கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 7,300 
 
 

மதியம் ஒரு மணி. வாசல் வரண்டாவில் சாய்வு நாற்காலி போட்டு சாய்ந்திருந்தேன். சூரியவெக்கை உடலை தழுவி இருந்தது,

‘‘ஐயா !’’ பவ்விய குரல் கேட்டு நிமிர்ந்தேன். வெள்ளை வேட்டி சட்டையில் எதிரில் ஐந்தடிக்கும் சற்று குறைவான குள்ள உருவம். கருத்த மேனி. பழகிய முகம் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் சட்டென்று ஞாபகத்திற்கு வரவில்லை.ஒரு நிமிட தடுமாற்றத்தில் ஆள் யாரென்று தெரிய…. எனக்குள் குப்பென்று வியர்வை. சின்ன மின்னதிர்ச்சி.

‘‘நீ……நீ…..’’ தடுமாறினேன்.

‘‘ராமசாமி கோணார் பெரிய மவன்ய்யா…’’

‘‘கோவாலா…..?’’

‘‘ஆமாம்ய்யா.’’

‘‘உட்கார்ப்பா…’’ சொல்லத் தயக்கம் இருந்தாலும் சொன்னேன். உள்ளுக்குள் வெறுப்பு. வேண்டாத ஆளாய் இருந்தாலும் வீடு படி ஏறி வந்தவனை எப்படி விரட்ட முடியும் ?!

‘‘இருக்கட்டும்ங்கைய்யா.’’ – அன்றைய மரியாதை இன்றைக்கும் இருந்தது. நின்றான்.

‘‘மரியாதை மனசுல இருந்தா போதும் தம்பி.’’ – ஏனக்கு அவன் நிற்பதில் உடன்பாடில்லை. யாரையும் நான் நிற்க வைத்துப் பேசியதில்லை.

‘‘பரவாயில்லைங்கைய்யா.’’ அவன் அமரவில்லை.

‘‘சரி. என்ன விசயம் சொல்லு ?’’

‘‘நல்லவனா திரும்பி வந்திருக்கேன். என்னையும் அப்பாவையும் சேர்த்து வைக்கனும்…..’’

அவன் நேரடியாக விசயத்திற்கு வந்தான். நான் இதை எதிர்பார்க்கவில்லை.

‘‘அ…..அது…..’’ தடுமாறினேன். காரணம் கீதாரியின் முடிவு எனக்குத் தெரியும்.

‘‘ரொம்ப கோபமா இருக்கார்ய்யா. நீங்கதான் எங்கைய்யாவை எப்படியாவது சமாதானம் பண்ணி என்னை அவரோட சேர்த்து குடும்பத்தோட ஒட்டவைக்கனும். ‘’ குரலில் கெஞ்சல், குழைவு.

கீதாரி என்றைக்கும் எடுத்த முடிவில் மாற்றமில்லாதவர். ஆனாலும் தவறு செய்தவன் திருந்தி வந்திருக்கிறான். மன்னித்து, மறந்து ஏற்றுக் கொள்வதுதான் மனித தர்மம், நியாயம். இதை சொல்கிற விதத்தில் சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். திருந்தியவன் நல்லவனாக வாழ்வான். மறுத்தால்….வெறுப்பு அவன் மறுபடியும் திரும்ப பழைய வாழ்க்கைக்குப் போக வாய்ப்புண்டு, ஒருவன் கெடுதலை யாரும் விரும்ப மாட்டார்கள். அதிலும் பெற்றவர் கண்டிப்பாக விரும்பமாட்டார். சொல்கிற விதத்தில் சொன்னால் எல்லாம் சரியாகும். அப்படி யாரும் சொல்லாததால் கீதாரி இன்னும் கோபமாக இருக்கிறார். எனக்குள் தெரிந்தது, சின்ன நம்பிக்கையும் வந்தது.

‘‘சரிப்பா முயற்சி செய்யுறேன் உனக்கு இந்த கிராமத்துல நம்ம வீட்டைவிட்டா போக்கிடம் எதுவும் கெடையாது. இங்கே சாப்பிட்டுட்டு வந்த களைப்பு உண்ட களைப்பு திண்ணையில படுத்து ஓய்வெடு. நான் உன் அப்பாவைப் பார்த்து பேசிட்டு வர்றேன். வைதேகி !’’ வீட்டினுள் திரும்பி மனைவியை அழைத்தேன்.

‘‘இதோ வந்துட்டேன்.’’ அவள் ஐந்து விநாடிகளில் எதிரில் வந்தாள்.

‘‘இது யார் தெரியுதா ? ’’ கோபாலைக் காட்டினேன்.

விழித்தாள். புரியாமல் பார்த்தாள்.

‘‘நம்ப கீதாரியோட மொத பையன் !’’

‘‘ஜெ…..ஜெயில்ல…..‘‘ சொல்ல தயங்கி தடுமாறினாள்.

‘‘ஆமாம். அவனேதான். பசியோட வந்திருப்பான் போல. அப்படித்தான் வந்திருக்கனும். நீ இவனுக்குச் சாப்பாடு போடு. சாப்பிட்டுட்டு இப்படி திண்ணையில படுத்திருந்து கண்ணயரட்டும். நான் வெளியே போய் கீதாரியைப் பார்த்து திரும்பறேன்.’’ எழுந்தேன்.

கேட்ட வைதேகி முகத்தில் சட்டென்று சின்னதாய் கிலி. அவன் எதிரே சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து கொஞ்சம் நடுக்கத்துடன் புடவை நுனியை ஒரு விரலில் சுற்றி அதை மறைத்தாள்.

எனக்கு…. அவள் மனசுக்குள் என்ன சொல்கிறாள். என்ன சொல்ல வருகிறாள்…புரிந்தது.

‘இவர் பாட்டுக்க சொல்லிட்டு கிளம்புறார். நான் இவனை உள்ளே அழைச்சுப் போய் உட்கார வைச்சு சோறு போட்டு பரிமாறும் போது ஆம்பளை இல்லைங்குற தைரியம் கையைப் புடிச்சி இழுத்தான்னா ? பொம்பளைக்குன்னு மட்டும் இழுக்க வேணாம். போட்டிருக்கிற நகை நட்டுக்களுக்காகவும் இழுக்கலாம் முரண்டு புடிச்சா கழுத்தை நெரிச்சு கொலையேகூட செய்யலாம். திருட்டுப் பசங்களெல்லாம் இப்படித்தானே கொலையாளிவும் ஆகுறாங்க. இந்த ஆள் என்ன விபரம் புரியாம இப்படி சொல்லிட்டு கிளம்புறார் ?!’ – பெண்களுக்கே உள்ள ஜாக்கிரதை உணர்வு. முன்னெச்சரிக்கை.

இதைத்தான் அவன் என்னிடம் சொல்ல நினைக்கிறான். ஆனால்…அவன் எதிரில் எப்படி இதை சொல்ல முடியும்…?

இதை…. எதிரில் நின்ற கோபாலும் படம் பிடித்திருப்பான் போல. இல்லை தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு.

‘‘அம்மாவுக்குக் கஷ்டம் வேணாம்ங்கைய்யா. நான் போய் வெளியில சாப்பிட்டுட்டு வந்துடுறேன்ய்யா. ’’ சொன்னான்.

‘‘வேணாம் கோவாலு. நீ வெளியில போய் சாப்பிட இந்த கிராமத்துல ஒரு டீக்கடைகூட கெடையாது. டவுன் போய் சாப்பிட பத்து கிலோ மீட்டர் நடக்கனும். திரும்பினால் இருபது கிலோ மீட்டார். அம்மாவுக்குச் சிரமமில்லே. நீ இங்கேயே சாப்பிடு. அம்மா பயப்படுறாள்ன்னு தயக்கம், யோசனை வேணாம். அவளுக்கு இயற்கையாகவேக் கொஞ்சம் பயந்த சுபாவம். மத்தப்படி வேறு ஒன்னுமில்லே.’’ சொன்னேன்.

அவனுக்கு மனசு ஒப்பவில்லை போல.

‘‘வேணாம்ய்யா. நீங்க சைக்கிள் குடுங்க. நான் டவுன்ல போய் சாப்பிட்டு வர்றேன்.’’ என்றான்.

எனக்கும்… ‘ மனைவிக்கு எதற்கு வீண் தொந்தரவு கொடுத்து சிரமப் படுத்த வேண்டும் !’ பட்டது,

‘‘சரி. சைக்கிளை எடுத்துக்கோ. சாப்பிட்டுட்டு நேரா நம்ம போர் செட் தோட்டத்துக்கு வந்துடு. தோட்டம் குளிர்ச்சியாய் இருக்கும். கொட்டகையில ஓய்வெடு. நான்…. உன் அப்பாவோட பேசி முடிச்சி அங்கே வர்றேன். ’’ என்றேன்.

சரி. அவன் தலையசைத்து திண்ணையோரம் வரண்டாவில் ஒதுக்கி வைத்திருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

சிறிது தூரம் தள்ளிக் கொண்டு சென்று ஏறினான்.

வைதேகி முகத்தில் இப்போது நிம்மதி.

நான் குடையை எடுத்து விரித்து நடந்தேன்.

வருடா வருடம். பிப்ரவரி மாத கடைசியில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஒரு படையே தங்கள் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு பிழைக்க செழுமையுள்ள பக்கம் கிளம்பும். அது பெரும்பாலும் காவிரி டெல்டா பகுதி தஞ்சை மாவட்டங்களுக்குள்தான் வந்து தஞ்சம் புகும். கிராமத்து முக்கிய புள்ளி மிராசுதாரர்களை அண்டி, இருக்க இடம் கேட்டு, ஒதுங்கி, தன் ஆடு மாடுகளோடு ஊர் ஆடுகளையும் மேய்ச்சலுக்குச் சேர்த்து கிடையாக்கி…அதை தொழு உரத்திற்காக வேண்டப்பட்டவர்கள் வயல்களில் அடைத்து, கூலி பெற்று சம்பாதித்து பிழைப்பு நடத்தி இங்கு ஆறுகளில் தண்ணீர் வந்து விவசாயம் ஆரம்பித்ததும் தங்கள் ஊருக்குத் திரும்புவார்கள்.

அப்படி வந்து எங்கள் வீட்டில் ஒதுங்கியதுதான் ராமசாமி கோணார் குடும்பம்.

பத்து வயதில் சமைத்துப் போட ஒரு சின்ன பெண். பதினைந்து, பத்து, எட்டு, ஏழு வயதுகளில் நான்கு ஆண் பிள்ளைகள் நாற்பது வயதில் கோணார். இதுதான் குடும்பம்.

சுத்துப்பட்ட ஏழெட்டு கிராமங்களில் ஒரு அப்பழுக்கின்றி நடந்து திரும்பிச் செல்வார் கோணார். நல்ல நடத்தை, நேர்மை, மட்டு மரியாதைகளால்; அவருக்குக் கிராமங்களில் நல்ல மதிப்பு.

அவர் மனைவி இறப்பு என்பதால் சமையலுக்கு….அந்த பத்து வயத அக்காள் பெண். அவளை வளர்த்து….பெரிய பையனுக்குத் திருமணம் முடித்து மருமகளாக்கிக் கொள்வதாய்த் திட்டம், ஏற்பாடு, பேச்சு.

எங்கள் வீட்டு மாட்டுக் கொட்டைகையில் குடி இருந்து பிழைப்பு நடத்திச் செல்வார்கள். எல்லாருமே யோக்கியமாக நடந்தார்கள்.

நாலாவது வருடம். பெரிய பையன் கோபாலைக் காணோம். வரவில்லை.

‘‘ஏன் ?’’ அப்பா கேட்டார்.

‘‘அவன் திருடிட்டு செயிலுக்குப் போய்ட்டான்ய்யா.’’ சுற்றும் தயக்கமில்லாமல் சொன்னார்.

அப்பா, எனக்கு அதிர்ச்சி.

‘‘என் புள்ளையே இல்லேன்னு தொலைச்சி தலை முழுகிட்டேன்.’’ வெறுப்புடன் சொன்னார்.

‘‘………………’’

‘‘பய புள்ளைக்குச் சேர்மானம் சரி இல்லேய்யா. அதான் இந்த திருட்டு. ஒரு வருசம் தீட்டிப்புட்டாங்க. என்னால ஊர்ல தலை நிமிர்ந்து நடக்க முடியலை. என்னதான் புள்ளை இல்லேன்னு தொலைச்சி தலை முழுகினாலும் இந்த நாயால பெரிய அவமானம்.’’ உடலும் உள்ளமும் குறுக தலை குனிந்தார்.

என்ன சொல்ல…?

கோணார் ரொம்ப நேர்மையானவர். திருட்டு, பொய், பித்தலாட்டம் இல்லை. பிடிக்காது! அப்படிப்பட்டவருக்கு….மகனின் செய்கை பெரிய மான அவமானம், இடி, அடி. முடிவும் சரி.

ஆனால் இப்போது…?….

பையன் திருந்தி வந்திருக்கான். மன்னித்து ஏற்றுக் கொள்ளவில்லை யென்றால் வெறுப்பு, கோபம், கடுப்பு… பெரிய திருடன், கொலையாளி ஆக வாய்ப்புண்டு. மன்னித்து மறந்தால்;..திருந்த வாய்ப்புண்டு. எல்லா குற்றங்களுமே திருந்தினால் மன்னிக்கப்படவேண்டியவைகள்தான். – நினைத்துக் கொண்டே நடந்தேன்.

ஆற்றங்கரை ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார் கோணார். தூரத்து வயல்காட்டில் ஆடுகள் கூட்டம்…கிடையாக மேய்ந்து கொண்டிருந்தது. மகன்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

நூன் நெருங்கியதும்… ‘‘வாங்க’’ எழுந்தார்.

‘‘இருக்கட்டும் கோணார். நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன். ஒரு சின்ன விசயம்.’’ அமர்ந்தேன்.

‘‘சொல்லுங்க ?’’

‘‘உங்க பெரிய புள்ள திரும்பி வந்தா ஏத்துப்பீங்களா ?’’

‘‘அந்த பேச்சு வேணாம் சாமி. வேற பேச்சு பேசலாம்…’’ சட்டென்று அவர் முகம் மாறி வெறுப்பில் இறுகியது.

‘‘என்னய்யா இப்படி பேசுறீங்க ? மன்னிக்கிறது மறக்கிறது மனித குணம்தானே..!.’’

‘‘சரிதான்ய்யா. ஆனா அவனை நான் மன்னிக்கிறதா இல்லே. அவனுக்கு என்ன குறை வைச்சேன். எல்லா புள்ளைகளையும் போலத்தான் அவனையும் நேசம், பாசமா வளர்த்தேன். இன்னும் சொல்லப் போனா தலைப் புள்ளன்னு அவனுக்குத்தான் அதிக செல்லம். இந்த பயப்புள்ளைங்களாலதானே நான் யார், எப்படி வற்புருத்தியும் ரெண்டாம் கலியாணம் செய்துக்கலை. அதை நெனைச்சுப் பார்த்தா இவனுக்குத் திருட கை நீண்டிருக்குமா ?’’

‘‘சரிங்க பழசு பேசினா சரி வராது. பையன் திருந்தி வந்திருக்கான் மன்னிச்சு ஏத்துக்கோங்க.’’

‘‘இந்த ஒரு விசயத்துல உங்களுக்கு வருத்தம் வேணாம் ஐயா. என்னை மன்னிச்சுக்கோங்க.’’

‘‘கோணாரே ! இப்படி ஒரேயடியாய் பையனை வெறுத்து ஒதுக்கினா….நாளைக்கு அவன் பயங்கரமானவனாய் மாற வாய்ப்புண்டு…’’

‘‘மாறட்டும்.!’’

‘‘மனுசன் அப்படி மாறி மிருகமாவதைவிட… திருந்தி வாழ வாய்ப்புக் கொடுக்கலாமில்லியா ?’’

‘‘ஐயா! என் மனசைக் கலைக்காதீங்க.’’

‘‘இது முரட்டுப் பிடிவாதம் இல்லியா ?‘‘

‘‘ஆமாம் ! ஏன் ?..மனக்கண்ணாடி ஒடைஞ்சு போச்சு. ஒட்ட வைச்சும் பிரயோசனமில்லே. ஒட்டினாலும் ஒட்டாது. அந்த நாயைத் தொரத்துங்க. தங்கி இங்கேயும் எங்காவது கையை வைச்சா நான் தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழி இல்லே. என்னைப் பொறுத்தவரைக்கும் அவன் செத்துட்டான். பொணத்தைச் சுடுகாட்டுல பொதைச்சாச்சு. விடுங்க.’’ எழுந்து விடுவிடுவென்று நடந்தார்.

இனி பேசி பலனில்லை. தெளிவாய் இருக்கிறார்.

தொய்வுடன் திரும்பினேன். போர் செட் கொட்டகையில் படுத்திருந்த கோபாலுக்கு என் தொய்வு நடை தோல்வியைச் சொல்லி இருக்கும் போல.

‘‘என்னய்யா ?’’ எழுந்து தழைவாய்க் கேட்டான்.

‘‘மன்னிச்சுக்கோ’’ என்றேன்.

‘‘இதுக்கு என்னத்துக்கைய்யா மன்னாப்பு ? அவருக்குப் பொறந்த புள்ள நான். அவருக்கு என்ன மான ரோசம் இருக்கோ அது எனக்கும் இருக்கு. சேர்மானத்தால…ஏதோ கொஞ்சம் புத்தி பிசகி…தவறிட்டேன் என்பதற்காக நான் ஒரேயடியாய்க் கெட்டவனில்லே. நல்லவனா வாழ்ந்து அவர் மொகத்துல கரியைப் பூசலை… நான் அவருக்குப் பொறந்தவன் இல்லே. இது சத்தியம் !!’’சொல்லி வேகமாக சென்றான்.

கோபாலின் கோபம் ரோசம்… என்னை அசத்த…எனக்குள் மகிழ்ச்சிப் பிறந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *