லாட்ஜுக்கு வர்றீயா லட்சுமி…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 3,275 
 
 

“ஏய் ! உனக்கு எவ்வளவு தெனாவட்டு இருந்தா எம் பொண்சாதியைப் பார்த்து லாட்ஜிக்கு வர்றியான்னே கூப்பிடுவே…?” கத்தினான் காத்தமுத்து.

பிளாட்பாரத்தில் அமர்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்த சிங்காரம்..

“ஏய் ! பேசுறதை மருவாதையாய் பேசு…” என்று எச்சரித்து பீடி புகையை தெனாவட்டாக விட்டான்.

“இன்னா.. உதார் காட்டுறீயா..? எம் பொண்சாதியைக் கூப்பிட்டதுமில்லாம என்கிட்டேயே வேலை காட்டுறீயா… ? மவனே மஞ்சா சோத்தை எடுத்துவேன்…” என்று காத்தமுத்து எகிற…

அவனுக்குப் பின்னல் கலவரமடைந்த முகத்துடன் இருந்த லட்சுமி அவனைப் பிடித்து இழுத்தாள்.

“சும்மா இருடி. இவன் வஸ்தாது வேலைய எங்கிட்ட காட்டினா….. இவனை சும்மா விடுறதாவது..? இவனாட்டம் என்னையும் மாமா வேலை பார்க்கிறவன்னு நினைச்சானா..? ” என்றவாறு மனைவியின் பிடியிலிருந்து உதறினான்.

“ஏ..! கயிதே…!கஸ்மாலம் ! என்னையும், எந்தொழிலையும் பத்தி தப்பா பேசினே… கொலை உயும் ..!” என்று உறுமினான் சிங்காரம்.

இப்படி உறுத்தலும் மிரட்டலுமாய்ப் பேசிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில் … திடீரென்று அசிங்கமாகப் பேசி…. சட்டென்று கை கலந்தார்கள்.

இவர்களுக்கு நடுவில் புகுந்து பிரித்த லட்சுமிக்கும் இடையில் அடி உதை விழுந்தது.

அப்போது….அங்கு ரிக்ஸா ஓட்டிவந்த குப்பன் இவர்கள் அடித்துக் கொள்வதை பார்த்துத் திடுக்கிட்டான்.

இடையில் புகுந்து அவர்களை பிரித்து விலக்கினான்.

“சும்மா இருங்கடா..!” என்று அதட்டி இருவரையும் ஆளுக்கொரு பக்கம் உட்காரவைத்தான்.

லட்சுமிக்கு உயிர் வந்தது.

“அண்ணே.. ! நல்ல வேலையா நீங்க தெய்வம் மாதிரி வந்தீங்க. இல்லேன்னா இதுங்க அடிச்சிக்கிறதுல எதுக்கு என்ன ஆகிருக்குமோ.??…..” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் லட்சுமி.

“இந்தாம்மே..! உன் புருசன்தான் பொண்டாட்டி வேலைவெட்டி செய்யக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிச்ச ஆளு. நீங்க கஷ்டப்படுறீங்களேன்னு இரக்கப்பட்டு சிங்காரம் அதுக்கு ஏற்பாடு பண்ணித் தந்தா…. நீ போயி உன் புருசன்கிட்ட சொல்லி வீணா சண்டைய உண்டு பண்ணிட்டீயே..? ” குப்பன் அவளைப் பார்த்து காய்ந்தான்.

“வேலைக்குப் போற விசயம் தெரியாமலாப் போகப் போகுதுன்னு இது காதுல போட்டு வச்சா… இது இப்படிக்கு குதிக்கும்ன்னு யாரு கண்டா..? நீயே சொல்லு..? லாட்ஜில கூட்டி பெருக்கி எடுக்கிற துப்புரவு வேலை கிடைச்சா இன்னும் வயிறாரக் காஞ்சி குடிக்கலாம்லே..? இன்னும் எனக்காக எத்தினி நாளைக்குத்தான் இது கஷ்டப்படப் போகுதோ..? ! நீயே அதுக்கிட்ட எடுத்துச் சொல்லுண்ணே…!”என்று லட்சுமி கெஞ்ச…

“இன்னா காத்தமுத்து ! இப்ப தெரியுதா என்னா வேலைன்னு…? இதுக்குப் போயி சிங்காரத்துக்கிட்டே சண்டை போட்டியே சரியா…?” கேட்க ..

அவன் தலை கவிழ்ந்தான்.

“சிங்காரத்தாண்ட மன்னிப்புக் கேளு..!” சொல்ல…

இவன் அவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான்.

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *