ராமசாமி காவியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2022
பார்வையிட்டோர்: 4,748 
 
 

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த ராமசாமி மனிதனாகக் கருதப்பட்டதற்குச் சரித்திர மில்லை. தேயிலைச் செடிக்குள் எல்லாமிருக்கும்’ என்று நம்பிக் கடல் கடந்த சீவராசிகளின் சந்ததியில் வந்தவன் மனித னாக முடியுமா? காட்டையழித்துப் பச்சைக் கம்பளம் போர்த்து, அதைப் பேணி, உணவுப் பிச்சையளித்தவன் மனிதனாக முடியுமா? இதெல்லாம் ராமசாமிக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள். இன்று, இந்த மாங்குளத்துச் சந்தியில் வெய்யில் நெருப்பில், அதை வெல்கின்ற வயிற்று வெக்கையுடன் மீனாச்சி, ‘செவனு’, மூக்கையா’வுடன் அலைந்து அவன் திரிவது ஒரு வெறும் பெளதிகநிலை. இதனால், இக்கணத்தில் இவன் மனிதனேயில்லை.

‘கறுப்பையா, இந்தப் பக்கம் வேலை கிடைக்குமென்று சொன்னானே?’

மீனாச்சி, கம்பமொன்றின் அடியில் குந்தி, “இப்படியே கொஞ்சம் நில்லுங்க. இந்தப் பக்கிட்டுப் போய் விசாரிச்சுக் கிட்டு வாறேன்” என்று சொல்லிச்சென்ற ராமசாமி போன திசையையே தனது சக்தியெல்லாம் திரட்டி, ஒரு சிறு கணப்பொழுது பார்த்துவிட்டுக் கண்களை மூடுகிற சந்தர்ப்பத்தில், இவ்வளவு நேரமும் கடைகளையும் பஸ்சிற்காக நிற்கிற மனிதர்களையும், அவர்களில் சிலர் எறிகிறவற்றையும் பார்த்து வயிற்றின் வெறுமையும் வெக்கையும் மனத்திற்கு இட்ட புரியாத கட்டளைகளை மனம் திருப்பி உடலுக்கு அனுப்ப, உடலின் சக்தி வெறுமையில் இருந்து, கட்டளைகள் கரைந்து போய், தாய்க்கு அருகே செவனும் மூக்கையாவும் சரிந்த கணத்தில், நேரம் என்பது அதன் அர்த்தத்தில் ஒரு கூறை இழந்து போயிற்று. ராமசாமி திரும்பியபோது, அவனோடு கூட இன்னொருத்தன் வந்துகொண்டிருந்தான்.

“பதினஞ்சு மைல்ன்னா சொன்னீங்க?”

“பஸ்சு, வானு எல்லாம் ஓடுதுங்க.”

“சல்லி கொஞ்சமும் சரி இல்லீங்களே.” ராமசாமியின் வெறுமை பொத்துச் சிதறி, வந்தவனின் வெறுமைக்குள் புகுந்தது.

வந்தவன் யோசித்தான். அவன் சட்டைப்பைக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட குபேரனின் ஓரற்பத்தாளடிமை , தானொரு வல்லமை படைத்த பிரம்மமாக மாறியது தெரியாமல், ராமசாமி யின் தேய்ந்த கரத்துள் அடங்கியது.

“இதை வச்சிக்கிட்டு என்னவாவது புள்ளைங்களுக்கு வாங்கிக் குடுங்க. மெசினு எதினாச்சும் வந்திச்சின்னா ஏத்திக்கிட்டுப் போவாங்க. ஒட்டுசுட்டானில் போயி முத்தையங்கட்டு எங்கயினா காட்டுவாங்க. அங்கின யாரையாச்சும் விசாரிச்சுக்கிட்டுப் போனாக் காட்டுவாங்க. காட்டுக்குள்ளாற கொஞ்சம் போவனும் தாரு போடாத பாதையிலே….” வந்தவனின் சொற்கள் திடீர் பிரம்மத்தின் சக்தியால் ராமசாமியின் காதுகளில் அதற்குமேல் ஏறவில்லை. சுருண்டு கிடந்த மீனாச்சி, செவனு, மூக்கையாவிற் கருகில் சென்றடைந்து, அவர்களை ராமசாமி எழுப்பினான்.

“இவுங்க, நம்ம கறுப்பையாவோட மச்சான் தோட்டத்துக்குப் போறதுக்கு நேரா இங்கனதான் ஏறணுமாம். கடவுள் புண்ணியமா ஏங்கண்ணில் பட்டாரு…” ராமசாமியின் குரலிலிருந்த உற்சாகம் அவளைப் பற்றவில்லை. தூங்கிச்செருகிய கண்களில் சக்தியைப் பாய்ச்ச அவளால் முடியவில்லை.

“அட, எதினாச்சும் மொதல்லே வாங்கிக் குடுங்கங்கி றேன்…’ என்றான் வந்தவன். ராமசாமி ஒரு முடிச்சிலிருந்த தகரக் குவளையொன்றைக் கொண்டு தேநீர்க் கடையை நோக்கி ஓடினான். இரண்டு ரூபாய்க்கு என்ன வாங்கிவிட முடியும்? என்னத்தையோ வாங்கி, நீரைக் குவளையில் நிரப்பிக் கொண்டு திரும்பி வந்தபோது, மீனாச்சி வந்தவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகளை எழுப்பிக் கொண்டுவந்ததை எல்லோருமா கப் பங்கிட்டு யாகம் செய்யத் தொடங்குகையில், வந்தவனுக்கு அவிபாகம் கொடுக்க முயன்றபோது, ராமசாமி தேவனாகிப் போனான். வயிற்றினுள் சென்ற சொற்பம், பசிப்பூதத்தைச் சாடி எழுப்பியது.

“ஒரு கெளமியில் நான் வந்திடுவேன். தோட்டத்தில் இன்னும் பேரு இருக்குங்க. வேலை குடுத்தாங்கன்னா, அங்கே இருக்கலாம் தான். புள்ளையொண்ணும் இருக்குதுங்களே?” வந்தவன், காலத்தின் கூறுகளைப் பிரிக்க இயலாதவனாய்த் தோன்றியதெல்லாவற்றையும் கொட்டினான். செவனும் மூக்கையா வும் வந்தவனைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டு முடித்து, மூட்டைமுடிச்சுகளை இறுக்கியபோதும் வந்தவன் பேசிக் கொண்டேயிருந்தான்.

“..அங்ஙனே போயி நின்னீங்கனா, மெசினு எதினாச்சும் வரும். ஏத்திக்கிட்டுப் போவாங்க.” அவன் ஓர் இடத்தைக் காட்டினான். மௌன மேகம் ஒன்று கவிந்தது.

“அப்போ நாங்க வர்றமுங்க..” ராமசாமி பேச்சில் நன்றி கனிந்தது. மீனாச்சி, செவனு , மூக்கையா மூவரும் அவனைப் பார்த்துகொண்டு நிற்கையில், ராமசாமி மூட்டைகளைத் தன் தலையில் ஏற்றினான்.

“-வர்றமுங்க” ஒரு கணத்தின் பின் மீனாச்சியும் சொல்லித் தன் மூட்டைகளை ஏற்றினாள். முல்லைத்தீவு ரோட்டில் யாத்திரை திரும்பவும் தொடர்ந்தது.

மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு போகிற பாதை ஒரு வெறும் தார்ப்பாதை மட்டும் அல்ல. சரியான சந்தர்ப்பத்தில், நேரத்தில் – அது எப்பவுமாக இருக்கலாம் – வந்தால், அது – ஒரு காவியம்; சுயசரிதை.

‘நான் இப்படிப் போய், அப்படிப் போய் என்று ரசனை களைக் காட்டும் ஓர் அழகான பாதை. இந்த ராமசாமி வந்த சந்தர்ப்பம் சரியில்லை என்று சொல்லிவிட முடியுமா? செவனு , மூக்கையா இவர்களுடைய கண்களில் தார்ப்பாதையி லிருந்தான உயரங்கள் குறைவானபடியாலே அவர்களுக்கு அதன் வியாபகம் உலகளவு நடக்க நடக்க முடிவில்லாத ஒரு பைசாச நீளப் பரிமாணம். மேலும், ராமசாமிக்கு உலகம் என்பது காண்பது அல்ல. உருவங்களுக்குப் பின்னால், உள்ளே ஆழத்தில் மறைந்திருப்பது பைசாசம். தன்னை வாட்டி, மீனாச்சியை வாட்டி செவனு , மூக்கையா எல்லோரையும் வாட்டி எடுக்கும் பைசாசம். எனவே, தலையின் மேலிருந்த மூட்டைமுடிச்சுக்களோ அன்றி நீளும் தார்ப்பாதையோ – இல்லை மீனாச்சி, செவனு , மூக்கையாவோ ஒரு மனப்பாரமல்ல. மெசினு’ ஒன்றையும் காணோம். ஒலுமடுவைத் தாண்டி, கறுப்பட்டமுறிப்பு வரச் சூரியன் தன் அன்றைய கடமையை முடித்ததையிட்டு மகிழ் பவன் போல் செம்முகம் காட்டிப் பதுங்கத் தொடங்கினான்.

சிறு கட்டடமொன்று பாதையருகே ராமசாமி கோஷ்டியை வரவேற்றது. சாமான்களை இறக்கிவிட்டு ஆயாசத்துடன் பார்த்தவன், கண்களில் தென்பட்ட ஒருவனை நோக்கி நடந்தான். “இந்த முத்தையங்கட்டு எங்கயிங்க இருக்கு?” ராமசாமியின் நம்பிக்கை, ஆயாசம் எல்லாம் அந்தக் கேள்விக்கூடாக வெளியே வந்தன. மனிதன் அவன்ளவிலேயே தனி. சுருட்டும் வாயிலிருந்தால் உலகமென்பது மாயை. அதாவது இல்லை’. ராமசாமி திரும்பவும் கேட்டான்.

“முத்தையங்கட்டு எங்கயிங்க இருக்கு?”

“உதால் இன்னும் போக வேணும்.” வாயிலிருந்த சுருட்டை ஒரு கையால் எடுத்து, கேட்கப்பட்டவன் ராமசாமியுடன் வந்த பரிவாரங்களை ஒருதரம் பார்த்துவிட்டு, மோவாயைச் சொறிந்து கொண்டான்.

“எவ்வளவோ தூரங்க?”

சுருட்டு யதாஸ்தானத்திற்குத் திரும்பவும் போய்விட்டது. ஒரு ‘தம்’மிற்குப் பின்னர் எச்சிலை சாவகாசமாகத் துப்பிக் கொண்டான்.

“அது பத்துப் பன்ரண்டு கட்டை வரும்.”

ராமசாமி காதுகளில் அது ஏறியிருந்திருக்கலாம். அவனது நம்பிக்கையின் பூரணிகள் நாசகாரப் புள்ளிகள். அவன் நல் லதையும் சந்தோஷமானதையும் கேட்டு ஒரு யுகம் – யுகாந்தி ரமே – இருக்கும்.

“அங்ஙனே வேல எதினாச்சும் கெடைக்குங்களா?”

“ம்…ம்”

ராமசாமி உயிர்த்துக்கொண்டான்.

“எங்கயிருந்து வாறாய்?”

“கம்பளையில் இருந்துங்க.”

“ம்ம்” அவன் போகத் தொடங்கினான். ராமசாமி இன்னும் பல கேள்விகள் கேட்க இருந்தான். “அட, இவுரு போறாரே” என்று திரும்பவும் அந்தக் கட்டடத்திற்குள்ளே போனான்.

“காலம்பற வாக்கிலே எந்திரிச்சுப் போவோம். இப்பிடிக் கெடவுங்க” என்று சொல்லி வாய் மூடுவதற்குள் ட்ராக்றர் ஒன்று ஆர்ப்பரித்துக்கொண்டு வந்து அருகில் நிற்க முயல்வ தைக் கண்டான். ” கேட்டுப் பார்ப்போம்” என்றுவிட்டுப் போனவன், “எல்லாத்தையும் கொண்டுக்கிட்டு வாங்க” என்று குளறியபடி ஓடிவந்தான்.

“முத்தையங்கட்டுக்குத்தான் போவுதாம்.” திரும்பவும் யாத்திரை தொடங்கிற்று. செவனுக்கும் மூக்கையாவுக்கும் இது புது அனுபவம். ட்ராக்றர் துள்ளத் துள்ளப் புளகாங்கிதம். ஒட்டுசுட்டான் சந்தி வர, ட்ராக்றர் நின்று சிலபேர் இறங்க, ட்ராக்றர் ஓட்டி வந்தவன் – ஒரு இருபத்தைந்து வயதிருக்கலாம் – “எங்க இறங்கிறியள்?” என்று ராமசாமியைக் கேட்டான்.

“முத்தையங்கட்டுக்குப் போவணுங்க.”

“முத்தையங்கட்டில் எங்கை?” அவசரப்பட்டான் ட்ராக்றர்காரன். இன்னும் சிலபேர் ஏறிக்கொண்டார்கள்.

“பஸ்சு நிப்பாட்டற இடத்துக்குங்க.”

கறுப்பையாவின் மச்சான், அங்கேதானே கறுப்பையா இருப்பதாகச் சொன்னான்? ட்ராக்றர்காரன் இதைக் கேட்டு முடிப்பதற்குள்ளே, கடைக்கு சிகரெட் வாங்கப் போய்விட் டான். சிகரெட்டும் கையுமாக லாவகமாக ஏறி உட்கார்ந்தான். ட்ராக்றர் திரும்பவும் இயங்கத் தொடங்கியது.

“ஆ, இறங்குங்கோ .” – இறங்கினார்கள்.

ஒரு மெல்லிய வளர்பிறையின் ஒளியில் வாய்க்காலொன்று தெரிந்தது. எப்படிப் போவது என்று யோசித்துக்கொண்டிருந்த போது, “பத்து ரூவா தர்றம் அப்படீன்னுட்டு, அஞ்சு ரூவாதான் குடுத்தாங்க.” இருவர் பேசிக்கொண்டு வருவது கேட்டது. தோட்டத்துக்கே திரும்பவும் போய்விட்ட ஒரு மாய உணர்வு வந்தது.

ராமசாமி மறித்துக் கேட்டான். “இங்கிட்டு கறுப்பையான்னு ஓராளு இருக்குதுங்களா?” வந்தவர்கள் இந்தப் புதுத் தாக்கங் களுக்குத் தங்களின் சூழ்நிலையிலிருந்து வரக் கொஞ்சநேரமெடுத்தது.

“எங்கிட்டிருந்து வர்றீங்க?” வந்தவர்களில் ஒருவன் கவனத் துடன் ராமசாமியின் சக பிரயாணிகளையும் நோட்டம் விட்டான்.

“கம்பளைங்க.”

“அப்பிடியா, என்னா தோட்டம் ” தலையிலிருந்த சாமானை இறக்கிவிட்டான்.

ராமசாமி சொன்னான். வந்த இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

“இங்ஙன அப்பிடி ஒரு ஆளு இருக்குதான். போயில்ல வெசாரிக்கணும். அண்ணே, இப்பிடியே நிக்கிறியா? இவங்களைக் கூட்டிக்கிட்டுப்போய் வுட்டிட்டு வந்திடறேன்.”

“அட என்னாப்பா இதில, நானுந்தான் வர்றேனே.”

“சரி, வாங்க போய்ப் பார்ப்போம்.”

ராமசாமி உற்சாகத்துடன் பின்தொடர்ந்தான். கானல் நீர் கடைசியில் நீரைத் தரத்தான் போகிறதோ? ராமசாமி, அவர்களின் பூர்வோத்திரங்களை விசாரித்தான்; தன்னுடையதைச் சொன்னான். ராமசாமியின் குரலில் தெரிந்த உற்சாகம் அவன் மனைவி, பிள்ளைகளையும் உற்சாகப்படுத்தியது.

குடிசை என்றுகூடச் சொல்ல முடியாத குடிசை. உள்ளே விளக்கு ஒன்று எரிந்தது. இதற்குக் காவலாய் ஒரு நாய் ஒரு கேடா? அதன் குரைப்பில் செவனு , மூக்கையா, மீனாச்சி நடுங்க, “கறுப்பையா அண்ணே!” என்று, கூட்டிக்கொண்டு போனவன் குரலெடுத்து விளித்தான்.

“யாரு?” என்றபடி ஒருத்தன் வந்தான். வேர்வையில் நிலவின் ஒளி மின்னி , அவன் அணிந்திருந்த அரைக்கால் சட்டையை எடுத்துக்காட்டியது.

“அது நானுங்க” என்று ராமசாமி முன்னுக்கு வந்தான். மீனாச்சி சிரித்துக் கொண்டாள்.

“அடே, நம்ம ராமசாமி, எப்ப அல்லாரும் வந்தீங்க?” என்று மீனாச்சி பரிவாரங்களைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

“இவங்கதான் இடத்தைக் காட்டினாக.” ராமசாமி தலையிலிருந்தவற்றை இறக்க, மற்றவர்களும் இறக்கிக்கொண்டார்கள். இப்போது கறுப்பையா, வந்தவர்களை நெருங்கிப் பார்த்தான்.

“இவுங்களைக் கண்டிருக்கந்தான். ஆனா, அவ்வளோ பளக்கம் இல்லை. நீங்க மொதலாங் கண்டத்தில் இல்ல இருக்கிறீய?” கூட்டி வந்தவர்களைக் கேட்டான்.

“ஆமாம், இருட்டில் வந்து உங்க பேரைச் சொல்லி, எங்க இருக்கிறீங்கன்னு வெசாரிச்சாரு. நீங்களாத்தான் இருக்குன்னுட்டு நேரவே கூட்டியாந்துட்டோம்.”

“நல்லதுங்க.”

“நாங்க இன்னும் தொலவு போவ இருக்குதுங்க. வரட் டுங்களா? அப்பொறமா கண்டுக்கிறோம்.”

“நல்லதுங்க..” கறுப்பையா குரலை உயர்த்திக் கூறிப் பின்னர் அவர்களை நெருங்கினான்.

“அங்ஙனே யாரும் வேலைக்கு ஆள் வேணுமின்னா இப்படி யொரு ஆளு இருக்குதுன்னு சொல்லி, ஏங்கிட்டயும் வந்து சொன்னியனா இவுங்களைக் கொண்டு போய் சேத்துடலாங்க. சொல்றியளா?”

“அதுக்கென்னாங்க, அன்னிக்கும் அங்ஙனே ஆளுங்க வெசாரிச்சாக . நல்லாக் கேட்டுக்கிட்டு வந்து சொல்றமுங்க.” கூட்டிக்கொண்டு வந்தவர்களில் இளையவன் சொன்னான். போவதற்காகத் திரும்பினார்கள்.

“ஒங்க பேரைச் சொல்லலீங்களே?”

மூத்தவன் வெற்றிலை எச்சிலைத் துப்பி, நிதானித்து, “எம் பேரு நடராஜா. இவன் மாணிக்கமுங்க” என்றான்.

“நல்லதுங்க.” ராமசாமியின் குரல் கறுப்பையாவினுடை யதைவிட ஓங்கியது.

“வர்றோங்க.”

“நல்லதுங்க.” இவர்கள் தலையில் சாமான்களைத் தூக்கி வைத்து நடந்து போவதைப் பார்த்துக்கொண்டே சற்று நேரம் நின்றபின்னர், “உள்ள வாங்க” என்றபடி கறுப்பையா உள்ளே நுழைந்தான்.

இந்த ‘உள்ள’ என்பது, இந்த நூற்றாண்டிற்கும், வேறு மனிதர்களுக்கு – பாக்கியவான்களுக்கு – அமைந்த உள்ள விற் கும் ஒவ்வாதவொன்று. உள்ளே ஒரு மூலையில் ஒரு தகரப்பெட்டி, வேறொரு மூலையில் சில கரிப்பானைகள். ஒன்றில், அன்று பின்னேரம் குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களிரண்டு. வேறொரு பானை, அடுப்பில் சிறிது சோற்றுடன் இறக்கப்படுகின்ற கட்டத்தை நெருங்கியபடி. சாக்கொன்றினை எடுத்துப்போட்டு உட்காரச் சொன்னான். எல்லோரும் குந்தினார்கள்.

“அப்பொறம்…. எப்ப வந்தீய?”

“அதையேன் கேக்கறீங்கண்ணே? கோச்சில ஒருமாதிரி வவுனியா வரிக்கும் வந்தமா, அந்தப் பக்கிட்டு நல்ல வேலை ஒண்ணும் கெடைக்கல. அப்பிடியே ஒரு மாதிரி நடந்தே வந்திட்டோம்.”

“அட, நடந்தா வந்தீங்க? புள்ளைங்க…?”

“புள்ளைங்க சோந்துபோயிருச்சிங்க….” மீனாச்சி பிள்ளை களை பாத்துக்கொண்டாள். அவர்கள் அவள் மடியில் படுத்துக் கொண்டார்கள்.

“ஏய்ன் சம்சாரம் எதினாச்சும் சொல்லிச்சா?” கறுப்பையா தன்னையே இக்கேள்விக்குள் புகுத்திக் கேட்டான். கண நேரம் மனம் எரிந்தது.

“ஒரு பயணம் வந்திட்டுப் போகச் சொல்லிச்சுங்க.” மீனாச்சி தான் சொன்னாள்.

கறுப்பையா ஒரு மௌனப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான். தோட்டத்திற்கு உடனேயே போய் விட வேண்டும் என்ற ஓர் உணர்வு அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.

“பேரு எங்கயிங்க ஒளுங்கா போடறாங்க? தெனப்பாட்டை ஓட்டறதே பெரிசாப் போயிருச்சிங்க…” ராமசாமி தொடர்ந்தான். செவனு காலை விறைத்தபடி தாயின் மடியில் திரும்பவும் படுத்துக்கொண்டதைக் கறுப்பையா பார்த்துத் தன்னைச் சுதாரித்துக்கொண்டு எழுந்து அடுப்பினருகில் சென்று சோறை ஒருதரம் கிளறி, அகப்பையால் பதம் பார்த்துக்கொண்டு, “வெந்திரிச்சு” என்று இறக்கிவிட்டான். நெளிந்த அலுமினியத் தட்டொன்றை தீராந்தியிலிருந்து எடுத்துக் கீழே வைத்தான். “புள்ளைங்களுக்கு மொதல்ல இந்தக் கஞ்சியக் குடுங்க” என்றவன், இவர்களுக்கு என்னத்தைக் கொடுக்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தான். ஒரு கணந்தான். “தங்கச்சி, இதா அந்த மூலயில் கொஞ்சம் தேங்காண்ண கெடக்குது. இந்த மீனை வெட்டிப் பொரிச்சிக்க, இதா வந்திடறன்” என்று தீராந்தியின் இன்னொரு மூலையிலிருந்த ஒரு தூண்டிலை எடுத்து, “நானும் வர்றதா?” என்ற ராமசாமியைப் புறக்கணித்தபடி நடந்தான். நிலவு மிகச் சரிந்துவிட்டது.

“கொளக்கட்டுக்கு போவமா? இல்லை வாய்க்கால்ல பாப்பமா?” என்று தனக்குத்தானே கேட்டவன், “அட, புளு இல்லியே” என்று திரும்பக் குடிசைக்கு நடந்தான்.

“அண்ணே இதிலியே எல்லாம் பாத்துக்குவம், இப்பிடியே குந்துங்க சொல்றேன்.” ராமசாமி கையைப் பிடித்து இழுத்தான்.

“யெனக்கே பத்தாதுப்பா இது. கொஞ்சம் பேசாம இரு, இதா வந்திடறேன்” என்று கத்தியொன்றை எடுத்துக்கொண்டு நடந்தான். கூடப் புறப்பட்ட நாயை அதட்டி நிற்பாட்டினான்.

நிலவுக்குத் தெரியுமா கறுப்பையா அவசரம்? தன்பாட்டிற்கு இதோ சரிகிறேன்’ என்று போக முயற்சித்துக்கொண்டிருந்தது என்றாலும், கறுப்பையா தன் கண்களின் சக்தியை இருட்டின் வலுவுடன் போராடுவதற்காய் இடுக்கிக்கொண்டான். சொற்ப நேரத்தில் அதுவும் தேவையில்லாது போயிற்று.

“ஐயாமாரக் கேப்பமா? இவ்வளோ நாள் எதினாச்சும் கேட்டிருக்கனா? குடுப்பாங்க” என்று சொல்லிக்கொண்டான்.

கால்கள் தாமாகவே ஐயாவிடம் கொண்டு போய்விட் டன. நாய் முதலில் குரைத்து மோப்பமிட்டு இறுதியில் வாலாட்ட , ஐயா இல்லை , அம்மாதான் கையில் லாந்தருடன் வெளியே வந்தாள். அது நானுங்க” என்று குரல் கொடுத்தான்.

“கறுப்பையாவே?” என்று உறுதிப்படுத்திக்கொண்டு, “என்ன இந்த நேரத்தில் ” என்று குரல் கொடுத்தாள். “நம்ம பக்கிட்டு ஆளுங்க கொஞ்சம் வந்திருக்குங்க…”

இருட்டில் லாந்தருடன் நிற்கின்ற அந்த மனுஷியின் ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கின்ற உணவுப் பொருள் வகையறாக் களின் பட்டியல் கறுப்பையாவிற்கு முழுமுற்றாகத் தெரியாது. அவன் நரைத்த தலைக்கூடாய் விரல்களைக் கோதி, என்னத் தைக் கேட்போமென்று மனம் நினைத்து வாய்க்குக் கட்ட ளையிடு முன் வாய் தன்னாலேயே அசைகிறது.

ஐயாவுக்கும் அம்மாவுக்கும் கலண்டர் முள்ளுவேலி; மாதத் தொடக்கங்கள், முடிவுகள் இந்த எல்லைக்குள் வருவன, வந்து போவன போய்விட வேண்டும்.

“இங்க பார் கறுப்பையா, இண்டைக்குத் தேதியென்ன தெரியுமே? அரைமாசம் முடியிறத்துக்குள்ள மாதச் சம்பளத் தில முக்காவாசி அரிசி, அது, இதெண்டு வேண்டிப் போடிறாய். எல்லாத்தையும் என்ன செய்யிறனி. அவருமில்லை. யாழ்ப்பாணம் போய்விட்டார். எல்லாம் பேந்து வா, பாப்பம்.” அம்மா லாந்தருடன் உள்ளே போய்விட்டாள்.

கறுப்பையா கொஞ்ச நேரம் நின்ற இடத்திலேயே நின்று பார்த்துவிட்டுத் திரும்ப நடக்கத் தொடங்கினான். பிறகு கொஞ்ச நேரம் நின்று ஐயாவின் குடிசையை ஒட்டியிருந்த வாழைத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டான். மெல்ல அதை நோக்கிச் சென்று மிகுந்த வாத்ஸல்யத்துடன் வாழைமரங்களைப் பார்த்துத் திரும்பவும் , நாய் அவனை நோக்கி ஓடிவரவும் சரியாக இருந்தது. செல்லத்துடன் அது தாவுவதை வரவேற்கின்ற மனநிலையில் அவன் இல்லை .

“அடச்சீ…” என்று நடந்தான். பின்னாலேயே வந்தது.

‘வள்’ என்று இன்னொரு நாய்ச் சத்தம் கேட்கத் திரும்பிக் கொண்டது.

நாய் திரும்பிப் போனது அவனுக்கு தெரியாது. திரும் பவும் சம்சாரம்’ நினைவு வந்துவிட்டது கறுப்பையாவுக்கு. தேயிலைச் செடிகளின் குளுமையும் குளிரும் மழையும் பனியும் சம்சாரத்தையொத்த பின்னணிகள். “ஏங்க” என்று கூவி ஏங்க வைக்கின்றவள் அவள். குளுமையும் குளிரும் பனியும் மழையும் கரைந்து கரைந்து வெக்கையாக உரு மாறுகின்றன. வயிற்றால் தலையில் நெருப்பு எரிகிறது. சிலிர்த்துக்கொண்டான்.

“வந்தாங்களே, அவங்ககிட்ட ஏதினாச்சும் கேட்டிருக்கலாம். குடுப்பாங்க. இவுங்க குடுக்கிறாங்க இல்லியே. என்னா ஆளுங்கப்பா, அடச்சே.” உதடுகள் கொஞ்சம் அசைந்தன. நடை வரவரத் தொய்ந்தது. இரண்டாவது காணி எல்லை.

“கெகக்கெக் கெக்கக்கே….” என்று கோழியொன்று பாய் வது சரிகின்ற நிலவில் ஒளிக்கீறொன்றில் புலனாகியது. நேரத்தை – சிந்திக்கின்ற மனித நேரத்தை சய(-) வாக்கிக் கொண்டு கறுப்பையாவின் கைகளும் கால்களும் கோழிக்குப் பின்னால் பாவ ஆரம்பித்தன. துரிதநடையில் இடைக்கிடை கண்டம்’, ‘திஸ்ரம்’, ‘மிஸ்ரம்’ என்ற நடைபேதங்கள். வீச்சில் கோழி கையில், கெக்கெக்கே என்று செற்பமாகத் தன் பிரலாபங்களை உலகுக்கு ஒப்பிக்க முயன்ற கோழிக்கு, பின்னால் அது தேவையில்லாமல் போய்விட்டது. கறுப்பையா ஓட்டமும் நடையுமாக…

“கேட்டிருக்குமோ?” உண்மையில் அது கேட்கவில்லை. கேட்டிருந்தால் ராசா (பக்கத்துக் காணிக்காரன்) எழுந்து வந்திருப்பானே? நன்றாக இன்னும் வெட்டப்படாத காட்டின் மூலையில் சென்று, தானே அதைத் திருத்தஞ் செய்தான்.

“கீரி கொண்டு போயிருச்சுன்னு நெனச்சிக்குவாங்க” என்று சொல்லிக்கொண்டான்.

குடிசைக்குள் செவனும் மூக்கையாவும் சமாதி. ராம சாமியும் மீனாச்சியும் மெல்லிய குரலில் அரைக்கண்களை மூடியபடி சம்பாஷணை. விளக்கு எரிந்து முடிகிற கட்டம் கறுப்பையா நுழைகிறான். “என்னாங்கண்ணே ?” ராமசாமி விழித்துக்கொண்டான்.

“இத வாட்டணும்” என்று சுருக்கமாக நெருப்பை வளர்க் கத் தொடங்கினான். ராமசாமிக்குக் கேள்விகள் கேட்க வேண்டும் போலவும் இருந்தது. கேட்க முடியாமலுமிருந்தது.

“கால்ல வந்து எடறிக்கிச்சி” என்றான் கறுப்பையா ஒரு சமாதானமாக. நெருப்பு வளர்ந்து, சிறிது நேரத்துக்கு முன் உலகத்தைப் பார்த்து, உலாவித் திரிந்த ஒரு கோழியின் உள்ளை அணைத்து, நெடியைப் பரப்பிப் பசியைக் கிளப்பிவிட்டது. ராமசாமிக்குச் சில தீர்மானங்களும், பல சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எனின், ஒரு மௌனம் மூலம் தன் இந்தச் சூழ்நிலை தீர்மானத்தை நசுக்குவதைக் காட்டிக்கொண்டான்.

“புள்ளைங்களையும் எழுப்புவமா?”

இந்த நெடி காற்றில் அலைந்துபோய் ராசாவின் நாசியில் படாமல் இருக்க வேண்டுமென்ற பிரச்சினைக்கு கறுப்பையாவின் தீர்வு இதுதான்.

சோத்துப் பானையைக் கண்கள் எட்டிப் பார்க்காமலேயே…?

“அப்பொறம் சொல்லுங்க” என்றான்.

விடிகிறது சில பேருக்கு நஷ்டத்தில்; சில பேருக்கு லாபத்தில். பல பேருக்கு சும்மா விடிகிறது. ராசாவுக்கு முதல் வகை. ராசா வளர்ந்துவருகிற ஒரு ஸ்தாபனம். அதன் அக்கவுண்டன்ட் – அவன் மனைவி. தண்ணியில்லாத பிரதேசமானபடியால் எல்லா வற்றிலும் கவனம். ஒரு கோழியைக் காணவில்லையென்பது நேற்று அடைப்புக்குள் விடும் போதே தெரிந்த சமாச்சாரம். கீரி கொண்டு போயிருக்குமென்பது ஜீரணிக்க முடியாததொன்று. எனவே, அக்கவுண்டன்ட் கிட்டடியிலும், ராசா ‘உலகம் முழுவதும்’ தேடுவதென்று தீர்மானம் செய்து, திக்குகள் பிரித்துக்கொண்டு போக…

கறுப்பையாவிற்கு மூன்றாவது வகை. ராமசாமிக்கு உலகம் இனித்தான் தோன்ற வேண்டும். லாபநட்டங்கள் அல்லது சும்மா, அதாவது இவை இரண்டுமற்ற சமநிலைப் புள்ளி இவையெல்லாம் விபரணைகளாகத்தான் இருக்க வேண்டும். இவைகளுக்கு ஒருகாலத்தில் விபரணைகள் இருக்குமென்றால் அந்த உலகத்தில் ராமசாமி இல்லை.

“மொதல்ல நீ மாத்திரம் வந்து வேல் விசாரி. அப்பொறமா மத்ததுக்களைப் பாத்துக்கிருவம்” என்று கறுப்பையா தீர்மானத்தை எடுத்தான். காலை மிகுந்த அழகுடன் விழித்துக்கொண்டது. சூரியக் கதிர்கள் பனியுடன் ஊடல், தயாராக இருக்கின்ற பாத்திகளின் பொலிவு மனத்துக்குத் தெம்பை அளித்தன.

“ஐயாகிட்ட போவம்” என்று போகும் போது சொல்லிக் கொண்டான்.

“அட, ஐயாதான் யாழ்ப்பாணம் போயிட்டாராமே. அம்மாகிட்ட கேப்பம்.” அம்மாதான் தீர்மானங்கள் எடுப்பதென் பதைக் கறுப்பையா கண்டிருக்கிறான். அம்மாவின் தீர்மானங் களெல்லாம் ஐயாவினதுக்கெதிர் என்பது வீட்டு நிலைமை. ஆனால், அம்மா தீர்மானம் செய்ய, அதுக்கெதிரான ஐயாவின் தீர்மானமில்லாதபடியால், ராமசாமி திரும்ப வேண்டியதாயிற்று.

“அவர் வரக் கேப்பம்” என்று அம்மா ஒரே வசனத்தில் திருப்பிவிட்டாள். தர்க்கரீதியான இரண்டாவது இடம் ராசாவின் தோட்டம். எனினும், இறந்துபோன கோழியின் ஆவியைவிட , ராசாவின் தெரிந்த கடூரப் போக்கு கறுப்பை யாவை அந்தப் பக்கமே போகாமல் விரட்டியிருக்க வேண்டும். கறுப்பையா எடதுகரையல வெசாரிப்பமா? மொதல்ல இந்தப் பக்கிட்டுப் பாத்துக்கிட்டு அப்பொறமா அங்கிட்டுப் பாப்பம்’ என்று பெலத்தே யோசித்தான், நேர்த்தியான குடிசைக்குள் ஒவ்வொன்றாகப் போய் வந்து…

யோகுவுக்கு இந்தமுறை ஆட்கள் தேவை. தான் விற்ற மிளகாய் எண்ணிக்கையைவிட மற்றவர் விற்ற மிளகாய் எண்ணிக்கை அவனுக்கெப்போதும் துல்லியமான பாடம். வித்தியாசம் மனத்தைக் குத்துகிறது. “வாய்க்கால் எங்க திருத்துறாங்கள் வேசமக்கள்” என்பது முழுச் சமாதானமில்லை . இந்தமுறை பலவாறாகவும் முயல்வது என்பது பிரதிக்ஞை . பத்தாயிரம் கண்டு மிளகாய் வைப்பதென்ற இலக்குத் தப்பாமல் அடைய வேண்டுமென்ற கட்டத்தில் ராமசாமியைக் கண்டு கொண்டான். வேலை செய்வன்போலான் கிடக்கு. சாப்பாடும் தந்து ஆறு ரூவா தருவன்” என்று நியமனம்.

ராமசாமி இரண்டையும் கண்டு பல யுகம். “சரிங்க” என்றான்.

“நம்ம சம்சாரம் ஒண்ணும் இருக்குதுங்க…. நல்லா வேல செய்யும்.” ஒரு நிமிட இடைவெளிக்குப் பிறகு இதையும் சேர்த்துக்கொண்டான்.

“அதெல்லாம் அப்பொறமா பாத்துக்குவம், மொதல்ல நீ வேலைக்கு வர்றதைப் பாரு” என்ற கறுப்பையாவை, யோகு மறித்தான். “ஆ, வரச்சொல்லு பாப்பம்.” விடிகிறது.

ராமசாமியை விட்டுவிட்டு கறுப்பையா திரும்பும்போது, கோழியின் ஆவி அவனைச் சூழ்ந்து கொண்டது. தோட்டத்துக் குள் நுழைந்து, கொத்தத் தொடங்கி ராசாவின் தோட்டப் பக்கம் திரும்பிப் பார்த்துக்கொண்டான். தேடுவதுபோல் தெரிந்த உருவங்கள் மனத்தில் வேறு பதிகிறார்களே! ஓங்கிக் கொத்தினால் போகிறார்களா?

ராசாவுக்கு ஐம்புலன்களும் கூரான கூர். கறுப்பையாவின் நாய், கோழிக்காலைக் கொறிப்பதைத் தூரத்திலேயே கண்டு கொண்டு சிலிர்த்துக்கொண்டான். “இந்த வேசமகன்ர வேல” என்று தீர்ப்பை வழங்கியவன் , நேரே கறுப்பையாவிடம் ஓடி, பலவாறாக அவனை அழைத்து – “என்னடா சொல்லடா என்னெய்தனீயெண்டு” என்று விசாரிக்க, அம்மா முதலில் தன் தலையை வெளியே நீட்டினாள். பிறகு வெளியே வந்தாள்.

“இங்கே ராசா, பொறு, பொறு. என்ன நடந்தது?”

மரண விசாரணையில் இது கொலைதானென்பது ராசாவின் தீர்ப்பு.

கறுப்பையா, “கீரி கொத்திப் போட்டதை, கீரியைத் தொரத் திப்பிட்டு எடுத்துக்கிட்டுப் போனதாம்.” சாதித்துக்கொண்டான். “இருட்டில் கோழி யாருதுன்னு தெரியல்லீங்க.” தருக்கபூர்வமான ஒரு கோட்டையை எழுப்பினான். இதற்கு மறுமொழி சொல்வது ராசாவுக்குக் கஷ்டம். ராசாவுக்கு வாயால் கோபம் வரமுடி யாதபோது, கைகளினாலும் கால்களினாலும் வரப்பண்ணிக் கொள்ளுவான். “இல்லீங்க ஐயா! அடிக்காதீங்க!” கறுப்பையாவின் ஓலம் வானை எட்டுகிறது. கூட்டமும் சேர்கிறது.

“அவனை விடப்பா, ராசா.” அம்மா தீர்மானமாகச் சொல்ல, ஒருவாறு நிற்கிறது. இப்போதுதான் சனக்கூட்டமும் என்ன நடந்தது என்று விசாரித்துக்கொள்கிறது. “கள்ளப்படைகள்” என்பது இறுதித் தீர்ப்பு. ஒரு சோறு பதமானால், ஒரு பானை சோத்துக்குத்தான்; பானைகளுக்கல்ல. இதிலும் ஒரு இம் சிக்கலிருக்கிறது. பானைக்குள் பானைகள் இருக்க முடியுமா?

கறுப்பையா புழுதியைத் துடைத்துவிட்டுச் சிராய்ப்புகளில் அப்பிக்கொண்டிருந்த மண்ணின் துகள்களை, உலகத்துத் துன்ப மெல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வந்தவன் ஒருவனின் உறுதி யோடு துடைத்துக்கொண்டான். துகள்கள், மனத்தின் துகள்களின் புறத்தோற்றப்பாடு. சிதறவும் செய்கின்றன. ரத்தமும் சிந்துகின்றன.

ராமசாமிக்கு வேலை செய்வதென்பது, அதிலும் தோட்டம் கொத்துவதென்பது கஷ்டமானதல்லவென்றாலும், வெத்திலை’ இல்லாதபடியால் மந்த கதியிலேயே இயங்கிக்கொண்டிருந்தான். சாப்பாடு என்பது கடந்த ஒரு வருஷமாக மாரீச மானாகப் போய்விட்ட நிலையில், உயிருக்கும் உடலுக்கும் உள்ள பந்தம் மிக இறுக்கமாக இல்லாது போனால், இந்த வெய்யிலில் இப்படிக் கொத்த முடியுமா? சூரியன் வானில் ஏறி, ஏறி இறங்கவும் தொடங்கியபோது யோகு அவனைக் கூப்பிட்டான். “இந்தா சாப்பிடு.” “சோறு” என்று ராமசாமி சொல்லிக்கொண்டான். திரும்பவும் ‘சோறு’. ‘சோறு’ தனியே அவனால் சாப்பிட முடியுமா?

“அன்னன்னிக்கே சம்பளம் குடுத்தீங்கன்னா நல்லதுங்க. சம்சாரம் ஒண்ணும் ரெண்டு புள்ளைங்களும் இருக்குதுங்க…”

“அதெல்லாம் பாப்பம் பிறகு. முதல்ல வேலையைச் செய்.” ராமசாமி அரைவாசிச் சோறைக் கட்டிக்கொண்டான். யோகுவுக்கு இந்த நிலவரங்களெல்லாம் தெரியும். அரைக்கண்ணால் பார்த்துக்கொள்ளுவான்.

ராமசாமிக்கு ‘வெத்திலை யும் கிடைத்த புளுகில், மண் கெதியில் சீர்ப்பட்டுக்கொள்ளத் தொடங்கியது. நிற்பாட்டுகிற நேரத்துக்கு இங்கே சங்கு இருக்கிறதா? ராமசாமி நிற்பது சம்பளத்துக்கென்பது மட்டுமல்ல, பேசியதில் எவ்வளவு கொடுத் தால்தான் நாளை திரும்பவும் வருவான் என்பதுவும் யோகுவுக்குத் தெரியும். பிழையில்லை ஆள். “இந்தா மூண்டு ரூவா இருக்கு , மிச்சத்தை நாளைக்கு வேண்டு.”

ராமசாமி முதலில் அதை வாங்கிக்கொண்டுதான் தொடர்ந்தான். “ரெண்டு புள்ளைங்க இருக்குங்க. பாத்துக் குடுங்க ஐயா.”

“இங்கேர் நாளைக்கு வா எண்டிரன். பேந்தென்ன, போயிட்டு வா.”

ராமசாமிக்கு நம்பிக்கை மிகவுண்டு. இல்லாது போனால், அவனுயிர் உடலில் நிலைத்திருக்குமா?

மீனாச்சிக்குக் கறுப்பையாவும் ராமசாமியும் வருவது தெரிந்தது. செவனும் மூக்கையாவும் சுருண்டு கிடந்தார்கள். மீனாச்சி சோர்வின் எல்லையில் அவளும் சுருண்டு சரியக் கூடும். கறுப்பையா கோபங்கொள்ளக்கூடிய சீவன். “சே, அறிவுகெட்ட நாயி” என்று ஒரு கல்லைத் தூக்கி எறிந்தான். நிச்சயம் அதுதான். இல்லாவிட்டால், கறுப்பையா தன்னோடு விளையாடுகிறான் என்று ஒரு கணம் பதுங்கிவிட்டுத் திரும்பவும் வருமா?

“அடிச்சிப்புட்டானுங்க….கீரி இழுத்துக்கிட்டு போயிருந்திச்சின்னா யாரை அடிப்பாங்க? நாசமாப் போவ.” கறுப்பையா திட்டத்திட்ட ராமசாமிக்கு மெல்ல மெல்ல இதுவரை தெரியாமலிருந்த, இந்த வயிற்று நெருப்பை வளர்க்கிற அசுரனின் உருவம் புரிவதுபோல இருந்தது.

“ஆறு ரூவாயில்ல தர்ரோன்னாங்க? மூணு ரூவாதான் குடுத்தாங்க. மிச்சம் நாளைக்குத் தர்றாங்களாம்”‘

“சில ஆளுங்க குடுக்காமலேயே வுட்டுருவாங்க.”

“அதெப்படிங்க?” ராமசாமி வியர்வையை வழித்துக் கொண்டான். வயிறு இன்னும் எரியத் தொடங்கியது. “அநியாயமால்ல இருக்கிது.”

ராமசாமி – சரித்திரத்துக்குத் தெரியாத இந்த ராமசாமி – தான் கொண்டு வந்த சோத்து மூட்டையை மீனாச்சி பக்கம் எறிந்து, “அப்பாடி” என்று நிலத்தில் குந்த, மீனாச்சி செவனு, மூக்கையா இவர்களை எழுப்ப, கறுப்பையா தன் மனைவியை நினைத்துக் கொண்டே தூண்டிலை எடுத்துக்கொண்டு வெளியே போக, சரித்திரம் தேங்கியே நிற்கிறது.

– அலை – 21, 1974

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *