‘அல்ஹம்துலில்லாஹ்’
என்று மனதினால் அல்லாஹ்வைப் புகழ்ந்தவாறு கட்டிலில் வந்தமர்ந்தாள் ஹாஜரா. கால்களை நீட்டியவள் கைகளால் கால்களை தடவிக் கொண்டாள். நாள் முழுவதும் செய்த வேலைகளின் களைப்பை உடலில் உணர்ந்தாள். தூக்கம் உடனே வரவில்லை. அவளின் மூன்று பிள்ளைகளும் நேரகாலத்துடன் தூங்கியிருந்தனர். பக்கத்தில் சாய்ந்திருந்த கணவனைப் பார்த்தாள். அவர் போஃனில் மூழ்கியிருந்தார். அவள் வந்ததைக் கூட கவனிக்கவில்லை போலும்…
அவர் கவனம் முழுக்க பேஸ்புக்கில் இருந்தது.
அவர் போஃன் பார்க்கும் சொற்ப நேரமும் தூங்குவதற்கு முன்தான். இதனால் ஹாஜராவும் அமைதியாக தன்பாட்டில் இருந்து விட்டாள்.
அவளும் அவள் போஃனைக் கையில் எடுத்தாள். அவளுக்கு போஃன் பார்க்க கிடைக்கும் நேரமும் இதுதான்.
என்னதான் இரவு நேரங்களில் கணவன் மனைவி அன்புப் பரிமாற்றங்கள் இருந்தாலும் அது ஏதோ அவரவர் தேவையோடு சரி.
உள்ளங்கள் மனசுவிட்டு பேச வேண்டிய நேரங்களை இன்று டச் போஃன்கள் கொள்ளையடித்து விட்டன. தன் வீட்டினர்களைப் பார்த்து கலகலப்பாய் சிரிக்க வேண்டியவர்கள் போஃனைப் பார்த்து சிரிக்கின்றனர். மனிதன் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாது போது கூட இந்த போஃன்கள் மனிதனை, அவர்களின் செயற்பாடுகளை மாற்றி விடுகின்றன. சில போது அழவும், சிரிக்கவும், ரசிக்கவும், நிறையவற்றை கற்றுக் கொடுக்கவும் செய்கின்றன. மனிதனுக்கு நெருக்கமானவர்கள் தள்ளிநின்ற போதும் போஃன்களோ மிக நெருக்கமாக அவர்கள் கைகளில் தவழ்கின்றன.
மிக நீண்ட நேரம் போஃன் கையில் இருந்தாலும் ஹாஜராவின் மனதில் தோன்றிய எண்ணங்களின் வெளிப்பாடே இவைகள். அவள் மனதில் இப்படியான எண்ணங்கள் தோன்றினாலும் அவளாலும் போஃன் இல்லாமல் இருக்க முடியாது. அவளும் மற்றவர்கள் போல் டச்போஃனுக்கு அடிமைதானே.
குர்ஆன் வசனங்களை வாசிப்பதுமதிலே ,ஹதீஸ்களை பார்பதுமதிலே, கவலையை மறப்பதும் அதிலே மகிழ்ச்சியை உணர்வதும் அதிலே..இப்போது தனது விழிகளை பதித்திருப்பதும் அதிலே..
டுக் டுங் டுக் டுங் வட்ஸப் மெசேஜ் ஒலி.
பலமுறை காதில் விழவும் தனது கவனத்தை முழுவதுமாக போனிஃனில் செலுத்தினாள் ஹாஜரா. ‘ஸ்மாட் பெஃமிலி’ குரூப் மெசேஜ்கள் நிறைய வந்திருந்தன. அது அவளின் உம்மாவின் குடும்ப குரூப். அவள், அவளுடைய சகோதர சகோதரிகள், உம்மாவின் உடன் பிறப்புகளின் பிள்ளைகள் சேர்ந்து ஆரம்பித்து வைத்த கலகலப்பான அரட்டைகள் நிறைந்த குரூப். எல்லாரும் மணம்முடித்தவர்கள்.
“அஸ்ஸலாமு அலைக்கும்” இது மாமாவின் மகள் ஸைனப் குரல்.
அவள் ஆரம்பிக்க..
“வாலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு” பெரியம்மாவின் மகன் பதிலுரைக்க தொடரந்தும் பதில்கள் வந்து கொண்டிருந்தன.
“வாலைக்கும் ஸலாம் “
“வாலைக்கும் ஸலாம் “
“வாலைக்கும் ஸலாம் “
“வாலைக்கும் ஸலாம் “
இவளும் பதில் வைத்தாள் டைப்பிங்கில் “வாலைக்கும் ஸலாம்” என்று.
“என்ன ஹாஜரா மைணி நீங்க மட்டும் பேச மாட்டீங்களோ”என்றாள் ஸைனப்.
“அதுதானே எல்லாரும் பேசினால் தான் நல்லம் “என்றாள் சாச்சியின் மூத்த மகள் அதீபா.
இப்படியே பேச்சுக்கள் தொடர்ந்தன. நாட்டு நடப்பு, அரசியல், கிரிக்கெட், சுகவிசாரிப்பு சுவாரஸ்யமாக பேச்சுக்கள் களைகட்டின. இடை இடையே சிரிப்பொலிகள் மனங்களில் தாளமிட்டன. எல்லோரினது உள்ளமும் நீண்ட நாட்களுக்குப் பின் பேசியதில் மகிழ்ச்சி கண்டது. ஹாஜரா ஒன்றும் பேசாது அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தாள்.
உண்மையில் போஃன் மனிதர்களை தூரமாக்கவும் செய்கிறது. உறவினர்களை ஒன்றிணைத்து மகிழ்ச்சியும் படுத்துகின்றன.
வேலைகளாலும், மனக்கஷ்டத்தினாலும், தனிமையினாலும் தவிக்கின்ற உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்க இப்படியான குடும்ப குரூப் அரட்டைகள் தேவைதான் என்று ஹாஜரா நினைக்கும் போதே பெரியம்மாவின் மகன் லதீப் நாநா இப்பேச்சை ஆரம்பித்தார். “நாங்க டூர் ஒன்று அரேஞ் பண்ணுவோம்.”
நிறையப் பதில்கள் உற்சாகமாக வெளிப்பட்டன.
முடிவில் ஹட்டன் போவதாக முடிவாயிற்று. இரண்டு நாள் பயணம். அதற்கான ஏற்பாடுகள் பற்றி பேச்சுக்கள் தொடர்ந்தன. இதற்கு மேல் ஹாஜராவால் வட்ஸப் இல் இருக்க முடியாமல் அதில் இருந்து வெளியேறினாள். எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். முக்கியமாக கணவனின் அனுமதி தேவை. இதல்லாம் நடக்காத விசயம் என்று அவளுக்கு தெரியும். இதற்கு மேலேயும் கேட்டுக் கொண்டிருந்தால் மனசு குழம்பி அவளை அறியாமலே கலங்கி விடுவாள். இது வருடா வருடம் நடக்கிறதுதானே!
மனதை அமைதிப் படுத்தினாள். அவளை சில நேரங்களுக்கு முன் மகிழ்ச்சியில் திளைக்க வைத்த அதே வட்ஸப் அரட்டைகள் கனப்பொழுதில் கலங்க வைத்து அமைதிப்படுத்தியது.
அவள் தெரிந்து கொண்டாள் மனிதனின் வாழ்க்கையில் போஃன் எப்படியெல்லாம் தலைமை வகித்து நிற்பதை.
அவள் கையில் உள்ள போஃனைப் பார்த்தாள்.
போஃன் ஸார்ஜ் இறங்கி ஓஃப்பாய் இருந்தது.
(யாவும் கற்பனை)