பத்துவருடங்களுக்குப் பிறகு நேரிடப்போகிற சந்திப்பு! நினைக்கும்போதே நாவில் இனிப்பைத்தடவிய மாதிரி தித்தித்தது ஆனந்தனுக்கு.
குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாய் துபாய்க்கு பணி செய்ய ஆனந்தன் புறப்படும் முன்பு கடைசியாய் சந்தித்தது.
நீண்ட நேரம் பேசிமுடித்துப் பிறகு பிரியும்போது விளையாட்டாகப் பேசிக்கொண்டதுதான்,”சரியாக பத்துவருஷம்கழித்து இதே போல சித்திரை பிறக்கும் நாளான தமிழ் வருடத்தின் முதல் தினத்தில் இதே மாலைநேரத்தில், இதே பெங்களூர் லால்பாக் பூங்காவின் கண்ணாடி மாளிகையில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாம் சந்தித்துக்கொள்ளணும் …பத்துவருடம் என்பது பெரிய இடைவெளிதான்..வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை உண்டாக்கி இருக்கும் , ஆனாலும் பழகிய நாட்களில் பேசியபடி பிறகு அதை நாம் செயலில்கொண்டுவரமுடிந்ததா என்றெல்லாம் மனம்விட்டு பேசிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம்.இடையில் நாம் சந்தித்தாலும் அல்லது மறந்தாலும் பத்துவருடம் கழித்து கண்டிப்பாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் ஆனந்த்!”என்று அந்த இளம் வயதுக்கே உரிய வேகத்தில் காயத்ரி சொல்லி இருக்கலாம் .
ஏனெனில் அதற்குப் பிறகு அவளை ஆனந்தன் சந்திக்கவே இல்லை ஆனாலும் காயத்ரியின் அந்த வார்தைகள் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
கண்ணுக்குத் தெரியாத காற்று சுவாசத்தை இயக்குவது போல கண்காணாது எங்கோ இருக்கும் நட்பின் நினைவுத்தாக்கம் பல நேரங்களில் மனவலிமைக்கு உதவுவதை ஆனந்தன் உணர்ந்திருக்கிறான்.
காயத்ரியின் கல்யாணப்பத்திரிகை எட்டுவருடம்முன்பே ஆனந்தனின் வீட்டு முகவரிக்கு வந்தது.
இருபத்திமூன்றுவயதில் பெண்கல்யாணம் என்பதெல்லாம் எட்டுவருடம்முன்பு சகஜம்தான்.சரியாய் அப்போதுதான் ஆனந்தனின் அப்பாவிற்கு மாரடைப்புவந்து மரணமடையவும், வேலையை விட்டு தாயகம் வரவேண்டிய நிலமையில்,.அவனால் அவளுடைய கல்யாணத்திற்குப் போகமுடியவில்லை.
அக்காவின் கல்யாணத்திற்கு அப்பா வாங்கிய ஏராள கடனைத் தீர்க்கவே துபாய் சென்றிருந்த ஆனந்தன் அப்பாவின் மறைவிற்குப் பிறகு வீட்டில் அம்மாவும் இரண்டுதங்கைகளுக்கும் பாதுகாப்பாய் இந்தியாவிலேயே ஒருவேலைதேடிக்கொண்டான். படிப்புக்கேற்ற வேலையுமில்லை வாங்கிய சம்பளமும் குடும்பத்தை கரைசேர்க்க போதவில்லை.
இதில் மூத்த தங்கைவித்யா திருமணதிற்குத் தயாராய் நிற்க, கடனைவாங்கி அதைமுடித்தான்.
அடுத்து திவ்யா பத்தொன்பது வயதிலேயே காதல் வலையில் விழுந்து விட்டாள்.
அம்மாதான் திட்டினாள்,”உனக்கென்னடி அவசரம்? உன் அண்ணன் ஒருத்தன் குடும்பத்தை தாங்கிட்டு இருக்கானேன்னு நினைச்சிப்பாத்தியா?அவன் என்னிக்கோ ஒருபொண்ணை இழுத்துட்டு வந்திருக்கலாம்…குடும்ப சுமையை ஏத்துகிட்டு துறவிமாதிரி இருக்கான் என் மகன் பாவம்..”
அம்மா புலம்பினபோது ஆனந்தன் “தங்கச்சியை ஒண்ணும் சொல்லாதீங்கம்மா, பாவம் அது குழந்தை!” என்பான் .
அவன் குணம் அப்படி. யாரையும் வெறுக்கத்தெரியாது, யாரிடமும் கடிந்து பேச வராது. இந்த குணம்தானே அவனுக்கு ஒரு இனிய சினேகிதியை பத்துவயதிலேயே பள்ளியில் தேடிகொடுத்தது?
அவ்வப்போது ஆனந்தனின் நினைவில் மின்னலென வந்துபோவாள் காயத்ரி. கடந்து செல்லும் பூக்காரியின் கூடையினின்றும் மிதந்து வரும் பூவாசனையைப் போல சுகமான நினைவுகள்! பள்ளியிலிருந்து கல்லூரிவரை கூடவே வந்த இனிய தோழி.
காயத்ரியின் கடிதம் முகவரி அடங்கிய கல்யாணப்பத்திரிகை, கடிதம் எல்லாம் அவனுடைய அப்பா இறந்துபோன அமளியில் தொலைந்துபோய்விட்டது.குறும்புச் சிரிப்புடன் அந்த முகம்மட்டுமே நினைவில் இருக்க கடிதத்தில் அவள் தொடர்பு கொள்ளச் சொல்லி எழுதி இருந்த முகவரி, காணாமலேயே போய்விட்டது.
இண்டர்நெட்டில் ஈமெயில் ஃபேஸ்புக் என்றும் செல்போன் ஐபோன் என்றெல்லாம் வந்துவிட்ட இந்தகாலத்திலும் அவனால் காயத்ரியை நினைத்தபொழுதில் ஆத்மார்த்தமாய் பேசிக்கொள்ள இயலவில்லை. அதற்கு அதிகப்பிரயத்தனமும் ஆனந்தன் எடுக்கவில்லை.
நடக்கவேண்டுமெனில் எதுவும் நடக்குமென நினைத்துக்கொண்டிருந்தான்.வாழ்வில் நடந்து போனதை எப்படி நாம் இனி ஒன்றும்மாற்ற முடியாதோ அப்படியே எதிர்காலத்தையும் நம்மால் கட்டளையிடமுடியாது என்பதையும் உணர்ந்திருந்தான். எதிர்காலம் என்பது கணக்குக்கு வராத விஷயம். நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தவினாடிதான் நமக்கு சொந்தம் எனவே நிற்கின்ற செயல்தான் நம்முடையது அந்தச் செயலை செய்வதற்கு பழையநினைவுகள் அனுபவ ஆற்றலாயிருக்கிறது..இன்னதுதான் நடக்கும் என்றோ இன்னதுதான் நடக்காது என்றோ எதுவுமே நிச்சயமல்ல,எனினும் உலகம் உருண்டை; புறப்பட்ட இடத்திற்கு வந்துதான் ஆகவேண்டும்,ஆகவே காயத்ரியை நான் என்றாவது, சந்திக்கக்கூடும்’ என ஆனந்தன் மனதை சமாதனப்படுத்திக்கொள்வான்.
அதன் முயற்சியாக இந்த சந்திப்புக்குத் தயாரானான்..
பத்துவருடங்கள் என்பது வாழ்க்கையை சற்றே புரட்டிப்போடும் காலம். ஏராள மாற்றங்கள் ஆனந்தனுக்கும் ஏற்பட்டது .அவனது தங்கை திவ்யா காதலித்தவனையே மணக்க விரும்பவும், அப்போது அந்தப் பையனின் அப்பா, ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
தனது மகளை ஆனந்தனுக்கு மணமுடிக்க சம்மதமானால் திவ்யாவின் காதலை நிறைவேற்றிவைப்பதாக சொன்னார். கல்யாண செலவு அத்தனையும் தானே ஏற்றுக்கொள்வதாயும் , ஆனந்தனின் அப்பா வாங்கிய கடனையெல்லாம் அடைப்பதாயும் ஆசை காட்டினார்.
ஆனந்தனின் அம்மாவிற்கு மாதவியைப் பார்க்கும்போதே பிடிக்கவில்லை. “வேண்டாம்டா ஆனந்தா..உன் வாழ்க்கையை பணயம் வச்சி உன் தங்கையை நீ வாழவைக்க வேணாம்..அந்தமனுஷர் பேச்சிலேயே ஆணவம் தெறிக்குது அப்பாமாதிரிதான் தப்பாம பொண்ணும் நடந்துகொள்ளும். உன் மென்மையான குணத்துக்கு அவ பொருத்தமில்லைப்பா..மேலும் மாதவி அழகிலும் உனக்கு பொருத்தமில்லயேப்பா?” என்று சொல்லி புலம்பினாள்
ஆனந்தன் அம்மாவை சமாதானம் செய்தான்” அம்மா! அழகு நிரந்தரமா சொல்லுங்க? காலமழை ஒருநாள் அழகுச் சாயத்தை கரைக்கத்தான் செய்யும் ..திவ்யாவோட ஆசை நிறைவேற வேற வழியும் இல்லையே அம்மா? ஒன்றை இழந்து ஒன்றைப் பெறுவது வாழ்வில்தவிர்க்கமுடியாதது என்று என் தோழி காயத்ரி அடிக்கடி சொல்வாள் அதுதான் உண்மையும்கூட …” என்றான்.
“ஆனந்தா! ‘மெய்த்திருப்பதம் மேவு’ என்கிற கம்பராமாயணப்பாட்டுதான் நினைவுக்கு வருதுப்பா எனக்கு. ‘நாளையிலிருந்து நீமன்னன் ‘என்றபோதும் சரி, ‘இத்திருத்துறந்துஏக’ இந்த நிமிஷத்திலிருந்து காட்டுக்குப்போ என்றபோதும்சரி சக்கரவர்த்திதிருமகன் ராமனின் முகம் சித்திரத்தில் வரைந்த தாமரைப்பூ மாதிரி மலர்ந்தே இருந்ததாம்.நீயும் ராமனைபோலவே இருக்கிறாயே அப்பா?” கண்கசிந்தாள் பெற்றவள்.
எது நேர்ந்தாலும் கண்கலங்ககூடாது;உணர்ச்சிவசப்படாமல் அறிவால் எதையும் அணுகவேண்டும்
இதுவும் காயத்ரி அவனுக்கு சொல்லிக் கொடுத்ததுதான்.
வாழ்வின் எல்லா கட்டங்களிலும் அவள் அவனுக்கு மனதளவில் உறுதுணையாய் இருக்கிறாள். அவளைவிட ஒருவயதுதான் இளையவள் ஆனாலும் அறிவுமுதிர்ச்சியில் பலமடங்கு மூத்தவள்.காயத்ரியின் ஒவ்வொரு சொல்லும் அவனுக்குபிடித்தமானதுமட்டுமல்ல.அதற்கும்மேலே அவன்வாழ்வின் பிடிப்புகோலே அதுதான்.
ஆனால் ஆனந்தனின் மென்மையானமனமே அவன் மனைவிக்கு சாதகமாய்ப் போகுமென அவன் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.
மாதவி சந்தேகப்பிராணியாய் இருந்தாள்.” எங்கப்பா பணத்துக்கு ஆசைப்பட்டுத்தானே அழகில்லாத என்னைக் கட்டிகிட்டிங்க? இத்தனை அழகா ராஜா மாதிரி இருக்கற நீங்க யாரையுமே லவ் பண்ணலயா? கண்டிப்பா உங்கமனசுல யாரோ இருக்கிறா..நீங்க என்கிட்ட சொல்லாம மறைக்கிறீங்க. யார் அவ? எங்கிருக்கா? அவளை பார்க்கபோவீங்களா? போன்ல எனக்குத் தெரியாம பேச்செல்லாம் உண்டா? சொல்லுங்க” உலுக்குவாள் அவன் சட்டையைப் பற்றி இழுத்து.
குழந்தைபிறந்தால் சரியாகும் என்றாள் அவன் அம்மா.
ஆயிற்று, குழந்தை பிறந்து அதற்கு மூன்றுவயதும் ஆகிறது , மாதவி மாறவே இல்லை இன்னமும் கூச்சல் ,கத்தல், சந்தேகம் ,அழுகை ,ஆர்ப்பாட்டம் .
ஹிஸ்டீரியா என்றார்கள் டாக்டர்கள். அவன் அம்மா மருமகளின் போக்கைக் காண சகிக்காதவளாய் பெண்வீட்டிற்குபோய்விட்டாள்.
மகன் அப்படியே தனது ஜாடையில் இருப்பதால் அதனை வெறுப்பதும் அதற்கு வேண்டாததை சொல்லிக்கொடுப்பதுமாய் இருக்கும் மனைவியை அனுதாபமாகவே பார்க்கிறான் ஆனந்தன். விவேகானந்தன் என்ற அந்த இந்திய இளைஞர்கள் வரலாற்றில் முத்திரை பதித்த பெயரை ஆசையாய் ஆனந்தன் தான் வைத்தான் ஆனால் ‘விக்கிஇடியட்’என்றே மாதவி அழைக்கிறாள்.குழந்தையை அவள் வளர்ப்பில் விடுவதற்கே ஆனந்தன் அஞ்சவேண்டிய சூழ்நிலை,ஆனாலும் பொறுமை காக்கின்றான்.
வாழ்க்கை எல்லாருக்கும் வரமல்லவே?
ஆனந்தன் இந்த சந்திப்புக்குபுறப்படுவதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தான். நல்ல நட்பைப்புரிந்துகொள்ளும் பக்குவம் மாதவிக்கு கிடையாது ஆகவே சொல்லாமல் செல்வது நல்லதென தோன்றியது . நன்மைக்காக உண்மையை மறைக்க வேண்டிய நிலையில் ஆபீஸ்
விஷயமாய் ஒரு நண்பனை சந்திக்கபோவதாய் கூறினான்.மாதவி வழக்கம்போல அவனை நம்பிக்கையற்ற பார்வையில் சீறி விழுந்து அனுப்பினாள்.
லால்பாக் தோட்டம்.
பெங்களூர் நகரத்திற்கே அழகு சேர்க்கும் இயற்கை அழகு கொண்ட அந்த தோட்டவளாகத்தில் நுழைந்து கண்ணாடிமாளி்கையின் வாசலுக்கு வந்து நின்றான்.
மாலை நேரத்திற்கே உரிய மஞ்சளும் சிவப்பும் கலந்த அந்திவான அழகும் இலேசான குளிரைக்காதோரம் விட்டுச் செல்லும்காற்றுமாய் ஆனந்தனை பரவசம் எனும் அடுத்துவரும் நாடகத்திற்கான ஒத்திகையை ஆரம்பித்தன.
கண்ணாடிமாளிகையின் வடக்குவாயிலின் இருபுறமும் இருந்த சின்ன கல்யானைகள் மீது சிறுகுழந்தைகள் ஏறுவதும் இறங்குவதுமாய் உற்சாகக்குரல் கொடுத்தன. அருகிலிலிருந்த செண்பகமரத்தில் பூத்த பூக்களின் வாசம் நாசியில் நுழைந்து தலையை கிறுகிறுக்க வைத்தது. நூறுவருடத்திற்கு மேற்பட்ட மரங்ககளைக் கொண்ட இடத்தில் நிழலின் ஆளுமை அதிகம்தெரிந்தது.ரோஜாத்தோட்டத்தை ரோஜா தோட்டமே வேடிக்கைபார்ப்பதுபோல நிறைய இளம் பெண்கள்அங்கே சூழ்ந்திருந்தனர்.பச்சைக்கம்பளமாய் புல்வெளி.
சுற்றிலும் பார்வையை செலுத்தியவன் கையசைத்தபடி தூரத்தில் வரும் பெண்ணை நின்ற இடத்திலிருந்தே ஆழ்ந்துபார்த்தான்,உடனேயே.கண்கள் விரிந்தன.வாய் கூவியது.” காயத்ரீ!”
தோற்றத்தில் அதிகமாற்றமில்லாது அதே பூசினாற்போன்ற உடம்பில், செதுக்கிய சிற்பமாய், புன்னகை தவழ அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் காயத்ரி.
தோற்றப்பொலிவிற்கு உடற்கூறுமட்டும் காரணமல்ல ஒருவருடைய மனநிலையும் காரணமென்பதை எதிரில் வந்த காயத்ரி நிரூபிப்பதை உணர்ந்தான் ஆனந்தன்
அவள் நடைக்கு ஈடுகொடுத்தபடி குதித்துக்கொண்டு கூடவருவதுயார்? மகளாயிருக்குமோ? காயத்ரியின் மறுபதிப்பாய் அந்தச் சிறுமி காயத்ரியின் கைவிரல்களைப் பற்றி வருவதை ரசித்தான்.
ஆனந்தனின் அருகில் வந்த காயத்ரி, ” ஆனந்த்! கண்டிப்பாய் நினைவு வைத்து இங்கேவருவாய்னு எனக்குத் தெரியும் . .ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு….ஒருநிமிஷம் இந்த பரவசத்தை அனுபவிச்சிட்டு உன்கூட பேசணும் ப்ளீஸ் வெயிட் ” என்றவள் கண்ணை இறுகமூடிக்கொண்டாள்.ஒரே கணத்தில் மீண்டும் இமைதிறந்தவள்,” ஆனந்த்!” என்றாள் அன்பு பொங்கும் குரலில்.
“எப்படி இருக்கே காயத்ரின்னு உன்னை கேட்க அவசியமே இல்லாமல் நீ அப்படியே இருப்பதை முகம் காட்டுதும்மா,ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கும்.இது யார் உன் பெண்ணா?” ஆனந்தன் அந்தக் குழந்தையை ஆர்வமாய் பார்த்தபடி கேட்டான்.
“ஆமாம். பெயர் நிவேதிதா.”என்ற காயத்ரி மகளிடம்,” அங்கிளுக்கு வணக்கம் சொல்லும்மா” என்றதும் அழகாய் கைகுவித்து,”வணக்கம்” என்றது குழந்தை.காயத்ரி தொடர்ந்தாள்.
“நானும் நீயும் காலேஜ்நாளில் நமது லட்சியங்களில் ஒன்றாய் நமக்கு ஆண் குழந்தை பிறந்தால் விவேகானந்தன் பெண் பிறந்தால் பாரதிக்கே ஞான குருவாய் விளங்கிய சகோதரி நிவேதிதாவின் பெயரைத்தான் வைக்கணும் என்று பேசிக் கொண்டபடி என் மகளுக்கு அந்தபெயரைத்தான் வைத்திருக்கிறேன்..அவள் அப்பாவிற்கும் பிடித்த பெயர் இது. ஆமாம் நீ பெங்களூரில் தான் வேலைபார்க்கிறாயா ஆனந்த்? கல்யாணமாகி குழந்தை உண்டா?”
“அப்பா இறந்துபோனதும் துபாயில் பார்த்த நல்ல வேலையை விட்டு பெங்களூர் திரும்பிவந்தவன் தான் இங்கேயேதான்இருக்கிறேன்..நாலுவருஷம் முன்னாடி கல்யாணம் ஆகி ஒருபையன் இருக்கான் மூணு வயசில.. இடையில் உன்கூட தொடர்பே இல்லாமல் செய்த என் முட்டாள் தனத்துக்கு என்னை மன்னிக்கணும் ..”ஆனந்தன் குற்ற உணர்வில் இப்படித் தயங்கிப் பேசவும் குறுக்கிட்டாள் காயத்ரி.
“ஷ் … அதெல்லாம் நான் கேட்டேனா ஆனந்த?.அப்படி எதிர்பார்த்து பழகும் நட்பு இல்லையே நம்முடையது? இன்னிக்கு உன்னைப் பார்க்கத் தானே பம்பாயிலிருந்து பறந்துவந்திருக்கிறேன்?ஒரு வாரமாய் மனசுக்குள் ஒரேடியாய் மகிழ்ச்சி அலைதான்! காலை எழுந்து வேகமா புதுவருஷத்தை வரவேற்று கொண்டாடி முடிச்சி மதியம் ஃப்ளைட் ஏறிட்டேன்!நேரா ஹோட்டல் போயி நானும் என் பொண்ணும் ரூம்ல ஒருமணி நேரம் ரெஸ்ட் எடுத்து ,உடனே ஆட்டோ பிடிச்சி இங்க வந்துட்டோம்! ம்ம்..ஆனந்த் !சொல்லு எப்படி இருக்கிறது உன் வாழ்க்கை?”
இருவரும் கல்பெஞ்சில் அருகருகே அமர்ந்துகொண்டார்கள். நிவேதிதா மரம் ஒன்றினைச் சுற்றியபடி விளையாடப் போய்விட்டாள். ஜோடிகளாய் பலர் விரல் பிணைத்து நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். காற்றில் இன்னமும் குளிர் சேர, காயத்ரி ஸ்கார்பினை எடுத்து தலைக்கு சுற்றிக்கொண்டாள். அடர்த்தியான அந்த நீலநிறஸ்கார்ப் அவள் முகத்தினை இன்னும் வசீகரமாக்கியதை ஆனந்தன் கவனித்தான்.
பிறகு மென்மையான குரலில், காயத்ரியின் கேள்விக்கு பதில் சொன்னான். “என் வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்து அமைத்துக்கொள்ளவில்லை,தானாய் வந்ததை ஏற்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன் …. என் மகனுக்கும் பெயர் விவேகானந்தன் தான். மூணுவயசு.”
“அப்படியா ? இப்போ மனைவி மகன் ஊரில் இல்லையா அதான் உள்ளுரில் இருந்தும் இங்கே அழைத்துவரவில்லையா?”
“அ..அ…ஆமாம்” ஆத்ம சினேகிதியிடம் பொய் சொல்ல வேண்டிய வேதனையை மறைக்க முயற்சித்தபடி பதில் சொன்னான்.
“பரவாயில்லை அடுத்த முறை பார்த்தால் போயிற்று? அப்போ நிவேதிதா அப்பாவும் வந்துவிடுவார். இப்போதான் அவர் கம்பெனி விஷயமா ஜெர்மனி போயிட்டார்” என்ற காயத்ரி தூரத்தில் விளயாடிக்கொண்டிருந்த மகளை அழைத்து ஆனந்தனுக்கு பாரதியார் பாடலில் ஒன்றையும் குறளில் ஒன்றும் சொல்லசொன்னாள். உடனேயே தெளிவாய் அழகாய்,”மனதில் உறுதி வேண்டும்” எனப்பாட ஆரம்பித்தாள் நிவேதிதா. தமிழ் கொஞ்சியது. குறள் சொல்லி முடித்ததும், “அம்மா..இன்னும் கொஞ்சம் விளையாடிட்டு வரட்டுமா?” அனுமதிகேட்டு தாயின் தலையசைப்பில் மகிழ்ந்து ஓடிச்சென்றாள்.
காயத்ரி தனது கணவர் மற்றும் மணவாழ்க்கை பற்றி பெருமையாய் கூறிவிட்டு பிறகு உணர்ச்சிவசப்பட்டவளாய் பேச ஆரம்பித்தாள்.
‘ஆனந்த்! நாம் படிக்கிற நாளில் பேசிக் கொள்வோமே, நமக்குக் குழந்தை பிறந்தால் இலக்கியமும் ஆன்மீகமும் படிப்போடு கத்துக்கொடுக்கணும் என்று.. அதெல்லாம் நாம் உரியவயதில் கத்துக்கிட்டதாலதான் நமக்கு பாரதி சொன்னமாதிரி பகைவனுக்கும் அருளுகிற நன்னெஞ்சு வந்தது.நமது வாழ்க்கைப் பயணத்துல வால்ட்விட்மனும் பாரதி,கம்பனும் விவேகாநந்தரும் வள்ளுவரும் உடன் வந்தாங்க …இன்னமும் வந்துட்டும் இருக்காங்க. இனியும் இளைய தலைமுறையை, வளமான பாதைல கொண்டுபோய்ச் சேர்க்கிற பொறுப்பு, நம்மாதிரி இளம் பெற்றோர்களுக்கு அதிகமிருக்கணும். இன்றையதேதியில் இளைஞர்கள்கிட்ட வன்முறையும் வெறியும் தீவிரவாதப் போக்கும் இருக்கக் காரணம் அவங்களுக்கு இலக்கிய ஆன்மீக வழிகாட்டிகள் வாழ்க்கையில் இல்லாததால்தான். என்னால முடிஞ்சது, இளையதலைமுறைக்கு இதையெல்லாம் கொண்டுசெல்வதுதான்..”
அவள் அருவியாய் கொட்டுகிறாள், இவன் அதில் நனைகிறான். மனம் வறண்ட பாலையில் நீர் ஊற்றியதுபோல பேசப்பேச அத்தனையையும் உள்வாங்கிக் கொள்கிறது.
“சரி…புறப்படலாமா ஆனந்த்? ராத்திரி ஃப்ளைட்ல நான் பம்பாய்க்குத் திரும்பணும்.. அடுத்த நமது தீர்மானிக்கப்பட்ட சந்திப்பு,பத்து வருடம் கழித்து இதே லால்பாக்கில் இதே நாள் இதே நேரம்! அப்போது என் பெண் பதினேழு வயது குமரியாய் வளர்ந்து உன்னிடம் இலக்கியமும் தெளிந்த நிலையில் ஆன்மீகமும் பேசுவாள். உன் பையனும்தான் அப்படிப் பேசப் போகிறான், உன் வளர்ப்பில் இன்னமும் நம்பிக்கையுடனேயே! என் விசிட்டிங்க் கார்ட்கொடுக்கிறேன், அவசியம் பம்பாய்வந்தால் வீட்டுக்குவா..நிவேதிதா! அங்கிளுக்கு பைபை சொல்லும்மா…?’
“பை அங்கிள். உங்களைப் பார்த்துப் பேசியதில் ரொம்ப மகிழ்ச்சி..மறுபடி பார்க்கும்வரை நினைவில் வச்சிருப்பேன்…வீட்டுக்கு வாங்க அங்கிள்!”
பிறருக்கு மதிப்பு கொடுத்து பிறர் நலத்தைப் பரிவோடு காணும்போது தன்னல நிறைவு உண்டாவதை காயத்ரி பேசும் போதெல்லாம் நிரூபிப்பது வழக்கம். இந்த சந்திப்பிலும் அவள் அப்படி நடந்து கொண்டதோடு தனது வாரிசையும் அப்படிக் கொண்டு வந்ததைப் பார்த்த ஆனந்தனுக்குப் பெருமையாய் இருந்தது.
வீடு வந்து சேர்ந்தவனை வாசலிலேயே எதிர்கொண்டு கேள்விக்கணை தொடுக்க ஆரம்பித்தாள் மாதவி.
“யாரைப்பார்த்துட்டு வரீங்க? அவள் என்ன அழகியா? உங்க அந்தரங்கக்காதலியா? சொல்லுங்க..மௌனமா இருந்தே என்னை சித்திரவதை செய்யாதீங்க… சொல்லுங்க சொல்லுங்க..” அவனைப் பிடித்து உலுக்கினாள்.
கத்தினாள்,தலையில் அடித்துக்கொண்டாள்.கையில் கிடைத்த பொருட்களை வீசி எறியத் தொடங்கினாள்
‘நட்புக்கு அடிப்படையாக இருப்பது ஒத்த தொழிலோ வயதோ அந்தஸ்தோ அல்ல. வாழ்க்கை நிலையில் பல்வேறு அந்தஸ்தில் இருப்பவர்களுக்கிடையே நட்பும் பாசமும் ஏற்படும்; இதில்பால்பேதங்கள் கிடையாது. கொடுப்பதும் பெறுவதுமான காமம் போன்று, ஆன்மாவின் அந்தரங்க ஆழத்தில் இருந்து உயிர்கள் சங்கமிப்பதே உயர்ந்தநட்பின் அடிப்படை .நான் பெற்றுள்ள நட்பெனும் பேறு மிகப் பெரியது அது என்னுள் ரகசியமாகவே இருக்கட்டும்.அதை மாதவியிடம் சொல்லி சிறுமையடையத் தேவை இல்லை.’
ஆனந்தன் மனதிற்குள் நினைத்தபடி மௌனமாய் மாடிப்படிகளில் ஏறிச்சென்றான்.
மாதவி கீழிருந்தபடி கூச்சல்போட்டுக் கொண்டே இருந்தாள்.
– ஆகஸ்ட் 15th, 2011