(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கண்ணைத் திறக்க மனமில்லை. கண்ணுக்குள்ளே ”ரோஸ்’ கண்ணைத் திறந்தால் மூட மனமில்லை. வானத் திலே மப்பு மலையா குவிஞ்சு கிடக்குது. நேற்று மாலை யிலிருந்தே மழை பெய்யாமல் சொகுஸ்ஸா ஒரு மப்பு. காலையா மாலையா அசப்பிலே கலக்கமாயிருக்குது. ரெண்டு பெரிய மனுசங்க பேசிட்டுப் போறாங்க. இதான் ஊட்டி வெதராம். ஊட்டிக்கு எவன் போய்ப் பார்த் தான்? அதான் நம்மைத் தேடிட்டு வருதே!
கண்ணைத் திறக்க மனமில்லை. கண்ணை மூட மன மிலை. காதண்டை வண்டு ஏதோ சந்தோஷம் சொல்லுது. என்னவோ நெஞ்சு நிலையிலே நிக்கலே, குதிக்குது. வயிறு கனமில்லாமல் உடம்பு லேசா காற்றிலே மிதக்குது. பசி இன்னும் கிள்ள ஆரம்பிக் கல்லே. ஆனால், இந்த நிமிஷம் வரைக்கும் வழியும் தென் படல்லே. ஆனால், இன்னும் அவசரமும் வல்லே. பொழு திருக்கு. இவ்வளவு பெரிய பட்டணத்திலே ஒரு வ்வுறு கழுவத்தானா வழியில்லே?
“ஸ்டேஷன்வரை பெட்டியெடுத்து வரேன் ஸார்.”
“டாக்ஸிதானே, இதோ ஒரு நிமிடம். இப்படி நிழல்லே நில்லுங்க. குழந்தைமேல் வெய்யில் படுது பாருங்க.”
”பலாத் தோப்புக்கு வழியா பாட்டி? என்னோடு வா”
“தாங்க்யூ மாஸ்டர், தாங்க்யூ.”
“எஸ்,ஸார்”
”நோ ஸார்’.
”ரெடி ஸார்.”
“ஓ எஸ் ஸார்.”
வழிதானா இல்லே, வாயிலே இருக்கு வழி. தினம் பிழைப்பு நடந்துட்டுத்தானே இருக்குது! அப்படியும் தலையைத் தடவ ஆள் கிடைக்காட்டி, ஒரு மிட்டாய்க் கடையிலோ, ரொட்டிக் கடையிலோ ஆள் ஏமாந்த சமயம் பார்த்து ஒரு பன்னோ, லட்டோ லவுட்டினாலும் போச்சு! ஆனால், எடுக்கத்தெரியாமல் எடுத்தால் மாட் டிக்க வேண்டியதுதான். சாமர்த்தியம் இல்லாட்டா தண்டனை சரிதானே! இல்லாட்டி போர் போரா கொட்டி வெச்ச பண்டத்திலே ஒண்ணு எடுத்து, கடைக் காரன் குடி பாழா போச்சுன்னா, அஞ்சுரூபா அவதாரம் அல்லது முப்பது நாள் காவல்? ஆனால், இத்தனை யோச னைக்கும் அவசரம் வல்லே. இன்னும் பொழுதிருக்கும் – அட சீ இதென்ன மூக்கிலே குறுகுறு!
கண்ணைத் திறவாமலே முகத்துக்கெதிரே கையை வீசினான். ஆனாலும் மூக்கைப் பிடிவாதமாய்க் குடைந்தது. அட சூ!
அரை மயக்கம், முழு நினைவும் கூடவில்லை. மன மில்லாத அரைக் கண் திறப்பில் பார்வையில் முதலில் படர்ந்தது அவனையும் தன்னுள் முழுக்கும் ஒரு பால் வெளிறு; பிறகு அதை விளிம்பு கட்டிய செந்தளிர். இரண்டும் சேர்ந்து சிரிப்பில் பல்வரிசையென உணர்வில் முன் தோய்ந்த பின்தான், அதன் பின்புலமாகி அதன் முகம் மனமயக்கத்தின் படலத்தில் பிதுங்கிற்று. இலைகளினின்று சிதறும் மழைத்துளிகள்போல். மார்மேல் சிரிப்பு கொட்டிற்று.
முழுக் கண் திறந்து, மூக்கைக் குடைந்து கொண்டிருந்த புல்லைப் பிடுங்கியெறிந்தாள்.
“இதென்ன விளையாட்டா?”
“நீ குறட்டைவிட்டே பாரு, என்னால் தாங்கவே முடியல்லே”
“நான் குறட்டை விடல்லே” பிடரியில் சினம் சிலிர்த்தது.
“இல்லே விட்டே.”
“இல்லே விடல்லே, நான் தூங்கவேயில்லை, கண்ணை மூடிக்கிட்டிருந்தேன்.”
”நான் மூணு தரம் மூக்கில் விட்டப்பறம்தான். நீ அசைஞ்சு கொடுத்தே. இந்தப் புல் தரை அவ்வளவு சுகமா என்ன?”
“நீ உருண்டுட்டு வந்த மெத்தை இதன்கிட்ட என்ன பண்ணும்?”
”நீ சொல்றதும் சரிதான். இங்கே பூமியைத் தொட்டால், புலிக்குட்டியைத் தடவரமாதிரி. மெத்து மெத்துன்னு, பூமி மூச்சுவிடறமாதிரி, உள்ளங்கைக்கு உசிரோடு ஒரு மிதப்பு தெரியறது.”
”ராஜகுமாரி! புலிக் குட்டியைத் தடவினாளாம்! ஹு!”
”நான் தடவியிருக்கேன். ஒரு தடவை ஜுவிலே — நீ ஏன் இங்கே படுத்திருக்கே, உனக்கு வீடில்லையா?”
தன்னைச் சுற்றி அணைத்தாற்போல், அலட்சியமாய் ஒரு கையை வீசினான்.
“ஏன், இதெல்லாம் உனக்கு எப்படிப் படுது?”
“இத்தனையும் உன்னுதா?”
கண்ணை மூடியபடியே தலையை அசைத்தான்.
“உனக்கு உன் ராஜ்யம் எனக்கு என் உலகம்.”
“நீ யார்?”
“நான் ராஜா.”
”ஓ!”
“அதென்ன,வாயிலே கிளிப் பொந்து?”
“ஓ!”
”சரிதான், கொஞ்சம்’லூஸ்’ போல இருக்குது”.
அவள் கண்கள் அச்சத்தில் சுழன்றன.
“என்னைப்பற்றி உனக்கு ஏற்கெனவே தெரியுமா?”
”உன்னைப்பற்றி எனக்கு இன்னும் என்ன தெரியணும்?”
அவள் பெருமூச்சின் கோடு நெஞ்சில் வீழ்ந்த இடத் தில் கீறல் விழுந்தது. விளையாட்டில் நேர்ந்துவிட்ட நகத்தின் பிராண்டல்போல் ஒரு வேதனை, எழுந்து உட் கார்ந்து கண்ணைக் கசக்கிக்கொண்டான். கண்ணைக் கசக் கியும் கலையாத கனவைக் கனவென்று நினைப்பதா, நனவென்று கொள்வதா?
கிலியும் சோகமும் தனக்குப் புரியாதவொரு பக்கு வத்தில் சேர்ந்த விழி வார்ப்பில், திடீர் திடீரென முன் பச்சைக் னூறு வயதின் அலுப்புடன், முப்பது நாள் குழந்தையின் விளக்குப் பார்வையும். மாறி மாறியும் இழைந்தும் மருள் காட்டுகையில் நெஞ்சை என்னவோ செய்தது; அச்சமாய்க்கூட இருந்தது. பயத்துக்கொரு தேவதை அது இதுபோல் தானிருக்குமா?
தன் தைரியத்துக்குக் கனைத்துக் கொண்டான்.
”நீ யார்?’
”நீதான் சொன்னையே நான் ராஜகுமாரின்னு!”
“விளையாட்டிருக்கட்டும்.”
அவள் அவசரமாய் இடைமறித்தாள்,
“ஏன். அப்படியே இருக்கட்டுமே! இதுவேதான் நிஜமாயிருக்கக் கூடாதா?”
“என்ன பெரிய பேச்செல்லாம் பேசறே. எனக்குப் புரியாத பேச்சு!”
“நான் மாத்திரம் புரிஞ்சா பேசறேன்!”
“எங்கே வந்தே? எங்கே இருக்கே? வழி தப்பிப் போச்சா? பயப்படாதே. இடம் சொல்லு. கொண்டுபோய் விடறேன்.”
அவள் பதில் பேசவில்லை. தன் நகங்களைச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டாள். விரல்களுக்குக் கோப்பை வைத்தாற் போல் ‘பாலிஷ்” ஏற்றிய நகங்கள், ஐந்து விரல்களையும் சேர்த்துப் பிடிக்கையில், ஐந்து வண்டுகளின் முதுகுகள் ஒன்று சேர்ந்தன! விழிமேல் தாழ்ந்த இமைகள். அமைதியில் அசை வொடுங்கின, எண்ணெய்க்குளி கண்டாற்போல் கூந்தல் சற்றே சீறிக்கொண்டு, அதன் அலைவாகில் அடங்காப்பிரிகள் கருஞ் ஜ்வாலைக்கென முகத்தைச் சூழ்ந்து, காற்றில் அலைகையில்.
இந்த முகம் காற்றிலே ஒரு தோற்றமா?
நான் கையைத் தொட்டு அழிச்சால் கலைஞ்சு போயிடுமா?
நினைப்பா நெஞ்சில்தான் பதியும். எத்தனை நாழி பார்த்துக்கிட்டேயிருந்தாலும் கண்ணுக்கு நிச்சயமாகாதா? என் முழிப்பு நிஜமா. இல்லை இந்த முகம் நிஜமா? யாரை நிமிண்டிப் பார்த்துக்கறது?
மேலே மரத்தினின்று ஒரு அணில் தொப்பென்று அவள் மடியில் விழுந்து புரண்டு எழுந்து உருண்டடித்துக் கொண்டு ஓடிற்று. புற்களின் புதரினின்று “ட்வீப் ட்வீப்” அதன் கத்தல் விண் விண் எனத் தெறித்தது. பூமி தன் பாரம் முனகுது,
“எனக்குப் பசிக்கிறது.”
“ஒ.அப்படியானா நீ நிஜந்தானா?”
“நிஜமாத்தான்? எனக்குப் பசிக்கிறது. பசிக்க ஆரம்பிச்சுட்டா பசி தாள மாட்டேன்-‘”
“பசிதான் நிஜம். நீ பசித்தால் நீ நிஜம்”.
“எனக்குப் பசிக்கிறதே!” முகம் மாற ஆரம்பித்து விட்டது.
“என்கிட்ட ஓண்ணுமில்லையே! நான் நாடிழந்த ராஜா. நீ துட்டு வெச்சிருக்கையா?”
ஆச்சரியத்தில் கையை விரித்தாள். “அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?” என்று விழிகளில் வியப்பு,
விரித்த அவள் கைமேல் அவன் கண்கள் ஊன்றின. இந்த உள்ளங்கை அகலானால்? விரல்கள் தனித் தனித் திரி. நகம் திரிநுனியில் தீச்சுடர். சட்டென ஒரு யோசனை பளீரிட்டது.
“ஒண்ணு சொல்றேன் — ஆனால், கேட்பையோ மாட்டையோ?”
“என்ன? எனக்குப் பசிக்கிறதே?”
“எனக்குக் கேட்க உரிமையில்லை’ நியாயமில்லை, நான் கேட்டாலும் நீ சம்மதிக்க அவசியமில்லை”.
”சுருக்கச் சொல்லேன்?”
”அரிச்சந்திரன் கேட்டாப்போல கேக்கறேன் – மோதிரத்தைக் கழட்டிக் கொடுக்கறையா?”
அவள் பதில் பேசவில்லை. மோதிரத்தை நீக்கி, அவன் கையில் வைத்தாள், ஆச்சரியத்துடன் உற்று நோக்கிளான். ஆனால், அங்கு எவ்விதமான மாறுதலுமில்லை.
“சரி வா எழுந்திரு,”
“இங்கே நில்லு, நான் உள்ளே போய் வரவரை இங்கேயே காத்திருக்கணும் தெரிஞ்சுதா?”
தலையை ஆட்டினாள்.
நாலு அடி நடந்து திரும்பி வந்தான்.
”உனக்கு ஒண்ணும் கஷ்டமில்லையே?”
புருவங்கள் வினாவில் நெறிகையில், நெற்றிச் சுருக்கத்தில் திலகம் குழைந்தது.
“இந்த மாதிரி உன் பொருளை எடுத்துக்கிட்டுப் போறேனேன்னு!”
உதட்டோரம் குழிந்த புன்னகை அவன் அறியாமைக்கு இரங்குவது போன்றிருந்தது.
ஏன் பேசாமடந்தை ஆயிட்டா? ஆனால் நமக்கென்ன,
ஆனால், உள்ளே நுழையுமுன் வாசற்படியில் நின்று ஒரு முறை திரும்பிப் பார்த்தான். கைகளைக் கோர்த்த வண்ணம் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். பாவாடை மேல் நீலத் தாவணி அடியில் பச்சைப் பட்டு ரவிக்கையின் முடிச்சு தெரிந்தது? நிஜமாகவே ராஜகுமாரிதானா?
“என்ன முதலாளி வா, வா. ஏன் வாசல்படியில் நிக்கறே?”
தன்னை மூடும் மயக்கத்தைக் கலைக்கத் தலையை உதறிக்கொண்டு உள்ளே வந்தான்.
“வா உக்காரு, பாய்மேலே தள்ளி வா. என்ன கண்ணி லேயே படறதில்லே? ரோந்து மாறிப்போச்சா?”
“உன் கண்ணிலே பட்டுக்கிட்டே இருக்கணுமா என்ன?”
“நம்ம கஷ்டமர் ஒவ்வொத்தனும் அப்படி சொல்லிட்டா, கடையை மூடவேண்டியதுதான்.”
“பின்னே சுகப்படறவனா உங்கிட்ட வரப் போறான்?”
“கோவம் பண்ணிக்காதே முதலாளி! கஷ்டம்னு சொன்னால்தானே கஷ்டம்? வேணுமானா அவஷ்யம்னு வார்த்தையை மாத்தி வெச்சுக்கோயேன்!
மோதிரத்தை விரிப்பின் மேல் வைத்தான்.
சீ, இவனோடு எனக்கென்ன பேச்சு? பேச்சிலே இன்னிக்கு எனக்குக் கோவம் ஏனோ வருது தெரியல்லே. கையில் கொடுத் தால் இவன் உடம்பு என்மேல் படும். அதுகூடப் பிடிக்கல்லே. மூக்குக் கண்ணாடி பின்னாலிருந்து திருட்டுத்தனமாக என்னைப் பார்க்கிறான் பார்,
விருட்டென எழுந்து பின்னால் கையைக் கட்டிக்கொண்டு கடையைச் சுற்றிவர ஆரம்பித்தான்.
இதோ இந்த ப்ருச் நல்லாயில்லே? மாரிலே சொருவினால் பட்டுப்பூச்சி குந்தின மாதிரியேயிருக்கும். இதோ இந்த தந்தச் சீப்பு, இந்த வெள்ளிப் பவுடர் டப்பா – சில்லுண்டி சாமான் ஒண்ணுரெண்டு வாங்கிக் கொடுக்கலாம். ஆனால், பிரயோஜனம்? வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளியே வெல்லம் நிவேதனமா? இவன் பொருளைப் பார்த்துப் பார்த்து ஓய மாட்டேன்றானே!- ஏ ஸேட் என்ன பண்றே?”
”உரைக்கிறேன்.”
“ஏன் கில்ட்டுனு சந்தேகமா?”
“இது பொன்னுதான், நீயும் நானும்தான் கில்ட்”.
“பின்னே என்ன நீ உரைக்கற உரை, மோதிரம் தேறுமா? உரை கல்லையே அடமானம் வெக்கலாமா?”
“நாங்க உசிர்போனாலும் உரை கல்லை விட மாட்டோம் தம்பி. இதிலே பொன்னைத்தானா உரைக்கறோம், ஆளையே உரைக்கறோம், இதெப்படி உன் கைக்கு வந்தது? மயங்காதே. சும்மாச் சொல்லு!”
”இது என் பெண்சாதியினுடையது.” அப்படிச் சொல் கையிலேயே இடது கன்னத்தில் நரம்பு விலுக் விலுக்கென்று உதைத்துக் கொண்டது. அந்த இடத்தை அழுத்தித் தடவிக் கொண்டான்,
மூக்குத் தண்டுவரை ஸேட்டின் மூக்குக் கண்ணாடி சரிந் தது. இந்த ஜாதிக்கே எவ்வளவு பெரிய முழி பார்த்தையா? அவங்களே விக்கறாங்களே தொன்னையிலே ஜீராவுலே மிதக்குதே ரஸகுல்லா, அதுமாதிரி!
“அப்படியா? எப்போ ஆச்சு கலியாணம்? எனக்குத் தெரியாமலா?”
“ஏன் உன் பெண்ணைக் கொடுக்கலாம்னு இருந்தையா?”
ஸேட்டுக்குக் கோபம் வரவில்லை. மோதிரத்தைக் ட்டை விரலுக்கும் நடு விரலுக்குமிடையே நாஸுக்காய்ப் டித்துத் திருப்பிக் கொண்டிருந்தான். ஒற்றைச் சுருளில், லையும் வாலும் முடிச்சிட்டுக் கொண்ட பாம்பின் கண்ணில் பதித்த பச்சைக் கல்லில். தணலில் தெரியும் அளவின் நீரோட் டம்போல்,ஒளி மங்கி நெளிந்தது.
அவனுக்கு சீற்றம் மேலும் பொங்கியெழுந்தது –
“இல்லை. மோதிரத்தோடு தாலியையும் ஏன் கொண்டு வந்து வெக்கல்லேன்னு கேக்கறையா?’
ஸேட்டின் கீழுதடு புன்னகையில் பிதுங்கிற்று.
“முதலாளிக்கு என்ன கோவம் வருது! ஹூம்- இளரத்தம்!”
பெருமூச்செறிந்து மோதிரத்தை அவன் கையில் வைத்தான்.
“அப்படின்னா?”
“பொன்னை உருக்கிடலாம். ஆனால் கல்லை என்னால் ஜரிக்க முடியாது. இப்பவே இதுமேலே எந்த வேட்டை நாயை விட்டிருக்காங்களோ?”
அடிவயிற்றில், குடல் சதையை ஒரு குத்தாய், ‘ஐஸ்’ அள்ளிப் பிடித்தது.
“எனக்கு ரூபா அவசரமா வேணும்!”
“ஆ. அவஷரம் அவஷ்யம், கஷ்டம் இது இல்லாட்டி நாங்கள் என்ன செய்வோம்? இதுதான் எங்கள் முதல்.”
“ஸேட் இது உன் காலம், கொஞ்சம் இரக்கம் பாரு! நீ இப்போ கை கொடுக்காட்டி என் மானமே போச்சு!”
“மானம்? இதுவும் ஒரு முதல்தான். இரக்கம்?”
“அந்த சரக்கை வெச்சுகிட்டேன்னா கடையோடு நான் காலி.”
“ஸேட்!”
“இருந்தாலும் உன் விஷயத்திலே -”
கல்லாப் பெட்டியிலிருந்து இரண்டு நோட்டுக்களை யெடுத்து, உதறி, நிமிண்டி அவன் கையில் திணித்தான், புது நோட்டுக்கள்- மொடமொடத்தன.
“இது இரக்கமில்லே. இது பீஷினெஸ் உங்ககிட்டே வஷூல் பண்ணிக்க எனக்குத் தெரியும்.”
இவன் இரக்கம் காட்டறானா? கேலி பண்றானா? பயமுறுத்தறானா? இவனும் இவன் முண்டாசும். குத்து மீசையும், அடுக்கடுக்கா மூணு மோவாய்க் கட்டையும்!
“ரைட்டோ ஸேட்!”
“ஸலாம் முதலாளி!”
மரத்தடியில் நிறுத்திய இடத்தில், நின்ற நிலையில் நின்றபடி –
கனவிலே வந்த காக்ஷி, காற்றிலே எழுதிய தோற்றமாகி, பேச்சடங்கி கல்லாயும் சமைஞ்சு போச்சா?
நெருங்கி வந்ததும்தான் தெரிந்தது. விழிகளின் கலங்கல். புருவங்கள் உள் வலியில் நெரிந்தன. சமுத்திரக் கரையோரம் அலை ஒதுங்கி, காற்றில் மிளிரும் நுரைபோல், உதடுகளில் அழுகை நடுங்கிற்று.
அவனைக் கண்டதும் அவள் விழிகள் விரிந்தன. புலு புலுவென கண்ணீர் கன்னங்களில் மாலை மாலையாய் வழிந்து அவன் நெஞ்சை நனைக்கையில், நெஞ்சு சுட்டது.
அவள் கை அவன் முழங்கை மேல் தங்கியிருப்பதை உணர்ந்தான். சட்டென நினைவு வந்து மோதிரத்தை ஜேபியிலிருந்து எடுத்து அதற்குரிய அவள் விரலில் செலுத்தி னான். காத்திருந்தாற்போல் மேலே மரத்திலிருந்து இரண்டு பூக்கள் அவன் கையுள் அவள் கையில், மோதிரத்தின்மேல், அவன் செய்கைக்கு முத்திரை பொறித்தாற் போன்று உதிர்ந்தது. உடல்பூரா மின்னல் ஊடுருவிற்று.
“வா. ராஜகுமாரி!”
“பாமிலி”
அந்த அடைப்பை அடைவதற்குள். வழியில் என்ன கூட்டம், குறுக்கே எத்தனை மேஜை நாற்காலிகள்! முகங்கள் அவர்கள் பக்கம் திரும்புகையில், ஒரு பக்கம் லஜ்ஜை, ஒரு பக்கம் பெருமை, ஒரு பக்கம் வெறுப்பு. தெரியாத முகங்களுடன் தெரிந்த முகங்கள்.
”ராஜா!”
தோள் மேல் ஒரு முரட்டுப்பிடி விழுந்தது.
திரும்பினான். இந்தச் சமயம் இது பார்க்கப் பிடிக்காத முகம்.
தோள் மேல் கையை உதற முயன்றான். ஆனால், பிடி பூணாய்க் கவ்விக் கொண்டிருந்தது.
“என்னடா அவசரம், கடிச்சா முளுங்கிடுவேன். எப்படா உனக்கு இந்த ‘ஷோக்’ பிறந்திடிச்சு? ஆனால், போணி வகையான போணிதான்”.
லேசாய் இருண்ட கண்ணுக்கெதிரே பாய்ந்த இருள் தூலங்கள் பவள நுரை கக்கின.
“என்ன சொல்றே?” அவன் குரலின் அமைதி அவனுக்கே வியப்பாயிருந்தது.
“என்ன ப்ரதர், எனக்கே ஜூல் காட்டறியே!”
கண். அவனைக் காலிலிருந்து தலைவரை மேனோக்கி வெள்ளோட்டம் விட்டது.
உடலை, எலும்பு வெள்ளை தெரியும்வரை கண்ணா லேயே சுரண்டிவிடும்போல் கண். தோள்மேல் கையை மெதுவாய் விடுவித்துக் கொண்டான். தொப்புளில் ஏதோ சுருள் கழன்றது. அது ஊர்ந்து மேலேறி வருகையில், தொண்டை லேசாய்க் குமட்டிற்று.
“இதென்ன கைபடாத ரோஜாவா?”
சொல்லி வாய் மூடவில்லை. வாய்மேல் விழுந்த அடி இடம் பூரா அதிர்ந்தது, கப்பென்று சப்தம் அடங்கிப் போன திடீரே திக்கென்றது.
அவனுக்கே நிச்சயமாய்ப் புரியவில்லை. அடி எப்படி நேர்ந்தது? நானா? அதுவும் இவனையா? இது நல்லத்துக்கா? அடி வயிறை வளையமா வில்லை போட்டுடுவானே!
தடைபட்ட இரைச்சல் வெள்ளமாய் மீண்டு மேலே இறங்கிற்று.
ஏன் இன்னும் ஒண்ணும் நேரல்லே? வாயைத் துடைச் சிட்டு நிக்கறானே? இத்தோடு சரியா? வேளை பார்க்கறானா? இல்லே இதுவும் குரைக்கற நாய்தானா? சிரிக்கிறானா என்ன?
நேரம் கொடுத்து நின்றும் ஒன்றும் நேரவில்லை,
”பாமிலி.”
தடுப்புள் விர்ரென்று நுழைந்தான். அங்கிருந்த மணியைப் படபடவென்று தட்டினான், “யாரங்கே? அய்யர்! ஏ அய்யர்!”
வெளியிளிருந்து ஆள் ஓடி வரும் காலடி.
அவள் முகத்தில் கலவரம் ஏதும் தெரியவில்லை. விழிகளில் மாத்திரம் ஓரு புது ஆழம். அவன் வெற்றியைத் தன் வெற்றியாய் ஆக்கிக்கொண்ட ஒரு சொந்தம்.
“இதெல்லாம் நீன்னா நினைச்சிருக்கே?
அட முட்டாளே. இத்தனையும் நான்னா!
உன் மூலமா நான். உனக்கு ரக்ஷை நான்.”
வாய் பேசாமே மனம் பேசினால் இப்படித்தான் இருக்குமா?
“ரக்ஷை’ன்னு இது என்ன புதுவார்த்தை என்னிலிருந்தே வருது?
நடக்கறோம்.
நடக்கறா.
குதிரையாட்டம், வேக் வேக்குனு, ‘ஜிங்கு ஜிங்கு’னு.
நடக்கறா.
அப்பவே மொதக்கொண்டு நடக்கறோம்.
இன்னும் சளைக்கல்லே. நடக்கறா.
பொழுது சாய ஆரம்பிச்சுட்டுது.
நடந்துகிட்டேயிருக்கோம்.
காற்றிலே ‘ஜில்’ வந்துட்டது.
நடக்கறாளோ?
எனக்கு ஏன் அடிக்கடி இந்த சந்தேகம்?
பாதம் பூமியிலே பதியுதோ?
பதியுது. சுவடு தெரியுதே!
முன்னாலே, எனக்குப் பாவுதோ?
என் பக்கத்தில் இவள் இருக்கிற நினைப்பிலே, நான் தான் ரெக்கை மேலே போறேன்,
நடை வேகத்தில், தோளோடு தோள் இடிக்குது.
காற்றிலே, பாவாடை குடை போட்டு என் முழங்காலில் மோதுது.
அழுக்குப் போக அலசி, அந்தரத்திலே உலர்த்திட்ட மாதிரி,நெஞ்சு என்னைவிட்டுப் பிரிஞ்சு, தனியா, எங்களோ டேயே, காற்றிலே தத்தித் தத்தி, கூத்தாடிக்கிட்டு வருது.
நாங்கள் பூமியைச் சுற்றிவரக் கிளம்பிட்டோம்.
ஒரொரு கனவு, நொடி நேரத்திலேயே, மனுசன் பிறந்து இருந்து, சாவறவரைக்கும் கூட, கனவாவே கண்டுடுமாமே! அதனாலேயே, இந்த உலகமே ஒரு கனவாமே! முட்டையிலிருந்து பொரிஞ்ச குஞ்சாட்டம் இவ சுத்திச் சுத்திப் பார்க்கறதையெல்லாம் முழுங்கிடற மாதிரி முழிக்கிறாளே, இவ பாக்கறது என்ன? இவள் முகம் காட்டும் நிழல் சிரிப்பு வருது. தனியா விட்டால், படாதவன் கண்ணில் பட்டுட்டா, கழுத்தை முறிக்காமல் கூட, முளுசாவே முழுங்கிடுவா னேன்னு நினைச்சுப் பார்த்தால் வேதனை பண்ணுது.
இது ஒரு நாளைக்கு ஒரே குடம் தண்ணி வார்த்து நிழல்லேயே பயிரான செடி, நல்லாத் தெரியுது. என் மாதிரியா?
பெத்துப்போட்ட ஆயி அப்பள் தெரியாமல், தவழ்ந்து வந்து ப்ளாட்பாரத்துலே எச்சில் சோற்றைக் கைநீட்டிப் பிச்சை கேட்கத் தெரியர வரைக்கும்கூட என்னை யார் வளர்த்தாங்கன்னு தெரியாமல் வெய்யிலிலேயே வளர்ந்துட் டேனே என் மாதிரியா?
யுத்தம் தந்த பரிசா ஏதோ ஒரு வெள்ளைத்தோல் என்னைக் கொடுத்துட்டு கப்பலும் ஏறிப் போச்சு. நான் வெங்காயத் தோலோடு பிறந்துட்டேன். அவ்வளவு தானே? தோலைப்பார்த்து ராஜான்னும் பேரும் வெக்காமலே விளங்கிப் போச்சு. அவ்வளவுதானே?
இதெல்லாம் இப்போ ஏன் நினைப்பு வருது?
இவள் சொல்லாமலே, இவளைக் கேக்காமலே இவள் கதை என் கதை ரெண்டும் இப்படித்தானா ஏடு புரளுது?
இதுவும் மனதின் பேச்சில் சேர்த்தியா?
ஒண்ணுமே புரியல்லே.
ஒரு சமயம் ஒரே குழப்பமாயிருக்குது, சந்தோஷமா ருக்குது. தேன் குடிச்ச மயக்கமாயிருக்குது.
ஆனால். ஒண்ணு நிச்சயமா விளங்குது. என் வெய்யில்லே இவள். குளிர் காயறா. இவள் நிழல்லே நான், என் வெய்யிலுக்கு ஒதுங்கி நிக்கறேன்.
எங்களுக்கு இந்தப் பக்கம் மைதானம். அந்தப் பக்கம் வயல் காடு.
அதைத் தாண்டி ஏரிக்கரை.
வயல் நடுவே ஒரு காம்பவுண்டுக்குள்ளே நெல் மெஷின். புகைப்போக்கியிலே குப் குப்புனு புகை தாளம் போடுது. ஏரிக்கரை மேலே ஒரு ரயில் வண்டி அதோ நெளிஞ்சு வருது.
இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கிறேன். மைதானம் தாண்டி, மலைமேலே மாதாகோவில். அதன் பின்னாலே பாறை பாறையா மேகம் நகருது.
அவள் என் தோளைத் தொட்டு அவசரமா எனக்கு சுட்டிக் காட்டறா. முழி வெளியிலே குதிச்சுடும்போல் அவ்வளவு பெரிசாப் போச்சு.
மேகத்திலே ரெண்டு முகம் பிரம்மாண்டமாக உருவானது. சடை சடையா தலை, நெற்றி, மூக்கு,வாய் எல்லாம் சந்தேகமில்லாமல் தெரியுது. ஒண்ணை யொண்ணு நெருங்குது. முகத்தோடு முகம், வாயோடு வாய், திரும்பிப் பாக்கறேன். அவள் என்னைப் பார்க்கலே. அங்கே வெச்ச முழி மாறல்லே. என் தோளைத் தொட்ட கை அங்கேயே தங்கி நிக்குது.
நெஞ்சு ஆயிரம் பதைச்சாலும், தானே தொட எனக்குக் கை அஞ்சுது.
சாலையோரம் மரத்தடியில் ஒரு கிழவி இளநீர் விக்கறா.
“ஆயா. பெரிசா, இனிப்பா, ரெண்டு சீவு!”
அவளுக்குக் குடிக்கத் தெரியல்லே. மூக்கிலே பாதி, வாயிலே பாதி வழியுது. மார்த் துணி நனைஞ்சு போச்சு’ மார் முகப்புலே ரவிக்கையோடு ஈரத்துணி ‘ஜிவ்’வுனு எப்படிக் கவ்விக்குது பாரேன். அவள் குடிக்கறப்போ நெஞ்சங்குழி ‘பட் பட்’டுன்னு அடிச்சுக்கறப்போ எனக்குத் தோணுது; எனக்கு ஒரு தங்கையிருந்தால் இப்படித்தான் சொல்லிக் கொடுப்பேனோ? நெஞ்சில் ஒரு ஏக்கம் தொட்டுட்டுப் போவுது.
வழுக்கையை வழிச்சு வாயிலே போடறேன். குழந்தை யாட்டம் வாயை ஆ காட்டறா. இவள் இளநீரை எங்கே பாத்திருக்கப் போறா?
எனக்கு உடம்பெல்லாம் இன்பம் பொங்குது, பொங்கி வரப்பவே. துக்கமாக மாறுது, ஒரு பொம்மையிருக்குதே. ஆள் சிரிப்பான், தலைகீழாப் பிடிச்சா, அவனே அழுவான், அது மாதிரி. மனசுக்குள்ளே ‘மாஜிக்” ஏதோ நடக்குது. நடந்துகிட்டேயிருக்குது.
“ஏஞ்சாமி, நோட்டைக் கொடுத்துட்டு சில்லரை வாங்காம போறையே!”
“நீயே வெச்சுக்கோ ஆயா!”
“நீங்க இப்ப இருக்காப்பலே எப்பவும் சந்தோசமாயிருக்கணும். உங்களுக்குப் பிறக்கறதும் உங்க மாதிரியே நல்ல குணமாயிருக்கணும்!”
நான் அவளைப் பார்க்கிறேன்.
அவள் என்னைப் பார்க்கறா.
எங்கள் சிரிப்பு, வாணமாட்டம் சீறிக்கிட்டு மேலே போவுது.
வர்ணக்குடை இறங்குதான்னு பார்க்கறோம். நக்ஷத் திரம்தான் ஒண்ணொண்ணா, சரம் சரமா இறங்குது.
மலைமேலே மாதா கோவில் மணியோசை வீசி வருது.
ரயில்வே கிராதியருகே இருவரும் நிக்கறோம். எதிரே ஜலம் விரியுது.
இப்போ என் நெஞ்சு நிறைஞ்ச நிலையில் என் நெஞ்சைப் பிழிஞ்சு ஊத்தினால், இவ்வளவு பெரிசுதானிருக்கும். இங்கேயும் மனிதன் மனசு போலவே. விளிம்பு இங்கே கொஞ்சம் தெரியுது, அதோ கொஞ்சம் தென்படுது.நடுவிலே, பாதிக்கு மேலே இருள் தேங்கி நிக்குது.
எதிர்க்கரையில் பாலம் மேட்டில் ஏறி மறுபடியும் வளைவா கீழே இறங்குது, காரும் வண்டியும் வண்டாப் பாலத்துக்குமேலே பறக்குது. ஊருது. பாலத்து மேலே சாக்ஷிக் கம்பங்களா நிக்கற எலெக்ட்ரிக் லைட்டுகளிலிருந்து ஒளி கீழே ஜலத்தில் பட்டுச் சிதறி ஒளித் தூண்களா நீண்டு உள்ளே வானத்து நிழலைத் தூண் தூணா தாங்குது,
“ராஜகுமாரி, அதோ பார், உன் அரண்மனை!”
அவகிட்டேருந்து வந்த பெருமூச்சு, ஓஸ்தி ஸல்லாத் துணியா என்மேல் படர்ந்து, பெருகி, வழிஞ்சு, அலைமோதி என்னைச் சுத்திச் சூழ்ந்துட்டுது. இது அசதியா, அவள் நெஞ்சின் நிறைவா, ஏதேனும் பழைய நினைப்பா. இன்பத்தின் எல்லையா?
இன்பத்தின் எல்லையே தொடுவானத்தின் துயரம் தானா?
“ராஜகுமாரி!”
முகம் மெதுவா என் பக்கம் திரும்புது.
”ராஜகுமாரி! நீ நிஜமாவே ராஜகுமாரிதான், என் வரையில் எனக்குச் சந்தேகமில்லை. அவனவனுக்கு அவ னவன் மனமார்ந்த நினைப்புதான் சத்தியமானால், என் கற்பனையின் சத்தியத்தில் நீ ராஜகுமாரிதான்-ராஜகுமாரி கூட இல்லை. ராணி!”
சாமி வந்தாப்போ அந்த முகத்தில் ஏறிப்போன ஜ்வலிப்பு எனக்குக் கண் கூசுது. தலை குனியறேன், ரெண்டு கையாலும் என் முகத்தைத் தாங்கியிழுத்து மார்போடு சேர்த்து அணைச் சுக்கறா. பஞ்சிலும் மிருதுவான கடலில் நான் மூழ்கிப் போ னேனா? எனக்கு மூர்ச்சை போட்டுட்டுதா? ஜலத்துக்குள்ளே அரண்மனையில் நானே புகுந்துட்டேனா. இல்லே பகல்பூரா நடந்த அசதியிலே அப்படியே தூக்கத்திலே நழுவிட்டேனா. அப்படி வருடமாத்தான் நினைவு தப்பிப் போச்சா?நிமிடம் தான் வருடமாக நீண்டு போச்சா?
தெரியாது.
கண் திறந்தப்போ, நினைவுகூட்டி சுத்துமுத்தும் பார்த் தால், ரயில் கிராதியண்டை நான் மட்டும் தனியாக் கிடக்கறேன்.
“ராஜகுமாரி! ராஜகுமாரி!” குறுக்கும் நெடுக்குமா ஓடினேன்.
தண்டவாளம் ஓரமா நடந்து போறவங்க ஒருத்தர் ரெண்டுபேர் திரும்பி, என்னை முறைச்சுப் பார்க்கறாங்க.
நடந்தது அத்தனையும் கனவா? கண்ணைக் கசக்கிக்க றேன். கனவாயிருந்ததால்தான் நான் பிழைச்சேன். இல்லே எனக்கு நிச்சயம் பைத்தியம் புடிச்சிடும். புடிச்சாச்சு.
விரலில் ஏதோ பளிச்சிடுது. பார்க்கிறேன்.
மோதிரத்தில் பாம்பு தலையும் வாலையும் முடிச்சு போட்டுகிட்டு கண்ணிலே பதிச்ச பச்சைக்கல் என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டுது.
“நீ கண்டது கனவில்லை. உன் கற்பனையின் சத்யம்.”
கரையோரம் குந்திக்கிட்டுக் குழந்தையாட்டம் தேம்பித் தேம்பி அழுவறேன்.
– தயா (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.