காலையில் ஆடு செத்துப் போச்சு. ஒரு வேளை ராத்திரி செத்தாலும், பூச்சுப்பட்டைக் கடிச்சு இருக்கும்னு நினைக்கலாம். அதுவுமில்லாமல், இப்பத்தான் செத்திருக்கு. செந்தில் “ஷிப்டு” முடிஞ்சு வரும்போது நல்லாத்தான் நின்றது. பக்கத்தில் நின்று பார்த்தார். ஆடு “மே” ன்னு கூப்பிட்டது. மூத்திரம் பேஞ்சது. புளுக்கை போட்டது. ரெண்டு குட்டிகளுக்கு பால் கொடுத்தது. எப்படி செத்திருக்கும்? ரெண்டு கால்களும் விரைச்சு, வயிறு வீங்கி, வாய் பிழந்து செத்துக் கிடக்கு. ஆட்டைச் சுத்திப் பார்த்தார். கொஞ்ச நேரம் நின்னு யோசித்தார். பக்கத்துல பழைய பொங்கச் சோறு, அங்ஙன இங்ஙன சிதறிக் கிடந்தது. ஆஹா! புளிச்ச சக்கரைப் பொங்கலு. அதை தின்னுருக்கு. அதுதான் செத்திருக்கு. எந்த அறிவு கெட்ட ஜென்மம் இதை வச்சது?
செந்திலுக்கு கோபம் வந்தது. ஆட்டைக் கள்ள விலைக்கு விற்றாலும், எவனும் கண்ண மூடிக்கிட்டு 1000 ரூபாய் கொடுப்பான். இப்படி அனாமத்தாப் போயிடுச்சேன்னு கவலையாக இருந்தது. ஆறு மாசத்துக்கு முன்னே, குட்டியாகக் கொண்டு வந்து மாமா கொடுத்தார். மாமாவுக்கு இப்ப சுகமில்லை அப்பாவைப் பார்க்க, ராசாத்தி ஊருக்குப் போயிருந்தாள். இப்ப வந்திடுவாள். தண்ணீர் வேற வரும். இன்னைக்கி புடிக்கலைன்னா, பிறகு 3 நாள் கழிச்சுத்தான் பைப்ல தண்ணியைப் பார்க்கலாம். அதுக்காகவே மனைவி வந்தாகணும். அவள் வந்து என்ன சொல்லப் போறாளோ? அந்த கவலை வேறு செந்திலை வாட்டியது. அவளும் முதல்ல அவுங்க அப்பா வந்து ஆட்டைக் கொடுக்கும்போது, வேண்டாம்னு தான் சொன்னாள். இருக்கிற வேலை காணாதுன்னு இந்த ஆட்டையும் கெட்டி எப்படி பாடு பார்ப்பேன்னு சொல்லும்போது அப்பா “சும்மா, முக்குலக் கட்டிப் போடம்மா. துன்னுட்டு மிச்சம் மீதியிருக்கிறத அதுக்கு போடு. நாளப் பின்ன அது வளர்ந்தால், ஒரு செலவுக்கு ஆகும்” என்றார். பிறகு அவருடைய மகளும் ஆட்டோடு பழகிவிட்டாள். அது ஒரு பாரமாகவே தெரியவில்லை. இப்போதுதான் ஆடு ரெட்டை குட்டி போட்டிருக்கு. அந்த சந்தோஷம் கை கூடி வரல. அதுக்குள்ள ஆடு செத்துப் போச்சு.
செந்தில் மகளை அதட்டியபடியே கேட்டார். “இந்த பொங்கச் சோற நீ தானே வச்ச?” சுப்புக்கு நடுக்கம் எடுத்தது. குளித்து சுத்தமாக இருந்த இளம் முகம் வெட வெடத்தது. குரல் தள தளத்தது. “ஆமப்பா நான்தான் வச்சேன்” என்றாள். உடனே தடுமாறினார். மகளை ரொம்பவும் கண்டிக்கவா? ன்னு குழம்பினார். இருந்தாலும் ஆட்டைப் பார்த்த உடனே வயித்தெரிச்சல் தாங்க முடியல. அதை வச்சுத்தான் அவரும் கோபப்பட்டார் “கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு பிளஸ்டூ படிக்கிறபுள்ள எவ்வளவு சுதாரிப்பா இருக்கணும். பொங்கச் சோத்தை ஆட்டுக்கு வைத்தோமே. அதுவும் சர்க்கரைப் பொங்கல். குட்டிபோட்ட ஆட்டுக்கு அது செமிக்குமா? கொஞ்சமாவது யோசிச்சிப்பார்த்தியா. இப்ப பாரு ஆடு செத்துக் கிடக்கு!” என்றார்.
அப்பா அதட்டும்போது, கண் இமைகள் துடித்தன. அந்த துக்கத்தில் நீர் கட்டி நின்றது. இருந்தாலும் தன் மீது தவறிருப்பதை உணர்ந்தாள். அவள் ஆடாமல் அசையாமல் நின்னுக்கிட்டிருக்கும்போதே ஸ்கூலுக்கு போக நேரமாகுதே. அப்பாகிட்ட என்ன சொல்ல? எப்படி பேசன்னு ஒரே குழப்பம். சுப்பு குனிந்தே நின்றாள். செந்தில் மகளைப் பார்த்துப் பேசினார். அப்போது ” வெளிகேட்” திறக்கிற சத்தம் கேட்டது.
“இப்பத்தான் வாரீங்களா அக்கா, அப்பாவுக்கு எப்படி இருக்கு?” பக்கத்து வீட்டு லலிதா கேட்கிறாள். பிறகு அம்மாவும், அவுங்க அப்பா உடல் நிலையைப் பத்தி சொல்லிட்டு வாராள். அவளுக்கு கணவனின் அதட்டல். அதுல இருக்கிற கோபம், பதற்றம், பரபரப்பு எல்லாம் கேட்டு, கைப்பையை திண்டில் வச்சிட்டு பின்னால் தான் வந்தாள். அம்மாவைப் பார்த்ததும் சுப்புக்கு அழுகையே வந்துவிட்டது. “செஞ்சதையும் செஞ்சுட்டு உங்கம்மையை கண்டதும் நல்லா அழு புள்ளைக்கு பொறுப்பு வேணும். இப்படியா இருக்கிறது” என்றார்.
அப்பத்தான் ராசாத்தி ஆட்டைப் பார்த்தால் அவளுக்கு திக்கென்றிருந்தது. அவள் விசயத்தைக் கேட்டறிந்தாள். அந்த சூரிய வெளிச்சத்தில் சுப்பு கன்னங்களில் வழிகிற நீர் பளபளத்தது. ராசாத்தி அழுகிற பிள்ளையை அணைத்துக் கொண்டாள். “சுப்பு என்ன, தெரிஞ்சா செஞ்சி இருப்பா. ஏதோ நடந்து போச்ச. அவளை அதட்டிக் கிட்டிருந்தா, அவள் பள்ளிக் கூடம் போக வேண்டாமா? நீ போம்மா. ரெண்டு பார்சல் வாங்கிட்டு வந்திருக்கேன். ஒன்னத் தின்னுட்டு ஒன்னக் கொண்டு போ” என்றாள். ஒரு நொடியில் குழப்பம் ஓய்ந்தது. “என்னப் பார்த்துக்கிட்டிருக்கீங்க. போனது திரும்பி வாராது. நட்டம் நட்டந்தான். போய் கறிக்கடைக்காரை கூட்டிக்கிட்டு வாங்க. அவர் கொடுக்கிறது வாங்கிட்டு ஆட்டைத் தூக்கிட்டுப் போகச் சொல்லுங்க.”
செந்திலுக்கு இதுவும் சரி என்று பட்டது. உடனே சைக்கிளை எடுத்துக்கிட்டுப் போனார். கையோடு கசாப்புக் கடைக்காரரைக் கூட்டிக் கொண்டு வந்தார். ரெண்டு பேருக்கும் பேரம் நடந்தது. கசாப்புக் கடைகாரனும் அங்கேயே கிரயத்தை முடித்துக் கொண்டான். பணத்தை சாயந்திரம் தருவதாகச் சொல்லி ஆட்டை தூக்கிக் கொண்டு போனான். ராசாத்தி “அந்த ஆடு கொடுத்த பணம் வந்தா, இந்த மாசம் வீட்டுத் தவணை அடக்காம இருக்கு குடுத்திருங்க” என்றாள். அதைக் கேட்டதும் செந்திலுக்கு கோபம் வந்தது. “ஆமா. செத்த ஆட்டுக்கு அள்ளித்தருவாங்க. நான் அப்படியே கொண்டு வந்து கொட்டணும்” என்றான். “ஏங்க கோவப்படுறீங்க. கொறைஞ்சத போட்டுக் கெட்டுவோம்” என்று புருஷனைச் சமாதானப்படுத்தினாள். அப்போது தான் செந்திலுக்கு பைப்பில் தண்ணீர் பிடிக்காதது ஞாபகத்திற்கு வந்தது.
மனைவியிடம் தண்ணீர் பிடிக்கச் சொல்லிவிட்டு, வீட்டுக்குப் பின்புறம் உள்ள கொடுக்காப்புளி மரத்தை பார்த்தார். போன வருஷம்தான் மரம் காய்ப்புக்கு வந்தது. காய்ப்புன்னா அப்படிக் காய்ப்பு. கொத்துக் கொத்தாய் பூவும் பிஞ்சுமாய் காயும் பழமுமாய் கொடுக்காப்புளி மரக்கிளைகள் பூராவும் பொதுச் சுவருக்கு இந்தக் பக்கம்தான் விரிந்து கிடந்தன. சரவணனும் சுப்புவும் தொரட்டிக் கம்பை வைத்து பழமாகப் பறித்துத் தின்றார்கள். செந்திலும் ஆளில்லாத நேரம் பார்த்து ரெண்டை பறிச்சி வாயில் போட்டுக் கொள்வார். இப்போது மரம் காய்க்கத் தொடங்கி இருக்கு. அதுக்குள்ள சுவர் பக்கம் வருகிற கொப்பை பூராவும் வெட்டி எடுத்தாச்சு. ஒரு காய் கூட இனிமேல் பறிக்க முடியாது. செந்திலுக்கு அதைப் பார்த்ததும் கோபமாக இருந்தது. மரத்தை, தூரோடு வெட்டிச் சாய்த்தால் கூட அவனுக்கு இப்படிக் கோபம் வந்திருக்காது. வருத்தப்பட்டிருக்க மாட்டான். மனைவியிடம் சொன்னான். அதைக் கேட்டு ராசாத்திக்கு கோபம் வரவில்லை. புருஷனைத்தான் அமைதிப்படுத்தினாள். “அவுங்க மரம். அவுங்க வெட்றாங்க. நம்ம என்ன சொல்ல முடியும்? வேணும்னா நம்மளும் அதே மாதிரி ஒரு மரம் வளர்ப்போம்” என்றாள். அவளுக்கும் பின் வீட்டுக்காரர்களைப் பற்றி தெரியும்.
பக்கத்து வீட்டு வனஜா அக்கா புருஷன் நல்ல குடிகாரன். ஒரு நாள் மில்லுக்குப் போனால். ஒன்பது நாட்கள் போக மாட்டான். அவனை ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஆனால் செந்தில் ஒரு நாள் லீவு எடுத்தால் கூட அபராதம். ஒவ்வொருவருக்கும் மில்காரன் நிலம் கொடுக்கும் போது செந்திலுக்கு நிலம் கிடைக்கவில்லை. ராசாத்தி தான் நச்சரித்தாள். “திரும்ப கேட்டுப்பாருங்க நம்ம எத்தனை நாளைக்கு தான் வாடகை வீட்டுல இருந்து காலம் தள்ள முடியும்” என்றாள். செந்தில் அலைந்து திரிந்து, சங்கத்துக்காரன்களுக்கு லஞ்சம் கொடுத்து, பிறகு அவனுக மில்காரன் கிட்ட சொல்லித்தான் அவனுக்கு நிலம் கிடைத்தது. ஆனால் வனஜா புருஷனுக்கோ எந்தச் சிரமமுமில்லாம நிலம் கிடைத்தது. மில் அதிகாரி, வனஜா புருஷனைக் கூப்பிட்டு, அவன் “வேண்டாம் வேண்டாம்” ன்னாலும் “வச்சுக்கா வச்சுக்க” ங்கிற மாதிரி நிலத்தைக் கொடுத்தான். அது தான் ராசாத்திக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமயம் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது செந்தில் சொன்னார். நாயக்கமாரு மில்லுல, நாயக்கமாருக்குதான் முன் உரிமை என்னமோ எங்கம்மா ஒரு நாயக்கர் விட்டுல வேலைக்கு இருந்தாங்க. அவுங்க கெஞ்சிக் கூத்தாடி என்னையும் மில்லுல சேர்த்தாங்க. இப்ப நிலம் கொடுத்திருக்காங்க.”
வனஜா புருஷனும் எங்கப்பா ராமசாமி நாயக்கரு வந்தாருன்னா, உங்க ஊரு பள்ளப்பய, பறைப்பய எல்லாம் குனிஞ்சு நின்னு கும்பிடணும். என்னமோ நான் எங்க நாயக்கர் மில்லாக இருக்கப்போய் வேலை பார்த்துக் கிட்டிருக்கேன் என்பான்.
“ராசாத்தி அக்கா தண்ணி வருது”- எதிர்வீட்டு லலிதா குரல் கொடுத்தாள். அவள் புதுசா கல்யாணம் முடிஞ்சு வாடகை வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவளுக்கும், “நாங்க தான் உசந்த சாதி” ன்னு நினைப்பு வந்து பேசாமப் போனால் போறான்னு தான் ராசாத்தியும், அவளுடன் பழகிக் கொண்டிருந்தால். அந்த பழக்கமான குரல் பின் வாசல் வரை கேட்டது. அந்த அவசரம் பரபரப்பானது. இருந்தாலும் ராசாத்தி பதற்றப்படாமல் புருஷனைப் பார்த்து. “ரெண்டு கொடத்த தூக்கிட்டுப் போங்க. ஜெயலட்சுமி அக்கா பிடிச்ச பின்னாடி நம்ம பிடிக்கணும். அந்த அக்கா ஒரு மாதிரி. தள்ளியே நின்னுக்கங்க. யாரும் எது சொன்னாலும் கோவப்படாதீங்க. இட்லி அவுச்சாச்சு சட்னி தான் வைக்கணும். வச்சுட்டுட்டு வந்துட்றேன் என்றாள்.
செந்தில் எதுவும் பேசாமல் பிளாஸ்டிக் குடங்களை தூக்கிக் கொண்டு போனார். பைப்பை சுற்றிலும் பொம்பளையாட்கள் நின்றார்கள். ஜெயலட்சுமி அக்காள் ரெண்டு குடம் பிடிக்கணும். அதன் பிறகு தான் நமக்கு. செந்தில் பைப்பை விட்டு தள்ளியே நின்றார். அவருக்கு இப்ப ஒரு வேலையும் இல்லை. சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சால் போதும். ராத்திரி பத்தேகாலுக்கு சைக்கிள் எடுத்தாலும் போதும். பதினொரு மணி ஷிப்டுக்கு போகச் சரியாக இருக்கும். அக்காவின் ரெண்டாவது குடம் நிறையும் போது, பைப்படிக்கு போய் குடத்தை வைத்தார். ரெண்டு குடம் பிடித்து ஒன்னை மட்டும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
இவ்வளவு தண்ணீர் கஷ்டத்துக்கு இடையில். அப்பத்தான் பிடிச்சு வச்ச தண்ணியை ஒரு தெரு நாய் வாய் வைத்து விட்டது. அங்கே தான் லலிதா நின்னாள். ஆனால் அவள் கவனிக்கலை. நாய் குடிச்சுருச்சுனு அவளுக்கு கோபம். கிட்டத்துல கெடந்த கருங்கல்லை எடுத்து விட்டெறிந்தாள். அது நாய் காலுலேயே போய் விழுந்தது. நாய் வலி தாங்க முடியாமல் கத்திக்கிட்டு ஓடிப்போனது.
நாய் அலறும் சத்தம் கேட்டு ராசாத்தி வெளியே வந்தாள். நாய் ஒரு சந்துக்குள் நுழைவதைப் பார்த்தாள் லலிதா, அவளிடம் சோகமாய் நடந்ததைச் சொன்னாள். பிறகு ஒரு குடம் தண்ணீர் வீணாகிப் போச்சேன்னு கவலைப்பட்டாள். ராசாத்தி கோபமேபடவில்லை. அவள் பதற்றமில்லாமல் நாய்க்காக பரிந்து பேசினாள். “அதுக்காகவா நாய அடிச்ச. அது என்ன செய்யும். பாவம் வாயில்லாத ஜீவன்” என்றாள். “என்ன இருந்தாலும் தண்ணிக்குப் படுற பாடு…” என்றாள் லலிதா. “அதுக்கென்ன செடிகளெல்லாம் தண்ணியில்லாம காயுது. அதுகளுக்கு ஊத்துனா சரியா போகும்?” என்றாள். குடத்தை தூக்கி வந்து செடிகளுக்கு ஊற்றினாள்.
முதல் வரிசை முடிந்து அடுத்த வரிசையும் வந்தது. தண்ணீர்க் குடத்தை தூக்கி இடுப்புல வச்ச லலிதா, “இன்னைக்கு தண்ணீர் கொஞ்சம் பாஸ்டா வருது” என்றாள். பின் அவள் போய் விட்டாள். பைப்படியில் கூட்டமில்லை. எல்லோருக்குமே காலைப் பொழுதில் அடுப்படிகளில் வேலைகள் இருந்தன. வரிசை வரும்போது வந்து தண்ணீர் பிடித்துக் கொண்டு போனார்கள். ஜெயலட்சுமி, ராசாத்தியும் மட்டும் பைப்பில் நின்றார்கள். ஜெயலட்சுமி முதல்குடத்தைப் பிடித்துவிட்டு, அடுத்த குடத்தை வைக்கிறாள். அடுத்து ராசாத்தி வைக்கணும். அவள் குடம் நிறைவதைக் கண்டு, “அக்கா உங்க குடம் நிறையுது” என்றாள்.
ஜெயலெட்சுமி அக்காள் முணுமுணுத்தாள். அந்த குரல் உள் வாங்கி வெளியில் வந்தது. அதுவும் ராசாத்தி கிட்டத்தில் நின்னதினால் கேட்டது. அவ்வளவு சின்னக்குரல். ஆனாலும் ராசாத்திக்கு கொமட்டுல குத்தினது மாதிரி வலித்தது. மனசைப் பிழிந்து ரணமாக்கியது. அப்படி ஜெயலட்சுமி அக்காள் என்னதான் கேட்டு விட்டாள்? நாயே, பேயே, பிசாசேன்னாலும் கூட மனசு ஆறும். சனியன் போகுதுன்னு விட்டிடலாம். ஒன்னுமில்லாத விசயம். ஒரு காத்துட்டுக்கு பெறாது. அப்படியும் ராசாத்தி என்ன சொல்லிவிட்டாள்? “அக்கா உங்க குடம் நிறையுது”ன்ன சொன்னது என்ன தப்பா? அதுக்கு ஜெயலெட்சுமி அக்காள், “என்ன. என்னை அக்கா நொக்காங்கிற. மருவாதையாக அம்மான்னுச் சொல்லு” என்றாள்.
“ஆமா….ஆமா… நீ ரொம்பவும் கிழவியாயிட்ட உன்னை அம்மான்னுக் கூப்புடுறதுக்கு. பார்த்தா என்னைய விட ரெண்டு வயசுக் குறையாகத்தான் இருப்ப. உன்னை அம்மான்னு கூப்பிடணுமாக்கும்? கூப்பிடுறேன். எங்கப்பா சாவக் கெடக்காரு நீ அவரக் கெட்டிக்க. நான் உன்னை அம்மான்னு கூப்பிடுறேன்” ராசாத்தியின் குரல் கோபத்தில பலமாக ஒலித்தது.
நன்றி: புதிய காற்று