‘‘நானும் பத்து நாளா நீ செய்யறதை எல்லாம் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். கிராமத்திலிருந்து வந்த என் அம்மாவுக்கு சாப்பாட்டு விஷயத்துல உபசரணை பண்றியோ இல்லையோ… முன் கதை சுருக்கமெல்லாம் சொல்லி, ‘அந்த சீரியலைப் பாருங்க’… ‘இந்த சீரியலையும் பாருங்க’ன்னு ஆர்வத்தைக் கிளப்பி விடறே! செலவைப் பத்தி கவலைப்படாம அவங்களுக்கு தனியா ஒரு டி.வியும் வாங்கிக் கொடுத்து உட்கார வச்சுட்டியே..!’’ – மனைவி தங்கத்திடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் செல்வம்.
‘‘அதுக்குக் காரணம் இருக்குங்க!’’ – மர்மப் புன்னகையோடு விளக்கினாள் தங்கம்.
‘‘சீரியல் பக்கம் அவங்க சிந்தனை ரூட்டை மாத்தினதாலதான் என்கிட்ட சண்டை பிடிக்கவோ, மத்தவங்களைப் பத்திப் பேசவோ நேரம் இருக்கறதில்லை. நம்ம குடும்ப விஷயங்களைப் பேசுறதை விட்டுட்டு, சீரியல்ல வர்ற குடும்ப சமாச்சாரங்களைப் பத்தி அதிகம் கவலைப்பட ஆரம்பிச்சிட்டாங்க. அக்கம் பக்கத்து வீடுகளுக்குப் போனா அவங்க வம்பளக்குற மேட்டரும் சீரியல்தான். அதனால என் டென்ஷன் குறையுது. மாமியாரோட சண்டை இல்லாம இருக்கறதுக்காக நான் கொடுத்த விலைதாங்க அந்த புது டி.வி!’’ என்றாள் தங்கம்.
‘‘தங்கம்… நீ ஒரு திருமதி செல்வம்!’’ என்று டைமிங் புகழ்ச்சியை உதிர்த்துச் சென்றான் செல்வம்.
– 09 Apr 2012