! ஜானகி அடுத்த அறையிலிருக்கிறாள். அவளால் நம் விஷயம் ஒன்றுக்கு நாலாய் வெளியே போகிறது” என்றான் விசு. முதல் நாள்தான் விசுவம் தன் சிநேகிதன் மூலமாய்க் கேள்விப்பட்டான், ஜானகி அவர்கள் தாயாரிடம் வந்து இந்த வீட்டு விஷயங்களைப் பற்றிக் கூறியதை யெல்லாம். பிறகு பாட்டியும் பேரனும், ‘குசு குசு’ வென்று பேசாலானார்கள். 

அத்தியாயம்-9 

‘ஏற்கெனவே கல்யாணமாகி யிருக்கையில், தன்னிடம் அவன் சொல்லவில்லை, பார்த்தாயா’ என்ற கோபம் சரோஜாவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தணிந்தது. புத்திசாலியான அவள் அறிந்து கொண்டாள், அகமுடையான் எப்படிப்பட்ட சபல சித்தன் என்பதை. 

முதல் முதல் தனக்கு ஓர் எதிரி இருக்கிறா ளெள்பதைக் கேட்கையில் ஆத்திரம்தான் வந்தது அவளுக்கு. ஆனால் போகப் போக அந்த எதிரியின் மீது அனுதாபமும், கணவனின் மீது மனத்தாங்கலுமாக மாறிற்று அக் கோபம். ‘யௌவனப் பெண். வேறு கதியற்றவள். கேவலம் ஓர் ஆயிரம் ரூபாய் காசுக்காக அவள் மீது தப்பு ஒன்றுமில்லாத போது தள்ளி வைப்பதாம்! நானே அந்த முதல் மனைவியாக இருக்கவேண்டும் அப்பொழுது தெரியும், படுத்திவைக்கும் பாடு! ஆணுக்கொரு நியாயம்! பெண்ணுக்கொரு நியாயம்! அவளைத் தள்ளி வைத்து ஜோராய் வேறு கல்யாணம் செய்து கொண்டீர்களே, அவளும் அப்படியே செய்து கொண்டாளானால் எப்படி இருக்கும்! ஆனால், பெண்களின் குணம் அது அல்ல!’ என்று ராமுவிடம் சண்டை பிடித்தாள். 

இதைக் கேட்ட ராமு கல கல வென்று சிரித்தான். பின்பு தன் நண்பன் கண்ணனின் தூண்டுதலால் தான் அவளை யழைக்கப் போனதையும், அங்கு கேள்விப்பட்டதையும் கூறினான். “ஹும்! அதை உடனே சத்தியவாக்காய் நம்பி விட்டீர்கள், இல்லையா? நாளைக்கு நான் பிறந்தகம் போனால், என்னைப் பற்றியும் அப்படித்தானே எண்ணுவீர்கள்?” 

“அது இல்லை சரோஜா! முன்னாடியே என் தாயார் அந்தப் பெண்ணின் துர்க்குணங்களைக் கேள்விப்பட்டதாகக் கூறினாள். அதற்கு அனுகுணமாக அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஒரு முகமாய்க் கல்பகத்தைக் கெட்ட நடத்தையுள்ளவளென்றே சாதித்தார்கள்.” 

“ஹும்! அவள் தலையெழுத்து அப்படிப் பட்டம் வாங்க இருந்திருக்கும். இருந்தாலும் நான் சொல்கிறேன். அவள் கெட்டவளில்லை யென்று.” 

“அப்படித்தான் வீறாப்புப் பேசிப் போயிருக்கிறான். கண்ணன். அதிருக்கட்டும், சரோஜா! ஒருகால் கல்பகம் நல்லவளாகவே யிருந்து, கிடைத்தும் விட்டாளானால், என்ன செய்கிறது?”‘ 

“என்ன செய்கிறது, சொல்லட்டுமா? என் எதிரில், அவளிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். பிறகு என் சகோதரிபோல் எண்ணி அவளை இங்கு வைத்துக் கொள்வது.” 

சரோஜாவின் சாமர்த்தியமான பேச்சில் பூரித்துப் போனான் ராமு. அது சமயம் “ஸார், தபால்!” என்று கூவிய குரலும், அடுத்தாற்போல் சில தபால்களும் ஜன்னல் வழியே விழுந்தன. ஒன்று சரோஜாவிற்கு. இன்னொன்று ராமுவின் தகப்பனார் எழுதியது. மூன்றாவது கண்ணனின் கடிதம். சரோஜாவிற்குப் பாட்டி எழுதிய கடிதத்தில் விசுவிற்குக் கல்யாணம் நிச்சயமாகி யிருப்பதாகவும், மாப்பிள்ளையுடன் வரும்படியும் எழுதியிருந்தது. ராமுவின் தகப்பனாரோ அவனைக் கண்டபடி வைது எழுதியிருந்தார். தாயாரை உதாசீனம் செய்த அவன் முகத்தில் இனி விழிப்பதில்லை யெனக் கண்டிருந்தது அக் கடிதத்தில். கடைசியில் கண்ணன் கடிதத்தைப் பிரித்தான். ராமு, அதில், 

“நண்பா!

கல்பகத்தைக் கண்டு பிடித்துவிட்டேன். உடனே புறப்பட்டு வா; நான் வழக்கமாய்த் தங்கும் அறையில் தான் தங்கியிருக்கிறேன். 

சென்னை. 
கண்ணன்” 

”என்ன? உன் இஷ்டப்படியே ஆயிற்று, இல்லையா?” எனக் கேட்டான் ராமு மனைவியை. சரோஜா புன்சிரிப்புடன் கடைக் கண்ணால் நோக்கினாள் அவனை. 


ஸேவாஸதனத் தலைவிக்கு எப்பொழுதும் வருகிற மயக்கம்தான் அன்று சினிமாக் கொட்டகையிலும் வந்தது. வெளிக் காற்று பட்டால் குணமாகுமென அவள் வெளியே வந்தாள். சிறிது தூரம் நடப்பதற்குள் மயங்கி விழுந்துவிட்டாள். அங்கிருந்த சிலர் அவளை ஆஸ்பத்தி ரிக்கு அப்புறப்படுத்தினர். மறு நாள்தான் ஆவலுடன் காத்திருந்த மாணவிகள் அறிந்தார்கள். தங்கள் தலைவி ஆஸ்பத்திரியில் இருக்கும் விஷயத்தை. முதல் நாள் முழுவதும், அவள் பிரக்ஞை யின்றிக் கிடந்தபடியால், ஸேவா ஸதனத்திற்கு ஆஸ்பத்திரியிலிருந்து ஆள் வரவில்லை. கமலு தற்சமயம் அங்கு மாணவியாய் இல்லை. தலைவிக்கு அடுத்த பதவியில் இருக்கிறாள் அவள். தலைவிக்கு உடம்பு குணமாகும் வரையில் கமலு தன்னை யாரோ வந்து விசாரித்த விஷயங்களை அவளிடம் கூறவேயில்லை. இப்பொழுது அவள் அநேகமாய் விடுமுறை நாட்களைத் தலைவியின் வீட்டிலேயே கழிக்கலானாள். 

ஒரு விடுமுறைத் தினத்தன்று தலைவி தங்கம்மாளின் வீட்டில் கமலுவும், தங்கம்மாளும் உட்கார்ந்து ‘கேரம்’ ஆடிக்கொண் டிருக்கையில் “யாரோ வந்திருக்கிறார்கள் அம்மா!” என்று வேலையாள் வந்து கூறி ஒரு ‘விசிடிங் கார்டை’யும் கொடுத்தான். “வரச்சொல்” என்றாள் தலைவி. கமலு எழுந்து உள்ளே போய்விட்டாள். 

“வா, வா,கண்ணா! ஏது இவ்வளவு தூரம்?” என்று விசாரித்துவிட்டுக் கூடவந்த மனிதரை நோக்கினாள் தலைவி. “இவர் என் அத்யந்த நண்பர், ராமகிருஷ்ணன்” என்று அறிமுகப் படுத்தினான் கண்ணன். சிறிது நேரம் லோகாபிராமமாய்ப் பேசியிருந்த பின் கண்ணன் “உங்களை ஒரு விஷயம் கேட்க ஆவலுடன் வந்தேன். கேட்கட்டுமா?” என்றாள். 

“ஆஹா,கேளேன்!” 

“தங்களிடம் கல்பகம் என்ற பெண் ஒருத்தி இருக்கிறாளா?” 

“ஒன்றென்ன? நாலு கல்பகம் இருக்கிறார்கள். எதற்கு?” 

“எங்கள் உறவில் கல்பகம் என்ற பெண்ணைத் தேடி வந்தோம்…” 

“உங்கள் உறவா? அதெப்படி? இங்கு ஒவ்வொரு பெண்ணையும், உறவினர்களோ நண்பர்களோதான் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இரண்டு கல்பகத்தை அவள் அண்ணாமார்கள் சேர்த்துப் போனார்கள். மூன்றாவது கல்பகத்தைக் கணவனே படிப்பிற்காகச் சேர்த்தான். நாலாவதுதான், பாவம், பதினான்குவயது விதவை. அவளுடைய அக்கா வந்து சேர்த்துவிட்டுப் போனாள். இவர்களில் நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும் சொல்லுங்கள். நீங்கள் யார் என்பதையும் அவர்களிடம் கூறி, அவர்கள் சம்மதித்தால் என் எதிரில் பேசலாம். ஆனால், இப்பொழுதைக்கு என்னை மன்னிக்கவேண்டும், மிஸ்டர் கண்ணன்! பெண்களை ஏற்றுக்கொண்டு நடத்தும் பொறுப்பு எப்படிப்பட்ட தென்பதை உங்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியதில்லை. இரண்டு நாள் கழித்து வந்தீர்களானால், நீங்கள் சொன்ன விஷயத்தை அவர்களிடம் கூறுவேன்.” 

“கல்பகத்தின் கணவன் ராமு நேரில் வந்ததாக கூறுங்கள் ” என வேண்டினான் கண்ணன். “ஆகட்டும்!” என்றாள் அவள். திரை மறைவிலிருந்து எல்லாவற்றையும் நோக்கின கமலு”‘அப்பாடா!” என வொரு பெருமூச்சு விட்டாள். “சினிமாவில் கண்ட ஆசாமிதான் இந்தக் கண்ணன். இவர்கள் யாரைத் தேடுகிறார்கள்? நல்ல வேளை! வனஜாக்ஷியின் ஆட்கள் இல்லை” என்று திருப்தி யடைந்தாள் அவள். 


கண்ணனும் ராமுவும் அதிருப்தியுடன் வீடு நேரக்கி நடந்தனர். ராமுவிற்கு இடையில் ஓர் சந்தேகம் உண்டாகி விட்டது. “என் கண்ணா! ஓர் வேளை உனக்கு ஆள் மாறாட்டமாகி விட்டதோ? வெறும் படம்தானே உன்னிடம் இருக்கிறது? அதை வைத்துக்கொண்டு உன்னால் எப்படி கண்டு பிடிக்க முடியும்?” என வினவினான் அவன். 

“என்ன, ராமு! அவ்வளவு சிந்தனை யில்லாதவனா நான்? சந்தேகித்துத்தான், பெயர் என்னவென்றுகூட விசாரித்தேன். படத்திலுள்ள வயதைவிடச் சிறிது பெரியவளாகத் தோன்றினாள். மற்றபடி அதே ஜாடை, அதே பெயர். எப்படி வித்யாசமிருக்கும்? கட்டாயம் கல்பகம் ஸோவாஸதனத்தில்தான் இருக்கிறாள். இரண்டு நாள் கழித்துப் போனால் விஷயம் தெரிகிறது, பார்!” 

“என்னவோ அப்பா! எனக்கு நம்பிக்கையாய் இல்லை” என்றான் ராமு. 

கண்ணனும் ராமுவும் நேரே ராமுவின் மாமனார் வீட்டை அடைந்தனர். கண்ணனைச் சரோஜாவிற்கு நன்றாகத் தெரியும். ஆகவே, கண்ணன் எதிரிலேயே சரோஜாவை அழைத்தான் ராமு. “எங்கே கல்பகம்? அவளை அழைத்து வரவில்லையா” என வினவினாள் சரோஜா, உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாய். 

”சரோ! நான் நேராக இங்கிருந்து கண்ணன் அறைக்குச் சென்றேன். அவன் கல்பகத்தைப் பார்த்து பேசினானாம். அவள் ஸேவாஸதனத்தில் இருக்கிறாளாம்…..” 

“ஓ !ஸேவாஸதனத் தலைவி எனக்கு மிக வேண்டியவள் ஆயிற்றே! என் சிநேகிதி கூட ஒருத்தியிருக்காள் அங்கே” என்றாள் சரோஜா. 

“இருக்கலாம்! அந்தத் தலைவி கல்பகத்தை நாங்கள் காண்பதற்கு ஆயிரம் சால்ஜாப்பு சொல்லுகிறாள். ஒரு கால் நீ போனால்…” 

“கட்டாயம் நானும் உங்களுடன் வருகிறேன். என் தோழியையும் விசுவந்தின் கல்யாணத்திற்கு அழைக்க வேண்டும்” என்றாள் சரோஜா. 

ராமுவும் கண்ணனும் மறுபடியும் வெளியில் போனார்கள். சற்று நேரத்திற்கெல்லாம், விசுவம் வந்தான். “என்ன அண்ணா! கல்யாணம் ஆகப்போகிறவன் மாதிரியே இல்லையே உன்னைப் பார்த்தால்!அழுது வடிகிறாயே?” என்று பரிகசித்தாள் சரோஜா. 

”சரோஜா! உனக்குச் சிரிப்பாயிருக்கிறது என்னைப் பார்த்தால், இல்லையா? என் மனது படும் வேதனை தெரியுமா உனக்கு? உனக்கு நன்றாகத் தெரியும், நான் கமலுவை விரும்புகிறேனென்று” என்றான் விசு. 

”ஊம்… பிறகு ஏன் சம்மதித்தாய் இந்தக் கலியாணத்திற்கு? கொஞ்ச நாட்களாய் நீ கமலுவைப் பார்க்காததன் காரணம் என்ன?” 

“சரோ ஒரு நாள் சினிமாக் கொட்டகை வாசல் வழியாக கமலு வேறொரு ஆண் பிள்ளையுடன் டாக்ஸியில் போவதைக் கண்டேன். என் மனது குழம்பியது…” 

“உம்! அண்ணா! நீ கூடவா சந்தேகத்திற்கு இடம் கொடுக்கிறாய்? கமலு நல்லவளோ கெட்டவளோ எனக்குத் தெரியாது. ஆனாலும், ஏதோ ஒரு ஆபத்து என்றால் கூட ஒருவருடன் வெளியே போகக்கூடாது என்று நீ எப்படி நினைக்கலாம்? அப்படிச் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் நீ அதை நேரில் தீர்த்துக்கொள்ள வல்லவா முற்படவேண்டும்? என் கணவர் தன் முதல் மனைவியைச் சந்தேகித்துத்தான் பிரிந்துவிட்டாராம். இப்போது அவளைத் தேடி, அவர், நான் எங்கள் நண்பர் கண்ணன் மூன்று பேருமாக அலைகிறோம். சற்று முன்புதான் கண்ணன் வந்து போனார். நீ எங்கே சென்றிருந்தாய் அப்போது? இருக்கட்டும் நாளைய தினம் அவர்கள் புறப்பட்டு முன்னே ஸேவாஸதனம் போகட்டும். நாமும் பின்னாடி போகலாம். எனது கணவரின் முதல்தாரம் அங்கிருப்பதாகக் கேள்விப்பட்டாராம் கண்ணன். நாமும் அப்படியே போய்க் கமலுவைப் பார்ப்போம்” என்றாள் சரோஜா. 

”சரோ…! உன் புத்திக்கு இணையில்லைதான்” என்று ஒப்புக் கொண்டான் விசுவம்.

– தொடரும்…

– வனிதாலயம் (நாவல்), முதல் பதிப்பு: டிசம்பர் 1946, பவானி பிரசுரம், ராயவரம், புதுக்கோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *