(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஹிஜ்ரி 1417 – கி.பி. 1996ம் ஆண்டு.
நான் எதிர்பார்த்த மாதிரியே அந்தக் கடை அமைந்திருந்தது. தெருவில் வாகனத்தில் சற்றுத் தரித்து நன்றாக நோட்டம் விட்ட பின்னரே கடைக்குள் நுழைந்திருந்தேன்.
ஒரு சிறிய ஹோட்டல் அது. ஏழு அல்லது எட்டு டொபி போத்தல்களுக்கு நடுவில் கல்லாவில் அமர்ந்திருந்த உரிமையாளர் நிச்சய மாக பெரும்பான்மை இனத்தவர்தான் என்பது உறுதியானது. அந்தக் கடைக்குள் நான்கே நான்கு மேசைகள் மாத்திரம் இருந்தன. அதற்கு மேல் அங்கு இடம் இல்லை. அதில் ஒரு மேசை மூலை யில் இரண்டு சுவர்களை அண்டிப் போடப்பட்டி ருந்தது. தெருவுக்கு அல்லது கடை முகப்புக்கு முகம் காட்டாமல் அதில் அமர்ந்து கொண்டேன்.
கடையைச் சுற்றிப் பார்வையைச் செலுத்தினேன். சுவரில் பொருத்தப்பட்டிருந்த நீர்க் குழாயடியில் சுவரிலும் சுற்றிலும் பரவியிருந்த அழுக்கு கடை உரிமையாளரைக் கைது செய்யப் போதுமானது. ஏனைய மூன்று மேசையிலும் கொத்தாக ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. நான் அமர்ந்திருந்த மேசைக்கு மேல் சில ஈக்கள் பறந் தன. அவற்றை நான் விரட்டினேன். சுகாதாரப் பரிசோதகர்கள் அங்கு வருவதில்லையோ என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. ‘வந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் இரண்டாவது தினம் மீண்டும் பொரித்த ஒரு கோழியை உரிமையாளர் சுற்றிக் கொடுத்து விடுவார். அதை அவர்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டுச் சந்தோசமாக இருந்து விடுவார்கள்’ என்று எண்ணினேன்.
வெயிட்டர் பையன் வந்து ‘என்ன வேண்டும்?’ என்று பெரும் பான்மை மொழியில் கேட்டான்.
“சோறு” என்று நானும் பெரும்பான்மை மொழியிலேயே பதில் சொன்னேன்.
சோறு, கறிகளை வைத்து விட்டு அவன் நகர, நான் சாப்பிட ஆரம்பித்தேன்.
கடைக்குள் வேறு யாரும் கிடையாது. சாப்பிட்டு முடிப்பதற்குள் மூன்று நான்கு முறை வேறு என்ன வேண்டும் என்று கேட்டுக் கேட்டு அவன் அருகில் வந்தான். அவன் அப்படி அருகில் வருவது எனக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கடையின் முகப்புப் பகுதியை இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன்.
தெருவில் கடையைத் தாண்டிச் செல்லும் யாராவது ஒரு முஸ்லிம் நபர் என்னைப் பார்த்துவிடக் கூடாது என்ற ஒரு பயம்தான் அதற்குக் காரணம். ஏனென்றால் அன்று றமளான் நோன்பின் பதின் மூன்றாவது தினம். நான் அன்று நோன்பு நோற்காத நிலையில் ஒரு பெரும்பான்மைக் கடையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் ஒரு தொலைக்காட்சிச் செய்தியறிவிப்பாளன். வானொலி அறிவிப்பாளன். கவிதை எழுதுபவன். பலருக்கும் அறிமுகமானவன். எனக்குத் தெரியாத பலர் என்னையறிவார்கள். தெருவில் நடந்து போனால் ஆகக் குறைந்தது இருவராவது புன்னகைப்பார்கள். தாமதித்து நிற்கும் இடத்தில் யாரோ ஒருவர் ‘நீங்கள் இன்னார்தானே’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வதுமுண்டு. சிலர் அதே இடத்தில் கண்ணுக்குத் தெரியாத இரத்தம் ஆறாகப் பெருக ‘அறுக்க’ ஆரம்பித்து விடுவது முண்டு.
இவ்வாறான ஒரு நிலைமையில் றமளானில் பகல் சாப்பாடு உண்ணும் என்னைக் கண்டால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்.
“ஹாஜி… என்ன இது.. நோம்பு நாள்ள… ஃபுள் வெட்டு வெட்டு றீங்க?”aa றீங்க..?”
“இன்டைக்கி நோம்பில்லப்பா…”
“ஏன்?”
“ஸஹருக்கு எழும்பயேலாமப் போச்சி?”
“ஏன்?”
“தூக்கம் போயிடுச்சி…”
“என்ன ஹாஜி…அலாம் வெச்சுக்கிறதில்லயா?”
“ஃபோன்ல வெச்சுக்குவ… அடிச்சித்தான் இருக்கு… எங்களுக்கு நல்லாக் தூக்கம் போயிருச்சி.”
“எனக்கெண்டா ஹாஜி… சரியா மூணரைக்கிக் கண்ணு முழிச்சிக் கும். எழும்பித் தஹஜ்ஜத் தொழுதுட்டு வைஃபை எழுப்புவேன்.”
“ஓ… அப்பிடியா…”
“ச்சே… ஒரு நோம்ப மிஸ் பண்ணிட்டிங்களே ஹாஜி… இதுக்குப் பொறவு நீங்க ஒரு வேல செய்ங்க… இந்த டேபல் ஒருலோசு இருக்கில்லியா… அத வாங்கி நேரம் செட் பண்ணிட்டுத் தலமாட்டுல வச்சிருங்க… அதுர சத்தத்துல எப்பிடித் தூக்கம் போனாலும் எழுப்பி உட்டுடும்”
“அப்பிடியா… இன்னக்கே வாங்கிரணும்…” என்று நான் பதில் சொல்லவில்லையாயின் நோன்பு திறக்கும் நேரம் வரும் வரைக்கும் எனக்கு அந்த நண்பர் உபதேசம் பண்ண ஆரம்பித்து விடுவார்.
அன்புக்குரிய வாசகர்களே… இந்தக் கலந்துரையாடல் இத்தோடு முடிந்து விடுவதாக நீங்கள் நினைப்பீர்களாயின் அது பெருந்தப்பு. இது ஒரு வேளை ஆண்டாண்டு காலத்துக்கும் எனது வாழ்வின் கறுப்புப் பக்கமாக எழுத்தில்லாமலேயே பதிவு செய்யப்பட்டுப் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
அந்த நண்பர் தனது இன்னொரு நண்பரிடம் அல்லது நண்பர் களிடம் இதை எப்படிச் சொல்வார் என்று நினைக்கிறீர்கள்?
“ஒங்களுக்கு விசயம் தெரியுமா? நேத்து அஷ்ரப் சிஹாப்தீன் வசமா மாட்டிக்கிட்டான்.”
“எங்க?”
“நோம்பு புடிக்காம ஒரு சிங்களக் கடைக்குள்ள புள் வெட்டு வெட்டிக்கிட்டிருந்தான். தற்செயலா எட்டிப் பார்த்தா… இவன்! கடைக்குள்ள பூந்துட்டன். ஆள் அப்சட் ஆயிட்டான். ஒத்தருக் கும் சொல்லிராதீங்கண்டு கெஞ்சினான்.”
அந்தக் குழாம் எனது முன் செய்த பாவங்கள், பின் செய்த பாவங்கள், இடையில் செய்த பாவங்கள், செய்யப் போகும் பாவங்கள் யாவும் அடியோடு அழியும் வகையில் என்னை அடித்துத் துவைத்துக் கழுவும். இறைவனின் திருச் சன்னிதானத்தில் நான் அவர்களால் பரிசுத்த வானாக மாற அவர்கள் நோன்பைப் பிடித்துக் கொண்டு எனது பாவ மூட்டையைத் தோளில் ஏற்றிக் கொள்வார்கள். ஆனால் துன்யாவில் எனது பெயர் களங்கப் படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
“அஷ்ரஃப் சிஹாப்தீன் நோம்பு புடிக்காம ஹோட்டல்ல திண்டு திரியிறானாம் தெரியுமா?”
“அதுக்கு ஏன் ஹோட்டல்ல தின்னணும். ஊட்டுலேயே தின்னலாமே…”
“பொண்டாட்டி நோம்பாயிருக்கும்… அவ சோறு தர ஏலா எண்டு வெரட்டி உட்டிருப்பா…”
“பாரு… இவனுக்கு என்ன கொறை…”
“அதானே… வீடு… காரு… தொழில்… எண்டு அல்லாஹ் குடுத்துத் தானேயிருக்கிறான்…”
“இவனுகள்தான் ரேடியோவுல இஸ்லாம் பேசுறானுவள்…கள்ளனுவள்!”
“இவனுகளப் பண்டி வெட்டுற கத்தியால வெட்டணும்…”
ஆய்ந்தோய்ந்து பார்க்காமல் கேள்விப்பட்டதை வைத்துத் தீர்ப்பெழுதும் கடும் நம்பிக்கையாளர்கள் இதைக் கேள்விப்பட்டால் அசிங்கத்தைப் போல் என்னைப் பார்ப்பார்கள். எனது முகத்தில் முழித் தாலும் பாவம் என்று விலகிப் போவார்கள்.
ஐந்து சதம் ஸதக்கா கொடுக்காதவன், ஓர் ஏழைக்கு உதவாதவன், ஒரு நல்ல விடயத்துக்கு ஒத்துழையாதவன், சபை குழப்புபவன், தானே முதல்வனாக இருக்க வேண்டுமென்று முட்டுபவன், வாயைத் திறந்தால் பொய்யே சொல்லிப் பழகியவன், குறைத்து நிறுப்பவன், கலப்படம் செய்ப வன், சுயநலத்துக்காக சார்பாகப் பேசுபவன், கள்ளப் பொம்புளை வைத்தி ருப்பவன், பெருநாளைக்குச் சாராயம் குடிப்பவன், அநியாயத்துக்கெதிராக ஆள்காட்டி விரல் நீட்டாதவன், அடுத்தவனப் பற்றியே பேசுபவன், சூபித் தோற்றத்தில் வட்டிக்குக் கொடுப்பவன் – எல்லோர் வாய்க்கும் நான் அவலாகி விடுவேன்.
அல்லாஹ் அன்பானவன். கருணையாளன். தெரிந்து செய்த பாவங்களையும் தெரியாமல் செய்த பாவங்களையும் மன்னிப்பவன். தூக்கத்தினால் இழந்த நோன்பு பற்றி அவனுக்குத் தெரியாமலா இருக்கப் போகிறது. அதை அவன் மன்னித்து விடுவான். ஆனால் இவர்கள்தாம் மன்னிக்க மாட்டார்கள்.
முஹம்மதுர் றசூலுல்லாஹ் கனவில் வந்து ‘இதோ பார்… இஸ்லா த்தை நீதான் காப்பாற்ற வேண்டும்’ என்று அதிகாரம் கொடுத்தது போல் நடந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். அதாவது அவர்களுக்கு சுவர்க் கம் வாக்களிக்கப்பட்டதைப் போலவும் ஏனையோர் நரகத்துக்கு ரசீது எழுதியெடுத்துக் கொண்டவர்கள் போலவும் நம்மைப் பார்த்துக் கைசேதப்பட்டுக் கதைப்பார்கள். ஒரு மனிதனின் உடல் நிலை, குடும்ப நிலை போன்ற எதுவுமே பற்றிக் கவலைப்படாமல் பேசுவார்கள்.
“நீங்க பட்டினி நோம்பு புடிக்க இருந்திச்சே ஹாஜி….முந்தா நாள் நான் பட்டினி நோம்பு… எங்கட சின்னவன்… பத்து வயசுதான் ஆஜி… அவனும் பட்டினி நோம்பு…”
சிலருக்கு அல்லாஹ்விடமிருந்து ‘வஹி’ இறங்குவது போல் நினைப்பு. குலபாஊர் ராஷிதீன்களுக்குப் பிறகு அதிகாரத்தைத் தாமே வைத்திருப்பதாக ஓர் எண்ணம். அவர்கள் என்ன திருகுதாளம் செய்தா லும் அது மார்க்கத்துக்கு விசுவாசமானது என்பது அவர்களது கணிப்பு. மற்றவன் செய்யும் அல்லது செய்வதாகத் தோன்றும் எல்லாமே தப்புத் தப்பாகவே தெரியும். அதைச் சாடுவதற்கு அல்லாஹ் அவர்களது நாக்கி லேயே திருக்கை வாலைக் கொடுத்திருப்பதாக நினைப்பு.
சாப்பிட்டு முடியும் வரை இந்த அபாயங்கள் எதிலுமே அகப்ப டாமல் காத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவனாகக் கையைக் கழுவினேன்.
நோன்பு பிடிக்காத தினம் என்பதால் ஏராளமான வெளி வேலை களைப் பட்டியலிட்டுக் கொண்டு வந்திருந்தேன். ஒவ்வொன்றாகச் செய்து முடித்த போது பகல் இரண்டு மணியாகி விட்டது. பன்னிரண்டு தினங்கள் ஸஹர் நேரத்துக்குச் சாப்பிட்டுப் பழகியதால் காலை பசியெடுக்கவில்லை. காலையில் தேனீர் அருந்தும் எண்ணம் கூட வரவில்லை. ஒன்றரை மணிக் குக் கடும் பசி வயிற்றைக் கடிக்கத் தொடங்கியிருந்தது.
முஸல்மான்கள் நடமாடாத ஹோட்டல் ஒன்றைத் தேடிக் கண்டு பிடிப்பதற்குக் கொழும்பிலிருந்து கல்கிஸ்ஸை வரை வரவேண்டியதாயிற்று. ஹோட்டலுக்கு எதிர்ப் பாதையில் நின்று நோட்டம் விடுவதும் திருப்தியற்று நகர்வதுமாக பதினாறு ஹோட்டல்களைத் தாண்டி வந்து பதினேழாவது ஹோட்டலுக்கு வந்த சேர்ந்திருந்தேன்.
பையன் பில்லைக் கொண்டு வந்து வைத்தான்.
குறித்த தொகையை விடப் பத்து ரூபாயை அவனுக்காகச் சேர்த்து வைத்தேன். யாராவது கண்டு விடுவார்களோ என்ற பயத்துடன் தெருவைக் குறுக்கறுப்பது பற்றி யோசித்துக் கொண்டு கதிரையில் இருந்து எழும்புகையில் வெயிட்டர் பையன் தமிழில் கேட்டான்:-
“நானா… நீங்க அஷ்ரப் சிகாப்தீன்தானே…?”
– 30.08.2010
– விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.