அவனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை ‘வித் லவ் அனிதா’ என்று எழுதி கொடுத்துவிட்டு, “நான் இருக்க வேண்டிய இடத்துலே நீங்க இருக்கீங்க. ஆல் த பெஸ்ட்!” என்று விளையாட்டாக மணப்பெண்ணிடம் சொல்ல அப்போதே புயல் மையம் கொண்டுவிட்டது.
அம்மாவுக்கு அறிவே கிடையாது. கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வரும் மகனையும், மருமகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்கும்போது, “எம் பையனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு ஜாதகத்துலே இருக்கு. முதலாவதா நீ வந்திருக்கே, அடுத்தது யாரோ?” என்றாள். இது ஏதோ பெரிய ஜோக் மாதிரி சுற்றியிருந்த உறவு வட்டாரம் சிரிக்க, புதுப்பொண்டாட்டியின் முகம் ஒரு நொடி கடுகடுத்து, அடுத்த நொடியே சம்பிரதாயமாக சிரித்து வைத்ததை யார் கண்டார்களோ, இல்லையோ அவன் கண்டுகொண்டான்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அவன் தங்கையோ விவஸ்தைகெட்ட தனமாக, “ஆமாம் அண்ணி. இவனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு குடுகுடுப்பைகாரனுங்க கூட சொல்லியிருக்கானுங்க. பையன் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி. உஷாரா பார்த்துக்கங்க” என்றாள்.
மையம் கொண்ட புயல் வலுவடைந்து முதலிரவில் பலத்த காற்றோடு வீசியது!
முதன்முதலாக மனைவியோடு சினிமாவுக்கு போனான். “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிபேசக் கூடாதா?” என்று நாயகி நாயகனை திரையில் கொஞ்ச மெய்மறந்து படம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தலையில் ஒரு கொட்டு விழுந்தது.
“நான் பக்கத்துலே இருக்கும்போது அவளையே ஏன் முறைச்சிப் பாக்குறே? இங்கே பாரு.”
“எவளை? நான் யாரையும் பாக்கலையே?” அக்கம்பக்கத்தில் யாராவது கவனித்து விட்டார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கேட்டான்.
“அதான் ஸ்க்ரீன்லே அவளை மட்டுமே மொறைச்சி பார்த்துக்கிட்டிருக்கியே?”
வேறு வழியில்லாமல் படம் முடியும் வரை கதாநாயகி வந்தபோது தலையை குனிந்துகொண்டோ அல்லது புதுமனைவியை பார்த்தோ சமாளித்தான்.
படம் முடிந்து வீட்டுக்கு செல்லும்போதும் பிரச்சினை.
“ஹலோ! ஒழுங்கா வண்டியை ஓட்டு!”
“ஒழுங்காத்தானே ஓட்டுறேன்!”
”பின்னாடி நான் உட்கார்ந்துக்கிட்டிருக்கப்பவே முன்னாடி போற ப்ளாக் சாரி முதுகை முறைச்சி பாத்துக்கிட்டிருக்கே?”
“முன்னாடி போற வண்டியை பார்க்காம வண்டி ஓட்ட எனக்கு இன்னும் யாரும் சொல்லி கொடுக்கலை!”
“வண்டியை மட்டும் பாரு. வண்டி ஓட்டுற பொம்பளைங்களை ஏன் பார்க்குறே?”
அவனுக்கு புரிந்துவிட்டது. இனிமேல் தினம் தினம் கும்மாங்குத்து தான்.
வெள்ளிக்கிழமைகளில் அலுவலகத்தில் பூஜை போடப்பட்டு விபூதியும், ஏதோ கொஞ்சம் கதம்பப்பூவும் பிரசாதமாக அய்யர் தருவார். அய்யருக்கு தர்மசங்கடம் வரக்கூடாது என்பதற்காக அவர் தரும் ஒன்றிரண்டு பூவை பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்வான்.
அந்த வெள்ளிக்கிழமையும் அப்படித்தான், அய்யர் கொடுத்த பூவை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அதை மறந்தும் விட்டான். வீட்டுக்குப் போனதும் வழக்கம்போல Check-in-ல் மாட்டிக் கொண்டான். துரதிருஷ்டவசமாக அன்று அய்யர் கொடுத்தது ரெண்டு மூன்று மல்லிப்பூ என்பது தான் பிரச்சினைக்கு காரணம். ஆபிஸில் அய்யர் கொடுத்தது என்பதற்கு சர்ட்டிபிகேட் யார் தருவார்கள் என்று குழம்பிப் போனான்.
விடுமுறை நாட்களில் தனியே வெளியே செல்வதற்கு அவனுக்கு 144 உத்தரவு போடப்பட்டிருக்கிறது. வெளியே செல்வதென்றால் அவளோடு தான் செல்லவேண்டும். சினிமாவுக்கோ, கோயிலுக்கோ போனால் கூட அக்கம்பக்கம் இருக்கும் பெண்களை (ஆயாவாக இருந்தாலும் கூட) கலைக்கண்ணோடு கூட பார்த்து தொலைக்கக் கூடாது.
காலையில் அலுவலகத்துக்கு சென்றதிலிருந்து மதியம், சாயங்காலம் என்று குறிப்பிட்ட நேரங்களில் எந்த ஸ்பாட்டில் இருக்கிறான் என்ற ஸ்பாட் ரிப்போர்ட்டை தந்தாக வேண்டும். அக்கம்பக்கம் ஏதாவது பெண்குரல் போனில் அவளுக்கு கேட்டுவிட்டால் ‘கிழிஞ்சது கிருஷ்ணகிரி’. அலுவலகம் விட்டு கிளம்புவதற்கு முன்னால் ‘கிளம்பிட்டேன்’ என்றொரு மெசேஜ் தரவேண்டும். அவனைப் பொறுத்தவரை அவனுடைய செல்போன் ஒரு உளவுபார்க்கும் ஏஜெண்டாக தான் செயல்பட்டு வருகிறது.
சம்பவங்கள் ஏராளம், சொல்லிக்கொண்டே போனால் ஜெயமோகனின் மூவாயிரம் பக்க நாவல் அளவுக்கு எழுதவேண்டும். இப்போதும் கொடுமைகள் முன்பைவிட அதிகமாக தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.
– ஷூவில் பீச்மணல் ஏதாவது ஒட்டிக்கொண்டிருக்கிறதா?
– செல்போனில் டயல்டு கால்ஸ், ரிசீவ்டு கால்ஸ் ஏதாவது பெண் பெயரில் இருக்கிறதா? காண்டாக்ட்ஸில் புதியதாக எந்தப் பெயராவது சேர்க்கப்பட்டிருக்கிறதா?
– சட்டைப் பையில் மல்லிகைப்பூ போன்ற வஸ்துகள் ஏதேனும் மிச்சமிருக்கிறதா?
போன்ற வழக்கமான சோதனைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்துகொண்டிருக்கிறது. முருகன், கிருஷ்ணன், சிவன் உள்ளிட்ட கடவுள்கள் உட்பட நாட்டில் பல பேர் குறைந்தபட்சம் ரெண்டு பொண்டாட்டிகளோடு நிம்மதியாக இருக்க, இராமனைப் போல ஒரிஜினல் ஏகபத்தினி விரதனான நமது பயலுக்கு தான் சோதனைக்கு மேல் சோதனை. அனுபவஸ்தர்கள் யாராவது அவனை இந்த ஒரு சிக்கலில் இருந்து மட்டுமாவது காப்பாற்ற ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்களேன்!
– ஜூன் 2009