லட்சும்ணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 4,211 
 
 

பேப்பர் பொறுக்கிய பணத்தைப் பத்திரமாகக் கொண்டுவந்து செல்வியிடம் நீட்டினான் லட்சுமணன். நீட்டிய காசைவாங்கிய அந்தக் கணத்தில் செல்வியின் கண்களில் ஒரு கலக்கம் நிழலாடியது. கண்ணீரா கர்வ்மா இன்னதென விளங்காமல் லட்சுமணனின் கழுத்தில் கிடந்த துண்டைப் பிடித்து வேகமாய்த் தன் பக்கமாய் இழுத்தாள் சித்தாள் வேலைவிட்டுவந்து தலையைக்கூட தூசு தட்டாமல் இருந்த செல்வியின் உடலெங்கும் ஒட்டியிருந்த சிமெண்ட் தூசி லட்சுமணனுக்கும் படர்ந்தது. முன்னெல்லாம் இந்த மூர்க்கம் அவனுக்கு மட்டுமே சொந்தமாயிருந்தது.

’ச்சீய்.. மனுசந்தானா..நிய்யி..!” – நாணிக்கொண்டு மூச்சு வாங்குவாள் செல்வி. ரெண்டு பேரும் போஸ்கங்காணியிடம்தான் வேலைக்குப்போகிறார்கள் வீட்டுக்கு வந்ததும் கைகால்கூட கழுவவிடமாட்டான். விளக்குப் பொருத்தவிட மாட்டான்.’ ஒடம்பெல்லாம் சிமிண்டுப்பாலும் ஆத்துமணலுமா நாறுது..’ என்பாள். ‘யாருக்குக் கிடைக்கும்..’ என அவள்து வாயடைப்பான். தாலிகட்டிய மூணு வருசத்தில் வரிசையாய் மூணும் பிற்ந்தன. மூணாவதுக்கு பெரியகுளம் மிசின் ஆஸ்பத்திரியில் போய் ஆப்ப்ரேசன் செய்து கொண்டாள். அதுகூட லட்சுமணனுக்குப் பிடிக்கவில்லை. ஒடம்ப வருத்திப் பொழப்பு நடத்துற நமலுக்கு ஒடம்புல ஒச்சம் இருக்கக்கூடாது.. வேணும்ன நாம் கொஞ்சம் கட்டுப்பாடா இருந்துக்க வேண்டியத்துதான். என்றான்.

உண்மையில் எப்பவும் கட்டுப்பாடும் ஒழுங்கும் அவனுக்கு சின்னவயசில் இருந்தே ஆகியிருந்தது. கல்யாணத்துக்கு முன்பு மலையேறி யாகத் திரிந்தான். ஆரஞ்சுக்கூடை சுமக்கவும், வேலம்பட்டை உரித்துஊறலுக்கு கொடுக்கவுமாய் மலைக்கும் தரைக்குமாய் தாவித்தாவி வேலைபார்த்தான். ஊருக்குள் நின்றமாதிரிதான் இருக்கும். திடீரென வாடகைச் சைக்கிளை எடுப்பான். அடிவாரம் நோக்கிப் பறப்பான். அடிவாரத்தில் சைக்கிளை நிறுத்துவதுதான் தெரியும். எத்தனை வேகமாய் மலையேறுவானோ குறிவைத்ததுபோல விறகோ பட்டையோ முறித்து மலைமேலிருந்து உருட்டி எடுத்துக்கொண்டு நொடிப் பொழுதுல் இறங்கி வந்து விடுவான். ”ங்கோத்தா உன்னிய ந்ஞ்ங்கொப்பனுக்குப் பெத்தாளா..? இல்ல வாயுபகவான் மகனுக்கு கருத்தரிச்சாளா..?‘ ஊரார் கேலி பேசப்பேச இன்னமும் வேகமாயேறுவதும் இறங்குவதுமாய் சாக்சங்கள் புரிவான். மலையில் குடியிருக்கும் அத்தனை ரகசியங்களும், சகல ஜீவராசிகளும், தாவரவகைகளும் லட்சுமணனுக்கு அத்துப்படி. அவன் போக்குக்கு விட்டிருந்தால் மலைமேயே குடும்பம் கட்டி இருப்பான். மலைக்குற்வர்களோடு சேர்ந்து காணி சேர்த்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டதும் அவனது வீட்டில் பதறிப்போனார்கள். ‘பெய ஆதிவாசியா ஆகி அங்கேயெ செட்டில் ஆயிப்போயிருவான் போல என்று லட்ச்மணனை வல்லடியாய்ப் பிடித்து இழுத்துவந்து செல்வியைக் கல்யாணம் கட்டிவைத்தனர் முயல்குட்டிபோல அவளும் துருதுருவென ஓடியாடி அழகாய் இருந்தாள். செல்வியின் வேகமும் பாய்ச்சல் மிக்க செயல்பாடும் கொஞ்சலான பேச்சும் அவனை வீட்டோடு கட்டிப் போட்டன. ஆனாலும் தினவெடுத்த கால்சதைகள் அவ்வப்போது திமிறின. சமயத்தில் செல்வியையும் தன்னோடு மலைவாழ்க்கை வாழ உசுப்பிப் பார்த்தான். அந்த நேரத்தில் அவனுக்கு அவள் புதுப்ப்து வெளிச்சம் காட்டி தன்னோடு கட்டிட வேலைகளுக்கு அழைத்துப் போனாள். வான்ரங்களுக்கு ஈடாக மரத்துக்குமரம் தாவிக் குதித்தவனுக்கு கட்டிடத்தின் சார வரிசைகள் பெரிதாய்த் தோன்றவில்லை. தவிர அவனது வேகமும் விரைசலான வேலைபாணியும் கங்காணிக்கு புதிய கண்டடைதலைக் கொடுத்தது. வசமான காட்டுயானை என்று லட்சுமணனைத் தட்டிக்கொடுத் தான்.கைக்கலவையானாலும், மிசின்கலவை என்றாலும் எதிர்க்கேள்வி இல்லாமல் எந்திரமாய் வேலைபார்த்தான் சிமெண்ட் மூடைகளை அனாயசமாய்த் தூக்கித் தட்டினான்.

செல்வியும் லட்சுமணனும் போஸ் கங்கானிக்கு செல்லப்பிள்ளைகள் ஆனரர்கள். பெரியவேலை என்றில்லாமல் ரெண்டாள் மூணாள் வேலைக்குக் கூட அவர்களை அழைத்துச் சென்றார்கள் கம்பெனி ஆளென்றுமட்டும் கொள்ளாமல் வீட்டுக் குள்ளும் சேர்த்துக்கொண்டாள் போஸின் பொண்டாட்டி அய்யம்மாள். மற்றெல்லா வேலையாட்களைவிட இவர்களுக்கு கூடுதலாக சம்பளம் மட்டுமல்லாது அவ்வப்போது நல்லது கெட்டதுகளுக்குத் தேவையான உதவியும் செய்தார்கள் இப்படி எவ்வித வேற்றுமையும் காட்டாத கங்காணியை விட்டு வேறிடம் செல்வதற்கு செல்வியோ லட்சுமணனோ யோசிக்கவில்லை. அதோடு தனிவேலை பிடித்துச் செய்கிற நினைப்பே இல்லாமலும் இருந்தார்கள்.

’தனிவேலன்னா நாலுகாசு மிச்சம் பிடிக்கலாம். கங்காணின்னு பேர் கிடைக்கும். நாலுபேருக்கு வேலகுடுக்கலாம்..’

பலபேர் ஆசைகாட்டினார்கள். ஒரேயடியாக தலையை ஆட்டி மறுத்தான். லட்சுமணன். ‘பூசாரிபொழப்பும் வேணாம்.. அந்த பொங்கச் சாட்டியத் தூக்கவும் வேண்டாம்.’ அததுக்கு ஆள்த்தேடி, கட்டடங்கட்டடமா வேல கேட்டு அலஞ்சி, எஞ்சீனியரச் சரிக்கட்டி, வீட்டுக்க்காரர்ட்ட பேரம்பேசி…வாண்டாம்ப்பா.. அதுக்கு பேசம போஸ் அண்ணங்கிட்டயே அஞ்சுபத்து சேத்துக்கேட்டு வாங்கீட்டுப் போயிறலாம்..

மற்றவேலையாட்களுக்கு போஸோடு கொண்ட இவர்களது நட்பு கண்ணை உறுத்தியது. அதன் காரணமாகவோ என்னமோ உப்பார்பட்டியில் தொகுப்புவீடுகளுக்கு பரத்தல் கான்ங்கரீட் போட்டுக்கொண்டிருக்கும்போது மரச் சாரம்சரிந்து விழுந்ததில் லட்சுமணனுக்கு முழங்கால் மூட்டு கழண்டு போனது. மிசினாஸ்பத்திரி கொண்டுபோய் பெரிய வைத்தியம் பார்த்தும் நடை, பழைய மாதிரி கூடவில்லை. நடக்க முடிகிறது. ஆனால் பழைய வீச்சோ வேகமோ அடையவில்லை. அதிகநேரம் நின்றால் மூட்டு கடுக்கிறது. அடிக்கடி உட்காரச் சொல்லுகிறது.

செல்விபதறினாள். ‘ஒன்னிய ஆரு இங்கிட்டு அங்கிட்டு நடக்கச்சொன்னா.. கொஞ்சநாளக்கி கம்முன்னுதே வீட்டோட கெடந்தா என்னா’’ அவனது இடுப்பைதூக்கி அவனை உட்காரச் செய்து கால்களை நீவிவிடுவாள். வெந்நித்தண்ணி அடிக்கடி சுடவைத்து இடுப்பிலிருந்து ஒத்தடம் கொடுத்து நீவி குளிப்பாட்டி விடுவாள். வலிக்கு அந்த் வெண்ணீர்க்குளியல் அத்தனை இத்மாய் இருக்கும். அப்படியே சொக்கிப்போய்த்தூங்கிவிடுவான்.

‘இந்தமாதிரி படுத்தே கெடந்தா குடுபந்தாங்குமா செல்வீ..” என மெல்ல செல்வியிடம் கோரிக்கை வைத்தான் லட்சும்ணன்.

“யேன்..? இன்னொர்க்கா மலயேற ஆச வந்திர்ச்சா..”

உண்மையில் அவனுக்கு அப்படி ஒரு ஆசை இருந்தது. காலையில் செல்வி வேலைக்குப் போய்விட, பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு ஓடிவிட ஒண்டியாளாய் வீட்டுக்குள் படுத்துக் கிடக்கிறபோது கனவுபோல எத்தனையோ காட்சிகள் படமாய்வந்து ஓடிக்கொண்டிருக்கும். மலைமேல் பாறைக்குப் பாறை தாவிக் குதிப்பது, சடைமரங்களில் விழுதுகளைப்பிடித்து குரங்கு ஆட்டம் ஆடுவது, குண்டுக்கல்களில் பெருவிரல் பதித்து எகிறிக்குதிப்பது…. நினைக்கையில் கண்ணீர்முட்டி நின்றது. பழைய நடை திரும்புமா.. மலையின் அடிவாரத்தில் மறுபடி கால்வைக்க ஏலுமா.. அவனாக கேள்விகேட்டு பதிலும் சொல்லிக்கொண்டிருப்பான். எதோ ஒரு மூலிகைத் தைலம் தேய்த்ததில் பட்டறை ஆசாரி எழுந்து நடமாடியதாக சொல்லி, செல்வி அவனுக்கு ஊக்கம் கொடுத்து வைத்தாள். அவள்து அந்தமாதிரியான பேச்சுத்தான் அவனை மெல்ல மெல்ல எழுந்து எட்டுவைக்க உதவியது. எட்டுவைத்த மறுநாளே குடும்பம் பற்றிய கவலை பிறந்தது.

லட்சுமணன், செல்வியின் கேள்விக்கு பதில்சொல்ல வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருந்தான்.

“இல்ல.. பாடுனவாயும்.. ஆடுன காலும் சும்மா கெடக்காதே..!” செல்வியே மறுபடியும் கேட்டாள்.

“புள்ளீக மொகத்தப் பாக்க பகீர்னு இருக்கு செல்வீ..”

“யய்யா.. பசிக்கிதுன்னு ஒங்கிட்ட எந்தப் பிள்ள கேட்டிச்சு.. ஒப்பி.?”

அந்த் அளவில் போஸ் எந்த நாளிலும் செல்விக்கு வேலையை இல்லை என தள்ளிவிட்டதில்லை. அதோடு வீட்டாளாய்க்கிடக்கும் லட்சுமணனுக்கும் அரைச் ச்ம்பளம் போட்டு தந்துவிடுகிறான். செல்வி வேணாமென்றாலும் போஸ் பொண்டாட்டி அய்யம்மா, அவ்வப்போது வந்து ரேசன்அரிசி, வீட்டில் மிச்சம்விழுகிற வெஞ்சனம், குழம்பு ரசம்.. என ஏதாவது ஒன்றை தந்து கொண்டே இருக்கிறாள்.

“எத்தினி நாளைக்கித்தே அடுத்தவங்ககிட்ட கையேந்திக் கிட்டே நிக்கறது..?”

“எனக்கும் சங்க்ட்டமாத்தே இருக்கு வாண்டாம்ணா.. கேககணுல..”

“வலி இப்ப கொஞ்சம் மட்டுப்பட்ட மாதிரி இருக்கு..”

”சாரத்தில ஏறி சந்துச் சட்டிய வாங்கீறலாம் கிறியா..!”

போனவாரம் லட்சுமணனைப்பாக்க வந்திருந்த கங்காணி போஸ் கிட்டேயும் இதே வார்த்தையைத்தான் சொன்னான்.

“அப்பிடியா.. அப்ப நாளையிலருந்து வேலத்தளத்துக்கு செலுவிகூட வந்திரு… சட்டிய எண்ணிப்போட, சிமிண்டு மூட்டைய கணக்கு வச்சு எடுத்துவிடன்னு சில்றவேலய பாதுக்கலாம்ல.. இல்லாட்டா சிமிண்டு கொடவுனுக்கு காவலுக்கு ஒக்காந்துக் கறியா..” உற்சாகப்படுத்திவிட்டு, செல்விக்குத் தெரியாமல் ஒரு குவாட்டர் பாட்டிலை தள்ளிவிட்டுப் போனார்.

மறுநாள் காலையில் செல்வியோடு லட்சுமணனும் வேலைக்கு கிளம்பி ஆயத்த்மாய் நின்றான். செல்வி சத்தம் போட்டாள். ”காலு ஒண்ணுகூடட்டும் அதுங்குள்ள என்னா அவசரம்..?”

“வீட்ல சும்மாவே கெழவெங்கணக்கா ஒக்காந்து கெடக்க போரடிக்கிதுடீ..”

படக்கென சாக்கட்டுக்குள் கை விட்டு பணம் எடுத்து அவனிடம் நீட்டினாள். “ ந்தா.. போரடிச்சா.. சின்மாவுக்குப் போய்ட்டுவா..”

லட்சுமணன் அந்தப் பணத்தை வாங்கவில்லை. வலி கொடுக்கும் தனது கால்களை தேய்த்துக்கொண்டு என்ன செயவதென அறியாமல் ஒரு நொடி நின்றான்.

“சீமக் காளையாட்டம் ஓடி வெளாண்டுக்கிருந்த ஒன்னிய வேலத் தளத்தில சப்பாணியா பாக்க என்னால முடியாது மாமா..!” – சொல்லிவிட்டு அவனது மார்பில் சாய்ந்து கொண்டு அழலானாள் செல்வி.

அவளது அந்த அழுகைதான் லட்சுமணனுக்கு தன்னை நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பத்தைத் தந்தது.

செல்வியும் பிள்ளைகளும் வீடுவிட்டுப் போனபிறகு எழுந்து தொரட்டிக் கம்பும். உரச்சாக்கும் எடுத்து தோளில் சாத்திக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் கிளம்பினான்.

மலையிலிருந்து கண்ணாறு இறங்கிவந்து பொருதும் பெரியகம்மாய்க்கு வந்தான். ஆ.. வென விரிந்து பரந்த குளம். நூற்றுக்கும் மேற்பட்ட கிணறுகளும் தோட்டங்களும் நீர்ச்சுனை பெறுவதோடு ஊற்றுக்கசிவு கொடுக்கும் காமதேனு அம்சமான கண்மாய். மலைமேல் ஒருசொட்டு மழைநீர் விழுந்தாலும் சரக்கென வழுகி கண்மாயில் வந்து நிரப்புகிற குணவிஷேசம் கொண்ட அமைப்பு. மலையேறிகளுக்கும் மாடுமேய்ப்பவர்களுக்கும் குளிப்புக்கும் தாகசாந்திக்கும் தோதுவாக அங்கங்கே சுனைகளும் பள்ளங்களுமாய் கிடக்கும். நீரோடிவரும் காலங்களில் சிறுசிறு செடி செத்தைகளையும் கொடிகொப்புக்களையும் தன்னோடு இழுத்து வந்து கரைமேல் விட்டுவைக்கும். மலையேர ஏலாத வயசாளிகள் கண்ணாற்றின் கரையில் கால்வைத்தால் போதும் வீட்டுச் செலவுக்கு விறகு சேர்ந்துவிடும்.

அதேகுறியோடு லட்சுமணன் கம்மாய்க்கரையில் ஏறினான். கண்ணாறு கண்மாயில் பொருதுகிற இடங்களில் முள்ளுமொடி நிறையக் கிடக்கும். கட்டி இழுத்து வீடுசேர்த்து விட்டால் பொடிப்பொடியாய் வெட்டி கூறுகட்டி விற்கலாம் கரைச்சரிவில் இறங்குகிற போதுதான் காலில் வ்லி முகம்காட்டியது. தொரட்டி கம்பை ஊன்றி காலைத் தாங்கிகொண்டான். உரசாக்கை கீழே வைத்துவிட்டு தொரட்டிக்கம்பை சாயலாய் விட்டு மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த க்ருவமர குச்சியை இழுத்தான். முள்ளம் பன்றியைப்போல மண்ணுக்குள்ளிருந்து புருபுரு வென காய்ந்த கொப்பு பாலிதீன் பேப்பரும் கந்தல் துணிகளும் சூழ வெளியில் வந்தது. இன்னும் கிளைத்து விட்டபோது பேப்பர் கப்புகளும் பிராந்தி பாட்டில்களும் வெளியேறின. வலி எடுத்தகாலை அனவாய் வைத்துக்கொண்டு கண்மாயைத் தூர்வரினான். முள்செடிகள் வேர்முண்டுகளைச் சேர்த்து விறகாய் கட்டி எரிக்கலஞ்செடிப் புதருக்குள் உருட்டிப்போட்டான். பிராந்தி பாட்டில்களை பொறுக்கி மொத்தம்சேர்த்து மண்ணைப்பறித்துப் புதைத்து வைத்தான். அடையாளத்திற்கு மூன்றுகல்களை முக்கோணமாய் பொருத்தி வைத்தான். கொண்டுவந்திருந்த உரசாக்கை வித்து பேப்பர் கப்புகளையும் பால்பாக்கெட்களை யும் திணித்துக்கொண்டான். தொரட்டிக்கம்பை ஊன்றியவாறே நடந்து பழைய பேப்பர்கடைக்கு சரக்கைப்போட்டான். .

“குப்ப பெற்க்கற வேலையும் தெரியுமா.. சொல்லவே இல்ல..” அவன் கொண்டுவந்த பணத்தை எண்ணி சாக்கட்டுக்குள் வைத்தபடி கேட்டாள்.

“யே..ங் கேவலமா இருக்கா..? “

மடமடவென மறுப்பாய்த் தலையாட்டியவள், “ எவ்..ளோ..தூரம் கால் வலிக்கலியா..“ கண்களைத் தாழ்த்தி அவன் முழங்காலைப் பார்த்தாள்.

“ரெண்டுநாளைக்கி அப்பிடித்தே.. பழகிட்டா சரியாயிரும் செல்வீ..” சொல்லிக் கொண்டே தாழ்ந்த அவள் முகத்தை நிமிர்த்தி விறகுப்பொதியும் பாட்டில்களும் இருப்பு வைத்திருப்பதைச் சொன்னான். அடுத்தநொடி செல்வி அவனது உதட்டைக் கடித்து அவனை நெஞ்சோடு சேர்த்து இறுக்கினாள்.

“ச்சீ என்னா இம்புட்டு உப்புக்கக்கிது..” நாவில் ருசிகண்டு பேசியவள், “பரவால்ல இத்துணூண்டு இன்னிக்கிது.” – என்றபடி மறுபடியும்…

லட்சுமணன் பெண்ணாகி நாணினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *