கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 5,995 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஊருக்குச் சற்றுத் தொலைவில், தனித்து இருப்பது போல் தோன்றும் முருகக்கோட்டத்தை ஒட்டி இருந்த அந்தக் குடிசை வீட்டின் கதவுகள் மூடப்பட்டருந்தாலும், உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருப்பது வெளியே வெளிச்சமாகத் தெரிந்தது. ஊரில் வயதுப் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்களால் ஜோஸ்யர்’ என்றும், டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளால் வைத்தியர் என்றும், உள்ளுர்ச்சாமியாடிகளால் ‘சாமியார் என்றும், பணக்காரப் பண்ணையார்களால் பரதேசிப் பயல் என்றும், படித்த இளைஞர்களால் லூஸ்’ என்றும் நினைக்கப்படுபவரான சம்பூர்ணம் – மாடத்தில் இருந்த ஒரு ஊதாப் பொருளை எடுத்துத் திருப்தியுடன் பார்த்துவிட்டுப் பிறகு அதனருகே இருந்த இன்னோர் ஊதாப் பொருளையும் உற்று நோக்கி விட்டு அருகே இருந்த ஒலைச் சுவடியைப் புரட்டி, குறிப்பிட்ட ஒர் ஏட்டில் உள்ள வாசகத்தை இலேசான குரலில், கனமான ராகத்தில் பாடினார். பிறகு, அந்த இரண்டு ஊதாப் பொருள்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே நின்றார். அந்தப் பொருள்களில் ஒன்று செப்புக் களிம்பு. இருபத்தைந்து பைசா எடையுள்ள செம்புக் கட்டியில், இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றாலத்திலிருந்தபோது எலுமிச்சம் பழச் சாறைப் பிழிந்து வைத்திருந்தார். இப்போது அந்தக் கட்டி தனது கய நிறமான ஊதா நிறத்தில் லேசாகக் குழைந்தது போல் களிம்பாக நின்றது. இன்னொன்று மயில் துத்தம். முள்ளம் பன்றி மாதிரி மொர மொரவென்று அதுவும் ஊதா நிறத்தில், உற்றுப் பார்க்கும் அவரையே உற்றுப் பார்ப்பது போல் இளித்தது.

சம்பூர்ணம், கீழே உட்கார்ந்து, விபூதிப் பைக்குள் வைத்திருந்த பாதரசத்தை எடுத்துத் தரையில் வைத்தார். அது தரையில் அங்குமிங்குமாக ஒடிக் கொண்டிருந்தது. உடனே அவர் மடியில் வைத்திருந்த ஒரு மூலிகை இலையைப் பிழிந்து, அதில் ஊற்றினார். பாதரசம் இப்போது, கோலிக் குண்டு மாதிரி உருண்டு திரண்டு, அப்படியே நின்றது. சம்பூர்ணம், தன்னை மீறிச் சிரித்துக் கொண்டே ஊதா நிறத்தை உள்ளடக்கிய செம்பையும், களிம்பையும் மயில் துத்தத்தையும் ஏறிட்டுப் பார்த்துக் கொண்டார். இவற்றின் ஊதா நிறத்தைப் போக்கி விட்டால் கிடைக்கும் பொருள் சாதாவாக இருக்காது. அவருக்கு ஆண்டுக் கணக்கில் பணிவிடை செய்த தனது குருவை மிஞ்சிய சிஷ்யனாகி விட்டதில் ஒரு திருப்தி இருக்கும்.

சம்பூர்ணம், கீழே உட்கார்ந்து பைக்குள் வைத்திருந்த மூலிகையை எடுத்து வைத்துக்கொண்டு அந்த ஊதாப் பொருட்களை உட்கார்ந்தபடியே பார்த்தபோது, மயில்சாமி! எப்போ சாமி வந்தீங்க? என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான்.

“மயில்சாமி. நீ வந்தது நல்லதாப்போச்சு. இன்றைக்கு ஒண்னு செய்யப்போறேன். அதுக்கு ஒன்னைத் தவிர வேறே ஆளில்லை. அதாவது வாலை என்ற பாத்திரத்தில் ஒரு மூலிகையைப் போட்டு, வீரம், பூரம் உட்படப் பல சாமான்களைப் போட்டு மூடிக் கமலாக்கினியால் எரிக்கணும். அதாவது, நெருப்பு பூ விரியறது மாதிரி எரியணும். அப்புறம் அதில் வருகிற நீராவியை ஒரு பாட்டிலில் பிடித்து நீராக்கி, அந்த நீரை மயில் துத்தத்தில் வைத்து அரைக்கணும். மயில் துத்தம் காய்ந்த பிறகு, அதை அகல் விளக்கில் வைத்துப் புடம் போடணும். மயில் துத்தத்தோட ஊதா நிறம் போயிடும். இதைத்தான் துருக போகும் என்று பாட்டு சொல்லுது. அப்புறம் இந்த செம்புக் களிம்பை உருக்கினால் வெள்ளையாய் மாறிடும். அதில் இந்த மயில் துத்தத்தை கலந்து, தண்ணிரில் கலந்து விட்டால்!”

“விட்டால்?”

“அதை நீயே பாரு. ஆனால் ஒண்ணு. நான் பொருளாசையால, இதைப் பண்ணல. வன்னியர் மகள் ‘பெயர் கொண்டிருக்கும் மூலிகைன்னு பாட்டு சொல்லுதே அது எதுன்னு இன்னும் யாருக்குமே தெரியாது. என்னோட குருநாதருக்கும் தெரியாது. நான்தான் ‘பண்ணைப் பனையைப் பார்ந்திருந்தான் என்கிற வரியை வன்னியர் மகளோட இணைத்துப் பார்த்தேன். அதன் விளைவாகக் கிடைத்த மூலிகையைப் பாதரசத்துலே சோதிச்சுப் பார்த்தேன். பேஷ். இன்னும் நாலு நாளையில் இந்த இரண்டு மேலேயும் இருக்கிற ஊதா நிறம் போய் இன்னொரு நிறம் வரும். அந்த நிறம், என்னோட குருநாதருக்கு, என்னோட நிறத்தைக் காட்டும். மற்றபடி எனக்கு வேற நோக்கம் இல்லை. உனக்கும் இருக்கப்படாது. சொல்றது புரியுதாப்பா?”

“எனக்குப் புரிஞ்சா என்ன. புரியாட்டா என்ன சாமி. ஒங்க குருநாதர் சொல்றதை நீங்க செய்வியளோ மாட்டியளோ… நீங்க சொல்லுறதை நான் தட்ட மாட்டேன்.”

“சரி, ஆரம்பிப்போமா?”

சம்பூர்ணம், அதே கிராமத்தைச் சேர்ந்தவர்தான். ஒரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு இருபத்தைதந்து வயதில் மணமேடை கிடைத்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் மணமேடையில் சரிபாதியாக இருந்தவள் பின மேடைக்குப் போன துக்கம் தாங்காது அவரது சொத்துக்களை சகோதரர்களிடம் விட்டு விட்டுக் கோவில் குளங்களைச் சுற்றத் தொடங்கினார்.

குற்றாலத்துக் குருநாதரிடம் வந்து, ரசவாதம் பற்றிப் பேசும் சாமியார்கள் என்பவர்களையும், சம்சாரிகள் என்பவர்களையும் உற்றுக் கவனித்தார்.

ஒருநாள், குருநாதரிடம் வட்ட வட்டமாய் வன்னியர் மகளாய் இருக்கிற மூலிகை எது? என்று கேட்டார். சம்பூர்ணத்தை, ஏற இறங்கப் பார்த்த அந்த எண்பது வயது ஆசிரமக்காரர், இது வைத்தியத்துக்குச் சம்பந்தப்படாத மூலிகை. உனக்குத் தெரிய வேண்டிய தேவையில்லாத ஒரு மூலிகை என்று கடுகடுத்தார். பேச்சுக்கு ஒரு இடைவெளி கொடுத்து இனி இதைப் பற்றிக் கேளாதே’ என்று ஆணையிட்டார். இதுவே சம்பூர்ணத்துக்கு ஒரு போர் உணர்வை ஏற்படுத்தியது. தானே, அந்த மூலிகையைக் கண்டுபிடித்து, ரசவாத பரீட்சையில் தேறி, குருநாதருக்கே மார்க் போட வேண்டும் என்ற எண்ணம்.

இத்தகைய மனோபாவத்தில் ஊருக்கு வந்த சம்பூர்ணம், ரஸவாத வித்தையைக் கண்டுபிடித்ததைக் காட்சியாக்க நினைத்த சமயத்தில்தான், மயில்சாமி வந்தார். வர வேண்டியவர்தான்.

இருவரும் சேர்ந்து, கண்டுபிடிக்கப்பட்ட மூலி கையையும், இதர மருந்துப் பொருட்களையும் அந்த வீட்டிலேயே இருந்த கமண்டலம் போன்ற பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்தார்கள். கீழே கமலாக்கினி.’ பாத்திரத்தின் மேல் முனையில், யானையின் தும்பிக்கை போலிருந்த குழாயின் வழியாக வந்த நீராவியை ஒரு சீசாவில் பிடித்துக் குளிர்ந்த நீரில் சீசாவை வைத்தார்கள். நீராவி நீராகியது; பிறகு மயில் துத்தத்தை அந்த நீரில் போட்டுக் கல்வத்தில் அரைத்து வெயிலில் காய வைத்தார்கள். பின்னர், அதை அகல் விளக்குகளில் போட்டு, துணியால் மூடி இறுகக் கட்டினார்கள். அப்புறம் அதைப் புடம் போட்டார்கள்.

அகல் விளக்குகளை விலக்கியபோது மயில்சாமி துள்ளிக் குதித்தார்.

“சாமி. ஊதா நிறம் போயிட்டது. போயிட்டுது. எல்லாம் போயிட்டுது.”

“இதுக்குப் பேருதான் சுன்னம். மயில் துத்தத்துல ஊதாவைப் போக்கிவிட்டால் சுன்னம்.”

சம்பூர்ணம் சிரித்துக் கொண்டார். மறுநாள், மயில்சாமி, சந்தையிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருந்த ஊது உலையில் செம்புக் களிம்பு உருக்கப்பட்டது. அந்தக் களிம்பு குழைந்து நெளிந்து ஊதா நிறத்தில் தவழ்ந்தபோது, சம்பூரணம் அதன் மீது வெள்ளைப் பஸ்பமாக மாறிய மயில் துத்தத்தைப் போட்டுவிட்டு, அந்தக் கலவையைப் பானையில் இருந்த நீரில் போட்டார்.

இருவரும் ஊதா நிறத்தில் காட்சியளித்த அந்த செம்புக் களிம்பையே பார்த்தார்கள். ஊதா நிறம் மாறிக் கொண்டே இருந்தது. படிப்படியாக, கண் முன்னாலேயே கண்ணுக்குத் தெரியாமலேயே மாறிக் கொண்டிருந்தது. இப்போது மயில்சாமியுடன் சம்பூர்ணமும் துள்ளிக் குதித்தார்.

“செம்பு. தங்கமாய் மாறிட்டு. தங்கமாய் மாறிட்டு. நினைச்சதைச் சாதிச்சிட்டேன். சாதிச்சிட்டேன்.”

“என் பெண்ணுக்கு மட்டும் இப்படி மூணு பவுன் கிடைச்சால், அவள் கல்யாணம் எப்பவோ முடிஞ்சிருக்கும்.”

மயில்சாமி தன்னை யறியாமல் சொல்லிவிட்டு, தன்னையறிந்து உதட்டைக் கடித்தார். சம்பூரணம், அவரையே பார்த்தார். பாவம். பரம ஏழை. இவன் பெண்ணாவது நல்லா வாழனும்.

சம்பூரணம், நீரில் கிடந்த தங்கத்தை எடுத்து மயில்சாமியிடம் நீட்டினார். அவர் வாங்காமலேயே பதறினார். பிறகு, மகளுக்கு ஒரு சங்கிலி போட்டால், கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு விழும் என்ற எண்ணத்தில் வாங்கிக் கொண்டார், அங்கே நிற்கப் பயந்தவர் போல் வீட்டுக்கு ஓடினார். இந்தத் தங்கம் எப்படிச் கிடைச்சுது. மிராசுதாரர் அருணாசலம் வீட்ல நகை நட்டுத் திருடு போயிட்டுதாம். இந்தத் தங்கம் எப்படிக் கிடைச்சுது? எனக்கு இப்பவே ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும். என்று குதித்த மனைவியிடம் தான் திருடன் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டி ரகசியத்தைச் சொல்லி விட்டார் மயில்சாமி. அதே சமயம், மத்தவங்க கிட்டச் சொல்லப்படாது’ என்றும் சொல்லி விட்டார்.

அந்தத் தங்கக் கட்டியையே பார்த்துக் கொண்டு மயில்சாமியின் மனைவி நின்றபோது, பண்ணையார் அருணாசலத்தின் ஒரு பாதியான – அவரை விட இரு உடம்பு கொண்ட காளியம்மாள், தங்கக் கட்டியையும், அதைக் கெட்டியாகப் பிடித்திருந்தவளையும் நோட்டம் போட்டாள். மயில்சாமியின் மனைவியிடம் வயலுக்குச் போய்ச் சீம உரத்தைத் துரவிவிட்டு வாரீயா என்று சொல்வதற்காக வந்த வள், வந்த சொல்லை வாய்க்குள்ளேயே ஒதுக்கிக் கொண்டு, “எங்க நகைகளை இவ்வளவு சீக்கிரத்துல எப்படிம்மா உருக்க முடிஞ்சுது. மீதிய எங்க வச்சிருக்க…? அவரு போலீஸ் கிட்டத்தான் போய்க்கிட்டு இருக்காரு,” என்று சொன்னபோது, மயில்சாமியின் மனைவியால், ரகசியத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சம்பூர்ணம் புறப்பட்டுக் கொண்டிருந்தார். வார ஐப்பசில. கல்யாணத்தை வச்சிடு, நாளைத் தள்ளாதே’ என்று மயில்சாமியிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, பண்ணையார் அருணாசலம், வீட்டுக் கதவை தள்ளிக் கொண்டு வந்தார்.

“நானும் ஐப்பசில என் பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். நிச்சயதாம்பூலம் கூட ஆயிடுச்சு. ஒரு பத்து பவுன் நகையாலே நின்னுடப்படாது பாருங்க… இது செம்புக் களிம்பு அரைகிலோ. இது மயில் துத்தநாகம் கால் கிலோ. நீங்க சும்மா அந்த மூலிகையைப் போடணும். அவ்வளவுதான். கல்யாணம் முடிஞ்சிடும்.”

சம்பூர்ணம், மிரண்டும் தொனியில் பேசிய பண்ணையார் அருணாசலத்தை திடுக்கிட்டுப் பார்த்தார். அவர் பிரித்துக் காட்டிக் கொண்டிருந்த இரண்டு ஊதாப் பொருட்களையும் அதிர்ந்து பார்த்தார். மோசமான மனுஷன். கள்ள நோட்டு அடிக்கப் பார்த்தவன். பக்கத்து வயல் வரப்பை வெட்டுறவன்.

“பணம் படைச்ச நீ, ஆசைப்படறது தப்பு. ஒன் மகள் கல்யாணம் நடக்கும். அவள் தீர்க்காயுசா குழந்தை குட்டிகளோட வாழ்வாள். நான் சொல்றதை நம்பு!”

“நம்புறேன் அய்யா நம்புறேன். அதே மாதிரி, நான் சொல்றதையும் சாமி நம்பணும். என்னோட பத்துப் பவுன் நகை போயிட்டுது. ஐம்பது பவுன் போடுறதா பொறுப்புப் பேசியிருக்கேன். பத்துப் பவுன் காணல. மயில்சாமி என்னோட நகையைத் திருடலன்னு நான் நம்புறதுக்காவது நீங்க பத்துப் பவுனையாவது தங்கமாத் தரணும். இல்லேன்னா இவனைப் போலீசில பிடிச்சுக் கொடுப்பேன். அங்கே இவனோட திருட்டு அம்பலமாகும். இல்லேன்னா ஒங்க குட்டு அம்பலமாகும். கவலைப்படாதீங்க சாமி! நான் யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன். சரி. வேலய ஆரம்பிப்போமா?”

சம்பூர்ணம், தெளிந்து விட்டார். ஆசாமியிடம் இருந்து தப்ப முடியாது. எப்படியாவது சமாளிக்க வேண்டும்!

“சரி. இப்படிவா. சொல்லித்தரேன்!”

“அப்படிச் சொன்னா எப்படிச்சாமி? நீங்க தப்புத் தப்பாச் சொல்ல மாட்டீங்க என்கிறது என்ன நிச்சயம்? நீங்க சத்தியவான். சத்தியம் மீறா தவரு வாங்க முருகன் கோவிலுக்குப் போவோம். நான் தேங்காய் பழம் கொண்டு வந்திருக்கேன். தாம்பாளத் தட்டுல ஒரு கற்பூரத்தைக் கொளுத்தறேன். நீங்க முருகா! இவருக்கு அதாவது இந்த அருணாசலத்துச் சத்தியமாய்த் தெரிஞ்சதைத் தான் சொல்லிக் கொடுக்கேன். பொய் சொல்லலேன்னு எதுக்கும் ஒரு பேச்சு பேசிடுங்க!”

சம்பூர்ணம், சத்தியம் செய்து விட்டார். அந்தக் கையோடயே அருணாசலத்துக்குச் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டு, திரும்பிப் பாராமலே ஒடினார். குருநாதரைப் பார்க்கப் பயம். ஆனாலும் திருக்குறளை நினைத்துக் கொண்டார். “புரை தீர்ந்த பொய்மையை சொன்னதில் தவறில்லை என்ற ஒரு நம்பிக்கை.” அதே சமயம் ஒரு பெண்ணின் திருமணம் நின்று போய்விடுமோ என்கிற பச்சாதாபம். நடப்பது நடக்கிறபடி நடக்கட்டும் என்கிற விரக்தி.

சம்பூர்ணம், ஒரு மலையடிவாரத்துக்கருகே போய் உட்கார்ந்தார். மலை உச்சியில் இருந்த முருகன் கோவிலுக்குள் நுழையும் தைரியம் இல்லாமல், மனதுக்குள் புலம்பினார். அப்போது –

பண்ணையார் அருணாசலம் வீட்டில் திருமணவிழா. மணமகள், உற்றார் உறவினர் புடைசூழ கோவிலுக்கு போகிறாள். அவள் உடம்பில் ஆடை இல்லாத அத்தனை இடங்களிலும் நகை நட்டுக்கள் ஜொலிக்கின்றன. ‘இப்போதைக்குப் போதும் என்று நினைத்து, அருணாசலம் உருவாக்கிய இருபது பவுன் தங்கக்கட்டி மணமகளின் கரங்களில் தங்கக் காப்புகளாக, கழுத்தில் ரெட்டை வடச் சங்கிலியாக மின்னியது. கோவிலுக்குள் நுழையப் போகிற சமயம். மணப்பெண்ணை, கிண்டலும், கேலியுமாக மொய்த்த தோழிகள் திடீரென்று அவளை உற்றுப் பார்க்கிறார்கள். பிறகு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி, அவள் கையைத் தூக்கியும், கழுத்தை வளைத்தும் பார்க்கிறார்கள். அதிர்ச்சியோடு சூள் கொட்டுகிறார்கள்.

மணமகளின் பொன் நிற காப்புகளும், ரெட்டை வடச்சங்கிலியும் திடீரென்று ஊதா நிறத்தில் கண் சிமிட்டின.

– கல்கி 14.10.1979

– ஆகாயமும் பூமியுமாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *