கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2024
பார்வையிட்டோர்: 2,226 
 
 

(1946ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

ராமு தன் மனைவிக்கு எழுதின கடிதத்திற்குப் பதிலே இல்லை. இது விஷயத்தில் ராமு பேசாம லிருந்தபோதி லும், கண்ணன் விடுபவனாகத் தோன்றவில்லை. “என்னடா! இன்னுமா ‘மேம்ஸாஹப்’ பதில் போடவில்லை? நீ பண்ணின அநியாயத்திற்காக கோபித்துக் கொண்டு இருக்கிறாளோ, என்னவோ?” என்று அவனை நச்சரித் துக்கொண்டே இருந்தான். கடைசியில் ஒருநாள் சென்னை முத்திரையிட்ட கடிதம் வந்தது. ஆவலுடன் பிரித்தான் ராமு. அவன் முகம் முதல் வரியைப் படித்ததுமே சுணுங்கி யது கடிதத்தைக் கண்ணனிடம் கொடுத்தான். அதில் 

“ஐயா, முதலில், தெரியாமல் தங்கள் கடிதத்தைப் பிரித்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தாங் கள் எழுதிய விலாசத்திலுள்ள பெயரே என் பெண்ணிற் கும் இட்டிருக்கிறேனாதலால், அவள் அதை பிரித்துவிட் டாள். கல்யாணமாகாத அவளுக்குக் கணவன் என்ற முறையில் கடிதம் வந்திருப்பதைக் கண்டு, ஏதோ போக்கி ரித்தன மென்று எண்ணி அழுதாள். பின்பு, என்னிடம் விஷயத்தைக் கூறிக் கடிதத்தையும் கொடுத்தாள்.என க் கும் முதலில் கோபம்தான் வந்தது. பின்பு, அந்த மாதிரி காலித்தனமான கடிதமானால், கடிதத்தின் தலைப்பில் தன் விலாசத்தை யாரும் கொடுக்கமாட்டார்களே என்ற சிந் தனையும் பிறந்தது. பிறகு விசாரித்ததில், சில மாதங்களுக்கு முன்பு இதே வீட்டில்,கல்பகம் என்ற ஒரு கல்யாணமான பெண் தன் தாயாருடன் வசித்ததாகவும், தாயாரும் பெண் னும் ஒருநாள் எங்கேயோ புறப்பட்டுப் போய்விட்டார்க ளென்றும் தெரியவந்தது. அவர்களைப்பற்றி வேறு எதுவும் தெரியவில்லை. ஆகவே அனாவசியமாகத் தங்களைச் சிரமப்படுத்தக் கூடாதென்று இக் கடிதம் எழுதலானேன், என்று எழுதப்பட்டிருந்தது. குப்புசாமி” 

“தெய்வம் வரங்கொடுத்தாலும், பூசாரி வரங் கொடுக்கவில்லை என்ற மாதிரிதான் இருக்கிறது இந்தக் கதை’ எனச் சிந்தனையுடன் கூறினான் கண்ணன். பிறகு அவனாகவே ‘சரி, அடுத்த வாரம் நான் சுற்றுப் பிரயாணம் போகப்போகிறே னல்லவா? அப்பொழுது விசாரிக்கிறேன். அதிலும் காரியம் நடக்காவிட்டால் பேப் யரில் விளம்பரம் செய்ய வேண்டியதுதான்” என்றான். 

“சேச்சே! பேப்பரில் போடுகிறதாவது, நான் சென்ஸ்!” என்றான் ராமு. 

“ஆமாம்! ‘முன்னாடி விட்டு விட்டுப் பின்னாடி துரத் திப் போகிறான்’ என்று நாலுபேர் பரிகசிப்பார்கள், அது தானே?”

“அதுமட்டுமில்லை. என் புதிய வேட்டகத்தார் ரொம்பப் பொல்லாதவர்கள். முன்னாடியே ஒரு பெண் டாட்டி இருக்கும் சமாசாரத்தை அவர்களிடம் என் அம்மா சொல்லவே யில்லையாம். இப்பொழுது, திடீரென்று பேப்பர் மூலம் தண்டோரா போட்டால் கேட்க வேண்டாம்.” 

“ஊம்! இவ்வளவு பயமுள்ளவன் கல்பகத்தை அழைத்து வந்து தைரியமாக எப்படி வைத்துக் கொள்வாய்?” என்று சந்தேகம் தோன்றக் கேட்டான் கண்ணன். 

“அது வேறு விஷயம். என் மனைவி வயதில் இளையவ ளானாலும் நல்ல பெருந்தன்மை, அதை நான் கண்டு கொண்டேன்.” 

“சரி, எப்படியாவது செய்து கொள்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் கண்ணன். ‘கண்டு கொண்டானாம், கண்டு! முன்னாடியே கல்பகத்தின் விஷ யத்தில் இந்தப் புத்தியைக் காணோம். பாவம்! அந்தப் பெண்ணின் தலைவிதி இப்படி இருக்கிறது” என நினைத்துக் கொண்டான் அவன். 

இங்கு நாம் கண்ணனைப் பற்றிய சில வரலாறுகளை அறிவது நல்லது. கண்ணனைப் பொதுவாக ‘ஆபத் சகாயன்’ எனக் கூறினால் போதும். ராமு தன் முதல் மனைவியைப் பற்றி கண்ணனிடம் கூறிய பொழுது, ‘நீ நீ, வேறு கலியாணம் செய்து கொண்டால் பிறகு அந்தப் பாவத்திற்கு விமோசனமே கிடையாது’ என்று அவனுக்கு எவ்வளவோ புத்திமதிகள் சொன்னான். சபலசித்தனான நாமு கண்ணன் வெளியூர் போயிருக்கையில், தாய் தந்தை யர் வசப்பட்டு மறு மணம் புரிந்துகொண்டான். கண்ண னுக்கு இது விஷயத்தில் மிகுந்த கோபம்தான். ஆயினும் என்ன செய்வது? அனியாயமாய் ஒரு பெண்ணின் வாழ்க்கை கெடாமலிருக்கும்படி ஏதாவது செய்ய வேண்டியதுதான் இனி. ‘ராமுவுக்கும் நல்ல வேலை கிடைத்து விட்டது. இனி அவனால், கொஞ்சமாவது சுயேச்சையாக நடக்க முடியும்’ என்று தீர்மானித்துத் தான் நண்பனைக் கடித மெழுதும்படி வற்புறுத்தினான் அவன். சுமார் இருபது வயதுள்ள ஒரு மங்கை, கதி யற்று நிற்பதைக் கற்பனை செய்து பார்க்கக்கூட அவனால் முடியவில்லை. அதை நினைக்கும் போதே உடல் துடித்தது அவனுக்கு. ‘ஐயோ! அவள் உள்ளம் எப்படித் தவிக் குமேர்? கல்யாணம் செய்துகொண்டு பிறகு நடுக் காட்டில் விட்டுவிட்ட கணவனை அவள் சபித்தாளானால் அதில் என்ன தப்பு?’ என நினைக்கையில் ராமுவின் மீது வெறுப்புக்கூட ஏற்பட்டது. 

ராமுவின் வீட்டை விட்டுப் புறப்படும்போது அவ னுடைய எண்ணம் எல்லாம் கல்பகத்தையும் அவளுடைய தற்பொழுதைய இருப்பிடத்தைப் பற்றியுமே இருந்தது. கல்பகத்தின் புகைப்படம் ஒன்றைத் தன் தகப்பனார் கிழித் துப் போட்டு விட்டாரென்று ராமு கூறியிருக்கிறான். ஆமாம் ஒருமுறை அந்தச் சிறுசிறு துண்டுகளைச் சேர்த்து வைத்து முழுப் படமாக ராமு அவனிடம் காட்டியுமிருக் கிறான். ஹும்! துப்பவர்களால்தான் முடியும் அவளைக் கண்டுபிடிக்க. ஆனாலும் அவளைக் கண்டுபிடிக் காமல் மட்டும் இருப்பதில்லை’ என்று நிச்சயம் செய்து கொண்டுதான் கிளம்பினான். குப்புஸாமியின் கடிதமும், விலாசமும் அவன் கையில்தான் இருந்தது. சென்னையில், அவனைக் கொண்டு ஏதாவது தகவல் அகப்படுமோ என்று பார்க்க நேரே அங்கு சென்றான். 


கமலுவுக்கு அம்மணியம்மாள் வீட்டில் எல்லாச் சௌகர்யங்கள் இருந்தும், மன அமைதி இல்லை. சரோஜா, அவள் மீது உயிராக இருந்தாள். விசுவம் அடிக்கடி சரோஜாவின் மூலம் நல்ல புத்தகங்கள் படிக்கத் தருவான்.ஜானகியைப் போலின்றிக் கமலு சுறுசுறுப்பாய் வேலைசெய்வதைக்கண்டு அம்மணியம்மாளுக்கும் ஆனந்தம் தான். “அதென்னவோ அந்தப் பெண், யந்திரம் மாதிரி தான் வேலை செய்கிறது; பாவம் அதிர்ஷ்டம்தான் கட்டை!” என்பாள் அம்மணி அம்மாள். தன் பெண்ணிடம். 

“ஒருநாள் பெண் சொன்னாள்: பாவம், அம்மா! கேட்டால் அவள் மனசுக்குக் கஷ்டமா யிருக்குமே யென்றுதான் கேட்பதேயில்லை. ஒருநாள் அதிகாலையில் மூன்று மணிக்கு விழித்துக் கொண்டு விளக்கைப் போட் டேன். பக்கத்தில் கமலு படுத்திருந்தாள். ‘தீர்த்தம் இங்கே இருக்கிறதா’ என்று கேட்க அவள் பக்கம் திரும்பினேன். ஐயோ! அப்பொழுது அவள் முகத்தைப் பார்த்ததும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பகல் முழுவதும் எல்லோரிடமும் சகஜமாய் இருக்கிறவள். ராத்திரி முழுவதும் அழுகிறா ளென்பதை அப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். ‘கமலு!’ என்னை உன் சகோதரியாக நினைப்பது வாஸ்தவமானால் நீ இப்படி வருத் தப்படுவது சரியல்ல… என்று சொல்லிச் சமாதானம் செய்தேன் “யார் கண்டார்கள். அதன் மனசில் என்ன குறையோ, என்னவோ?” என்றாள் பாட்டி. அங்கு ஒரு பக்கமாகப் புடவை உலர்த்திக் கொண்டிருந்த ஜானகியின் காதில் இந்தப் பேச்சுக்கள் விழாமலா இருக்கும்? 

ஜானகியின் மூலம் வெளியே பலர் பலவிதமாய்ப் பேசத் தொடங்கினர். அம்மணியம்மாளின் ஒன்றுவிட்ட தங்கை யொருத்தி “என்னடி,அக்கா! ஊரெல்லாம் பேச் சாய் இருக்கிறது ராஜா மாதிரி இருக்கிற உன் பேரனுக் குப் பெண் அகப்படவில்லையா? எங்கிருந்தோ எவளையோ இழுத்துக்கொண்டு வந்திருக்கிறாள் என்று ஏதேதோ சொல்லுகிறார்களே?” என்று தமக்கையைக் கேட்டாள். 

“இது என்னடி அபாண்டம்? சொன்னவர்கள் யார் சொல்லு!” என்று இரைந்தாள் அம்மணி. 

“யார் என்று யாரைப் போய்ச் சொல்ல முடியும்? ஊர்வாயை மூட முடியுமா?” என்றாள் அவள். அம்மணி அம்மாளுக்கு உள்ளுக்குள் பீதிதான். ‘இத்தனை நாளாக இந்த ஊரில் நல்ல பெயரோடு இருந்துவிட்டு, இப்பொழுது நமக் கெதற்கு அனாவசிய அபவாதம் ?” என்று எண்ணி னாள் அவள். அன்று பிற்பகல் விசுவைக் கூப்பிட்டு “நாளைக்கே விதவைகள் விடுதியிலாவது ஸேவா ஸதனத்தி லாவது கமலுவை நானே கொண்டுபோய்ச் சேர்த்துவிடப் போகிறேன்” என்று தீர்மானமாகக் கூறிவிட்டாள். விசுவத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது. பிறர் சொல் வது ஒரு பக்கம் இருக்க உண்மையிலேயே அவன் கமலுவைக் காதலிக்கத் தொடங்கி விட்டான்! ஆனால், பாட்டி யின் கண்டிப்பான மொழிக்கு எதிர் மொழி சொல்ல அவனால் முடியவில்லை. அவனது பெற்றோர் இறந்ததிலி ருந்து, அவனையும் சரோஜாவையும், ஒரேமாதிரி வளர்த்து வருகிறாளே, பாட்டி வேறு யார் அப்படி தன் பேத்தியை யும் பிறர் பிள்ளையையும் ஒரே தராசில் நிறுத்துப் பார்ப் பார்கள்? விசுவம் பரமசிவய்யரின் பேரன் அல்ல என்பது வெளியார்களில் அனேகமாகப் பலருக்குத் தெரியாதே! ஊம்! எப்படியும் கமலு இந்த ஊரில் தானே இருக்கப் போகிறாள், பார்த்துக் கொள்வோம்! இப்படி யெல்லாம் மனத்தைச் சமாதானம் செய்து கொண்டான் விசுவம். 

கமலு… ஆமாம், அவளுக்கு என்று அபிப்பிராயம் ஏது? அவள் அங்கிருந்து போக விரும்புகிறாளா, இல்லையா என்று அவளை யார் கேட்கப் போகிறார்கள்? இங்குதான் இருப்பேன் என்று சொல்ல அவளுக்குச் சுதந்திரம் உண்டா இந்த ஜன்மத்தில்? ஊர் பெயர் தெரியாத அனாதையைச் சம்ரட்சித்தவர்களுக்கு அந்தப் பொறுப்பை விட்டு விட்டாள் கமலு, இருந்த போதிலும், ஸேவா ஸத னத்தில் அம்மணியம்மாள் அவளைக் கொண்டு விட்டுத் திரும்புகையில் கமலு அழுதேவிட்டாள். அம்மணியம்மா ளுக்கும் அவள் மீது பாசம் உண்டாகியிருந்ததால், “விடுமுறை நாட்களில், வீட்டிற்கு வந்து போய்க்கொண் டிருக் கலாம், கவலைப்படாதே!” என்று ஆறுதல் மொழி கூறி ஸேவா ஸதனத் தலைவியிடமும் கமலுவைப்பற்றி வெகு வாய்க் கூறிவிட்டு வந்தாள். 

அத்தியாயம்-5

பட்ட காலிலேயே படும் என்பார்கள். மற்றவர்கள் விஷ யத்தில் அது எப்படி யிருந்தாலும், கல்பகத்தின் விஷ யத்தில், அது உண்மையாகத்தான் இருந்தது. தாயாரின் உடல் நலம் ஒரு பக்கம் குன்றிக்கொண்டு வர, ரங்கய்ய னின் ஹிம்சையோ சொல்லத்தரமில்லாது. அதிகமாகிக் கொண்டு வந்தது. ராஜம் தன் மாமா வீட்டிற்குப் போய் விடவே, தற்சமயம் ஏன் என்று கேட்பாரில்லாமல்தான் இருந்தாள் கல்பகம். அந்த ஊரில் ஒரு சிலர் அவளுக்காக அங்கலாய்ப்புக் காட்டியபோதிலும், அனேகர் அவளுக்கு விரோதமாகப் பேசுவதைக் கண்டு, பலர் ஒத்தாசைக்கு வரக்கூடப் பயந்து வாளாவிருந்தனர். 

கடைசியில் கல்பகத்தின் தாய் இறந்த அன்று பிணம் தூக்கக்கூட ஆள் கிடைக்காமல் அவள் தவித்த தவிப்பு வர்ணிக்கத் தரமன்று. இது வரையிலும், தன் விதியையே நொந்துவந்த கல்பகம் அன்றுதான் சபதமிட்டாள்: “இவ்வளவு கடிதம் போட்டும் ஏன் என்று கேட்காமல் தன்னை இந் நிலைமையில் விட்டு விட்ட கணவன் ஒருகால் என்றாவது ஒரு நாள் தன்னைக் கூப்பிட்டாலும் அவனுடன் போவதில்லை ‘” என்று, ஒரு வழியாய்ப் புரோகிதர்களுக்கு ஆசைகாட்டி, தன் கழுத்துச் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்து, தாயாரின் கிரியைகளைச் செய்தாள் அவ் வீரப் பெண்மணி. அது வரையிலும், கடமையை எண்ணித் தைரியத்துட னிருந்த கல்பகத்திற்கு அன்னையின் கிரியை கள் ஆனபின்பே தனது நிராதரவான நிலைமை புலப்பட் டது. தனியே உட்கார்ந்து பைத்தியக்காரிபோல் புலம்ப லானாள் அவள். “ஈசுவரா! இதென்ன கொடுமை! உலகில் பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்களே? இந்த மனிதர்கள் பேயைவிடக் கொடூரமானவர்களா? வேறொன்றும் வேண்டாம் தங்கள் காலடியில் வந்து வேலைக்காரிபோல் உழைக்கவாவது சம்மதமளியுங்கள் என்று என் சுயமரியாதையை விட்டுக் கணவனுக்குக் கடிதம் எழுதினேனே! சே ! இவ்வளவு கல் நெஞ்சா! யாழும் பெண் ஜன்மம் ! அனாதையான பெண்ணிற்கு அழ கும். இளமையும் கொடும் தீமை யிழைப்பவை யல்லவா? கணவன் விட்டுவிட்டான், இவள் வாழாவெட்டி’ என்ற தைரியத்தில்தானே ரங்கய்யனுக்கு இவ்வளவு துணிச்சல் ஏற்பட்டது? ஆதியில் அவன் நல்லவன்போல் அடிக்கடி வந்து பழகினபோது, அம்மா கபடில்லாமல், தன் குடும்ப விஷயங்களை அவனிடம் கூறினதால்தானே அப் பாபி அறிந்துகொண்டான், எனக்கு, கதி யே துமில்லை யென்று… ஈசுவரா! என்றால் உன்னைப் பழிக்காமல் இருக்க முடியவில்லை. உண்மையில் நீ இருப்பது நிஜமானால், ஏன் அநியாயங்கள் நடப்பதை பார்த்துக்கொண் டிருக்கிறாய்? என்ன வென்று நோவது? யாரைப்போய் தஞ்சம் அடைவது?” என வாய்விட்டுக் கதறினாள். 

“கல்பகம்! என் இப்படி வருந்துகிறாய்? ஆதியிலிருந்து நான் சொல்லி வருகிறேன். இன்றும்,இப்பொழுதும், இதைவிட உயர்த்தியான பல வீடுகளுக்கு உன்னைச் சொந்தக்காரியாக்க நான் காத்திருக்கிறேன்.” என்ற குரல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் கல்பகம். நகை முகத்துடன் வாசற்படி யருகே நின் றிருந்தான் ரங்கய்யன். 

கல்பகம் பெண் புலிபோல் சீறினாள். “பாவி! திக் கற்ற ஒரு பெண்ணை ஏன் இப்படி ஹிம்சிக்கிறாய்? சேச்சே! அற்பப் பதரே! என் கண் எதிரில் நிற்காதே…” என்று கத்தினாள் அவள். 

கெஞ்சலாகப் பேசிய ரங்கய்யன் மிஞ்சத் தொடங்கினான்: “ஒ ஹோ! கோபம் வருகிறதோ? சரி. சரி. ஏதோ கடைசி முறையாகக் கேட்டேன். நாளையிலிருந்து வீடு என்னுடையது. சாயந்திரம் வருகிறேன். யோசித்துச் சொல்.” பதிலுக்குக்கூடக் காத்திராமல் ரங்கய்யன் வெற்றி வீரன்போல் வெளியே நடந்தான். 

“பார்ப்போம். ஊரையே அவளுக்கு விரோதமாக்கி யிருக்கிறேன். கிளி கூண்டைவிட்டு எங்கேதான் செல்லும், பார்க்கலாம்!” என எண்ணிக்கொண்டான் அவன். 

ஆனால், மாலையில் அவன் வந்து பார்க்கையில், அவளை வீட்டில் காணோம். கடைத் தெருவுக்குப் போயிருப்பாள் என்றெண்ணிக் காத்திருந்தான்.ஊஹும்! ஒரு வார மாகியும் கல்பகம் யார் கண்ணிலும் படவேயில்லை.கல் பகம் திடீரென்று ஊரைவிட்டுப் போனது, அவ் வூரில் வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு, அவல் கிடைத்தது போலாயிற்று. 

இதே சமயம்தான் கண்ணன் சென்னையில் எப் படியோ தகவல் விசாரித்துக்கொண்டு, கல்பகம் மாயவரத் தில் இருப்பதாக அறிந்து, ராமுவுடன்கூட மாயவரம் வந்தான். முதன் முதல் அந்த ஊரில், அவன் கண்ணில் பட்டது ரங்கய்யன்தான். ”ஏன் ஸார் ! இந்த ஊரில், அலமேலு அம்மாள், கல்பகம் என்று தாயும்,பெண்ணும், சென்னையி லிருந்து வந்து குடியேறினார்களா? என அவ னைத்தான் விசாரித்தான். 

“ரங்கய்யன் நீங்கள் யார்?” என்று கேட்டுக்கொண் டிருக்கும்போதே குப்பிப் பாட்டியும் அங்கு வந்து சேர்ந்தாள். ”அப்பா! ரங்கய்யா! பொம்மனாட்டி விஷயம். பிறத் தியாரிடம் ஒன்றையும் சொல்லாதே.” என்றாள் அவள். ராமுவுக்கு ஒருவித ஆவல் பிறந்தது.”அப்படி என்ன சொல்லத் தகாத விஷயம், பாட்டி”? என்று கேட்டான். 

“இல்லே! ரங்கய்யன் வெகுளி. எதையும், நமக் கென்ன என்று விட்டுவிட்டுப் போகமாட்டான்.யார் எப்படிப் போனால் நமக்கென்ன என்று இனிமேலாவது இரு. ஒருத்தியைத் திருத்த நாம் பார்த்தால் முடியுமா? அவரவர்கள் பிறந்த வழி…” என்று ஏதோ சம்பந்தமில்லா மல் பேசினாள் அவள். 

ராமுவின் ஆவல் வளர்ந்தது. கண்ணா! அங்கே. எங்கேயாவது விசாரிக்கலாம், வா!” என்று கண்ணனை இழுத்துக்கொண்டு கிளம்பினான். அவர்கள் போனபின் ரங்கய்யன் “பாட்டி! ரொம்ப நன்றாக நடித்தீர்கள்” என்றான். 

“நடிப்பு பிரமாதமா? எத்தனையோபேர் சினிமாவிலே நடிக்க வில்லையா? ஆமாம். அந்தப் பிள்ளையாண்டான் யாரென்று நினைக்கிறாய்?” என்று ஒரு கேள்வியைப் போட்டாள் அவள். 

“அதுதான்…கற்பகத்தின் அகமுடையானாய்த்தான் இருக்கும்…” அவனேதான். நல்லவேளை, அவன் வருவதற் குள் அவளும் ஒழிந்தாள். ஆமாம்! நான் வீட்டுக்குப் போகிறேன். நாளைக்குத் துவாதசி, சமையலுக்கு நல்ல கறி காயாக ஏதாவது அனுப்பிவை” என்றாள் பாட்டி. “ஊம், ஆகட்டும்” என்றான் அவன். பாட்டி தலை மறைந்ததும் ‘கிழச் சனியன்! பெரிய வேலை செய்கிறாற் போலே, கூலியைக் கேட்காமல் கேட்கிறது! என்று முனகியது அவன் வாய். 

கல்பகத்தைப்பற்றி ஊர் முழுவதும் தூற்றலாய் இருப்பதைக் கண்டு ராமு பொறுமையை இழந்து விட்டான். “கண்ணா! பார்! உன் காதாலேயே கேள். இனி என் னைப் பழிக்காதே! அப்பொழுதே எங்க அம்மாள் சொன்னாள். இப்போது அது நிஜமாகி விட்டது!” 

“ராமு! எதையும் உடனே நம்பிவிடுதல் புத்திசாலிக்கு அழகல்ல!” என்றான் கண்ணன் ஆழ்ந்த சிந்தனையுடன். கண்ணா! உனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. ஒரு கணவனது ஸ்தானத்தில் நீ இருந்து உன் மனைவியைப் பற்றி நாலுபேர் இப்படிச் சொன்னால், அப்பொழுது தெரியும், உன் மனம் படும் வேதனை…” 

கண்ணன் பதில் ஒன்றும் கூறவில்லை. வீட்டை விட்டுப் புறப்பட்ட கல்பகம் எங்கு போகிறோம், என்ன செய்கிறோம், என்ற உணர்வே யின்றிக் கால்போன போக்கில் நடந்துகொண் டிருந்தாள். குறைந்தது பத்து மைல் நடந்திருப்பாள். ஏற்கெனவே தாயாரோடு இரவு களிலெல்லாம் கண் விழித்து, அசந்து போயிருந்தது அவள் தேகம். அத்துடன்கூட மீறிக்கொண்டு வரும் அடக்க முடியாத துக்கம் ஒருபுறம் தலை ஒரு புறம் சுழன்றது. சுற்றிலுமுள்ள மரம் செடி எல்லாம் ஆடுவதுபோல் தோன்றின. அவ்வளவுதான், அப்படியே மயங்கி விழுந்து விட்டாள். 

கல்பகம் கண் விழித்தபோது, தான் ஓர் உயர்ந்த பஞ் சணையில் கிடத்தப்பட் டிருப்பதை அறிந்தாள். மெல்ல எழுந்திருக்க முயற்சித்தாள். முடியவில்லை. “நான்…எங்கிருக்கிறேன்” என்று ஈனஸ்வரத்தில் வினவினாள். “சரியான இடத்தில்தான் இருக்கிறாய் கவலைப்படாதே, கமலு! உன்னிடம் நான் தவறாய் பேசியதற்கு நல்ல தண்டனை கிடைத்தது. என்னை விட்டே போய்விட்டாயே, என் கண்ணே!” என்றது ஒரு பெண் குரல். 

யார் அது? புதுக் குரலாகப் படுகிறதே! என்னால் கண்ணை விழித்துப் பார்க்க முடியவில்லையே?” எனக் கேட்டாள் கல்பகம். 

“கண்ணை விழித்தால் தானா என்னையறிய முடியம்? உன்னைத் தாயாரைவிடப் பன்மடங்கு அருமையாக வளர்ந்த வனஜாக்ஷியை நீ மறந்தே விட்டாயா?” எனக் கம்மிய குரலில் மறுபடியும் கேட்டாள் அம் முதியவள். “என்ன நான் காண்பது கனவா? இல்லை, எனக்கு ஏதா வது புத்திக் கோளாறினால் விஷயங்கள் வேறு விதமாகக் கேட்கின்றனவா? என்ற சந்தேகம் உண்டாகிவிட்டது கல்பகத்திற்கு. அப்பொழுதைக்குப் பேசாம லிருப்பதே நலம் என்று எண்ணி மௌனம் சாதித்தாள் அவள். 

ஆனால், உடம்பு நன்றாகக் குணமான பிறகும் வனஜாக்ஷி என்பவள் தன்னைக் ‘கமலூ’ என்றே கூப்பிடுவதைக் காணச் சகிக்கவில்லை கல்பகத்திற்கு. “அம்மா! உண்மையில் நீங்கள் யார் என்பதை நான் அறியேன். நான் ஓர் அனாதை. நீங்கள் என்னை யமன் வாயிலிருந்து மீட்டிருப்பதாகத் தெரிகிறது. அதற்கு உண்மையில் நான் வந்தனம் தெரிவிக்க வேண்டியவளே. ஆனாலும் என்னை இறக்க விட்டிருந்தால் உங்களுக்கு எவ்வளவோ புண்ணியமாகியிருக்கும். தற்சமயம் எனக்கு விடை கொடுங்கள்” என்று அவளிடம் ஒரு நாள் தெரிவித்தாள். 

“கமலு! இப்படி உன்புத்தி பேதிக்குமென்று நான் எண்ணவில்லையே? உன்னையே நீ அறிந்து கொள்ளாத போது, என்னை எங்கே அறியப்போகிறாய்? இதோ,பார்! உனது நகைப்பெட்டி. உனது புடவை பீரோ. இதோ நீ ஓடிப்போவதற்கு முதல் நாள் வாங்கிய உன் வீணை. இப்பொழுதாவது நினைவு வருகிறதா, சொல். ஐயோ! உன்னைப்போன்ற புத்திசாலிப் பெண் புத்தி ஸ்திரமில்லாமற் போகும்படி ஆனது, பாவி நான் சொன்ன வார்த்தையின் பலனா? கமலு, இதோ, பார்! நான் கூப்பிடுகிற பெயர்தான் உன் பெயர். நீ கமலுதான்” என்று கூறி தேம்பித் தேம்பி அழ வாரம்பித்தாள் வனஜாக்ஷி. 

கல்பகத்திற்கு இப்போது வனஜாக்ஷியின் புத்தி ஸ்வாதீ னத்தைப் பற்றிச் சந்தேகம் வந்துவிட்டது. ” அம்மா! நீங்கள் ஏதோ தப்பு செய்கிறீர்கள். என்னை மன்னிக்க வேண்டும். என் பெயர் கமலு இல்லை.” 

வனஜாக்ஷி ஆச்சரியத்துடன் “அடி, விமலா! இங்கே வா! நீ வந்து சொல்லு இவளுக்கு!” என்று அழைக்கவும் அடுப்பங்கரையில் வேலையாக இருந்த விமலா ஓடிவந்து, கமலுவிடம் “அம்மா! என்னைத் தெரியவில்லையா உங்களுக்கு? அன்றைக்கு நாம் இரண்டுபேரும்……” என்று ஆரம்பித்தாள். 

“போதும், போதும்! நீங்க ளெல்லாம் விளையாடுகிறீர் களா அல்லது இது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா?” எனப் பொறுமை யிழந்து கத்தினாள் கல்பகம். விமலாவோ தன் எஜமானியை ஜாடை காட்டி அழைத்து “அம்மா, இங்கே வாருங்கள்! அவளை இன்னும் கொஞ்ச நாளைக்கு அவள் போக்கிலேயே விட்டு விடுவது நல்லது. ஏதோ கீழே விழுந்த அதிர்ச்சியில், புத்தி பேதித்திருக்கிறது” என்றாள். 

வனஜாக்ஷி ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள். 

அத்தியாயம்-6

கமலு ஸேவா ஸதனத்திற்குப் போனதிலிருந்து, விசுவிற்கு வீட்டில் ஒன்றுமே பிடிக்கவில்லை… “நான் ஊருக்குப் போகிற வரையிலும், நீ அவளை நம் அகத்திலேயே வைத்துக்கொண்டிருக்கலாம். பாட்டி. யார் யார் பேச்சை யெல்லாமோ கேட்டுக்கொண்டு குடு குடு வென்று அவளை அனுப்பிவிட்டாயே?” என்று சரோஜா பாட்டியைக் கடிந்தாள். 

“இருக்கட்டுமே? நன்றாக படிப்பு, பாட்டெல்லாம் வரும்.” என்றாள் பாட்டி. 

“ஆமாம். அன்று நான் ஸேவாஸதனத் தலைவியைக் கண்டு பேசினேனே? ‘வீணை நன்றாய் வாசிக்கிறாளே, கமலு. அவளுக்குத் தெரியாத வித்தை என்ன வென்று எனக்குத் தெரியவில்லை. உங்கள் பாட்டி உத்திரவு கொடுத்தால், அவளை இங்கே படிக்கச் செய்வதைவிட பிறத்தியாருக்குச் சொல்லிக் கொடுக்கச் செய்வது உசிதம் என்று எண்ணுகிறேன்’ என்றார் புன்சிரிப்புடன். நிஜமாக, அவளுக்குச் சொல்லிக் கொடுக்கக்கூடிய சாமர்த்தியம் இருக்கும்போது, நம்மிடம் ஏன் சொல்லவில்லை என்று நானே ஆச்சரியப் பட்டேன்” என்றாள் சரோஜா. எல் லாம் மர்மமாய் இருக்கு. இவ்வளவு வித்தை தெரிந்த பெண் ரயிலிலிருந்து குதிக்க நினைப்பானேன்? இல்லை, தன் விருத்தாந்தத்தை நம்மிடமாவது கூறியிருந்தானும் தேவலை. அனாதை என்கிறாள். அனாதைக்குப் பாட்டு, படிப்பெல்லாம் யார் கற்றுக்கொடுத்தார்களோ?” என்று ஆச்சரியத்துடன், கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கூறினாள் அம்மணியம்மாள். 

இடையில் ஒருநாள் கமலு வீட்டிற்கு வந்தாள். அன்று முழுவதும் எல்லாரும் குதூகலத்தி லாழ்ந்திருந்த னர். மறுநாள், சரோஜாவைக் கொணர்ந்து விடும்படி அவள் புருஷனிடமிருந்து கடிதம் வரவே, தாத்தா பேத்தி யுடன் கிளம்பினார். 

கல்பகத்தின் மாமனார் மாமியார் இவர்களைப்பற்றி நாம் இதுவரையில் ஒன்றும் கூறவில்லையல்லவா? கல்பகத் தின் புக்ககம் மதுரை. கல்பதத்தின் கல்யாணத்தின் போது, அவள் புருஷன் ராமகிருஷ்ணனுக்கு வேலை யாக வில்லை. மறு கல்யாணமான பிறகு மாமனார் தயவில் வேலை யாகியது. அவர்கள் மூலம் வேலை யாகிவிட்டதால், இந் தப் பெண்டாட்டிக்கு உள்பட்டு அவன் தன்னிடம் எப் படி நடந்து கொள்வானோ என்று அவன் தாயார் மீனாக்ஷி பயந்தாள். பிள்ளையின் சபல சித்தத்தை அவள் அறிவாள். ஆட்டு வித்தார் கைப்பொம்மை அவன். வேலையான பிறகு சரியாகக் கடிதமே போடவில்லை தனக்கு என்று மீனாக்ஷிக் குப் பிள்ளைமீது வருத்தம். புது நாட்டுப் பெண்ணோ கல்யாணமான பின்பக்கம் வரவேயில்லை. சென்னையி லிருந்து வருகிறவர்கள் மூலமாய் பெண் வீட்டார் நேரே மாப்பிள்ளையிடம் பெண்ணை அனுப்பப் போவதை மீனாக்ஷி அறிந்து கொண்டாள். ஹும்! அவ்வளவு ஆயிற்றா?” என உறுமினாள். புது நாட்டுப் பெண்ணைத் தன்னிடம் கொணர்ந்து விடும்படி சம்பந்திக்கும் எழுதி, ராமுவுக்கும் அவன் மனைவியைத்தான் அழைக்கப் போவதாக கடிதம் எழுதிவிட்டாள். ஆனால் இதற்கு ராமுவிடமிருந்து வந்த பதில் அவளை ஒரு கலக்குக் கலக்கியது. 

“அம்மாவுக்கு, நமஸ்காரம். உன் கடிதம் கிடைத் தது. உன் கடிதம் வருமுன்பே, இங்கு ஹோட்டல் சாப் பாடு ஒத்துக்கொள்ளாததால், என் மனைவியை வரவழைத் துக் கொண்டு விட்டேன். சௌக்கியம், ராமு.” 

இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் மீனாக்ஷிக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன் பிள்ளை, தன்னை இவ்வளவு தூரத் துக்கு மீறிப் போவானென்று அவள் கனவிலும் கருத வில்லை. தன் முதல் நாட்டுப் பெண்ணுக்குத் தான் செய்த துரோகத்தை யெல்லாம் எண்ணிப் பார்த்து வருத்தப்பட்டாள். நாட்டுப் பெண்ணிடமிருந்து பிள்ளைக்கு வரும் கடிதங்களை யெல்லாம் அவனிடம் சேர்ப்பிக்காமல் நெருப்பில் போட்டதை நினையாமல் இருக்க முடியவில்லை அவளால். “மாமியாரின் கொடுமைத்தனம் முழுவதையும் காட்டி விட்டேனே, அவளிடம்? பாவம்! அந்தத் திக்கற்ற பெண்ணும், அவளது விதவைத் தாயாரும் என்ன ஆனார்களோ என்று ஒரு நிமிஷம் நல்ல மனது வந்து, சிந்தனை ஓடிற்று அவளுக்கு. ஆனால், என்ன பிரயோ ஜனம்? சில மாதங்கள் முன்பே இந்தப் புத்தி தோன்ற வில்லையே? 


ராமுவின் இரண்டாவது மனைவி யார் என்பதை இனி யும் சந்தேகத்தில் வைத்து வாசக நேயர்களைக் காக்க வைக்க நான் விரும்பவில்லை. அவள்தான் சரோஜா. சரோஜா தற்காலப் பெண். அருமை பெருமையுடன் வளர்ந்தவள். தன் கணவனுக்கு முதல் மனைவி யிருந்த தும், மாமியாரின் போதனையால் கணவன் அவளைத் தள்ளி வைத்ததும், அவளுக்குத் தெரியாது. அவள் சர்வ சாத ரணமாகவே கணவனுடன் குடித்தனம் செய்யலானாள். பிறந்த வீட்டில் சமையல் செய்து பழக்க மில்லாததினால் இங்கு அவ்வப்பொழுது ராமுவும் அவளுக்கு ஒத்தாசை செய்ய வேண்டி வந்தது. ‘ஐயோ! கமலுவைக் அழைத்து வந்திருந்தால், எவ்வளவு ஒத்தாசையாக இருக்கும்’ என்று அவள் எண்ணினாள். குமுட்டி அடுப்பை விசிறுவது, இலை போடுவது, சில சமயம் காப்பியும் போடுவது ஆகிய எல்லாக் காரியங்களும் ராமு தலையில் தான். பெங்களூரில் குளிர் அதிகமானதால் சரோஜா காலையில் எழுந்திருக்க மாட்டாள். முக்கால்வாசி தினம் காலைக் காப்பி ராமுவினுடையதா யிருக்கும். 

ஒரு நாள் ராமு காப்பி அடுப்பைப் பற்றவைத்துக் கொண் டிருக்கையில், வாசலில் வண்டி வந்து நின்றது. தான் வருவதை முன்கூட்டி அறிவிக்காமலேயே மீனாக்ஷியம் மாள் வந்துவிட்டாள்.முதல் அறைக் கதவு சாத்தியிருக்கவே மெள்ள எட்டிப் பார்த்தாள் மீனாக்ஷி. இழுத்துப் போர்த்துக்கொண்டு நாட்டுப் பெண் தூங்கிக் கொண்டிருந்தாள். மீனாக்ஷி அதிலேயே கண்டுகொண்டாள் விஷயத்தை. பர பரவென்று உள்ளே வந்தாள். 

பிள்ளை, பால் காய்ச்சிக்கொண்டிருந்தான். சர்வ சாதாரணமாக ”என்னம்மா! ஒரு லெட்டர்கூட போடவில்லையே?” என்றான். 

“லெட்டர் போட்டு விட்டு வந்தால் இப்படி நீ காப்பி போடுவதைக் காண முடியுமா அப்பா!” என்றாள் அவள் ஏளனமாய். 

“ஏன் தினசரி நான் காப்பி போடும் சமயம்தானே இது ?” என்று அமைதியாகக் கேட்டான் அவன். “சரி தான் இங்கே விஷயங்கள் முற்றிப் போயிருக்கிறது!” என்றெண்ணிக்கொண்டு “சமையலாவது அவள் சமைப் பளோ, அல்லது அதுவும் நீதானோ?” என்றாள் தாயார். சிரித்துக்கொண்டு பேசாம லிருந்தான் புதல்வன். 

சரோஜா மெள்ள எழுந்து வந்தாள். “வாங்கோ அம்மா!” என்றாள். அவ்வளவுதான், ஒரு நமஸ்காரமா, இழவா ஒன்றும் கிடையாது! கல்யாணம் ஆன புதிதில் கல்பகம் இருந்த மரியாதையை எண்ணிப் பார்த்தாள் மீனாக்ஷி. கணவனால் ‘பிளஸ்’கில் போடப்பட் டிருந்த காப்பியைச் சாப்பிட்டுவிட்டு சரோஜா சமைக்கலானாள். ஆமாம், குளிக்காமல்தான்! “ஒரு செம்பு ஜலத்தை விட் டுக்கொண்டு குளிக்கக்கூடாதோ? ” என்று கேட்டாள் அவள் நாட்டுப் பெண்ணை. அவள் பதில் சொல்வதற்குள் “அம்மா! அவளுக்குக் குளிரில் குளித்தால் உடம்புக்கு ஆக வில்லையாம் ” எனக் கூறியவாறு அங்கு வந்தான் ராமு. மீனாக்ஷியால் இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. அழகாக இருக்கிறது! என்னவோ சொல்வாளே, அப்படித்தான் இருக்கிறது. அவளால் அது முடியாது, இது முடியாது என்று நீயே சால்ஜாப்பு சொல்லிவிடு. இதை யெல்லாம் பார்த்தால்,கல்பகத்தை ராஜாத்தி என்றுதான், சொல்ல வேண்டும். அதற்கு அவளைத் தள்ளிவைத்து விட்டு, இன்னொன்றைப் பண்ணிக்கொள்வானேன்?” 

மாமியார் இரைவதைக் கேட்டு திகைத்துப்போன சரோஜா தன் கணவனுக்கு மற்றுமொரு மனைவியிருப்பதாக அவள் கூறினதும் ஒன்றும் புரியாது நின்று விட்டாள். “இது என்ன நிஜமா?” என்ற கேள்வி தொனிக்கக் கணவனைப் பார்த்தாள் அவள். மீனாக்ஷியம்மாள் சாப்பிடக்கூட இல்லை. அடுத்த ரயிலுக்கு வந்த சுருக்கைப் போலவே கிளம்பி விட்டாள் ஊருக்கு. ஆனால், அவள் கிளப்பி விட்டுப்போன புயல் அவ்வளவு சீக்கிரம் அடங்கவில்லை. சரோஜாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் பெரிய வாக்கு யுத்தம் தொடங்கி விட்டது. “சாதுபோல் தோன்றும் சரோஜா இவ்வளவு பேச்சுக்காரியா?” என்றெண்ணி ஆச்சரியப்பட்டான் ராமு.

– தொடரும்…

– வனிதாலயம் (நாவல்), முதல் பதிப்பு: டிசம்பர் 1946, பவானி பிரசுரம், ராயவரம், புதுக்கோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *