ராமநாதனின் கடைசிப்பக்கங்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 10,505 
 
 

புதிதாக தார் மீட்டிய சாலை அது… வழியெங்கும் மரங்கள், அந்த மரங்களின் வாயிலாக ஆங்காகே எட்டிப் பார்க்கும் குறும்புக்கார வெயில். அந்த சாலையின் நான்கு வழி முனையின் இடது பக்கம் திரும்பினால், ‘பாரதி’ தெரு… அந்த தெருவில் வலதுபுறத்தில் நான்காவதாக இருக்கும் நீல நிற வீடு தான் ராமநாதனின் வீடு… மன்னிக்கவும் … ராமநாதன் வசிக்கும் வீடு… கதவைத் திறந்து உள்ளே மாடிப்படிகள் பத்தைக் கடந்து வலது பக்கம் திரும்பினால் ஒரு சிறிய அறை வரும்… அதில் தான் தற்போது ராமநாதன் தன்னுடைய கடைசி நொடிகளை நினைவுகளின் வாயிலாய் கரைத்துக்கொண்டிருகின்றார். மங்கலான வேஷ்ட்டி, அதனிடம் போட்டிபோடும் அளவு மங்கலான மேலாடை, ஒட்டிய கண்கள், கன்னங்களில் உள்ள குழியின் அளவு அவரின் பற்களின் வலிமையையும் வயதையும் பறைசாற்றிவிடும், நெற்றியில் திருநீர்கீற்று, தளர்ந்த சருமம், அதனின் ஊடே அழுத்தம் குறைந்து காணப்படும் நரம்புகள், கண்ணாடியின் உதவியுடன் அங்கும் இங்கும் அலைபாயும் கருவிழிகள், சுருக்கம் சுருக்கமாய் தளர்ந்த செவிமடல்கள், முன்பொரு காலத்தில் தொந்தியிருந்த சுவடே தெரியாதவாறு காட்சியளிக்கும் வயிறு, குச்சியை நட்டுவைத்தாற்போல் கரங்களும், கால்களும். இது தான் தற்போதைய ராமநாதனின் அங்க அடையாளங்கள்…

எந்த ஒரு சங்கடங்களும் அனுபவிக்காமல் இறைவனடி சேர்வதே உத்தமம் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். ஆனால், உண்மையாக அது இறப்பிற்கு மட்டும் தானா…? ஏன் வாழும் பொழுது மனிதன் சந்திக்காத சங்கடங்களா….?

சரி சங்கடமே இல்லாமல் வாழ்ந்தால் எப்படி இருக்கும்…? முற்றுப்பெறாமல் தானே இருக்கும்….? அப்படித் தானே சங்கடங்களே அல்லாத இறப்பும்…? இது தான் ராமநாதன் அவரின் அனுபவத்தில் பயின்றது….

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழும் பொழுது பற்பல ஆசைகளும் எண்ணங்களும் உதிக்கும்…. ஆனால் அதுவே இறக்கும் தருவாயில் அவன் மனநிலை எவ்வாறு இருக்கும்…? இறப்பைப் பற்றி யாரேனும் வாழும் பொழுது எண்ணி அதிகபட்சமாய் வியந்ததுண்டா அல்லது குறைந்தபட்சம் பயந்ததுத்தான் உண்டா…? தன்னுடைய இறப்பு உறுதி செய்யப்பட்டு, அதன் கடைசி நொடிகளையோ அல்லது நிமிடங்களையோ அனுபவிப்பவன், ஒன்று அதிகபட்சமாய் இறப்பை எண்ணி அஞ்சுவான், இல்லை ‘தனக்கு ஒரு சாவு வராதா’ என்று ஏங்குபவன் அவனுடைய வாழ்க்கையை மனத்திரையில் ஒட்டிப்பார்ப்பான். இதில் ராமநாதன் இரண்டாம் ரகம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உள்ளுணர்வு இருக்கவே செய்யும். அந்த உள்ளுணர்வும் பெரும்பாலும் சரியாகவே கணிக்கும். அதே போல் தான் ராமநாதனின் உள்ளுணர்வு அவர் இன்னும் சில நொடிகளில் மரணத்தின் படியை அடைவார் என்று உரக்க உரைத்தது. அந்த தருணத்தில், அவரின் மனம் அவருடைய வாழ்வின் முக்கியப் பக்கங்களை அசைபோடச் செய்தது.

எப்படி ஒரு விதை முட்டிமோதி உடைந்து எழுந்து பல இன்னல்களைச் சந்தித்து மாபெரும் விருட்சமாய் உதிக்கின்றதோ அப்படித்தான் மனிதனின் நிலைமையும். லட்சக்கணக்கான உயிரணுக்களுடன் போட்டியிட்டு, அதில் வெற்றிவாகைச் சூடிய சில உயிரணுக்களின் உள்ளிருந்து வெளிப்படும் அதீத சக்தி வாய்ந்த அணுக்கள் தான் கருமுட்டைக்குள் குடிபுகும், இவ்வாறு அதன் வலிமையை நிரூபிக்கும் உயிரணுக்களின் போராட்டத்தில் தான் ஒரு ‘உயிர்’ கருவாகின்றது.

அந்த கருவின் பாலினத்தை கண்டறியும் விந்தை கடவுளுக்கே வெளிச்சம். அப்படிப்பட்ட ஒரு வெளிச்சத்தில் உ(க)ருவானவர் தான் ராமநாதன்.

விவரம் ஏதும் அறியா குழைந்தப்பருவம் சொர்கத்திற்குச் சமானம்.. அப்பருவத்தில் குழந்தைகளை கடவுளுக்கு ஒப்பிட்டு பேசுவர், ஏனெனில் அப்பருவத்தில் தான் மனிதன் தெளிந்த நீரோடையாய் காட்சி தருவான்… அப்படிப்பட்ட ஒரு பருவத்திலும் பலவிதமான ஏக்கங்களைச் சுமந்தவர் தான் இந்த ராமநாதன்.. அந்த பருவத்தில் என்ன ஏக்கம் என்று வினவுகின்றீர்களா? இருக்கிறதே… காரணம் அவரின் தந்தை.

அவரின் தந்தை மிகவும் கண்டிப்பானவர். அம்மாவையே அடக்கித் தான் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார். விவரம் தெரிந்த அம்மாவுக்கே அந்த நிலைமை என்றால், விவரம் அறியா ராமநாதனைப்பற்றி சொல்லவா வேண்டும்…? ராமநாதன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை தீர்மானிப்பது அவரின் தந்தையே… மழலையில் ஒரு விளையாட்டு உண்டா, கேலி உண்டா, அல்லது குறைந்த பட்சம் சிரிப்பு தான் உண்டா…? ம்ம்ஹும்.. ஏதும் இல்லை…. என்றும் அகத்திலும் மனதிலும் ஒருவாறு இறுக்கத்தை சூழ்ந்துக்கொண்டு தான் ராமநாதன் தன் நாட்களை கழித்துக்கொண்டிருந்தார்.

இப்போழுதுக்கூட நாம் நம்முடைய மழலைப்பருவத்தை நினைத்துப்பார்த்தால், நம்மை அறியாமலே நம் இதழ்கள் சற்று அகன்று புன்னகையை உதிக்கும். ஆனால், ராமநாதன் அப்படி இல்லை.. இந்த தள்ளாத வயதில் அவர் தன்னுடைய பால்ய காலங்களை நினைத்துப்பார்த்தால் அதில் எங்கும் தன்னுடைய தந்தையே காட்சி தருவார், அவருக்கே உரிய இறுகத்துடனும் கண்டிப்புடனும்… ஆகையால், அவர் அதை அதிகம் எண்ணாமல் தன்னுடைய விடலைப்பருவத்திற்க்குத் தாவினார்..

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிகவும் ஜாக்கிரதையாக கடக்க வேண்டிய பருவம் – விடலைப் பருவம்… ஏனெனில் அந்தப்பருவம் தான் அவனுள் நல்லவற்றையும் தீயவற்றையும் அதிகமாய் விளைவிக்கும்… அப்படித் தான் இவருக்கும் பற்பல ஆசைகள் உதயமாகின…. அதில் சில, புகைவிடுவதால் எத்தைகைய ஆனந்தம் பிறக்கும் என்பதை அறியும் ஒருவிதமான ஆவல், மது அருந்துவதால் எத்தகைய கிரக்கத்திற்கு உள்ளாவோம் என்பதை உணரும் ஒரு ஆவல், மேலும் பெண்களின் உறுப்புகளும் அதன் வடிவமைப்புகளும், அதில் ஆணின் பங்கையும் உணர எழுந்த மனக்கிளர்ச்சி…

ஆண்டாண்டு காலமாகவே ஆண் ருதுவானால் உண்டாகும் உணர்வுகள் இந்த மூன்றும் தான்.. அதில் ராமநாதன் ஒன்றும் விதிவிலக்கல்ல… அவருக்கும் அத்தகைய உணர்வுகளே உண்டானது… அதை ஒருவாறு திறம்பட செயல்படுத்தவும் துவங்கினார். மிகவும் கட்டுக்கோப்பாக வளரும் ஒரு மனிதன், தனக்கென தாமே யோசிக்கும் பொழுது தடம் புரள்வது சகஜம்தானே…. முதல்கட்டமாக தன்னிடம் உள்ள சில்லறைகளுக்கு ஏற்றவாறு கிட்டிய ‘பீடியை’ வாங்கி, ‘லொக்கு லொக்கு’ என்று இறுமியவாறு இழுக்கவே செய்தார்… பனைமரத்தில் பலநாட்கள் அடைகாக்கப்பட்டு இறக்கிய ‘கல்லையும்’ அருந்தி கிரங்கவும் செய்தார்… அடுத்த கட்டமாக, அஞ்சி அஞ்சி ஊருக்கு ஒதுக்குப்புறமான திரையரங்குகளில் நிழலாய் உலாவும் பெண்களின் அங்கங்களை மானசீகமாய் உணரவும் செய்தார்.

ஒருநாள் இப்படித்தான் அந்த திரையரங்குகளை முற்றுகையிடும் பொழுது, வெளியூர் செல்லும் அவர் தந்தையின் பேருந்து அவ்வழியே கடந்தது. இனி, கேட்கவா வேண்டும்….? ராமநாதன் அவர் வாழ்நாட்களில் மறக்கவே முடியாத அளவிற்கு அனுபவித்த தண்டனைகள் அவை…

“இனியும் இப்படியே உட்டுபுட்டோம்னா, தரிகெட்டுத்தான் போவான் … முதல் வேலையா இவனுக்கு ஒரு கால்கட்டுப் போடணும்….” என்று அவரின் தந்தை தீவிரமாய் சொல்லிவிட்டார்..

அவர் அதை நினைத்து கனவு காணத் துவங்கினார்… இல்லறம் பற்றி துளிகூட எந்த ஒரு எதிர்பார்ப்பும் அவருக்கு இல்லை, அவரின் எண்ணங்கள் எல்லாம் காமம் என்னும் உணர்வில் தான் லயித்திருந்தது. அதில் ஒன்றும் தவறில்லை, அவரின் வயது அப்படி… ‘இருபது’ முடிவதற்குள் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது…

அன்றைய கதாநாயகியைப்போல் பெண் அமையும் என்று பலமாய் எதிர்பார்த்த அவருக்கு, பெரும் ஏமாற்றம் அந்த பெண்ணின் வடிவில் வந்தது. அவள் பெயர் ‘ராஜாத்தி அம்மாள்’. பெயருக்குப் பொருத்தமான பொருள் அவளின் முகத்தில் அல்ல, அகத்தில் உண்டு.. ஆனால், இவருக்கு அது தெரிந்தால் தானே…? அழகை மட்டும் பெரிதாய் எதிர்பார்த்த இவருக்கு, கண்டிப்பாக அவர் மனைவியின் மேல் வெறுப்பு வர காரணகாரியங்கள் தேவையல்ல…

பெரும் எதிர்பார்ப்புடனும், பயத்துடனும் புதியதொரு உலகத்தில் நுழைந்த அந்த பேதைக்கு கணவனின் அரவணைப்பும் கிட்டமால் தான் போனது. அவர் அவளை ஏறெடுத்துக்கூடப் பார்ப்பதில்லை, பார்ப்பதே அரிதென்றால் அங்கே பேச்சுக்கும் ஊடலுக்கும் என்ன வேலை….? சதா நண்பர்களிடம் திருமணம் என்னும் பந்தத்தைப் பற்றியும், மனைவி என்னும் வேண்டா சொந்தந்தைப் பற்றியும் வசைபாடிக்கொண்டே இருந்தார்.

எவ்வளவு தான் திமிறிக்கொண்டு இருந்தாலும், உடல் என்று ஒன்று உள்ளதே, அதற்கு பசி என்ற ஒன்றும் எடுக்கின்றதே….? உஷ்ணம் உடல் முழுவதும் பரவ, அவளை கட்டியணைத்தார் அவர்… ஒரு ஆணின் ஸ்பரிசம் முதல் முதலாக அவள் உடலை தீண்டுகையில் கிறங்கித்தான் போனாள் அவள்… ஆனால், பாவம் அவளுக்கு அப்பொழுது தெரியாது இந்த கூடலின் காரணம் கணவனின் காமப்பசியே என்று…. ஒன்றும் அறியா அந்த பேதைப்பெண்ணின் உள்ளமோ, அது கணவனின் அன்பும் அரவணைப்பும் என்று எண்ணி ஏமாந்து தான் போனது… சில நாட்கள் ஓடிய பின்பு தான் அவளுக்கு அந்த உண்மை தெரிய வந்தது. அதை எண்ணி வெம்பும் வேளையில், அந்த செய்தியும் அவளை எட்டியது… அவள் ருதுவானதின் பயனை அடைந்துவிட்டாள் என்பதே அது….!

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு மனிதனின் காமத்தின் எச்சம்.. எச்சமாய், இருவரையும் இணைக்கும் பாலமாய் பிறந்தான் அவன்… அன்றுவரை மனைவி மேல் எந்த ஒரு பற்றும் இல்லாத ராமநாதனின் மனதில் அவள் சம்மணமிட்டு அமர்ந்தாள்… வாழ்வின் அர்த்தத்தை அவர் உணர்ந்தார்… தன்னை இந்த சமூகத்தில் ஒரு உயர் ஸ்தானத்திற்கு கொண்டு சென்றதால், அந்த பெண்ணை இவர் வணங்கினார்… மெல்ல மெல்ல அவள் மேல் பாசமும் அன்பும் காதலும் கொள்ளத் துவங்கினார். அவனுக்கு அருண் என்று பெயரிட்டனர்…

வெறும் அந்திப்பொழுதில் கிட்டிய கணவணனின் பாசம், அன்றாடம் கிடைக்கும் பொழுது அவள் உண்மையாகவே பூரித்துத்தான் போனாள். இருவரும் தங்களின் பிள்ளையை ஊர் மெச்சும் பிள்ளையாக வளர்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அந்த ஆவல் எண்ணங்களோடு நில்லாமல் செயல்களின் மூலமும் வெளிப்படச் செய்தனர். தன் தந்தையிடம் தான் அனுபவித்த எந்த ஒரு மனக்கசப்பையும் தன்னுடைய பிள்ளைக்குத் தரக்கூடாது என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். இன்னொரு பிள்ளை பிறந்தால், தங்களின் பாசத்தை இரண்டாக பிளக்க நேரிடுமே என்று எண்ணி அவர்கள் ஒன்றுடன் நிறுத்திக்கொண்டனர். அவளும் கருத்தடை செய்துக்கொண்டாள். இன்றெல்லாம் அவருக்கு காமம் பெரிதாக தெரியவில்லை, மாறாக மனைவியும் மக்களும் தான் பெரிதாகத் தெரிந்தனர்.

அவர்களால் முடிந்த செல்வ செழிப்பை எல்லாம் கொட்டி அருணை வளர்த்தனர். அவனுக்கு அப்படி ஒரு சுதந்திரத்தை இருவரும் அளித்தனர்.. ஆனால், அந்த சுதந்திரத்தின் நுனி என்றுமே ராஜாத்தி கையிலிருக்கும், தவறும் பொழுது அவள் அதை தோதுவாய் இழுத்துப் பிடித்துக்கொள்வாள். அவன் ஆசைகளுக்கு அங்கே தடையில்லை… அதே சமயம் அவனின் ஆசை தவறானது என்றால், அதை இருவரும் அவன் மனம் நோகாமல் எடுத்துக்கூறுவர்.

என்றுமே மகன் அன்னையிடம் தான் அதிக பாசமாய் இருப்பான் என்று ஒரு கூற்று இங்கே உண்டு, ஆனால் அருண் நேரெதிர்… அவன் பாசமும் பிணைப்பும் என்றுமே ராமநாதனுடன் தான்.. அதில் அவருக்கு ஒரு தனிப் பெருமை வேறு…

படிப்பிலும் அருண் சுட்டி தான்.. தன்னால் ஆகாதது எதுவும் இல்லை என்றே அவன் நினைக்கலானான்… முடியாது எனில், தந்தையின் உதவியின் மூலம் எளிதாக பெற்றுவிடலாம் என்றும் நம்பினான்.. பற்பல பட்டங்கள் பெற்றான்.. ஊரே பாராட்டும் பிள்ளையாய்த் திகழ்ந்தான்.

‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்’ என்ற அய்யன் வள்ளுவனின் சொற்களுக்கு ஏற்றார் போல் வளர்ந்தான் அருண்.

தன்னுடைய விடலைப்பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளையும், மோகம் கொண்ட திமிறினால் மனைவியை மதிக்காமல் செய்த செயல்களையும் எண்ணி வருத்தம் கொண்டு, மனைவியிடம் பாவமன்னிப்பை வேண்டினார் ராமநாதன். அவளுக்குத் தெரியும், அவரின் குணம்… எல்லாவற்றிக்கும் சேர்த்து , “இதெல்லாம் சகஜம்ங்க…. இதுக்கெல்லாம் ஏன் வருத்தப்படுறீங்க….? உங்கள மாதிரி ஒரு கணவன் அல்லது தந்தையும் கிடையாது இவ்வுலகில்” என்று இன்னும் என்னவெல்லாமோ கூறி கணவனை சகஜநிலைக்கு கொண்டு வந்தாள் அந்த உத்தமி…. திருமணமானப் புதிதில் அவள் அனுபவித்த வலி அனைத்தும் அன்று தன் கணவன் கேட்ட மன்னிப்பால் பஞ்சுபஞ்சாய் பறந்தது.

ராமநாதன் தன் வாழ்நாளில் மிகவும் எண்ணிஎண்ணி மகிழும் காலங்கள் அவை… மனைவின் முழு அரவணைப்பும், மகனின் முழு அன்பும் இவருக்கு கிட்டிய காலங்கள் அவை… அருண் வளர்ந்துவிட்டான்.. அவனுக்கு என்று ஒரு வாழ்வை ஆரம்பிக்கத் தயாராகிவிட்டான்… அருண் கொஞ்சமாய் சுயநலவாதி, காரியவாதியும் கூட…

வாழ்வின் சுவாரஸ்யமே அடுத்தடுத்ததாக நடக்கும் சிறு சிறு திருப்பங்களில் தான் உள்ளது என்று ஞானிகள் சொல்லி நாம் கேள்விபட்டிருப்போம்.. அத்தகைய திருப்பத்தை ஏற்படுத்த வந்தவள் தான் ராதா – ராமநாதன் ராஜாத்தி அம்மாளின் மருமகள், அருணின் மனைவி….

ராதா – இக்கால நவநாகரீக மங்கை…. தனக்கென்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்று பெரிதும் நம்புபவள்… கூட்டுப்புழுக்களாய் கூட்டுக்குடும்பத்தில் சிக்கித் தவிப்பதை பெரிதும் விரும்பாதவள்.. அவளுக்கென்று ஒரு உலகம், அந்த உலகத்தில் அவளுக்கும், அவள் கணவருக்கும் தான் இருப்பிடம் என்று எண்ணுபவள்.. மனதில் இத்தனை வன்மம் இருந்ததால் தானோ என்னவோ அவள் இன்னும் ஒரு கருவை சுமக்க வாய்ப்பேற்படவில்லை.. இருப்பினும், அதற்காக பெரிதும் கவலை கொள்ளாதவள்…

அவள் பலமுறை முயற்சித்தும் இக்குடும்பத்தை உடைக்க முடியவில்லை… அதற்கு காரணம் ராமநாதன் தான்… இதற்கெல்லாம் பழி தீர்க்கும் வகையில் தான் அவள் செயல்பாடுகளும் அமைந்தது…. எடுப்பார் கைபிள்ளைப்போல் செயல்பட்ட அருணை அவள் கைக்குள் வைத்துக்கொள்ள அவளுக்கு நீண்ட காலங்கள் தேவைப்படவில்லை…

அதன் முதல் அடி தான் இந்த இல்லம்… ஆசையாசையாய் பல காலங்கள் வாழ்ந்து அனுபவித்த இல்லத்தை, ராதா அருணை வைத்து அவளுக்கு ஏற்றதாய் மாற்றிக்கொண்டாள்… வயதான பருவம், உடம்பில் தெம்பும் இல்லா பருவம், பாவம் ராமநாதன் தம்பதிகளால் என்னத்தான் செய்ய முடியும்….? அவர்களது ஆசைகளுக்கு இணங்குவதைத் தவிர…?

ராமநாதன் என்பவர் பெயரில் இருந்த இந்த இல்லம் இன்று அருண் என்பவனின் பெயரைக்கொண்டதாக மாறிவிட்டது… இதில் ராமநாதனும் ராஜாத்தியும் பொருட்களோடு பொருட்களாக வைக்கப்பட்டனர்…. வயதானவர்களுக்கென்று ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டது, அதுவும் மாடியில்….? முடியாமல் தள்ளாடும் அவர்கள் படியில் தான் இறங்கிவரவேண்டும், ஏதும் தேவையிருந்தால்.. அந்த படியில் ராஜாத்தி பலமுறை விழுந்தும் இருக்கிறாள்…

இவர்களின் உலகம் அந்த அறையுடன் முடங்கிவிட வேண்டும், அதையும் தாண்டி அவர்கள் வெளியே உலாவக் கூடாது… உலாவினால் அது பெரும் குற்றம் என்ற ஒப்பந்தமில்லா சட்டம் ஒன்று அவ்வீட்டில் வழக்கத்தில் உள்ளது…. இருவரும் வேலைக்குச் செல்லும் நேரங்களில் அவர்கள் எவ்வாறு வேண்டுமானாலும் உலாவிக்கொள்ளலாம், ஆனால் ராதாவும் அருணும் இருக்கும் பொழுது அவர்கள் உள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும்….

இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு தள்ளப்பட்டதற்கு தன்னுடைய முந்தய கால நிகழ்வுகள் தான் காரணம் என்று ஆணித்தரமாய் நம்பினார் ராமநாதன்.. அதை அவருக்கு கிடைத்த ஒரு தண்டனையாகவும் ஏற்றுக்கொண்டார்… ஆனால், ராஜாத்தி என்ன செய்தாள்…? அவள் எப்பொழுதும் ஒரே மாதிரி அனைவரின் மேலும் அன்பு செலுத்திக்கொண்டு தானே இருக்கிறாள் …? அவளுக்கு எதற்கு இந்த தண்டனைகள் என்று எண்ணும் பொழுது தான் அவர் உடைந்து போவார்…

ராஜாத்தியோ பலமுறை அவரிடம் “இன்னும் அதிக கஷ்டப்படாம செத்துப்போயிடனும்ங்க…” என்பாள்.. அதற்கு அவர் அவளை தீர்க்கமாய் பார்ப்பார்…. “எனக்கு நீ தான் ஒரே துணை…. நீயும் என்ன விட்டுட்டு போக ஆசைபடுறியாம்மா….?” என்று அவர் பதிலளிக்கும் முன் அவள் அழுதுவிடுவாள்… முதுமையில் பெரியவர்கள் குழந்தைகளாய் மாறிவிடுவர் என்று சொல்லுவார்கள், ஆனால் குழந்தைகளாய் இருக்கும் பொழுது நல்லதும் கெட்டதும் தெரியாமல் தெளிந்த நீரோடையாய் இருக்கும் மனிதவாசிகள், முதுமையில் மட்டும் கல் ஏறியப்பட்ட நீரோடையாய் மாறிப்போய்விடுவது தான் ஏனோ…?

ராதாவிற்கு நாய்கள் என்றால் அதிக பற்று… அன்று அவர்களின் வீட்டிற்குள் ஒரு ‘ராஜப்பாளயத்து வகையறா’ தன்னையும் இணைத்துக்கொண்டது… அதற்கு ‘ஜூலி’ என்று பெயரிட்டாள்… ஜூலி எப்பொழுதும் இவர்கள் இருவரையும் கண்டு குறைக்கும்… சில சமயங்கள் கடிக்கக்கூட விரையும்…. பாவம், அதுவும் அவர்களை வெறுத்து ஒதுக்கியது….. நம் வீட்டிற்கு புதிதாக யாரேனும் ஒருவர் வந்தால், நாம் நம் வீட்டில் உள்ளோரை எவ்வாறு மதிப்போமோ, அதேப்போல் தானே வந்தவரும் அவ்வீட்டில் உள்ளவரை மதிப்பர்..? ஜூலியும் அப்படித்தான் ராமநாதன் தம்பதியரை வெறுத்து ஒதுக்கியது… ராதா ஜூலியை பார்த்துக்கொள்ளும் சதவிகிதத்தில் ஒரு விழுக்காடு கூட ராமநாதனையும் ராஜாத்தி அம்மாளையும் பார்த்துக் கொள்ளவில்லை….. ஜூலியை காலையில் நடைப்பயிற்சிக்கு கூட்டிச்செல்வது, ராமநாதனின் வேலை. ஜூலியின் கழிவுகளை சுத்தம் செய்வது ராஜாத்தியின் வேலை… இருவரும் தங்களின் முடிவை எண்ணி காலங்களை கழித்துக்கொண்டிருந்தனர்….

என்றும் கணவனின் எதிரில் தன் கருத்துக்களையே முன்வைக்காத ராஜாத்தி அன்று என்றுமல்லாமல் அதிகமாய் தன்னை அவரிடம் காட்டிக்கொண்டாள்… முக்கால்வாசி வாதம் இறப்பை பற்றியே இருந்தது… யார் முதலில் போக வேண்டும், அதனால் உண்டாகும் நன்மைகள் என அந்த வாதம் பயணித்தது… அதில் பெரும்பாலும் இவளே முதலில் இறைவனடி சேரத் துடித்தாள்…

“நீயும் போயிட்டா, நான் எப்படி மா இந்த உலகத்துல இருப்பேன்…? நீயும் எனக்கு ஆதரவா இல்லாம, என்ன நிர்மூலமாக்காத.. “என்று அவரும் கெஞ்சவே செய்தார்…. தொடர்ந்து “உனக்கு பூவும் பொட்டும் தான் முக்கியம்னா, நான் இறந்த அப்பறம் கூட அத நீ எடுத்தெறிய வேண்டாம்…” என்று நய்யாண்டியும் செய்தார்… பதிலுக்கு அவளின் கண்கள் கங்கையை வெளிவிட்டது… அவளின் விரல்கள் அவரின் இதழ்களை முத்தமிட்டது… பதிலுக்கு அவரோ, “சரி.. நான் பேசல.. நீ மட்டும் என்ன விட்டுப் போகாத….” என்றார் அழுத்தமாய்..

அவர் வார்த்தையிலிருந்த அழுத்தம், ராஜாத்தி அம்மாளின் உடலில் இல்லை… நித்திரையிலேயே அவள் இறைவனடி சேர்ந்து விட்டாள்… ‘புண்ணியவதி சுமங்கலியாய் சென்றுவிட்டாள், இனி என் நிலை தான் என்னவோ..?’ என்றே வேதனைப்பட்டார் ராமநாதன்… முல்படுக்கையாய் சென்றன அவரின் நாட்கள்.. எப்பொழுதும் விரோதமாய் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஜுலியையும் கூட ராஜாத்தி அம்மாளின் இழப்பு மாற்றித் தான் விட்டது என்றே சொல்லவேண்டும்… அதன் விழிகளில் தெரியும் பாசம் இக்குடும்பத்தில் மற்றவர் உள்ளங்களிலிருந்து வெளிப்படாத ஒன்று… அன்று முதல் ஜூலியை என்றும் அவர் அறையில் காணலாம்… அவருக்கே கூட சில சமயங்களில் ராஜாத்தி தான் ஜூலியின் உடலில் இறங்கிவிட்டாளா என்று கூட யோசிக்கும் அளவிற்கு ஜூலியின் பாசம் இருந்தது….

ஜூலி ரொம்பத்தான் மாறிப்போயிருந்தது. என்றும் அதன் உலகம் ராமநாதனையே சுற்றிச்சுற்றி வந்தது. இருவரும் சேர்ந்து பந்து விளையாடும் பொழுது, ராமநாதன் சிறிது சரிந்தாலும் கூட, விரைந்து வந்து அவர் அருகில் நின்றுவிடும்… பெத்த பிள்ளையோ, மருமகளோ அவரிடம் காட்டாத பாசத்தை ஜூலி காட்டிற்று.

வாழ்க்கை ஒரு சீராய் சென்று கொண்டிருந்தால் தான் இறைவனுக்குப் பொறுக்காதே, அடுத்த அதிர்வு ஜூலியின் மூலம் வந்தது.. ஆம் ஜூலி நோய்வாய்ப்பட்டது… இனி அது இங்கே இருந்தால் அனைவருக்கும் (குறிப்பாக ராதாவிற்கு) நோய் தொற்றிக்கொள்ளும் என்னும் பொருட்டு, ராதா அதை கருணைக்கொலை செய்ய முன் வந்தாள். ஜூலியின் சப்தங்கள் அடங்கின… ராதாவிற்கு என்ன அடுத்த நாயைப்பார்க்க சென்றுவிட்டாள், ஆனால் ராமநாதனுக்கோ….?

இதுவரை ஆதரவாய் இருந்த மனைவியும் சென்றுவிட்டாள், அதன் பின் பாசமாய் இருந்த ஜுலியையும் அனுப்பிவிட்டனர்… எவ்வளவு சொல்லியிருப்பார் கருணைக்கொலை வேண்டாம் என்று…? இவர் வாதத்தை யாரவது கேட்டால் தானே….? இனி இந்த இயந்திர உலகத்தில் தனக்கு என்ன வேலை, என்று அவரும் துணிந்துவிட்டார்…

இதோ மெல்ல மெல்ல அவரின் கண்பார்வை மங்குகின்றது, நாசியின் வழியே மூச்சு முட்டுகின்றது, சீராக இயங்கும் இதயமும் தன்னுடைய பங்கை குறைக்கத் துவங்குகின்றது, யாரோ அவரை அமுக்குவதைப்போல் அவர் உணரத் துவங்கிவிட்டார், மயக்கமும் வரத் துவங்கிவிட்டது, உணர்வுகள் மறத்துப்போக ஆரம்பித்துவிட்டன, கண்களும் இமைகளோடு இமைகள் உரச ஆயத்தமாயின, உடலும் சில்லிடத் துவங்கியது, கண்டிப்பாக நாளை காலை இவரும் இறைவனடி சேர்ந்துவிடுவார் என்பதில் ஐயமில்லை… இனி இவர் அனுபவிக்கப்போகும் துன்பத்தை பார்க்கவோ எழுதவோ சக்தி எனக்கில்லை, உங்களுக்கும் தான் என்பது என் எண்ணம்…

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்பதை சொல்லி நான் இங்கே விடைபெறுகின்றேன்… நீங்களும் உங்களுக்குத் தெரிந்த தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அவரை வணங்கி அவருக்கு விடைகொடுங்கள்…….!

Print Friendly, PDF & Email

1 thought on “ராமநாதனின் கடைசிப்பக்கங்கள்

  1. வாஷிங் மெஷின், ஈஸி சேர் போல வீட்டில் ஒரு அசையாப் பொருளாக மாறிவிடும் பெற்றோர்கள் இந்தியாவில் மட்டும் அல்ல! வெளி நாடுகளில் சென்று பேபி சிட்டிங்க் செய்யும் பல பெற்றோர்கள் இந்தக் கணக்கில் சேர்கிறார்கள்!. உரிமையை எழுதியவர்கள் அதனை இழக்கவைப்பதுதான் தற்போதைய சமுதாயத்தின் பிரதான குறிக்கோள். இக்கதை வீட்டுக்கு வீடு நடப்பதாகவே நான் எண்ணுகிறேன். நீள அகலங்கள் அளவுகள் மாறலாம் ஆனால் நிகழ்ச்சி நிரல்கள் ஒன்றே! ஆசிரியருக்குப் பாரட்டுக்கள்! லென்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *