ரகு…உறவுங்கிறது ஒரு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 3,790 
 
 

“அப்பா இந்த ‘செமிஸ்டர்’ காலேஜ் பீஸ் கட்ட இன்னும் இரண்டு நாள் தான்பா இருக்கு”என்று அப்பாவுக்கு ஞாபகம் பண்ணினான் பையன் ரகு.”அப்பா எனக்கு “எஜுகேஷன் எக்ஸ்கர்ஷன்” போக பணம் கட்ட இன்னும் மூனு நாள் தான்பா பாக்கி இருக்கு.கட்டாவிட்டா என் பேரை எடுத்து விடுவே ன்னு எங்க புரபஸர் ‘அல்டிமேடம்’ கொடுத்து இருக்காப்பா” சொன்னாள் பெண் ராதா.

“நேத்து சாயந்திரம் வீட்டுக்காரர் வந்து அடுத்த மாசம் முதல் வீட்டு வாடகையை இன்னும் எரநுறு ரூபா சேர்த்து தரணூம்ன்னு சொல்லிட்டு போனார். நீங்க ரொம்ப தலை வலியா இருக்குன்னு நேத்து சாயங்காலம் ஆபீஸில் வரும் போது சொல்லவே நான் இதை உங்க கிட்டேஅப்ப சொல்லலே” என்று சொல்லி விட்டு சமையல் கட்டிற்குப் போனாள் பத்மா.

‘வீட்டு செலவு நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருதே ஒழிய வரும்படி அதிகம் ஆகக் காணோம்.’ இந்த வருஷம் வியாபாரம் ரொம்ப மந்தம், ‘ஸ்டாப்’ யாருக்கும் “இங்க்ரிமெண்ட்” இல்லேன்னு ‘மேனேஜ்மெண்ட்’ சொல்லி இருக்கு’’என்பதை எல்லாம் தன் மனதில் யோஜனைப் பண்ணீக் கொண் டே “பாக்கலாம் பத்மா” சொல்லி விட்டு எழுந்து குளிக்கப் போனார் சுந்தரம்.வீட்டு செலவுக்கும், குழந் தைகள் படிப்புக்கும்,செலவு பண்ணவே வரும் சம்பளம் பூராவும் செலவு பண்ணியும் மாத செலவில் துண்டு விழுந்துக் கொண்டு இருந்தது.

அங்கேயும் இங்கேயும கடன் வாங்கி சமாளித்து வந்தார் சுந்தரம்.

ஒரு வழியாக பையன் B,E.யும் பெண் B,Sc. யும் முடித்தார்கள்.பையன் தனக்கு “ஸ்காலர்ஷிப்” கிடைத்து இருப்பதாயும் தான் அமெரிக்கா மேல் படிப்புக்குப் போவதாயும் பிடிவாதம் பிடித்து வந்தான் ”இங்கேயே ஏதாவது வேலை பார்த்துக் கொள்ளேன்டா.எனக்கும் கொஞ்சம் உபகாரமா இருக்கும்” என்று பல முறை ஜாடை மாடையாக சொல்லிப் பார்த்தார் சுந்தரமும் அவர் மணைவி பத்மாவும்.

ஆனால் ரகு பிடிவாதமாக ‘தான் அமெரிக்கா தான் போய் படிப்பேன்” என்று திட்ட வட்டமாக சொல்லி விட்டான்.கடன்,உடன் வாங்கி வேறு வழி இல்லாமல் சுந்தரம் ரகுவை மேல் படிப்புக்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார்.

பத்மாவுக்கு தன் பையன் ரகு பண்ணது துளி கூட பிடிக்கவில்லை.அவள் தன் கணவரிடம் சொல்லி மிகவும் வருத்தப் பட்டாள்.சுந்தரம் நிதானமாக “பத்மா,பெத்த பிள்ளைக்கு அவன் அம்மா அப்பா கூட இருந்து வரணும்ன்னு ஆசை இருக்கணும்.அது இல்லாட்டா,நாம ரெண்டு பேரும் சொன் னாலும் அவன் கேக்கமாட்டான்.அவன் இஷ்டப் பட்டதை தான் பண்ணிண்டு இருப்பான்” என்று சொல்லி அவ்ரும் மிகவும் வருத்தப் பட்டார்.

பெண் ராதா அப்பா அம்மா ஆசைப் பட்டது போல் கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதம் தெரிவிக்கவே சுந்தரம் தம்பதியினர் ஜாதகம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

’பொண்ணாவது தாங்க இஷ்டப்பட்டது போல கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிச்சாளே’ என்று நினைத்து சுந்தரமும் பத்மாவும் சந்தோஷப் பட்டார்கள்.

தன் கையில் சேமித்து வைத்து இருந்த பணம்,தன் ‘ரிடைர்மெண்ட்’ ஆனால் வரும் பணத்தில் கொஞ்சம் அட்வான்ஸ்,எல்லாம் ஒன்றாகத் திரட்டி,பத்மாவின் பழைய நகைகளை அழித்து பொண்ணு க்கு புது நகைகள் எல்லாம் பண்ணிப் போட்டு, கல்யாணத்தை மாப்பிள்ளை வீட்டார் கேட்டது போல வெகு விமா¢சையாக பண்ணி முடித்தார்கள் சுந்தரம் தம்பதிகள்.

பெண்ணை ராதாவை அழைத்துக் கொண்டு,பூனாவல் இருக்கும் அவர்கள் வீட்டுக்குப் போனா ர்கள் பையனின் அம்மாவும் அப்பாவும்.

‘பொண்ணுக்கு நல்லபடியாக கல்யாணம் பண்ணி விட்டோம்’ என்கிற நிம்மதியில் பெரு மூச்சு விட்டார்கள் சுந்தரம் தம்பதிகள்.

இரண்டு மாதம் ஆனதும் சுந்தரம் ‘ரிடையர்’ ஆகிவிட்டார்.

‘ரிடையர்’ ஆகி வந்த மொத்த பணத்தையும் பாங்கிலே போட்டு விட்டு வீட்டு வாடகை கொடு த்து,சாப்பாட்டுக்கு வேண்டிய செலவுகளை கவனித்து வந்தார் சுந்தரம்.
கல்யாணம் பண்ணின இடத்தில் ராதாவை அடிக்கடி பணம் கேட்டு நச்சா¢த்து வந்ததார்கள். ஒரு நாள் சம்மந்தி மாமி சுந்தரத்தைக் ‘போனில்’ கூப்பிட்டு “உங்க மாப்பிள்ளே ‘லோன்’ போட்டு ஒரு ரெண்டு ‘ரூம் ப்லாட்’ வாங்கி இருக்கான்.அந்த ‘ப்லாட்டில்’ போட ஒரு நல்ல சோபா செட், இங்க பொண்ணும் மாப்பிளையும் படுத்துக்க ஒரு நல்ல கட்டில்,நல்ல போம் மெத்தை,உங்க பொண்னுக்கு நீங்க போட்டு இருக்கும் நகைகளை எல்லாம் பத்திரமா வச்சுக்க ஒரு ‘காட்ரெஜ்’ பீரோ எல்லாம் வாங்கணும் இது எல்லாம் இருந்தாத் தான் உங்க பொண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமா வாழ்ந்து ண்டு வர முடியும்.எங்க ரெண்டு பேருக்கும் என்ன.நாங்க வயசனவா.வெறும் பாயிலே கூட படுத்துண்டு வருவோம்” என்று சொன்னதும் சுந்தரம் வேறு வழி இல்லாமல் ”சா¢ மாமி,நான் எல்லாத்துக்கும் சேத்து உங்களுக்கு பணத்தே அனுப்பி வக்கிறேன்.நீங்கோ வாங்கிக்கோங்க”என்று சொல்லி ‘போனை க் ‘கட்’ பண்ணினார்.

சம்மந்தி மாமி ‘போன்’ பண்ணீ சொன்ன எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் அவர் மணைவி பத்மாவிடம் சொன்னார்.பத்மாவுக்கு என்ன சொல்றது என்றே தெரியவில்லை.

சுந்தரம் ‘தன் பெண் கஷ்டப்படக் கூடாதே’ என்று நினைத்து அடுத்த நாளே மாப்பிள்ளே பேருக்கு ஒரு ஒன்னரை லக்ஷ ரூபாய்க்கு ஒரு ‘ட்ராப்டை’அனுப்பி வைத்தார்.
அமெரிக்கா படிப்பை முடித்து விட்டு ஒரு நல்ல வேலையை தேடிக் கொண்டான் ரகு.

ஆறு மாதம் கூட ஆகவில்லை.

ரகு ஒரு நாள் தன் அம்மா அப்பாவுக்கு ‘போன்’ பண்ணி “அம்மா,அப்பா,நான் என் கூட படிச்சுண்டு வந்த ரமா என்கிற பொண்ணை படிக்கற நாள்ளே இருந்து காதலிச்சுண்டு வறேன்.ரமா பம்பாயை சேர்ந்த பொண்ணு.அவ அப்பா அம்மா பம்பாயிலே ரொம்ப பொ¢ய பணக்காரா.அவா ரெண்டு பேரும் அமொ¢க்காவுக்கு வந்து எங்க கல்யாணத்தே பண்ணி வைக்க முடிவு பண்ணீ இரு க்கா.நான் வேலைக்கு சேத்து ஆறு மாசம் தான் ஆறது.என்னால் உங்க ரெண்டு பேருக்கும் ‘ரிடர்ண் டிக்கட்’ வாங்க முடியாது.நீங்க உங்க பணத்தேப் போட்டுண்டு அமெரிக்கா வந்து எங்க ரெண்டு பேரை யும் ஆசீர்வாதம் பண்ண முடியுமா” என்று மென்று முழுங்கிக் கொண்டே கேட்டான்.

உடனே சுந்தரம்” ரகு,நீ நாளைக்கு இதே நேரத்துக்கு மறுபடியும் போன் பண்ணு.அம்மா இப்போ கொஞ்சம் வெளியே போய் இருக்கா.அவ ஆத்துக்கு வந்ததும், நான் அவகிட்ட கலந்து பேசிட்டு,உனக்கு சொல்றேன்”என்று சொல்லி விட்டு ‘போனை’க் ‘கட்’ பண்ணீனார்.

சுந்தரம் நிதானமாக தன் மனைவி பத்மாவிடம் ரகு சொன்ன எல்லா விஷயங்களையும் விவரமாகச் சொன்னார்.பத்மாவுக்கு கோவம் கோவமாக வந்தது.

அந்த கோவத்திலே “இந்த ரகுக்கு பயித்தியமா பிடிச்சு இருக்கு.படிப்பு முடிஞ்சு இப்போ தான் ஆறு மாசம் ஆறது.அதுக்குள்ள்ளே என்ன ‘காதல்’ ‘கத்த்ரிக்கா’எல்லாம் வேண்டி கிடக்கு.பெத்த அம்மா அப்பா நாம உசிரோடு இருக்கோம் அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து நாம ஒரு கல்யாணத்தே பண்ணி வக்க மாட்டோமா என்ன.அவன் சொல்றதே எல்லாம் நீங்க வெறுமனே கேட்டுண்டு இருந்துண்டு இருக்கேளே.நீங்கோ அவனுக்கு நான் சொன்னா மாதிரி எல்லாம் சொல்லி இருக்க வேணாமோ” என்று கத்தினாள் பத்மா.

சுந்தரம் நிதானாமாக “பத்மா,நீ ரொம்ப கோவமா இருக்கே.நான் சொல்றதே கொஞ்சம் பொறு மையா கேளு.ரகு அந்த பம்பாய் பொண்ணே நிச்சியமா கல்யாணம் பண்ணீக்கப் போறான். பொண் ணுக்கு அம்மா அப்பா பெரிய பணக்காரா.அவா ரெண்டு பேரும் ரகு ரமா கல்யாணத்தே அமெரிக்காவு க்குப் போய் நிச்சியமா பண்ணி வக்கப் போறா.ரகு ஒரு வாய் வார்த்தைக்கு நம்மே அமெரிக்காவுக்கு கூப்பிடறான்.நாம நிச்சியமா அவன் கல்யாணத்துக்கு வரணும்ன்னு அவன் ஆசைப்பட்டா, அவன் நமக்கு ’ரிடர்ன் டிக்கட்’ வாங்கி அணுப்பணும்.நான் ‘ரிடையர்’ ஆனவன்னு அவனுக்கு நன்னாத் தெரி யும்.ராதாவுக்கு நிறைய பணம் செலவழிச்சு கல்யாணத்தே பண்ணீ வச்சு இருக்கோம்ன்னு அவனுக்கு நன்னாத் தெரியும்.அதே தவிர வாரா வாரம் அவன் போன் பண்ணும் போது,ராதா புக்காத்த்லே வெறு மனே பணம் கேட்டு நச்சாரிக்கறான்னு சொல்லி இருக்கேன்.அவன் எப்படி நம்மளேப் பாத்து ‘நீங்க உங்க பணத்தேப் போட்டுண்டு அமெரிக்கா வந்து எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ண முடியுமா’ன்னு கேக்கறான்.அவனுக்கு புத்தி வேணாம்.நாம ரெண்டு பேருக்கும் அவன் கல்யாணத்து க்கு அமெரிக்காவுக்கு போய் வர எவ்வளவு பணம் ஆகுன்னு அவனுக்கு தெரியாதா என்ன.நான் உடனே பதில் சொல்லி இருப்பேன்.உன் காதிலே அவன் சொன்ன சமாசாரம் முழுக்கத் தெரியணுமே ன்னு தான் ‘நான் நாளுக்கு பதில் சொல்றேன்’னு சொல்லி போணை ‘கட்’ பண்ணீனேன்” என்று சொல்லி விட்டு அவர் வேலையைக் கவனிக்கப் போனார்.

பத்மா வாயடைத்துப் போய் நின்றுக் கொண்டு இருந்தாள்.

அடுத்த நாள் ரகு போன் பண்ணின போது சுந்தரம் ”எங்களாலே, எங்க செலவிலே அமொ¢க்கா எல்லாம் வந்து போக முடியாது”என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’பண்ணினார்.

குறிப்பிட்ட நாளில் ரகு ரமா கல்யாணம் அமொ¢க்காவில் நடந்து முடிந்தது.

ரகு மாதம் தவறாமல் அப்பாவுக்கு இருபதாயிரம் ரூபாய் அனுப்பி வந்தான்.

பையன் அனுப்பி வந்த பணத்தை பாங்கில் போட்டு வைத்துக் கொண்டிருந்தாரே ஒழிய தன் செலவுக்கு காலணா கூட அதில் இருந்த எடுத்து கொள்ளாமல் இருந்தார் சுந்தரம்.

பல முறை தன் மணைவி சொல்லியும் சுந்தரம் பையன் அனுப்பி வந்த பணத்தை தொடாமல் பாங்கிலேயே சேர்த்து வைத்துக் கொண்டு இருந்தார் சுந்தரம்.
எட்டு வருஷங்கள் ஓடி விட்டது.

சுந்தரம் வாடகைகுக் இருந்து வந்த வீட்டுக்காரர் வீட்டை இடித்து விட்டு ‘ப்ளாட்’ கட்டப் போவதயும்,உடனே சுந்தரத்தைக் கூப்பிட்டு ‘வீட்டைக் உடனே காலி பண்ண வேண்டும்’ என்றும் கட்டாயப் படுத்தி வந்தார்.

உடனே சுந்தரம் வேறு வீடு தேடினார்.எல்லா இடத்திலும் வாடகை ‘எக்கச் சக்கமாக’ கேட்டார்கள்.‘அட்வான்ஸ்ஸ¤ம்’ அதிகமாகக் கேட்டார்கள்.

கவலை வந்தது சுந்தரத்துக்கு.தன் மனைவி பத்மாவிடம் சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

கொஞ்ச நேரம் யோஜனை பண்ணீன பத்மா “நம்ப பையன் அனுப்பி இருக்கும் பணத்லே நாமே ஒரு சின்ன ‘ப்ளாட்டா’ வாங்கிநுச்,அதிலே நாம இருந்துண்டு வரலாமே.பின்னிட்டு அந்த ‘ப்ளாட்’ ரகுக்கே சொந்தமாயிட்டுப் போகப் போறது.பாங்கில் இருந்தா என்ன ‘ப்ளாட்டா’ இருந்தா என்ன. ‘பாங்கிலே’ இருக்கிறதே விட ’ப்லாட்டா’ இருந்தா அதுக்கு விலையாவது ஏறுமே” என்று பத்மா தனக்கு தொன்றிய ‘ஐடியா’வை சொன்னாள்.

சுந்தரத்திற்கு இந்த ஐடியா முதலில் பிடிக்கவில்லை.

மணைவி தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது.வீட்டுக்காரரும் சுந்தரத் தை ப் பார்த்து “வீட்டை சீக்கிரமா காலி பண்ணுங்க” என்று சொல்லி நெருக்கி வந்தார்.

சுந்தரம் வேறு வழி ஒன்றும் தோன்றாமல் பத்மா சொன்ன ஐடியாவை ஒத்துக் கொண்டு.ஒரு ‘ப்ரோக்கரை’ப் பார்த்து ஒரு சின்ன ‘ப்லாட்டாக’ விலைக்கு பார்க்க சொன்னார்.

‘ப்ரோக்கர்’ப் பார்த்து சொன்ன ஒரு சின்ன ‘ப்லாட்டை’ பார்த்த சுந்தரத்துக்கும் பத்மாவுக்கும் பிடித்து இருந்தது. உடனே சுந்தரம் தன் பையன் மாசா மாசம் அனுப்பி சேர்த்து இருந்த பதினைந்து லக்ஷம் ருபாயுடன், தன்னிடம் இருந்த மூன்று லக்ஷ ரூபாயும் சேர்த்துப் போட்டு ‘ப்ரோக்கர்’ காட்டின ‘ப்லாட்டை’ வாங்கினர்.
அந்த ‘லாட்டுக்கு’ குடி வந்தார்கள் சுந்தரம் தம்பதிகள்.

அடுத்த நாளே சுந்தரம் தன் பையன் ரகுவிற்கு தான் ‘ப்ளாட்’ வாங்கின மொத்த விஷயத்தையும் விவரமாகச் சொன்னார் சுந்தரம்.

எட்டு வருஷங்கள் ஓடி விட்டது.

’இனிமே அமெரிக்காலே இருந்து வந்தா குழந்தைகளுக்கு அமொ¢க்கா பழக்க வழக்கங்க வந்து டும் என்றும்,ரிடையர் ஆன அப்பா அம்மாவுடன் தான் தன் குழந்தைகள் வளணும்’ என்று தன் மணைவி ரமா ஆசை படுவதாயும்,அதனாலே தான் பம்பாய்க்கு திரும்பி வந்து வேலை தேடிக் கொள்ள போவதாயும் அப்பாவிடம் ‘போனி’ல் சொன்னான் ரகு.

அடுத்த மாசமே மணைவி குழந்தைகளுடன் பம்பாய் வந்து விட்டான் பிள்ளை ரகு.

ஒரு மாதம் தான் ஆகி இருக்கும் திடீரென்று ஒரு நாள் ரகு போனில் “அப்பா என் மாமனார் வீட் டுக்குப் பக்கத்து ‘ப்ளாட்’ விலைக்கு வந்து இருக்கு.அதை வாங்கினா,எனக்கும்,ரமாவுக்கும் என் குழந்தைகளுக்கும் சௌகரியமா இருக்கும்.அதனால் நான் அந்த ‘ப்ளாட்டை’ நான் வாங்க முடிவு பண்ணி இருக்கேன்.எனக்கு ஒரு பதினைந்து லக்ஷம் ரூபாய் துண்டு விழறது.நான் உங்களுக்கு மாசா மாசம் அனுப்பின பணத்தில் ஒரு பதினைஞ்சு லக்ஷ ரூபாய் தர முடியுமாப்பா” என்றும் கேட்டான் ரகு.

ஒரு நிமிஷம் என்ன பதில் சொல்வது என்றே சுந்தரத்திற்கு தெரியவில்லை.

மெல்ல நிதானத்திற்கு வந்து “ரகு,நீ அனுப்பின பணத்தையும்,என் கையிலே இருந்த பணத் தையும் போட்டு தானேடா நான் இந்த ‘ப்ளாட்டை’ வாங்கி இருக்கேன்.இதை உனக்கு நான் ‘ப்ளாட்’ வாங்கின கையோடு போன் பண்ணி சொன்னேனே.இப்போ திடீர்ன்று பணம் கேட்டா நான் பணத்துக்கு எங்கேடா போவேன்.என் கிட்டே இப்போ பணம் இல்லேயடா” என்று சொல்லும் போதே அவருக்கு நாக்கு குழறியது.

மிகவும் கஷ்டப் பட்டார் சுந்தரம்.

அடுத்த ஐந்தாவது நிமிஷமே “எங்களுக்கு தேவையா இருக்கும்ன்னு தானே நாங்க உங்களுக் கு இத்தனை வருஷமா பணம் அனுப்பிண்டு வந்தோம்.அந்த பணத்திலே உங்களே யார் ‘ப்ளாட்’ வாங்கச் சொன்னா.எப்படியாவது ‘அரேஞ்’ பண்ணி எங்களுக்கு உடனே பணத்தை அனுப்பி வைக்கப் பாருங்கோ” சொல்லி விட்டு ‘போனை’ வைத்து விட்டாள் மருமகள் ரமா.

தலை சுற்றியது சுந்தரத்திற்கு.

இன்னும் ஐஞ்சு நிமிஷம் தான் ஆகி இருக்கும் சுந்தரத்திற்கு மறுபடியும் ‘போன்’ வந்தது.

‘போனை’ எடுத்து பேசினார் சுந்தரம்.

”நாங்க சௌக்கியம் சம்பந்தி. நீங்க சௌக்கியமா இருக்கீங்களா” என்று சொல்லி சம்பந்தி கேட்டார்.

சுந்தரம் பதில் சொல்வதற்குள் “நீங்க உங்க பணத்தே போட்டுத் தானே ‘ப்ளாட்’ வாங்கி இருக் கனும்.எப்படி அவா அனுப்பின பணத்தை போட்டு ‘ப்ளாட்’ வாங்கலாம்.நீங்க உடனே அவங்க உங்க ளுக்கு அனுப்பின பணத்தை அனுப்ப ஏற்பாடு பண்ணுங்க” கொஞ்சம் என்று மிரட்டின குரலில் சொன்னார் சம்பந்தி.

பேறைந்தார் போல் இருந்தது சுந்தரத்திற்கு.

ரகுவும்,மருமக ரமாவும்,சம்மந்தியும் போனில் பேசின சமாசாரத்தை மணைவி பத்மாவிடம் நிதானமாகச் சொன்னார் சுந்தரம் பிறகு கவலையோடு ”நான் அப்பவே சொன்னேனே பத்மா.அவா பணத்தே நாம் தொடக் கூடா துன்னு.நீ கேட்டயா.அந்தப் பணத்தை எடுத்து ‘ப்லாட்’ ‘வாங்குங்கோ’ ‘வாங்குங்கோ’ ன்னு என்னே நச்சரிசே.இப்ப அவா அனுப்பின பணத்தே உடனே திருப்பிக் குடுங்கோன்னு கேக்கறா.நான் என்ன பண்ணட்டும் சொல்லு” என்று சொல்லி வருத்தப் பட்டார் சுந்தரம்.

உடனே பத்மா “இந்த மாதிரி ரகுவும்,அவன் பொண்டாட்டியும்,அந்த சம்மந்தி மாமாவும் நம்மே நெருக்குவான்னு நான் யோஜனையே பண்ணலே.நான் பண்ணது ரொமப தப்பு தான்.நான் என்ன மோ நம்ம பையன் மாசா மாசம் அனுப்பிண்டு இருந்த பணம் நமக்குத் தான்னு தப்பு கணக்கு போட்டு ட்டேன்”என்று சொல்லி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

”போகட்டும் விடு,பத்மா.இப்போ வருத்தப்படாதே.நீ பாவம் ‘வெளுத்தது எல்லாம் பால்’ன்னு நினைச்சுண்டு வந்துண்டு இருப்பவ” என்று சொல்லி தன் மணைவிக்கு ஆறுதல் சொன்னாள்.

ஒரு முடிவுக்கு வந்தவராய் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு “நான் நம்ம புரோ க்கரைப் பார்த்துட்டு வறேன்”என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினார் சுந்தரம்

‘ப்ரோக்கரிடம்’ வந்து சுந்தரம் “இதோ பாருங்க ‘புரோக்கரே’.நான் வாங்கின ‘ப்ளாட்டை’ இன்னேக்கே ஒரு பதினைந்து லக்ஷத்திற்கு உடனே வித்துக் குடுங்க.எனக்குப் பணம் உடனே வேணும்” என்று அவசரப் படுத்தினார்.

“என்னங்க உங்க ‘ப்ளாடை’ நீங்க பதினெட்டு லக்ஷ ரூபாய் குடுத்து வாங்கினீங்க. இப்போ என்னடான்னா உடனே அந்த ‘ப்லாட்டே’பதினைஞ்சு லக்ஷ ரூபாய்க்கு வித்துக் குடுக்கச் சொல்றீ ங்க”என்று ஆச்சா¢யத் தோடு கேட்டார் ‘புரோக்கர்’.

“ஆமாப்பா,எனக்கு பதினைஞ்சு லக்ஷ ரூபாய் பணம் இப்பவே வேணும் புரியறதா.உடனே அதுக்கு சீக்கிரமா ஏற்பாடு பண்ணுங்க” என்று சுந்தரம் மேலும் மேலும் வற்புறுத்தவே ‘புரோக்கர்’ சுந்தரம் படும் கஷ்டத்தை புரிந்துக் கொண்டு,பக்கத்தில் இருந்த சேட்டிடம் விலை பேசி ‘ப்ளாட்டை’ பதினைஞ்சு லக்ஷத்திற்கு வித்து விட்டு,’கமிஷன்’ ஒன்னும் வாங்கிக் கொள்ளாமல் மொத்த பணத் தையும் சுந்தரத்திடம் கொடுத்தார் அந்த ‘ப்ரோக்கர்’.

‘ப்ரோக்கர்’ கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு பாங்கிற்குப் போய் பதினைஞ்சு லக்ஷ ரூபாய்க்கு பையன் பேரிலே ஒரு ‘ட்ராப்டை’ வாங்கி பையனுக்கு அனுப்பினர் சுந்தரம்.

“இனிமே நமக்கு இந்த ஊர்லே வேலே ஒன்னும் இல்லே பத்மா.நம் கைலே இப்போ பணமும் இல்லே.அதனாலே நாம ரெண்டு பேரும் என் சொந்த ஊரான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போயிட லாம்.அங்கே என் பால்ய ஸ்னேகிதன் ராமஸ்வாமி இருகான்.அவன் ஒரு முதியோர் இல்லம் வச்சு இரு க்கான்.நாமும்அங்கே போய் சேர்ந்திடலாம் வா”என்று சொல்லி விட்டு,மீதி இருந்த சாமான்களை எல்லாம் போன விலைக்கு விற்று விட்டு தன் மணைவியுடன் வைத்தீஸ்வரன் கோவில் போய் சேர்ந்து விட்டார் சுந்தரம்.

மூன்று வருஷங்கள் ஓடிவிட்டது.ரகுவின் மாமனார் மாமியார் இருவரும் ஒரு நாள் காரில் போய் கொண்டு இருக்கும் போது எதிரே வந்த லாரி மோதி ‘ஸ்பாட்டிலேயே’ இறந்து விட்டார்கள்.

ஆறு மாதம் ஓடி விட்டது.

திடீரென்று ஒரு நாள் இரவு ரகு பையனுக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டது.என்ன பண்ணுவது என்றே ரகுவுக்கும்,சுந்தா¢க்கும் புரியவில்லை.பக்கத்து ‘ப்ளாட்டில்’ வசித்து வந்த ஒரு வயதான அம்மாவைப் போய் கேட்டான் ரகு.பையனைப் பார்த்து விட்டு அந்த அம்மா ”இவ்வளவு வலியால் துடிக்கிறானே.நீங்க உடனே வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அழைச்சு போய் இவன் வயித்து லே ‘ஒரு மாவிளக்கு ஏத்தறோம்’ன்னு வேண்டிண்டு உடனே டாக்டர் கிட்டே அழைச்சுக் கிட்டு போங்க” என்று சொன்னாள்.

உடனே ரகுவும்,ரமாவும் அந்த அம்மா சொன்னது போல வேண்டிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போனார்கள்.அந்த ஹாஸ்பிடலில் ரகு பையனுக்கு ‘எமர்ஜென்ஸி அபெண்டிஸைடஸ் ஆபரேஷன்’ பண்ணி அவன் உயிரை காப்பாற்றினார்கள்.ரகுவும் அவன் மணைவி ரமாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

உடனே ரகு ”ரமா,இந்த ‘ஹாப் யியர்லி’ லீவின் போது நாம ஹா¢யை வைத்தீஸ்வரன் கோவிலு க்கு அழைச்சுப் போய் மறக்காம வேண்டிக் கொண்ட பிராத்தனையை செஞ்சு விட்டு வரணும்” என்று சொன்னவுடம் ரமாவும் “ஆமாம் நாம மறக்காம போய் பண்ணீ வரலாம்”என்று ஆமோதித்தாள்.

அரை ஆண்டு லீவு விட்டதும் ரகுவும்,ரமாவும் தங்கள் பையனையும் பெண்ணையும் அழைத் துக் கொண்டு பிரார்த்தணையை செலுத்த வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்தார்கள்.

ஹோட்டலில் குளித்து விட்டு கோவிலுக்கு வந்தார்கள் ரகுவும் ரமாவும்.

கோவில் சன்னிதியில் உட்கார்ந்துக் கொண்டு “ரமா,நாம இந்த பிரார்த்தணையை எப்படி செலுத் தப் போறோம்.நமக்கு ஒன்னும் தெரியாதே.உன் அப்பா அம்மாவும் இப்போ உயிரோடு இல்லே.என் அப்பா அம்மாவும் சென்னையை விட்டு எங்கேயோ போயி¢ட்டா.எங்கே போனான்னே தெரியலேயே. இது போல சமயங்கள்ளே தான் நமக்கு பெரியவா நம்மோடு இருக்கணும்.இப்போ என்ன பண்றது, யாரைக் கேப்பதுன்னே எனக்கு புரியலையே” என்று சொல்லி விட்டு நாலா பக்கமும் பார்த்தான் ரகு.

சிறிது நேமானதும் ”நாம அந்த பதினைஞ்சு லக்ஷம் பணம் கேட்டு உங்க அப்பாவை நெருக்காம இருந்திருந்தா ஒரு வேளை அவங்க அந்த சென்னை ‘ப்ளாட்டை’ நஷ்டத்திற்கு வித்துட்டு, இப்படி எங்கேயோ போய் இருக்க மாட்டா.நாம் பண்ணினது ரொம்ப தப்பு” என்று சொல்லும் போதே ரமாவின் கண்களில் கண்ணீர் துளித்தது.

”ஆமாம் ரமா,நீ சொல்வது சரிதான்.நாம தான் அவாளை சென்னையை விட்டு விரட்ட காரண மா இருந்துட்டோம்” என்று சொல்லும் போது அவன் குரலிலும் வருத்தம் தெரிந்தது.

கோவில் பிரகாரத்தில் நமஸ்காரம் பண்ணி விட்டு எழுந்துக் கொண்ட ஒரு பெரியவர் காதில் இவர்கள் பேசுவது கேட்டது.

அவர் உடனே ‘இவா சொல்றதேப் பாத்தா நம்ம சுந்தரம் கதை போலவே இருக்கே.இவாளை மேலே விசாரிச்சு தான் பாக்கலாமே’ என்று நினைத்து “தம்பி,உன் அப்பா பேரு என்னப்பா” என்று கேட்கவே ரகு வருத்த மிகுதியால்,”என் அப்பா பேர் சுந்தரம்” என்று மெல்ல சொன்னான்.

‘சுந்தரம்’ என்ற பேர் கேட்டதும் சற்று திடுக்கிட்டவராய் அந்த பெரியவர் “உன் அம்மா பேர் என்னப்பா” என்று கேட்டார்.”என் அம்மா பேர் பத்மா” என்றான் ரகு.

”அப்படியா எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார்.நான் அவரை அனுப்பி வக்கிறேன்.அவர் உங்களுக்கு இந்த பிரார்த்தணை எப்படி பண்ணுவதுன்னு சொல்லி,பிரார்த்தணையை பண்ண எல்லா உதவியும் பண்ணுவார்” என்று அவர் சொன்னதும் ”ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று ரகுவும் ரமாவும் தங்கள் கைகளைக் கூப்பிக் கொண்டு சொன்னார்கள்.

ஸ்வாமி சன்னிதியில் ‘ருத்ரம்’ மந்திரம் சொல்லி விட்டு சுந்தரமும்,பத்மாவும் எழுந்தார்கள்.

சுந்தரத்தின் தோளைத் தொட்டு “டேய் சுந்தரம்,உன் பையன்,மாட்டுப் பொண்ணு, பேரன், பேத்தி,எல்லாம் வெளிப் பிரகாரத்திலே உக்காந்துண்டு இருக்கா.அவா பையனுக்கு ‘மா விளக்கு’ போடணுமாம்.நீ போய் அவாளுக்கு கொஞ்சம் உதவுப்பா” என்று சொன்னான் சுந்தரத்தின் ஆத்ம நண்பன் ராமசுவாமி.

சுந்தரத்திற்கும் பத்மாவுக்கும் அவர்கள் காதுகளை நம்பவே முடியவில்லை.

“என்ன ராமா நீ சொல்றே.வந்து இருப்பது என் பையன் மாட்டுப் பொண்ணுன்னு உனக்கு எப்படி தெரியும்.நீ அவாளை பார்த்ததே இல்லையேப்பா” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் சுந்தரம்.

உடனே ராமசுவாமி “நீங்க என்னோடு வாங்க.எல்லாம் உங்களுக்குப் புரியும்” என்று சொல்லி சுந்தரதின் கையைப் பிடித்து வெளிப் பிரகாரத்திற்கு அழைத்து வந்து ரகுவையும் ரமாவையும் காட்டி “இவா ரெண்டு பேரும் உங்களுக்கு உங்க பையனுக்கு ‘மா’ விளக்குப் போட எல்லா உதவியும் பண்ணுவா” என்று சொல்லி விட்டு சுந்தரத்தையும் பத்மாவையும் அங்கே விட்டு விட்டுப் போனார் ராமசுவாமி.

சந்தோஷ மிகுதியால் அங்கே உட்கார்ந்துக் கொண்டு இருந்த ரகுவையும்,அவன் குடும்பத்தையும் பார்த்தார்கள் சுந்தரமும் பத்மாவும்.

அப்பாவையும் அம்மாவையும் பார்த்த ரகு விக்கி விக்கி அழுதான்.

“அப்பா,அம்மா,என்னே மன்னீசிடுங்க.நீங்க ரெண்டு பேரும் எங்கே போயிட்டீங்க. நான் சென்னைலே விசாரிச்சு,விசாரிச்சு,ஓஞ்சு போயிட்டேன்”என்று அழுதுக் கொண்டே கேட்டான் ரகு.

உடனே ”நாங்க பண்ணினது ரொம்ப தப்பு.எங்களை மன்னிச்சிடுங்க” என்று கோரஸாக சொல்லிக் கொண்டு ரகுவும் ரமாவும் ரெண்டு பேர் கால்களிலும் விழுந்தார்கள்.

பிறகு ரகு நிதானமாக “அப்பா,அம்மா என் பையன் ராஜனுக்கு ஒரு நாள் திடீர்ன்னு வயித்து வலி வந்தது.அந்த வலி ரொம்ப அதிகமா இருக்கவே,நாங்க ரெண்டு பேரும் பயந்துப் போய் பக்கத்து ‘ப்லாட்லே’ இருந்த ஒரு வயசான அம்மாவை கூப்பிட்டு காட்டினோம்.உடனே அந்த அம்மா தான் எங்களை வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் ‘மா’ விளக்குப் போட சொன்னா.நாங்க ராஜனை ‘ஹா ஸ்பிடலு’க்கு அழைச்சுண்டுப் போய் அவனுக்கு ‘அபெண்டிஸிடைடஸ்’ ஆபரேஷன் பண்ணோம். அந்த அந்தப் பிரார்த்தணையை செலுத்த தான் நாங்க இப்போ வைத்தீஸ்வரன் கோவில் வந்து இருக்கோம்” என்று அழுதுக் கொண்டேசொன்னான்.

உடனே சுந்தரம் எரனூறு ரூபாயை தனக்குத் தெரிந்த ஒரு கோவில் சிப்பந்தி இடம் கொடுத்து அவனைப் பார்த்து “முருகா,நீ கொஞ்சம் வாச கடைக்குப் போய்’ மா விளக்கு’ போடற சாமாங்க வாங்கி ண்டு வா” என்று சொன்னதும் அந்த சிப்பந்தி வாசலிலே இருந்த ஒரு கடைக்குப் போய் ‘மா விளக்கு’ போடற சாமான்களை வாங்கிக் கொண்டு வந்து சுந்தரத்திடம் கொடுத்தான்.

பத்மாவும் சுந்தரமும் பேரன் ராஜன் வயித்திலே ‘மா விளக்கு’ப் போட்டு விட்டு, பிறகு வைத்தீ ஸ்வரன் ஸ்வாமி தரிசனம் செய்ய வைத்து,தனக்கு தெரிந்த பெரிய குருக்களிடம் சொல்லி எல்லார் பேருக்கும் அர்ச்சனையையும் பண்ணி வைத்து,விபூதி,புஷ்பம்,பிரசாதம்,எல்லாம் வாங்கி கொடுத்தார்கள்.

சிறிது நேரம் ஆனதும் ரகு அப்பா அம்மாவைப் பார்த்து “இப்போ நீங்க ரெண்டு பேரும் இங்கே என்ன பண்ணிண்டு இருக்கேள்” என்று வருதத்துடன் கேட்டான்.
சுந்தரம் தான் சென்னையை விட்டு இங்கே வந்த முழு கதையை விவரமாகச் சொன்னார்.

உடனே ரகு “அப்பா அம்மா,நீங்க ரெண்டு பேரும் இப்படி இந்த வயசான காலத்திலே தனியா இருக்க வேணாம்.எங்க கூட பம்பாய் வந்து விடுங்க.நாம எல்லாம் ஒன்னாய் சேர்ந்து பம்பாயிலே இருந்து வரலாம்” என்றான்.

நீண்ட நேரம் யோஜனை பண்ணி விட்டு “ரகு,நீ நன்னா கேளு.இந்த ‘உறவு’ என்கிறது நாம வேணும் போது வச்சுக்குறதும்,வேணாங்கிற போது தூக்கி எறியற பொருள் இல்லே.அதே வாழ் நாள் பூராவும் நம்ம உடம்பிலே ஒரு அங்கமா வச்சுண்டு வரணும்.இந்த ‘உறவு’ என்கிற வார்த்தை ஒரு ‘கருவேப்பிலை கன்னு’ மாதிரி.அதை நாம தினந் தோறும் ஜலம் விட்டு வாடாம இருக்க பாடு பட்டு வறணும்.அது வளறதான்னு நாம் கவனிச்சுண்டு வறணும்.பல வருஷங்க அந்த ‘கருவேப்பிலை கன்னை’ கவனிக்காம இருந்துட்டு,இன்னைக்கு திடீர்ன்னு ஞாபகம் வந்து அந்த ‘கருவேப்பிலை கன்னைப்’ போய் பாத்தா அது வாடி,வதங்கி,காய்ஞ்சு,உதிந்துப் போயிருக்கும்” என்று உருக்கமாக சொன்னார்.

அவர் கண்களில் கண்ணிர் வழிந்துக் கொண்டு இருந்தது..

தன் கண்களில் வழிந்த் கண்ணீரை தன் தோள் மேலே போட்டு இருந்த துண்டினால் துடைத் துக் கொண்டே “ரகு,உங்க உலகம் வேறே,எங்க உலகம் வேறே.உங்க உலகத்லே நாங்க வந்து இருப்பதும் கஷ்டம்,எங்க உலகத்லே நீங்க வந்து இருப்பதும் ரொம்ப கஷ்டம்.நாங்க ரெண்டு பேரும் இப்படியே எங்க காலத்தை இந்த வைத்தீஸ்வரன் கோவில் க்ஷத்தரத்தில் கழிச்சுட்டு ‘அவன்’ என் னைக்கு எங்களை அழைச்சுக் கொள்றானோ,அன்னைக்கு நாங்க இந்த உலகத்தை விட்டு போய் சேற்றோம்.வா பத்மா,நாம நம்ம உலகத்துக்குப் போகலாம்” என்று சொல்லி,விட்டு மணைவியை அழைத்துக் கொண்டு ‘வாக்கரை’ ஊன்றிக் கொண்டு,மெல்ல,மெல்ல,தன் பெருத்த சரீரத்தைத் தூக்கி க் கொண்டு ஆடி,ஆடிப் போய்க் கொண்டு இருந்தார் சுந்தரம்.

தன் கணவனைப் பின் தொடர்ந்துப் மெல்லப் போய் கொண்டு இருந்தாள் பத்மா.

நூறு சாட்டையடி வாங்கியது போல் இருந்தது இருந்தது ரகுவுக்கு.

ரெண்டு பேருடைய உருவம் மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தார்கள் ரகுவும் ரமாவும் குழந்தைகளும்.

ரகு,ரமா இருவர் கண்களிலும் கண்ணீர் ஆறாய் பெருகியது.

அதை துடைத்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலை விட்டு வெளியே வந்தார்கள் ரகுவும் ரமாவும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *