கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 10,600 
 
 

(1985 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராவுஜி மெஸ்ஸுக்கு இனி நான் சாப்பிடப் போவதில்லை என்று நான் எடுத்த முடிவை இருளாண்டியாலும் வரதராஜனாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

கல்லூரி வாசலுக்கு நேர் எதிரில் ராவுஜி மெஸ். சாப்பாட்டுக் கென்று மதிய வெயிலில் வெந்து கொண்டு நடக்க வேண்டிய அவசியமில்லை. வகுப்பை விட்டு வெளியே வந்தால் தூங்கு மூஞ்சி மரநிழல், நிழலில் நனைந்து கொண்டே சரியாக மூணு நிமிஷம் நடந்தால் திருவையாறு மெயின் ரோடு. ரோட்டைக் கடக்க மூன்று விநாடி. ராவுஜி மெஸ்ஸில் காலை வைத்தால், தஞ்சாவூர் தாட் இலை விரித்துக்கொண்டு கிடக்கும் வருகிறவனை நோக்கி.

“இன்னாடா சுத்தக் கிறுக்குப் பயலா இருக்கியே…. வயிறு பசிச்ச மூணாவது நிமிஷத்துல இலைக்கு முன்னால் உக்காரலாம்… இந்த மெஸ்ஸை விட்டுட்டு எங்க போகலாங்கிறே… நாலு பர்லாங் தூரமாச்சும் நடக்கனுமே, வேறே மெஸ்ஸுக்கு” என்றான் இருளாண்டி.

நான் உறுதியாகத் தெரிவிக்க தெற்கலங்கத்தில் இருக்கிற பச்சை மாமி மெஸ்ஸுக்கு நாங்கள் மாற்றிக் கொண்டோம்.

ராவுஜி மெஸ் அப்படி ஒன்றும் மோசமில்லை. உட்காருகிற பந்திப் பாய் முதல், பரிமாறுகிற எவர்சில்வர் பாத்திரங்கள் வரை புத்தம்புதுசாய், குளித்துவிட்டு நிற்கிற குழந்தை மாதிரி பளிச் சென்றுதான் இருக்கும். தாராளமாய் விட்டு நறுக்கிய தலைவாழை இலைதான் போடுவார். உடல் சுத்தம் ஓம்புவதில், ராவுஜி ஒரு பூனை மாதிரி. எத்தனை சூடாக எடுத்துப் பரிமாறினாலும் எத்தனை பேருக்குப் பந்தி வைத்தாலும் வியர்வை வழியாத தேகி அவர். சட்டை அறியாத உடம்பு; முழங்கால் வரை இறக்கிக் கட்டிய கரைபோட்ட துண்டு; எப்பவும் நெற்றியில் துலங்கும் நாமம்; நிரந்தர மாகத் தங்கிவிட்ட ‘பாவ’ மற்ற சிரிப்பு, இவரே ராவுஜி. அனைத்துக் கும் மேலாக, எனக்குகந்த அசைவ மெஸ் அது. உள்ளங்கையும் விரல்களும் சேர்ந்தாற் போன்ற அகல அகலமான வஞ்சிர, மடவை மீன் வறுவலுக்கு ராவுஜியை விட்டால் தஞ்சைச் சீமையில்தான் வேறு நாதி ஏது? ஒருவில்லை மீனும், ஒரு துண்டு கறியும் இன்றி அது என்ன சோறு?

ராவுஜியிடம் இவை எல்லாம் எனக்குப் பிடித்துத்தான் இருந்தன. எனக்குப் பிடிக்காதவைகளும் அவரிடம் இருந்தன. இலைக்கு முன் உட்கார்ந்து காத்திருந்தால், ஆவி பறக்கும் பெரிய தாம்பாளச் சோற்றுக் குவியலுடன் அடுப்பங்கரையிலிருந்து வருகிற மனிதர், அப்படியே தட்டத்தை இலைமுன் சாய்த்து ஒரு வெட்டு வெட்டுவார். வெடி குண்டு வைத்துச் சாய்க்கப்பட்ட மண்மலை மாதிரி சோறு இலையின் நீள அகலத்துக்கு அப்படியே குவிந்து விடும். ராவுஜி சோற்றால் அடித்த மாதிரி ஆவி முகத்தில் அடிக்கும். அந்த ஆவி அடங்குவதற்குள், மூக்கு வைத்த குழம்புக் குண்டானைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவார். சாதத்தைத் தொட்டுக் கிளர்த்தி விடுவதற்குள் ஜலதாரை. கொடகொடவென்று குழம்பைக் கவிழ்த்து விட்டுப் போயே போய்விடுவார். இலையைவிட்டு எப்படியேனும் வழிந்தோடி விடுவது என்னும் தீர்மானத்தோடு ஓடுகிற குழம்பைப் பிடித்து நிறுத்துகிறபாடு, ஒரு பெரும் பாடு, ஒரு வகையாய்க் குழம்பைச் சமாளித்து முடிப்பதற்குள் இரண்டாம் முறை கூட்டுப் பொரியல் தூக்கு வந்துவிடும். நான் கூட்டு பொரியலைத் தொட்டே இருக்க மாட்டேன். ஆகவே தூக்கு என்னைக் கடந்துவிடும். சாமர்த்தியசாலிகள் பலர், இலைபோட்டுக் கூட்டு, பொரியல் பரி மாறப்பட்ட நிமிஷத்துக்கும், சாதம் கொட்டப்படும் நிமிஷத்துக்கும் இடைப்பட்ட நேரத்துக்குள் கூட்டுப் பொரியலை வெறும் வாயில் தின்று தீர்த்துவிட்டிருப்பார்கள்.

இவை என்னால் சகிக்க முடியாதவை. எனக்கு முகம் பார்த்துப் பரிமாற வேண்டும். காக்கைக்குச் சோறு படைக்கிற அளவில், முதலில் கொஞ்சம் சோறு. அப்புறம் அளவான குழம்பு. வழிந்து ஓடாத குழம்பு. நான் நிதானமாக சாப்பிட்டு முடித்தவுடன் மிகக் கொஞ்சம் போலச் சோறு. கட்டாயம் இலைக்குள்ளேயே நிற்கிற அளவில் ரசம். வேண்டும்போது கொஞ்சம் போலப் பொரியல் கூட்டு. எவ்வளவு அழகாக இருக்கும்?

“என்னடா இப்படி முட்டாள் தனமா பேசறே… ராவுஜி உனக்குப் பொண்டாட்டியா? உன் பக்கத்துல உக்கார்ந்து விசிறி வீசிக்கிட்டு. உன் சௌகர்யம் பாத்துச் சோறு போடட்டுமா என்று உபசரிக்க. அவர் நூறு பேத்தைக் கவனிக்க வேண்டாமா?” என்றான் இருளாண்டி.

“கட்டாதுதான்… நாம இடத்தை மாத்திக்குவோமே…”

பச்சை மாமி மெஸ்ஸில் சேர்ந்தோம். மாமிக்கு எப்படி அப்பெயர் வந்தது என்று எனக்குத் தெரியாது. நான் ஊகித்துக் கொண்டது இப்படி, மாமி எப்பவும் பச்சைச் சேலையே உடுத்திக் கொண்டிருந்தாள். பார்க்கும் போதெல்லாம் பச்சையாகவே காட்சி தருவதால் பச்சை மாமி ஆனாள் போலும். உணர்வுபூர்வமாக விரும்பி அந்த வண்ணத்தை அவள் தேர்ந்தெடுத்தாளா அல்லது எதேச்சையாக அப்படி அமைந்ததா என்று தெரியவில்லை. பச்சை மாமி என்கிற பெயர் வழக்கு ஏற்பட்டவுடன், வந்துவிட்ட பெயருக்கு ஏற்ப, அல்லது பெயரைக் காப்பாற்றிக் கொள்ளப் பச்சையையே தொடர்ந்து அணியத் தொடங்கினாள்.

மாமியின் நிறம் குடகு ஆரஞ்சு. வாய் வார்த்தை அதன் சுளை. மாமா, ஏதோ ஓர் ஓட்டலில் சரக்கு மாஸ்டராக இருந்து விட்டு, ‘அவசரமாகப் போய்விட்டார். மாமா இருக்கும் போதே வேண்டியவர்களுக்கு என்று ஆரம்பித்துச் சமைத்துப் போடுவது, மாமாவுக்குப் பிறகு அவளுக்குத் தொழிலாகிவிட்டது. ‘கோமளா’ என்று பனிரெண்டு வயசுப் பெண், தூரத்து உறவுக்காரப் பையன் இவர்களைக் கொண்டு சமாளித்துக் கொண்டு வந்தாள் மாமி.

ரேழியில் செருப்பை விடும் போதே, ‘வாங்கோ’ என்பாள் மாமி . அனேகமாக முதல் கஷ்டமராக நான் தான் இருப்பேன். ஆறு ஐம்பைத்தைந்துக்கு நான் அங்கு போய்விடுவேன். கூட்டத்தை, தவிர்க்கத்தான், பெருக்கிச் சுத்தப்படுத்திய கூடத்தில், தடுக்குப் போட்டு இலை போடுவாள் மாமி. நான் ஒருத்தன்தான். பெண்களின் காதோரச் சுருள் முடி மாதிரிச் சுருண்டு விழும் பச்சையும் மஞ்சளும் ஆன குருத்திலையை அவள் விரிக்கையில், பார்க்கவே அது எவ்வளவு அழகாய் இருக்கும்? அந்தப் பசிய இலைக்கு மேலே வட்ட வட்டமான இரண்டு இட்டலிகளைக் கற்பனை செய்து பாருங்கள். உணவு முதலில் கண்ணுக்கு அழகு சேர்க்க வேண்டும். பிறகுதான் உடலுக்கு. ஒரு இட்டிலிக்கு நான் பத்து நிமிஷம் கூட எடுத்துக் கொள்ளலாம். ம்ம் சீக்கிரம் என்று பந்தியில் எனக்குத் தார்க்குச்சி போட எவரும் இல்லை. சாவதானமாகச் சற்று தூரத்தில் உட்கார்ந்து கொண்டு மதியத்துக்கான காய்கறிகள் அரிந்து கொண்டிருப்பாள் மாமி. தலையில் ஈரம் உறிஞ்சத்துணி சுற்றியிருப்பாள். முதுகு நனைந்து கச்சென்று பிடித்துக் கொண்டிருக்கும்.

மனிதர்களைப் புரிந்துகொள்வதில் மாமி ஒரு சூரி. என் ருசியை அவள் நன்கு அறிவாள், ருசியை அறிவது மனிதர்களை அறிவது. பாம்புக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும். பாம்பு தவளையை விழுங்குவது மாதிரி மனிதன் சோற்றை விழுங்கக் கூடாது. அவசர அவசரமாக வழித்துப் போட்டுக் கொண்டு, அவசர அவசரமாகப் படுத்து, அவசர அவசரமாகப் பிள்ளை பெற்று, அவசர அவசரமாகச் செத்துப் போவதற்கு மனிதப் பிறவி எதற்கு?

“இதான் சரி, ஆற அமரச் சாப்பிடுங்கோ … தேவையானதைக் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கோ…” என்பாள் மாமி. ஒரு வேளை போகாமல் இருந்தால். “என்ன உடம்புக்கு?” என்று கரிசனமாக விசாரிப்பாள். அந்த விசாரிப்பில் வியாபார்த்தம் இருந்தது இல்லை. கஷாயம் மாதிரி ஒரு மிளகு ரஸம் வைத்துக் கொடுப்பாள், “சொல்லியிருந்தால் நாணாகிட்ட சாப்பாடு கொடுத்து அனுப்பி வைச்சிருப்பேனே” என்றும் கூறுவாள்.

‘என்னடா சாப்பாடு இது…. காரமும் இல்லே… உப்பும் இல்லே… ஏதோ பத்தியச் சோறு போடற மாதிரி’ என்று இருளாண்டி அலுத்துக் கொண்டான். உணவு என்பது அவனுக்குக் காரசாரம்.

“மாமி சாப்பாடு நல்லாயிருக்கோ இல்லையோ, மாமி நல்லா இருக்கா” என்றான் வரதராஜன். எனினும் இருளாண்டியும், வரதராஜனும் சங்கரன் மெஸ்ஸுக்கு மாற்றிக் கொண்டார்கள். நான் பச்சை மாமி மெஸ்ஸை ஆதரித்தேன்.

“இன்னைக்குச் சங்கரன் மெஸ்ஸுல சுறா புட்டு ச்ச்ச், என்னா பிரமாதமா இருந்தது தெரியுமா….? தெரியாமே தான் கேக்கறேன்…. எதுக்குடா அந்த வாழத் தண்டு மெஸ்ஸைக் கட்டிக்கிட்டு மாரடிக்கிறே…’ என்றான் இருளாண்டி.

என் மீதுள்ள பரிவினால் தான் கேட்டான்.

“அது இல்லப்பா விஷயம். பச்சை மாமி இவனுக்கு மட்டும் கண்ணடிச்சிருக்கா… இல்லேன்னா இவன் இப்படிப் படி படியாக வழிய வழிய அலைவானா?”

“கிழவியைச் சுத்தறான் ஒரு வயசுப் பையன்னா, மாணவ குலத்துக்கே இழுக்குடா வைத்தி. தஞ்சாவூர்க்காரன் சொல்றா மாதிரி யாராச்சும் கேட்டா வழிச்சுக்கிட்டு சிரிப்பாங்க.”

மாலை உலாவுக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். நேராக ராமையர் கிளப்பில் டிபன். அப்புறம் பஸ் ஸ்டாண்டு வாசலில் நின்று கல்லூரி விட்டு வரும் பெண்களைப் பராக் பார்த்தல். அப்புறம் ஏதாவது ஒரு சினிமா என்று திட்டமிட்டிருந்தோம்.

நான் தலைவாரிக் கொண்டிருந்தேன். வரதராஜன் ஜட்டியோடு உடம்புக்குப் பவுடர் போட்டுக் கொண்டிருந்தான். இருளாண்டி முகத்துக்கு லாக்டோ – காலமைன் பூசிக் கொண்டிருந்தான்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்க, நான்தான் போய்க் கதவைத் திறந்தேன். ஆச்சர்யம். மாமி நின்றிருந்தாள்.

‘வாங்க மாமி வாங்க… வாங்க” என்றேன். மாமி கையில் எண்ணெய்த்தூக்கு இருந்தது. வரதராஜன் ஒரு கணத்துக்குள் கைலியை எடுத்துச் சுற்றிக்கொண்டு நின்றான்.

“வாங்க மாமி…” என இருளாண்டியும் வரவேற்றான்.

“சும்மா இந்தப் பக்கம் செக்கடியிலே எண்ணெய் வாங்க வந்தேன்… அப்படியே இங்கதான் நீங்க எல்லாம் இருக்கேள்னு பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்…” என்று கண்ணால் அறையை சுற்றிப் பார்த்தாள். குவியல் குவியலாக அழுக்குச் சட்டைகள், பேண்ட்டுகள். அவிழ்த்து எறிந்த ஜட்டிகள், பனியன்கள், அப்படி அப்படியே பிடித்து எறிந்த சிகரெட் துண்டுகள், எங்களுக்கே எங்கள் அறை திடீரென்று ஆபாசமாகத் தோன்றியது. இருளாண்டி அவசரமாகக் கையில் கிடைத்த ஜட்டிகளை, துணிக் குவியலுக்குள் நுழைத்து மறைத்துக் கொண்டிருந்தான்.

‘உக்காருங்க மாமி. என் ஒற்றைக் கட்டிலின் மூலையைக் காட்டினேன். மாமி உட்கார்ந்து கொண்டாள். மாமி எப்போதும் பச்சை நூல் புடவைதான் அணிந்த ஞாபகம். இன்று மெல்லிய பச்சை நைலக்ஸ் அணிந்திருந்தாள். வெள்ளை ஜாக்கெட்டில், அந்த மினுங்கும் புடவையில் மாமி ஏதோ ஆராய்ச்சி மாணவி மாதிரி, அல்லது அலுவலக அதிகாரி மாதிரி காட்சியளித்தாள்.

வரதராஜன் ஸ்டவ்வைப் பற்ற வைக்கத் தீப்பெட்டியை எடுத்தான். மாமி கேட்டாள்.

“என்ன பண்ணப் போறே.”

“உங்களுக்கு டீ போடப் போறேன்.”

“வேண்டாமே…. நான் டீயே சாப்பிடறதில்லை.”

“காபி.”

“இப்ப வேணாம்.”

“நாங்க உங்க கையால சாப்பிடலாம்… நீங்க எங்க கையால சாப்பிடக் கூடாதா?”

மாமி பக்க வாட்டில் எனக்குத் தெரிய இருந்தாள். அவளுக்குச் சிங்கப்பல் இருப்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

“சரி கடுங்காப்பிப் போடு-”

என்னவோ யோசித்தபடி ஊதி ஊதிச் சாப்பிட்டாள்.

“வரட்டுமா…” என்று கிளம்பியவள், என்னைப் பார்த்து “ஒரு நிமிஷம் வரலாமா?” என்று முன்னால் நடந்தாள். மொட்டை மாடியில் வந்ததும், துணி காயப் போடும் கயிறைத் தூக்கிக் குனிந்து வெளியேறியபடி, “நாளைக்குத் தீபாவளியாச்சே…. ஊருக்கு போவலையா” என்றாள்.

“போகலை மாமி.”

“அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணப் போறாப்பலே.”

“தெரியல்லே… ஏதாவது பழம் கிழம் வாங்கிச் சமாளிக்க வேண்டியதுதான்.”

“கிழத்தை எதுக்குப் போய் வாங்கறது…. நாளைக்கு வழக்கம் போல மெஸ்ஸுக்கு வாங்கோ.”

“அப்போ லீவ் இல்லையா.”

“உங்களுக்கு மட்டும் மெஸ் எப்போதும் இருக்கும்” மாமி போய்விட்டாள். வரதராஜனும், இருளாண்டியும் அறையைப் பூட்டிக் கொண்டு வரும் வரை என்னை மறந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

அந்தத் தீபாவளி எனக்கு மாமி மெஸ்ஸில். ஊர் பட்டாசு வெடித்து புத்தாடை பூண்டுப் பலகாரம் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. காலையும் மதியமும் மாமி எனக்கு ஸ்பெஷலாகச் சமைத்துப் பரிமாறினாள். இலையில் போடப்பட்ட பாயசத்தில், முந்திரியோடு சிரத்தையும் மிதந்தது. உணவு, சாப்பிடுகிறவருக்கும். சமைத்தவருக்கும் இடையேயான சத்துள்ள பாஷை, சாயங்காலம் போயிருந்தபோது மாமி, “ராத்திரிக்கு என்ன பண்ணட்டும்” என்று என்னிடமே கேட்டாள்.

“எதானாலும்.”

“எதானாலும்மா? நான் எது பண்ணினாலும் சாப்பிடும் போல.”

“அங்க பிடிச்ச மாதிரி எனக்கு மாமிசம் சமைக்கத் தெரியாது.”

“மாமிசம் மட்டும் தானா சாப்பாடு.”

“ருசின்னு ஒன்னு இருக்கோல்லியோ.”

“எல்லாப் பழக்கமானா சரியாயிடும்.”

வத்தக் குழம்பு பண்ணியிருந்தாள். கூட்டு மாதிரி கெட்டியான, பூனைக் கண் மாதிரி எண்ணெய் மினுங்குகிற குழம்பு. உடன் கொத்தவரை வற்றலும், தேங்காய்ப் பூண்டுத் துவையலும் பண்ணியிருந்தாள்.

இரண்டு கால்களும் ஒன்று சேர்த்து வைத்து, கோடலி முடிச்சிட்ட கூந்தல் முன் வந்து சரிய மாமி குனிந்து பரிமாறினாள். அழகான பாதங்கள் அவை. நகம் ஓரம் அழுக்கின்றி, வெண்டைப் பிஞ்சு மாதிரி வளர்ந்திருந்தன விரல்கள்.

“என்ன காலைப் பாக்கறது?”

பொய் சொல்ல வேண்டாமே. “உங்க விரல் வெண்டைக் காய் பிஞ்சு மாதிரி இருக்குன்னு நினைச்சேன்.”

மாமி அப்படியே உட்கார்ந்து தலையைக் கவிழ்ந்து கொண்டு உடம்பு குலுங்கச் சிரித்தாள். விழுந்து புரளாத குறை.

“பாவம். எனக்காக உங்களுக்குச் சிரமம். வருஷம் முழுக்க கிடந்து வேகறீங்க இன்னைக்கும் உங்களுக்கு ரெஸ்ட் இல்லை.”

“முடியறது பண்ணறேன்…. உடம்பு மொழுமொழுன்னு இருந்தா ஆச்சா… யாருக்கானும் உபகாரப்பட்டா தானே உடம்பு.”

“கோமளா வர நாளாகும் போல.” “தாத்தா சீக்கிரம் விட்டுடுவாரா? மகன் வயித்துப் பொண் ணாச்சே…. இந்த நாணாவும் இன்னும் ரெண்டு நாளாவது ஆகும். வரட்டும்…. சின்ன குழந்தைங்க. சந்தோஷமாக இருந்துட்டு வரட்டும் என்னைக்குந்தான் இருக்கவே இருக்கு அடுப்பும் கரியும்.”

கையைக் கழுவிக் கொண்டு, “வரட்டுமா” என்றேன்.

“இருக்கட்டுமே….. என்ன அவசரம்…. சித்தே மொட்டை மாடிக்குப் போயி உக்காந்துட்டுப் போறது” என்றாள் மாமி, நிலைப்படியைப் பார்த்துக் கொண்டு.

விடிந்தது தெரிந்தது. கீழே தெருவில் நடமாட்டம் தொடங்கி யிருந்தது தெரிந்தது. யார் வீட்டிலோ தண்ணீர் தெளிப்பது கேட்டது. விருட்டென்று எழுந்து உட்கார்ந்தேன் கையெட்டும் தூரத்தில், அந்த ஒற்றை ஆள் மெத்தையில், கையும் காலும் தரையிலும், உடம்பு மட்டும் மெத்தையிலுமாக மாமி உறங்கிக் கொண்டிருந்தாள். வெறுமே அள்ளிப் போர்த்திய துணி விலகியிருந்தது. போர்வை எடுத்து மாமிக்குப் போர்த்திவிட்டேன். பனி பெய்து கொண்டி ருந்தது. சத்தம் எழுப்பாமல் கீழே வந்து கதவைத் திறந்து வெளியே வந்தேன். கதவை மீண்டும் சாத்தி வைத்தேன்.

மனசு குறுகுறுத்தது. யாரும் பார்க்கிறார்களா என்று கவனித் தேன். மனிதர் யாரும் பார்க்கவில்லை. இறங்கித் தெருவில் நடந்தேன்.

மாமியை நினைக்கையில் கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. எல்லாம் ஓர் ஒழுங்கான சரடிலேயேச் சென்று முடிந்ததை உணர்ந்தேன். என் முதல் பெண் சினேகிதியை நெஞ்சில் வைத்துக் கொண்டு நடந்தேன்.

குழந்தைகள் வெடித்த பட்டாசுத் தாள்கள் தெருவை அடைத்துக் கிடந்தன.

அறை நண்பர்கள் எங்கோ போயிருந்தார்கள். ஆறுதலாய் இருந்தது. யாரையும் முகம் பார்க்கச் சங்கடப்பட வேண்டிய அவசியம் இல்லை. அனாவசியமாய்ப் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை .

குளித்தேன். அழுக்குத் தீர வேண்டுமெனக் குளித்தேன். எல்லா அழுக்கும் களைந்து போக வேண்டும் எனக் குளித்தேன். குளித்தால் அழுக்குப் போய் விடுமா என்ன என்றும் இருந்தது.

தலை துவட்டிக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்தேன். காலைக் காற்று ஜன்னல் வழி மிக இனிமையாக வந்து கொண்டிருந்தது. தலை ‘விண்விண்’ என்று தெறித்தது. மனசில் எல்லையற்ற கவலையும் பச்சாதாபமும் மேலோங்கின. இந்த அவஸ்தைக்கு வித்திட்டது யார் என்று எனக்குள் கேள்விகள் கிளைத்தவாறு இருந்தன. நானா?

எனக்கும் பங்கு இருந்தது இந்தக் காரியத்தில், அவள் தான் என்று தள்ளிவிட மனம் முயன்றது. இந்த மனசு தான் எவ்வளவு குரூரமானது. தப்பைப் பிறர் மேல் மட்டுமே சுமத்துவதில் இது எவ்வளவு அக்கறையாக இருக்கிறது?

நிகழ்ச்சிகளை மீண்டும் மனசுக்குள் கொண்டு வர முயன்றேன். கசந்தது.

சட்டையை மாட்டிக்கொண்டு மாமி மெஸ்ஸை நோக்கி நடந்தேன். கூடத்தில் செருப்பை விட்டு விட்டு உள்ளே நுழைந்தேன். மாமி வாசல் தூணில் சாய்ந்துகொண்டு, அங்கிருந்து தெரியும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிழலாடியது கண்டு திரும்பியவள் என்னைப் பார்த்தாள். புருவம் உயர “என்ன?… வாங்கோ ….” என்றாள்.

நானும் அவள் பக்கத்தில் சற்றுத் தள்ளி உட்கார்ந்தேன். மாமி யின் முகத்தைத் தவிர்த்தேன்.

இருவருமே பேசுவதற்கு ஒன்றுமில்லாமையை உணர்ந்தோம். நான்தான் தொடங்கினேன்.

“மன்னிக்கனும்…”

“எதுக்கு ….”

“உம்… நான் உங்களைப் பயன்படுத்திக்கிட்டேன்னு நீங்க நினைச்சுக்கக் கூடாது…”

“ப்ச்… நான் அல்லவா அப்படி நினைக்கனும்… என் பசிக்கு உங்களை – ஒரு சின்ன வயசுப் புள்ளையை தின்னுட்டனோன்னு பச்சதாபப்பட்டுக்கிட்டு இருக்கேன்.”

“மனசுல ஒன்றும் வச்சுக்காதிங்க…” என்றவாறு குனிந்து கொண்டாள். அவள் குலுங்கி அழுவது தெரிந்தது.

– 1985

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *