“என்னடா பரீட்சை எழுதியிருக்கே? எல்லாத்திலேயும் ஒண்ணு, ரெண்டு மார்க் குறைவா வாங்கியிருக்கே?”
இரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷிடம் எரிந்து விழுந்தாள் வகுப்பு ஆசிரியை.
“இல்லே… மிஸ்.. நல்லாத்தான் எழுதினேன்…”
“என்னத்த கிழிச்சே… நல்லா படிச்சாத்தானே…? ஃபர்ஸ்ட் ரேங்க் வரணும்னு சொல்லியிருக்கேன் இல்லே.. எப்பவும் செகண்ட் ரேங்கிலேயே இருக்கே…?”
தலையில் ஒரு குட்டு வைத்தாள்.
“ஸாரி மிஸ். அடுத்த தடவை ஃபர்ஸ்ட் ரேங்க் வந்திடறேன் மிஸ்…’
வீட்டிற்கு திரும்பிய தினேஷ், அம்மாவிடம், “என்னம்மா மிஸ் எப்ப பார்த்தாலும், நான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கலேன்னு திட்டிகிட்டே கடுப்பேத்திக்கிட்டிருக்காங்க…? அவங்கள பார்க்கவே பிடிக்கலே…!”
“அப்படிச் சொல்லக்கூடாது கண்ணு…டீச்சரெல்லாம் கடவுளை விட முன்னாடி உள்ளவங்க…”
“என்னம்மா சொல்லறே?’
“ஆமாம்பா… மாதா, பிதா, குரு, தெய்வம்…கேட்டிருக்கேயில்லே… முதல்லே மாதா..அம்மா, இரண்டாவது பிதா… அப்பா, மூணாவது குரு… டீச்சர், அப்புறம் நாலாவதுதான் தெய்வம்… கடவுள்…”
“அப்ப மிஸ்ஸே… மூணாவது ரேங்க்தானா? அப்ப எதுக்கு அவங்களுக்கு மேலே… ரெண்டாவது ரேங்க்லே இருக்கிற என்னை திட்டறாங்க..?”
பதில் சொல்லத் தெரியாது விழித்தாள் அவனது அம்மா.