(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1
சந்திரசேகரன் சப்கலெக்டர் பதவியை ஏற்று ஒரு வாரங்கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே தினசரி வேலையின்மீது அவனுக்கு அலுப்புத் தோன்ற ஆரம்பித்தது.
அலுப்பு மேலிட்டு ஒரு நாள் பங்களாவில் சும்மா உட்கார்ந்திருந்தான். டலாயத் உடலை நெளித்தபடியே உள்ளே நுழைந்து ஒரு சிறு கடுதாசை நீட்டினான். அதை வாங்கி, “ஜோஸப் பால், ஹெட்மாஸ்டர், மிஷன்ஸ்கூல்” என்று தனக்குள்ளேயே படித்துவிட்டு உள்ளே அழைத்து வரச் சொல்லி டலாயத்துக்கு உத்தரவிட்டான்.
‘ஹெட்மாஸ்டர்’ உள்ளே நுழைந்தார். சப்கலெக்டரு டன் உடல்நலம், அகவிலை, வெயில் கடுமை முதலிய பல விஷயங்களைப்பற்றிச் சிறிதுநேரம் பேசிக்கொண் டிருந்து விட்டு, தாம் வந்த காரியத்தைத் தெரிவித்தார்: “ஒரு சிறிய வேண்டுகோள்; அடுத்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் பள்ளிக்கூடத்து வருஷாந்த விளையாட்டு விழா. அம்மா ளுக்குப் பள்ளிக்கூட மாணவர்கள் முன்னேற்றத்திலும் அவர்கள் விளையாட்டிலும் அதிக ஊக்கம் உண்டு என்று கேள்விப்பட்டேன். எங்கள் விழாவுக்குத் தலைமை வகித் துப் பரிசுகள் வழங்கவேண்டுமென்று அம்மாளைக் கேட்க வந்தேன்” என்றார்.
“மெத்த வந்தனம், ஒரு நொடியில் கேட்டுச் சொல்லுகிறேன்” என்று மாடிப்புறம் போனான் சந்திரசேகரன்.
உள்ளபடி. அவன் மாடி ஏறிப் போகவில்லை. நடுவழி யிலேயே திரும்பி, அபஜயமடைந்தவனைப்போல் முகத்தை வைத்துக்கொண்டு வந்தான்.
“தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் இருப் பதற்காக மன்னிப்புக் கோரச் சொன்னாள். உடல் நலமாக இல்லையாம்.”
“அப்படியா?” என்று ஹெட்மாஸ்டர் மீசையைத் திருகிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தார்.
“சரி! அப்போது நீங்கள் தான் தலைமை வகிக்க வேண்டும்” என்றார்.
தன் மனைவியைத் தலைமை வகிக்கச் சொன்னது சந்திர சேகரன் உள்ளத்தில் பல பழைய புண்களைக் கிளறி விட்டது. எப்படியேனும் ஹெட்மாஸ்டருடன் சந்திப்பு முடிந்தால் போதுமென்ற நிலைமையில் அவன் இருந்ததால் அடுத்தபடியாக அவனையே தலைமை வகிக்கும்படி கேட்ட தற்கு உடனே சம்மதி தந்துவிட்டான்.
என்றைக்கு அந்த விளையாட்டு விழாவுக்குத் தலைமை வகிப்பதாக ஒப்புக்கொண்டானோ அன்று முதல் இதர பள்ளிக்கூடங்களிலிருந்தும் பொதுஸ்தாபனங்களி லிருந்தும் அதைப்போன்ற வேண்டுகோள்கள் வந்தன. ஒவ்வோர் அழைப்புச் சம்பந்தமாகவும் தன் மனைவியைப் பற்றியவரையில் மறுக்கவேண்டிய கசப்பான பொறுப்பு அவனுக்கு ஏற்பட்டது.
இதன் பலனாக ஊருக்கு வந்த ஒருமாதத்துக்குள்ளா கவே ஊரார் வம்பு பேசத் தொடங்கினார்கள். சப்கலெக்டர் மனைவி அவலக்ஷணமா, அங்கஹீனமா? அசடா? கர்வம் பிடித்தவளா? ஒருவேளை மனைவியேயன்றிச் சேர்க்கையா என்று பலவாறு சந்தேகப்பட்டார்கள். சந்திர சேகானுடைய நுண்ணறிவுக்கு இவ்விஷயங்கள் தெரியாமல் இல்லை. தான் தலைமை வகிக்கும் ஒவ்வொரு கூட்டத்தி லும் தன் முதுகுப்புறத்தைச் சுட்டிச் சுட்டிக் காட்டிப் பிறர் பேசுவதுபோன்ற காட்சிகள் அவன் அகக்கண்ணில் தோன்றித் தன் மனைவியைப்பற்றிக் குசுகுசுவென்று பேசுவது கணீர் என்று தன் காதில் விழுவதுபோன்ற பிரமை உண்டாயிற்று.
சந்திரசேகரன் மனத்தில் ஓயாத அதிருப்தி. சப்கலெக்டராக இருந்தால் என்ன? ஓர் அற்ப விஷயத்தை மாற்ற முடியாத இயற்கையின் கோணலை – அறுபது நாழிகை யும் ஜனங்களிடமிருந்து மறைப்பதே முக்கிய வேலையாகி விட்டால் சுகம் என்பதை எப்படிக் காண முடியும்? வேம் பான பொய்வாழ்க்கை! இதைவிடக் குற்றவாளிகளுக்கு விதிக்கும் தனிச் சிறைத்தண்டனை கூட மேல்.
மாமனாராக வாய்த்தாரே ஒருவர் – எவ்வளவு குரூர ஸ்வபாவமுள்ளவர்! எவ்வளவு சமத்காரமாக தன்னை வலைபோட்டுப் பிடித்துவிட்டார்! ஆனால் அவர்மீது குற்றம் சாட்டுவது நியாயமா? பாங்கு முறிந்துபோய் அளவற்ற பணநஷ்டம் ஏற்பட்டதைப்பற்றி இந்தியாவி லிருந்து தன் தகப்பனார் இங்கிலாந்துக்கு எழுதியபோது ஐ. சி.எஸ். படிப்பை அத்துடன் விடாதது யார் குற்றம் ? ஐ. சி. எஸ். என்ற பட்டமும் வரப்போகும் பதவியும் அவன் ஆசையைத் தூண்டின. உணர்ச்சி மழுங்கிப் போய் விட்டது. பெண்ணின் குறைவு பெரிதாகப் படவில்லை. தகப்பனார் குறிப்பிட்டிருந்த பெண்ணை மணப்பதாக ஒப்புக்கொண்டான். கண்ணைத் திறந்துகொண்டு குளத்தில் இறங்கிய குற்றம் யாருடையது? முன்பணம் வாங்கிப் படித்துப் பரீக்ஷையில் தேறினபின் ஏற்பாட்டுப்படி மணம் செய்துகொண்டது தர்ம நியாயந்தானே?
இப்போதோ மாமனார் தம் கணக்கற்ற ஐவேஜியைக் காட்டி ஏமாற்றிவிட்டதுபோல் கருதினான். தன் பேராசை யைத் தவிர- தன் விதியைத் தவிர-மற்ற எல்லோரையும் நொந்துகொண் டிருந்தான். இவ்வளவு எண்ணங்களுக்கு இடையில் ஓயாத அதிருப்தி உண்டாவது வியப்பா?
இப்படியே நாட்கள் சென்றன. ஒரு நாள் ஓர் எண் ணம் தோன்றிற்று. அதுவரையில் ஏன் தோன்றவில்லை என்பதே ஆச்சரியமாக இருந்தது. ‘விழாக்களுக்குத் தலைமை வகிப்பதை நிறுத்திவிட்டால் ஒருவேளை வேதனை குறையாதா?’ என்று நினைத்தான். அது முதல் ஆபீஸ் வேலையைத் தவிர வேறு ஒன்றையும் சந்திரசேகரன் பார்ப்பதில்லை. பொதுஜனங்களிடையில் அதிகமாகக் கலப் பதில்லை. இருந்தாலும் தான் எதிர்பார்த்த அமைதி உள் ளத்தில் தோன்றவில்லை. தன் வேதனையின் வேர் பின்னும் ஆழமாக ஓடியிருப்பதை அவன் உணரவில்லை.
2
அவன் மனைவி லீலாவை உயர்ந்த பெண்மையின் அவதாரமென்றே கருதவேண்டும். ஜலத்துளி நீர்ப்பெருக்கில் கலந்திருத்தல்போல் தான் என்னும் தன்மை அற்றவள். அவளுடைய அமைதி ஆழ்ந்த குளத்தி டையது. தானாகக் கிளம்பிப் பிதுங்கி முன்னிற்கும் முந்திரிக்கொட்டை அல்ல. கணவனை நேருக்கு நேர் பார்ப் பது அருமை. ஏனென்றால், அப்படிப் பார்க்கும் வேளை யில், தன்னையும் அறியாமல், தன் கண்கள், கணவன் தன்னை நேசிக்கவில்லையே என்று குற்றம் சாட்டிவிடலா மல்லவா என்ற பயம்.
வீட்டுக் காரியங்களிலும் வெகு சமர்த்து. சப்கலெக் டர் மனைவியாக இருந்தும், தன் தகப்பனாரின் அளவற்ற ஐவேஜிக்கு ஒரே வார்சாக இருந்துங்கூட, சமையல் முதற் கொண்டு செய்யும்படி ஏற்பட்டுவிட்டதே என்று அவள் அலட்டிக்கொண்டதில்லை. உள்ளூறக்கூட நொந்துகொண்ட தில்லை. தன் மாமியார், மாமனார் இருவரும் காரியக்காரியை அமர்த்து என்று எவ்வளவோ வற்புறுத்தியுங்கூடக் கணவர் மறுத்துவிட்டதன் நுட்பமான காரணத்தை அவள் நன்றாக அறிந்திருந்தாள். அவ்வளவு பெரிய உத்தியோகஸ் தன் மனைவி ஊமையென்று விளம்பரம் ஆகாமல் இருப்ப தற்குக் காரியக்காரி இல்லாததும் ஒரு வழியல்லவா? வீட்டுக்காரியங்கள் இல்லாதபோது அவளை மாடியில் பார்க்கலாம். தனிமையும் மேகங்களும் நக்ஷத்திரங்களும் அமாவாசை இருளும் பௌர்ணமியின் கேடயமும் பரிதியின் தங்கமும் மரங்களின் ஒலியும் அவளுக்கு ஆத்ம நேசம் ஆயின.
மாதங்கள் சென்றன. கந்தர்வனைப் போன்ற வெகு அழகிய சந்திரசேகரன் சோர்வுற்றுச் சோபாவின்மீது கன்னத்தில் கைவைத்தவாறு உட்கார்ந்திருந்தான். வழக்கத்துக்கு விரோதமாக அன்று லீலா அவன் முன்பு தரையில் உட்கார்ந்திருந்தாள். ஏதோ அவள் உள்ளத்தில் தோன்றியது ; முகம் நிழலடைந்தது. திடீரென்று எழுந்திருந்தாள். நெருப்பின் நாக்குகள் நடனம் செய்வது போல் விரல்களால் ஜாடைசெய்தாள். ஜாடைகளைவிட அவளுடைய கண்களின் பேச்சு இன்னும் தெளிவாக இருந்தது.
அவள் சமிக்ஞைகளின் பொருளைச் சந்திரசேகரன் உணர்ந்தான். அதாவது அவன் உடம்பு தாள்போல வெளுத்துக் கிடக்கிறது என்பது தான். ஒருவேளை அவளு டைய கவலை பெண் சாகசத்தின் ஒரு பகுதியோ என்று கூடத் தோன்றிற்று. அடுத்த கணம் அவளுடைய திகிலடைந்த தோற்றம் தன் சந்தேகத்துக்கு ஆதாரமே இல்லை என்பதை விளக்கிக் காட்டிற்று. அதற்கு மாறாக அவளுடைய அன்பின் மிகையாகப்பட்டது.
3
ஒரு மாதம் ஆயிற்று, சந்திரசேகரனுடைய நோய் வெளிப்பட. வீட்டு மாடிப்படி ஏறும்போதும் ஆபீஸ் மாடிப்படி ஏறும்போதும் அவன் முழங்கால்கள் கெஞ்சின. அவனுடைய பசி மந்தமடைந்துவிட்டது. அத்துடன் தூக்கமும் குறைவுபட்டது. வாழ்வே பாரமாக ருசியற்றுப் போயிற்று. எனவே வைத்தியரைப் பார்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
சோகைநிபுணர் சந்திரசேகரனைப் பார்த்து, “என்ன சார்!” என்றார்.”ரத்தம் அதிக மோசமாயிருக்கிறதே. காரணம் ஏதேனும் சொல்லத் தெரியுமா?”
“ஒன்றும் தெரியவில்லையே!”
“நல்லது; நான் சொல்லி வருகிறேன், பிறகு சொல் லுங்கள். மனவேதனை. எதிர்பாராத சம்பவம் அல்லது-“
“அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று வெகு அவசரத் துடன் குறுக்கிட்டான் சந்திரசேகரன்.
“சரி போகட்டும். எது காரணமாக இருந்தாலும் ஒரு காரியம் சீக்கிரம் செய்யவேண்டியிருக்கிறது. அதாவது நல்ல ரத்தமாக உங்கள் உடலில் பாய்ச்சவேண்டியது முக்கியம். யார் பேர்வழி?”
சந்திரசேகரனுடைய முகம் வாடிற்று.
“ஆனால் அவ்வளவு மோசமாய்விட்டதா உடம்பு?”
“அப்படிச் சொல்வதற்கில்லை. இனி அதிகமாகத் தாமதிக்கக்கூடாது.
“ஆனால் சரி; நாளைக்கு இங்கே வந்தால் பாக்கியைப் பேசுவோம்” என்று சந்திரசேகரன் சொல்லவே நிபுணர் வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்.
அன்று மாலை தனியாக உட்கார்ந்திருந்த சந்திர சேகரன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். நிபுணர் குறிப் பிட்ட விஷயம் அவன் மனத்தில் கலவரத்தை உண்டாக்கி யது. யாரைப் போய் யாசகம் கேட்பது ரத்தத்துக்கு என்பது பெரிய பிரச்னையாகிவிட்டது.
அந்திப்பொழுது முற்றி நக்ஷத்திரங்களாக மலர்ந்துங் கூட அவன் அப்படியே உட்கார்ந்திருந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் காலடிச்சத்தம் கேட்டது. அவன் திரும்பினான். லீலா அதுவரையில் தன்னிடத்திலிருந்த படியே கணவனைக் கவனித்துவந்தாள். அவளால் அதற்கு மேல் உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து வந்து கணவ னுக்கெதிரில் மௌனமாகப் புத்த விக்கிரகம்போல் அசை வற்று உட்கார்ந்தாள்.
அவளுடைய மௌனம் அவனைக் குறைகூறிற்று. இன்பத்தில் இல்லாவிட்டாலும் துன்பத்திலேனும் மனைவி
மனைவிதானே! அவள் தூய உணர்ச்சி அப்போதே நோயைக் குறிப்பிடவில்லையா? டாக்டர் சொன்னை மறைப்பானேன் என்பதுபோலத் தோன்றிற்று.
சந்திரசேகரனின் உள்ளம் நெகிழ்ந்தது; கணவன் சொன்ன விவரத்தைக் கேட்ட லீலா தான் தயார் என்று சமிக்ஞை மூலமாகத் தெரிவித்தாள். தன்னையும் மீறிச் சந்திரசேகரனின் அன்புணர்ச்சி பொங்கி எழுந்தது. லாவை அணைத்துக்கொண்டான். “நீ கூடாது” என்றான்.
அவ்வார்த்தைகளைக் கேட்ட லீலா வருத்தமடைந் தாள். குளத்தில் கல்லெறிந்தால் தோன்றும் அலைகள் போல் அவள் கண்களில் துயர்மிகுந்தது.சந்திரசேகரனுக்கே ஏன் சொன்னோமென்று ஆகிவிட்டது. தான் அன்புடன் சொன்ன பேச்சு அவளுடைய ஸ்திரீ தர்மத்தை மறைமுக மாகத் தாக்கக்கூடும் என்ற எண்ணமே அவனுக்கு வரவில்லை. அவள் முகத்தோற்றம் அவன் எண்ணங்களைச் சிதற அடித்தன. அவளைச் சமாதானப்படுத்த முயன்ற தெல்லாம் பயனற்றுப் போகவே அவள் இஷ்டப்படி இணங்கச் சம்மதித்தான்.
மறுநாள் காலையில் நிபுணர் வந்தார்.
“என்ன ஏற்பாடு?”
பதில் சொல்லச் சந்திரசேகரனுக்கு இரண்டு நிமிஷம் பிடித்தது.
“நான் ஒருவரை அமர்த்தியிருக்கிறேன்.”
“நல்லது, அவரை நான் பார்க்க வேண்டுமே.”
சந்திரசேகரன் சற்றுத் தயங்கினான். பிறகு நிபுணர் காதில் பட்டதோ படவில்லையோ என்று சந்தேகிக்கக்கூடிய அவ்வளவு தாழ்ந்த குரலில், “அவர் அல்ல, அவள் ” என்று பதில் சொன்னான்.
“யாராயிருந்தாலும் பரிசோதித்துத்தான் ஆக வேண்டும்.”
நிபுணர் லீலாவைப் பரிசோதித்துவிட்டு, அவள் உடலிலிருந்து மூன்று நான்கு துளி ரத்தம் ஒரு கண்ணாடியில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். மூன்று நாட்கள் கழித்து ரத்தம் பாய்ச்சுவதென்று தீர்மானமாயிற்று.
4
குறிப்பிட்ட தினத்தில் வீலாவின் ரத்தத்தை எடுத்துச் சந்திரசேகரன் உடலில் டாக்டர் ஏற்றினார். சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. ஆனால் சந்திர சேகரன் குணமடையக் கொஞ்ச நாள் பிடித்தது. நோயாளி மாடியைவிட்டுக் கீழே இறங்கக்கூடாது; நடமாடக்கூடாது; அதிகமாகப் பேசக்கூடாது என் று நிபுணர் பல தடை உத்தரவுகள் பிறப்பித்திருந்தார். சந்திரசேகர னுக்கோ லீலாவோடு
லீலாவோடு பேச வேண்டுமென்ற பேரவா. அதில் வியப்பு என்னவென்றால் வீலா அவன் இருக்கும் இடத்துக்கே வராததுதான். அதற்குக் காரணம் லீலாவை யும் அமைதியாக இருக்கும்படி டாக்டர் தடை உத்தர விட்டிருப்பதாகத் தாயார் சொன்னாள்.
பத்துத் தினங்களுக்குப் பின் பேசும் சந்தர்ப்பம் வாய்த்தது. அன்று அஷ்டமிசந்திரனுடைய அழகு வானத்தில் தேங்கிக் கிடந்தது. சவுக்குத் தோப்பினூடே நல்ல பாம்புபோல் காற்று மூச்சுவிட்டுக்கொண் டிருந்தது. அண்டை வீடு ஒன்றிலிருந்து வந்த வீணையின் ஒலி துயரத்தைத் தழுவி மிதந்தது.
சந்திரசேகரன் மாடிப்படியில் யாரோ ஏறி வருவதைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி கொண்டான். அது ஏமாற்றமாக முடிந்தது. மேலே வந்த நிபுணர் லீலாவின் தேகஸ்திதி இரண்டு மூன்று நாட்களாக நன்றாயில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார்.
மறுகணம் சந்திரசேகரன் அங்கே தரிக்கவில்லை. கீழே போனான். காம்ரா உள்ளில் ஒரு கட்டிலின்மீது அவள் படுத்திருந்தாள். ஒரு விளக்கு, தாழ்ந்து எரிந்துகொண் டிருந்தது. தாயார் தரையில் உட்கார்ந்திருந்தாள்.
“இப்படி ஏமாற்றலாமா என்னை?” என்றான்.
தாயார் கண்ணீர் விட்டாள். “ஒன்றும் பிரமாதமில்லை என்று நினைத்தோம். டாக்டரும் உனக்கு அநாவசியமான அதிர்ச்சி உண்டாக்கக் கூடாது என்றிருந்தார். வேண்டு மென்று நான் செய்வேனா?” என்றாள்.
சந்திரசேகரனுக்குத் தாங்கவில்லை. தான் எதிர்பார்த்த சந்தர்ப்பத்தில் இவ்வளவு துன்பம் கலந்திருக்குமா என்று நினைக்க நினைக்க அவன் துயரம் கரைகடந்தோடியது. லீலா வின் முகத்தைப் பார்த்து அவன் கலக்கமடைந்தான்.
ஒரு வாரம் வரையில் அக்கரையில் ஒரு காலும் இக் கரையில் ஒரு காலுமாகத் தவித்தாள் லீலா. வாரக் கோடியில் ஏதேனும் நெருக்கடி ஏற்படுமோ என்று நிபுணர் பயந்தார். அப்போதெல்லாம் சந்திரசேகரனின் மனச் சாட்சி அவனை வருத்தியது. லீலாவை அலட்சியம் செய்த குற்றவாளி என்ற எண்ணம் அவனை ஒப்பற்ற தாதி ஆக்கிவிட்டது.
நிபுணர் பயந்த நெருக்கடி வேளை. அதிலும் இரவு. ஜன நடமாட்டமும் வண்டிகளின் ஓசையும் தேய்ந்து கொண்டிருந்தன. அறையில் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. சந்திரசேகரன் சந்தடி செய்யாமல் கட்டிலின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
சில நிமிஷங்கள் சென்றன. சென்ற ஒரு வாரமாக ஏற்பட்ட கவலையாலும், தூக்கமின்மையாலும் அவன் உடலில் அயர்வு நிறைந்திருந்தது. அவனை அறியாமலே கண்கள் மூடிப்போயின. பின்னும் கொஞ்ச நேரம் சென்றது. அவனை யாரோ திடீரென்று தீண்டினாற்போல் இருந்தது. காலனுடைய ஜில்லிட்ட கையோ என்று திகிலடைந்து லீலாவைப் பார்த்தான். அவள் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள் . முகத்தில் ஒரு கருணை ததும்பிற்று; “போதும்; இனி நீங்கள் தூங்கப் போகலாம். கவலைக்கு இடமில்லை” என்று சொல்லுவதுபோல் ஜாடை காட்டினாள். அது வரையில் லீலாவுக்கு அவன் இழைத்திருந்த தீங்கைப் பற்றி எண்ணி ஏங்கிய குற்றமுள்ள நெஞ்சம் அந்த நிமிஷத்தில் தெளிவடைந்தது. வீலாவை மார்புறத் தழுவினான்.
அடுத்த பதினைந்தாம் நாள் ஊரில் நடந்த தேக் கச் சேரிக்கு அதிசயமாக வந்த சந்திரசேகரனைப் பார்த்து ஜனங்கள் வியப்படைந்தனர். அதைவிட அவனுடன் வந்திருந்த அழகியைப் – ஊமையைப் – பார்த்துப் பிரமித்தனர்.
– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.