கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2024
பார்வையிட்டோர்: 866 
 
 

ஜன்னலின் வழியாக தெளிந்த வானத்தைப் பார்த்தார் ரகுராமன். வசந்த காலத்தின் துவக்கம். இடம் பெயர்ந்து வந்த பறவைகள் மீண்டும் வடக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன.

“தற்காலிகமாகப் புலம்பெயர்ந்தாலும் எல்லா ஜீவராசிகளும் தத்தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பி விடுவதுதான் இயல்பு, அதுதான் இயற்கை விதிமுறை. இல்ல ரவி?” என்றார் ரகுராமன்.

வந்தாரையெல்லாம் அரவணைத்து வளமாக வாழவைத்திருக்கிறது அமெரிக்க மண். அயராத உழைப்பு மட்டும் இருந்து விட்டால் போதும், உச்சத்துக்கு உயர்த்தி விடும் இந்த மண்.

சில வருடங்களுக்கு முன்பு, வசந்தாவுடன் பஹ்ரெயினிலிருந்து சொச்ச டாலர்களோடு மட்டும் வந்திறங்கிய ரகுராமன், இன்று பலகோடி டாலர்களுக்கு அதிபதி. ஓக்ல ஹாமாவில் ஒரு முக்கியமான புள்ளி. தேர்தல் நிதிகளுக்கு அள்ளிக் கொடுப்பவர் என்ற முறையில் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கும் நன்கு அறிமுகம்.

தனது பஹ்ரெயின் நண்பர் கொடுத்த ஒரே ஒரு முகவரியை மட்டும் எடுத்துக் கொண்டு அமெரிக்கா வந்தார். ஆனால், இன்று… பலர் இவரது முகவரியை நம்பி வருகின்றனர்.

பல ஊர்களில் சொந்தமாக ஹோட்டல்கள் நடத்தி வருகிறார். பிழைப்பைத்தேடி வரும் பலருக்கு வேலைவாய்ப்புத் தருகிறார். வாழவைத்த மண்ணுக்கு நன்றி மறவாமல் விசுவாசம் காட்டுகிறார். அமெரிக்காவில் வாழும் பல நல்ல உள்ளம் படைத்த இந்தியக் கோடீஸ்வரர்களில் ரகுராமும் ஒருவர்.

“சார், நீங்க போய் குளிச்சிட்டு வாங்க, நான் சாப்பாடு எடுத்து வெக்கறேன். பத்து நாளா, சாப்பாடு தண்ணி இல்லாம, தூக்கம் இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டுடீங்க” என்றேன்.

எத்தனையோ உதவியிருக்கிறார் எனக்கு. படிக்கின்ற காலத்தில் ததிகினத்தோம் போட வேண்டியிருக்கிறது இங்கே. வயிற்றுக்குப் போதாமல், இருக்கும் கொஞ்சநஞ்ச டாலர்களைப் புத்தகங்களுக்கும், பல்கலைக் கழகக் கட்டணத்துக்கும் செலுத்திவிட்டு வெளிநாட்டு மாணவர்கள் படும்பாடு கொஞ்சமல்ல. இந்தக் கட்டத்தில் எல்லா மாணவர்களும் ஏதாவது பகுதிநேர வேலை கிடைக்காதா என்று ஏங்குவார்கள்.

ஓக்லஹாமாவில் இந்தியர்கள் அதிகமென்று சொல்ல இயலாது. ஆயினும், இருந்த சிலரில், இளகிய உள்ளங்கள் இருக்கத்தான் செய்தன, ரகுராமைப் போன்றவர்கள் எத்தனையோ பேருக்கு நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறார்கள்.

ஒரு கல்லூரித் தோழன்தான் என்னை ரகுராமிடம் கொண்டு சேர்த்தான். வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் வகுப்புக்குச் சென்று, மீத நாட்களில் ஹோட்டல் ரிசப்ஷன் வேலைகளைக் கவனித்துக் கொள்கிறேன். தங்குவதற்கு இடம் கிடைப்பதோடு, புத்தகங்கள் வாங்கவும், கல்லூரிக் கட்டணத்துக்கும் உதவுகிறது இந்த ஊதியம்.

வாரத்தில் ஒரு முறை ரகுராம் அல்லது அவரது மனைவி வசந்தா, ஹோட்டல்களை மேற்பார்வையிடுவது வழக்கம்.

வசந்தா மேடம் நல்ல அழகு. நெடுநெடு வென்று உயரமாக இருப்பார்கள். சிவப்பு நிறம், களையான முகம்.

ஆனால், ரகு சாரைவிட அவர்களுக்கு வயது கூடுதல் என்று ஓட்டல் பணியாளர்கள் பேசிக்கொள்வார்கள்.

வெளியே கிடக்கும் மிதியடி சற்றுக் கோணலாகக் கிடந்தாலும் அதைச் சரி செய்துவிட்டு உள்ளே வருவார்கள். ரிசப்ஷனில் இருக்கும் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளதா, மீன் தொட்டி பராமரிக்கப்படுகிறதா, சோபா மேசைகள் சுத்தமாக இருக்கின்றனவா என்று ஒவ்வொரு சிறு விஷயத்தையும் ஆழமாகக் கவனித்துப் பார்ப்பார்கள். பிறகு விருந்தாளிகளின் வருகை, செல்கை, கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் புரட்டிப் புரட்டி அலசுவார்கள். குறைந்த பட்சம் நான்கு மணி நேரமாவது ஆகும் அவர்களின் மேற்பார்வை வேலை முடிய. கிளம்புமுன், பணியாளர்கள் எல்லோரையும் அழைத்து விசாரித்து, சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே விடைபெறுவார்கள். என் படிப்பு குறித்தும் அவ்வப்போது விசாரித்து அறிவார்கள்.

ஆனால் ரகுராம் சாரின் மேற்பார்வை அரைமணி நேரம் மட்டுமே நடக்கும். கணக்கு வழக்குகளைப் பார்த்துவிட்டு, என்னிடமும், ஹவுஸ் கீப்பிங் மேட்ரனிடமும் சிறிது பேசிவிட்டுச் சென்றுவிடுவார்.

கிங்ஸ்டன் பகுதியில் ஒரு மகா பங்களாவில் வசித்து வந்தனர் ரகுராம் தம்பதியர்.

வேலை நிமித்தமாகவும், சில உதவிகளுக்காகவும் இங்கே வந்திருக்கிறேன் என்றாலும், கடந்த பத்து நாட்களாக இதே வீட்டில் ரகுராம் சாருடன் தங்கிவிட்டேன்.

இந்த நிலையில் அவரைத் தனியே விட மனமில்லை எனக்கு.

உணவருந்தி விட்டு, தனக்கு விருப்பமான பக்கார்டியுடன் வந்தமர்ந்தார். முகத்தில் தெளிவு இருந்தது. சூழ்நிலையை ஏற்றுச் சமாதானம் அடையத் துவங்கினார் என்றே தோன்றியது.

“நீ சாப்பிட்டாயா ரவி?”

“இல்லீங்க சார். நீங்க தூங்கப் போங்க. பிறகு சாப்பிடறேன்.”

“இல்லடா. வா, தட்டுல எடுத்துகிட்டு வந்து உட்கார்” என்றார்.

பேச நினைக்கிறார் போலும். உணவு எடுத்துக் கொண்டு தரைவிரிப்பில் அமர்ந்தேன். ஏனோ அப்பா ஞாபகம் வந்தது.

“ரவி… வசந்தா மேடம் காணாமல் போனது பற்றி ஹோட்டல்ல என்ன பேசிக்கறாங்க?”

“என்ன சார், யார் என்ன பேசிகிட்டா நமக்கென்ன? அவரவர் சூழ்நிலை, சந்திக்கறோம். வெளியில இருந்து பார்க்கறவங்களுக்கு என்ன சார் தெரியும். ஏதேதோ கற்பனை பண்ணி பேசுவாங்க.”

“சரி… அதைத்தான் கேட்கறேன், என்ன கற்பனை பண்றாங்க? நீ என்ன கற்பனை பண்ணி வெச்சிருக்கே?”

“ரகு சார், மூணு வருஷமா என்னைப் பார்க்கறீங்க. நான் யார் பற்றியும் அதிகம் கேட்பது இல்லை. படிப்பும், வேலையுமே சரியா இருக்கு. உங்களையும், வசந்தா மேடத்தையும் ஒரு நல்ல தம்பதியா பார்த்திருக்கேன். அவ்வளவுதான்.”

“அப்படியா? நாங்க நல்ல தம்பதியா தெரிஞ்சோமா?”

“ஆமாம். அதுல என்ன சார் சந்தேகம் உங்களுக்கு?”

“ஹம்ம்… வசந்தா என்னோட மனைவி இல்ல ரவி.”

உண்மையின் தாக்கத்தில் நான் அசையாமல் இருந்தேன். தொடர்ந்து பேசினார்.

“ஆமாம் ரவி. எனக்கு நாற்பத்திரண்டு வயசாகுது. இருபது வயசுல பஹ்ரெயின் போனேன். புகழ்பெற்ற ஆயில் கம்பெனியில் வேலை. கைநிறைய சம்பாத்தியம். அப்ப ரொம்ப அழகா இருப்பேன். இளமை, வளமை இரண்டும் இருந்துவிட்டால் எந்தப் பொண்ணுக்குத்தான் பிடிக்காது. சுற்றியிருந்த பெண்களுக்கெல்லாம் நான் ஹீரோ மாதிரி.

“ஆனா, எனக்காகவே ஒருத்தி இந்தியாவில் காத்திருந்தா… அது, மேகலா.

“கேரளாவைச் சேர்ந்தவ. நாங்க, ஆசாரமான சைவக் குடும்பம். அதனால இரண்டு பக்கமும் பெரிய எதிர்ப்பு இருந்தது. அப்பா உயிரோடிருந்த வரைக்கும் திருமணத்துக்கு ஒத்துக்கவே இல்ல. அவருக்குப் பிறகு வேறு வழியில்லாம அம்மா சம்மதிச்சாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம். என் அண்ணன் பம்பாயில் இருந்ததால அம்மா அங்கேயே தங்கிட்டாங்க. நான் மேகலாவைக் கேரளாவுல, அவங்க அம்மா வீட்டுல விட்டுட்டு மறுபடியும் வேலையில போய்ச் சேர்ந்துட்டேன்.

“மேகலாவைப் பிரிஞ்சிருந்தே காலத்தை ஓட்டினேன். ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அந்தப் பிரிவை மேகலா எப்படி எடுத்துக் கிட்டாளோ தெரியல. எப்போதாவது குறைவாகப் பணம் அனுப்பினால் மட்டும் வருத்தப்பட்டாள். சுமார் இரண்டு வருடம் கழித்து ஊருக்குப் போனேன். பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

“பேருக்குக் கல்யாணம் பண்ணிட்டு உன் புருஷன் உன்னை இங்கே விட்டுட்டுப் போய்ட்டான். அவன் குடும்பமும் உன்னை ஒதுக்கி வெச்சிருக்கு… அப்படி இப்படின்னு மேகலாவோட மனச மாத்தி வெச்சிருந்தாங்க அவங்க வீட்டு ஆளுங்க. அதனால, என்னிடம் வெறுப்பாகவே இருந்த மேகலா, கடைசியில் விவாகரத்து வேணும்னு கேட்டுட்டா.

“பேசிப்பார்த்தேன். ஆனா, வெறுத்து ஒதுக்கற பொம்பளையோட எப்படி வாழ்க்கை நடத்தறது. பிரிஞ்சிட்டேன். மனசு நொந்து போனேன். ஆனா மேகலா, நான் அனுப்பிய பணத்துல வீடு, நிலம் என்று வாங்கிப்போட்டு ஏற்பாடாக இருந்தாள்.

“நான் பஹ்ரெயினில் இருந்த போது உள்ளூர் இளைஞன் ஒருவனோடு பழகினாள் என்று அரசல் புரசலாகத் தெரிய வந்தது. பிறகு அவனைத்தான் கல்யாணம் செய்து கொண்டிருப்பாள் போலும். இப்ப, இரண்டு குழந்தைங்க இருக்காங்க அவளுக்கு. காதலிச்ச குறை, அப்பப்போ தகவல் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். பணக் கஷ்டம் என்று கூடக் கேள்விப்பட்டு, அவளுக்குத் தெரியாம உதவியிருக்கேன். நான் பணம் அனுப்புவதோ, மேகலா பற்றி இன்னமும் அக்கறையாக இருப்பதோ வசந்தாவுக்கு தெரியாது. ஏனோ நான் சொல்லவில்லை.

“அது முடிஞ்சு போன கதை…” நீண்ட பெருமூச்சு விட்டபடியே நாற்காலியிலிருந்து எழுந்து, காலியாகியிருந்த கிளாஸை நிரப்பினார்.

“அப்புறம் ஒரு அஞ்சாரு வருசம் தனி மரமாவே இருந்தேன். எக்கச்சக்கமா பணம் சம்பாதிச்சேன். அம்மா, அண்ணனுக்கு அனுப்பினேன். ஆனா, பக்கத்துல சொந்தம்னு யாருமில்லை. சரியான சாப்பாடு இல்லை, உடம்புக்கு வந்தா கவனிக்க ஒரு ஒட்டு உறவில்லை. ஆறுதலுக்கு ஆளில்லை. அன்பு தேடி இந்தியாவுக்குப் போனா, பட்டும் படாம இருக்கும் அண்ணன், அண்ணி, அவங்கள அண்டியிருந்த அம்மா.

“நான் சொன்னதக் கேட்டிருந்தா உன் வாழ்க்கை இப்படி ஆகியிருக்குமான்னு குத்திக்குத்தி பேசுவாங்க. அப்புறம் மெல்ல விடுப்பில் போறதையும் நிறுத்திக்கிட்டேன். நிரந்தரமா பஹ்ரெயினிலேயே தங்கிட்டேன். அப்பக் கிடைத்த அறிமுகம்தான் வசந்தா.”

“எங்க அலுவலகத்தில் அக்கவுண்டெண்டா வேலைக்குச் சேர்ந்தாங்க வசந்தா. அவங்களோட கணவர் ஒரு தொலைத் தொடர்புப் பொறியாளர் என்றும் பஹ்ரெயினுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆனது என்றும் சொன்னாங்க.

குடும்பத்தோடு சேர்ந்து வர அரசு மற்றும் கம்பெனிகள் அப்போது விதிமுறைகளைத் தளர்த்தியிருந்தன. நான் மேகலாவைத் திருமணம் செய்து கொண்ட போது, இது மாதிரி வசதிகள் இருக்கவில்லை. ஒருவேளை இருந்திருந்தால் நாங்கள் பிரிந்திருக்க மாட்டோம்.

“தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாங்க. தமிழாச்சேன்னு எனக்குத் தனிப் பரிவு அவங்க மேல. வேலை விசயங்களை மட்டும் கேட்டுத் தெரிஞ்சுப்பாங்க.

“மெல்லப் பழகிய போது, என் குடியிருப்புக்குப் பக்கத்தில்தான் அவர்களும் வீடு எடுத்திருப்பதாகத் தெரிந்தது. அப்படியா என்றார்களே தவிர வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லவில்லை. என் சொந்தக் கதை அலுவலகத்தில் அனைவரும் அறிந்ததே. அதனால் தனியாக இருக்கும் ஆம்பிளையை ஏன் அழைப்பானேன் என்று நினைத்தார்களோ என்னவோ. நானும் கண்டு கொள்ளவில்லை.

“காலையில் சுமார் எட்டரை மணி அளவில்தான் எல்லோரும் அலுவலகம் வருவார்கள். ஆனால் வசந்தா ஆறு மணிக்கே வந்துடுவாங்க. மாலை கிளம்புவதும் ஆறு, ஏழு மணிக்குதான். ஏன் என்று கேட்டறிந்தேன். அவரது கணவர் இவரை இறக்கிவிட்டு, அலுவலகம் சென்று, பிறகு, மாலை அழைத்துப் போவதாகவும் தெரிந்தது. எனக்கேன் வம்பு என்று இருந்திருக்கலாம்தான். ஆனால், நீங்கள் ஏன் என்னுடன் வரக்கூடாது. நானும் அதே வழியில்தான் வருகிறேன் என்று வாய் விட்டுத்தொலைத்தேன்.

“கணவரைக் கேட்டுச் சொல்கிறேன் என்ற வசந்தா இரண்டு நாட்கள் கழித்து என்னுடன் காரில் வரச் சம்மதித்தார்கள்.

“தினமும், காலையும் மாலையும், அரை மணி நேரம் காரில் தனியே பயணித்தாலும் நிறையப் பேசியதில்லை. வசந்தா எப்போதும் மவுனமாகவே இருந்தது எனக்கு என்னவோ போலிருக்கும். நான்கு, ஐந்து மாதங்கள் இவ்வாறு ஒன்றாக அலுவலகம் வந்து போனோம்.

“என்றும் போல் பேசாமல் வந்த வசந்தா ஒரு நாள் விசும்பும் சத்தம் கேட்டது. பதறிவிட்டேன். என்ன என்று கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்தபடியே அலுவலகம் சேர்ந்தோம். வசந்தா பற்றியோ, அவர்களது குடும்பம் பற்றியோ எதுவுமே தெரியாத நிலையில் என் மூளைக்குள் ஏதேதோ கற்பனை வந்து போனது. அந்த நாளுக்குப் பிறகு கூர்ந்து கவனித்ததில் வசந்தாவின் அழுகைச்சத்தம் அவங்களோட மவுனச்சுவரைத் தாண்டி என் இதயத்தை உலுக்கத் துவங்கியது.”

“இப்படியே வசந்தா சோகத்தைச் சுமந்து வருவதும், ஏதும் பேசாமலேயே என் இதயத்துக்குள் அதனை இறக்கிவிட்டுப் போவதுமாக ஒரு வருஷம் ஓடிப்போச்சு. ஓரிரு வார்த்தை பேசத் துவங்கினாங்க. இதில் வேடிக்கை என்னன்னா, வசந்தாவுடைய கணவர் ஹரீஷ் என்னிடம் நன்றாகப் பழக ஆரம்பிச்சுட்டார். நாங்க இருவரும் டென்னிஸ் விளையாடுவதும், ஒன்றாக நடை போவதும் வழக்கமாகிப் போனது. ஹரீஷ் ரொம்பவும் ஜாலியாகப் பேசுவார். அவர்களின் இரண்டு மகன்களும் என்னிடம் ஒட்டிக்கொண்டனர். பெரியவன் பதினொன்றாம் ·பார்மிலும், சின்னவன் ஒன்பதாம் ·பார்மும் படித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது அவர்களுக்கு படிப்பிலும், விளையாட்டுகளிலும் நான் உதவிக்கொண்டிருந்தேன்.

“ஆனால், வசந்தா மட்டும் திறவாத புத்தகமாகவே இருந்து வந்தாங்க.

“அருமையாகச் சமைப்பாங்க தெரியுமா? வீட்டையும் தோட்டத்தையும் மிக நேர்த்தியாக வைத்திருப்பாங்க. இதோ, இந்த வீடும் அவங்க பார்த்துப் பார்த்துக் கட்டினதுதான். இங்கே ஒவ்வொரு பொருளும் அவங்க ளுடைய கலாரசனையைப் பறைசாற்றும்.

“ரொம்பவும் மென்மையான பெண் அவங்க.”

“நாட்கள் நகர நகர… ஆரவாரமில்லாமல் மெல்ல உருவாகும் சூறாவளியா ஒரு விஷயம் என் இதயத்தை ஆக்கிரமித்துக் கொண்டே வந்தது. அது… தீவிரமாக, மிகத் தீவிரமாக வசந்தா மீது எனக்கு உண்டான அன்பு.

“அன்பா, காதலா, ஈர்ப்பா, தெரியவில்லை. எம்பதின்னு ஆங்கிலத்தில் சொல்லலாம். அவளுக்கும் அதே உணர்வுகள் ஏற்பட்டன.. ஆச்சரியப்படுவதற்கில்லை. தினந்தோறும் என்னோடு ஒரு மணி நேரம் கார்ப் பயணம். எனக்கு, நிரந்தரமாக விதிக்கப்பட்ட தனிமை. அவங்களுக்கு உள்ளேயும் எப்பவும் ஒளிஞ்சிகிட்டு இருந்த துயரம்.

“நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் அவசியமாகிப் போனோம். வெளியே ஏதும் சொல்லிக்கலேன்னாலும், இருவருக்குமே அந்த உணர்வுகளைப் புரியாமலில்லை. ஆனா, எந்தவிதமான எல்லையையோ, கண்ணியத்தையோ தாண்டவில்லை எங்கள் உறவு. நிறைய அக்கறை காட்டுவாங்க என் மேல. எனக்கும் சேர்த்து உணவு கொண்டு வருவதும், உடல் நிலை சரியில்லாதபோது பிள்ளைகளிடம், கஞ்சியும், கஷாயமும் கொடுத்தனுப்புவதும்… விதவிதமான பரிமாணங்களில் எங்கள் நட்பு ஓங்கி வளர்ந்துகிட்டு இருந்தது.

“மனசு ஒட்டிப்போன அப்புறம் பேசிக்கிட வேண்டிய அவசியம் இல்லைதானே. நெருங்கியும் நெருங்காமலும் இருந்தோம்.

“அப்போதான் ஒரு நாள் திடீர்னு ஓடி வந்தா… நடுராத்திரிப் பொழுது. இருட்டில் அவளைப் பார்த்தபோது எதுவும் புரியவில்லை எனக்கு. தடாலென்று மார்பில் சாய்ந்து கொண்டு அழுதாள். ‘என்னைக் காப்பாத்துங்க ரகு… என்னைக் காப்பாத்துங்க. எங்கேயாவது அழைச்சிகிட்டுப் போயிடுங்க, இனி இந்த நரகத்துல என்னால இருக்க முடியாது.’ கதறி அழுதவளுக்கு எந்தச் சமாதானமும் சொல்ல முடியல. பிரச்னை என்னவென்று தெரிந்தால்தானே தேற்றுவதற்கும் வார்த்தைகள் வரும்.”

“அடுத்த நாள் காலை, எதுவும் நடக்காதது போல் பக்கத்துச் சீட்டில் மவுனமாகப் பயணித்தாள்.

‘பேச மாட்டியா? திடீர்னு ராத்திரி தனியா வந்து அழுததுக்கும், பேசிய வார்த்தைகளுக்கும் என்ன பொருள்? இப்படி மவுனமாக இருந்தால் என்னதான் செய்வது? சொல்லு வசந்தா.’

‘என்னை மன்னிச்சிடுங்க ரகு. நான் அப்படி அழுதிருக்கக் கூடாது. நடு இரவில் உங்களைத் தேடி வந்திருக்கக் கூடாது. இயலாமையின் எல்லைக்குத் துரத்தப்படும் போது மனசு என்னென்னவோ நெனச்சுடுது. என்னை மன்னிச்சிடுங்க’ என்றாள்.

“பிறகு, பல முறை என்ன பிரச்னை, என்ன ஆயிற்று என்று துளைத்துத் துளைத்து விசாரித்தாலும் அவள் பதில் பேசவில்லை. அன்று மாலை தற்செயலாகச் செல்வது போல வசந்தாவின் வீட்டிற்குச் சென்று அங்கு நிலவிய சூழ்நிலையைச் சரி பார்த்தேன். எல்லாம் சகஜமாகத்தான் தோன்றியது. ஹரீஷ் எப்போதும்போல் என்னிடம் இயல்பாகவே பேசினார். பிள்ளைகளும் வெகு சுலபமாகவே பேசினர்.

“என்ன நடந்திருக்கும் என்னால் கொஞ்சமும் யூகிக்க முடியவில்லை. ஹரீஷை எந்த விதத்தில் சந்தேகிப்பது?

“இந்தச் சம்பவம் நடந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்திருக்கும். மீண்டும் தோளில் வந்து விழுந்தாள். விவரம் எதுவும் கேட்காதீர்கள். ஏற்றுக்கொள்ளச் சம்மதமென்றால் காப்பாற்றுங்கள். உடனே இங்கிருந்து சென்றுவிடலாம். என்று கதறினாள். அவளது பரிதாப நிலைமையும், என் தனிமையும், அவள் கொடுத்த நெருக்கமும், என்னை பலகீனமாக்கின.

“என்னையும் இவளையும் இணைத்தது இறைச்செயல்தான் என்று நம்பத் துவங்கினேன். ஆளுக்கொரு விதமாய் திருமணம் என்ற அமைப்பினால் ஏமாற்றப் பட்டிருந்தோம். பாதிக்கப்பட்டிருந்தோம். நம்பிக்கையிழந்தோம், அதனால் அந்தச் சிறையிலிருந்து வெளியேறினோம். அப் போது என்னுடைய ஒரே குறிக்கோள் வசந்தாவைக் காப்பாற்றுவதுதான். ஒருவிதத்தில் அவளும் என்னைக் காப்பாற்றினாள்.”

“பாஸ்போர்ட்டுகளும், வீசாக்களும் தயார் செய்தோம். ஒரு சில உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அமெரிக்கா வந்து சேர்ந்தோம். இங்கே புதியவர்களாக வந்து, விசா நெருக்கடியும், நிரந்தரக் குடியிருப்பு அட்டைக்கு அலைவதும், அறியாத முகங்களும், புரியாத புதிர்களுமாய், சிறிது காலம் திண்டாடினோம்.

“ஆயினும், இருவருமே ஒரு கனவை வளர்த்து, அதை நனவாக்கினோம். ஒருமித்த எண்ணங்களும், அன்பும் இருந்தால் போதும், வாழ்க்கை இனிமையான பயணமாக இருக்கும் என்று உணர்ந்தோம். இத்தனை வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். ஒருவருக்கு ஒருவர் ஆதரவு. எங்களால் ஆன சமூக சேவை, தாய்நாட்டுச் சேவை எல்லாம் செய்தோம்.

வசந்தா எல்லா விதங்களிலும் எனக்கு அருமையான துணையாக இருந்தாள்.

“நானும் மனமறிந்து அவளுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. இத்தனை ஆண்டுகளில் எந்த ஒளிவு மறைவும் இருந்ததில்லை. சண்டை சச்சரவு வந்ததில்லை.

“அதனால்தான்… அதனால்தான் இப்போது திகைத்து நிற்கிறேன். திடீரென்று என்னை விட்டுப் பிரிந்துவிட்டாள். ஏன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாள். எங்கே சென்றாள். ஒண்ணுமே புரியல ரவி.”

வழக்கம் போல ஹோட்டல் ஊழியர்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் வதந்தி பேசினர். ரகுசாரைவிடப் பணக்காரன் எவனாவது கிடச்சிருப்பான் என்றார்கள். எத்தனைதான் ஆராய்ந்து பார்த்தாலும் என்னால் வசந்தா மேடத்தைப் பற்றித் தவறாக எண்ண முடியவில்லை.

“எனக்குப் பிள்ளைங்க இருந்தா உன் வயசு இருக்கும் ரவி” என்று அடிக்கடி சொன்னது தன் பிள்ளைகளின் நினைவில் தான் போலும்.

சர்வ நிச்சயமாகப் பிள்ளைகளிடம்தான் திரும்பியிருப்பார்கள் என்று என் உள்மனது நம்பியது.

கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்தாலும், வசந்தா மேடம் தன் பிள்ளைகளோடு தொடர்பு வைத்திருந்தார்கள் என்றே தோன்றியது. ரகுசார் மேகலாவின் குடும்பத்துக்கு உதவி வருவது போல.

திருமணம் என்கிற அமைப்பினால் ஏமாற்றப்பட்டோம், அதனால் வெளியேறினோம் என்ற இவர்கள், வெளியேறியவர்களாகவே இருந்துவிட்டதுதான் துயரம். அல்லது முழுமையாக வெளியேறினார்களா என்று சந்தேகம்.

இத்தனைக் காலம், இலக்கு இல்லாமலேயே பயணம் செய்திருக்கிறார்கள். திருமணம், மாங்கல்யம், சொந்தம், அங்கீகாரம், உறுதி… இவை எதுவுமே இல்லாத குடித்தனங்கள் நீடித்ததாக எந்தச் சரித்திரத்திலும் சான்றுகள் இல்லை, இனியும் இருக்காது.

ரகுசாரிடம் முந்தைய மிடுக்கு காணப்படவில்லை. சோர்ந்து போயிருக்கிறார். மேகலாவின் பிரிவை ஏற்றவர், இந்த பிரிவில் தடுமாறித்தான் போனார். ‘வந்துடுவா, வசந்தா திரும்பி வந்துடுவா’ என்று அவ்வப்போது சொல்வார்.

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அதற்கான பிரார்த்தனையும் இல்லை.

– மே 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *