வஞ்சனையும் வாஞ்சையும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2024
பார்வையிட்டோர்: 2,228 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா, அம்மா, தினமும் சொல்ல மாட்டேன் என்கிறாயே, அப்பா எங்கே அம்மா? ….சொல்லமாட்டாயா?….என்ன, நான் இன்னும் கைக் குழந்தை என்றா எண்ணிக் கொண்டாய்?” 

”ஐயோ! அதைப்பற்றி மட்டும் கேட்காதையேன்… அவர் வந்து விடுவார்…கூடிய சீக்கிரம் வந்து விடுவார்.” 

“எத்தனை நாளைக்குத்தான் ‘வந்து விடுவார்’ வந்து விடுவார்’ என்று சொல்லப் போகிறாயோ! அப்பா, என்னமோ வந்த பாட்டைக் காணோம்! அம்மா! நிஜமாகச் சொல்லு, அப்பா எங்கே?” 

“நிஜம்மாகத்தான் சொல்லுகிறேன். அப்பா வட நாட்டிற்குச் சென்றிருக்கிறார். கூடிய சீக்கிரம் வந்துவிடுவார். கவலைப் படாதே கண்மணீ! உனக்கு நானிருக்கும் போது என்ன கவலை? நான் உன்னைக் கவனித்துக் கொள்வேனடா கண்ணு” என்றாள் தாய் தயக்கத்துடனும் ஆறுதலுடனும். 

மகன் அதை அறிந்து கொண்டான். தாயைப் பார்த்து, “இல்லை அம்மா! நீ பொய் சொல்லுகிறாய். அப்பா விஷயமாக ஏதோ ஓர் மர்மம் இருக்கிறது. அம்மா! உண்மையைச் சொல்லக் கூடாதா?’ என்றான் பரிதாபமாக. 

தாயின் கண்களில் நீர் பெருகி வழிந்தது. அந்த சோக நாடகம் அவள் மனதை ஊடுருவிற்று. எத்தனை நாளைக்குத்தான் அவள் அதை மறைத்து வைப்பது ? எனி னும் உடனே சொல்லப் பிரியப் படாமல், “ராமச்சந்திரா ! நாளை விடிந்தால் பரீக்ஷையப்பா. பேசாமல்படி. அப்பா விஷயத்தைப் பற்றி இன்னொரு நா நாளைக்கு விரி வாகச் சொல்லுகிறேன். கட்டாயமாக” என்று கூறிவிட்டுச் சென்றாள். 

உறுதியான அம் மொழியினால் ராமச்சந்திரன் திருப்தி அடைந்தான். தாயிடம் அவனுக்கு மிகுந்த வாஞ்சை. அவள்தானே அவனுக்கு அப்பாவும் கூட! ‘பிராக்ரஸ் ரிபோர்டில்’ அவள் தானே கையெழுத்துப் போடுகிறாள். அப்படிப்பட்ட ஆசை மிகுந்த தாயின் சோகத்தை அவன் கிளறிவிட விரும்பவே இல்லை. அவள் மகிழ்ச்சியையே ஆவலோடு எதிர்பார்த்தான். மகிழ்ச்சியுடன் புஸ்தகத்தை வைத்துக்கொண்டு கருத்தாய் படிக்கலானான். 

ராமச்சந்திரனுக்கு பதினைந்து வயதாகிறது. நல்ல கெட்டிக்காரன். வகுப்பிலே இவன்தான் முதல்தர மாணவன். நாளை விடிந்தால் S. S. L. C. பரீக்ஷை. அதற்காக அவன் படித்துக் கொண்டிருந்தான். 

தாய் சமையல் அறையில் இருந்தபடியே அதை கவனித்தாள். ஓர் ஆறுதல் அவள் உள்ளத்தை சமாதானப் படுத்தியது. 

புஷ்பா நல்ல ஸ்வபாவ முடையவள். படித்தவள். நிரம்ப அழகு என்று சொல்வதற்கில்லை. அவள் மகனை கண்ணை இமை காப்பது போலக் காத்தாள்; அவனுடனேயே அவள் எப்பொழுதும் இருப்பாள். அவனுடைய நடை, உடை, பாவனை, தோற்றம்எல்லாம் அவன் அப்பா ஜகந்நாத கவியைப் போலவே இருக்கும். அவன் பேசினாற்கூட அவன் அப்பாவைப் போலவே இருக்கும். இது வேறு புஷ்பாவிற்கு சாந்தியை ஒருபுறம் அளித்தது. இவ்வளவு வயதாகியும்கூட ராமச்சந்திரனை, அவள் இளங் குழந்தையைப் போல் பாவித்து, நடந்தும் கொணடாள். ராமச்சந்திரனு கொஞ்சம் வெட்கமாயிருக்கும். ஆனால் தாயோ, மட்டற்ற மகிழ்வில் ஆழ்ந்துவிடுவாள், பெற்ற தாய் அல்லவா? 

புஷ்பாவின் கணவன் ஜகந்நாத கவியை அறியாதவர்கள் எவருமே இல்லை. அவர் நல்ல அறிவாளி; படிப்பாளி, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, வங்காளி முதலிய பாஷைகளில் அவர் தேர்ச்சியுடையவர். பிரபல எழுத்தாளரும் கூட, பல பாஷைகளில், கதை கவிதை. நாடகம் முதலியவைகள் எழுதி பெரும் புகழை அவர் அடைந்தார். 

இந்நிலையில்தான் புஷ்பா அவருடைய கிரஹலக்ஷ்மியாக வந்தடைந்தாள். அவருக்கு செல்வம் குவிந்தது. அவர் காவியங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டது. “எல்லாம் புஷ்பாவின் பாக்கியம்தான்” என்று அவர் புஷ்பாவிடம் அடிக்கடி கூறுவார். புஷ்பாவிடம் அவருக்கு மகத்துவம் மிகுந்த உண்மைக் காதல் இருந்தது. புஷ்பாவின் மேலான எண்ணங்களும், உதாரகுணமும் கவியின் மனதைக் கொள்ளை கொள்ளும். 

புஷ்பாவோ கணவனை தெய்வமாகக் கருதி வந்தாள். அவர் உள்ளூற திருப்தி அடைந்தால் தான் தானும் திருப்தி அடைவாள். கணவனுக்கு உதவியாகத் தானும் சில சமயங்களில் காவியங்களை எழுதிக் கொடுப்பாள். உணர்ச்சியுடன் சில சமயங்களில் கணவன் எழுதும் நாடகங்களை நடித்தும் காட்டுவாள். 

அவர்களுடைய ஆனந்த மயமான வாழ்க்கையின் முதல் மலராக ராமச்சந்திரன் பிறந்தான். 

குழந்தைகள் பிறப்பது சிலருக்கு நல்லதாய் இருக்கிறது ; சிலருக்குத் தீயதாய் இருக்கிறது..இதன் காரணம்? கர்மவினைப் பயன்தானே? என்னவோ, ராமச்சந்திரன் பிறந்த எட்டு மாதங்களுக் கெல்லாம் ஜகந்நாத கவி வீணர் சகவாசம் கொண்டான். அவர்கள் அட்டைகளைப்போல் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அதிகம் எழுதுவானேன். அவன் சினிமா கலையில் அதிக ஆர்வம் செலுத்தினான். காம பாசத்தில் சிக்குண்டான். மனம் மாறுபட்டது. ஆசை மனைவியும், அருமைக் குழந்தையும், வஞ்சக்கனல் ஆனார்கள். முடிவில், வட நாட்டு நடிகையான திலோத்தமை என்பவளுடன் வட தேசம் சென்று விட்டான். 

பாவம்! புஷ்பா என்செய்வாள் ? பரந்த இவ்வுலகில் அவளுக்கு பெற்றோர்களோ, நெருங்கிய உறவினர்களோ கிடையாது! விதியை நொந்து கொண்டு தனக்கிருந்த நில புலன்களை விற்று கணவன் வைத்துப் போன கடன் முழுவதையும் அடைத்தாள். எஞ்சியிருந்த அற்ப வருவாயில் காலக்ஷேபம் செய்தாள். குழந்தை ராமச்சந்திரனை நன்றாக வளர்த்து அவனைப் பெரியவனாக்கினாள்! 

3

ஜகந்நாத கவி, திலோத்தமையுடன் சினிமாவில் நடித்துக் கொண்டும், சரள கேளிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டும், குடித்துக்கொண்டும், ஒரே சிற்றின்ப ரஹிதனாய்த் திரிந்தான். திலோத்தமை கவியை மயக்கி அவனுடைய உயரிய கதை, நாடகம் இவைகளை தான் எடுக்கும் சினிமா படத்திற்கு ஏற்றதாக்கிக் கொண்டாள். இதனால் பணம் மிகுந்தது. தவிர பல சினிமா பட முதலாளிகள் கவியின் உயரிய இலக்கியங்களை அதிக விலை கொடுத்து சினிமாவிற்காக வாங்கிக்கொண்டு செல்வார்கள். அந்தப் பணமெல்லாம் திலோத்தமையின் கைப் பையையே அடைந்தன. சிலர் கவியிடம், கதை, வசனம், எழுதித் தரும்படியும், டைரக்ஷன் செய்யும் படியும் வந்து கேட்பார்கள். அதற்கெல்லாம்திலோத்தமையின் மூலமாகத்தான் வரவேண்டும். அவள் வைத்ததுதான் சட் டம். அவள் இட்ட கோட்டை ஜகந்நாத கவி தாண்டமாட்டார். அவள் கவியை அவ்வாறு கட்டுப் படுத்தி இருந்தாள். 

திலோத்தமை, தன் புகழை வைத்துக் கொண்டு தன்னை ஆட்டி வைப்பது அந்த கவிக்கும் ஒரோர் சமயங்களில் தெரியும். அதனால் அவன் துயர் உறுவான். அதை திலோத்தமை எப்படியோ அறிந்து கொள்வாள். உள்ளத்திலே வஞ்சக் கனலின் வெம்மை இருந்தபோதிலும் முல்லையைப் போல் முறுவல், அந்த சாகசத்தின் சக்திக்கு, கவி எம்மாத்திரம்? 

அந்தச் சிரிப்பிலேயே ஜகந்நாத கவி மயங்கி விடுவான். 

நாளடைவில் ஜகந்நாத கவியின் அறிவு மழுங்கியது. அவன் தாறுமாறாக எல்லா விஷயங்களிலும் நடந்து கொண்டான். எல்லோரும் அவனுடைய செய்கைகளை அறிந்து அவனைத் தூற்றினார்கள். திலோத்தமையும் மெல்ல மெல்ல அவனை விட்டு விலகிவந்தாள். இந் நிலையில் காசநோய் அவனைப் பற்றிக் கொண்டது. நோயின் உபாதை பெருகிற்று. அவனால் தாங்க முடியவில்லை. துடிதுடித்தான். 

ஓர் தினம் அவன் நிலைமை நிரம்ப மோசமாய் இருந்தது. மிகவும் பலஹீனமான த்வனியில் “திலோத்தமா! திலோத்தமா!” என்று அழைத்தான். பதிலே கிடையாது. 

இந்தச் சமயத்தில் வீட்டு வேலைக்காரன் அவனிடம் வந்தான். “எஜமானியம்மா சொல்லி விட்டார்: நீங்கள் இந்த வீட்டை விட்டு உடனே போய்விட வேண்டுமாம். வியாதிஸ்தர்களுக்கு இங்கு இடமில்லையாம்!” என்று கூறினான். 

அந்தச் செய்தி அவன் உள்ளத்தைக் குத்தி எடுத்தது. அவ்வமயம் திலோத்தமை குஷாலாக உள்ளே வந்தாள். கவியை வெறுப்புடன் பார்த்தாள். 

ஏற்கனவே ஆத்திரம் அடைந்த கவி, அவள் கோலத்தைக் கண்டதும் பொங்கி துடிதுடித்துப் எழுந்தான். ஆனால் முடியவில்லை. உன்மத்தமாக, ‘சாகசி’ நீ பெண்ணா, பேயா?” என்று கேட்டான். 

திலோத்தமைக்கு ‘சுருக்’ கென்றது. மிகுந்த ஆக்ரோஷம் கொண்டவளாகி, அவள் “என்ன சொன்னாய்? பேயா, நானா பேய்? . ஆம், இதோ வாங்கிக் கொள்” என்று கவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். 

“ஹா !” என்றலறிச் சுருண்டான் கவி. விழுந்து விழுந்து சிரித்தாள். “ஊம். கொண்டு போய் தள்ளு இவனை” என்று திலோத்தமை வேலைக்காரனுக்குகட்டளை இட்டாள். 

ஜகந்நாத கவிக்கு சுய நினைவு வந்தது. கண்விழித்துப் பார்த்தான். தான் ஓர் தர்ம ஆஸ்பத்திரியில் கதியற்றுக் கிடப்பது அப்பொழுதுதான் தெரிந்தது! 

மனிதர்கள், தாங்கள் துயருறும் காலத்தில்தான், தாங்கள் செய்த, வஞ்சனை, பாபம், அட்ட காசம் முதலியவைகளை எண்ணுகிறார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு அறிவும், ஞானமும், நேர்மையும் உதயமாகிறது. தர்மம் தெரிகிறது. இது உலக இயல்பு போலும் ! ஒவ்வொரு மனிதனும் இந்த இயல்பில் அடி பட்டுத்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது! 

ஜகந்நாத கவிக்கும் இப்போது தான் தன் மனைவி, மக்களைப் பற்றி சிந்தனைகள் தொடர்ந்தன. “ஐயோ! புஷ்பா உன்னை வஞ்சித்தேனே! வஞ்சித்தேனே!” என்று புலம்பினான். புஷ்பாவை எண்ணி உருகினான். தன் அருமைக் குழந்தை ராமச்சந்திரன் இப்பொழுது எப்படி இருக்கிறானோ? புஷ்பா எப்படித் தவிக்கிறாளோ? அவர்கள் இந்த உலகத்தில் சுகமாய் வாழ்கிறார்களோ? ஐயோ! வஞ்சகம் செய்தேனே …செய்தேனே…!” என்று சதா புலம்பிக் கொண்டிருந்தான். 

நாட்கள் சென்று. கொண்டிருந்தன. அவனுடைய வியாதி – புஷ்பாவின் பூஜாகிரஹம்தான் என்று சொல்ல வேண்டும் – குணமடைந்தது. ஆஸ்பத்திரியை விட்டு அவன் சீக்கிரம் வெளி வந்தான். 

முதலில் தன் மனைவி, மகனைக் காண வேண்டுமென்ற அவா அவன் மனதைத் துருவிற்று. உடனே அவன் தன் சொந்த நகரத்திற்குப் பிரயாணமானான். 

ராமச்சந்திரனுக்கு இப்பொழுது பத்தொன்பது வயது தான் ஆகிறது அதற்குள் அவன் பிரபல எழுத்தாளனாகிவிட்டான். பல கலைகளிலும், பாஷைகளிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கினான். ஓர் பிரபல தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியர் ஆனான். நல்ல சம்பளம். இடையில் வேறு வருமானம், வேறு பத்திரிகை களுக்கு விஷயதானம் செய்வ தால், இன்னும் பிரசங்கம் முதலிய வைகளிலிருந்து வேறு வருமானம். செல்வம் கொழித்தது அவனிடத்தில். நவயுக எழுத்தாள உலகில் அவன் ஓர் புரட்சிக் கனலாகத் திகழ்ந்தான். 

புஷ்பாவிற்கு இதில் ஓர் ஆனந்தம். ஆயினும் அவள் அவனை அடிக்கடி “ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் ” என்று எச்சரிப்பாள். 

ராமச்சந்திரன் தாயின் சஞ்சலத்தை அறிந்து பதில் அளிப்பான். 

புஷ்பா அடிக்கடி தன் கணவனை சிந்தித்துக் கண்ணீர் வடித்தாள். 18 வருஷங்கள் தேய்ந்த பின்னும் அவளுக்கு இன்னும் வாஞ்சை அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. அவர் தன்னை வஞ்சித்தபோதிலும் அவள் அதை மறந்தே போனாள். ‘என்னுடைய அருமைக் கணவன்தானே’ என்று தனக்குள் சொல்லிக்கொள்வாள். “ஐயோ!  வர் இப்பொழுது எங்கு இருக்கிறாரோ? எப்படி யெல்லாம் கஷ்டப்படுகிறாரோ? அந்த சாகசி அவரை எப்படி படுத்துகிறாளோ? பகவானே! அவர் சுகமாய் இருந்து, என்னை மறுபடியும் வந்தடைய அருள் வேண்டும்!” என்று கல்லுருவான கடவுள் முன் கசிந்துருகுவாள். 

இதை ஓர் தினம் ராமச்சந்திரன் கவனித்துவிட்டான். உடனே அவன் மனச்சாந்தி அற்று விட்டான். தாயின் சோகத்தைத் தீர்க்க தீவிர யோசனை செய்தான். தன் தகப்பனாரைத் தானும் காண வேண்டு மென்ற ஆசை அவன் உள்ளத்தில் ஒரு புறம் இருந்தது. உடனே அவன் வடநாட்டிற்குக் கிளம்பினான். பல இடங்களில் சென்று விசாரித்தான். கடைசியில் யாரோ ஒருவர் மூலம் ‘அவர் ஆஸ்பத்திரியில் கிடப்பது’ தெரிந்தது. உடனே ஒடோடியும் அங்கு சென்று பார்த்தான். ஆனால் அவர் அங்கில்லை! 

அப்பொழுது ஜகந்நாத கவி தான் தன்னகத்தை நாடி வந்து கொண்டிருந்தான்! தன் ஸ்வதேசத்தை அடைந்த ஜகந்நாத கவி சற்று மன நிம்மதி யுற்றான். தன் மனைவி, மகனைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தான். அவர்கள் சொன்னதிலிருந்து, மகன் ஓர் பிரபல ஆசிரியன் என்றும், புஷ்பா அவனுடன் இருக்கிறாள் என்பதையும் தெரிந்து கொண்டான். மனம் கூத்தாட, விறு விறு என்று தன் வீட்டை நாடிச் சென்றான். 

“எங்கே ?… இங்கு என் வீட்டைக் காணோமே!… பங்களா!… ஒரு பெரிய பங்களாவல்லவோ இருக்கிறது ?… இது யாருடையது ?…” என்று சுற்று முற்றும் பார்த்தான். சுவரில் ‘ராமச்சந்திரன்-இன் ‘ (அதாவது உள்ளே இருக்கிறார்) என்ற பலகை இருந்தது அதைக் கண்டதும் கவி அதி ஆச்சரியமும், குதூகலமும் அடைந்தான். தன்னுடைய மகன் பங்களா என்பதையும் அவன் சந்தேகமற அறிந்தான். உள்ளே செல்லத் துணிந்தான். 

மூடியிருந்த வாயிற் ‘கேட்’ டைத் திறந்தான். சுவர் மறைவில் அரைத் தூக்கத்தில் இருந்த காவலாளி விழித்துக் கொண்டான். “யார் அது?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து வந்தான். கவி தயங்கி நின்றான். கவியின் கோலத்தைக் கண்ட காவலாளி ‘சள்’ ‘புள்’ ளென்று இரைந்தான். அவனை விரட்டினான். 

கவிக்கு இன்னது செய்வதென்று சிறிது புரியவில்லை. யோசித்தான். தன் கிழிசல் பையில் வைத்திருந்த நாலணாவை எடுத்து, அவனிடம் கொடுத்தான். பின், “நான் உன் எஜமானரைக் காண வேண்டும். அவரிடம் நான் வந்திருப்பதாகத் தெரிவி” என்றான்.

காவலாளி சாவதானமாக, “நீ யாரப்பா? உன் பெயர் என்ன? யஜமானரை எதற்காக பார்க்க வந்தாய்?…” என்றெல்லாம் கேட்டான். 

“இல்லை நான் அவருடைய; அவருடைய…” பிதா என்று சொல்லிக் கொள்ள ஜகந்நாதனுக்கு வெட்கமாய் இருந்தது. சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான். 

காவலாளி அதை அறித்து, “சரி இந்தா சீட்டு. இதில் உன் பெயரை எழுதிக் கொடு. எஜமானரிடம் கொண்டுபோய்க் கொடுக்கிறேன்…” என்று ஓர் காகிதத்தையும் பேனாவையும் நீட்டினான். 

கவி உவகையுடன் அதில், “வஞ்சனை இழைத்துள்ள உன் தகப்பன் இன்று உன் வாசலில் வந்து நிற்கிறேன். நீ என்னை ஏற்றுக் கொள்வாயா?…” என்று எழுதி அனுப்பினான். 

காவலாளி உள்ளே சென்றான். 

கவியின் மனதில் சந்தோஷமும் துயரமும், மாறி மாறித் தோன்றின. அவன் உள்ளம் கொக்தளித்தது. முதலில் தான் புஷ்பாவிடம் அடைக்கலம் புக வேண்டுமென்று எண்ணினான், தக்ஷணமே உள்ளே சென்றான். மன்னிக்க முடியாத குற்றம் தான் செய்து விட்டானல்லவா? 

திறந்திருந்த ஓர் அறைக்குள் அவன் காலை வைத்தான். ஆம், அது புஷ்பாவின் அறை தான், அந்த அறை எங்கும் மாலையோடு காணப்படும் படங்களும் அவனுடையதே! ‘ஆ’ என்று அதிசயித்து நின்றான் கவி. அவைகளைப் பார்த்துப் பார்த்து அவன் கண்கள் பூத்து விட்டன. இதயம் ‘பட்’ ‘பட்’ வென்றடித்துக் கொண்டது. 

அதே சமயத்தில் புஷ்பா அறைக்குள் பிரவேசித்தாள். கவி ஜகந்நாதனைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றாள். அன்றலர்ந்த மலர் மாலைகளை அவள் கையில் பிடித்திருந்தாள். அவள் மனம் புரண்டது. சற்று சந்தேகமும் ஒரு புறம் இருந்தது. எத்தனை வருஷங்கள் சென்று விட்டன!…. பதினெட்டு வருஷங்கள்!…”ஆ!… தாங்கள், தாங்கள்…” என்றாள். மேலே பேச அவளால் முடியவில்லை. 

கவி நிலை குலைந்தான். புஷ்பா எப்படிப் போய் விட் டாள், பிரிவுத் துயரம் இவ்வளவு கொடுமையானதா?’ என்று அவன் மனம் துடித்தது. அதோடு அவள் தவிப்பையும் கவி உணர்ந்தான். ”புஷ்பா! நான் மஹாபாபி! வஞ்சித்தேன்! வஞ்சித்தேன்!!…வஞ்சித்தேன்!!!….என்னை நீ ஏற்றுக் கொள்வாயா!” என்று துக்கம் முழங்கக் கேட்டான் கவி. 

அந்த யாசிப்பு புஷ்பாவின் மென்மையான உள்ளத்தை உருக்கிற்று. கனிந்த குரலில், “எல்லாம் ஈசன் செயல்! இந்த மட்டுமாவது தாங்கள் என்னிடம் வந்தீரே! என் பாக்கியமே பாக்யம் !” என்று கூறி அம் மலர் மாலையைக் கவியின் பாதத்தில் அர்ப்பணித்தாள்! 

– மங்கை, ஜூலை 1947.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *