ரசாயனக் கலப்பை

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 19,454 
 
 

தட்டின் முன்னால் அமர்ந்து உணவில் கை வைப்பதற்குள் ஒரு கட்டளை வந்துவிட்டால், சில சமயங்களில் அது முக்கியத்துவம்கொண்டதாக இருக்கலாம்.

ஐ.ஆர்-20 அரிசிச் சோற்றுக்கு, பீர்க்கங்காய்க் குழம்பை அம்மா ஊற்றியிருந்தாள். இரண்டும் சூடு. பாசிப்பயறைக் கடைந்து தாளித்த பீர்க்கங்காய். கறிவேப்பிலைகள் முறுகி இருக்கவில்லை. செடிப் பறிப்புக்குப் பிறகு கொஞ்சம் எண்ணெய் தேய்த்த தோற்றம். நெடுக்கில் இரண்டாக வகிர்ந்த பச்சை மிளகாய்கள். வெங்காயத்தை அம்மா பொன்முறுவலுக்கு விட மாட்டாள். கூரை வேய்ந்த வெளித் திண்ணையில் கிழக்கு ஓரத்தில் சமையல் அறை. மேற்கு ஓரத்துக்கு வந்து வடக்குப் பக்கம் திரும்பினால், குளியல் அறை. நான் வீட்டுக் கதவுக்குக் கொஞ்சம் கிழக்கு தள்ளி அமர்ந்தவனாக, சாப்பாட்டுக்குக் கை கொண்டுபோனேன்.

ஆவி பறந்துகொண்டிருந்தது.

‘ஓடுறா தண்ணிச்சாவடிக்கு!’ – சத்தமாக அம்மாவின் கூப்பாடு. அப்படியே எழுந்து குதித்து ஓடினேன். எங்கள் வீட்டுக் குளியல் அறையின் கதவு, வெளியில் இருந்தும் திறக்கும் அமைப்பு கொண்டது. கதவைத் திறந்து உள்ளே பாய்ந்தேன். குப்புறக் கவிழ்க்கப்பட்டுக்கிடந்த இரும்பு வாளியை கால்களால் தள்ளிவிட்டிருந்த மாமா, ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தார். முழங்கால்களையும் தொடைகளையும் அணைத்துப் பிடித்து அவரை உயர்த்தினேன். உள்ளே நுழைந்த எனக்கும் அம்மாவுக்கும் இடையில் மூன்று நொடிகள்கூட இடைவெளி இல்லை. அம்மா, கழுத்தின் கயிற்றை அவிழ்த்து எடுத்தாள்.

மாமாவின் மார்பில் செல்லக் குழந்தைபோல ஒரு கணம் சாய்ந்து தோளைக் குத்தினாள்.

‘தீராப் பழியைக் கொண்டாறத் திரிஞ்சியே அண்ணா…’ எனக் கேவினாள்.

அடுத்த 10-வது நிமிடத்தில் நானும் மாமாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். பிணத்தாலும் அள்ளிச் சாப்பிட முடியும் என்பதுபோலத்தான் மாமா சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

‘இனி இந்த மாதிரி கிறுக்குத்தனம் எல்லாம் பண்ணிவைக்காத. என்ன இல்லாமக்கிடக்குதுனு இப்படிப் பண்ணிக்கிட்டு அலையுறே? ஒரம்பறையே(ம்) ஊர்ல வந்து இழிபேச்சுக் கொண்டாந்தர்றதுன்னு இப்படிப் பண்ணினியா?’ – அம்மா இடைவெளி விட்டு விட்டு தன் ஆதங்கத்தைக் கொட்டிக்கொண்டிருந்தாள்.

‘அவரைச் சாப்பிடவிடும்மா’ என்றேன்.

ரசத்தைப் பிசைந்துகொண்டிருக்கும்போது, ‘இனிமே இப்படிப் பண்ண மாட்டன்யா’ என்றார் மாமா.

மாமாவின் இந்தக் காரியம், என்னையும் அம்மாவையும் தவிர யாருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டோம். அப்பா, சிறிது நேரம் கழித்து தோட்டத்தில் இருந்து வந்தார். அவருக்குச் சாப்பாடு போட கொஞ்சம் தாமதம் ஆனதும், ‘இந்தச் செவிட்டு எழவுகளைக் கட்டிக்கிட்டு காலத்துக்கும் மாரடிக்கிறாப்புல இருக்குது’ எனப் புலம்பிக்கொண்டே சாப்பிட்டார்.

அம்மாவுக்குக் கிடைத்த இந்தச் செவிட்டுப் பட்டம், எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. மாமா குளியல் அறையில் சாவுக்கு முயன்ற அதே கணம், அம்மாவுக்கு மட்டும் சட்டென விழித்த செவி என்ன? கர்ப்பக் கால இரவுகளில் அருகில் படுத்திருக்கும் கணவனின் கால்கள் வயிற்றுக்குச் செல்லும்போது, தூக்கத்திலேயே தள்ளிவிடும் தாய்மையின் செய்கை அது. உயிர் சுமந்த வயிறுகளில் உள்ளே தேங்கிவிட்ட சிசுவின் செவித்திறனின் மிச்சமாக இருக்கலாம் அது.

அம்மாவுக்கு சொந்த ஊர் இலுப்பைக்கிணறு. மாமாவுக்கு அங்கே தோட்டம் இருந்தது. வானம் பார்த்த பூமி. இரண்டு எருதுகள் எப்போதும் இருந்த தோட்டம். நான் ஏழாம் வகுப்புப் படிக்கும் வரையிலும் கமலை ஏற்றம் ஓடிக்கொண்டிருந்த தோட்டம். எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வருவதற்கு முன்னமே அநேக தோட்டங்களுக்கு மின் இணைப்பு வந்துவிட்டிருந்தது. மாமாவின் தகப்பனாரான அப்புச்சி அய்யன், மோட்டார் கரன்ட்டுக்குச் சம்மதிக்கவில்லை. மின்சாரத்தால் தண்ணீர் பாய்ச்சினால் பயிர்கள் கருகிவிடும் என நம்பிக்கொண்டிருந்தார். பக்கத்துத் தோட்டத்துக்காரர்கள் பல போகங்களை விளைவித்துக் காட்டிய பிறகே மின் இணைப்புக்குச் சம்மதித்தார்.

உழவு என்பதே உழலுதல். ஆகையால், கமலை ஓட்டுவதை ‘கவலை ஓட்டுவது’ என்றே வட்டாரத்தில் சொல்லிக்கொள்வார்கள். மாமா கவலை ஓட்டுவதை, அதன் ஏற்றுவாரியில் இருந்தவாறு சிறுவனாக இருந்த நாட்களில் பல நேரம் கண்டிருக்கிறேன். எருதுகளின் பின்நடையின்போது, சால்பரி துலாக்கல் ராட்டை வழியே பயணிக்கும். பின்னர் கயிறு தன் முடுக்கத்தைக் கைவிட்ட தருணத்தில் கிணற்றில் புகுந்து நீர் முகக்கும்.

எருதுகளை முன்னோக்கி ஓட்டிக்கொண்டு வாரியின் விளிம்புக்கு வந்ததும் சால்பரியின் தோல்பையைப் பின்னி இருக்கும் சூட்டிக்கயிற்றைத் தளர்த்துவார் மாமா. பலகைக் கற்களால் தொடங்கப்பட்டு மண்ணால் வரம்புகொண்டு தொடரும் வாய்க்காலில் தண்ணீர் ‘மொடோச்’ எனச் சரியும்.

எனது விடுமுறை தினங்களில் அவரது ஊருக்குச் சென்றால், காலமே விழிக்கும் நாட்களில் அவரோடு தோட்டத்துக்குச் சென்றுவிடுவேன். கர்ணம் நீண்ட முக்கோணமாகத் தோற்றம் காட்டும் வாரியின் நீளத்துக்கும் கிணறுகளின் ஆழத்துக்கும் ஒருங்கிசைவு உண்டு. கிணற்றில் தண்ணீர் அதிகமானால் கயிற்றின் நீளம் குறைந்து, மாடுகளின் நடை தூரம் மிச்சமாகும். வாரியில் கயிறுகள் அனுமதிக்கும் கடைப் பகுதிக்கும், கிணற்றின் சில தப்படிகளுக்கு முன்பாக ஆரம்பிக்கும் மடைப் பகுதிக்கும் இடையிலாக மாடுகளின் தடையறாத போக்குவரவின் நடை இருக்கும்.

எருதுகள் நடந்த இரட்டைத் தடம், தனித்த தண்ணீர் வாய்க்கால்கள்போல் இருக்கும். இடைப்பட்ட திரட்டின் மையத்திலும், கிணற்று விளிம்பிலும் சால்பரியின் கயிறுகள் உருண்டுபோகத் தோதாக, கற்களில் காடியிடப்பட்டுப் பொருத்திவைத்த உருளைகள் இருக்கும். உருளைகளில் கயிறு தோய்ந்த பகுதிகளோ கண்ணாடி போன்ற பளபளப்பை அடைந்திருக்கும்.

சால்பரியில் நீர் முகக்கப்பட்டதை உணர்ந்ததும் எருதுகளின் தளைக் கயிற்றை உதறுவார் மாமா. அவற்றின் கீழ்நோக்கிய நடை ஆரம்பித்ததும், மாமா சட்டென வடக்கயிற்றின் மீது அமர்ந்துவிடுவார். பாதாள லோகம் பார்த்துப் பாயும் சறுக்கல் என அந்தக் காட்சி தோன்றும். அப்போது மாமா மீது ஆற்றாமையின் பொறாமை கொள்வேன். இப்படி நானும் ஒருநாள் கயிற்றில் அமர்ந்து சல்லென கீழ்நோக்கிச் சறுக்க வேண்டும். உட்காரும் இடத்தின் அடையாளமாக ஈரிழைத் துண்டு சுற்றப்பட்டிருக்கும்.

அந்த நேரங்களில் மாமாவோ, எருதுகளுக்கு இடறாத பூவரச மரத்தின் வேர் ஓரத்தில் என்னை அமர்த்திவிடுவார். மரத்தின் கீழ் இருந்த பலகைக் கல் ஒன்றில் பூவரசு ஈந்த பச்சைப் பம்பரங்களைச் சுழலவிட்டுக்கொண்டிருப்பேன் நான். கமலை ஏற்றக் கிணறுகளுக்கும் பூவரச மரங்களுக்கும் உள்ள தொடர்பு, வெயிலில் மேயும் மாடுகளுக்கும் அருகு தத்தும் மைனாக்களுக்கும் உண்டான தொடர்பு போன்றது. விட்டு விலகாதது. நீர் பாய்ச்சும் உபகரணங்கள் கமலை நேரங்கள் போக மற்றைய நேரங்களில் பூவரச மரத்தின் கிளையிலும் கீழுமாக நிழல் மேவிக்கிடக்கும்.

கமலை ஏற்றத்தின்போது மாமாவுக்கு நெசவாளியின் தோற்றம் வந்துவிடும். மாற்றி மாற்றி ஏதாவது செய்துகொண்டே இருப்பார்.மாடுகளின் தளைக்கயிறு, வடக்கயிறு, வால் கயிறு, சால்பரியின் குடாப்பைக் கட்டவும் கவிழ்க்கவுமான சூட்டிக்கயிறு இதுவும் போதாது என, எருதுகளை ஊக்குவிக்கும் சாட்டைக்கயிறு இவ்வளவோடும் ஏகநேரப் பரிச்சயம் கொண்டிருப்பார். தாவரங்கள் மீது நீர் பொழிகிற நெசவே போலும் கமலை. அந்த நேரங்களில் மாயமான செவ்வகக் கண்ணாடிப் பெட்டி ஒன்றினுள் அவர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பதாகக் காணும்.

அவரது இறைப்பின் வேகத்துக்கு அப்புச்சி அய்யன் காட்டுக்குள் தண்ணீர் மாறிக்கொண்டி ருப்பார். கையில் சாப்பாடும் கக்கத்தில் மகனுமாக அத்தை வாரிக்கு வந்து சேரும் நேரம், காலை உணவுக்கு என மாமா தனது கண்ணாடிச் செவ்வகத்துக்குள் இருந்து வெளியே வருவார். அந்த உணவில் ராகிக் களியும் ரக்கிரி மசியலும் பல நாள் இருக்கும். தட்டிப்போட்ட கொத்தமல்லியின் வாசமும் இடையீடுமாகக் கமழும் ரக்கிரிக் கீரை. ராகியைப் பொறுத்தவரை, அதன் ஒளிச்சேர்க்கையில் ராகிப் பூட்டைகள் உருவாகி வரும்போதே தண்ணீரும் நெய்யாக மாறிவிட்டதோ எனும்படி இருக்கும்.

மாமாவின் தோட்டத்துக்கு மின்சாரம் வந்தபோது அப்புச்சி அய்யனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒருசேர இறுதிக்காலம் வந்துவிட்டிருந்தது. அந்த வருடம் கடும் தண்ணீர்ப் பஞ்சம் கவ்விய வேடை.

மின்சாரம் வந்ததும் கமலை வாரியை நிரவியதில் பாசனப் பரப்பாக மூன்று பாத்திகள் அதிகம் கிடைத்தன. பூவரசமரம் கீழே போய்விட்டது. அந்த மரத்துக்குக் கீழே இரட்டைக் கற்தூண்களின் மீது தகரம் போர்த்திய கரன்ட்டு பெட்டி. தகரத்துக்கு மேலாக மழைத் தடுப்பானாக நான் பம்பரம் சுற்றிய பலகைக் கல்லை நாட்டினார்கள். ‘கொடாப்பு’ என அழைக்கப்பட்ட சால்பரியை, கோழி அடைக்கக் கொண்டுபோனார் அத்தை. மின்சாரம் மூலம் தண்ணீரைப் பாய்ச்சுவதால் தன் தோட்டத்துத் தாவரமும் கருகாமல் வளரும் என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ளாமலே அப்புச்சி அய்யனும் போய்ச் சேர்ந்துவிட்டார். மின்சார மோட்டார் வந்த நாளில் இருந்து, மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச, பாத்திகளுக்குச் செல்லும் வேலை மாமாவுக்கு.

எங்கள் வீட்டில் குளியல் அறை ஓடு வேய்ந்து இருந்ததால் ‘தண்ணீர்ச் சாவடி’ என அழைக்கப்பட்டது. மாமாவின் வீட்டில் மேகம் பார்க்கக் குளிக்கும் இடம் ‘பொடக்காலி’ என அழைக்கப்பட்டாலும், இரண்டு வீட்டுக் குளியல் அறைக்கும் தாழ்ப்பாள் ஒரே மாதிரிதான். ஒற்றைக்கதவு கொண்ட அமைப்பு.

உள்ளுக்குள் தாழ்போடும் நாதாங்கியை ஒட்டியே கதவில் அடுப்பு ஊதும் குழல் அளவுக்குத் துளை இருக்கும். விரல் நீண்டவர்கள் விநோதமான ஒரு கோணத்தில் நின்று, உள்ளே கைவிட்டு, பாம்பு விரலால் நாதாங்கியில் இருந்து தாழை விடுவித்துவிடலாம். எட்டாம் வகுப்புப் படிக்கப் போகும் வரையிலுமேகூட, வெளியில் இருந்து அதைத் திறப்பது எனக்குச் சாத்தியப்படவில்லை. ஏற்கெனவே திறந்திருக்கும் அறைக்குள் நுழைவது போன்ற வேகத்துடன் மாமா அதைத் திறந்து உள்ளே போவதைப் பார்க்கும்போது, அவர் மீது பொறாமைகொள்ளும் அடுத்த ஒரு நேரமாக அதுவே இருக்கும்.

வெளியில் இருந்தவாறே கதவு திறக்கும் விருப்பத்தை மாமாவிடம் தெரிவித்தேன். நான்கோ ஐந்தோ படிக்கும்போது, மாமா ஒருதடவை உள்தாழிடப்பட்ட குளியல் அறைக் கதவுக்கு வெளியே நின்று, 4 போல கால்களை வைத்துக்கொண்டு அவரின் சாய் தொடையில் என்னை ஏற்றி வைத்தவாறு, ‘நீக்குடா மாப்ள!’ என்றார். அவரது தொடையில் அமர்ந்து கதவின் துளைக்குள் மூன்று விரல்களையிட்டு எக்கியும் சரிந்தும் ஏதேதோ பிரயத்தனங்கள் செய்தேன். எனது விரல்கள் உள் இரும்பை நிரடினாலும் தாழ் திறக்க முடியவில்லை.

‘சரி மாப்ள… ரொம்ப முக்கி வேட்டியில வெளிக்கிப்போயிறாத. அதது காலத்துல தானாத் திறக்கும்’ எனச் சிரித்துக்கொண்டே என்னை இறக்கிவிட்டார்.

வெளித்துளையிட்ட குளியல் அறைக் கதவுகளை நானாக தாழ் திறக்கும் காலம் ஒன்று வந்தது. குளியல் அறைகளுக்கு வாசம் உண்டு என்பதை உணரும் பருவமாகவும் அது இருந்தது.

கறுப்பாகவும் உசரமாகவும் மீசை வைத்துக்கொண்டு இருக்கும் மாமா, தளர்ந்துபோகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன. விலை இருந்தால் விளைச்சல் குறைவது, விளைச்சல் இருந்தால் விலை குறைவதுமான விவசாய நிகழ்தகவைச் சந்திக்கிறவர்தான் என்றாலும் உழைப்பு, அவருக்கான மெய்வருத்தக் கூலியைத் தந்துகொண்டிருந்தது. ஆகவே, மகன் 10-ம் வகுப்பில் தோற்றது அவரை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஏனெனில், அதில் பொருட்செலவுக்கோ கடனுக்கோ வாய்ப்பு இல்லை. அத்தை புற்றுநோயால் தாக்குண்டு சில வருடங்கள் மருத்துவச் செலவு வைத்ததும், அத்தை இறந்துபோன அதே வருடத்தில், ‘கண் வலிக்காய்’ எனப்படும் செங்காந்தள் விவசாயத்தில் இறங்கி லட்சங்கள் அளவில் மாமா நஷ்டப்பட்டுக் கொண்டதும் குடும்பத்தைக் கடனில் தள்ளின. மாமா இழிசொல் பொறுப்பவர் அல்ல. பண்ணையத்தை விற்க முடிவுசெய்தார்.

ஐந்து ஏக்கர் பரப்பு நிலம், எப்போதும் இரண்டு எருதுகள், ஒரு கறவை மாடு, பத்துப் பன்னிரண்டு செம்மறி ஆடுகள் என வாழ்ந்தவருக்கு ஒரு குடும்ப அங்கத்தினரின் நோயையும், ஒரு பெரிய முட்டு வழியின் சரிவையும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உடன்பிறந்தார் வகையில் வில்லங்கங்கள் இல்லை என்பதை கையெழுத்திட்டுத் தெரிவிக்க, சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நானும் அம்மாவும் போயிருந்தோம்.

‘கிணறு வாரி நிலம் சகிதம், தடம் உள்ளடக்கம்’ எனப் பத்திரப்பதிவின் அலாதியான மொழி ஆவணத்தின் கீழாக மாமா ரேகையும் உருட்டினார். அந்த ரேகை மசியின் வண்ணத்தை ஏற்கெனவே நான் பார்த்திருந்தேன். கதிரியக்க சிகிச்சைக்கு எனப் போய் வரும் அத்தையின் கழுத்தில் இருந்து மார்பு வரை இதே வண்ணத்தில் கோடுகள் ஓடியிருக்கும். வருத்தம் தந்ததும் வறுத்தெடுத்ததுமான கடன்களை அவர் கட்டி முடித்தபோது

10 ஆயிரம் ரூபாய் மிஞ்சியது. மாமா வெள்ளகோவிலில் வீரக்குமார சாமி கோயிலில் நரிப்பழனிக் கவுண்டன் சிலை முன்னால் வைத்துதான், ஐந்தாயிரம் ரூபாயை அம்மாவிடம் கொடுத்தார். அம்மா மறுத்தாள்.

”காசு யாருகிட்ட இருந்தா என்னாயா?’ எனக் கேட்டவாறு ஐந்தாயிரத்தை என் சட்டைப்பையில் வைத்தார். சட்டைப்பையின் கொள்ளளவு எப்போதும் கம்மிதான்; வெறும் 10 ஐந்நூறு ரூபாய்த்தாள்கள்.

அப்புறம் மாமாவும் மாப்பிள்ளையும் மட்டும் இலுப்பைக் கிணற்று வீட்டில் வசித்தார்கள். வயது வந்த மகனும் தகப்பனும் மட்டும் ஒரே வீட்டில் வாழ்வது, இமயமலையில் ஈச்சை வளர்ப்பதற்கு ஒப்பானது.

மாப்பிள்ளை, வெள்ளகோவிலில் ஒரு வனஸ்பதி ஆலையில் தன்னை ஒரு ஸ்தபதியாக உருவகித்துக்கொண்டு ஓனரே கதி என வாழ்கிறான். வாயில் காப்பது முதல் வங்கிக்குப் போவது வரை சகலமும் பார்ப்பதால், ‘எங்க ஓனருக்கு எல்லாமே நான்தான்’ எனச் சொல்வான். அவன் அப்படி இருப்பதாலேயே கல்யாணச் சாத்தியம் இன்னும் கொஞ்சம் கூடுதல்.

எங்கள் ஊரில் அப்பாவின் பேரில் உள்ள ஏழு ஏக்கரை, வாழ்க்கைக் கணக்குக்குக் கொள்ள முடியாது என்பதாலேயே நானும் மூலனூரில் சாவடிக் கோழிகளுக்கு தடுப்பூசி போடுவதன் மேற்பார்வையாளனாகப் பணியாற்றி வருகிறேன். பிராய்லர் கோழிகளை நான் ‘சாவடி’க் கோழிகள் என அழைப்பது, அவற்றின் வாழ்விடப் பிரமாண்டம் கருதியதாகவோ, ‘சாவு அடி’க் கோழிகள் என்ற சிலேடைப் பொருளிலோ எடுத்துக்கொள்ளலாம். சால்பரியில் வளரும் கோழிகள், டெம்போவில் ஏறிப்போய் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் சாம்பாராக மாறுவது இல்லை.

மாப்பிள்ளை வெள்ளகோவிலைத் தலைமையிடமாகக் கொண்டுவிட்டான் என்றதும், மாமாவுக்குப் பொங்கும் இடமும் தங்கும் இடமும் இருந்தாலும் போக்கிடம் வேறு இல்லை. எங்கள் ஊர் வடுகபட்டிக்கு வந்து சேர்ந்தார்.

மாமாவின் உழைப்பைக் கைக்கொள்ளும் அளவுக்கு எங்கள் தோட்டம் இல்லை. 17 தென்னை மரங்களும், 26 முருங்கைக் குச்சிகளும் இருப்பதால் எங்கள் காடு, ‘தோட்டம்’ என வழங்கப்பெற்றுவருகிறது.

மாமாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்களா… இகழ்கிறார்களா என்பது இதுவரை புரியாத புதிர். குவாண்டம் தியரிக்கு ஒப்பானது அது.

சாப்பாட்டு நேரங்களுக்குப் பின், சில வருடங்கள் மாமா வடுகபட்டியின் கடைவீதிகளில் கழித்தது உண்டு. பேருந்துகள் வரும் நேரம் சிறிய பரபரப்பும், பெரும்பாலும் அசமந்தமும்கொண்ட கடைவீதி அது. அந்தந்தப் பருவத்தின் அழகிகளும் அழகர்களும் வந்து போகும்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு வானவில் அகலத்தில் மின்னல் வெட்டிப்போகும். மாமா, சீக்கிரத்திலேயே கடைவீதியைக் கைவிட்டார்.

வடுகபட்டிக்கு வடக்கே இருக்கிறது சண்முக சித்தாறு. ஆற்றின் வடகரையில் இருக்கிறது நட்டாத்தீஸ்வரன் கோயில். ஆறு சுருங்கிவிட்டது என்பதன் அடையாளம் அந்தப் பெயர். உமையை இழந்தவரான மாமா, நட்டாத்தீஸ்வரனின் வளாகத்தில் பொன்னரளிச் செடியோரம் அமர்ந்திருப்பார். அடைவிடங்களுக்குப் பஞ்சம் இல்லை. கைவிடப்பட்ட தோற்றத்தில் இருக்கும் மாட்டாஸ்பத்திரி, வடுகபட்டி ஸ்கூலின் மைதான வேப்பமரம், அடுத்தும் கம்பி வேலிக்குள் வளரும் மலைவேம்புக் காட்டின் ஏதேனும் ஒரு மரத்தடி ஆகியவற்றில் காற்று குடித்துக் கொண்டிருந்துவிட்டு, சாப்பாட்டு நேரம் வந்து சேர்வார் மாமா.

தண்ணிச்சாவடியில் கயிறு மாட்ட முயற்சித்த 27-ம் நாளில், மாமா காணாமல் போனார். வனஸ்பதிக்காரனும் நானும் தேடிப் போய் அடுத்த நான்காம் நாளில் ஊதியூர் வட்டமலை சூரியநல்லூருக்கு அருகில் உள்ள ‘இடையன் கிணறு’ என்ற ஊரில் அவரைக் கண்டுபிடித்தோம்.

எங்கள் ஊருக்குக் கூட்டிவரும்போது,

‘ஏன் மாமா இப்படியெல்லாம் பண்றீங்க?’ என வினவியதற்கு, ‘நான் அன்னைக்கே மாண்டிருக்கணும்; அவளை மண்ணுக்குக்குள்ள போட்ட அன்னைக்கே மாண்டிருக்கணும். இல்லீனா மண்ண எழுதிக் குடுத்த அன்னைக்கு…’ என்றார்.

வடுகபட்டியில் பேருந்து அவரை இறக்கியபோது, எனது வலது தோள்பட்டை அவரது சலவாயால் நனைந்து இருந்தது. அப்படியொரு தூக்கம்.

நட்டாத்தீஸ்வரனின் மடியிலும் அம்மாவின்

சாப்பாட்டிலுமாக சில நாட்கள் வாழ்ந்துகொண்டிருந்தார். யாரையும் துன்புறுத்தவில்லை; தவறாகப் பேசவில்லை; கல் எடுத்து அடிக்கவில்லை. பிறத்தியாரின் விருப்பம்போல நாம் இல்லை என்பது ஒன்றே நாம் கிறுக்கன் எனப்படுவதற்குப் போதுமானது.

மாமா நிரூபித்தார். மறுபடியும் காணவில்லை.

கோழி ஊசிக்காரனுக்குக் கிடைத்த விடுமுறை வனஸ்பதிக்காரனுக்குக் கிடைக்கவில்லை. நான் தேடியாக வேண்டும். நான் இல்லாவிட்டாலும் பிராய்லர் கோழிகள் சாகப்போவது இல்லை. நான் விடுமுறை போட்டுவிட்டு பைக் ஒன்றையும் எடுத்துக்கொண்டேன், அவரைத் தேடுவதற்கு.

ஒருவர் காணாமல்போகும்போது அவரைப் பற்றிய அடையாளங்கள் படிப்படியாக உருக்கொள்கின்றன.

கறுப்பா… உசரமா…. மீசை வெச்சிக்கிட்டு.

அப்புறம்.

பட்டாபட்டி டிரவுசரும் மடித்துக் கட்டிய ஒற்றை வேட்டியின் மடிப்பும் சம உயரத்தில் இருக்கும்.

அப்புறம்…

வலது முழங்கையில் தன் பார்வை வலது புறத்தில் கொய்யாமரத் தண்டின் தேமலை நினைவூட்டக்கூடிய தழும்பு ஒன்று உண்டு.

அந்தத் தழும்பு, மாமா சின்ன வயதில் கிணற்றின் பாம்பேரியில் இருந்து ‘சொர்க்’ அடித்தபோது பெற்றது. மாமாவின் நீச்சலும் முங்கும், ஏழூர் அளவில் பெயர்பெற்றது. மூன்று ஆள் உயரத் தண்ணீர் அளவினது வரை அவர் பாதாளச் சூரிகளைத் தேடியதே இல்லை. ஒரு முங்கும் ஒண்ணேமுக்கால் நிமிஷமுமாக ஸ்பேனர் முதல் சாவி வரை அவர் மீட்ட பொருட்கள் அநேகம். அநேகமாக நீர் உள்ள கிணற்றில் அவருக்குச் சாவு இல்லை.

இந்த முறை நான் அவரைக் கண்டுபிடித்தது கரூர் வெள்ளியணைப் பக்கம் உள்ள முஷ்டகிணத்துப்பட்டியில். இச்சியும் ஆலும் வேம்பும் சில தெய்வங்களும் அருகே உறைகிணறும் உள்ள தலைவாசலில் அவர் அரை சாய்வில் இருந்தார். அருகே வண்டியை நிறுத்தி ”மாமா…” என்றேன். வடுகபட்டி வீட்டில் தூக்கத்தில் எழுப்பினால் எப்படி இருப்பாரோ, அதேபோன்ற தோற்றத்தில் களங்கம் இல்லாமல் விழி உயிர்த்துப் பார்த்தார்.

‘என்ன மாப்ள… வா!’ என்றவாறு தலைவாசல் கிணற்றை நோக்கி நடந்தவாறே பேச ஆரம்பித்தார்.

‘குமுறிப் பெருகி ஓடுச்சுப்பா குடகனாறு. குத்தாலந்தான் அதுங்கிட்ட வராது. நதி போகும் திசை எல்லாம் நந்தவனம். வாய்க்கா தண்ணி அடிக்கிற ஓதம் அஞ்சாறு காதம். மாப்ள… முஷ்டக்கெணத்துப்பட்டின்னா? இதா இந்தக் கெணத்துல மிஷ்டைக் கொடை எல்லாம் படர்ந்து கெடக்குமாம். அதுல உக்காந்து தலை சிலுப்பிட்டு சிட்டுக்குருவி தண்ணி குடிக்குமாம். நான் சொல்றேன் கேளு! இதா இப்படி மண்டி போட்டு உக்காந்து கீழ கை வெச்சா உள்ளங்கையில வரணும் தண்ணி. அதுனாலதான் இதுக்குப் பேரு ‘முஷ்டிக்கிணத்துப்பட்டி’!’

கிணற்றின் அருகே மண்டி போட்டிருந்த மாமாவை, நான் கை கொடுத்துத் தூக்கினேன். நான் ஊர்ஜிதம் செய்துவிட்டேன். கயவரும் கவிஞரும் இல்லாத ஒருவருக்கு மொழி கைகூடுகிறது என்றால், அது கிறுக்கு அன்றி வேறு என்ன?

மாமாவை பைக்கில் அமரவைத்து வண்டியைக் கிளப்பினேன்.

‘அம்மா எப்படி இருக்கா மாப்ள… மச்சே எப்படி இருக்காங்க?”

அரவக்குறிச்சியில் தேநீருக்காக வண்டியை நிறுத்தினேன். முச்சந்திக் கடையில் தொங்கும் தண்ணீர் பாட்டில்களைக் காட்டி, ‘பாரு மாப்ள… இதெல்லாம் நம்ம கிணறுக. நம்ம கிணறுக எல்லாம் பாட்டிலா மாறி, தூக்குல தொங்குதுக’ என்றார். பன்னோடு ஒரு தேநீரும், பன்னின் துணை இல்லாது ஒரு தேநீரும் அருந்தினார்.

வடுகபட்டி வந்து வண்டியை நிறுத்தி, அம்மாவிடம் அலைந்த அலைச்சல்களைச் சொன்னேன்.

‘உங்க மாமனுக்கு, கிணத்துக் கிறுக்குப் புடிச்சிருக்கு’ என்றாள்.

அப்புறம் கோழி வண்டி டிரைவர்களிடம் எல்லாம் ஒரே விசாரணை மயம்தான். கிணறு என முதலிலோ இடையிலோ கடைசியிலோ என்னென்ன ஊர்கள் வருகின்றன?

பல்லடத்துக்கு அருகில் கள்ளக்கிணறு, பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் கிணத்துக்கடவு, மல்லாங்கிணறு, ஏழு கிணறு… நெல்லைச் சீமை முதல் சென்னைச் சீமை வரை எத்தனை கிணறுகள் என விசாரிக்க ஆரம்பித்தேன்.

என் விநோத விசாரணையை மனதில் எண்ணி நண்பர்கள் சீண்டுவது உண்டு. கோழிக்கே ஊசி போடுகிறவர்கள் நாக்கைச் சும்மா வைத்திருந்தால் எப்படி?

எனக்குப் பிரச்னை என்னவென்றால் மாமாவின் இப்போதைய நிலையில்…

இப்போதைய நிலையில்?

கிணற்றினால் சாக மாட்டார்.

கயிறு?

கயிற்றின் எல்லா ஓட்டமும் வாட்டமும் முடிச்சு வகைகளும் மாமாவுக்குத் தெரியும்.

நகை முரணாக யோசிப்பது எனில், ஒன்று… அவரை கயிற்றாலேயே கட்டிப்போட வேண்டும் அல்லது கயிறு எனும் ஒரு பொருளே இல்லாததாக அவருக்கு மறைத்து வைத்துவிட வேண்டும்.

பிறகு, யோசிக்க கொஞ்சம் ஆசுவாசம் இருக்கிறது. செவ்வகக் கண்ணாடிக் கூண்டில் இருந்து வெளிவரும் மாமன், பூவரச மரத்தடிக்குத்தான் வரவேண்டுமே அல்லாது வேறு எங்கும் போய்விடக் கூடாது.

முதலில், பேரில் கிணறு உள்ள ஊர்களைத் தேடலாம். அடுத்தது ஊரில் கிணறு உள்ள ஊர்களைத் தேடவேண்டியதுதான்!

– செப்டம்பர் 2015

Print Friendly, PDF & Email

1 thought on “ரசாயனக் கலப்பை

  1. மிக நல்ல, இயல்பான ஆழ்ந்த உண்மைகளை எளிமையாகச் சொல்லியிருக்கும், முதிர்ந்த எழுத்து. நன்றியும் பாராட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *