வடக்காச் செல்லி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,213 
 

“”ஏல செல்ராசி… வாய்க்காலுக்கு போம்போது, உப்பாச்சிப் பெயலையும் சேத்துட்டுப் போல. தண்ணீர் நெறைய வந்துச்சுன்னா ஓரமா நின்னு குளிங்கல…”
சித்திரை பாட்டி கீழவூட்லர்ந்து காட்டுக்கத்தா கத்துனா.
இங்கன உப்பாச்சிங்கறது யாருன்னு கேட்டியோன்னா, எங்க மூக்கம்ம சித்தி மவன். எப்பப் பாத்தாலும் மூக்குல தண்ணீ ஊத்தும் அவனுக்கு. அது காஞ்சிப் போயி, உப்பு பொறிஞ்சி கெடக்கும். அதனால், சேக்காளிப் பெயலுவல்லாம் சேந்து வச்ச பட்டப் பேரு அது. அவனோட நெசப் பேரு மாரி; மாரியப்பன். நாஞ் செலநேரம் டால்டா யேவாரின்னு கிண்டலா சொல்லுவம்லா; செலநேரம் டால்டான்னு சொல்லுவேன்.
எனக்கும் அந்தப் பெயலுவ பேரு வச்சிருக்கானுவ. அத நாஞ் சொல்ல மாட்டேன். சொன்னா சிரிப்பா சிரிப்பிய. அதுவும் போவ, என்னப்பத்தி ஒரு மாரியா நெனப்பியோல்லா, அதனால, வேண்டாம்.
டவுசரை அருணாக்கயித்துல இறுக்கிக்கிட்டு, செவப்பு கலர் குத்தாலத் துண்ட, ரவுடிப் பய கணக்கா தலேய்ல கட்டிட்டு, நானும், உப்பாச்சிப் பயலும் நடந்தோம்.
செட்டியார் கடை தாண்டி, கருவேலப்பறை தெருக்குள்ள நொழைஞ்சிருப்போம். மூக்குவாளிப்பய நெஞ்செறைக்க ஓடியாந்தான். சாமிக்கு நேந்துக்கிட்டு, மூக்குல வளையம் குத்திருப்பான்; அதான் அவனுக்கு அந்தப் பேரு. வந்தவன், எங்க மேல மோதாக்கொறையா நின்னான்.
“”ஏல… வடக்காச் செல்லியம்மன் கோவில்ல எவனோ, பூட்டை ஒடைச்சி, உள்ளப்புவுந்து களவாண்ட்டு போய்ட்டானுவல. அம்மஞ்செலைய வேற ஒடைச்சிருக்கானுவல. கூட்டமா கெடக்குதுல.”
மூக்குவாளிப்பய சொல்லிப்புட்டு நிக்காமலியே, செட்டியார் கடைக்கி வெளில வேலண்ணன் கடையில டீ குடிச்சிட்ருந்த பெரியாளுவகிட்ட இந்த வௌரத்த சொல்லப் போய்ட்டான்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டுச்சு.
எங்க வூரோட காவல் தெய்வம் தான் வடக்காச் செல்லி. எங்க வூரு நல்லாருக்கதுக்கு காரணமே அந்த அம்மாதான். எங்க முத்தம்மா ஆச்சி சொல்லுவா. பரீட்சைக்கு போம்போதெல்லாம், எங்க பாட்டி, கை நெறைய திருநூரு அள்ளி, என் நெத்தில பூசிவுட்டு, “வடக்காச் செல்லி… இந்த பெயல நல்லா படிக்க வையி…’ன்னு வானத்த பாத்து சொல்லிட்டு, “ஏல ஆத்தாள நெனைச்சிக்கிட்டு நல்லா பாத்து எழுதுல…’ன்னு சொல்லுவா.
“ஆச்சி… பாத்து எழுதுனா, வாத்திமாரும், வாத்திச்சியும் அடிச்சிருவாவல்லா…’ன்னு சொல்லி, முத்தம்மாச்சிய கிண்டலு பண்ணுவேன்.
நானும், பள்ளிக் கூடத்துல எந்தப் பயலாவது அடிச்சான்னு வன்னா, எங்க வடக்காச் செல்லிக் கிட்ட சொல்லிக் குடுத்துவம்ல. ஆத்தா ஒன் கண்ண குத்துவாலன்னு சொல்லி தான் மெரட்டுதது. அதுமட்டுமா, எவனாவது பொய்யி, கிய்யி சொன்னாமுன்னு வச்சிக்குங்க, வாரயால, வடக்காச் செல்லியம்மன் கோவில்ல வந்து சூடனை அனச்சி சத்தியம் பண்ணுல பாப்போம்னு சொன்னாப் போதும், எதுராலி அவுளோதான்; தொலைஞ்சான்.
நானும், உப்பாச்சிப் பயலும் பின்னங்கால் பொடதில இடிக்குத மாரிக்கு ஓடுனோம். போம்போது சும்மா போவல. “வடக்காச் செல்லி அம்மங் கோவில்ல எவனோ களவாண்டுட்டானாம்; வடக்காச் செல்லி அம்மங் கோவில்ல எவனோ களவாண்டுட்டா னாம்…’ன்னு கத்திக்கிட்டே ஓடுனோம்.
ஊர்த்தலைவர் செல்லமுத்து நம்பியார் தாத்தா, “ஏல பொன்னையா பேரா… ஓடாதல, மொல்லமா போயம்ல…’ன்னு செல்லமா கைய ஓங்குனாரு. அவரு எப்பயும் இப்டித்தான். யாரா இருந்தாலும், எந்த சாதியாளுவளா இருந்தாலும், நல்லா இருக்கணும்ன்னு நெனைக்கிறவரு. என்னிய, அப்பப்ப செல்லமா கண்டிப்பாரு. எங்க தாத்தாக்கிட்ட செலநேரம் வத்தி வச்சிருவாரு. எங்க தாத்தாவும், அவரும், சேக்காளியோல்லா, அதான்.
நாங்க அங்க போவதுக்குள்ள, போலீசுக்காரவோ, பெலசர் கார்ல வந்துருந்தாங்க. எம்மாம்ங் கூட்டம். சனமெல்லாம் அங்கன கூடுன மாரிக்கி, எங்கணையும் பாக்கலல்லா.
பொம்பளையோல்லாம் மல்லுக்கட்டிக்கிட்டு, கோவிலுக்குள்ளாவ போவ பாத்தாவோ. போலீசுக்காரவோ, அடிக்காத கொறையா, தொறத்திக்கிட்டே இருந்தாவோ. உப்பாச்சிப் பயலுக்கும், எனக்கும் போலீசுன்னா பயம், ஓரமா பம்மிக்கிட்டு கெடந்தோம். எங்க பக்கத்துல, மேல நாராயணசாமி கோவில்ல பூச பண்ணுத, சாமி கொண்டாடி தாத்தாவும், கீழவூட்டு ஓட்டச்சங்கர பெரியப்பாவும், களவாணிப் பயலுவல இப்பியே புடிக்கித மாரிக்கி நீட்டி மொளக்கிட்டுருந்தாங்க. ஆமா, இங்கனதான், வாழை வயலுக்குள்ள ஒளிஞ்சு கெடப்பானுவளாம்லா.
அதுக்குள்ள சனம் இன்னங்கொஞ்சம் கூடிப்போச்சு. பெரியாளுவல்லாம், கசமுசா, கசமுசான்னு பேசிக்கிட்டு கெடந்தாவோ.
அப்பத்தான், அரிராமன் அண்ணாச்சி வந்தாரு.
எங்க வூர்லயே, இவருதான் ரொம்ப மேதாவிம்பாங்க. ரொம்ப வௌரமான ஆளும்பாங்க. கம்லிஸ்ட் கச்சிக்கார்ரு. எங்க வூட்டுக்கு எதுத்தாப்லதான் கம்லிஸ்ட் கச்சி கூட்டம் நடக்கும். அரிராமன் அண்ணாச்சி பேசுணாவோன்னா, வெளியூர்லர்ந்து வார கம்லிஸ்ட் தலைவருங்கல்லாம் அப்டியே ஒறைஞ்சி போயி ஒக்காந்துருவாங்கல்லா; அப்படி பேசுவாரு அவரு.
அரிராமன் அண்ணாச்சி வந்தவொடன போலீசு ஏட்டையாவும், பெரிய ஆபிசரு கணக்கா இருந்த மீசைகார போலீசும், “”வாரும்வே, ஒமக்குத்தாம்பே காத்துருக்கு. சனத்த கொஞ்ச கொறைக்கேலா… இப்டி கூடுனா வெளங்குமாவே. கொஞ்சம் எல்லார்த்தயும் அமத்துதேலாயா…”
அதிகாரிய கேட்டுக்கிட்டதுக்கு, அரிராமன் தலையாட்டிக் கிட்டே, எங்கள தொரத்த ஆரம்பிச்ட்டாரு.
அந்த தொரத்தல்ல, உப்பாச்சிப் பய ஓடிட்டான். அந்த நேரம் பாக்க, பெலசர் கார் டெய்வரு, “”ஏல தம்பி… லேடியேட்ருக்கு தண்ணீ ஊத்துணும்டா, வாய்கால்ல கொஞ்சம் கோரிட்டு வாரியால,”ன்னு கேட்டாரு.
அதாஞ்சாக்குன்னு, அங்கனயே ஒட்டிக்கிட்டேன்.
“”ஆபிசர்வால், என்னதான் சொல்லும், அம்மனுக்கு சக்தி இருக்குதுன்னா, தன்ன காப்பாத்திக்கத் தெரியாதா. கோவிலுக்குள்ள புவுந்து, இருக்கற சாமாஞ்செட்டல்லாம் ஒருத்தன் லவுட்டிக்கிட்டு போறாம்னா, அவன் பெரியாளா? இந்த ஆத்தா பெரியாளாய்யா? அதான் என் கேள்வி. அதுமட்டுமாய்யா? செலய ஒடைச்சி, உள்ள இருக்குத தங்கம், வெள்ளியல்லாம் சுருட்டிட்டான்னா, இந்த அம்மன விட, அந்த களவாணிப்பயதான ஒசத்தி. இல்லியாய்யா. என்ன நாஞ்சொல்றது?” என்று நீட்டி மொழக்குனாரு அரிராமன் அண்ணாச்சி.
போலீசு அதிகாரிய சிரிக்கிட்டு நின்னாங்க. எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு.
என்னய்யா, இந்த அரிராமன் அண்ணாச்சிக்கி புத்தி கித்தி கெட்டுப் போச்சா. இப்பிடி, மானாங்கின்னியுமா பேசுதாரு. அம்மன் சாமிய கொறைச்சி, களவாணிப்பயல சப்போட்டுப் பண்ணி பேசுதாருன்னு நறுக்குன்னு ஆயிப்போச்சி எனக்கு. அவரு கம்லிஸ்ட்காரருலா, அதான் அப்டி பேசுதாரு.
எனக்கு நான் சமாதானஞ் சொல்லிக்கிட்டாலும், அவரு சொன்னது என் மனசுக்குள்ள கெடந்து கொமஞ்சுக்கிட்டே இருந்துச்சு.
ஆமா, அவுரு சொல்லுததும் சரிதான. மனுஷாளுவல காப்பாத்தும்ன்னுதான் சாமி கும்புடுதோம். ஆனா, இப்ப நெலமயே வேறால்லா இருக்கு. சாமியவே சாமி காப்பாத்த முடியலன்னா, நாம எப்டித்தான் சாமிய நம்பி கும்புடுதது. நம்மள சாமி எப்பிடி காப்பாத்தும்.
சாமி வாயக் கட்டிட்டாணுவல்ல.
மறுநாளக்கி, ஊர்ல இதான் பேச்சு.
அம்மன் சாமிய வாயக் கட்டிப் போட்டுட்டு, களவாடிட்டாணுவல்லன்னு பெரியாளுவல்லாம் பேசிக்கிட்டாங்கல்லா.
எனக்கு சாமிய வாயக்கட்டுததுன்னா, என்னன்னு வெளங்கல.
எங்க முத்தம்மா ஆச்சிக்கிட்டப் போயி, கேட்டேன்.
“”ஏச்சி… சாமிய வாயக் கட்டுததுன்னா என்னாச்சி?”
“”போல, பொசக்கட்டப் பயல, வந்துட்டான் வெரம் கேக்கதுக்கு, ஒனக்கு நாந்தாம்ல செல்லம் குடுத்து கெடுத்துட்டன். ஒங்காத்தாட்ட சொன்னம்னா, சாமியாடிருவா, தொடக்கறிய எடுத்துருவா.”
— இப்டியே சொல்லிட்டு கைய குவிச்சி என் கன்னத்துல இடிச்சா.
முத்தம்மாச்சி கன்னத்துல இடிச்சது வலிக்காட்டியும், ஏதோ கேக்க கூடாதத, கோக்கு மாக்கா, கேக்கமோன்னு வலிச்சிச்சி. இருந்தாலும், மனசு கேக்கல. சாமிய வாயக்கட்டுததுன்னா என்னான்னு தெரியாம மனசு அரிச்சிக்கிட்டே கெடந்துச்சு.
சின்ன வாய்க்கால்ல இருந்து தலையில் ஒரு தவலையும், இடுப்புல ஒரு கொடமுமா தண்ணீ கொண்டாந்துக்கிட்டு இருந்தா பெரமு பெரிம. தலையில இருந்த தண்ணி தவலைய கையால புடிக்காமியே டைங் டைங்னு நடந்து வந்தா. முட்டாய் கட பெரியப்பாவோட பொண்டாட்டி. அவோ வேற சாதியா இருந்தாலும் மொறை சொல்லித்தான் பழக்கம். ரொம்ப பாசமா இருப்பாவோ.
சரி பெரமு பெரிமக்கிட்ட கேட்டுருவும்ன்னு தோணுச்சு. ஆனா, நேரா அப்பாக்கிட்ட வந்து, “என்ன அத்தான், ஒங்க மவனுக்கு கண்ட கண்ட சந்தேவம்லாம் வருது…’ன்னு சொல்லி அப்பா, என் முதுவுல டின்ன கட்டிட்டா. மனசுல ஒரு பச்சி கேள்விய போட்டதும், பெரமு பெரிமக்கிட்ட கேக்க நெனச்சத, எச்சி தொட்டு அழிச்சிற வேண்டியதான்னு முடிவு பண்ணிட்டேன்.
திரும்பயும் உப்பாச்சிப் பயதான் நெனவுக்கு வந்தான்.
கம்லிஸ்ட் சங்காஸ்ல, கோலிக்கா வெளாடிட்டுருந்தான் உப்பாச்சி. அவன் குத்தவெச்சி ஒக்காந்து ஒவ்வொரு பொந்தா பாத்து கோலிக்கா போடுததுல குறியா இருந்தான். பின்னாக்கிடி நின்னு பார்த்தா, அவன் டவுசர்ல பின்னாடி ரெண்டு சயிடும் கிழிஞ்சிருந்த ஓட்டைய பாத்தா சிரிப்பு வந்திச்சி.
சிரிச்சா காரியம் கெட்டுரும். அவன் கூட வெளையாடிட்டிருந்த ராசோல் பாட்டி மவன் சங்கரு என்ன பாத்ததும், எந்திச்சி ஓடுனான். அது ஏன்னா, நாளைக்கி பள்ளிக்கூடத்துல சட்னா (சட்டநாதன்) வாத்யாருட்ட வத்தி வச்சிருவம்ன்னு பயம். இப்பிடித்தான், மாத்தி மாத்தி, ஒருத்தரப் பத்தி ஒருத்தர் வத்தி வச்சி, ஒவ்வொருத்தரு கை சதக்கறில பாதி, சட்னா வாத்யாரு கையிலதான் இருக்கும்.
சங்கரு ஓடிட்டான்னதும், உப்பாச்சி என்னப்பாத்து மொறைச்சான்.
“”ஏல உப்பாச்சி… இங்கன வால, ஓங்ட்ட ஒரு சம்ஷியம் கேக்கணும்ல,”ன்னு, சாமிக்கு வாயக்கட்டுதது பத்தி ஆரம்பிச்சேன்.
“”இது கூட தெரியாதால,”ன்னு என்ன ரொம்ம ஏளனமா ஒரு பார்வ பாத்தான்.
“”ஏ… செல்ராசி, இந்த பொம்பளையோ மாசாமாசம் வூட்டுக்கு பொறாசல்ல போயி, ஒலக்கய போட்டுக்கிட்டு ஒக்காருவாளுவல்லால, “தீண்டல்ல இருக்கேன், தொடாதியோல்ல…’ன்னு தொரத்துவாவோல்லா. அப்போ, அவோ <உடுத்திப்போடுத தீண்டத் துணிய எடுத்து சாமிக்கிட்ட கொண்டு போனா, சாமியோட சக்தியெல்லாம் போயிரும். அப்போ நாம சாமிய அடிச்சாலும், திரும்பி அடிக்காது. அப்பிடித்தான் சாமிய வாயக்கட்டுவானுவ!'' அப்ப, அரிராம அண்ணாச்சி சொல்லுத மாரி, சாமியாலயே சாமிய காப்பாத்த முடியலன்னா. சாமி பெருசா, மனுசன் பெருசா, அந்த களவாணிப்பய பெருசான்னு எனக்குள்ள கேள்வி வந்துச்சு. நெனைக்க நெனைக்க மனசு பெசஞ்சிச்சி. பத்து நாளா மனச அரிச்சிக்கிட்டு இருந்துச்சி. அப்பத்தான், அந்த சேதி ஊர்ல பரபரப்பாச்சி. தாழையடி ஆத்தங்கரை, ஒத்த தென்னமரத்தடில, பூங்குறிச்சில கஞ்சா விக்குத ராசய்யா மவன் தொண்டி கோவாலு செத்துக் கெடக்காம்ன்னு ஆளுவல்லாம் ஆத்தப்பாக்க ஓடுனாவ. ஒடம்பெல்லாம் நீலம் பாஞ்சி, வாயில நொறைத்தள்ளி செத்துக் கெடந்தான் தொண்டி கோவாலு. கண்ணு பக்கத்துல எறும்பு ஆஞ்சிக்கிட்டு, காஞ்சி போன, வாய் நொறைய ஈ மொச்சிக்கிட்டு இருந்துச்சு. தாழம்பூ வாசம் மூக்கச் சுண்டி இழுத்துச்சு. பத்தடி தள்ளி தாழைல தாழம்பூ பூத்துக் கெடந்துச்சு. அதுக்கடியில ஒரு நல்ல பாம்பு சுத்தி ஒக்காந்து கழுத்த தூக்கி படம் எடுத்துக்கிட்டு, "உஷ்ஷூ உஷ்ஷூ'ன்னு சீறிக்கிட்டு நின்னுச்சு. பாம்புக்கு அடில பாத்தா... அய்யோ... ஊரு சனமெல்லாம் கூவுச்சு. ஆமா, சீறிக்கிட்டு நின்ன நல்ல பாம்புக்கு அடில ஒரே நகையலா குவிஞ்சு கெடக்கு. நகையல யாரு எடுத்துராத மாரிக்கி, யாரயும் கிட்ட அண்ட விடாம சீறுது நல்ல பாம்பு. சுப்பையா வாத்யாரு தான், மொதல்ல வாயத்தொறந்தாரு. ""ஏலே, எல்லாமே வடக்காச் செல்லி நகைகள்லா. ஆத்தா நகைய எடுத்தா சும்மாவா வுடுவா...'' ஊர் மொத்தமும் அந்த நல்ல பாம்ப கையெடுத்து கும்புட்டு, ஆத்தா நல்லவியோல வாழ வையி. பொசக்கெட்ட பெயலுவலுக்கு, இப்பிடித்தான் ஆத்தா நொறை தள்ளும். வடக்காச் செல்லிஆத்துலர்ந்து திரும்பி வாரப்போ, வடக்காச் செல்லி அம்மன் கோவில் வாசல்ல நின்னு உள்ள பாத்தேன். ஒடைஞ்ச செலைய இன்னும் சரி பண்ணலை. ஆனா, உள்ள வடக்காச் செல்லி உக்காந்து என்னப் பாத்து சிரிக்குத மாதிரி இருந்துச்சு. என் கண்ணுல தண்ணி வர ஆரம்பிச்சுது.
“நீ இருக்கும்போது எனக்கு என்ன கவலை ஆத்தா?’ன்னு மனசு சொல்லிச்சு.
எங்க முத்தம்மாச்சி, ஆத்தா, இந்த பெயல நல்லா படிக்க வையின்னு கை நெறைய திருநூரு எடுத்து என் நெத்தில பூசுதது தான் நெனைப்புக்கு வந்துச்சு.

– அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *