லெச்சுமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2024
பார்வையிட்டோர்: 157 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

1

அரசலாற்றங்கரையில் ஒரு கிராமம். 

அந்தக் கிராமத்தில் ஒரு குடிசையிலிருந்து ‘லொடக், லொடக்’ என்று கைத்தறியின் சத்தம் வந்துகொண் டிருந்தது. தறியண்டை உட்கார்ந்து வேலை செய்துகொண் டிருந்தான் கறுப்பன். அவன் முதுகு கூனிப் போயிருந்தது. வயசு ஐம்பதுதான் ஆயிற்றென்றாலும் அவன் உடம்பில் எலும்பும் தோலுந்தான் இருந்தது. 

அவன் கைமட்டும் வேலை செய்துகொண் டிருந்ததே ஒழிய அவன் மூளை இந்த வேலையில் ஈடு பட்டிருக்கவில்லை. அது வேறு விஷயத்தைப்பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. இருந்தாலும் இது அவன் நெசவு வேலையை ஒன்றும் பாதிக்கவில்லை. அவன் கைகள் அவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தன. பதினைந்து வயசிலிருந்து உண்டான பழக்கமல்லவா அது ! 

யாரோ கதவைத் திறக்கும் சத்தங் கேட்டுக் கறுப்பன் திரும்பிப் பார்த்தான். ஒரு பெண் பிள்ளை, தலையில் இரண்டு தண்ணீர்ப் பானைகளை வைத்துப் பிடித்துக்கொண்டு, தணிந்திருந்த வாசல் நிலை இடிக்குமோ என்று குனிந்துகொண்டே, உள்ளே நுழைந்தாள். இவ்வளவு நேரம் கறுப்பன் மூளை சிந்தித்துக்கொண்டிருந்தது இவளைப்பற்றித்தான். 

கறுப்பன், பேசாமல் தறியை விட்டு எழுந்து சென்று, அந்தப் பெண் தலையிலிருந்து ஒரு தண்ணீர்ப் பானையை இறக்கி ஒரு பக்கமாக வைத்தான். ன் னொன்றை அந்தப் பெண்ணே இறக்கி அதன் பக்கத்தில் வைத்தாள். அந்த மூலையில் இன்னும் இரண்டு மூன்று சோறு சமைக்கும் பானைகள், ஓர் அகப்பை, ஓர் உடைந்த அடுப்பு, ஒரு விறகுச் சுள்ளிக் கட்டு இவைகளும் இருந்தன. இவ்வளவுதான் அந்த வீட்டிலே இருந்த ஐசுவரியம் எல்லாம். இல்லை – இன்னொரு மூலையில் கிடந்த கிழிந்த பாயையும், அதன் மேலிருந்த கிழிசல் வேஷ்டியையும் புடைவை யையுங்கூட இதிலே சேர்த்துக்கொள்ள வேண்டும். 

தண்ணீர்ப் பானையைக் கீழே வைத்துவிட்டு, கறுப்பன் அந்தப் பெண்ணின் எதிரில் நிமிர்ந்து நின்றான். இதிலே அவன் முதுகுக் கூனல்கூடச் சிறிது நிமிர்ந்தது. 

“தண்ணி கொண்டுவர இவ்வளவு நேரமா ஆச்சு? வழியிலே நீ அந்தத் திருட்டுப் பையனைப் பாக்கல்லே?” என்று அதட்டும் குரலில் கேட்டான். 

அந்தப் பெண் திடுக்கிட்டு ஒரு மருண்ட பார்வை பார்த்தாள். “யாரைச் சொல்லறே?” என்று கேட்டாள். 

“யாரைச் சொல்லறேனா? நான் சொல்றதென்ன? இந்த ஊரெல்லாம் யாரைப்பத்திச் சொல்லுதோ அவனெத்தான் சொல்றேன்!” 

“நான் யாரையும் பாக்கல்லை, நாயனா!” என்றாள் பெண். 

“நீ பாப்பயோ பாக்க மாட்டியோ, அதோ மேலே இருந்து எரிக்கிறானே அவனுக்குத்தான் தெரியும். இந்த அம்பது வருஷத்திலே ‘கறுப்பன் இப்படி’ என்று ஒருத்தர் ஒரு பேச்சு என்னைச் சொன்னதில்லை. அந்தப் பேரைக் கெடுக்காதே அம்மா என்றுதான் கேட்டுக்கறேன்!” என்று சொல்லி விட்டுக் கறுப்பன் தன் தறியண்டை போய் உட்கார்ந்தான். 

அந்தப் பெண், அடுப்பண்டை உட்கார்ந்து அதைப் பற்ற வைக்கத் தொடங்கினாள். அவள் கறுப்பனின் ஒரே மகள். பெயர் பாக்கியம். பத்திரண்டு வயசு இருக்கும். அவள் பதினெட்டு வயசாக இருந்தபோது கறுப்பன் அவளை அவள் மாமனுக்குக் கட்டிக்கொடுத்தான். கல்யாணமான ஆறு மாசத்துக்கெல்லாம் அவள் புருஷன் காலராவில் இறந்தான். பாக்கியத்தைத் ‘துடைகாலி’ என்று சொல்லி மாமியார் வீட்டினர் பிறந்த வீட்டிற்கே விரட்டி விட்டனர். அப்புறம் அவள் தாயும் இறந்தாள். 

தகப்பனும் மகளும் சந்தோஷமாகவே காலம் தள்ளி வந்தனர். திடீரென்று அவர்கள் சந்தோஷத்தைக் கெடுக்க ஒன்று வந்து சேர்ந்தது. இது, பாக்கியம் அடுத்த கிராமத்திலிருந்த ஒருவனை ஆற்றங்கரையில் சந்தித்துப் பேசுவதும் சிரிப்பதுமாய் இருந்ததாய்க் கறுப்பன் காதில் விழுந்த வதந்திதான். கறுப்பன் இதையெல்லாம் முதலில் நம்பவில்லை. தன் மகள் கெட்ட வழிகளுக்குப் போகமாட்டாள் என்று அவன் திடமாக நம்பினான். இருந்தாலும் அடிக்கடி ஒவ்வொருவராக இதே புகாரை அவனிடம் சொன்ன போது அவன் நம்பிக்கை குறையத் தொடங்கியது. 

திடீரென்று அவன் நம்பிக்கையில் மண் விழுந்தது. ஒரு நாள் காலை, ஆற்றங்கரைக்குத் தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் கரையில் இரண்டு பானைகள் வைத்திருந்ததைக் கண்டார்கள். அவை கறுப்பன் மகள் பாக்கியம் வழக்கமாகக் கொண்டு வரும் பானைகள். 

பாக்கியத்தைக் காணவில்லை. ஆற்றிலே விழுந்திருப்பாளோ என்று தேடினார்கள். அகப்படவில்லை. அடுத்த கிராமத்து மருதமுத்துவுடன் எங்கோ போய் விட்டாள் என்று ஊரார் பேசிக்கொண்டதைக் கேட்டுக் கறுப்பன் மனம் உடைந்து போனான். 

பதினைந்து வருஷங்கள் சென்றன. 

இப்போது, கறுப்பன் வீட்டிலிருந்து அந்த ‘லொடக் லொடக்’ சத்தம் வருகிறதில்லை. கறுப்பன் இறந்து போய்விடவில்லை. உயிரோடுதான் இருந்தான். ஆனால் இப்போது அவன் நெசவு வேலை செய்வதில்லை. அவனுக்குக் கைநடுக்கம் எடுத்து விட்டது. கண் பார்வை மங்கிவிட்டது. அதுவும் அல்லாமல் அவன் இனி யாருக்காக உழைத்துப் பணம் சேர்க்க வேண்டும்? அவன் வயிற்றுச் சாப்பாட்டுக்கு அந்த ஊர் மிராசுதார் உதவி செய்து வந்தார். 

கறுப்பனும் இப்போது அதிகமாக மாறிவிட வில்லை. தலைமட்டும் மினு மினுவென்று வழுக்கையாய் விட்டது. முதுகு முன்னிலும் அதிகம் கூன் விழுந்திருந்தது. அவ்வளவுதான். 

ஒரு நாள் கறுப்பன், வீட்டில் உட்கார்ந்து பிய்ந்து போன தன் செருப்புக்கு ஆணி அடித்துக்கொண்டிருந்தான். அப்போது, “கொஞ்சம் சோறு போடு, தாத்தா” என்று ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் கறுப்பனைத் திடுக்கிடச் செய்தது. அவன் காதுகளுக்கு அதிகப் பழக்கமான குரலாய் இருந்தது அது. ஆனால், அந்தக் குரலை உடையவள் போய்ப் பதினைந்து வருஷம் ஆயிற்றே! 

“யார் அது?” என்றான் கறுப்பன். 

”கொஞ்சம் சோறு போடு, தாத்தா!” 

கறுப்பனை, ‘தாத்தா’ என்று யாரும் அதுவரை யில் கூப்பிட்டதில்லை. ‘நாம் என்ன அவ்வளவு கிழவனாகவா ஆய்விட்டோம்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே எழுந்து, கறுப்பன் வாசற்படி யருகில் வந்து அங்கு நின்றிருந்த பெண்ணைக் கூர்ந்து கவனித்தான். அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் எதிரில் நின்றிருந்தாளே, அவள் யார்? பாக்கியமா? 

அவள் பாக்கியம் அல்ல. ஆனால், இருபது வருஷங்களுக்கு முன்னால் கறுப்பன் அவளைப் பொன்னம்பலத்துக்குக் கல்யாணம் செய்து கொடுப்பதற்கு முன் பாக்கியம் எப்படி இருந்தாளோ அப்படியே இருந்தாள் இவள். வயசு பதினான்கு இருக்கும். கிழிசல் துணியைச் சுற்றிக்கொண்டு அரை நிர்வாணமாய் இருந்தாள். 

“நீ யார் ?” என்று கறுப்பன் மறுபடியும் கேட்டான். 

“பிச்சைக்காரி” என்றாள் அவள். 

“அது தெரியும். உன் ஊர் எது?” 

“தெரியாது.” 

“உன் அப்பன் பேர் என்ன?” 

“அப்பன் இல்லை.” 

“செத்துப் பூட்டானா?” 

கொஞ்ச நேரம் அவள் விழித்தாள். அப்புறம், “தெரியாது” என்றாள். 

“உன் அம்மா இல்லையா?” 

“செத்துப் பூட்டாள்.” 

“அவள் பேர் தெரியுமா?”

“பாக்கியம்.” 

கறுப்பனுக்கு மறுபடியும் தூக்கி வாரிப் போட்டது. “உன் பேர் என்ன?” என்றான். 

“லெச்சுமி” என்று பதில் சொன்னாள். கறுப்பன் கேட்டான்: “லெச்சுமி, இந்த ஐயம்பேட்டைக்கு நீ ஏன் வந்தாய்? கெட்ட ஊராச்சே இது. இது வரையில் எங்கே இருந்தாயோ அங்கேயே இருப்பது தானே?” – இப்படிக் கேட்டபோது அவன் குரல் நடுங்கிற்று. 

லக்ஷ்மி சிரித்தாள்; “எங்க அம்மா சாகிறபோது ‘நீ எங்கேயாவது போய்ப் பிழைச்சுக்கோ, ஆனா ஐயம்பேட்டைக்கு மட்டும் போகாதே’ என்று சொன்னாள். அப்படி இந்த ஐயம்பேட்டையிலே என்ன இருக்கு என்று பார்க்கத்தான் வந்தேன்” என்றாள். 

கறுப்பன் ஒரு பெருமூச்சு விட்டான். உள்ளே சென்று, கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த ஒரு மூட்டையை அவிழ்த்தான். அதில், பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் பாக்கியம் மறைந்து போன போது அவள் வைத்துவிட்டுப் போன பழம் புடைவை ஒன்று இருந்தது. அதைக் கொண்டுபோய் லக்ஷ்மியிடம் கொடுத்து, “சோறு இப்போ இல்லை; இதைக் கட்டிக்கோ” என்றான். 

லக்ஷ்மி புடைவையைப் பிரித்துப் பார்த்தாள். பூச்சி தின்று செல்லும் அரித்து அது சல்லடைக் கண்களாய் இருந்தது. துணி மக்கிப் போயிருந்ததால் ஒரு தரம் உதறினவுடனே துண்டு துண்டாய்ப் பறந்தது. 

“இதென்னத்துக்கு எனக்கு? நீயே வச்சுக்கோ” என்று சொல்லி அதை அங்கேயே போட்டுவிட்டு லக்ஷ்மி போய்விட்டாள். 

அன்று சாயங்காலம், ‘லொடக் லொடக்’ என்ற அந்தப் பழைய சத்தம் பல வருஷங்களுக்குப் பிறகு மறுபடியும் கறுப்பன் வீட்டிலிருந்து வருவதைக் கேட்டுத் தெருவோடு போனவர்கள் அதிசயித்தார்கள். 

“உள்ளே வா, உள்ளே வா” என்று கறுப்பன் தறியண்டை உட்கார்ந்தபடியே கூப்பிட்டான். லக்ஷ்மி குதித்துக்கொண்டே உள்ளே ஓடிவந்து நின்றாள். கறுப்பன் எழுந்திருந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டான். 

“இதோ பார், ஒரு புடைவை நெய்கிறேன். பாதி ஆகிவிட்டது. இன்னும் பத்து நாளில் முடிந்துவிடும்” என்று சொல்லிவிட்டு, “இது யாருக்குத் தெரியுமா?” என்று கேட்டான். 

லக்ஷ்மி, ஒன்றும் புரியாமல் தன் மலர்ந்த கண்களை விழித்துப் பார்த்தாள். 

“உனக்குத்தான் இது” என்றான் கறுப்பன். “பொய் சொல்லாதே, தாத்தா” என்றாள் லக்ஷ்மி. கறுப்பன் சிரித்தான்; “இன்னும் பத்து நாள் பொறுத்துக்கோ” என்று பத்து விரலையும் காட்டினான். 

ஆனால் அந்தப் பத்து நாட்களுக்குள் கறுப்பனுக்கு ஜுரம் வந்துவிட்டது. கணுவுக்குக் கணு வலி எடுத்து எழுந்திருக்க முடியாமல் படுத்து விட்டான். வயிற்றுக்குச் சரியான ஆகாரம் இல்லாத தனாலேயே உடம்புக்கு நோவு வந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை. 

சாயங்காலம் லக்ஷ்மி வந்தாள்; “தாத்தா, தாத்தா, புடைவை எப்படி இருக்குது?” என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தாள். கறுப்பன் கீழே படுத்துக் கிடந்ததைப் பார்த்துத் திகைத்து நின்றாள். 

“காச்சல் வந்துட்டுது” என்றான் கறுப்பன். ஒட்டிப் போயிருந்த அவன் வயிற்றைக் கவனித்தாள் லக்ஷ்மி. “சோறு இன்னிக்கி உனக்கு யார் போட்டது?” என்று கேட்டாள். 

“சோறுமில்லை, ஒண்ணுமில்லை” என்று கறுப்பன் முனகினான். 

“நான் போய் நாலு வீட்டில் கேட்டுக் கொஞ்சம் சோறு கொண்டுவருகிறேன்” என்று சொல்லிவிட்டு, லக்ஷ்மி தன் தகரக் குவளையைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். 

சிறிது நேரத்துக்குப் பிறகு, லக்ஷ்மி சந்தடி செய்யாமல் உள்ளே நுழைவதைக் கண்டு கறுப்பன் எழுந்து உட்கார்ந்தான். 

“இந்தா, உனக்குப் பால் வாங்கி வந்தேன்” என்று லக்ஷ்மி அவனிடம் குவளையை நீட்டினாள். கறுப்பன் ஆவலோடு அதை வாங்கிக் குடித்துவிட்டுத் திடீரென்று, ‘உன்னிடம் ஏது துட்டு?” என்றான். 

“இருந்தது” என்று சொல்லிவிட்டு லக்ஷ்மி வெளியே சென்றாள். 

அவள் போன சிறிது நேரத்துக்கெல்லாம், கறுப்பன் வீட்டு வாசலில் இரைச்சல் கேட்டது. “ஐயோ, நான் செய்தது தப்புத்தான். தெரியாமல் செஞ்சுட்டேன்” என்று யாரோ அழும் சத்தமும் கேட்டது. அது லக்ஷ்மியின் குரலாக இருக்கவே, கறுப்பன் கலவரமடைந்து, சுவரில் கையை ஊன்றிக் கொண்டே நடந்து வாயிற்படி யருகில் வந்து நின்றான். 

தெருவில் ஏழெட்டு ஸ்திரீ புருஷர்களுக்கு மத்தியில் லக்ஷ்மி அழுதுகொண்டு நின்றிருந்தாள். அவள் தலை மயிரைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தான் ஒருவன். 

“ஏ, என்ன அது?” என்று கறுப்பன் கேட்டான். 

“இந்தச் சிறுக்கி எங்க வீட்டு மாடத்திலிருந்து ஓரணாவைத் திருடி, ரங்கப்பிள்ளை வீட்டில் பால் வாங்கிக் குடிச்சாளாம்” என்றான் அவன். 

“போனாப் போவுது. சின்னப் பெண். விட்டு டப்பா” என்றான் கறுப்பன். அவன் நாக்குழறிற்று. 

லக்ஷ்மிக்குக் கன்னத்தில் நாலு அறை விழுந்தது, “இந்தக் கழுதைக்குப் பால் இல்லாமே அழறதா? பால்! ஓடு, கழுதை. இனி இந்த ஊர்ப் பக்கம் வந்தால் காலை முறித்துவிடுவோம்” என்று அவளை அடித்து விரட்டினார்கள். 

மறுநாள் காலையில் வீட்டு வாசலில் உட்கார்ந்து காலை இளம் வெயிலில் குளிர் காய்ந்துகொண்டிருந்தான் கறுப்பன். அப்போது அடுத்த வீட்டுப் பையன் கண்ணன், வேலைக்குப் போகப் புறப்பட்டவன், “உடம்பு எப்படி யிருக்குது?” என்று கறுப்பனைப் பார்த்துக் கேட்டான். 

“காச்சல் தேவலை” என்று பதில் சொன்னான். கண்ணன் சிறிது நேரம் யோசனை செய்து கொண்டு சும்மா நின்றிருந்தான். பிறகு, “அந்தப் பிச்சைக்காரி அன்று உனக்குக் கொடுத்த பாலில்தான் உன் உயிர் பிழைத்தது” என்றான். 

கறுப்பன் திடுக்கிட்டுக் கண்ணனை விழித்துப் பார்த்தான். 

“எனக்கு எல்லாம் தெரியும், தாத்தா. அப்புறம் அந்தப் பெண் உதைபட்டதைக்கூடப் பார்த்தேன். எனக்கு மனசு ரொம்பக் கஷ்டமாய்விட்டது. பாவம், அந்தப் பெண்ணைப் பார்த்தால் ஐயோ என்று இருக்கு” என்று சொல்லிவிட்டுக் கண்ணன் போய் விட்டான். 

அவன் உருவம் மறைகிற வரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுக் கறுப்பன் ஒரு பெருமூச்சு விட்டான். அந்த ஊரில் அவனுக்கு அதிகம் பிடித்திருந்தவர்களில் கண்ணன் ஒருவன். 

கறுப்பன் மனம் என்னவெல்லாமோ எண்ணியது. லக்ஷ்மியைத் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு வளர்த்துக் கண்ணனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால் என்ன? ஆனால், ஊரார் என்ன சொல்வார்கள். – இவ்வளவு நாள் நல்ல பெயர் எடுத்துவிட்டு- 

ஊரார் என்ன செய்வார்கள் என்பது உடனே அவனுக்குத் தெரிந்தது. கண்ணை மூடியவாறே கறுப்பன் யோசனை செய்துகொண்டு உட்கார்ந்திருந்த போது, “பெரியவரே!” என்று யாரோ கூப்பிடுவதைக் கேட்டுக் கண்ணைத் திறந்து பார்த்தான். அன்று லக்ஷ்மியை அடித்து விரட்டினவன் தன் எதிரில் நின்றிருந்ததைப் பார்த்து, “என்ன?” என்று சிறிது கோபத்துடனே கேட்டான். அந்த ஆளைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குச் சுமார் நாற்பது வயசிருக்கும். ஊருக்குப் புதிதாக வந்தவன் அவன். பதினெட்டு வயசுப் பெண் ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு அந்த ஐயம் பேட்டைக்குக் குடித்தனம் செய்ய வந்திருந்தான். இதனால் அவனிடம் கறுப்பனுக்கு ஏற்கனவே வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இப்போது அந்த வெறுப்பு அதிகமாய்விட்டது. 

“அந்தப் பிச்சைக்காரப் பெண் மறுபடியும் இந்தப் பக்கம் வந்தாளா?” என்று கேட்டான் அவன். “அப்புறம் அவளை நான் பார்க்கவில்லை” என்று கறுப்பன் பதில் அளித்தான். 

”வராதவரையில் பிழைத்தாள். மறுபடியும் அவளைப் பார்த்தேனானால் காலை முறித்துவிட மாட்டேனா? இந்த மருதமுத்துவின் வீட்டிலே வந்து திருடினாளே, என்ன நெஞ்சுத் தைரியம் அவளுக்கு!” என்று மீசையை முறுக்கிக்கொண்டு அந்த ஆள் போய்ச் சேர்ந்தான். 

கறுப்பனும் யோசனையுடன் எழுந்து வீட்டுக்குள் போய் உட்கார்ந்தான். ‘மருதமுத்து, மருதமுத்து!’ அந்தப் பெயர் அவன் ஏற்கனவே ஒரு தரம் கேட்டிருந்ததுதான். ஆனால் அதெல்லாம் பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் நடந்தவை. 

அமாவாசை இருட்டு. கறுத்த மேகங்கள் வானத்தில் ஒன்று சேர்ந்து குமுறிக்கொண்டிருந்தன. “தாத்தா! தாத்தா!” என்று ஒரு ரு மெல்லிய குரல் இருட்டிலிருந்து வந்ததைக் கேட்டுக் கறுப்பன் வெளியே வந்து, அங்கு நின்றிருந்த லக்ஷ்மியைக் கையைப் பிடித்து உள்ளே அழைத்துப் போனான். 

“நாலு நாளாய் உன்னைக் காணோமே, லக்ஷ்மி” என்றான். 

“எனக்கு இங்கே வரப் பயமாய் இருக்கிறது. இந்த ஊரிலே என்னைக் கொன்று போடுவார்களே, தாத்தா” என்றாள் லக்ஷ்மி. 

“ஆமாம், ஆமாம்; நீ இனிமேல் இங்கே வர வேண்டாம். அந்தப் பாவி உன் காலை முறித்து விடுவேன்னு சொன்னான்.” 

கறுப்பன் கையிலிருந்த லக்ஷ்மியின் கரம் நடுங்கியது. அவள் கண்களிலிருந்து பலபலவென்று நீர் சொரிந்ததை அந்தக் கும்மிருட்டில் கறுப்பன் பார்க்கவில்லை. அவள் கையை விட்டுவிட்டுத் தடவிக் கொண்டே சென்று தான் நெய்து வைத்திருந்த புடைவையை எடுத்து அவளிடம் கொடுத்தான். 

லக்ஷ்மி புடைவையை வாங்கி மோந்து பார்த்தாள். புதுத் துணிகளிலிருந்து வரும் வாசனை அடித்தது. சந்தோஷத்தோடு ஒரு பெருமூச்சு விட்டாள். 

“நாளை ராத்திரி இதைக் கட்டிண்டு வந்து உனக்குக் காட்டறேன்” என்றாள். 

கறுப்பன் இருட்டிலே தன் கையைப் பலமாக ஆட்டினான். 

“வேண்டாம், வேண்டாம். நீ இனிமேல் இங்கே வரவேண்டாம். உன்னைக் கொன்று போடுவார்கள். லக்ஷ்மி, போய்விடு. யாராவது உன்னைப் பார்த்துவிடுவார்கள்; ஓடிப்போய்விடு” என்றான். 

லக்ஷ்மி புடைவையை மார்போடு அணைத்துக் கொண்டு வெளியே ஓடி அந்தகாரத்தில் மறைந்தாள். கறுப்பன் படுத்துக் கொண்டான். ஒரு புது உணர்ச்சி அவன் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையில் பரவியது. அது சந்தோஷத்தால் ஏற்பட்டதா, துக்கத்தினால் ஏற்பட்டதா என்று சொல்ல முடியாது. 

அவன் படுத்த ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் ‘சோ’ என்று மழை பிடித்துக்கொண்டது. ஓடின லக்ஷ்மி, மழைக்குப் பயந்து கறுப்பன் குடிசைக்கு மறுபடியும் ஓடி வந்தாள். உடம்பிலிருந்து ஜலம் சொட்டச் சொட்ட, “தாத்தா, தாத்தா!” என்று கூப்பிட்டாள். பதிலில்லை; கீழே உட்கார்ந்து, படுத்துக் கொண்டிருந்த கறுப்பனை அசைத்தாள். அவன் உடல் விறைத்துக்கொண்டு ஜில்லென்று இருந்தது. லக்ஷ்மிக்குத் திகிலாய்விட்டது. புடைவையை அங்கேயே போட்டுவிட்டு, அந்தக் காற்றையும் மழையையும் பொருட்படுத்தாமல் விழுந்தடித்துக் கொண்டு வெளியே ஓடினாள். 

அதற்கப்புறம் ‘லக்ஷ்மி’யை அந்த ஊரில் ஒருவரும் பார்க்கவில்லை. மழை பெய்து, அரசலாற்றில் புது வெள்ளம் போகும்போது, தண்ணீர் மொள்ளப் போகும் பெண்கள், அங்கே நெடுங் தூரத்திலிருந்து யாரோ தீனமான குரலில், “தாத்தா, தாத்தா!” என்று கூப்பிடுவதுபோல் ஒலிப்பதைக் கேட்டு அதிசயித்தார்கள்.

– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

து.ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916-ல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய தலைமைக் கணக்கு அலுவலர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக பல காலம் இருந்தார். ராமமூர்த்தியின் 'கழைக்கூத்தன்' சிறுகதை 'சக்தி' இதழில் 1943-ல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். விகடனில் முத்திரைக்கதைகள் எழுதினார். 'கதம்பச்சரம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *