(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘வட்டுசார்… வட்டுசார்…’ என்று தெருக் குழந்தைகள் ஆர்ப்பரிக்கும் சத்தம்… தெரு விளக்கின் மயங்கிய வெளிச்சத்தைச் சந்தித்து நிற்கும் அந்தி ஒளி…
– இத்தகைய ஒரு பகைப் புலனில் வட்டுசார் அப்படியென்றால் கிறுக்கன் சார், நடராஜனின் வீட்டு நடையில் தோன்றுகிறார்.
மாலை ஏழு மணிக்கு ‘ஸீகள்’ளில் சந்திப்பதாக ராமதாஸிடம் சொல்லியிருந்தான். மணி ஆறரை ஆகி விட்டிருந்தது. இவர் அவ்வளவு சீக்கிரம் ஆளை விட்டுவிடமாட்டாரே… ‘இன்றைய ப்ரோக்கிராம் தவறி விடுமோ’ என்ற கவலையோடு, சுமார் இருபத்தி அஞ்சு வருஷங்களுக்கு முன் மிடில் ஸ்கூலில் தான் படித்துக் கொண்டிருக்கையில் வீட்டுப் பாடம் சொல்லித்தந்த அந்த வீட்டு வாத்தியாரை அவன் பார்த்தான்.
இப்போ அவருக்கு அறுபத்தி அஞ்சு வயசிருக்காதா? மேலே எழும்பி நிற்கும் எண்ணெய் காணாத தலை மயிர், கறுப்பும் வெளுப்பும் கலந்த தாடி மீசை… அழுக்காகிப்போன அரைக்கை சட்டை… நாலு முழ மல் வேட்டி, தோளில் துண்டு – இத்யாதி வேஷம்.
முகத்தில் பயம் கலந்த பவ்வியம்… ஒரு மிரட்சி…
குழந்தே… உங்க பழைய சாரல்லவா நான்…? என் கழுத்தை வெட்டிப் போடுவேன்னு அந்தப் படுபாவி கயர்கடைக்காரன் சொல்றானே… கழுத்தில்லாமல் நான் எப்படி வெளியில் இறங்கி நடப்பேன்…
முப்பத்தி அஞ்சு வயசுக்கும் மேல் ஆகிவிட்ட தான், இப்போது இவருக்குக் குழந்தைதான்!
அவர் குறிப்பிட்ட மேற்படி கயர்கடைக்காரர் தன் அடுத்த வீட்டுக்காரன்… மகா முரடன்…
‘தலை இல்லாமல் பார்க்க நல்லா இருக்காதே சார்… அவனுக்கு உங்க தலை இப்போது எதுக்காம்?’
‘விளையாடாதீங்க குழந்தே… என் மனசு என்ன பாடுபடுதுன்னு தெரியுமா?’
அந்தக் காலத்தில் எப்போதும் நீல நிறச் சட்டையும், வெள்ளை வேஷ்டியும், செருப்பும் அணிந்து விடுவிடுவென்று டியூஷன் எடுக்க இவர் தெருவுக்கு வரும் திருக்காட்சியைப் பார்க்கணும்…!
வீட்டுப் பாடம் படிப்பிக்கவென்று தூரத்தில் எங்கோ இருந்து இங்கே வந்தவர், எப்படி இந்தத் தெரு உறுப்பினர்களில் ஒருவர் ஆகி விட்டார்! ஐந்து வீடு தள்ளி இருந்த ஆறுமுகம் பிள்ளையின் மகனுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுக்கத்தான் இவர் முதல் முறையாக இந்தத் தெருவுக்கு விஜயம் செய்கிறார். இங்கே அவன் வீட்டிலிருந்து கரும் பலகையையும் அண்டை வீடுகளிலிருந்து இரண்டு மூன்று பெஞ்சுகளையும் அங்கே போட்டுக் கொண்டு தன்னை தன் தம்பியை மேலும் ஆறுமுகம் பிள்ளையின் மகன் உட்பட தெருவில் பத்து பதினஞ்சு சிறுவர் சிறுமியர்களை சேர்த்துக்கொண்டு எவ்வளவு விமரிசையாக இவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
இப்போது…?
‘என்ன குழந்தே… பேசாம நிக்கிறீங்க! அண்ணைக்கு உங்களுக்குப் பாடம் சொல்லித் தரும்போதே எனக்குத் தெரியும். நீங்க பெரிய ஒரு ஆபீஸறா ஜொலிக்கப் போறீங்கண்ணு! ஆனால்… இப்போ நான் எப்படி வெளியே போவேன்… கழுத்தை வெட்டிடுவேன்னு கோபம் சொல்லிவிட்டு நிற்கிறானே…’
‘ஏன்?’
‘அவன் பிள்ளைக்கு நான் டியூஷன் சொல்லிக் கொடுக்கணுமாம்.’ ‘சொல்லிக் கொடுப்பதுதானே.’
‘அதுக்கு அவன் சம்பளம் தர வேண்டாமா…?’
‘பிறகு, சும்மாவா?’
‘எப்போதாவது காப்பி சாப்பிடவென்று காலோ அரையோ தருவான். அதுக்காக நான் எப்படி தொண்டைத் தண்ணியை வற்ற வைப்பேன்…’ ‘ஓஹோ…! இப்போ இவ்வளவு தூரத்துக்கு இவர் மலிந்து போனாரா! அந்தக் காலத்தில் இவருக்கு அமோக வரும்படி! அதிகாலைப் பொழுதிண்ணு இல்லை, நட்ட நடு இரவு என்றில்லை, திடீரென்று வந்து கதவைத் தட்டுவார் ‘குழந்தையை எழுந்து படிக்கச் சொல்லுங்க, அதிகமா தூங்கக் கூடாது…’ சாரின் குரல் அசரீரியாய் தெருவில் ஒலிக்கும்.
அது மட்டுமா! அடிக்கடி அவர் தன் சொந்தச் செலவில் எல்லாச் சிறுவர்களையும் மியூசியம், கடற்கரை அக்வேரியம், வாட்டர் வொர்க்ஸ் இப்படி நகரத்தில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் உல்லாச யாத்திரை அழைத்துக்கொண்டு செல்வார். ஒரு தடவை கடற்கரையிலிருந்து வரும்போது வெள்ளை மணலை வாரிக்கொண்டு வரச்சொன்னார். வீட்டுக்கு வந்து நீல மையை அதில் கொட்டி உலர்த்தி, இதுதான் கன்யாகுமரி கலர் மண் என்று அவர் போட்ட ஆர்ப்பாட்டமும், அட்டகாசமும்…! பொது இடங்களில் வைத்து பாடத்தில் வரும் ஏதாவது பாட்டையோ, கதையையோ அவருக்கே உரித்தான வெங்கலத் தொண்டையில் இடி முழக்கம் செய்து சொல்லித் தருவார். சுற்றுமுற்றும் உள்ளவர்கள் பார்த்து கேலி செய்கிறார்கள் என்பதைப் பற்றி ஒன்றும் அவருக்குக் கவலை இல்லை.
‘சாருக்கு இப்போ இந்தத் தெருவில் டியூஷன் உண்டுமா?’
‘உண்டே!’
‘எங்கெல்லாம்?’
‘குழந்தே… அதையொண்ணும் சொல்ல வேண்டாம்… ஹும் உங்களையெல்லாம் படிப்பிக்கும்போது எவ்வளவு இருந்தது… இப்போ… ஒரே ஒரு வீட்டில்தான்’ எதிர் வீட்டை அவர் சுட்டிக் காட்டினார்.
‘இந்தத் தெருவில் வீட்டுப் பாடம் எடுக்க வந்தால் கழுத்தை வெட்டிப் போடுவாண்ணு கயர்கடைக்காரன் சொன்னாண்ணு எதிர் வீட்டில் சொல்லுவது தானே…’
அடுத்த வீட்டு கயர்கடைக்காரனுக்கு எவ்விதத்திலும் முரட்டுத் தனத்தில் சளைத்தவனில்லை எதிர் வீட்டுக்காரன் என்பதினால்தான் நடராஜன் அப்படிச் சொன்னான். ஆனால், இப்போ சாரின் கண்கள் நிறைவது தெரிகிறது.
‘குழந்தே… அப்படியா சொல்றீங்க…! அப்போ உங்களுக்கு இதில் ஒன்றுமே இல்லையா! உம்… பெரிய ஆளாகிப் போனோம்… இந்தக் கிறுக்கன் சாருக்காக எதுக்குப் போய் அந்த கயர்கடைக்காரன்கிட்டெ மோதிக்கணும் அப்படீண்ணு எண்ணுறீங்க, இல்லையா? ஹூம்… அவுங்க உங்க அப்பா இப்போ உயிருடன் இல்லை, அவர் மட்டும் இருந்திருந்தா இப்படி… உம்… கொயட் ரைட்…’
மேலே பேச முடியாமல் அவர் குரல் தழுதழுத்ததைக் கேட்டபோது அவனுக்கு என்னவோ போலிருந்தது. சின்ன நாட்களில் முதன்முதலாக ஆங்கிலம் படிப்பிக்கும்போது வார்த்தைக்கு வார்த்தை அவர் உபயோகிக்கும் அந்த ‘கொயட் ரைட்டை’ இப்போது கேட்கும்போது அவன் நெஞ்சுக்குள் ஒரு வலியெடுத்தது.
இரண்டுநாள் முன்னால் எதிர் வீட்டில் முதல் வகுப்பில் வாசிக்கும் பொடிப் பையனுக்கு இவர் தெரு முழுதும் முழங்கும்படி ராக விஸ்தாரம் செய்து பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது ‘ஓய் வட்டு சாரே… கடலை வாங்கி எத்தனை நாள் ஆச்சு… மரியாதைக்குக் காசை வையும்…’ – அப்படி இப்படி இன்னும் மோசமான வார்த்தைகளால் நிலக்கடலை விற்கும் இன்னொரு பொடிப் பையன் இவரைத் திட்டுவதைக் கேட்டும் கேட்காதவாறு தான் தெருவில் இறங்கி காரியாலயம் சென்றது ஞாபகம் வருகிறது.
அந்தக் காலத்தில் வீட்டுப் பாடம் சொல்லித் தர வரும்போது நிலக்கடலையோ, சுண்டலோ தன் சொந்தப் பணத்தில் வாங்கிக் கொண்டு வராமலிருந்ததில்லை அவர்.
இருந்தும்…
எல்லா ஆண்டும் கோயில் திருவிழா வரும்போது இவர் வந்து கூட்டிக்கொண்டுபோவார். அங்கே வைத்து சிக்கனம் பார்க்கா மல் விளையாட்டுச் சாமான்கள் வாங்கித் தருவார்… பெரிய கூட்டமாக இருந்தால், ஒவ்வொருவரையாய் தோளில் தூக்கி உட்கார வைத்து யானையையும், உற்சவ மூர்த்தியையும் எல்லாம் காட்டித் தருவார். ஒரு தடவை கோவிலுக்குப்போய் விட்டுத் திரும்ப வரும்போது அவர் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோய் சிஷ்ய கணங்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டதும் ஞாபகம் வருகிறது. ஒரு பெரிய தென்னந்தோப்பின் நடுவில், தென்னை ஓலை வேய்ந்த சின்னஞ்சிறிய அழகான வீடு, வீடு நிறைய குழந்தைகளுக்குப் பஞ்சமில்லை… வீட்டின் புறத் தோற்றத் திலிருந்து அப்படியொன்றும் செல்வச் செழிப்பிருப்பதாகத் தோன்றவில்லை.
திடீரென்று, பாடம் சொல்லித் தர வாரக் கணக்கில் வர மாட்டார். மூளைக் கோளாறு லேசாய் இருந்ததென்றாலும், இதனால் யாருக்கும் ஒரு உபத்திரவமும் அவர் இழைத்ததில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவர் பேசத் தொடங்கிவிட்டால் அவர் வீட்டில் தெரிவித்துவிடவேண்டியது. பிறகு நாற்பத்தியொரு நாள் கருப்பாறை பகவதி கோவிலில் நோன்புக்காக அபயம்… அதன்பின் வரும்போது பழையபடி நன்றாக பாடம் சொல்லித் தருவார்.
‘உண்மையில் அவருக்குத் தலைக்குக் கிறுக்கு ஒண்ணும் இல்லை. பங்காளிகள் யாரோ சொத்துக்காக செய்வினை செய்துட்டாங்க… அதுதான் பாவம் இப்படிக் கிடந்து கஷ்டப்படுறாரு…’ என்று ஆறுமுகம் பிள்ளை ஒரு தடவை தன் அப்பாவிடம் சொல்வதை நடராஜன் கேட்டிருக்கிறான்.
திடீரென்று அவனுக்கு இன்னொரு விஷயம் புலப்பட்டது. எத்தனையோ ஆண்டு தனக்குப் பாடம் சொல்லித் தந்தவர், பிறகும் தன் வாழ்க்கையில் அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டிருக்கிறார்… இருந்தும் இன்றைய தேதி வரை, வட்டு சார், கிறுக்கன் சார் முதலிய பட்டப் பெயர்களில் அறியப்படுகிறாரேயன்றி, இவருடைய நிஜமான பெயர், இவர் அப்பா அம்மா ஆசையுடன் ஒரு பெயர் வைத்திருப்பாங்களே, அது என்னவென்று தனக்குத் தெரியாதே…!
‘அப்போ நான் போகட்டுமா குழந்தே…?’
சாரின் சத்தம் கேட்டு இப்போ அம்மா உள்ளேயிருந்து ‘யாரு சாரா… என்ன விசேஷம்…?’ என்று கேட்டாள்.
சாருக்கு இப்போ மீண்டும் உற்சாகம் வந்துவிட்டது போலிருந்தது.
‘அம்மா கேட்டேளா நியாயத்தை! அந்தக் கயர்கடைக்காரன் என் கழுத்தை வெட்டப் போறான்னு சொன்னா, எதிர் வீடடுக்காரனிடம் போய்ச்சொல், அப்படி இப்படீண்ணு உங்க மகன் சாக்கு போக்கு சொல்லி என்னை ஏமாற்றப் பாக்குது… உங்க குழந்தை பலே ஆளு… அண்ணைக்கு கடிகார ரிப்பயர் செய்யும்போது ‘ஆயுதம் இல்லாதவன் போரிடுவது எங்ஙனம்?’ என்று மூன்றாம் வகுப்பில் நானே சொல்லிக் கொடுத்த பாடத்தைச் சொல்லி என்னை மடக்கி, சார், பரவாயில்லே, போய் ரிப்பேர் பண்ணத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா கூட்டிக்கிட்டு வாங்க – அப்படீண்ணு எங்கிட்டே சொன்ன ஆளல்லவா?’ என்று சொல்லிவிட்டு, லேசாய்க் குனிந்து தோளில் கிடந்த துண்டை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டு ஹா… ஹா… என்று சிரிக்கத் தொடங்கினார்… அவர் உடம்பு குலுங்கியது… இப்படிச் சிரிப்பதுதான் அவர் வழக்கம்.
போன மாதம் ஒரு நாள் வீட்டுக்கு வந்தபோது, தேதி, கிழமை காட்டும் தன் வெளிநாட்டு சுவர் கடிகாரம் ஓடாமல் நிற்பதைக் கண்டு, ‘குழந்தே… எனக்குக் கடிகார ரிப்பயர் நல்லாத் தெரியும்’ என்று சொல்லி, கடிகாரத்தின் சின்னஞ்சிறிய பாகங்கள் அனைத்தையும், அக்கு வேறு, ஆணி வேறாய்ப் பிய்த்துப் போட்டு பெட்ரோலில் கழுவி விட்டு, கடைசியில் அதைச் சரியாக இணைக்கத் தெரியாமல், அதற்குத் தேவையான கருவிகள் எதுவும் இல்லாமல், அவர் பரிதாபமாய் விழிப்பதைப் பார்த்து, தான் அப்படிச் சொன்னது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால்… இப்போ அந்தக் கடிகாரம் ஓடத் தொடங்கி விட்டாலும், மணி அடிப்பது தான் ஒரு இங்கிதமோ, ஒழுங்கு முறையோ இல்லாமல் இருக்கிறது. ஏழுக்கு இரண்டு முறை அடிக்கும். பன்னிரண்டுக்கு ஒன்று அடிக்கும்… ஆனாலும், ஓடாமல் இருந்த கடிகாரத்தின் உயிரை ஒட்ட வைத்து விட்டோமே என்ற எக்களிப்புடன்தான் அவர் இவ்விஷயம் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.
‘குழந்தே… நீங்க இன்னும் பெரிய பெரிய பதவியெல்லாம் வகிக்கப் போறீங்க… அப்போ உங்க பக்கத்தில் ஒண்ணும் வர மாட்டேன். அது உங்களுக்கு அவமானமா இருக்கும்… ஆனா… எங்காவது ஒளிந்து நிண்ணாவது பார்த்து விட்டுத்தான் நான் கண்ணை மூடுவேன்…’
ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகள் இப்படி தன் படிப்பு முன்னேற முன்னேற எத்தனையோ ஆசான்கள் தன் கல்வி வாழ்க்கையில் வந்து போய் விட்டார்கள். ஆனால், அவர்கள் யாருக்கும் இல்லாத ஒரு ஒட்டுரிமை, பிடிப்பு இவருக்கு மட்டும் தன்னிடம் ஏன்?
எத்தனையோ பேர்கள் வந்துபோன ஒரு அரங்கில் வெறும் ஒரு வீட்டு வாத்தியாராக மட்டும் அவர் நிற்கவில்லை. தன் கல்யாணத்தின்போது, தன் தம்பி தங்கைமார்களின் கல்யாணங்களின்போது எல்லாம் அவர் எங்கிருந்தாலும் சரி, சமஸ்கிருதம் கலந்த மணிப் பிரவாள நடையில் இலக்கண சுத்தமாய் சுயமாக அவர் எழுதிய வாழ்த்துக் கவிதைகளைக் கொண்டுவந்து ராகத்தோடு வாசித்தளிப்பார்…
திடீரென்று வீட்டுக்கு வந்து, ‘குழந்தே… சாயா குடிக்கணும்… இருபது பைசா வேணும்…’ என்று உரிமையுடன் கேட்டுப் பெற்றுக்கொண்டு போவார்.
இப்போது அங்கே வந்த நடராஜனின் மனைவி லலிதாவைக் கண்டதும் அவர் உற்சாகமாய்ச் சொன்னார்.
‘அம்மா உங்க புருஷன், ஆள் சாதுபோல் இருக்கிறாருண்ணு பார்க்க வேண்டாம்… இவர் பெரிய ஆளு… பத்து வருஷங்களுக்கு முந்தி, அப்போ அவருக்கு கல்யாணம் ஆகல்லே, ஒரு நாள் பஸ் ஸ்டாண்டில் வைத்து, ஒரு பொம்பளை, சும்மா சொல்லப்படாது, அவ உங்களைவிட கொள்ளை அழகு, அப்போ இவர் இன்னும் துடியா இருப்பார். அவ இவரைப் பார்த்து வசீகரமான ஒரு சிரிப்பு சிரித்தாள்… நான் படிப்பிச்சுக் கொடுத்த குழந்தை அல்லவா, அவளைத் திரும்பிக்கூட பார்க்காமெ, முகத்தைத் திருப்பி நிமிர்ந்து நடந்துபோய் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்… ரோடில் போய்க் கொண்டிருந்த என்னை ரெண்டு பேரும் பார்க்கல்லே… அந்தக் காட்சியைக் கண்டதும் எனக்கு மெய் சிலிர்த்தது. கோவிலுக்குப் போய்க்கொண்டிருந்த நான், ஓடி இங்கே வந்து உங்க அத்தையிடம் சொல்லி ஆனந்த பாஷ்யம் சொரிந்தேன்…’
லலிதாவுக்கு ஒருவேளை இது செய்தியாக இருக்கலாம். ஆனால் நடராஜனுக்கு இது இதுக்கு முன் பல தடவை இவர் வழியாகவும் அம்மா வழியாகவும் பல தடவை கேட்டறிந்த சமாசாரம்தான்…! அதைக் கேட்கும் போதெல்லாம் மனசறிய தான் செய்யாத கர்மத்தால் தன் தலையில் தூக்கி வைக்கப்பட்ட புண்ணிய சுமை அழுத்த, தான் பார்த்தறியாத அந்தப் பெண்ணுக்காக அவன் உள் மனசில் ஏற்படும் ஒரு ஊமை வருத்தம் இப்போதும் அவனுக்கு ஏற்பட்டது.
‘அப்போ குழந்தே… என்ன சொல்றே…? அந்த முரடனை அப்படியே விட்டு வைக்கலாமா… நான் உங்க பழைய வாத்தி யாரல்லவா…?’
அவர் மீண்டும் பழைய அதே கேள்விக்கு வந்து விட்டார். அவன் கைக் கடிகாரத்தைப் பார்த்த போது மணி ஏழாகி விட்டிருந்தது.
‘அதெல்லாம் ஒண்ணும் செய்ய மாட்டான் சார்… இதென்ன வெள்ளரிக்கா பட்டணமா சும்மா கழுத்தை வெட்டி விட! சும்மா சாரை மிரட்ட அப்படி சொல்லியிருக்கான்… சார் எதுக்கும் போலீஸில் ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுங்கோ…’ என்றவாறு தெருவில் இறங்கும்போது, ‘போலீஸிலே… ஐயையோ…’ என்று அவர் சொல்வதைக் கேட்க நிற்காமல் அவன் விரைந்து நடந்தான்.
– 23.01.1973
– சதங்கை 8.1973
– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.