லட்சியக் கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 5,986 
 

சாரதா சொன்ன அந்தச் செய்தியைக் கேட்டதும் சுமதிக்கு சந்தோஷத்திற்கு பதிலாக அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

‘ஏய்..என்னடி சொல்றே…அப்ப உன்னோட லட்சியக் கணவன் கனவெல்லாம்?….,’

‘சுமதி….போதும்மா…மீதிய லன்ச் இண்டர்வெல்ல பேசிக்கலாமே!..காலங்காத்தால..இதைப் பத்திப் பேசினா நான் ரொம்பவே மனசு சோர்வடைஞ்சுடுவேன்….அப்புறம் இன்னிக்கு முழுவதும் அலுவலக வேலைல கவனம் செலுத்த முடியாமப் போய்டும்’ பரிதாபமாய்ச் சொன்னாள் சாரதா.

அதற்கு மேலும் அவளிடம் இந்த விசூயத்தைப் பற்றிப் பேசுவது அவ்வளவு நாகரீகமாய் இராது என்பதால் சுமதியும் ஒரு வித குழப்ப மனதுடனே தனது இருக்கைக்குச் சென்றமர்ந்தாள். ஆனாலும் மனம் சாரதாவைப் பற்றியே திரும்பத் திரும்ப நினைத்தது. ‘ச்சே…என்னாச்சு இவளுக்கு,…கல்லூரி நாட்களிலிருந்தே தனக்கு வரப் போற கணவன் எப்படி இருக்கனும்னு ஏகப்பட்ட கனவுகளைத் தேக்கி வெச்சிருந்தாளே..இவ எப்படி திடீர்ன்னு இதுக்குச் சம்மதிச்சா?’ வேலையில் கவனம் செலுத்த முடியாதவளாய் தலையைத் தூக்கி சாரதாவைப் பார்த்தாள். அவளோ..எதுவும் நடவாததைப் போல் வெகு இயல்பாய் அலுவலக வேலையில் மூழ்கி விட்டிருந்தாள்.

‘பாவிப் பெண்ணே..என்னைத் தவிக்க விட்டுட்டு நீ பாட்டுக்குச் சாதாரணமாயிருக்கியே இது நியாயமா?….ஹூம். ‘என்னோட புருஷன் என்னை விட ரெண்டு வயசுதான் மூத்தவராயிருக்கணும்… நல்ல உயரமானவரா….மாநிறமாயிருக்கணும்….பணக்காரனா இல்லாட்டியும் பண்பாளராயிருக்கணும்….என்னைய அடக்கி ஆளாம என்னோட உணர்ச்சிகளுக்கும் மதிப்பு தர்றவரா…என்னைத் தவிர இன்னொருத்திய எனக்கு முன்னாடியும் எனக்குப் பின்னாடியும் நெனைக்காதவரா…கவிதைகளை ரசிப்பவரா…இருக்கணும்’….ம்..ம்…ம்…இன்னும் என்னென்னவோ சொன்னாளே…கடைசில இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டாளே’ மனசு கிடந்து தவிக்க சுமதி அனற் புழுவாய்த் துடித்தாள்.

மதியம் 1.45.

உணவருந்தும் அறையில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு வெளியேறிய பின் சாரதாவின் அருகில் சென்று அமர்ந்து ‘ம்…இப்ப சொல்லு…என்னாச்சு உனக்கு?’ அவள் கை விரல்களைப் பிடித்து சுளுக்கெடுத்தபடி கேட்டாள் சுமதி.

‘சுமதி…என்னோட லட்சியக் கணவன் எப்படியிருக்கணும்னு நான் கண்ட கனவுகளெல்லாம் உனக்கு நல்லாத் தெரியும்..உனக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியும்..அந்த லட்சியக் கணவனைக் கை பிடிக்கறதுக்காகத்தான் இருபததொம்பது வயசு வரை நான் காத்திட்டிருக்கேன்கறதும் நல்லாவே தெரியும்..’

‘ம்..ம்…எல்லாம் தெரியும்…அது தெரிஞ்சதினாலதான் போயும் போயும் ஒரு அம்பது வயசுக்காரனுக்கு…அதுவும் ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா…அவனுக்கு ரெண்டாந்தாரமாப் போறதுக்கு நீ எப்படி சம்மதிச்சேன்னு புரியாமத் தவிச்சுக்கிட்டிருக்கேன்!…எது உன்னைய இதுக்கு சம்மதிக்க வெச்சதுன்னு தெரியாம குழம்பிக் கிடக்கறேன்!…சொல்லு சாரதா…என்ன காரணம்?’ தோழியின் மீதுள்ள உண்மையான அக்கறையில் சற்று கோபமாகவே கேட்டாள் சுமதி.

விரக்தியுடன் புன்னகைத்த சாரதா ‘சுமதி…நம்மளோட லட்சியங்கள் நமக்கு வேணா பெரிசாயிருக்கலாம்…அதை அடையறதுக்காக நாம எத்தனை யுகங்கள் வேணா காத்துக் கிடக்கலாம்…அந்தக் காத்திருப்பு நமக்கு வேணா சுகமான காத்திருப்பா இருக்கலாம்…ஆனா..அதுவே நம்மைச் சார்ந்தோருக்கெல்லாம் சுமையான…எரிச்சல் மூட்டுகிற காத்திருப்பாய்த் தோணும் பட்சத்தில் நாம் நம்மோட லட்சியங்களை விடாம தோள்ல தூக்கி வெச்சிட்டிருந்தா ..நம்மோட உறவுகளே நம்மை ஒதுக்கிடற ஒரு நிலமை வந்துடும் ‘ சொல்லும் போதே சாரதாவின் கண்களில் ஈரக்கசிவு.

‘கொஞ்சம் புரியம்படி சொல்லும்மா’ சுமதி பரபரத்தாள்.

‘போன வாரம்…அப்பா யாரோ ஒரு கல்யாண புரோக்கர்கிட்டப் பேசிட்டிருந்ததை தற்செயலா நான் கேட்டேன்..அப்பவே என்னோட மனசு சுக்கு நூறா நொறுங்கிப் போச்சும்மா’ வாயில் கைக்குட்டையை வைத்து அழுகையை அடக்கினாள் சாரதா.

‘நோ…நோ…சாரதா!..எப்பேர்ப்பட்ட பொண்ணு நீ?…நீயே உணர்ச்சிகளுக்கு அடிமையாகலாமா?…எதையும் சுலபமா எடுத்துக்கணும்னு எனக்கு நீ சொல்லுவியே..உன்னையே இந்த அளவுக்கு பாதிக்கற மாதிரி அப்படி என்ன பேசினாரு அப்பா?’

‘அய்யா..நானும் நாலு வருஷமா எத்தனையோ ஜாதகங்களைக் கொண்டாந்து கொட்டிட்டேன்…நம்ம பாப்பா எல்லாத்தையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி தள்ளி விட்டுடுதுங்க…என்னோட சர்வீஸ்ல இந்த மாதிரி எனக்கு எங்கியுமே ஆனதில்லைங்க..பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை போலிருக்கு’ புரோக்கர் தன் ஆற்றாமையை சாரதாவின் தந்தையிடம் கொட்ட,

‘என்ன பண்றது குருசாமி…இந்த சனியன் நீ சொல்ற மாதிரிதான் எல்லாத்தையம் ஏதோவொரு குறை சொல்லி ஒதுக்கிடுது…மனசுல பெரிய ரம்பைன்னு நெனப்பு..கிட்டத்தட்ட பாதிக் கெழவி ஆயிடுச்சு…ஹூம் பொட்டப்புள்ளைய என்ன சொல்லித் திட்ட முடியும்?’

‘அதுக்குத்தான் நான் ஒரு ஐடியா வெச்சிருக்கேன்’

‘என்னய்யா ஐடியா?’

‘பேசாம சின்னவளுக்கு மொதல்ல கல்யாணத்தப் பண்ணிப் போடலாம்’

‘யாரு..சரோஜாவுக்கா?’

‘ஆமாங்க’

‘அடப் போய்யா பெரியவளை விட்டுட்டு சின்னவளுக்கு எப்படிய்யா பண்ண முடியும்?’

‘தங்கச்சிகாரி புருஷனோட வலம் வர்றதைப் பார்த்தாவது பெரியவளுக்கு அந்த ஆசை வராதா?’ சொல்லிவிட்டு அசிங்கமாய்ச் சிரித்தான் அந்த புரோக்கர்.

கேட்டுக் கொண்டிருந்த சாரதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

தொடர்ந்து புரோக்கரின் வசிய வார்த்தைகள் சாரதாவின் தந்தை மனசைக் கலைத்து விட,

‘சரிப்பா..பெரிசு கெடந்துட்டுப் போவது..சின்னவளுக்குப் பாரு முடிச்சுடலாம்’

‘என்னதான் இருந்தாலும் உங்கப்பா ஒரு மூணாம் மனுசன்கிட்ட சொந்த மகளைப் பத்தி இப்படித் தரக் குறைவாப் பேசியிருக்கக் கூடாதுதான்’ கோபமாய்ச் சொன்ன சுமதியை சாந்தப் படுத்திய சாரதா,

‘அது கூட எனக்கு அவ்வளவு பெருசா பாதிக்கலை சுமதி..என் தங்கச்சி சரோஜா அன்னிக்கு யாரோ அவ தோழிகிட்ட போன்ல சொல்றா….’

‘எப்படியோ கலா எங்கப்பா அக்கா ஜாதகத்தைத் தூக்கிக் கடாசிட்டு என்னோட ஜாதகத்தைக் கைல எடுத்துட்டார்…இப்பத்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு..இந்தச் சனியன் வேற குறுக்க இருந்துட்டு லைன் களியர் பண்ண மாட்டேங்குதேன்னு நொந்து போய் கெடந்தேன்..நல்லவேளை தப்பிச்சேன்..என்னது அவளுக்கு எப்பக் கல்யாணமா?..அதைப்பத்தி எனக்கென்னடி கவலை…இப்படியே ஐம்பது வயசு வரையிலும் வர்ற ஜாதகத்தையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டேயிருப்பா..பாரு கடைசில அறுபதாவது வயசுல அறுபதாம் கல்யாணத்துக்கு பதிலா மொதல் கல்யாணம் பண்ணுவா’ சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் சரோஜா.

‘அடப்பாவமே..சரோஜாவா இப்படிப் பேசினா? அன்னிக்கு என்னமோ ‘எங்கக்கா லட்சியவாதி..அவளோட லட்சியக் கணவன் கெடைக்கற வரைக்கும் நான் எத்தனை வருஷமானாலும் காத்திட்டிருப்பேன்’னு சொன்னாளே?’ சுமதி அங்கலாய்த்தாள்.

‘எல்லாம் வெளி வேஷம் சுமதி..உள்ளுக்குள்ளார ஒண்ணும் வெளியில் ஒண்ணும் வெச்;சிட்டு நாடகத்தனமா வாழுற இந்த மனுஷ ஜென்மங்களுக்கு என்னோட லட்சியமெல்லாம் புரியாது சுமதி..அதான் வெறுத்திட்டேன்…என்னோட லட்சியங்கள் எனக்கு வேணா பெரிசா இருக்கலாம்…அதே மத்தவங்களுக்கு ஒரு சுமையா…தடையா..மாறும் போது நான் எதுக்கு அந்த வீணாப் போன லட்சியங்களை மதிக்கணும்?,…உறவுகளுக்குப் பகையா..வேண்டாதவளா…இருக்கணும்?,…அதனாலதான் என்னை நானே தேத்திக்கிட்டு சராசரிப் பொண்ணா மாத்திக்கிட்டேன்..’

‘என்ன சாரதா…அதுக்காக ஐம்பது வயசுக்காரனுக்கு…’

‘ம்ஹூம்…இந்தச் சமுதாயச் சூழலும்…பொருளாதாரச் சூழலும் என்னிக்கு மாறுமோ அப்பத்தான் லட்சியப் பெண்களின் கனவுகளும்..லட்சியங்களும் மதிக்கப்படும்..அதுவரைக்கும் எல்லாரும் சராசரியா இருக்கறதைத் தவிர வேற வழியில்லை’

சொல்லி விட்டு ‘விருட்’டென எழுந்து வாஷ் பேஸினுக்குச் சென்று கை கழுவ ஆரம்பித்தாள் சாரதா. கைகளை மட்டுமல்ல..லட்சியக் கணவன் கனவுகளையும் சேர்த்து.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *