ஜெயந்தி வந்திருப்பதாய் அம்மா சொன்னதும் மனதுக்குள் அவளை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் வந்ததை வாசுவால் மறைக்க முடியவில்லை. ஜெயந்தியுடனான பால்யத்தின் நட்பில் கட்டிய திரைச்சீலைகள் இன்னும் தோரணமாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனசுக்குள். சில உறவுகளில் இருக்கும் இந்த பிசுக்கு எப்போதும் போவதில்லை… நல்லா கழுவி, புதிது போல சுன்னாம்பு அடித்து வைத்திருந்தாலும், யாராவது மெதுவாய் சாய அல்லது கை வைக்க பொல பொலவென தோலுதிர்த்து, உள்ளே இருக்கும் பிசுக்கை காட்டிக் கொடுத்துவிடுகிறது.
அவளுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது, கணவன் அரசு ஆஸ்பத்திரியில் கெமிஸ்டாக வேலைப்பார்த்ததாக அம்மா சொன்ன ஞாபகம் வந்தது, அவன் ஜெயந்தியின் மீது சந்தேகப்பட்டு தற்கொலை செய்து கொண்டது மிக சமீபத்தில் தான் நிகழ்ந்தது, அனேகமாய் ஒரு வருடத்திற்குள். பொட்டாசியம் சயனைடு பியரில் கலந்து குடிக்க, சுலபமாய் இறந்து போய் விட்டான். ஜெயந்தியின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததாகவும், அவனை மதிப்பதே இல்லை, மினுக்கிகிட்டு அலையுறா, அதான் இவ ஆட்டத்தையெல்லாம் பாக்க முடியாமா போய் சேர்ந்துட்டான், அதோடு நிற்காமல் ஜெயந்தி தான் அவனை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறாள் என்று புகாராய் சொல்லப்பட்டது. ஜெயந்தியை போலீஸ் அலைக்கழித்து விட்டது சிறிது நாட்கள் விசாரணை செய்யவேண்டும் என்று. ஜெயராம் நாயுடு தான் எப்படியோ தனக்கு தெரிஞ்ச சப்-இன்ஸ்பெக்டர வச்சு பிரச்னைய சுமூகமா முடிச்சாரு. திருமணமான பின்னான சிநேகிதிகளின் துக்கங்களை வேடிக்கை பார்ப்பதும், கேள்விப்பட்டு இரண்டு துளி கண்னீர் அல்லது உதடு குவித்து எழுப்பும் சத்தம் மட்டும் தான் மிஞ்சுகிறது.
வாசுவின் பெரியம்மாவும், தன்னுடைய பெரிய அத்தையுமான செல்லத்தாயி அம்மாவை பாத்துக்க தான் வந்திருக்கா ஜெயந்தி. சமீபத்தில் தான் அக்குளிலும், தோள் பகுதியிலும் சிறு சிறு கட்டிகள் இருக்க… எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்ததில் மார்பக புற்று நோய் என்று தெரிந்ததில் உடைந்து போனது மனசு. பெரியம்மாவிற்கு இடது மார்பகத்தையும், பின் வலதையும் ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்க, எதுக்கு இந்த கருமம்னே எனக்கு தெரியல குமாரி இன்ன வரை, புள்ளையவா பெத்தேன்… இதுனால பிரயோசனம் ஏதும் உண்டா…காரணமே இல்லாம நான் எதுக்கு பொண்ணா பிறக்கனும் குமாரி… என்னத்துக்குன்னே தெரியாத, அறுத்து போட்டாச்சு வாழ்க்கையவே… என்று கண்ணீர் விடும் செல்லத்தாயி பெரியம்மாவின் துக்கங்கள் அம்மாவின் மூலமாக தான் வாசுவுக்கு தெரிய வரும்.
செல்லத்தாயி பெரியம்மாவுக்கு கூடமாட இருந்து வேலை பாக்கத்தான் ஜெயந்தி வந்திருந்தா. ஆனா பெரியம்மாவிடம் பேசுவதே இல்லை போலும் அவள். பெரியம்மாவுக்கு பேச்சுத் துனைக்கு யாருமில்லை, வாசுவின் அப்பாவும் சொந்த வீடு கட்டி போய் விட்டதால்… இருந்த ஒரு சினேகமும் போனது பெரியம்மாவுக்கு… வீட்டு வேலையெல்லாம் சளைக்காம செய்தாலும், ஜெயந்திக்கு பழைய படி கலகலப் பேச்சு இல்லை. அவளின் குழந்தைகளை பாட்டி வீட்டில விட்டுட்டு இங்க அவளின் அண்ணன் தாமு கொண்டு வந்து விட்ருக்கான். ஏதும் பேசமாட்டேங்கா.. ஏதோ பித்துப்பிடிச்சா மாதிரி இருக்காடா இப்பெல்லாம், சுட்சு போட்டா மாதிரி… பம்பரமா வேல பாக்குறா, அதுல ஒரு சொனக்கம் இல்ல… பதவிசா எல்லா வேலையும் பாக்குறதில ஒரு குறை இல்லை… எல்லாத்துக்கும் கணக்கு வச்சிருக்கா… இட்லிய பூப்போல அவிக்கா, அளவா அரிசி போடுதா… சோறு வடிக்கா… இருக்கிற காய்கறில ஏதோ வதக்கலோ, பொரியலோ பண்ணி போட்டுடுதா… உனக்கு பிடிக்கிற நெய் கத்திரிக்காய் கூட அதே பக்குவத்தில வச்சுடறா, சமைக்கிறதுல, வீட ஒதுக்குறதில, பத்து தேய்க்கிறதுலன்னு ஒரு சோடை சொல்ல ஆவாது… ஆனா பாரு… சாயந்திரத்துக்கு மேல ஏதோ விளக்க ஏத்திட்டு ஒரே திக்கப் பாத்து ஒக்காந்துக்கறாளாம்…. யாரு கூடயும் நடயில வந்து பேசுறது கிடையாதாம், பெரியம்மாவிடம் சுத்தமா பேசுவதே இல்லையாம்டா…
உனக்கு ஞாபகம் இருக்கா? எப்படி இருப்பா? பளிச்சுன்னு, நம்ம மாடக்குழில கார்த்திகைக்கு பிடிக்கிற விளக்கு மாதிரி… எல்லாம் போச்சு… ஒரு சோபையே இல்லையாம் இப்போ… அவ புருஷன் போன கொஞ்ச நாள்ல எல்லாம் ரூமுக்குள்ள போயி கதவ மூடிக்கிட்டு, கொஞ்ச நேரஞ்செண்டு நல்லா சிங்காரிச்சுட்டு வருவாளாம்… என்னன்னு யாராவது கேட்டா, அவரு தான் ரெடியா இருக்க சொன்னாருன்னு சொல்வாளாம்… ஏதோ காத்து கருப்பு புகுந்திருச்சுன்னு நினச்சு அவள படாத பாடு படுத்திட்டாக, அவுக வீட்ல. இப்போ தான் மூனு மாசமா தேவலாம்னு சொல்லிட்டுருக்காங்க என்ற அம்மாவின் கதைகள் ஏதோ விட்டுவிட்டு கேட்டது போல இருந்தது வாசுவுக்கு… அவள் பள்ளிக்கு கிளம்பும் போது… ரெட்டை சடை போட்டுக் கொண்டு, முழுப்பாவாடை சட்டை தான் போடுவா அப்பமே… பெரிய மனுஷி… என்று சடை பிண்ண வருபவளை நொக்குவாள் தலையில் வாசுவின் அம்மா… வாசு சாப்பிடும்போதே அவளும் தட்டைத் தூக்கிட்டு வந்துடுவா, அத்த கொஞ்ச மொளகா சட்னி கொடுங்க அத்தைன்னு…
ஜெயந்தி எப்போதும் அவளின் அம்மா அப்பா வீட்டிற்கு போவதே இல்லை, இரண்டு அத்தை வீட்டிலும் தான் வளர்ந்தாள், திருவிழா சமயங்களில் மாத்திரம் எல்லோரும் போலே வாசுவின் குடும்பத்தோடு எதிர்சேவை, அல்லது பூப்பல்லாக்கு பார்க்க வருவதோடு சரி, அவளை யாரும் அங்கு எதிர்பார்ப்பது இல்லை… வாசுவின் வீட்டோடு தான் எப்போதும் ஒட்டிக் கொண்டிருப்பாள். ஜெயந்திக்கு வாசு அவளைத் தவிர, முத்தையா ஆசாரியின் மகள்களுடன் பேசினால், கா விட்டுடுவாள், அதை பழமாய் மாற்ற, அவளுக்கு கமர்கட்டும், தங்கராசு அண்ணே கடையில இருக்கும் பல்லிமிட்டாயும் வாங்கித் தரவேண்டும்… அப்பாவிடம் ஜெயந்திக்குன்னு காசு கேட்டா கொடுத்துடுவாரு… அப்பாவிற்கு ஜெயந்திமேல அவ்வளவு பாசம்…எப்பப் பார்த்தாலும், மடியில் ஒக்காந்து, மாமா ஒரு அந்த புறாக்கதை சொல்லுங்க மாமா என்று மூஞ்ச சுருக்கி, கண்ண இடுக்கி கேட்கும்போது அப்பா எந்த வேலையிருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு சொன்ன கதையவே சொல்லிட்டு இருப்பார்… அவனுக்கு அம்மாவின் சம்பாஷனைகளை தாண்டி ஜெயந்தியுடனான நாட்கள் சித்திரங்களாய் வந்து கொண்டிருந்தது.
வாசுவுக்கும், ஜெயந்திக்கும் வீட்டில் வந்து விழும் பாலமித்ரா, அம்புலிமாமா படிக்க போட்டியே நடக்கும்… சித்திரக்கதை தொடங்கி, வீரப்பிரதாபன் கதைகளையும் தாண்டி குமுதம், விகடன் படிக்கிற காலம் வரை தொடரும் சண்டைகள். அதன் பிறகு படிப்பினூடே நிறைய படிக்க ஆரம்பித்தாள், தொடர்கதைகள், நாவல்கள் என்று அவளின் விடுமுறை காலங்களில் புத்தகத்துடன் ஒதுங்கிவிடுவாள் புத்தகப்புழு ஜெயந்தி. நிறைய படித்தாள், அது பற்றி வாசுவிடம் நிறைய பேசியிருக்கிறாள்… கீரமுண்ட… சொல்லும் போது கவனமாக் கேளு என்று வாசுவைத் திட்டுவாள் சிலசமயம். அவள் தான் இங்கு வந்திருக்கிறாள், பெரியம்மாவின் வீட்டுக்கு… பெரியம்மாவையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் இன்று போகலாம் என்று வாசுவுக்கு தோன்றியது.
மாலை அலுவலகம் முடிந்து வந்த போது, வாசுவுடன் தானும் வருவதாக அம்மா சொல்ல, கைகால் முகம் கழுவி விட்டு, கொஞ்சம் பழங்களும், மாதவய்யர் கடைல மசால் கடலையையும் வாங்கி கொண்டு வாசுவும் அம்மாவும் ஆட்டோவில், பெரியம்மா வீட்டிற்கு சென்றார்கள்… முன் படியில் ஒரு மூன்று புள்ளிக் கோலம் அழிந்தும் அழியாமலும் இருந்தது, முன் வாசல் பல்பு துடைக்காமல், பிசுக்கேறி வெளிச்சத்தை வாசலில் மட்டும் தெளித்திருந்தது. அழைப்பு மணி அடித்த பிறகும் அரவம் இல்லாதது போல் தோன்றியதால்… கதவைத் தட்டவும், யாரோ வருவது கேட்டது… மிதமான நடைச் சத்தம், பெரியம்மாவாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த வாசு, ஜெயந்தி திறக்க அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவளும் முன் வாசல் பல்பு மாதிரி பிசுக்கேறி மங்கலாய் சிரித்தாள். வா வாசு என்றவள்… அத்த! குமாரி அத்தயும் வாசுவும் வந்திருக்காங்க என்றவள். முன் தளர்ந்த முந்தானையை இழுத்து சொருகிக் கொண்டு இரு வந்திடறேன் என்று உள்ளே பின்கட்டுக்கு விரைந்தாள். பெரியப்பா முன்னால் இருந்த அறையில் இருந்தார், ஒரு ஈஸிச் சேரில் உட்கார்ந்து இருந்தார், வாசுவின் சத்தம் கேட்டு வாடா… வடுவா… இப்பதான் வரத்தோனுச்சா… என்று வாசுவிடம் பேசிவிட்டு உள்ளே புகுந்து கொண்டார், அவர் வாசுவின் அம்மாவிடம் எப்போதும் பேச மாட்டார், பேசுகின்ற சந்தர்ப்பம் வந்தாலும் பசங்களிடம் பேசுவது போல பேசுவார், அது என்ன கணக்கோ என்று நினைத்துக் கொள்வான் வாசு.
பெரியம்மா வரவில்லை வெளியே… வாசுவும், அம்மாவும் பட்டாசாலில் இருந்து உள்ளறைக்கு போய் பெரியம்மாவ, அங்கு கட்டிலில் படுத்துக் கிடந்தாள் பெரியம்மா… முன் பல் துருத்தி, முடி கொட்டி பழைய அழகைத் தொலைத்து, வாயை ஒருவாறு இழுத்து சிரித்தாள் வாடா… அழுதிருப்பாள் போல… தலையனையின் ஓரம் நனைந்திருந்தது. உடல்நலம் விசாரித்து, என்னக்கா அழுத மாதிரி தெரியுது? அழுவுறத்துக்கா காரணம் இல்லை… உனக்குத் தெரியும்ல குமாரி, இந்த மனுஷனோட வீம்பு… சப்பாத்தியும் மீன் குழம்பும், வேனும் ராத்திரிக்குன்னு கேட்டார்… எனக்கு அடுப்புக்கிட்ட போனாலே தள்ளுது… ஜெயந்தி தான் நல்லா சமைக்கிறாளேன்னு அவ பண்ணட்டும்னு சொன்னா… நீதான் பண்ணனும், அவளுக்கு அதெல்லாம் தெரியாதுன்னு சொல்றாரு… திரும்ப என்னால முடியலங்கன்னு சொல்லுதேன்… வெலமெடுத்துப் போய் கிட்ட வந்து முடிய பிடிச்சு சுவத்துல நங்குன்னு முட்டுதாரு… ஏற்கனவே பாரு முடியெல்லாம் போயிட்டு, இதுல இவரு வேற புடுங்குதாரு… அம்மாவின் கைகளை எடுத்து, தடவிப்பாரு குமாரி எப்படி வீங்கியிருக்கு… வின்னு வின்னுன்னு பிடுங்குது வலி உசுரு… அப்படியே பின்னால கிணத்துல போய் விழுந்துடலாமான்னு தோனுது… என்னமோ இருக்கேன்… இழுத்து பறிச்சுக்கிட்டு, ஜெயந்தி அப்படியே பாத்துக்கிட்டே நிக்கா… ஒரு ஆறுதல் வார்த்த பேசக்கூட நாதியில்ல குமாரி எனக்கு என்ற பெரியம்மா அழ… வாசு அங்கிருந்து நகர்ந்தான்.
பின்கட்டில் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த ஜெயந்தியிடம், நீ ஏதாவது அத்தகிட்ட ஆறுதலா பேசக்கூடாதா… இல்ல மாமாகிட்ட ஏதும் சொல்ல்க்கூடாதா… என்ற போது வாசுவை தலை சாய்த்து பார்த்தாள்… கஷ்டமாத்தான் இருக்கு… மனசுக்குள்ள என்னடா மனுஷ ஜென்மம்னு தோனத்தான் செய்யுது… நீ வந்திருக்கியே, போய் கேக்க வேண்டியது தானே ஒன்னோட பெரியப்பாட்ட… உனக்கே தெரியும் அந்தாள்ட்ட பேச முடியாது, நானோ, இன்னிக்கு நீயோ பேசிட்டுப் போயிடலாம், ஆனா எல்லாத்துக்கு அந்த பொம்பிளைய போட்டு பாடா படுத்துவாரு… நேத்து ராத்திரி… மோர் புளிச்சுடுச்சுன்னு தலைல ஊத்துனாரு அத்த மேல…என்று வாசுவுடன் பழைய மாதிரி பேசினாள். வேனும்னா பெரியத்த கிட்ட சொல்லு என்ட்ட இன்னும் கொஞ்சம் பொட்டாசியம் சயனைடு இருக்குன்னு…