ரயில் பயணங்களில்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 3,097 
 

வீட்டுக்குள் நுழைந்தபோதே ஒருவித அசாதாரண நிலையை உணர்ந்தேன். குழந்தை ஹேமா வரவேற்பறையில் தனியே விளையாடிக் கொண்டிருந்தாள். வழக்கமாக மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கும் மனைவி கண்மணியைக் காணவில்லை. ஷோபாவில் அமர்ந்திருந்த அம்மா, கையிலிருந்த பேப்பர் நழுவியது தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். தூர்தர்ஷனில் எட்டு மணி செய்தியில், தில்லியில் ஜனாதிபதி நேபாளப் பிரதமரைச் சந்தித்துக் கொண்டிருந்தார்.

“கண்ணம்மா” குழந்தையை வாரி எடுத்தேன். “எங்கடா அம்மாவைக் காணோம்?”

ஹேமா படுக்கையறையைக் காட்டினாள். இந்நேரத்துக்கு கண்மணி படுப்பவள் அல்லவே? உடல்நிலை சரியில்லையோ? பதற்றத்துடன் அறைக்குள் நுழைந்தேன்.

நான் வந்த அரவம் கேட்டிருக்க வேண்டும். படுக்கையிலிருந்து எழுந்தாள் கண்மணி. நீண்டநேரம் அழுதது போல கண்கள் வீங்கியிருந்தன. என்னைக் கண்டதும் கண்கள் கலங்கின. அப்படியே தோளில் சாய்ந்து விம்மத் தொடங்கிவிட்டாள்.

கண்மணி தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். மிகவும் தைரியசாலி என்று பெயர் எடுத்தவள். திருமணமான பிறகு இந்தப் பத்தாண்டு காலத்தில் அவள் அழுது நான் பார்த்ததில்லை.

மணக்கோலத்தில் தாய்வீட்டிலிருந்து கிளம்பியபோதுகூட இறுக்கமாக இருந்தாளே தவிர அழவில்லை. எனது அத்தை, மாமாவின் கண்ணீரைக் கண்டபோதும் அவள் அழவில்லை. பிறகு சொன்னாள்: “பெண்கள் புகுந்த வீடு போகும்போது அழ வேண்டும் என்று நியதியில்லை. நானென்ன வேற்றுக் கிரகத்துக்கா போகிறேன்? எனக்கு இப்போது இரண்டு வீடு. எப்போது நினைத்தாலும் நம் வீட்டுக்கு நீங்கள் அழைத்துவர மாட்டீர்களா என்ன?”

அப்படிப்பட்டவள் இன்று அழுகிறாள் என்றால் ஏதோ பிரச்னை இருக்கிறது. “அம்மா ஏதாவது பேசினார்களா?” என்றேன், அம்மாவுக்கும் அவளுக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிந்தும். அவர்களது கெமிஸ்ட்ரியைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். தலையசைத்தாள். விம்மினாள்.

“நான் மதியம் உங்களுக்கு போன் பண்ணினேன். ஏன் எடுக்கவில்லை?” கேள்வியிலேயே கோபம் தெறித்தது. அப்போதுதான், அலுவலக மீட்டிங்கின்போது அவளிடமிருந்து போன் வந்தது நினைவு வந்தது. தொடர்ந்த அலுவல்களில் அவளை மறுபடி அழைத்துப் பேச மறந்துவிட்டேன். வழிந்தேன்.

வழக்கமாக நான் வழிந்தால் அவளது கோபம் புஸ்வாணமாகிவிடும். இன்று அப்படியில்லை. மறுபடியும் விம்மினாள். “என்னம்மா, என்ன ஆச்சு?”

இந்தக் கேள்விக்கென்றே காத்திருந்தவள் போல, கொட்டித் தீர்த்துவிட்டாள். கண்களில் கண்ணீர் இன்னும் வற்றவில்லை. கேட்டு முடிந்தபோது எனக்கு சிக்கலின் தீவிரம் புரிந்தது. முகம் தெரியாத அந்த அற்பப் பதரின் மீது கோபமும் வந்தது.


கண்மணியின் பள்ளியில் வகுப்புக்குள் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி கிடையாது. ஆசிரியைகள் அறையில் போனை வைத்துவிட்டுத்தான் பாட வகுப்புக்குச் செல்ல வேண்டும். மதியம் உணவு இடைவேளையில் தனது அறைக்குத் திரும்பியபோது, அவளது போனில் பத்துக்கு மேற்பட்ட மிஸ்டு கால்கள் இருந்திருக்கின்றன. வெவ்வேறு எண்களிலிருந்து அழைப்பு. எந்த எண்ணும் பரிச்சயமானதல்ல.

பார்த்துக் கொண்டிருந்தபோதே புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. எடுத்தபோது, அதில் பேசிய ஒருவன் மிகவும் மட்டரகமாகவும் ஆபாசமாகவும் பேசியிருக்கிறான். தவிர, ஒரு நாளுக்கு எத்தனை என்று விலை பேசியிருக்கிறான். கோபத்துடன் போனைத் துண்டித்தாலும் அழைப்பு மீண்டும் மீண்டும் வெவ்வேறு எண்களிலிருந்து தொடர்ந்து வந்திருக்கிறது.

அப்போதுதான் அவளது செல்போன் எண் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிப்பறை ஒன்றில் எழுதிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆபாசமான வார்த்தைகளுடன் கண்மணியின் பெயரும் எண்ணும் எழுதப்பட்டிருந்ததால், அதைக் கண்ட தறுதலைகள் சிலர் போனில் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

எந்தப் பெண்ணால் இதை சகிக்க முடியும்? பள்ளியில் யாரிடமும் சொல்லாமல் எனக்கு போன் செய்திருக்கிறாள். நான் மடையன், அதைக் காணாமல் இருந்திருக்கிறேன். அவளது மனம் என்ன பாடுபட்டிருக்கும்?

ரயில் பெட்டியின் கழிப்பறைச் சுவரில் என்ன எழுதியிருக்கும்? மனக்கண்ணில் பல காட்சிகள் ஓடின. வங்கிப் பணிக்காக வெளியூர்களுக்கு ரயிலில் செல்லும்போது, இத்தகைய கிறுக்கல்களைக் கண்டிருக்கிறேன். கையாலாகாத பொறுக்கிகள் யாரோ எழுதியிருக்கிறார்கள் என்று எண்ணிக் கொள்வேன்.

கழிப்பறையில் பெண்ணின் அங்கங்களை வரைவதும், ஆபாசமாக எழுதுவதும் ஒருவகை மனநோய். நிறைவேறாத பாலியல் ஆசைகளால் உந்தப்பட்டவர்களின் மன திருப்திக்கான செயல்பாடு. அது மட்டுமல்ல, ஆணாதிக்க மனநிலையின் அப்பட்டமான வெளிப்பாடு. அந்தக் கிறுக்கல்கள் எனது வீடு வரை வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை.

“கண்மணி, விடும்மா. ஏதோ புறம்போக்கு உன்னைக் கஷ்டப்படுத்துவதற்காக உனது எண்ணை அங்கு எழுதியிருக்கிறான். இதற்கெல்லாம் நீ ரியாக்ட் செய்யக் கூடாது” ஏதோ சொல்ல வேண்டுமே என்று சொன்னேன். அவளது விசும்பல் நிற்கவில்லை.

“தெருநாய்களைக் கண்டால் நாம் விலகிப் போவதில்லையா? அதுபோல, இதையெல்லாம் புறக்கணித்துவிட வேண்டும். அதுதான் உன்னைக் காயப்படுத்த நினைத்தவனுக்கு பதிலடியாக இருக்கும்” என்றேன். சொல்லுதல் யார்க்கும் எளிது…

“அந்த ரயில் பெட்டியில் எழுதியிருப்பதை அழிக்க முடியாதா?” அப்பாவித்தனமாகக் கேட்டாள். அவளது உடனடி எதிர்பார்ப்பு இதுதான். சாத்தியமாகுமா?

நாடு முழுவதும் எத்தனையோ ரயில்கள் செல்கின்றன. அதில் எந்தப் பெட்டியில் எந்தக் கழிப்பறையில் இந்தக் கிறுக்கல் இருக்கிறதோ? அதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

“சரி அடுத்த முறை அந்தத் தறுதலை எவனாவது போன் செய்தால் என்னிடம் கொடு. நான் பேசிக் கொள்கிறேன்” சொல்லிக் கொண்டிருக்கும்போதே அடுத்த அழைப்பு வந்தது. எனது உடலில் ஒரு நடுக்கத்தையும், பதற்றத்தையும் உணர்ந்தேன்.


வந்த அழைப்பின் எண்ணும் பரிச்சயமானதல்ல. ஆனால், அது தொலைபேசி அழைப்பு. அதன் முன்னொட்டு எண்களிலிருந்து கேரளத்திலிருந்து வரும் அழைப்பு என்று தெரிந்தது. கண்மணியின் கண்களில் மீண்டும் நீர் கோர்த்தது.

எதிர்பார்த்தது போலவே எதிர்முனையில் இருந்தவர் மலையாள வாடையுடன் பேசினார். ஆனால் நான் நினைத்தது போல இல்லை. பேச ஆரம்பித்தபோதே ‘சார் ஒரு ரிக்வெஸ்ட்’ என்றார். எனது நடுக்கம் குறைந்தது.

பாலக்காட்டைச் சேர்ந்த கேசவன் என்றும், எல்ஐசியில் மேலாளராகப் பணி புரிவதாகவும் கூறியவர், கண்மணி யார் என்று கேட்டார். மலையாளம் கலந்த தமிழில் அவர் கூறியதன் சாராம்சத்தை எனது மனைவியிடம் பிறகு சொன்னேன்.

“அவர் நல்ல மனிதர். சபரி எக்ஸ்பிரஸில் ஈரோட்டிலிருந்து பாலக்காடு சென்றிருக்கிறார். கழிப்பறையில் உனது பெயருடன் செல்போன் எண்ணைப் பார்த்திருக்கிறார். அப்போதே இது விஷமிகளின் வேலை என்று நினைத்திருக்கிறார். அதை தனது பேனாவால் அடித்துவிட்டாராம். ஆனால், வேறு பெட்டிகளில் இதுபோல எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றார். உனது பெயரைக் கெடுக்க விரும்பிய எதிரிகள் யாரேனும் அதை எழுதியிருக்கலாம் என்றார். முன்பின் தெரியாதவர்கள் அழைத்தால் எடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். மீண்டும் அழைப்பதாகவும் கூறியிருக்கிறார்’ என்றேன்.

“சபரி எக்ஸ்பிரஸா?” கண்மணி கேட்டாள் ” என்னிடம் பேசிய ஒருவன் குருவாயூர் எக்ஸ்பிரஸில் எனது எண்ணைப் பார்த்ததாகச் சொன்னானே?”

“இருக்கலாம். உன் பள்ளியில் பணிபுரியும் எவராவது கேரளத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா?”

“அப்படி யாரும் இல்லையே. நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லையே?” மறுபடியும் விசும்பல்.

அந்த அநாமதேயன் நினைத்ததைச் சாதித்துவிட்டான். துணிச்சலான ஒரு பெண்ணை நிலைகுலையச் செய்ய அவன் ஏவிய அஸ்திரம் வேலை செய்யத் துவங்கிவிட்டது. ஆதுரமாக அணைத்துக் கொண்டேன்.

“இப்போதைக்கு உனது போனில் ட்ரூகாலர் ஆப் பதிவு செய்திருக்கிறேன். அதில் யார், எங்கிருந்து போன் செய்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அனாவசிய எண்களிலிருந்து அழைப்பு வந்தால் பிளாக் செய்துவிடு” என்றேன்.

அதுவரை வந்த பல அனாமதேய அழைப்புகளை ட்ரூகாலர் மூலமாக பரிசோதித்தபோது, அவற்றில் சில உள்ளூரிலிருந்தும் வந்திருப்பது தெரியவந்தது. “யாரோ எனக்கு வேண்டாதவன்தான் இதைச் செய்திருக்கிறான்” மீண்டும் கண்ணீர் சிந்தினாள் கண்மணி.

“என்னம்மா இது. நீ பெரிய தைரியசாலி என்று என் நண்பர்களிடமெல்லாம் பெருமையாகச் செல்வேன். உன் பள்ளி முதல்வரே என்னிடம் பலமுறை உன்னைப் பற்றி பாராட்டியிருக்கிறார். எவனோ ஒரு கிறுக்கன் உன்னைக் கஷ்டப்படுத்த இவ்வாறு செய்திருக்கிறான்…”

பேசும்போதே இடைமறித்தாள். “அது எனக்கும் தெரியும். அவன் மீது போலீஸில் புகார் செய்யலாமா?”

சரியான யோசனைதான். யார் மீது, யாரிடம் புகார் செய்வது? பத்திரிகை நிருபராகப் பணிபுரியும் நண்பன் அழகேசனுக்கு டயல் செய்யத் துவங்கினேன்.


அடுத்த நான்கு நாட்களுக்கு எனது அன்றாட வேலைகள் எதையும் செய்ய முடியவில்லை. வெளியூர்ப் பயணத்தையும் தள்ளிவைத்தேன். வீட்டில் நிம்மதி இல்லாவிட்டால் வெளிவேலைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை.

நண்பர் அழகேசனின் உதவியை மறக்க முடியாது. அவர்தான் என்னை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். போத்தனூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்த ஒருவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டுக் கொண்டிருந்தார் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன்.

ஊடகத் துறைக்கு இருக்கும் மரியாதையை கண்ணெதிரே பார்த்தேன். பக்கத்துக் கடையிலிருந்து டீ வந்தது. கண்ணனும் இருக்கைக்குத் திரும்பினார். மிகுந்த கனிவுடன் பேசினார்.

“சார், அழகேசன் எல்லாம் சொன்னார். உங்கள் கஷ்டம் புரியுது. ஆனால், யார் மீது நடவடிக்கை எடுப்பது? உங்கள் மனைவிக்கு யார் மீதாவது சந்தேகம் என்றால் சொல்லுங்கள். தனியே இழுத்து வந்து விசாரித்து விடலாம். அதுவும்கூட லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில்தான் செய்ய முடியும். நான் வேண்டுமானால் ரூரல் இன்ஸ்பெக்டரிடம் பேசுகிறேன்…” கண்ணன் பேசிக்கொண்டே போனார். எனது கவனம் அதைக் கேட்கும் நிலையில் இல்லை.

உதவி ஆய்வாளரின் பின்புறம் இருந்த தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றப் பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அழகேசன்தான் உலுக்கினான். என் மனம் முழுவதும் ரயில் பெட்டிக் கழிப்பறைக் கிறுக்கலிலேயே இருந்தது.

“சார், கழிப்பறை கிறுக்கல்களை அழிக்க வேண்டுமானால் ஏற்பாடு செய்கிறேன். என்ன, கொஞ்சம் செலவாகும். ரயில்வே போர்ட்டர்களைக் கொண்டு ஈரோட்டில் தண்ணீர் நிரப்ப ரயில்கள் நிற்கும் நேரத்தில் அழித்துவிடலாம்… இது மட்டும்தான் எங்களால் செய்ய முடியும்” என்றார் அவர்.

சொன்னது போலவே, மூன்றே நாள்களில் கேரளம் செல்லும் 12 ரயில்களின் அனைத்துக் கழிப்பறைகளிலும் எழுதப்பட்டிருந்த மோசமான வாசகங்களை அழிக்க கண்ணன் ஏற்பாடு செய்துவிட்டார்.

“சார், எங்களால் ஆனது இதுதான். நாளைக்கே கழிப்பறையில் புதிய கிறுக்கல்களை எவனாவது எழுதிவிடுவான். நாங்கள் என்ன செய்வது? எதற்கும் உங்கள் மனைவியின் செல்போன் எண்ணை மாற்றிவிடுங்கள். அந்த எண்ணை எல்லோருக்கும் கொடுக்க வேண்டாம் என்றும் சொல்லி வையுங்கள்” என்றார் கண்ணன். நன்றியுடன் கைகூப்பினேன்.

அங்கிருந்தே மனைவியிடம் நடந்ததைச் சொன்னேன். அழகேசனும் பேசினார். அவளது விம்மலில் தெளிவு தெரிந்தது. கடந்து சென்ற ரயிலில் இருந்து சாயிராம் பஜனை ஒலித்தது.

“ரயில்வே ஒரு மாபெரும் நிறுவனம். தினசரி பல கோடிப்பேர் பயணிக்கும் ஆயிரக் கணக்கான ரயில்கள். நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கடத்தும் இயந்திரங்கள். அவற்றில்  எந்தக் களங்கமும் இல்லை. பயணிக்கும் மக்களின் இன்ப, துன்பங்களில் உடனிருப்பது போலவே, பயணிகளின் நல்ல, கெட்ட சிந்தனைகளையும் அவை தாங்கிச் செல்கின்றன. மனிதர்கள்தான் மாற வேண்டும்…” அழகேசனின் பேச்சில் தத்துவம் மின்னியது. ஒரு வாரத்துக்குப் பிறகு மெதுவாகப் புன்னகைத்தேன்.


பெங்களூரு ரயில் கிளம்பிவிட்டது. இனி இரண்டு நாள்களுக்கு குடும்பத்தை மறந்துவிட வேண்டியதுதான். போன வாரமே போக வேண்டிய பயணம், கண்மணிக்கு ஏற்பட்ட பிரச்னையால் தள்ளிப் போய்விட்டது. எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள என்னைப் பழக்கிய அவளே இம்முறை கலங்கி விட்டாள்.

கஷ்டகாலத்தில்தானே அவளது துணிவும் அழுகையை மீறிய பிடிவாதமும் தெரியவந்தன? கண்மணி நினைவு வந்ததுமே என்னை மீறி புன்னகைத்தேன். “இந்த மாதிரி சாடிஸ்டுகளை பிடிச்சு லாடம் கட்டுங்கண்ணா” என்று உரிமையுடன் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் ஸ்வீட் கொடுத்து வேண்டுகோள் விடுத்த காட்சி கண்ணில் நிற்கிறது.

அடைமழை பொழிந்து ஓய்ந்த பின் வானம் தெளிவாக இருப்பது போல மனம் நிச்சலனமாக இருந்தது. ஒரு வாரமாக குழந்தை ஹேமாவை கவனிக்கவும் நேரமில்லை. ஆபீஸ் வேலை முடித்து வந்தவுடன் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் எல்லோரையும் ஊட்டி அழைத்துச் சென்றுவர வேண்டும்.

சிந்தித்தபடியே மேலடுக்கில் புரண்டு படுத்தேன். பேன்ட் பாக்கெட் உறுத்தியது. மார்க்கர் பேனா. உடனே எழுந்தேன். கழிப்பறை நோக்கி கிளம்பினேன். கண்மணிக்கு நிகழ்ந்தது எந்தப் பெண்ணுக்கும் நிகழக் கூடாது.

இனி ஒவ்வொரு ரயில் பயணத்தின்போதும் இந்த மார்க்கர் பேனா என்னுடன் இருக்கும். கழிப்பறை மனிதர்களின் ஆபாச வாசகங்களை அது அழித்து மறைக்கும்.

ரயில் வேகமெடுத்துவிட்டது.

-தினமணிக் கதிர் (09.07.2017)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *