லதாவின் சிநேகிதி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 3,887 
 
 

அழகிய வீடு, வாசலில் பாஸ்கர் M.com என்று பலகையில் வீட்டில் இருப்பவரின் பெயரை தகவலாக தெரிவித்துக்கொண்டிருந்தது. வீட்டினுள்ளே அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், பெரிய வரவேற்பறையில் கச்சிதமாக குஷன் சோபா, இதில் அமர்ந்தபடி, தன் மனைவியை…

லதா…லதா…என சமையலறையிலிருந்தவளை அழைத்தார் பாஸ்கர்.

என்னங்க..?

எனக்கு பசிக்குது, ஏதாவது! டிபன் செய்யேன்.

டிபனா…? மாவு எதுவும் இல்லையே . ரவை தான் இருக்கு ., உப்புமா செய்யலாம்னா, உங்களுக்கு பிடிக்காது. என்ன செய்யுறது ? இருங்க… மதியம் வைத்த சாம்பார், ரசம், மீதியிருக்கு. வேஸ்டாக போகுது, நைட் சாப்பிட்டுக்கலாம்னு, குக்கரில் சாதம் வெச்சிருக்கேன். வெந்ததும் இன்னும் அரை மணி நேரத்தில் ரெடியாகிடும் சாப்பிடலாம் – என்றாள்

ஓ! நோ…சாப்பாடா ?, அதுவும் இந்நேரத்திலேயாவா ? வேண்டாம்… வேண்டாம், நாம வெளியே போயிட்டு, ஏதாவது லைட்டாக சாப்பிட்டு விட்டு, வரும் போது, அப்படியே மாடவீதியில் நாளைக்கு தேவையான காய்கறிகளை வாங்கிட்டு வந்திடலாம் கிளம்பு . – பாஸ்கர் சொல்ல.

மணி ஆறரை ஆகுது , எட்டு மணிக்கு நல்ல தொடர் டிவியில வரபோகுது. பார்க்காமல் எப்படி வருவது.? நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன். என்றவளிடம்.

ஏண்டி..! எனக்கு தனியாக போக தெரியாதா ? நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஹோட்டல் போய் சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு. நாடகம் ரொம்ப முக்கியமா? ச்சீ ! கிளம்பு… என செல்லமாக அதட்ட,

வேறு வழியில்லாமல்,

சரி…. கொஞ்சம் இருங்க ., குக்கரில் விசில் வந்ததும், இறக்கி வைத்து விட்டு வந்துவிடுவதாக சொல்லி, அதன்படியே கிளம்பினாள் லதா.

இருவரும் நடந்தே சென்றனர்.

ஹோட்டலில் டிபன் முடித்து விட்டு, மாடவீதியில் ஒவ்வொரு கடையாக நோட்டம் விட்டு, ஒரு கடையில் காய்கறிகளை வாங்கி, நடந்து வருகையில் , சற்று தொலைவில் எதிரே ஒரு பெண் வந்துக்கொண்டிருக்க, பாஸ்கருக்கு அந்த பெண்ணை எங்கோ பார்த்தது போல் ஞாபகம். ஆனால் சட்டென்று கண்டுபிடிக்க முடியாததால், தன் மனைவியை அழைத்து

லதா… எதிர்த்தாப்புல பாரேன். அந்த பெண்ணை எங்கேயோ பார்த்தது மாதிரி இல்ல. என்றதும். (அவளை கவனிக்காமலேயே)

இன்னும் நீங்க மாறவே இல்லையா? காலேஜ் பையன் னு நெனைப்பா? சொல்லிமுடிப்பதற்குள்.

அந்த பெண் இவர்களுக்கு முன்பாக மிக அருகில் வந்துவிட்டாள். நெருக்கமாக பார்த்ததும்.

லதா “ஏய் ஹேமா… வாட் எ சர்ப்ரைஸ், எப்படி டீ இருக்கே,? என அடையாளம் கண்டு விசாரிக்க.

பாஸ்கரும் – ஹேமா வா! எத்தனை வருஷம் ஆச்சு, உன்னை பார்த்து…” என்று தொடர,

நீங்கள் எப்படி இருக்கீங்க? பதிலுக்கு ஹேமாவும் விசாரிக்க.

நாங்க ரெண்டு பேரும் fine. ஆமா… என்ன நீ.? ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டே.

நானா… இல்லையே, அப்படியே தானே இருக்கேன். மழுப்பலாக ஹேமா பதில் தர.

இல்லவே இல்லை… அன்னிக்கு உன்னை பார்த்த மாதிரி இல்லை, fully changed என்ன லதா நான் சொல்றது கரெக்ட் தானே? – என கேட்க

ஆமா.. ஆமா.. என, ஏதோ வேண்டாவெறுப்பாக பதில் தந்தாள் லதா.

தொடர்ந்து பாஸ்கர் மட்டுமே ஹேமாவிடம் பேசிக்கொண்டிருந்தான்

என்ன இவ்வளவு தூரம்? எங்கே இருக்கே,?

நான் அடையாரில் தான் இருக்கேன். இன்னிக்கு பிரதோஷம் இல்லையா, அதான் கோயிலுக்கு வரலாம்னு வந்தேன்.

அடடா… நம்பவே முடியல, எப்படி இவ்வளவு பக்தி வந்தது உனக்கு ? ஆச்சரியமாக இருக்கே. – என கேட்டதும்

புன்முறுவலை மட்டும் பதிலாக தந்து உணர்த்த

லதா குறுக்கிட்டு,

ஏங்க.. டைம் ஆச்சு கிளம்பலாம். ஹேமா… வீட்ல நிறைய வேலை இருக்குப்பா இன்னொரு நாள் பார்ப்போம். நாங்கள் கிளம்புறோம். வாங்க போகலாம் என அவசரப்படுத்தினாள்.

பாஸ்கர், சரி… ஹேமா, நாங்க கிளம்புறோம், மணி எட்டாக போகுது., லதா வேற டிவியில தொடர் பார்த்திட்டிருக்காள். இன்னிக்கு பார்க்கலைன்னா, அவளுக்கு தூக்கமே வராது. என சொல்லிவிட்டு லதாவை பார்த்து சிரிக்க.

லதாவுக்கு எரிச்சலாய் இருந்தது.

சரி கிளம்பலாம் என நகர,

ஒரு நிமிஷம் ஹேமா… இந்தா எனது முகவரி,, எப்போதாவது நீ இங்கே வந்தால் அவசியம் எங்க வீட்டுக்கு வா. – என்று தனது விசிட்டிங் கார்டை நீட்டினான்.

மௌனித்தபடியே லதா வர, பாஸ்கர் ஏதோ பேச தொடங்க, காதில் வாங்காமல், வீடு வரை வந்து சேர்ந்ததும்,வீட்டினுள் கடிகாரத்தை பார்க்க மணி எட்டரை ஆகியிருந்தது. உடைகள் மாற்றி, சமையல் அறைக்குள் சென்று, உணவருந்த டைனிங் டேபிளில் பாத்திரங்களை வைத்து, கணவரை சாப்பிட அழைக்க, செவிபடாமல்,

ஹேமா பார்க்க வித்தியாசமாக தெரியுறா, அவள் பேச்சுலேயும், வித்தியாசம் தெரியுதுல்ல லதா? – என்பதற்கு பதில் தராமல், மௌனித்திருக்க

என்ன லதா…என்னாச்சு உனக்கு? நல்லா தானே இருந்தே! நல்லா தானே வந்தே, அதுக்குள்ள என்னாச்சு? . நான் கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ எதுவுமே பேசாம இப்படி அமைதியா இருக்கீயே.

அதான்…உங்கக்கிட்ட பேச, திரும்ப ஆள் கிடைச்சிடுச்சில்ல? அப்புறம் நான் எதுக்கு.?

ஒ…அது தான் விஷயமா? நான் கூட…நாம வருவதுக்குள்ள, டிவி யில நாடகம் முடிஞ்ச போச்சு அதனால தான் கோபமாக இருக்கியோன்னு நெனச்சேன். அப்ப சரி.

அவள் பேச, பேச, எப்படி சரின்னு பாதியில் வருவது? அவளை பார்த்து பல வருஷமாச்சு, அதுவும் இல்லாம, நானா… போய் முதல்ல, அவள் கிட்ட பேசினேன்.? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதுன்னு சொன்னதும், நீயே தான் முதல்ல போய் பேசினே.? – என்ற பாஸ்கரிடம்.

…ம்….எதிர்த்தாப்புல வருகிறாள், ஒருவேளை அவள் நம்மல பார்த்து முதல்ல அடையாளம் தெரிஞ்சுகிட்டு, பார்த்தும், நாம பார்க்காதது மாதிரி போனால்., பழசை மனசுல வச்சுக்கிட்டு போறாங்கன்னு, தப்பாக நினைக்க போகிறாள். ன்னு தான் முதல்ல போய் பேசினேன்.

காலம் கடந்தும் போச்சு, நமக்கும் வயசு ஏறிட்டே போகுது. இனிமேல் என்ன ஆகப்போகுதுங்கிறதனாலேயும் போய் இரண்டு வார்த்தை பேசிட்டு முடிச்சுக்கலாம்ன்னு நெனச்சு பேசினேன். அதே மாதிரி… இரண்டு வார்த்தையோட முடிச்சுக்கிட்டேன்

நீங்களும்… ஹலோ, சௌக்கியமான்னு மட்டும் கேட்டு கிளம்ப வேண்டியது தானே? – என்றாள்.

அதெப்படி லதா? (முடிப்பதற்குள்)

ஏன் பழசு எல்லாம் மறந்து போச்சா? அவள்கிட்ட அவமானப்பட்டதெல்லாம் போதாதா? இவள்…என் வகுப்பு தோழி, சிநேகிதி. இவள் கிட்ட எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. அதனால நான் பேசுறதுல எந்த வித பிரச்சனையும் இல்லை. ஆனால் உங்களுக்கு…?

எதுவும் நடக்காதது போலவும், அன்யோன்மா நீங்க இருந்த மாதிரியும், எல்லாத்தையும் மறந்திட்டு உங்களால அவக்கிட்ட எப்படி பேசமுடிஞ்சது? என்றதற்கு,

அதெல்லாம் சரி தான் லதா… எனக்கு கூட இப்போ அவள்கிட்ட பேசினதுல, பேசுறதுல எந்த வித பிரச்சனையும் இல்லை. ஏன்னா… அன்னிக்கு அவளுக்கு இருந்த சூழ்நிலையில அப்படின்னு நெனைக்கிறேன் .

அவளுக்கு விருப்பமில்லை, அதை புரிஞ்சுக்காம நான் அவளை தொந்திரவு செஞ்சேன். அதனால…அப்படி நடந்துக்கிட்டாள். அது அந்த சமயத்தில எனக்கும் கோபமும் தான் வந்தது. ஆனால்…. இப்போ அதை நெனச்சு பார்க்கும் போது,என் மேலே தான் தப்பு ன்னு நினைக்க தோணுது.வாழ்க்கைன்னா என்னான்னு புரிஞ்சுக்க முயாத, வாலிப வயசுல, செய்த தப்பு அது. வருஷம் பல ஒடிப்போச்சு, இன்னும் பழச மனசுல வச்சுக்கிட்டு, பகையை வளர்க்கிறது, முட்டாள்தனமான செயல்.

எந்த பகைமையையும், அன்பினால் வெல்வது புத்திசாலி தனம். இதுல தான் மனிதாபிமானமும் இருக்கு.,அன்பையும் வெல்வது அன்பு மட்டுமே. நான் மனுஷன் மனிதாபிமானமும் இருக்கு, படிச்சவன்கிறதனால எனக்கு மன்னிக்குற பக்குவமும் இருக்கு. நீயும் ! படிச்சவ தான் இதை புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன். – என்ற பாஸ்கரிடம்

என்னை சமாதானப்படுத்த என்ன வேணாலும், சொல்லுங்க, ஆனால் நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க,

என்ன கேள்வி…?

அவள் ஹேமா ன்னு தெரிஞ்சதும், பழைய காதலின்னு சபலம் வந்ததா இல்லையா? காதலை இப்போதாவது புதுப்பிக்கலாம்னு தோணுச்சு தானே? இப்போ தான் ஊர்ல கள்ள காதல்ங்கிற விஷயத்தை பேப்பர்ல படிக்கிறோமே. என அர்த்தமில்லாமல் லதா சொல்ல.

பாஸ்கர் கோபத்துடன்,

ஏய்…. உனக்கென்ன திடிரென பைத்தியமா பிடிச்சிருக்கு. என்னனெம்மோ பேசுற. எப்படி இந்த மாதிரி மட்டமான சிந்தனையெல்லாம் உனக்கு தோணுது. கல்யாணம் ஆனதிலிருந்து உன்னிடம் ஏதாவது மறைச்சிருக்கேனா? உன் கண் எதிரிலிருந்து பேசிட்டு இருந்ததற்கே இவ்வளவு சந்தேகமும், கேள்வியும் உனக்கு வருதே., நான் தனியாக அவளை எங்காவது பார்த்து பேசிட்டு வந்து உன்கிட்ட சொல்லியிருந்தேனா, இன்னும் என்னவெல்லாம் சொல்லுவே ?

நான் அவளை காதலிச்சது உண்மை தான். அவளை மறந்திட்டு, உன்னை கல்யாணம் பண்ணி சந்தோஷமாக குடும்பம் நடத்துறேன்ங்கிறதும் உண்மை தான். அவள் இல்லாது, உன்னோடு சேர்ந்திருக்கிற வாழ்க்கையே சிறப்பாக இருக்குன்னு நினைச்சிட்டிருக்கிறதை, உன் சந்தேகத்தினால அது பொய்யோன்னு எண்ண வைத்திடாதே.

சிநேகத்தும், காமத்துக்கும் முடிச்சு போடாதே,என்றார் பாஸ்கர்

அதுசரி… என்ன தான் மறந்து போயிருந்தாலும், கொஞ்சமாவது மனசுல இருந்திருக்கணும். அதை விடுத்து, நான் கிளம்பலாம் ன்னு சொல்லியும், இப்படி கொஞ்சி, கொஞ்சி பேசிக்கிட்டிருந்ததை என்னான்னு விவரிக்கிறதான்..?

கேட்டு எரிச்சலடைந்த பாஸ்கர்,

ச்சி… வாயை மூடு. உன் கிட்டமனுஷன் பேசுவானா? என்றபடி படுக்கையறைக் செல்ல

ஏன் கோபம் வராது…உண்மை என்னிக்குமே, சுடத்தானே செய்யும். சரி…சரி. கோபத்துல சாப்பிடாம இருக்க வேண்டாம். சாப்பிட்டு படுக்கலாம். என்றவளை சட்டை செய்யாது, தொடர்ந்து எதுவும் பேச விருப்பமில்லாமல், கட்டிலில் கண்விழித்தபடியே படுத்திருந்தார். பல முறை லதா கணவரை உணவருந்த அழைத்தும் வராததால். இவளும் உண்ணாமல், பாத்திரங்களை எடுத்து வைத்து விட்டு, பாஸ்கர் அருகில் வந்து படுத்தாள்.

மணி அப்போது பத்தரை ஆகிவிட்டது.

லதா தன் கணவரிடம்,

என்னங்க…

மௌனம் பதிலாக

என்னங்க…

மௌனம்.

என்ன கோபமா? நான் ஏதாவது தப்பாக பேசி இருந்தால், என்னை மன்னிச்சுடுங்க, ஒரு பொண்ணு, எதை வேண்டுமானாலும் பங்கு போட்டுக்கலாம். ஆனால் வாழ்க்கையை யாரும் பங்கு போட்டுக்க முடியாதுல்ல. அதனால்…. அந்த மாதிரியான சம்பவமெல்லாம் நடந்திடக்கூடாதேன்னு ஒரு பயம் தான்.

அவளை பார்த்ததும் உங்க மனசுல என்ன ரியாக்க்ஷன் ஏற்பட்டுச்சுன்னு தெரிஞ்சிக்க தான் அப்படி கேட்டேன். தயவு செய்து அதை தப்பாக எடுத்துக்காதீங்க. ப்ளீஸ். படிக்கும் போதே அவள் பிடிவாத குணம் எனக்கு நல்லா தெரியும். எது வேணும்னு நினைக்கிறாளோ, அதை அடைஞ்சே தீருவா. அந்த மாதிரி கேரக்டர் அவள்.

அவள் நிலைமை மோசமாக இருந்து, ஆதாயத்துக்காக, இப்போ உங்கள் மனசையும், மாத்திட போறாளேன்னு சின்ன பயம்.

ஆனால்… நீங்க ஸ்ட்ராங்கா இருக்கிற வரைக்கும், எந்த தவறும் நடக்காதுன்னு முழுசா இப்போ நம்புறேன். பழைய சம்பவத்தை மறந்ததை, மறந்ததாகவே இருக்கட்டும்.

தேங்க் யூ டார்லிங்… வெரி சாரி…. உங்க மனசை ரொம்ப புண்படுத்திட்டேன். என்னை மன்னிச்சுடுங்க என்றபடி பாஸ்கரின் கன்னத்தில் லதா முத்தமிட,

பாஸ்கர் எந்த வித உணர்ச்சியும் வெளிக்காட்டாமல், அமைதியாக, கண் அயர்கிறான், கணவரை அணைத்தபடி இவளும் கண் அயர்கிறாள்.

பெண்களும்,ஆண்களும் சேர்ந்து படிக்கும் ஒரு தன்னாட்சி கல்லூரி இங்கு மூன்றாம் ஆண்டு படிக்கும் பாஸ்கரும், இரண்டாம் ஆண்டு படிக்கும் ஹேமா, லதா மூவர்.

லதாவும், ஹேமாவும் ஒரே வகுப்பு தோழிகள். லதா பாஸ்கரை விரும்புகிறாள், ஹேமா வேறொரு கல்லூரி மாணவனை காதலிக்கிறாள். இது தெரியாமல் பாஸ்கர் தினம் ஹேமாவிடம் பேச முற்படுவதும், அவள் மறுப்பதும் வாடிக்கையாகிறது. லதாவும் மறைமுகமாக பாஸ்கரின் நண்பர்கள் மூலம் தூது அனுப்புகிறாள். செவிபடாமல் ஹேமா பகட்டின் மீது மோகம் கொண்டிருந்த பாஸ்கர்,

அந்த ஒரு நாள்,

லதா விடுப்பில் இருந்ததால் ஹேமா மட்டும் தனியாக நடக்க,

ஹேமா…ஹேமா…. என அழைத்து பின்னாடியே பாஸ்கர் செல்ல, (பாஸ்கரின் நண்பர்கள் இதை ஒரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்தனர்) .

ஹேமா…ப்ளீஸ் நில்லு, உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்.

என்ன பேசணும்..?

நான் அன்னிக்கு, உன் கிட்ட கேட்டதுக்கு பதிலே சொல்லலையே!

நான் என்ன சொல்லணும் னு எதிர்பார்க்குறே?

நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னேன், அதுக்கு நீ சம்மதம் சொல்லு.

அது முடியாது…

ஏன்..?

இதோ பாரு… உனக்கு எத்தனை தடவை சொல்றது, உன்னை எனக்கு பிடிக்கல, பிடிக்கல. சும்மா என்னை தொந்திரவு செய்தீன்னா, நான் வேறு விதத்தில் கவனிக்க வேண்டியதாக இருக்கும். மைண்ட் இட்.

அப்ப சரி.. உன்னிடம் இதை பத்தி எதுவும் இனிமேல் கேட்க போறதில்லை, ஆனால் என் சந்தேகத்தை மட்டும் தீர்த்திட்டு போ.

என்ன..?

என்னை பிடிக்காத காரணம் என்ன வேணாலும் இருக்கலாம். உன் பார்வைக்கு, என் கிட்டே இருக்குற குறையை மட்டும் சொல்லு.

நான் போடுற காஸ்ட்யூம்ஸ, மேக்கப் செட்டை கூட, வாங்கி கொடுக்குற தகுதியும், அந்தஸ்தும் உனக்கு இருக்கா? கல்யாணம் பண்ணிட்டு என்னை பைக்குலயாவது உட்கார வெச்சி, கூட்டிட்டு போக வண்டி வாங்க கூட வசதியாவது இருக்கா? – என்றவளிடம்.

ஓ…அப்ப, அழகை பார்த்து, படிப்பை பார்த்து, லவ் பண்ண மாட்டே, வெறும் வசதியும், அந்தஸ்தும், இருந்தால் மட்டும் போதும். அப்படி தானே?

அப்படியே தான்.

எனக்கு படிப்பு இருக்கு, அதனால எனக்கு நம்பிக்கையும் இருக்கு.,இந்த வருஷத்துல படிப்பும் முடிஞ்சிடும். கொஞ்சம் நாள்ல நல்ல உத்தியோகம் கிடைத்தால்., நல்லா சம்பாதித்து, நாளைக்கு வருங்காலத்தில் பெரியாளாகி காட்டுவேன். அதை நீயும் பார்க்க தான் போறே! – என்ற பாஸ்கரிடம்

இப்படி…எதிலேயும், நடைமுறையே இல்லாம, நாளைக்கு ன்னு சொல்ற உனக்கு., நடைமுறைக்கு இப்போ எந்த தகுதியும் இல்லை ஒத்துக்குற இல்ல, அதான். – என்ற ஹேமாவிடம்.

இப்போ… என் கிட்ட தன்மானம்னு ஒன்னு நிறைய இருக்கு . குட் பை- என்றான் பாஸ்கர் காட்டமாக.

அதற்குள்…. மோட்டார் சைக்கிளில் வேறொரு கல்லூரி மாணவன் ஒருவன் கல்லூரி வெளியே.. இவளுக்கு காத்திருந்து, வந்ததும் அழைத்து செல்கிறான். பாஸ்கர் தன் நண்பர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து நடந்த விஷயங்களை பரிமாறவும், அதில் ஒருவன்,

வெல் செட் மச்சி…. நீ! கரெக்டாக தான் சொல்லிட்டு வந்திருக்கே. இப்போ கூட பார்… எதோ பையன் ஒருத்தன்., பைக்குல பிக்கப் பண்ணிட்டு போறான். இவளை… எவ்வளவு நாள் வச்சுக்கிட்டு கழட்டி விடபோறானோ தெரியல.!

மற்றொருவன்,

அவள் கெடக்குறா, விடு மச்சி…ஒரு விஷயம் தெரிஞ்சுக்க, என்னிக்குமே… நாம தேடி போறதைவிட, நம்மள தேடி வருவதை அடைவது தான் அதிர்ஷ்டத்தோட, புத்திசாலிதனமும் இருக்கு.

போய்… உன்னை சுத்தி, சுத்தி லவ் பண்ணும் அவள் சிநேகிதி லதாவுக்கு சம்மதம் சொல்லுடா. என்கிறான்.

லதாவிடம் சம்மதம் தெரிவித்து, இவளுக்கு நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது என்பதாக நினைத்து, எல்லா விஷயங்களையும் பாஸ்கர் சொல்லி மன்னிப்பு கேட்க, எல்லாமே தனக்கு தெரியும். இருந்தாலும்…எனக்கு உங்களை பிடிச்சிருந்தது, எப்படி நீங்க எனக்கு கிடைப்பீங்க ஒரு நம்பிக்கை இருந்தது. தேங்க்ஸ் காட். எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்கிறார்கள். நான் வீட்டுக்கு ஒரே பெண். என்னோட முடிவை அம்மாவும், அப்பாவும், கேட்பாங்க. அதனால, உங்கள் வீட்ல சொல்லி முறைப்படி பெண் கேட்டு வாங்க என்றாள்.

இருவர் வீட்டின் சம்மதத்தோடு, பாஸ்கர், லதா திருமணம் நடந்தேறியது.

காலை,

பாஸ்கர் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்பாகவே லதா எழுந்திருந்து, குளித்து விட்டு, வந்ததும் கணவரை எழுப்புகிறாள்.

என்னங்க, எழுந்திடுங்க, மணி ஏழரை ஆகப்போகுது, ஆபிஸ் கிளம்ப வேண்டாமா? என தொடர் முழக்கத்தால்

…ம்…ம்…என்றபடியே எழுந்து, அமர்ந்து சோம்பல் முறிக்க

என்ன அவ்வளவு தூக்கம்? – இவ்வளவு லேட்டாக எழுந்துக்கிறீங்க !

நல்ல கனவு வந்தது, எழுந்திருக்க மனசே வரலை

அப்படி என்ன கனவு..?

வேண்டாமா…நான் ஏதாவது சொல்ல போக, நீ! தேவையில்லாத அர்த்தமெல்லாம் பண்ணிட்டு…சண்டை போடுவதற்கா?

நான் எதுக்குங்க சண்டை போட போறேன்.!

தேவையே இல்லாமல், சம்மந்தமும் இல்லாமல், நேத்து நைட் சண்டை வந்ததே.

அதான் சாரி சொல்லிட்டேன் இல்ல.. அப்புறம் என்னவாம்.

இட்ஸ் ஓகே…ஒகே. காலையில் வேலையை பார்ப்போம்.

ஆமா…என்ன டிபன் பண்ண போறே?

நீங்க சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க, தட்டில் வைக்கும் போது நீங்களே தெரிஞ்சுப்பீங்க,

சிரிப்புடன் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள். பாஸ்கரும் குளித்து முடித்து, வேலைக்கு கிளம்ப உடை மாற்றி வந்து சாப்பிட உட்கார்ந்தான். லதா சொன்னது போல் தட்டில் வைத்ததும். தெரிந்து கொண்டான். நேற்று இரவு சாப்பிடாததால், சாப்பாடு உப்புமா ஆன கதை. வேறு வழியில்லாமல், சாப்பிட்டு கிளம்பினான்.

சில மாதங்களுக்கு பிறகு,

ஒரு மாலை வேளையில், பணியிலிருந்து வந்த பாஸ்கரும், மனைவி லதாவும், சேர்ந்து சோபாவில் அமர்ந்து டிவியை பார்த்துக்கொண்டிருந்தபோது, காலிங் பெல் சத்தம் கேட்க, லதா எழுந்து கதவைத் திறக்க. ஹேமா வந்திருந்தாள்.

ஹலோ ஹேமா…வா, வா. என்னங்க… ஹேமா வந்திருக்காள். என்றதும். பாஸ்கருக்கு எப்படி ரியாக்ட் கொடுக்க வேண்டும் என்று புரியாமல், பேந்த, பேந்த முழிக்க.

லதா தன் கணவரை பார்த்து,

ஏங்க உங்க கிட்ட தான் சொன்னேன் ஹேமா வந்திருக்கான்னு

ஆ.. ங்….. ஹேமா வா…என தயங்கி குழைய.

உள்ளே நுழைந்த ஹேமா,

டிவியில்…இண்டரெஸ்டிங்கா மூழ்கிட்டார் போல, என கிண்டலடித்தவளை,

அதெல்லாம் ஒன்னுமில்லை, உட்கார் – என எதிர்புறமிருந்த ஒற்றை குஷன் சோபாவை காட்டி, பணித்து தொடர்ந்தார்.

பரவாயில்லை ஆச்சர்யமாக இருக்கு, நீ ! இங்கே வந்திருக்கிறது. நாங்கள் இன்னிக்கு உன்னை எதிர்ப்பார்க்கவேயில்லை.

எனக்கும்…திடீர்னு தான் தோணுச்சு…கோயிலுக்கு வந்தேன். நீங்க.. அன்னிக்கு அட்ரஸ் கொடுத்ததால, சரி எட்டு பார்த்திட்டு போயிடலாமேன்னு வந்திட்டேன். உங்களுக்கு ஒன்னு இடைஞ்சல் எதுவும் இல்லையே.? – என்றவளிடம்,

பாஸ்கரும், லதாவும் சேர்ந்தே.

ச்சே…. ச்சே… என்ன இடைஞ்சல் ? அதெல்லாம் ஒன்னுமில்லை என்றனர்

சௌக்கியமா இருக்கியா – லதா விசாரித்தாள்.

ஹும்…என ஒற்றை அழுத்தத்தில் பதிலளித்தாள்.

சரி…நீங்க பேசிட்டு இருங்க, நான் காபி போட்டு கொண்டு வரேன்.

வேண்டாம் லதா.. இப்போ தான் வீட்ல சாப்பிட்டு வந்தேன் என மறுக்க.

இல்லை… இல்லை…முதல் முறையாக வீட்டிற்கு வந்திருக்கே, எதுவும் சாப்பிடலைன்னா எப்படி? நீ! போய் கொண்டு வா என மனைவியிடம் கட்டளையிட்டார் பாஸ்கர்.

சொல்லு. ஹேமா…தனியாகவே எல்லா இடத்துக்கும் போயிட்டு வந்திடுவீயா? ஏன்னா…அன்னிக்கும் உன்னை தனியாக தான் பார்த்தேன். இன்னிக்கும் தனியாக தான் வந்திருக்கே!

ஆமா….?

ஏன் உன் கணவர் கூட பைக்கிலேயோ, காரிலேயோ? போக, வர மாட்டியா? – என்றதும். ஹேமாவுக்கு மனதளவில் எதுவோ உறுத்தியது. நிலைகுலைந்து. ஈரம் வழிந்த கண்ணீரை புடவையில் ஒத்தி.

இல்லே… பாஸ்கர், வாழ்க்கையில் பெரும் பகுதி தனியாகவே இருக்க பழக்கிக்கிட்டேன். ஆனால்.. அப்போ இருந்த அதே அந்த தைரியம் தான் இன்னமும் என்னை வாழ வைக்குதுன்னு நெனச்சுக்கோயேன்.

நீ! அன்னிக்கு பார்த்த ஹேமா வேற, இப்போ பாக்குற ஹேமா வேற.

ஏன் அப்படி சொல்றே?

எல்லாம் பட்டதுக்கப்புறமா தான், தெரியும்னு சொல்லுவாங்க, நான் பட்டுட்டேன், தெரிஞ்சுகிட்டேன்.

லதா காபியை எடுத்து வந்து கொடுக்க, வாங்கியவள்,

இது வாடகை வீடா? இல்லை சொந்தமா? கேள்வி எழுப்ப,

சொந்த வீடு தான். வா… சுத்தி பார்க்கலாம். என்றவாறு அழைத்து ஒவ்வொரு அறையாக காண்பிக்கிறாள் லதா. வீட்டினுள்ளே ஷோ-கேஸில் வித வித அழகான கலை பொருட்கள், மற்றும் அலங்கார, ஆடம்பர பொருட்களை கண்டதும், தான் இந்த மாதிரி வீட்டினுள் நிற்பதற்கு கூட தகுதி இல்லாதவள் போல் உணர்ந்து கூனி குறுகியே, ரசித்து வர,

லதா வீட்டினுள்ளே இருக்கும் மாடிக்கு அழைத்து சென்று, வைத்திருக்கும் பூச்செடிகளையும் காண்பிக்கிறாள்.

ஹேமா லதாவிடம்,

வீட்டை எவ்வளவு அழகாக வெச்சிருக்கே! பார்க்க அவ்வளவு அழகாக இருக்கு. ஆமா…நீ! ரொம்ப lazy யா இருப்பியே, எப்படி…? இப்படியெல்லாம் அலங்காரம் செய்ய முடிஞ்சது? வீட்டையும்.. சுத்தமாக வெச்சிருக்க முடியுது.

அதை…நானும், எங்க வீட்டுக்காரரும், சேர்ந்து ஐடியா பண்ணி செய்தது. வீடு சுத்தமாக இருந்தால் தான் அவருக்கு பிடிக்கும். சுத்தமாக இருக்கிறதுல அவருக்கும் பங்கு இருக்கு. – என்றாள்

பதிலுக்கு ஹேமா,

லதா… நான் சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காத, நீ! பாஸ்கரை கல்யாணம் பண்ணியதுக்கு ரொம்ப கொடுத்து வெச்சிருக்கே. உனக்கும் விஷயமெல்லாம் தெரியும். என் திமிர், ஆணவத்துனாலேயும், கொடுத்து வைக்கல, எல்லாம் என் விதி. என்னை நானே பாழாக்கிக்கிட்டேன். வாழ்க்கையில பாஸ்கர் சொன்னது மாதிரி ஜெயிச்சிட்டார். நான் தோத்திட்டேன். என்று கண்ணீர் சிந்தியவளிடம்.

லதா,

சரி…விடு. நடந்தது, நடந்து போச்சு. இனி பேசி என்ன ஆக போகுது. வருஷமும் ஒடிப்போச்சு. ஆமா…நீயும் நல்ல தானே இருக்கே? வீட்டுக்காரர் உன்னை நல்லா தானே பார்த்துக்குறார்? – என்றவளிடம்

உன்கிட்ட சொல்றதுக்கு என்ன லதா.படிக்கும் போது…அவன் பந்தாவாக இருந்ததை பார்த்து, பெரிய இடத்து பையன்னு நெனச்சு ஏமாந்திட்டேன். நான் கல்யாணம் ஆறதுக்கு முன்னாடியே தப்பு செய்திட்டேன். எஸ்…குழந்தை உண்டாகி போச்சு. இதை சொன்னதும், என்னையே தவிர்க்க பார்த்தான்.

வீட்ல தெரிஞ்சதும், என்னை அடிச்சு துவைச்சிட்டாங்க, போலீஸ் மூலமாக அவன்கிட்ட பேசி, சம்மதிக்க வெச்சு, கல்யாணம் பண்ணி வெச்சதும், என்னை தலை முழ்கிட்டாங்க, அம்மா வீட்லேயிருந்தும், எந்த போக்குவரத்தும் இல்லை.

இவனுக்கும் சரியான வேலையில்லை, வாரத்துல மூணு நாளு வேலைக்கு போறதே பெருசு. வந்த வருமானமும், அவனுக்கு குடிப்பதற்கே சரியா போகும். அவன் சுகத்துக்காக கட்டாயப்படுத்தி, எப்படியோ…இன்னொரு குழந்தையும் பிறந்திடுச்சு. குழந்தைகளை காப்பாத்தனுமே.. என்ன செய்ய? வேறு வழியில்லாமல் இங்கே இருக்கிற அந்த பெரிய ஜவுளி கடையில தான் வேலைக்கு போயிட்டு சம்பாதிக்கிறேன்.

நான் கோயிலுக்கு போயிட்டு வரேன்னு, உங்கள் கிட்ட சொன்னது எல்லாம் பொய் தான். எங்கே! என்னை… கேவலமாக நினைச்சிட போறீங்களேன்னு, அப்படி சொன்னேன். அதுவுமில்லாமல் எப்பவாவது உங்கள் இரண்டு பேரையும் வழியில பார்ப்பேன். பார்த்திருக்கேன். ஆனால் கூச்சப்பட்டு, ஒதுங்கி போயிடுவேன். நான் கவனிக்காத ஒருநாள்., நீங்களே! என்னை அடையாளம் கண்டு பேசுனீங்க. கூப்பிட்டீங்க, அதானால தான் இன்னிக்கு நான் வந்ததும். சரி லதா நான் கிளம்பறேன் ரொம்ப நேரமாச்சு. குழந்தைங்க தேடுவாங்க. ஆமா….. உன் குழந்தைகளை பத்தி நான் எதுவுமே கேட்கலையே, எத்தனை பசங்க, எங்கே அவங்க.?

ஹேமா…கடவுள் யார், யாருக்கு, என்னன்னு… நாம பிறக்கும்போதே எழுதி வெச்சுட்டான். ஒரு பிளஸ் இருந்தால், மைனசும்., ஒரு மைனஸ் இருந்தால், கண்டிப்பாக ப்ளஸ் இருந்தே தீரணும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்., இது தான் வாழ்க்கை. எங்களுக்கு…குழந்தை இல்லைங்கிறதை விட, நாங்க ஒருத்தொருக்கொருத்தர் புரிஞ்சுகிட்டு, அன்பாக, உண்மையாக, நிறைவாக இருக்கிறோம்ங்கிறதே பெரிய சந்தோஷம்.

ஏன்…டாக்டரை யாரையாவது பார்க்க வேண்டியது தானே?

…ம்… அதுவும் பார்த்தாச்சு, எங்கள் இரண்டு பேர்க்கிட்டேயும் எந்த குறைபாடுகளும் இல்லை. கடவுள் கொடுக்கும் போது பார்த்துக்கலாம் னு விட்டுட்டோம். சொல்லி முடிக்க.

சரி வரேன் லதா…. “ஹா.. ங்”….நான் அப்போ ! பாஸ்கரை, தப்பா பேசியிருந்தும், மறந்திட்டு, மதிச்சு நீங்க என்னை கூப்பிட்டீங்க, நானும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் உடனே வந்திட்டேன். காரணம்… மன்னிப்பு கேட்க. ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க. அப்புறம் இன்னொரு விஷயம், உங்கள என் வீட்டுக்கு கூப்பிடமாட்டேன். அதுக்கு காரணம் தெரிஞ்சிருக்கும். – என்றவளிடம்.

ஏய்… அதெல்லாம் ஒன்னுமில்லை… அடுத்த முறை வரும் போது குழந்தைகளையும், அழைச்சிட்டு வா – என்றாள் லதா.

ஆகட்டும் பார்க்கலாமென ஹேமா கிளம்பினாள். வழி அனுப்பி வந்த மனைவி லதாவிடம் பாஸ்கர்,

லதா…டிவி யில சிங்கிள் எபிஸோட் கதை அருமையாக இருந்தது. க்ளைமாக்ஸ் கொஞ்சம் செண்டிமெண்ட் டச் இருந்தது. சூப்பர் நாடகம். நீ மிஸ் பண்ணிட்டே.

ஆமா…ஏன் அவ்வளவு நேரம், அவக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தே? இரண்டு பேரும் அப்படி என்ன பேசினீங்க?

நாடகம் இன்னிக்கு இல்லைன்னா, இன்னொரு நாள் பார்த்துக்கலாம். பாவம்…ஹேமாவோட வாழ்க்கையையே ஒரு கதையாக எழுதலாம் போலிருக்கு. எப்படி இருந்தவள். இப்போ நேருக்கு மாறாக மாறிட்டாள். அன்னிக்கு, அவளை பார்த்து பொறாமைப்பட்ட நான் இன்னிக்கு…வருத்தப்படுறேன்.

என ஹேமா விவரித்த அவளோட வாழ்க்கையை, கணவரிடம் சொல்லி, ஹேமாவுக்கு உதவும் வகையில் அவள் குழந்தைகளை நாம படிக்க வைக்கலாமா என கோரிக்கை வைக்கிறாள் – இதை கேட்ட பாஸ்கர்.

என்ன லதா இது? நீயா! ஆச்சர்யமாக இருக்கே. குட் (Good) இது தான் மனிதாபிமானம், நல்ல நட்புக்கும், அடையாளம். அன்பை வெல்வது அன்பு மட்டும் தான் – என அவளின் முதுகை தட்டிக்கொடுத்து, நகர்கிறார்.

கணவரிடம் யாரை பற்றி கனவில் கூட நினைக்கூடாது என்றாளோ! அவளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *