ராமுவின் சுய சரிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 4,622 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(குறிப்பு :- ‘ராமு’ ஒருவரது புனை பெயர். இவர் எனது பாலிய நண்பர்; பள்ளித் தோழர்; இப்போது டில்லியில் ஓர் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறர். அங்கே போகுமுன், தாம் எழுதி வைத்திருந்த சுயசரிதப் பிரதி யொன்றை, ‘இதை உன் இஷ்டம்போல் திருத்தி வெளியிடு’ என்று சொல்லி, என் கையில் தந்தனர். நான் ஒரு திருத்தமும் செய்யவில்லை. இவர் எழுதியபடியே பதிப்பித்திருக்கிறேன்.)

பல இடங்களிற் பிரிந்து வசிக்கும் ஒரு குடும்பத்தினர் ஓரிடத்தில் ஒரே சமயத்தில் கூடித் தமாஷாயிருப்பது வாழ்விற்கு எத்தனை உகப்பான காரியம்!

தீபாவளிக்கு இன்னும் இரண்டே நாட்கள். நான சென்னையில் கிறிஸ்தவ கலாசாலையில் பீ.ஏ. வகுப்பில் வாசித்து வருகிறேன். என் அண்ணா சோமு கலாசாலைப் படிப்பை முடித்து விட்டு, மனை வாழ்க்கையிற் புகுந்து கடினமான பாடங்களைப் படித்து, வேலையில்லாத் திண்டாட்டத்தில் அகப்பட்டு, கடைசியில் மதுரையிலே பள்ளிக்கூட வாத்தியாராக் ஏதோ சம்பாதித்து வருகிறான். அவன் சம்பாதிப்பது என் மன்னிக்குப் புடவைக்குக் கூடக் காணவில்லை யென்று அடிக்கடி புகார் வந்துகொண்டிருக்கும். என் தங்கை புக்ககம் போய் இரண்டு வருஷங்கள் ஆச்சு. என் கடைக்குட்டித் தம்பிக்கு வயசு எட்டு. வயசு அதிகரித்து வருவது போலவே, அவனுடைய விஷமமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அவனை மேய்த்து அடைப்பது தான் என் பெற்றோர்களுடைய வேலை.

தீபாவளிக்கு நான், என் அண்ணா, மன்னி, என் தங்கை, அவள் அகமுடையான் இத்தனை பேரும் தாம். இருக்கும் திருநெல்வேலிக்கு வந்து சேரவேண்டுகிமன்று என் தகப்பனார் கட்டளை. நாங்கள் எல்லாரும். கர்நாடகம். என் தகப்பனாரைக் கண்டால் ஒரே நடுக்கம், அண்ணா என் மன்னிக்கு அதிகம் பயப்படுகிறானா அல்லது அப்பாவுக்கு அதிகம் பயப்படுகிறானா என்று திட்டமாயச் சொல்ல முடியாது. அவள் தடை யுத்தரவு போட்டு விட்டால், அவன் தீபாவளிக்கு வரமாட்டான். ஆனால் என் அம்மா ஏதாவது தந்திரஞ் செய்திருப்பாள். மன்னிக்கு அழகான பட்டுப் புடவை எடுத்து வைத் திருப்பதாக் அப்பர்வைத் தெரிவிக்கச் சொல்லியிருப்பாள். இதற்கு வசப்படாத மாட்டுப் பெண்கள் கிடையாதல்லவா?

தீபாவளிக்காக ஊருக்குச் செல்லும் பெருங் கூட்டம்.. எழும்பூர் ஸ்டேஷனில் ஜனத்திரள் சகிக்க முடியவில்லை.

படாத பாடுபட்டு, டிக்கெட் வாங்கினேன். பின் ப்ளாட்பாரத்தில் போய் இடம் இருக்கிறதா என்று வண்டிதோறும் பார்த்துக் கடைசியில் ஒரு வண்டியில் கஷ்டப்பட்டு ஏறி ஓரிடம் பிடித்துக்கொண்டேன். மூச்சு விடுவதற்கு அடிக்கடி தலையை வெளியே நீட்ட வேண்டிய தாயிருந்தது.

வண்டி புறப்படுவதற்கு முதல் மணி அடித்தாய் விட்டது. ஒரு பெட்டியுடன் ஒரு போர்ட்டர் தலை தெறிக்க ஓடி வந்தான்; அவனைத் தொடர்ந்து ஒரு பெண் விரைவாய் வந்தாள். நான் இருக்கும் வண்டியில் பெட்டியை வைத்துவிட்டு, ‘அம்மா ஏறுங்கோ; வேறே வண்டிக்குப் போறதுக்கு நேரமில்லிங்க. ஒரே கூட்டமாய் இருக்குதுங்க’ என்றான் போர்ட்டர். அந்தப் பெண்ணும் ஏறித் தயங்கி இடம் பார்த்த வண்ணமாய் நின்றாள். இடமோ இல்லை; இருக்கிறவர்களும் நகர்ந்துகொடுக்கிற வழியைக் காணோம். நான் எழுந்து ‘இங்கே உட்காரலாம் – நான் நிற்பதில் பரவாயில்லை’ என்றேன். அவள் தன் நன்றியைப் புன்னகையாற் காட்டி என் இடத்தில் உட்கார்ந்து கொண்டாள். நான் பக்கத்தில் நின்று கொண்டேன்.

வண்டி நகர்ந்தது. புதிதாய் வந்த பெண்ணை அப்பொழுது தான் பார்க்க முடிந்தது. 16 அல்லது வயசிருக்கலாம்; மாநிறம்; கறுப்புக் கரையுள்ள பழுப்பு நிறப் புடவை; புஜத்தில் சிறிதளவே. மூடியிருந்த மெல்லிய மேல் சட்டை; கழுத்தில் சுற்றித் தழுவிக்கிடந்த பொன் சங்கிலி; காதில் சிறிய வயிரத்தோடு; ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பொன் வளை; இரண்டு அழ்கிய பாதங்களையும் பற்றிப் பிடித்து அணைத்துக் கொண்டிருந்த இரண்டு ஜோடுகள்; அழகாகப் பின்னிவிடப் பட்ட கருங்கூந்தல்; அதில் அழுத்திய ரோஜாப்பூ, அழகிய முகம்; கன்னங்களில் அழகு சுழியிடுவது போன்ற குழிவு; அழகிய கண்கள். இவள் எங்கே போகிறாளென்று, தெரிந்து கொள்ள என் மனம் துடித்தது.

பணப்பையில் வைப்பதற்காக அதைத் திறந்தவள் தன் கையிலிருந்த டிக்கெட்டை நழுவ விட்டு விட்டாள். நான் குனிந்து எடுத்து, அதை ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் கையிற் கொடுத்தேன். அவள் திரும்பவும் என்னை நோக்கிப் புன்னகை புரிந்து, அதை வாங்கிப் பணப் பையிற் பத்திரமாக வைத்துக் கொண்டாள்.

டிக்கெட் திருநெல்வேலிக்குத்தான். நெடுந்தூரம் அவளோடு பிரயாணம் பண்ணப் போகிறோம் என்ற நினைவு என் உள்ளத்தைக் கூத்தர்டச் செய்தது. செங்கற்பட்டு ஸ்டேஷன் வந்ததும் நான் நின்று கொண்டிருந்த வரிசையிலிருந்து ஒருவர் இறங்கினார். ஒவ்வொருவரும் சிறிது சிறிது நகர்ந்தார்கள். எனக்கு இருப்பதற்கு இடம் கிடைத்தது. ஆனால் அவளருகில் இருப்பதற்கு வெட்கமுற்று நின்று கொண்டேயிருந்தேன். நான் உட்காருவேன் என்று அவள் எதிர் பார்த்திருக்க வேண்டும். உட்காராமல் நிற்பதைக் கண்டு, ‘உட்கார்ந்து கொள்ளலாமே’ என்றாள்.

என்ன மதுரமான சொற்கள்! இவை என் காதிற் பட்டதும், எனக்கிருந்த மகிழ்ச்சி சொல்லி முடியாது. உட்கார்ந்து கொண்டேன். ‘இன்று இரவும் நாளை 2மணி வரையும் ரயிலில் தானே கழிக்க வேண்டியிருக்கிறது. ரொம்பத் தொல்லையான பிரயாணம்’ என்றேன். அவள் திரும்பி என்னைப் பார்த்து’ நீங்களும் திருநெல்வேலிக்கா?’ என்று கேட்டாள். ‘ஆம்’ என்று தலையசைத்தேன். சிறிது நேரங்கழித்து ‘எனக்கு வண்ணார்பேட்டை; எங்கள் அப்பாவைத் தெரிந்திருக்கலாம்; வக்கீல் விசுவநாதையர்; நான் இங்கே க்வீன் மேரிஸ் காலேஜில் இண்டரில் வாசித்துக் கொண்டிருக்கிறேன்; என் பெயர் பத்மா’ என்றாள். ‘அப்படியா?’ என்று கேட்டு, ‘எனக்குப் புதுக் கிராமம்; என் பெயர் ராமஸ்வாமி; எங்கள் அப்பா ஒரு பாங்கர்; இங்கே கிறிஸ்தவ கலாசாலையில் பீ.ஏ.யில் வாசிக்கிறேன்’ என்றேன். இதைக் கேட்டதும் எதையோ ஞாபகப்படுத்துவது போல் உன்னிப்பாய்ப் பார்த்தாள்.

என் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு ‘நாவல்’ புஸ்தகத்தை எடுத்து வாசிக்க முயற்சி பண்ணினேன். ஆனால் என் கண்கள் புஸ்தகத்தின் வாக்கியங்களில் உயிரில்லை யென்று படிக்க மறுத்துவிட்டன; அடிக்கடி பத்மாவின் உருண்டு திரண்ட கோமளமான கைகளையும், அவள் அழகிய மெல்லிய பாதங்களையும் கவிழ் பார்வையாய்க் கவனிக்கத் தலைப்பட்டன. சில சமயங்களில் வண்டியின் அசைவினால் அவள் ஆடை என்மேற்படும்; சில சமயங்களில் அவளுடைய் மெல்லிய இனிய மூச்சு என் மேல் குளிர்ந்து வீசும். அப்பொழுதெல்லாம் நான் சுவர்க்கத்திலிருப்பது போலவே எண்ணி விடுவேன். புஸ்தகத்தை மூடி வைத்து விட்டு உறங்க எண்ணினேன். உறக்கம் வந்தால் தானே?

பத்மா சிறிது உறங்கத் தொடங்கினாள். என் பக்கத்திலிருந்தவர்களும் ஒவ்வொருவராய் உறங்கினார்கள். எனக்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. அவளை நன்றாக் உற்றுக் கவனித்தேன். என்ன களங்கமற்ற முகம்! என்ன அழகு! என்ன அமைதி! என் கண்களுக்குப் பசி எங்கிருந்து வந்ததேர தெரியாது. அவை மலர விழித்து அவள் அழகைப் பருகிக் கொண்டிருந்தன. அவள் கையிலிருந்த கைக்குட்டை நழுவி விழுந்தது. அதை யெடுத்து வைத்துக்கொள் என்று என் மனம் சொல்லிக்கொண்டேயிருந்தது. ஆனால் பெருந்தியாக புத்தியுடன் அதை அவள் அருகில் வைத்துவிட்டேன்.

விழுப்புரம் வந்தது. அவ்வளவு நேரமும் விழித்துக் கொண்டுதானிருந்தேன். தாகமோ சகிக்க முடியவில்லை. ஒரு ‘ஆரஞ்ச் க்ரஷ்’ வாங்கிச் சாப்பிட எண்ணினேன். வெளியில் ப்ளாட்பாரத்தில் கூவிக் கொண்டிருந்தவனிடத்து ஆரஞ்ச் வாங்கிக் குடிக்கப் போனேன். அப்பொழுது பத்மா விழித்துக் கொண்டு ‘என்ன தாகம்!’ என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள். நான் என் கையிலிருந்த ‘கரஷ்’ டம்ளரை அவளிடம் கொடுத்து விட்டு வேறொன்று வாங்கிக் குடித்தேன். அவள் பையிலிருந்து காசு எடுத்தாள்; அதற்குள் நான் விலை கொடுத்து விட்டேன். ‘இதோ காசு இருக்கிறது. எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றாள். என் மனம் சம்மதிக்குமா? ‘பரவாயில்லை. நான் காசு கொடுத்து விட்டேன்’ என்றேன். அவள் என்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன் ‘உங்களுக்கு உறக்கம் வரவில்லையா? எனக்குத் தூக்கம் கண் நிறைந்திருக்கிறது’ என்று சொல்லிப் பழையபடி உறங்கத் தொடங்கினாள்.

விழுப்புரம் தாண்டினவுடன் மழையும் புயற்காற்றும். என் பக்கத்திலிருந்த ஜன்னல்கள் இரண்டையும் அடைத்தேன். மற்றவர்களும் ஜன்னல்களையெல்லாம் அடைத்தனர். வெளியிலே காற்றும் மழையுங் கலந்து ஊளையிடும் சத்தம் காதுகளைத் துளைத்தது. ஜன்னலின் இடுக்கு வழியாக மழைநீர் வண்டிக்குள்ளே மெதுவாய் வந்து கொண்டிருந்தது. வண்டியேர் மிக் வேகமாய்ச் சென்றது. திருச்சி ஜங்ஷன் வந்து சேர்ந்தது. அந்த மழையிலும் அங்கே பெருங் கூட்டம். வண்டியிலிருந்து இறங்க வேண்டியவர்களின், பாதையை அடைத்துக் கொண்டு ஜனங்கள் நின்றார்கள். புது வண்டிகள் சேர்க்கப் போவதாகத் தெரிந்ததும், ஆட்களெல்லாம் அங்கே ஓடினார்கள். அலை மேல் அலையாய் வந்து வண்டிகளைத் தாக்கிக் கொண்டிருந்த ஜனத்திரள் சிறிது குறையத் தொடங்கிற்று. பத்மா சிறிது கண்ணைத் திறந்து ‘திருச்சியா?’ என்றாள். ‘ஆமாம், திருச்சிதான்’ என்று சொல்லி வெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

வண்டி புறப்பட்டது. மழையும் புயற் காற்றும் கொஞ்சமும் குறையவில்லை; அடித்த வண்ணமாகவே யிருந்தது. அதிகாலை; 5:45 இருக்கும். மலை புரண்டு விழுவது போல் ஒரு சத்தம். வண்டிகள் தடம் தப்பி முறிந்து விழுந்தன. நாங்கள் வண்டித் தொடரின் கடைசியிலிருந்தோம். விளக்குப் போய் விட்டது. சாமான்கள் தட தடவென்று ஒன்றன் மேலொன்றாக விழுந்தன. ஜனங்களும் அப்படியே விழுந்தார்கள். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த பத்மா என் மேல் – மோதி விழுந்தாள். எங்கும் ‘ஓ’ என்ற அலறு சத்தம். வண்டி நின்றுவிட்டது.

என் வண்டியிலிருந்தவர்கள் ஒவ்வொருவராய் எழுந்து இறங்கத் தொடங்கினார்கள். நானும் பத்மாவோடு கீழே இறங்கினேன்.

கோரமான காட்சி. ஒரே கூச்சல், தொடரில் முன்னிருந்த மூன்று வண்டிகள் ஒன்றோடொன்று தாக்கி, ஒரேமுகமாய்ப் பள்ளத்தில் விழுந்து, நொறுங்கி, ஆட்களின் உருப்படியேயில்லாமற் செய்துவிட்டன. இஞ்சினும் அப்படியே. பின்னிருந்த வண்டிகளின் அடியில் நசுக்குண்டு கிடந்தவர்களும், தலையுடைந்தவர்களும், கையொடிந்தவர்களும், காலொடிந்தவர்களுமாக் எத்தனையோ பேர்! எங்களைப் பிடித்த நல்ல வேளை, எங்கள் வண்டியிற் சேதமில்லை. ஆனால் ஊமையடி வாங்கியவர்கள் மிகப் பலர், இந்தக் கோரத்தைக் கண்டு தலைசுற்றி மயங்கிப் பத்மா கிழே விழப்போனாள். நான் அவளைத் தாங்கிக்கொள்ளாமற் போனால் கீழே விழுந்து தலையிற் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். அவளைத் தாங்கும்படியாக எனக்கு நேர்ந்தது எனக்கு மகிழ்ச்சி தந்தது. சுற்று முற்றிலும் துக்கமயமாயிருந்த இந்தச் சமயத்தில், என் மனத்தில் மாத்திரம் ஓர் ஓரத்தில் ஓர் இன்பவுணர்ச்சி! உலக இன்பமே இப்படித்தானோ?

பொழுது புலர்ந்துவிட்டது. ரயில்வேக்காரர்கள் வண்டியில் அகப்பட்டுக் கொண்டவர்களை எடுப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். தந்திகள் பறந்தன. அக்கம் பக்கங்களிலுள்ள டாக்டர்கள் கார்களில் வந்திறங்கி ரண் சிகிச்சை செய்யத் தொடங்கினார்கள். யார் யாருக்கு என்னென்ன உதவி செய்யக் கூடுமோ அவற்றைச் செய்வதில் அவர்கள் சிறிதும் தளரவில்லை. பக்கத்துக் கிராமத்திலிருந்து ஒரு பெரிய மிராசுதார் காலையில் வந்து பிரயாணிகட்குப் பலகார முதலியன தயார் செய்து கொடுப்பதற்குத் தம்முடைய சிப்பந்திகளை ஏவித் தாமும் மேற்பார்வை செய்து வந்தனர். காங்கிரஸ் ஸேவர் சங்கத்தினர் படை படையாக வந்து பேருதவி செய்தார்கள். அரசாங்க அதிகாரிகள் வந்து அனைவரையும் விசாரித்து, வேண்டும் உதவிகளை அளித்து வந்தனர். பேராபத்தில் நம்முடைய ஜனங்கள் ஒருவருக் கொருவர் உதவுவதைப் பார்த்தால், ‘எல்லோரும் ஓர் குலம்’ என்ற பாரதி வாக்கு உண்மைதானென்று புலப்பட்டுவிடும்.

பத்மாவைத் தாங்கிப் பிடித்து ஓரிடத்தில் இருத்தி அவளுக்குக் காப்பியும் பலகாரமுங் கொண்டுவந்து கொடுத்தேன். ‘ராமு! நீங்கள் ஒன்றும் சாப்பிடவில்லையே’ என நடுக்குற்ற குரலோடு என்னைக் கேட்டாள். என் பெயரை ஞாபகத்தில் வைத்திருந்து என்னை அழைத்தது எனக்குத் தேவாமிர்தம் கிடைத்தது போல் இருந்தது. ‘நான் சாப்பிடுகிறேன்; முதலில் நீ சாப்பிடு, பத்மா!’ என்றேன். நான் பெயர் சொல்லி அழைத்தது அவளுக்கு எப்படியிருந்ததோ தெரியாது. அவள் இதழில் மெல்லிய இளநகை அரும்பிற்று. நானுஞ் சென்று காப்பி குடித்துவிட்டுத் திரும்பினேன்.

ஊருக்குத் தந்தி கொடுக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்தது. உடனே ‘நாம் இருவரும் ஸ்டேஷனுக்குச் சென்று தந்தி கொடுத்தால் நல்லது; ஊரில் எல்லாரும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்களே’ என்றேன். அதை உடனே செய்ய வேண்டுமென்று அவளும் ஒப்புக்கொண்டாள். ஒரு பையனைக் கூப்பிட்டு, எங்கள் இருவர் பெட்டிகளையும் எடுத்துவரச் செய்து, ஸ்டேஷனுக்குச் சென்று, ‘க்ஷேமம். கவலை வேண்டாம். அடுத்த வண்டியிற் புறப்படுகிறேன்’ என்று பத்மாவின் தகப்பனாருக்கும் என் தகப்பனாருக்கும் தந்தி கொடுத்தோம்.

மத்தியானம் ஆயிற்று. விபத்து நடந்த இடத்திற் க்ருகில் வேறு ரயில் வண்டித்தொடர் வருமென்றும், அதில் பிரயாணிகள் ஏறிச் செல்ல வேண்டுமென்றும் தெரியவந்தது. எங்களுக்கோ பசி தாங்க முடியவில்லை; வெயிலுங் கடுமையாக இருந்தது. பத்மா தன் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பிஸ்கட் பெட்டியை எடுத்து என் கையில் கொடுத்தாள். நான் அதைக் கத்தியால், திறந்து அவளிடம் நீட்டினேன்.

பத்மா :- நீங்கள் ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லையே?

நான் :- பின்னால் எடுத்துக் கொள்கிறேன்; அல்லது எடுத்துத் தந்தால் போச்சு.

பத்மர் என் குறிப்பை உணர்ந்து கொண்டாள் என்பதில் சந்தேகமில்லை. அவளே பிஸ்கட்டுகளை எடுத்து என் கையில் தந்தாள். நான் அவற்றை வாங்கிக் கொண்டு ‘இவைகள் மாத்திரம் தானா? இந்த விரல்கள் பிஸ்கட்டுகளைக் காட்டிலும் நன்றாயிருக்கும் போலிருக்கிறதே!’ என்றேன். எனக்கு இந்த அசட்டுத்தனம் எப்படி அன்று வந்ததென்று தெரியவில்லை. என் மனம் ஒரு நூதனவுலகிற் சஞ்சரிப்பது மட்டுந்தான் தெரிந்தது.

பத்மா :- (சிறிது கடுமையர்க முகத்தை வைத்துக் கொண்டு) தன்னந்தனியாக ஒரு பெண் அகப்பட்டுக் கொண்டால், இப்படியெல்லரந்தான் பேசுகிறதோ?

நான் :- நாம் தனிமையாயில்லை. நம்மைச் சுற்றிலும் எத்தனையோ பேர்கள். நாம் இரண்டு குழந்தைகள் இங்கே அக்ப்பட்டுக் கொண்டோம்; விளையாட்டாய்ப் பொழுது போக்குவோமே?

பத்மா :- நல்ல குழந்தைகள்! நல்ல விளையாட்டு! இப்பேர் பிஸ்கட் சாப்பிட்டாகட்டும். அப்புறம் விரல்களைப் பற்றிப் பார்த்துக் கொள்வோம்.

‘நான் பேசியிருப்பதெல்லாம் என் தங்கையோடு தான். வேறு பெண்களோடு பேசியதேயில்லை. பெண்களைக் கண்டால் நான் ஓடிவிடுவேன்; என்னைக் கண்டால் அவர்கள் ஓடிவிடுவார்கள் என்று என் நினைப்பு, அவர்கள் ஓர் ஆண்பிள்ளையோடு கேலி பண்ணிப் பேசக்கூடுமென்று நினைக்கவில்லை.

பத்மர் பேசியது எனக்கு அதிசயமாயிருந்தது. ‘விரல்களைப்பற்றி எப்போது பார்த்துக் கொள்வதென்று தெரிந்தால், கொஞ்சம் அமைதியாயிருக்கும்’ என்று மெதுவாகச் சொல்லி விட்டு, பிஸ்கட் வேலையில் முனைந்தேன். அவைகளைச் சிறிது சிறிதாகப் பிட்டு வைத்தேன். பத்மா என்னைக் கவனித்துக் கொண்டிருந்தாளே யொழிய, பிஸ்கட் சாப்பிடவில்லை. அவள் முகத்தில் ஓர் ஆச்சரியக் குறி தோன்றிற்று. அதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ‘இத்துண்டுகளைச் சாப்பிடலாமே’ என்றேன். சாப்பிடலாம்; ஆனால் எனக்கு விரல்கள் தேவையில்லை’ என்றாள் பத்மா.

நான் :- தேவை எல்லாருக்கும் ஒன்றுபோலிருக்க முடியுமா? ஆளுக்கு ஆள் வித்தியாசப்படக் கூடியது தானே!

பத்மா :- (சிரித்து) எனக்கு விரல்களும் வேண்டாம்; தத்துவ-உபதேசமும் வேண்டாம்,

நான் :- இப்போது பிஸ்கட் சாப்பிட்டாகட்டும். பிற்பாடு தேவை எது என்பதைத் தெரிந்து கொள்ளுகிறேன்.

இருவரும் பிஸ்கட்டை முடித்தோம். ‘நம் இருவருக்கும் தேவையானது ஒன்று இருக்கிறது. அது கொண்டு வருகிறேன்’ என்று பக்கத்திலிருந்த கிணற்றுக்குச் சென்றேன். பத்மா திரும்பவும் என்னை நன்றாய் உற்றுக் கவனித்துவிட்டுத் தனது பெட்டியில் கடிதவுறையிலிருந்த ஏதோ ஒன்றை எடுத்துப் பார்த்து விட்டு, அதைப் பெட்டிக்குள் வைத்துவிட்டாள். நான் தீர்த்தங் குடித்துவிட்டு, அவளுக்கு ஓலைப் பட்டையோடு தீர்த்தங் கொண்டு வந்தேன். அவளுடைய முகம் வியர்த்திருந்தது; மகிழ்ச்சிக் குறியும் கொஞ்சம் புலப்பட்டது. நான் கவனியாதவன் போல் நின்றேன். பாத்திரம் ஒன்றும் அகப்படாததால், அவள் கையை விரித்து வாயருகில் வைத்துக்கொள்ள, நான் தீர்த்தம் விட்டுக் கொடுத்தேன். சிறிது விஷமமாகவே, அதிகத் தீர்த்தங் கொட்டினேன்; அவள் சட்டை கொஞ்சம் நனைந்துவிட்டது. தன் அழகிய கண்களால் என்னை நோக்கிப் புன்முறுவல் செய்து ‘ஆண்களெல்லாம் விஷமக் குடுக்கைகள்’ என்றாள்.

நான் :- என்னளவில் நான் விஷமியல்ல, அங்கே அனுபவத்தில் எப்படி யெல்லாம் நேர்ந்திருக்குமோ?

பத்மாவின் முகம் சுண்டி விட்டது. அவள் குளிர்ந்த கண்களில் கோபம் அனல் வீசிற்று. ஓலைப் பட்டையை என் கையிலிருந்து வெடுக்கென்று பிடுங்கித் தீர்த்தங் குடித்து முகத்தை அலம்பிக் கொண்டு போதும், ‘போகலாம்’ என்றாள்.

கோபத்தாற் சிவந்த முகத்தில் ஒரு தனி வசீகரம் இருந்தது. ஆனால் அவளிடம் விளையாடுவது நெருப்போடு விளையாடுவதுபோல் என்று தெரிந்து கொண்டேன். என் மனம் மிகவும் வருத்தம் அடைந்தது. கொஞ்ச் நேரம் நின்றுகொண்டிருந்தேன். அவள் மனம் சிறிதும் இளகாததைக் கண்டு, கொஞ்சம் தூரத்திற் சென்று நானும் உட்கார்ந்து ரயில் வண்டி வருவதை எதிர்பார்த்திருந்தேன்.

ரயில் வண்டி கட்சியாய் வந்து சேர்ந்தது.

இருவரும் சென்று ஒரு வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். உடனே சிலர் எங்களை மொய்த்துக் கொண்டார்கள். ‘வண்டியில் என்ன நடந்தது? வண்டி மேற் போவதில் ஆபத்து இருக்கிறதென்று ஒருவரும் அடையாளங் காட்டவில்லையா? டரைவர் உறங்கிக் கொண்டிருந்தானா கார்டு என்ன பண்ணிக்கொண்டிருந்தான்? எத்தனை பேர் இறந்திருப்பார்கள்? எத்தனை பேருக்குப் படுகாயம் உண்டாயிருக்கும்? எத்தனை பேர் இறந்து போகக்கூடிய நிலைமையில் இருக்கிறார்கள்?. எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள், எத்தனை குழந்தைகள் வண்டியில் இருந்தார்கள்?’ என்றெல்லாம் சரமாரியாய்க் கேள்விகளைப் பொழிந்தார்கள். என்னைக் கேட்டது போதாதென்று பத்மாவையும் துன்புறுத்தத் தொடங்கினார்கள். நான் அவர்களிடம் நேற்றிரவு 4 மணியிலிருந்து இந்த நேரம் வரை சாப்பாடு கூட இல்லாதபடி அந்த அம்மா கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அவளைப் போய் இன்னும் துன்பப்படுத்தாதீர்கள். வேறு யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று சொல்லிப் போகச் செய்தேன். கூட்டங் கலைந்ததும், பத்மா கோபந்தணிந்து என்னைக் குளிர்ந்து பார்த்தாள். ஆனால் நான் மனச் சோர்வோடு படுத்துக்கொண்டேன். அவள் என்னை நோக்கிய வண்ணமாயிருந்தாள்.

திண்டுக்கல் வந்து சேர்ந்தோம். எனக்கு ஒரு தந்தியும், பத்மாவுக்கு ஒரு தந்தியும் வந்திருந்தது. ‘தந்தி கிடைத்தது. வண்ணார்பேட்டை விசுவநாதையர் பெண் பதமா அங்கிருந்து ரயிலில் வருகிறாள். விசாரித்துத் தெரிந்து ஜர்க்கிரதையாய் அழைத்து வா. கோபால கிருஷ்ணன்’ என்று எனக்குத் தந்தி. இதை அவளிடம் விட்டெறிந்தேன். அவள் தனக்கு வந்ததை என் பக்கத்தில் விட்டெறிந்தாள். ‘புதுக் கிராமம் பாங்கர் கோபால கிருஷணையர் பிள்ளை ராமு அங்கிருந்து வருகிறான். அவன் கூட ஜாக்கிரதையாய் வா. விசுவநாதன்’ என்று’எழுதியிருந்தது. ஒருவரை யொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம்.

பத்மா :- உங்கள் விஷமத்தைத் தெரிந்து தான் ‘ஜாக்கிரதையாய் வா’ என்று எழுதியிருக்கிறது.

நான் :- அவ்விடத்தோடு பேசும்போது நான் ஸர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று நினைத்துத்தான் ‘ஜாக்கிரதையாய் அழைத்து வா’ என்று எழுதியிருக்கிறது.

பத்மா :- ஏட்டிக்குப் போட்டி; சரியாய்ப் போச்சு.

எனக்குப் பசி அதிகமாயிருந்தது. கீழே இறங்கிப் பிராமணாள் விடுதியில் இரண்டு சாம்பார்ச் சாதமும் இரண்டு தயிர்ச் சாதமும் வாங்கி வந்தேன். பத்மாவுக்கு ஒவ்வொன்று கொடுத்து, ‘சாப்பிடலாமே’ என்றேன்.

‘நீங்கள் சாப்பிட்டதற்குப் பின் சாப்பிடுகிறேன்’, என்றாள். ‘பிணங்க நேரமில்லை; ஜாக்கிரதையாய்க் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பு என்னுடையது. ஜலம் வேண்டாமா?’ என்று சிரித்துச் சொல்லி, பக்கத்து வண்டியிலிருந்த ஒருவரிடம் பாத்திரம் வாங்கி, ஜலம் எடுத்து வந்தேன். பத்மர் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நான் பக்கத்திலிருந்து கவனித்து வந்தேன். இடையிடையே என்னை நோக்கிச் சிரித்துக் கொண்டு சாதத்தைக் காலி செய்தாள். நான் பழையபடி பாத்திரத்தை யெடுத்து ஜலத்திற்காக்க கீழே இறங்கிச் சிறிது தூரம் சென்றேன். மணியடித்துவிட்டது. ‘ராமு, ராமு, வண்டியில் ஏறுங்கள்’ என்ற சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன். பத்மாவின் கலவரத்தையும் வியர்த்தொழுகும் அவள் முகத்தையுங் கண்டேன். உடன் சட்டென்று திரும்பி வண்டியில் ஏறிக்கொண்டேன். அந்த வண்டியில் நானும் அவளும் தான். வேறு யாரும் இல்லை.

என் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டதும், எனக்கிருந்த திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லை. பத்மாவின் மீது அதிகாரஞ் செலுத்தினால், என்னோடு கோபித்துக் கொள்ள மாட்டாள் என்று உறுதியாய் விட்டது. ‘நீங்கள் சாப்பிடவில்லையே?’ என்று வருந்திக் கேட்டாள்.

நான் :- (மெதுவாய்) உன் கோபம் ஆறியதும், என் பசி ஆறிவிட்டது!

பத்மா :- (சிரித்து) அப்படியானால் சாப்பாடு வேண்டாமே?

நான் :- எத்தனை நாள் வேண்டுமாலும் விரதமிருக்கிறேன் – நான் விரும்புவது மட்டும் கிடைக்குமானால்.

பத்மா :- விரும்புவது எதுவோ?

நான் :- இன்று எனக்குக் கிடைத்திருக்கும் பொறுப்பு எப்போதும் எனக்கு இருக்க வேண்டுமென்பது தான்.

பத்மா சிரித்து விட்டு மௌனம் மேற்கொண்டாள். கோடைக்கானல் ரோட் வந்தது. நான் ஜலம் கொண்டு வந்து விரைவில் சாப்பாட்டை முடித்தேன், பத்மாவின் கண்கள் என்னை விட்டு நீங்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்துத் தன் பெட்டியைத் திறந்து ஒரு ‘புஸ்தகத்தை’ எடுத்தாள்.

நான் :- பெட்டியில் என்னென்னவோ சாமான்கள் இருக்கலாம். எனக்கு ஏதாவது இருக்கிறதோ?

பத்மா:- பிஸ்கட் இருக்கிறது; விரல் இருக்கிறது; பக்ஷணம் இருக்கிறது; படம் இருக்கிறது; புஸ்தகம் இருக்கிறது, என்ன வேண்டும்?

நான் :- விரல்கள் வேண்டும்.

பத்மா :- (சிரித்து) தனியாகப் பிரித்துத் தர முடியாதே.

நான் :- ஏதாவது சாக்குப் பேர்க்குச் சொல்லுவதில் ரொம்ப சமாத்து. இருக்கட்டும். படம், புஸ்தகம் இவைகளைத் தந்தால் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

படங்கள் வைத்திருந்த ‘ஆல்பம்’ ஒன்றும் சில புஸ்தகங்களும் கொடுத்தாள். படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றின் அடியிலும் இன்னார் என்று எழுதியிருந்ததால் எனக்குப் பத்மாவைச் சிரமப்படுத்த வேண்டிய அவசியம் நேரிடவில்லை. விசுவநாதையர், அவர் ஸம்ஸாரம், அவர் மூத்த மகள் ஸரோஜா, ஸரோஜர்வின் அகமுடையான், இவர்கள் படங்களெல்லாம் பார்த்தேன். கடைசியில் பத்மாவின் படங்கள், பல வயதிலும் எடுத்தவை, இருந்தன. அப்படங்களில் ஒன்றைக் காட்டி, ‘இந்த அம்மாவைத் தெரியவில்லையே, இவள் யார்?’ என்று கேட்டேன்.

பத்மா :- (சிரித்துக் கொண்டு) தெரியாமற் போனால் போகிறது. உங்களுக்கும் நஷ்டமில்லை; அவளுக்கும் நஷ்டமில்லை.

நான் :- அவளுக்கு நஷ்டமில்லாமல் இருக்கலாம், எனக்கு நஷ்டமென்று தான் தோன்றுகிறது.

பத்மா:-அந்த அம்மா மூன்று வருஷங்களுக்கு முன்பு இருந்தாள், இப்போது இல்லை.

நான் :- அந்த அம்மாவை அவ்விடத்திலே தேடுவதாயிராதே.

பத்மா :- இராது.

நான் :- அப்போ, நான் எடுத்துக் கொள்ளுகிறேன், என்னிடம் இருக்கட்டும்.

பத்மா :- அவளுக்கு உரியவர்கள் கேட்டால், நான் என்ன பண்ணுகிறது?

நான் :- உரியவர்கள் இன்னாரென்று தெரிந்தாலொழியத் தருவதாயில்லை.

பத்மா :- என் அண்ணா இருக்கிறார்.

நான் :- ஆமாம், விசுவநாதையரவர்கள்.

பத்மா :- அவருக்குச் சொந்தம்.

நான் :- அவருடைய இரண்டாவது புத்திரிதானே? வேறு யாருக்கும் சொந்தம் இல்லையே?

பத்மா :- (தலை குனிந்து) இல்லை.

நான் :- அப்போ, நானே வைத்துக் கொள்ளுகிறேன், எனக்கு வேண்டும்.

பத்மா :- யாராவது பார்த்து விட்டால் –

நான் :- ஒருவர் கண்ணிலும் படாது. அப்படியானால், நீயே உன் கைப்படத் தருவாயா?

பத்மா :- படத்தை வாங்கி அதன் கீழ்த் தேதி மட்டும் போட்டுக்கொடுத்தாள்.

நான் :- ஒன்றையும் இனமாக வாங்கிக் கொள்ள மாட்டேன், இதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஷெல்லியின் கவிதைப் புஸ்தகம் ஒன்று உயர்ந்த க்ட்டடம் செய்து தங்க எழுத்துப் பொறிக்கப் பெற்று இருந்தது. அதில் ‘ராமு அன்புடன் அளித்தது’ என்று எழுதிக் கொடுத்தேன். பத்மா புன்னகை ததும்பிய முக விலாசத்துடன் ‘புஸ்தகம் மட்டுந்தான் தந்திருப்பது; அதனுடன் ஒன்றுமில்லை: ஞாபகம் இருக்கவேண்டும்’ என்று சொல்லி அங்கிகரித்துக் கொண்டாள்.

விருதுநகருக்கு மாலை 6-30-க்குப் போய்ச் சேர்ந்தோம். எங்கள் இரண்டு பேர் பெட்டிகளயும் திருநெல்வேலிக்குப் போகும் வண்டியில் மாற்றிக் கொண்டோம். என் அதிர்ஷ்டம், மாற்றிய வண்டியிலும் நாங்கள் இருவர்மட்டிலுந்தான். நான் காப்பி வாவழைத்தேன், பத்மா பிஸ்கட் எடுத்துக் கொடுத்தாள்.

நான் :- விரல்களும் சேர்ந்து தானே தருகிறது?

பத்மா :- விரல்களில்லாமல் பின் எப்படிக் கொடுப்பது?

என் மனத்தில் சுரந்தெழுந்த காதலையும் மகிழ்ச்சியையும் தடுக்க முடியவில்லை. அவள் விரல்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டேன், வெறி பிடித்தவன்போல் ஆய்விட்டேன். என் சரீர முழுவதும் மின்சாரம் பரவுவது போன்ற ஓர் உணர்ச்சி. கை விரல்களை விடவே மனமில்லை. அவள் முகம் சிவந்துவிட்டது. மெதுவாக, ‘விடுங்கள், யாராவது பார்த்து விடப் போகிறார்கள்’ என்றாள். நானும் கையை விட்டுவிட நேர்ந்தது. பிஸ்கட்டில் கவனஞ் செலுத்தலானேன். ஒரு பிஸ்கட்டில் பாதியை படித்துர் சாப்பிட்டுவிட்டு, மற்றொரு பாதியை அகஸ்மாத்தாய்ட் வைப்பதுபோல் கீழே வைத்தேன், அவளும் அதைப் பராக்காயெடுப்பது போல் எடுத்து வாயிலிட்டுக்கொண்டாள். எனது மனத்தில் மகிழ்ச்சி ததும்பி வழிந்தது.

பத்மா தன் பெட்டியைத் திறந்தாள். அதிலிருந்து கடிதவறையில் அடங்கிய ஒரு படத்தையும் ஒரு கடிதத்தையும் எடுத்து என் முன் வைத்தாள். படத்தைப் பார்த்தேன். அது என்னுடையது. ஆச்சரியப்பட்டு, கடிதத்தைப் பார்த்தேன்.

வண்ணார்பேட்டை,
15-9-40

என் அருமைத் தங்கை பத்மீக்கு,

இங்கே யாவரும் க்ஷேமம். அங்கே உன் க்ஷேமத்திற்கும், உனது தோழியர்களின் க்ஷேமத்திற்கும் அடிக்கடி எழுது. உன் அத்திம்பேர் எனக்குக் கடிதம் எழுதிக் கொண்டே இருக்கிறார். சாப்பாட்டுக்குர் சிரமமர்க் இருக்கிறதாம். கூடிய விரைவில் நான் போய்ச் சேர வேண்டுமாம்.

சில நாட்களாக அப்பாவுக்கு ஒரு வேலை அமர்ந்து விட்டது. விடிந்தால் பொழுதூர்ந்தால் உனக்குத் தக்க வரன் பார்த்துக் கொண்டேயிருக்கிறார் எத்தனையேர் ஜாதகங்களும் போட்டோக்களும் வந்து சேர்ந்தன. ஜேர்ஸியர் இன்னின்ன ஜாதகங் களைக் கவனிக்கலாமென்று எட்டு ஜர் தகங்களைப் பொறுக்கிக் கொடுத்திருந்தார். நேற்றுக் காலையில் நானும், அப்பாவும், அம்மாவும் எட்டு ஜாதகங் களையும் போட்டோக்களுடன் பார்வையிட்டு, எது எல்லா வகையிலும் பொருத்தமா யிருக்கிறது என்று தீர்மானித்தோம். எங்களுக்கு உத்தமமென்று. தோன்றிய ஜாதகனின் படத்தை இக்கடிதத்துடன் அனுப்பியிருக்கிறேன். நீ நன்றாகப் பார்த்து உன் மனம் எப்படி யென்பதைக் கூசாமல் எழுத வேண்டும்.

ஜாதகன் பெயர் ராமஸ்வாமி. ராமு என்று அழைப்பார்களாம். தகப்பனார் நம்மைப் போலவே பெரும் பணக்காரர்; பாங்கர்; கோபால கிருஷ்ணய்யர் என்று பெயர். அவர் இருப்பது வீரராகவபுரத்தில் புதுக் கிராமத்தில். அவருடைய ஸ்ம்ஸாரம் ரொம்ப நல்ல மாதிரியென்று எல்லாரும் சொல்லுகிறார்கள். ஜர் தகனுக்கு ஒரு தமையன், ஒரு தங்கை, ஒரு தம்பி. தமையன் மதுரையில் வேலை பார்த்துக் கொண்டு குடும்பத்தோடு இருக்கிறாராம். தங்கை கல்யாணமாகிப் புக்ககத்தில் இருக்கிறாளாம். தம்பி சிறு குழந்தை.

ராமு பட்டணத்தில் கிறிஸ்தவ கலாசாலையில் பி.ஏ – யில் வர்சித்து வருகிறானாம். நல்ல ஒழுக்கம். பார்ப்பதற்கு மிக நன்றாயிருப்பானாம். இது உண்மையென்பது இந்தப் படமே சொல்லுகிறது. நான் கல்யாணமாகா தவளர் யிருந்தால், இவனை உனக்குக் கொடுப்பேனோ என்பது சந்தேகம்தான். அத்திம்பேர் கோபித்துக் கொள்வார்; பரவாயில்லை. அவருக்கும் இன்று இந்த சம்பந்தத்தைக் குறித்து எழுதியிருக்கிறேன். உன் பதில் வந்ததற்கப்புறம் தான் மற்ற ஆலோசனையெல்லாம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்பத் திருப்தி. நேற்றுச் சாயங்காலம் கோபால கிருஷ்ணய்யர் வந்திருந்தார். அவருக்கும் திருப்தி என்று தான் தோன்றுகிறது. இன்னுமொரு பாங்க் வைத்துவிடலாமல்லவர்? பிள்ளையாண்டான் அபிப்பிராயம் தீபாவளிக்கு அவன் வரும்போது தெரிந்து கொள்ளலாம் என்றார். உன் பதிலை மறு தபாலில் எதிர்பார்க்கும்,

உன் அன்புள்ள
ஸரோஜி.

கடிதத்தை வாசித்ததும், என் பாக்கியமே பாக்கியம் என்று குதித்தும், கூத்தாடினேன். என் இதயத்திலிரும்ப மழை பொங்கப் பெருக்கெடுத்தது. ‘பத்மி, பதில் எழுதிவிட்டாயல்லவா?’ என்றேன்.

பத்மா :- உடனே எழுதிவிட்டேன், எனக்குப் பிடி…’ என்று இழுத்துச் சொல்லி என் முகத்தை நோக்கி விஷமமாகச் சிரித்தாள்.

நான் – பெண்கள் விஷமக் குடுக்கைகளே அல்ல; ரொம்ப நல்லவாள், இருக்கட்டும். பேய் பிடித்திருக்கிறது என்றுதானே எழுதினாய?

பத்பா : ஆமாம், அது விரலைப் பிடித்திருக்கிறது என்று எழுதினேன்.

இருவரும் கொல்லென்று சிரித்தோம்.

நான் :- எனக்குப் பிடிக்கவில்லை யென்று சொல்லிவிடப்போகிறேன்.

பத்மா :- இஷ்டப்படி செய்யுங்கள்.

நான் :- இஷ்டப்படி செய்யலாம், இல்லையா!

இப்படிச் சொல்லி அன்பு ததும்பும் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினேன். அவள் அழகிய விரல்களில் ஒரு முத்தம் இட்டேன்.

பதமா :- (என் வலது கையைப்பிடித்து அதைத் தன் கையால் அழுத்தி) இனிமேல் நாம் ஒன்றாயிருந்தால் சேஷ்டைகள் தான், மணியாச்சியில் நீங்கள் அடுத்த வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள், தீபாவளிக்கு மறுநாள், காலை 8 அல்லது 9 மணிக்கு உங்களை என் வீட்டில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். நான் பட்டணம் திரும்புவது தீபாவளி கழிந்த மூன்றாம் நாள் சனிக்கிழமை 1 மணி ரயில் வண்டியில், அதுவரை-

நான் அவள் கையைப் பிடித்து அழுத்தி மௌனமாயிருந்தேன். மணியாச்சி வந்து சேர்ந்தது. அவள் கட்டளைப்படி நடந்து கொண்டேன். அவள் வண்டியில் பிரயாணிகள் சிலர் ஏறிக்கொண்டனர்.

இரவு சுமார் 9 மணிக்குத் திருநெல்வேலிப் பாலம் போய்ச் சேர்ந்தோம். என் தகப்பனார் மிகுந்த ஆராமையுடன் என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘அந்தப் பெண் எங்கே?’ என்றார். ‘மூன்றாவது வண்டியில் இருக்க வேண்டும்’ என்றேன். ‘முட்டாள்’ என்று என்னைக் கடிந்து கொண்டார். அதே சமயத்தில் பத்மாவின் தகப்பனார் என் தகப்பனாரையும் என்னையும் சுட்டிக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். பத்மாவின் கனிந்த பார்வை என் காதற் கனலை ஜொலிக்கச் செய்தது. அவள் புன்னகை தவழ்ந்த முகம் என் உள்ளத்தில் ஒரு தூண்டாமணி விளக்காக் ஒளிர்ந்தது.

– சிறுகதை மஞ்சரி, முதற் பதிப்பு: 1944, தினமணி காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email
இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு பேரா. ச.வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர். பிற மொழி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *