(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஆனாலும் இத்தனை புத்திமட்டம் உண்டாகு மென்று எண்ணவே இல்லை. மனுஷனுக்கு அந்தஸ்து என்ற சமாசாரம் ஒன்று இருப்பதை எள்ளளவாவது நினைக்க வேண்டாமா? வக்கீலெங்கே, சமையற்கார னெங்கே! இரண்டு பேரும் கூடிக் கூடிப் பேசினால் அவன் எப்படி உருப்படுவான்? ரஸத்திற்கு உப்புப் போட்டால் புளி இருப்பதில்லை ; புளி இருந்தால் உப்பு இருப்பதில்லை. இந்த லக்ஷணத்தில் சம்பளம் மட்டும் சுளையாக மாதம் பிறந்ததும் இருபத்தைந்து ரூபாய்” என்று அம்மணியம்மாள் கூடத்தில் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தாள். அதைக் கேட்பவர்கள் யார் தெரியுமா? அவளுடைய குமாரி அம்புஜமும் நாலுவயசுப் பையன் சங்கரனும் பக்கத்து வீட்டுப் பாட்டியும் நாலைந்து கம்பங்களுமே.
“நாலுபேர் வெளியூரிலிருந்து வந்துவிட்டால் பரபரவென்று சமைத்து ருசியாகப் பருப்போ பாயசமோ பண்ணி வேளைக்குப் போட்டு நல்லபேர் எடுக்க வேண்டாமோ? யாராவது அப்படி வந்துவிட்டால் எனக்கு வந்தது சனியன். ‘இவாள்’ என்மேல் சீறிவிழ ஆரம்பித்து விடுகிறார்கள். நானும் சமையற் காரனுக்கு உதவி செய்யவேணுமாம்! இந்த வெட்கக்கேட்டை யாரிடம் போய்ச் சொல்லி அழுகிறது? இந்த வீட்டுச் சட்ட திட்டங்களே அலாதி.”
“ஏன், அம்மா, இப்படி இல்லாததும் பொல்லா ததும் பேசுகிறாய்? அவர் எத்தனை நல்லவராக இருக்கிறார்? நீ என்ன வைதாலும் சிரித்துக்கொண்டே இருக்கிறாரே!” என்று இடைமறித்துக் கேட்டாள் அம்புஜம்.
“சீ, அதிகப்பிரசங்கி ‘அவர்’ என்ன வேண்டியிருக்கிறது, அவர்! சமையற்காரனுக்கு மரியாதை! எருமைமாடு கூட அடித்தாலும் சுரணை கெட்டு நிற்கிறது. அது ரொம்ப நல்லதாக்கும்” என்று சீறி விழுந்தாள் அம்மணியம்மாள்.
“எல்லாரிடத்திலும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டுமென்று எங்கள் உபாத்தியாயர் சொன்னார். நம்முடைய பிரதம மந்திரிகூடத் தம் கீழுள்ள உத்தியோகஸ்தர் சேவகனைப் பியூனென்று கூப்பிட்ட போது, பேரைச் சொல்லிக் கூப்பிடச் சொன்னாராம்.”
“போதும், வாயை மூடு. உங்கள் மந்திரியுமாச்சு; மகாராஜனுமாச்சு. மேல், கீழ் தெரியவில்லை; இடது கை, வலது கை தெரியவில்லை. காலம் கெட்டுப்போய் விட்டது.”
அம்மணியம்மாள் பேச்சு வைதிக சம்பிரதாயத்தை எட்டிப் பார்த்தது. சமையற்காரனிடம் பிடித்த கோபம் மந்திரியிடத்தில் வந்து நின்றது. அவளுக்கு ஏன் அத்தனை கோபம்? நியாயமில்லாமலா கோபித்துக்கொள்கிறாள்?
அனந்தநாராயணையர் ஒரு கௌரவமான குடும்பத்திலே பிறந்தவர். பரம்பரையாக அரியூரில் மணியகாரராக இருந்த குடும்பம் அது. அவருடைய தகப்பனார் பொதுவாக நல்லவர். இங்கிலீஷ்ப் படிப்பு அவருக்கு இல்லை. ஆனாலும் அந்தக் குறை தம்முடைய ஒரே பிள்ளைக்கு இருக்கக்கூடாதென்று எண்ணினார். பி.ஏ., பி.எல்., வரையில் படிக்கவைத்தார். அப்புறம் பிள்ளை ‘அப்ரெண்டிஸ்’ஸாக இருந்தபோது உலகத் தினிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டார் .
அனந்தநாராயணையர் திருச்சிராப்பள்ளியிலுள்ள நூற்றுக்கணக்கான வக்கீல்களில் ஒருவர். அவ்வளவு தான். அவருக்கென்று தனிப் பெருமையை அளிப்பதற்குரிய சரக்கு ஒன்றும் அவரிடம் இல்லை. உத்தியோகம் பார்த்துவிட்டு உபகாரச்சம்பளம் பெறும் தாசில்தார் பெண் ஒருத்தியை அவர் விவாகம் பண்ணிக்கொண்ட விஷயத்தில் அவருக்குச் சிறிது மதிப்புக் கொடுக்கலாம். அம்மணியம்மாள், அதிகார தோரணையில் அப்பா தாலுக்கா ராஜ்யபாரத்தை நடத்தி வருகையில் பிறந்து வளர்ந்தவள். ஆகையால் அவளிடம் அதிகார குணம் ஓரளவு குடி கொண்டிருந்தது. ஆனாலும் இளகின மனமுடையவள்; உபகாரி; வாய் மட்டும் சிறிது பெரிது. அதற்கென்ன? எல்லாருக்கும் எல்லாம் பொருந்தியிருக்கிறதா?
வக்கீல்களுக்கு வரும்படி மோசமாய் வந்த காலம். பேசாமல் போர்டை எடுத்துவிட்டுச் சொந்தக் கிராமத்திலே போய் அக்கடாவென்று இருந்து வீடலாமே என்று கூடச் சில சமயங்களில் அனந்தநாராயணையர் நினைத்ததுண்டு. ‘ஏதோ அரைவயிறு கஞ்சிக்கு அப்பா வைத்திருக்கிறார். ஸ்நான ஸந்தி செய்து கொண்டு அறுபது வயசுக்குமேல் பண்ணுகிற ஜபதபங்களை நாற்பது வயசிலேயே பண்ணினால் தான் என்ன?’ என்று எண்ணுவார். தம்முடைய அருமை யான மகள் அம்புஜம் எதிரே வந்துவிடுவாள். அப்போது அவருடைய கிராமவாஸ ஞாபகம் போய் விடும். “இவளுக்கு நல்ல இடம் அகப்படவேண்டும். அதற்காவது இந்தப் பலகையைத் தொங்கவிட்டுக் கொண்டு இந்த ஊரில் இருக்கவேண்டும். கிராம வாஸத்துக்குப் போய்விட்டால் நல்ல மாப்பிள்ளையாக எங்கே அகப்படப் போகிறான்?” என்று மனஸுக் குள்ளே சொல்லிப் பெருமூச்சு விடுவார்.
இப்படி அவருடைய தினசரி வாழ்க்கையில் அவருக்கு உண்டாகும் பகற்கனவுகள் கலைவதும் கூடுவதுமாக இருந்தன. வாசலில் தொங்கும் பலகை தொங்கிக்கொண்டுதான் இருந்தது. வெயில் பட்டுப் பட்டு அதில் இருந்த எழுத்துக்கள் வெடித்து மங்கத் தொடங்கின. ஊரிலிருந்து வரும் நெல்லையும் திருச்சி யில் கிடைக்கும் பணத்தையும் வைத்துக்கொண்டு ஏதோ ஒரு வகையாகக் காலக்ஷேபத்தை நடத்தி வந்தார்.
அவர் வீட்டில் லக்ஷ்மீகரத்துக்குக் குறைவொன் றும் இல்லை. அம்புஜத்தின் பூத்தையற் படங்கள் மாதத்துக்கு ஒன்றாகச் சுவரை அலங்கரித்தன. அம் மணியம்மாளுடைய நாகரிக வாழ்வுக்குச் சிறிதும் குறைவு வரவில்லை. வீட்டில் சமையற்காரன் சமையல்; ஆள்காரன் பசுவைப் பாதுகாத்துக் கறந்து கொடுக்கிறான்; சேவகன் ஆபீஸ்’ வேலை செய்கிறான்; குமாஸ்தாவும் இருக்கிறார். ஆனாலும் ஐயருக்குத் திருப்தியில்லை; வரும்படி அப்படி ஸ்வாரஸ்யமுள்ள தாக இருக்கவில்லை.
இப்படியிருந்த காலத்தில் தான் சமையற்கார ராமு வந்து சேர்ந்தான். அவன் அனந்தநாராயணையரது வீட்டுக்கு வந்த அன்றைக்கு நாலு நாளைக்கு முன்தான் அந்த வீட்டிலிருந்து பாலக்காட்டுச் சமையற்காரன் சொல்லாமற் போய்விட்டான். நல்ல யோக்கியனாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் சமையற்காரனைத் தேடிக்கொண்டிருந்தார் ஐயர். நல்ல வேளையாக ராமு வந்தான்.
அவன் முகத்தில் எத்தனை தேஜஸ்! உடம்புதான் என்ன வாட்ட சாட்டம்! அவனைப் பார்க்கும் போதே ஐயருடைய மனம் அவனிடத்தில் பொருந்திவிட்டது; “நன்றாகச் சமைப்பாயா?” என்று கேட்டார்.
“நன்றாக என்று சொல்லிக்கொள்ளும் தைரியம் இல்லை. சமைப்பேன். அது நன்றாக இருப்பது நம் இருவரையும் பொறுத்தது. நானும் உங்கள் விருப்பமறிந்து சமைக்க வேண்டும். நீங்களும் என்னிடம் அன்பும் இரக்கமும் வைக்க வேண்டும்” என்று ராமு பதில் சொன்னான்.
“என்ன, சட்டம் படித்தவன் போல்லா பாயிண்டாகப் பேசுகிறாயே! என்ன சம்பளம் கேட்கிறாய்?”
“அதைப்பற்றி நான் சொல்வதற்கில்லை. இருபது ரூபாய் கொடுத்தால் எனக்குக் கஷ்டமில்லாமல் இருக்கும். பதினைந்து கொடுத்தால் கஷ்டமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”
அவனுடைய பேச்சுச் சாதுர்யமும் கண் பார்வை யும் வக்கீல் ஐயருக்கு அதிசயத்தை உண்டாக்கின; என்ன ஆச்சரியம்! “கடவுள் எங்கெங்கேயெல்லாம் வசீகரசக்தியை வைத்திருக்கிறார்” என்று அவர் உள்ளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
“சரி, இரண்டும் வேண்டாம். பதினெட்டு ரூபாய் வாங்கிக்கொள். சரியாக வேலை செய்தால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்” என்று ஐயர் விட்டார்.
“தங்கள் சித்தம்” என்று கூறிவிட்டு நன்றியறி வும் பணிவும் காட்டும் பார்வையால் அனந்தநாரா யணையருடைய ஹிருதயத்தில் உட்கார்ந்துவிட்டான் ராமு.
அபூர்வத்திலும் அபூர்வமாகக் கிரிமினல் வழக் கொன்று வக்கீலையரிடம் வந்தது. வழக்குக் கொண்டு வந்தவர் ஒரு பெரிய பணக்காரர். அவருக்கே தம் முடைய வழக்கு ஜயிக்குமென்ற நம்பிக்கை இல்லை. ஆனாலும் சிநேகிதர்களுடைய தொந்தரவு பொறுக்க மாட்டாமல் அந்த வழக்கைத் தொடுக்க வந்தார். ‘இது தோற்றுப் போகும் வழக்குத்தானே? இதற்கு ஏன் பெரிய வக்கீலைத் தேடவேண்டும்?’ என்று எண்ணி அனந்தநாராயணையரிடம் வந்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். வழக்குத் தொடுக்க ஒரு வார காலம் இருந்தது. அதற்குள் அந்த வழக்கைப்பற்றி எல்லாவற்றையும் அறிந்துகொள் ளும் பொருட்டு இரவு பகல் அது சம்பந்தமான கட்டுக்களை யெல்லாம் படித்துப் பார்த்தார். அதை எப்படி நடத்தினால் ஜயமுண்டாகுமென்று யோசித்தார். அந்தமாதிரி வழக்குகளில் அவர் முன் பழகி யிருந்தாலல்லவோ அவருக்கு வழி தெளிவாகத் தெரியும்? ‘இந்த வழக்கில் ஜயம் ஏற்பட்டால் நம் அந்தஸ்து ஒரு படி ஏறும்’ என்பது அவர் நம்பிக்கை. ஜயம் ஏற்பட்டால்தானே? அதற்கு வேண்டிய வழி என்னவென்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தார்.
இராத்திரி ஒன்பது மணிக்கு ஆபீஸ் அறையில் ஐயர் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பாலும் ஆரஞ்சுப்பழமும் கொண்டு வைப்பதற்காக உள்ளே நுழைந்தான் ராமு. ஐயர் இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொண்டு கீழே குனிந்தவண்ணம் இருந்தார். ராமு வந்ததைக்கூடக் கவனிக்கவில்லை.
மேஜையின் மேல் பாலையும் பழத்தையும் வைத்து விட்டுப் பேசாமல் சிறிதுநேரம் நின்றான் ராமு. அப்பால், “பால் வைத்திருக்கிறேன்” என்றான். அனந்தநாராயணையர் நிமிர்ந்து பார்த்தார். “எப்பொழுது வந்தாய்? என்னவோ யோசித்துக்கொண்டிருந்தேன். உன்னைப் பார்க்கவில்லை” என்று சொல்லி விட்டு அவன் உரித்துக் கொடுத்த சுளையை வாயில் போட்டுக்கொண்டார்.
“ரொம்பக் களைப்பாக இருக்கிறீர்களே; பேசாமல் படுத்துக்கொண்டு விடியற்காலையில் எழுந்திருந்து கவனித்துக்கொள்ளலாமே. விடியற்காலத்தில் யோசனை செய்தால் எல்லாம் தெளிவாகத் தோன்றுமென்று சொல்வார்கள்” என்றான் ராமு. அவன் ஒரு சமையற்காரனாகப் பழகாமல் ஒரு படி உயர்ந்த அன்போடு பழகினவனாதலால் இப்படிச் சொன்னான். அவர் தலையைச் சொறிந்து கொண்டு பாலைச் சாப்பிட்டுவிட்டுக் காகிதங்களை மடக்கி வைக்கலானார்.
“நான் எல்லாவற்றையும் சரியாக வைத்து விடுகிறேன். நீங்கள் படுத்துக்கொள்ளப் போங்கள்” என்று சொல்லி ராமு அவற்றை அடுக்க ஆரம்பித்தான். அவன் பலநாள் அப்படிச் செய்வது வழக்கம்.
காலையில் எழுந்து ஆபீஸ் அறைக்குள் வந்தார் வக்கீல். உண்மையிலேயே அவருக்கு மனம் தெளிவாக இருந்தது. உள்ளே சென்று அமர்ந்தார். கட்டுக்களை அவிழ்த்தார். அவற்றில் எதையோ படித்துப் பார்த்தார். ஆச்சரிய உணர்ச்சிகள் அவர் முகத்தில் அலையோடின. துள்ளினார்; குதித்தார். “அடே ராமு!” என்று கூப்பிட்டார். ஓடிவந்தான் ராமு. அவனோடு என்னவோ பேசினார்.
அந்த வழக்கில் எதிர்பாராத விதமாக ஜயம் ஏற்பட்டது. வழக்குத் தொடுத்தவருக்குப் பெரிய வியப்பு உண்டாயிற்று; ‘இந்த வழக்கை இவர் ஜயித்தது பரம ஆச்சரியம் இவரை ஊராரெல் லோரும் உதவாக்கரை வக்கீலென்று சொல்வது சுத்தப் பொய். இவர் ஒரு சிறந்த வக்கீல்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருக்கு அந்த வழக்கிற்கு ‘நல்ல பீஸ்’ கொடுத்ததோடு அனந்தநாராயணையருடைய பிரபாவத்தைப் பல நண்பர்களிடம் தெரிவித்துப் பல ‘கேஸ்’களை வாங்கித் தந்தார். ஐயருடைய அந்தஸ்தும் வரும்படியும் ஒரு படியல்ல, பதினெட்டுப் படி உயர்ந்து விட்டன.
இப்படி ஐயருடைய அந்தஸ்து உயர ஆரம்பித்ததிலிருந்து அம்மணியம்மாள் குறை கூறும் ‘ரகஸ்யப் பேச்சும்’ வளரத் தொடங்கியது. அநேகமாக இரவில் ராமுவும் வக்கீலும் பல மணி நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். வக்கீல் அவனிடம் பழகுவதைப் பார்த்தால் அவனை யாரும் சமையற்காரனாக எண்ண மாட்டார்கள். ஆனால் அவன , பழைய பணிவுடனும் பழைய அடக்கத்துடனுமே இருந்து வந்தான்.
2
பாக்கிய சக்கரம் சுழல்கின்றது. அனந்த நாராயணையர் தெய்வ சக்தியால் தூண்டப்பட்டவர் போல ஒவ்வொரு வழக்காக ஜயித்துக்கொண்டே வருகிறார். அவர் கோர்ட்டில் நடத்தும் வாதம் இப் பொழுதெல்லாம் ஆணித்தரமாக இருக்கின்றன. பழைய விளக்கெண்ணெய்வாதம் இப்பொழுது இல்லை.
“இவருக்கு இப்படி அதிசயமாக ஒரு சக்தி வந்ததற்குக் காரணம் என்ன? ஏதாவது உபாஸனை செய்கிறாரா?” என்று ஜனங்களெல்லாம் பேசத் தொடங்கினர். வீட்டிலோ அம்மணியம்மாளுக்கு ஒரு பக்கம் சந்தோஷம்; ஒரு பக்கம் ஆத்திரம். அந்தஸ்து உயர உயரச் சமையற்காரனோடு கூடிக் கூடிப் பேசுவதும் அதிகமானால் அவளுக்கு ஏன் கோபம் வராது? அவள் புருஷனுக்கு அடங்கின வளாகையால் அவரைக் கேட்க் அஞ்சினாள். எவ் வளவு நாள் பொறுத்திருப்பாள்? ஒரு நாள் கேட்டே விட்டாள்:
“அதென்ன? ஒரு நாளைப் போல முந்நூற்றறுபது நாளும் ராத்திரி எட்டு மணிக்குமேல் அந்தச் சமையற்காரனோடே பேச்சு! உங்களுக்குக் கௌரவம் அந்தஸ்து, நாசூக்கு ஒன்றும் தெரியாதா?” என்றாள்.
“அதைப்பற்றி உனக்கென்ன கவலை?”
“நான் இந்த வீட்டில் இருப்பதனால் தான் கவலை அவனோ வரவர மோசமாக இருக்கிறான். நீங்கள் கூப்பிட்டால் கையிலுள்ள பாத்திரத்தை அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுகிறான். வரவர எனக்கு வேலை அதிகமாகிறது. நீங்களோ என்னை மிரட்டுகிறீர்கள். ராத்திரி 8-மணிக்குமேல் அவனை விட்டு விடவேண்டுமென்று உத்தரவிடுகிறீர்கள். இதெல்லாம் யார் காதிலாவது பட்டால் என்ன எண்ணுவார்கள்?”
“பைத்தியமே பேசாமல் இரு. உனக்குள்ள புத்தி எனக்கு இல்லையா? அவன் ரொம்ப நல்ல பையன். ஏதோ நம்முடைய அதிருஷ்டத்தால் தான் நமக்கு அவன் கிடைத்தான்.”
“ஆமாம். நீங்கள் தான் மெச்சிக்கொள்ள வேண்டும். அரையுங்குறையுமாகச் சமைத்துப் போடுகிற அவனுக்குத் தோடாப் பண்ணிப் போட்டாலும் போடுவீர்கள். ஏன், நீங்கள் இருக்கிறமாதிரியில் அவனுக்கே உங்கள் பெண்ணைக் கொடுத்தாலும் கொடுத்துவிடுவீர்கள்.”
இந்தக் கடைசி வாக்கியத்தைக் கேட்டதும் வக்கீல், “ஹா!” என்று ஏதோ புதியதொரு விஷயத்தை அறிந்தவர் போல் ஆச்சரியமும் சந்தோஷமும் பொங்கக் கூவினார். அம்மணி அம்மாளுக்கு அந்தத் தொனியின் அர்த்தம் விளங்கவில்லை. அது அவர் ஹ்ருதய உணர்ச்சிகள் அலைமோதி வழிந்த ஒலியென்பதை அவள் எப்படி உணர்வாள்! தான் சொல்வதைத் தடுத்துச் சொல்லுகிறாரென்றே நினைத்தாள்.
“இந்தமட்டாவது உங்களுக்கு நம் அந்தஸ்து ஞாபகம் இருக்கிறதே. அம்புஜத்தின் கல்யாணத்தை நடத்த ஏற்பாடு செய்யவேண்டாமா?”
அன்றைக்கு ஐயர் தம் மனத்தில் ஏதோ ஒரு தீர்மானம் செய்துகொண்டார். அவருக்கு ஏன் அவ்வளவு உற்சாகம்! அந்த நிமிஷத்தில் அவருடைய முகத்தில் திருப்தியாகிய உணர்ச்சி எவ்வளவு விசதமாக எழுதப்பட்டு விளங்கிற்று!
மறுநாள் இரவு ஒருமணி வரையில் ராமுவும் அனந்தநாராயணையரும் ரகஸ்ய ஆலோசனை புரிந் தனர். நீண்ட வாக்குவாதங்கள் நடைபெற்றன வென்று தோன்றியது. அனந்தநாராயணையர் அந்த வாதத்திற்கூட வெற்றிபெற்றிருக்கவேண்டும். அவர் முகத்தில் அந்த வெற்றியின் விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது.
ஒரு வாரம் சென்றது. அன்று இரவு அம்மணியம்மாள் சுமுகமாக இருந்தாள். ஐயர் மிக்க அன்போடு ஸல்லாபம் செய்யத்தொடங்கினார்.
“நான் சென்னபட்டணம் போக உத்தேசித் திருக்கிறேன்” என்று அவர் மெல்ல ஸம்பாஷணை செய்யத் தொடங்கினார்.
“போய்வர எவ்வளவு நாள் செல்லும்?” என்று கொஞ்சலாகக் கேட்டாள் அவருடைய தர்மபத்தினி .
“போய் வருவதா? அங்கேயே போய் வக்கீல் உத்தியோகம் பார்க்கலாமென்று எண்ணம்.”
“அங்கே போனால் உங்களுக்குச் சௌகரியப்படுமா?”
“ஏன் சௌகரியப்படாது? எவ்வளவோ ‘கேஸ்’கள் கிடைக்கும். இப்பொழுது கூட நான் அடிக்கடி அங்கே போய்விட்டு வரவில்லையா?”
“அப்படியானால் அம்புஜத்தின் கல்யாணத்தைப் பற்றி எப்பொழுது யோசிக்கிறது?”
“அதற்கென்ன பிரமாதம்? அங்கேயே போய் நடத்தலாம்.”
“சரி. அங்கே நல்ல சமையற்காரன் அகப்படுவானா?”
“பேஷானவன் அகப்படுவான்.”
இந்தப் பதிலில் தன்னுடைய கோரிக்கை பூர்த்தியாகிவிட்டதாக அம்மாள் பூரித்தாள். ‘ராமு ஒழிந்து விடுவான். ரகஸ்யப் பேச்செல்லாம் போய்விடும். ஏதோ நல்ல காலந்தான்’ என்று அவள் சந்தோஷித்தாள்.
“ராமுவுக்குச் சம்பளப் பாக்கியெல்லாம் கொடுத்து அனுப்பிவிடலாமல்லவா? இனிமேல் அவனுடைய சமையல் நமக்கு வேண்டாமே?”
“வேண்டாம். ஆனால் அவனையும் உடனழைத்துப் போகவேண்டும்.”
“இதென்ன? ராமேசுவரம் போனாலும் சனீசுவரன் பின்னோடே வந்துதான் தீரவேண்டுமா?”
“சீ! அப்படிச் சொல்லாதே. அம்புஜத்தின் கல்யாணம் அவனில்லாமல் எப்படி நடக்கும்?”
“அவன் என்ன செய்ய வேண்டும்? மாப்பிள்ளை தேடிக்கொண்டு வருவானா? கல்யாண ஏற்பாடு செய்வானா?”
“எல்லாம் செய்வான். அவனே மாப்பிள்ளையாகவும் இருப்பான். நீதான் ஒரு நாள் சொல்லி விட்டாயே, அவனுக்கே அம்புஜத்தைக் கொடுப்பேனென்று.”
“என்ன விளையாட்டு வேண்டியிருக்கிறது?” என்று கடுகடுத்தாள் அம்மணியம்மாள்.
“விளையாட்டில்லை. உண்மைதான்; நமக்கு அந்தஸ்து உயர்வது அவனாலே; நான் சென்னை போவதும் அவனாலே; அம்புஜத்துக்கும் அவனுக்கும் கல்யாணம் நடப்பது நிச்சயம். நான் அம்புஜத்தின் சம்மதத்தைப் பெற்றுவிட்டேன்.”
“என்ன! உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? உளறுகிறீர்களே?” என்று அச்சமும் கோபமும் ஆச்சரியமும் கலந்த உணர்ச்சியோடு அவள் கேட்டாள். ஐயர் அதன் பிறகு சொல்லிய அதிசயங்களைக் கேட்கக் கேட்க அவள் ஸ்தம்பித்துப் போனாள். ஒவ்வொரு மர்மமாக வெளிவரும்போது. அவள் கனவு காண்பதாகவே எண்ணினாள். அப்படி அவள் திகைக்கும்படி அவர் என்ன சொன்னார்? ராமுவைப்பற்றிய மர்மங்களே!
3
ராமு ஒரு பெரிய குடும்பத்தில் உதித்தவன். இளமையிலேயே தாயை இழந்தவன். பி.ஏ., பி.எல்., வரையில் படித்தான். அவன் தாய்க்குப் பிறகு அவன் தகப்பனார் இரண்டாவது மனைவியொருத்தியைக் கல்யாணம் செய்து கொண்டார். அவளுடைய மந்திரோபதேசத்தால் ராமுவிடம் தகப்பனாருக்கு இருந்த பிரியம் போய்விட்டது. அவரும் பலவிதத்தில் சொத்தெல்லாம் தொலைந்து இறந்தார். அவர் இளைய மனைவியோ அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு தன் பிறந்தகம் போய்ச் சேர்ந்தாள்.
பி.ஏ., பி.எல்., பட்டத்தைக் காகிதத்தில் எழுதிப் பிடித்துக்கொண்டு ஊரெல்லாம் அலைந்து வேலைக்குத் திண்டாடினான் ராமு. ஒன்றும் கிடைக்கவில்லை. அவனுக்கு முன் ஒவ்வோர் இடத்தையும் நூற்றுக் கணக்கான பேர்கள் படையெடுத்திருந்தார்கள். எங்கெங்கோ போய், எப்படி எப்படியோ அலைந்து ஒரு வக்கீலிடம் இருபது ரூபாய்க்குக் குமாஸ்தாவாக அமர்ந்தான். மெல்ல ‘அப்பிரண்டிஸ்’ பரீக்ஷையில் தேர்ச்சி பெற்றான். அப்பால் வக்கீல் ஸன்னத்துப் பெற 800 ரூபாய் வேண்டுமே. யார் தருவார்கள்?
அவனுடைய போதாத காலம்; வக்கீலிடம் அவனைப் பற்றிச் சிலர் கோள் சொல்லி விலக்கிவிடச் செய்தார்கள். அவரோடு இருந்த காலத்தில் பல புஸ்தகங்களைப் படித்துப் படித்துப் பல சட்ட நுணுக்கங்களை அறிந்து கொண்டான். அவனுடைய அறிவு வளம் பெற்றது. திடீரென்று வேலையிலிருந்து விலக கப்பட்டால் அவன் எங்கே போய் நிற்பான்? கிளப்பிலாவது வேலை செய்யலாமென்று துணிந்துவிட்டான். சமையல் செய்யக் கற்றுக்கொண்டான். தான் சென்ற இடங்களில் உள்ள ஒழுங்கீனங்களால் மனமுடைந்து ஒவ்வொன்றாக விட்டு விலகினான். கடைசியில் திருச்சிராப்பள்ளியில் அனந்தநாராயணையரிடம் வந்து சேர்ந்தான்.
அவனுடைய முகவசீகரத்தில் ஈடுபட்ட ஐயர் அவனை மிகப் பிரியமாக நடத்திவந்தார். ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கைக்குப் போகுமுன் ஆபீஸ் அறையிலுள்ளவற்றைச் சரிப்படுத்தி வைக்கச் சொல்லி விட்டுப் போய்விடுவார். அவன் இதுதான் சமயமென்று அங்குள்ள புஸ்தகங்களைப் புரட்டிப் படிப்பான். அவனுடைய அறிவு மிகவும் கூர்மையானது. ஞாபகசக்தியோ அபாரம்.
ஒருநாள் – அபூர்வமாக வந்த கிரிமினல் வழக்கை எப்படி நடத்துவதென்று தெரியாமல் ஐயர் யோசித்த இரவு – வழக்கம்போல் அவனைத் தம் அறை யிலுள்ள காகிதங்களை ஒழுங்குப்படுத்தச் சொல்லிப் போய்விட்டார். அவன் தன் எஜமானைத் திகைக்க வைக்கும் வழக்கைப்பற்றிப் படித்து ஆராய்ந்தான். உடனே இப்படி இப்படி நடத்தினால் அநுகூலமென்று எழுதி அதற்குள்ளே வைத்துவிட்டான். அந்த எழுத்துத்தான் முதல் முதல் ராமுவின் மர்மம் வெளிப்படுவதற்குக் காரணம். மறுநாள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட வக்கீல் ராமுவை அழைத்து, “இந்தக் காகிதம் ஏது?” என்று கேட்டார். அவன் தனக்குத் தெரியாதென்று சாதித்துவிட்டான். வழக்குத் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அதை நடத்தும் வழியை விளக்கிய கடிதம் ஐயருக்குக் கிடைத்தது. அவர் எவ்வளவு நாள் இதை அறிந்து கொள்ளாமல் இருப்பார்? ஒருநாள் கையுங்களவுமாக ராமுவைப் பிடித்துவிட்டார். அப்பால் அவனுடைய பூர்வ வரலாறு தெரிந்தது. அவருக்கல்லாமல் மற்ற எல்லோருக்கும் தான் சமையற்காரனாகவே இருக்க வேண்டுமென்று அவன் வேண்டிக்கொண்டான். அது தான் தனக்குச் செய்யும் உபகாரமென்று பிரார்த்தித்தான். என்ன அடக்கம்! என்ன சிறந்த குணம்!
நாளடைவில் இந்த மர்மநிலை ஐயருக்குப் பிடிக்கவில்லை. தம் மனைவி அகஸ்மாத்தாக அம்புஜத்தின் கல்யாணத்தில் ராமுவைச் சம்பந்தப்படுத்திப் பேசிய அன்று ஐயர் ஞானோதயமானதுபோலச் சந்தோஷப்பட்டார். ‘ஏன் அப்படியே செய்துவிடக்கூடாது?’ என்று யோசித்தார். அந்த ஊரில் செய்தால் நன்றாயிராதென்று எண்ணினார். பலநாள் யோசித்தபிறகு சென்னைக்குச் சென்றுவிட்டால் ராமு சமையல் உத்தியோகத்தை விட்டுவிட்டு வக்கீல் ஆகலாம்; அம்பு ஜத்திற்குக் கணவனுமாகலாமென்று நிச்சயித்தார் .
இவ்வளவு ஸமாசாரங்களையும் அம்மணியம்மாள் கேட்டாள். அவளுக்குப் பதில் பேச முடியவில்லை.
“இப்பொழுது உனக்கு எல்லாம் தெரிந்துவிட்டதல்லவா? அவன் இல்லாவிட்டால் நான் ஒரு செல்லாக் காசுக்குச் சமானந்தான். அவனும் வக்கீலாகி என்னோடு சேர்ந்துவிட்டால் அப்புறம் நம்மைக் கட்டிப்பிடிக்கிறவர்கள் யார்?”
எப்படியோ ஐயர் அம்மணியம்மாளின் சம்மதத்தைப் பெற்றுவிட்டார். தொழிலினால் ஏற்றத் தாழ் வில்லையென்பதை அம்புஜம் முதற்பாடத்திலிருந்தே படித்தவள். அதனால் அவளுக்கு ராமுவினிடம் என்றும் இழிவான அபிப்பிராயமே தோற்றியதில்லை. ஆனால் வரவர அவளை அறியாமல் ஒரு பாசம் மட்டும் அவள் மனத்தை ராமுவோடு இறுகப் பிணித்தது.
இப்பொழுது சென்னையில் ராமஸ்வாமி ஐயரும் அனந்தநாராயணையரும் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்துகிறார்கள். “எல்லாம் அம்புஜத்தின் அதிருஷ்டம்” என்று தங்கள் உயர்ந்த பதவிக்குக் காரணம் கூறிக்கொண்டு அம்மணியம்மாள் உடம்பிலுள்ள ஆபரணங்களை ஒரு குலுக்குக் குலுக்குகிறாள். ராமு தன் சமையல் தொழிலை விட்டு ராமஸ்வாமி ஐயராகி வக்கீல் தொழிலை ஏற்றுக்கொண்டாலும் பழைய அடக்கமும் பணிவும் அவனை விட்டு அகலவில்லை. அந்தக் குணங்கள் அம்புஜத்தினிடம் பிரதிபலித்தன. இருவரும் அன்புத்தளையால் கட்டப்பட்டு எப்பொழுதும் ஒரே நிலையில் வாழ்கின்றார்கள்.
– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.