ரெபேக்கா வீட்டுக்கு நான் போகிறேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 9,676 
 
 

அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக அவர் அப்படியேதான் இருந்தார்.

அவர் வேலைசெய்த தொழிற்சாலையில் ஆட்குறைப்புச் செய்தபின்பு வேலை இழந்தோருக்கான உதவிப்பணத்தைப்பெற்றுக்கொண்டு புதிய வேலைக்கு மார்க் முயற்சிப்பதை நாமறிவோம். எப்போதுமே அவர் முகத்தில் குறும்பும் புன்சிரிப்பும் கொப்பளிக்கும். அவரின் மனைவி ரெபேக்காவும் ஒர் இனிய பெண்தான். அவ வேலைக்குப் போனபின்பு மார்க் தனது தோட்டத்தில் மிகவும் உற்சாகமாக வேலைசெய்தபடி காணப்படுவார். அப்படி இல்லாவிடின் வீட்டுத்திருத்தவேலை, குளிர்காலத் தேவைக்காக மரக்குத்திகளை வெட்டுவது என ஏதாவது செய்தபடி இருப்பவர், இப்படி அவர் இருப்பதைப்பார்க்க எமக்கு ஆச்சரியமாக இருந்தது.

இங்கு வந்த புதிதில் ஜேர்மன் மொழியும் பேசத்தெரியாத நேரம் ஆங்கிலமும் ஜேர்மனும் கலந்தபடி பேசிக்கொண்டு வந்து தம்மை அறிமுகப்படுத்திய நாளிலிருந்தே அத்தம்பதிகளின் நட்பு எமக்கு மிகவும் மனமகிழ்வைத்தந்தது பற்றியும் நானிங்கு குறிப்பிடவேண்டும். சிறுவயதுக்குறும்புகள், இளமைக்காலம், கலாச்சாரம், அரசியல் என எத்தனையோவிடயங்கள் பற்றி ஓய்வுநேரத்தில் பேசத்தொடங்கினால் சிலமணிநேரங்கள் ஓடிவிடும். என்னதான் மொழி, கலாச்சாரம் வேறுபட்டாலும் பல மனித உணர்வுகள் பல ஒன்றுதானே! எனது கணவர் பொறுக்கமுடியாமல் மார்க்கைக் கூப்பிட்டார்.”என்ன மார்க் ஏனிப்படி இருக்கிறீர்கள். சுகமில்லையா? ஓரு அசட்டுச்சிரிப்புத்தான் அவரிடமிருந்து பதிலாக வந்தது. “வேலைகிடைக்கவில்லை என்று கவலையா? என்று மீண்டும் கேட்க எதுவுமே பேசாமல் மார்க் எழும்பி எமது வீட்டிற்கு வந்தார். மெதுவாகத் தனக்குத்தானே பேசுவதுபோல “எனது மணவாழ்வின் ஆயுள் 10 வருடங்கள்தான்” என முணுமுணுத்தார்.

“என்னை விட்டுவிட்டு றெபேக்கா போகப்போகிறா… ” சிலநொடிகள் தலையைக்குனிந்தபடி இருந்தார். பின்பு தொடர்ந்து. அவ தன்னுடன் வேலைசெய்யும் ஸ்டெபான் என்பவரைக் காதலிக்கிறா அவருடன் சென்று வாழவிரும்புகிறா” என்றவர் பொங்கிவரும் கண்ணீரை அடக்க மிகவும் முயற்சி செய்தார்.

நாங்கள் ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டோம். பின்பு எனது கணவர் மெதுவாகக்கேட்டார். “அப்படி முடிவே எடுத்துவிட்டாவா றெபேக்கா. நம்பவேமுடியவில்லையே!”

“ஆமாம் கடந்த சில தினங்களாக இதுபற்றி நானும் றெபேக்காவும் நிறையப் பேசிவிட்டோம். அவ தனது முடிவில் உறுதியாக இருக்கின்றா”

“எப்படி இந்த அதிர்ச்சியைத் தாங்கினீர்கள் மார்க்?”

“என்ன செய்வது எமக்கு விரும்பிய எத்தனையோ விடயங்கள் வாழ்வில் நடப்பதுபோல் விரும்பாதவையும் நடக்கின்றனவே. கசப்பானவையானாலும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.”

மார்க் புறப்பட்டுச் சென்ற பின்பும் எம்மைக் கவ்விய சோகத்தில் இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளிவர முடியவில்லை. மறுநாட்காலை கடையில் வைத்து றெபேக்காவைச் சந்திக்கவேண்டிவந்தது. சாதாரண சுகநலன்கள் விசாரித்த பின்னர் “இவ்வூரைவிட்டு நான் விரைவில் சென்று விடுவேன். மார்க் சொல்லியிருப்பாரே” என றெபேக்காவே விடயத்தை ஆரம்பித்தா “ம்..ம்..” என்று சொல்வதைத்தவிர வேறெதும் பேச எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ஏனோ றெபேக்காவின் முகத்திலும் சிறுவாட்டம் இருப்பது போலத்தான் எனக்குத் தோன்றியது.

பின்பு காரியங்கள் மளமளவென நடந்தன. அவர்கள் இருவருமே வழக்கறிஞரிடம், மற்றும் பல அலுவலகங்களிற்குத் தமது விவாகரத்துத் தொடர்பாகவும் சொத்துக்களைப் பிரிப்பது எனப் பலவிடயங்களாகப் போய்வந்து கொண்டிருந்தனர். சண்டை, கூச்சல் எதுவுமில்லாதது மட்டுமில்லாமல் இருவரும் காரில் ஒன்றாகப் போய்வருவதே எமக்கு வியப்பான விடயம்தானே. றெபேக்கா தான் வேலைசெய்யும் இடத்துக்குக்கிட்ட ஒரு அப்பாற்மன்ட் எடுத்திருப்பதாகவும் விரைவில் செல்லவிருப்பதாகவும் கூறினா. ஒருநாள் தனது பொருட்களுடன் அங்கு சென்றுவிட்டா. மார்க்கின்முகம் சோபையிழந்து காணப்பட்டாலும் மீண்டும் அவர் ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு தோட்டவேலைகளை ஆரம்பித்தார். பின்புவந்த வாரங்களில் காலையில் மார்க் எங்கோ புறப்பட்டுப்போவதும் மாலையில் வீட்டுக்கு வருவதையும், பல நாட்களாகப் பகல்வேளையில் அவர் வீட்டில் நிற்காததையும் நாம் அவதானித்தோம். தோட்டத்திலும் அவரைப்பார்க்க முடியவில்லை. எனது கணவர் என்னிடம் கூறினார் “மார்க்கிற்கு வேலை கிடைத்துவிட்டது போலிருக்கப்பா..ஏதோ கடவுள் அந்தாளை ஆகலும் சோதிக்காமல் இந்ததளவிலாவது ஒரு ஆறுதலைக்கொடுத்தாரே”.

வாரஇறுதியில் மார்க் எம்மிடம் வந்தார். “புது வேலை எப்படிப்போகுது மார்க்?” “இதெங்கை அவ்வளவு சுலபமாகக் கிடைக்கிறது…..ஆ…நான் வீட்டிலை நிற்காததாலை புதிய வேலைக்கென நினைத்துவிட்டீர்களா?”

“ஆம்”

“இல்லை.நான் தினமும் றெபேக்கா வீட்டிற்குப்போகிறேன்.”

“என்ன மார்க் சொல்லுகிறீர்கள்?”என ஆச்சரியத்துடன் கேட்டோம்.

“ஆமாம். அவர்கள் எடுத்த அப்பார்ட்மன்றில் பல வேலைகள் செய்யவேண்டியுள்ளன. அவர்கள் இருவராலும் இப்போது லீவு எடுக்க முடியாததால் நான்போய் அவற்றைச் செய்கிறன். நானும் இந்த வேலைகள் ஓரளவு நன்றாகச் செய்வன்தானே. இங்கும் நான் சும்மாதானே இருக்கிறன். இப்போ நன்றாகப் பொழுதுபோகிறது”எனச் சிரித்தபடி கூறினார்.

இப்படியும் ஒரு மனிதன் இருப்பானோ என்று நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு மெதுவாக நான் கேட்டேன்.
“எப்படி மார்க் உங்களால் இப்படிச் செய்யமுடிகிறது. உங்களை விட்டுவிட்டு இன்னொருவருடன் சென்ற உங்கள் மனைவிமேல் ஆத்திரமும் வெறுப்பும் கொப்பளிக்கவில்லையா?” “ஆரம்பத்தில் ஏற்பட்டதுதான். ஆனால் பின்பு றெபேக்காவின் மேலுள்ள வெறுப்புக் குறைந்துவிட்டது. அடிப்படையில் அவ ஒரு மிக நல்ல பெண். உயர்ந்த ரசனைகளும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர். என்னிலும் சிலபிழைகள் இருக்கின்றன. நடற்தது நடந்துவிட்டது. இனிநடக்கககூடியவற்றை நல்லதாக அமைப்போம்…”

“இந்த மனுசனுக்கு மண்டை பழுதாகிவிட்டது போலஇருக்கு. எந்தவிசரனாவது இப்படிப் போய்ச் செய்வானா?”

“இல்லை இந்தாள் ஒரு இளிச்சவாயனென்று றெபேக்காவிற்கு நல்லாவிளங்கியிட்டுது. ஓசியில இவரைச்சொல்லியே நல்லா வேலை வாங்கிறாள்.”

இது நாங்கள் எங்களுக்குள் தமிழில்க் கதைத்துக்கொண்டது.
மனதிலுள்ளதைத்தான் முகம் பலநேரங்களில் காட்டிவிடுகிறதே! எங்களைப் பார்த்தவாறு மார்க் கூறினார். உங்களால் இதை ஜீரணிக்க முடிவில்லையா? யாரோ முகம் தெரியாதவர்களுக்கே நாம் எவ்வளவு உதவிகள் செய்கிறோம் .நாமும் பெறுகிறோம். என்னுடன் 10 வருடத்துக்கும்மேலாக சுகதுக்கங்களில் ஒன்றாக இணைந்திருந்த ஓர் பெண்ணிற்கு ஒரு சிநேகிதி என்ற வகையிலாவது இதைச்செய்யுறதுதானே மனிதாபிமானம்” என்றபடி அவர் தன்னிலுள்ள சில தவறுகளையும் மனம்திறந்து கூறினார்.

பின்பு ஆறுதலாக யோசித்தபோதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. கணவன் மனைவி உறவையும் தனிப்பட்ட நட்பையும் இவர்கள் ஒன்றாகக் கலப்பதில்லை. மனைவியாக இருந்து பிரிந்தவள் என்றாலும் அவள் எதிரி அல்ல. இப்போதும் ஒரு சிநேகிதிதான். எவ்வளவு உயர்ந்த மனப்பக்குவமிது. தம்மிலுள்ள பலவீனங்களை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதே ஒரு உயர்ந்த பண்புதானே.

இங்கு கணவன் மனைவி பிரிவது மிக அதிகமாக நிகழ்வது. அதனால் முக்கியமாகப் பாதிக்கப்படும் குழந்தைகள் மனநிலை பிற்காலத்தில் அவர்களைச் சமூகவிரோதச் செயல்களைச் செய்யத்தூண்டி பாரதூரமான விளைவுகள் இதனால் ஏற்படுவதை ஆராய்சிகள் விளக்குகின்றன. நானிங்கு றெபேக்கா செய்தது சரியென்றோ மற்றும் கணவன் மனைவியின் புரிந்துகொள்ளாமை பற்றியோ பேசவரவில்லை. மார்க் தனது மனைவிமேல் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுக்களை அடுக்குவார் என எதிர்பார்த்த எமக்கு அவரின் அந்த உயரிய செயலிலுள்ள மனிதநேயமும், தான்நேசித்த பெண்ணிற்கு இன்றும் தனது உதவி தேவை என நினைத்து அதை முழுமனதுடன் செய்யும் அந்த விசாலமான மனப்பக்குவமும்தான் என்னை இவ்விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தூண்டியது.

– அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் – தமிழின் வெளியீடான புலம் சஞ்சிகையில் “முகத்தில் அறைவது குளிர் மட்டுந்தானா?” என்னும் தலைப்பில் கௌரி மகேஸ் அவர்களால் எழுதப்பட்ட சிறுகதை இது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *