ரெளத்திரம் பழகு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 3,146 
 
 

மருத்துவ மனையில் தேவி கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. தூக்கமுமில்லாமல் விழிப்புமில்லாமல் ஒரு நிர்மலமான புன்னகையில் படுத்திருந்தாள்.

தீபக் மருத்துவ மனைக்குள் வந்த போது, “டாக்டர். உங்களைப்பார்க்க வேண்டுமெனக் கூப்பிடுகிறார்” என்றாள் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த வெண்ணாடை பெண்மணி.

“வாருங்கள் தீபக். எப்படியிருக்கிறீர்கள்” என்றார் டாக்டர் அறை உள்ளே நுழைந்த தீபக்கிடம்.

“காலை வணக்கம் டாக்டர். நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்றான்

“மகிழ்ச்சி. தேவி ஓரளவு தேறி வருகிறாள். அவளை நாம் ஐ.சி.யு -விலிருந்து சாதாரண அறைக்கு மாற்றி விடலாம் என்று நினைக்கிறேன்.” என்று அவர் ஆரம்பிக்க, தீபக் ஏதோ சொல்ல முயல,”கவலைப்படாதீங்க. அங்கேயுள்ள எல்லா வசதிகள் எல்லாம் இங்கே இருக்கும்” என்றார்.

“அது நல்லா தெரியும். இப்பவே அவங்களை எல்லாரும் பார்க்கிறதுக்கு வரணும்ணு துடிச்சிக்கிட்டிருக்காங்க. ஒரு தொழிற்சாலைக்கு இயக்குனர் (டைரக்டர்).. திடீர்னு மயக்கம் போட்டுவிழுந்தவுடனே… பலரும் பலவிதமா பேச ஆரம்பிச்சிட்டாங்க. நிறைய பேர் பார்க்கணும்ணு துடிச்சிக்கிட்டிருக்காங்க..அதனாலே அவங்க கொஞ்சம் நாளைக்கு அங்கேயே இருக்கிறது நல்லதுண்ணு அவங்கம்மா நினைக்கிறாங்க”

“அவங்க அம்மா நினைக்கிறாங்களா? இல்லை.. உங்கள் அபிப்பிராயமா?”

“டாக்டர். நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி”

”சரி. அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது நீங்கள் அவர்களை பார்க்கவோ பேசவோ முயல்வது நல்லதல்ல..”

“பரவாயில்லை டாக்டர். உங்களிடம் சில செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்” என்றான் தீபக்

டாக்டரின் அனுமதியோடு தண்ணீர் எடுத்து குடித்துக் கொண்டே..

“என்ன மாதிரிச் செய்திகள் தீபக்”…?

“இவர்களுடைய இந்த தொழிற்சாலையில் எத்தனை ஆண்டுகளாக மருத்துவ இயக்குனராக (மெடிக்கல் டைரக்டர்) பணி புரிகிறீர்கள்?”

”நான். என் மருத்துவமனையையே கவனிக்க முடிவதில்லை தேவியின் அப்பா எனக்கு உயிர் நண்பன். அவன் கண்டிப்பாக நீதான் என்றான். சரி என்று ஆரம்பித்து ஏரக்குறைய இருபத்திரெண்டு ஆண்டுகள் கடந்து விட்டது.”

“தேவி இவ்வளவு சாந்தமாக இருக்கிறார்களே.. எப்படி முடிகிறது…யார் இல்லை என்று வந்தாலும் அள்ளிக்கொடுப்பது.. தவறு செய்பவர்களையும் அதிகம் அதட்டாமல்…ஒரு கம்பெனியின் டைரக்டர் எவ்வளவு கம்பீரமாக.. எவ்வளவு கறாராக இருக்க வேண்டும். ஏன் இவ்வளவு சாந்த சொரூபியாக..” என்று தீபக் முடிப்பதற்குள் டாக்டர் விழுந்து விழுந்து சிரித்தார்.

“என்ன டாக்டர். நான் என்ன ‘ஜோக்கா அடிக்கிறேன். இப்படி சிரிக்கிறீர்கள்”? என்றான் தீபக்.

“சிரிக்காமல் என்னப்பா செய்ய முடியும்.இவளுடைய கோபத்தினாலே தான் இவ அப்பனே செத்துப்போனான்” என்றார் டாக்டர்.

“என்னது?…கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது…தேவி கோபக்காரியா…இந்த நான்கு ஆண்டில் ஒருமுறை கூட அவர்கள் கோபப்ப்ட்டு நான் பார்த்ததேயில்லை…”

”ஆம். அவள் அப்பா இறந்து போனதிலிருந்து ரொம்பவே மாறிப்போனாள்.”

“கொஞ்சம் விவரமாகச் சொல்ல முடியுமா டாக்டர்”

“சரி… என்ன குடிக்கிறீர்கள்… டீயா… காபியா?” என்றார் டாக்டர்.

“தேவி கோபக்காரி என்பது கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது. டீ… காபியெல்லாம் அப்புறம்..சொல்லுங்க டாக்டர். எப்படி மாறினார்கள்?”

”ம்…” என்று பெருமூச்சு விட்ட டாக்டர், “தேவி பள்ளியில் படிக்கும் போதே அடிக்கடி தொழிற்சாலைக்கு வருவதுண்டு. நீ படிக்கிற பொண்ணு.. பேக்டரிக்கு ஏன் அடிக்கடி வருகிறாய் என்றால் எங்க அப்பாவுடைய பேக்டரிக்கு நான் வராமல் வேற எங்க வீட்டு நாயா வரும் என்று சீறுவாள். ஏதாவது பேக்டரி ஒர்க்கர்ஸ் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் கை நீட்டி அடிப்பாள். சும்மா வேலைய விட்டுத்தூக்கு என்பாள். அந்த நேரத்திலே அங்கே யூனியன் வேற இருந்தது.

ஒரு நாள் மெசின் ஓடிக்கிட்டேயிருக்கும்போது ஒரு லேபர் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான். இவள் வந்து ஓங்கிச் சமுண்டி(காலால் மிதித்து) விட்டு அவன் எழுந்ததும் ஓங்கிக்கன்னத்தில் அறைந்திருக்கிறாள். யூனியன் தலைவர் மன்னிப்புக்கேட்கச் சொன்னதற்கு “ஒரு சாதாரண வேலைக்காரன் அவன் ஒழுங்காக வேலை செய்யாமல் இருந்ததற்கு தான் அடித்தேன். மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” என்று சொல்லிவிட்டாள்.

இவளுடைய அப்பா எவ்வளவு சொல்லியும் இவள் கேட்கவேயில்லை. யூனியனிலும் மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ள.. ஒரு ஆயா சூடாக டீ கொண்டு வரவில்லை என்று அவள் முகத்திலேயே தூக்கி ஊற்றியிருக்கிறாள். ஒழுங்காக பெருக்கவில்லை என்பதற்காக ஸ்வீப்பரை பாத்ரூமில் வைத்து அடித்திருக்கிறாள்.

அடுத்த நாள் ஒரு ஒர்க்கர் சரியாக வரவில்லை என்று அவன் காலை வாரி விட.. அவன் தலையில் அடிபட்டு, அவன் இவளை திரும்பி அடிக்க கையை ஒங்க..இவள் கீழே கிடந்த சங்கிலியை எடுத்து இரத்தம் வரும்வரை “என்மேலயே கையை ஓங்குகிறாயா?” என்று சொல்லி சொல்லி அடித்திருக்கிறாள்.

அவன் மயங்கி விழ, மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப் பட… திரும்பவும் யூனியனிலும் பிரச்சினை பூதாகராமாக உருவெடுக்க…

“நான் பொண்ணுண்ணு பார்க்காமல் கைய ஓங்கினான். அதான் கீழே கிடந்த சங்கிலியை எடுத்து அடித்தேன்” என்று அவள் போலீசில் புகார் கொடுக்க…யூனியன் தலைவருக்கே பணத்தைக் கொடுத்து ஒரு வழியா பிரச்சினை தீர்ந்தது”

“ஏயப்பா… அப்படிப்பட்ட பொண்ணா இவங்க…?” ஆச்சரியாமாகக் கேட்டான்.

“ம்…அவள் என்னென்ன கூத்து பண்ணிளாள் தெரியுமா? யாரையும் மதிக்காமல் எடுத்தெரிஞ்சி பேசுறது…யார் என்றாலும்.. அவங்க அப்பாவைக் கூட மதிக்கிறது கிடையாது, போகபோக அவளை யாருமே கட்டுப்படுத்த முடியவில்லை”

தீபக், “அது சரி டாக்டர். அவங்க அப்பா இறந்தது கூட…” என்று கை காட்டி விட்டு, உள்ளே வந்த வார்டு பாயிடம், “துரை.ரெண்டு சாயா வாங்கிட்டு வரச்சொல்லு” என்றார்.

அவனும் ”சரி டாக்டர்” என்று கிளம்பினான்.

”ம்… தேவிக்கு மருந்து கொடுக்க சொல்ல வேண்டும். ஒரு நிமிடம்” என்று சொல்லி விட்டு, “நர்ஸ் சீதாவை வரச்சொல்” என்றார் பெல்லடித்தவுடன் வந்த கம்பவுண்டரிடம்.

“எஸ் டாக்டர்” என்றவாறூ உள்ளே வந்தாள் நர்ஸ் சீதா.

“தேவிக்கு இப்போ எப்படி இருக்கு.?” என்றார்

“ப்ரவாயில்லை டாக்டர்.திரும்பவும் சலைன் போட்டிருக்கு” என்றாள்.

“சரி. நான் இதில் குறிப்பிட்டிருக்கும் மருந்துகளை கொடு” என்று மருந்து எழுதியிருந்த பேப்பரைக் கொடுத்தார்.

அவள் சென்றபின் சாயா வர, இருவரும் டீ எடுத்துக்கொள்ள, டாக்டர் தொடர்ந்தார். “தீபக். இது நீ தெரிந்து கொளவதற்காகத் தான் சொல்கிறேன். வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார். அவனும் தலையாட்ட, டாக்டர்,” ஒரு நாள் அவளுடைய அப்பா எங்கோ வெளியூர் போயிருக்க, நான் கூட ஒரு விசிட்டிங்கிற்காக தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். அங்கே, யூனியன் லீடர் ராமு, ஏதோ ஒரு விசயத்தை யூனியனிலும் பிரச்சினையாக்கப் போகிறேன் என்று கத்திக்கொண்டிருந்தான். அவள் மேசையிலிருந்த பேப்பர் வெயிட் உருண்டகல்லை எடுத்து கோபத்தில் வீச, அவன் தலையில் பட்டு…. “

“என்னாச்சு டாக்டர்?” என்றான் ஆர்வமாக..

“யூனியன் லீடர் ராமு குளோஸ். ஆமா.. செத்துப் போனான். போலீஸ் யாரையெல்லாமோ விரட்ட… தேவியோட அப்பா பணம் கொடுத்து எல்லாரையுமே சரி பண்ணினார். ஆனால் நெஞ்சு வலி வந்து இறந்து போனார்.”

டாக்டர் கண்களைத்துடைத்துக் கொண்டு “என் நல்ல நண்பனை இழந்து விட்டேன்” என்றார்.

அதன் பிறகு தேவியே முழுக்க பொறுப்பெடுத்துக் கொண்டாள். அப்புறமா நான் என்ன சொன்னாலும் கேட்டாள். அதான் பார்க்கிறீர்களே… ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு போன்ஸ்… வேலைக்காரர்களுக்கு தனி வீடு, இன்சூரன்ஸ், பிள்ளைகளுக்கு இலவசப் படிப்பு… என்று எப்படியோ மாறிப் போய் விட்டாள்”

“அவங்கப்பா இறந்து போனது அவங்களை மாத்தியிருக்கலாமில்லையா” என்றான்.

“இருக்கலாம்” என்று டாக்டர் சொன்னபோது, “டாக்டர்.தேவி உங்க இரண்டு பேரிடமும் பேச வேண்டுமாம்” என்றாவாறு நர்ஸ் உள்ளே வந்தாள்

“அவள் எழும்பியாச்சா…? வெரிகுட். வாங்க தீபக் போய் பார்க்கலாம்” என்றவாறு முன்னே நடக்க தீபக் பின் தொடர்ந்தான்.

எழும்பி அமர்ந்திருந்த தேவி, “ஹாய். தீபக்.. டாக்டர்.. என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப்போறீங்க…?” என்றாள்.

“மெதுவாக பார்க்கலாம்?” என்ற டாக்டர் “தீபக் ஏதோ கேட்க வேண்டுமாம்” என்றார்.

“என்ன தீபக். என்ன விசயம்?” சிரித்துகொண்டே கேட்டாள்

“உங்க அப்பா இறந்ததினாலேயா இப்படி மாறி விட்டீர்கள்?” என்றான் தீபக்.

தேவி டாக்டரைத் திரும்பிப்பார்க்க… “அவனுக்கு எல்லாம் தெரியும்” என்று தலையாட்டினார்.

“அது அப்படியில்லை தீபக். அந்த யூனியன் லீடர் ராமு இறந்த பிறகு அவர்கள் வீட்டிற்கு இறுதி யாத்திரைக்கு போயிருந்தேன். அவர்கள் வாழ்க்கை நிலை… அந்த அம்மா.. அவருடைய மனைவி ‘இனி என்ன செய்யப் போகிறேன்’ என்று கத்திய கதறல்..சரி…. அன்றோடு என் கோபம் பிடிவாதமெல்லாம் போய் விட்டது” என்றாள்.

“அப்படீன்னா… அந்தச் சூழ் நிலையைப் பார்த்து நீங்க ஒரு பெண் புத்தனாகிட்டீங்க” என்றான்.

“அப்படியும் இருக்கலாம். ஆமாம். தொழிற்சாலை எப்படி நடக்கிறது?’ என்றாள்.

“நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். நான் மற்ற நோயாளிகளை பார்க்கிறேன்” என்று நடந்தார் டாக்டர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *